மனம் போன போக்கில்

Archive for August 2009

‘பீமா’வைத்தான் தவறுதலாக எழுதிவிட்டார்களா, அல்லது ‘மீமா’ என்ற பெயரில் ஒரு புதுப்படம் வந்திருக்கிறதா???

(பெங்களூர் – ஓசூர் நெடுஞ்சாலை : 30 08 2009)

30082009057

***

என். சொக்கன் …

31 08 2009

சென்ற சனிக்கிழமை ஒரு முக்கியமான வேலையாக எம். ஜி. ரோடு பழைய புத்தகக் கடைகளுக்கு திக்விஜயம். மூன்று பைகளில் புத்தகங்களை நிறைத்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன்.

வழக்கமாக நான் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் ஏதாவது ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டுவிடுவேன். பெங்களூரில் சைக்கிள்முதல் லாரிவரை சகல வாகனங்களும் டிராஃபிக் நெரிசலில் நின்று நின்று ஊர்வதுதான் வழக்கம் என்பதால், ஒரு மணி நேரப் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 20 முதல் 30 பக்கங்கள்வரை படித்து முடித்துவிடலாம்.

அன்றைக்கு, ஆட்டோ ஒரு சிக்னலில் நின்றிருந்தபோது எதேச்சையாக மீட்டரைப் பார்த்தேன், ‘38 ரூபாய்’ என்று காட்டியது.

சில விநாடிகள் கழித்து, பச்சை விளக்கு விழுந்தது, ஆட்டோ புறப்பட்டது, சட்டென்று மீட்டரில் இருந்த தொகை முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது.

நான் திகைத்துப்போனேன். ஆட்டோ மீட்டரில் சூடு வைப்பார்கள், தெரியும், ஆனால் அதுகூட ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று படிப்படியாகதானே ஏறும்? இப்படி திடுதிப்பென்று பத்து ரூபாய் எகிறுவதாகக் கேள்விப்பட்டதில்லையே!

அடுத்த குழப்பம், இப்போது நான் என்ன செய்யவேண்டும்? என்னை ஏமாற்றப்பார்க்கிற இந்த ஆட்டோ டிரைவருடைய சட்டையைப் பிடிக்கவேண்டுமா? ‘அன்னியன்’போல அவர்மீது பாய்ந்து பிராண்டவேண்டுமா?

என்னுடைய கன்னடம், மிக எளிய வார்த்தைகள், வாக்கியங்களால் ஆனது, அதில் இரண்டு வார்த்தைகளுக்கு மூன்று இலக்கணப் பிழைகளாவது இருக்கும், ஆங்காங்கே ஆங்கிலம், ஹிந்தி, சில சமயம் தெலுங்கு வார்த்தைகளைக்கூடச் சேர்த்துக் கலப்படம் செய்ய நான் வெட்கப்படுவதில்லை.

இந்த ஓட்டைக் கன்னடத்தை வைத்துக்கொண்டு, யாரிடமும் சுமுகமாகப் பேசலாம், ஆனால் சண்டை போடமுடியாது.

வேண்டுமானால், ஆட்டோ டிரைவரிடம் தமிழில் கண்டபடி கத்தலாம், கெட்ட வார்த்தையில் திட்டலாம், அதெல்லாம் அந்த டிரைவருக்குச் சுத்தமாகப் புரியப்போவதில்லை, ஒருவேளை புரிந்தாலும், நிச்சயமாக அதை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்.

தவிர, நிஜமாகவே அந்த மீட்டர் முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது என்பதை நான் எப்படி நிரூபிப்பேன்? இப்போது மீட்டர் சரியாகதானே ஓடிக்கொண்டிருக்கிறது? சில நிமிடங்களுக்குமுன்னால் அப்படி ஓர் ஊழல் நடந்தது என்பதற்கு என்ன சாட்சி? இந்த டிரைவரோ, போலீஸோ, நீதிமன்றமோ என்னை எப்படி நம்பும்? இதற்காக ஒவ்வொருமுறை ஆட்டோ ஏறும்போதும் அதன் மீட்டரை வீடியோ படம் எடுத்துவைக்கவா முடியும்?

இத்தனை அவஸ்தைகளோடு ஒப்பிட்டால், பத்து ரூபாய் என்பது சாதாரணத் தொகை. பேசாமல் நான் என்னுடைய புத்தகத்தைப் படிக்கத் திரும்பிவிட்டேன்.

***

என். சொக்கன் …

31 08 2009

’கலைஞன்’ என்ற படத்தில், கமலஹாசன் ஒரு நடனக் கலைஞராக வருவார், ‘கலைஞன் கட்டுக் காவல் விட்டோடும் காற்றைப்போல, சிறிய வட்டத்துக்குள் நிற்காத ஊற்றைப்போல’ என்று ECG கிராஃப்போல ஏறி ஏறி இறங்குகிற ட்யூனுக்குள் வாலி ஒளித்துவைத்த வரிகளை SPB குரலில் பாடி ஆடிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று சின்ன வயது ஞாபகம் வந்துவிட, துள்ளலெல்லாம் மறந்து மேடையிலேயே அத்தனை ரசிகர்கள் முன்னிலையில் உணர்ச்சிவயப்பட்டு விசும்ப ஆரம்பித்துவிடுவார்.

அப்புறம் சில நிமிடங்கள் கழித்து சுதாரித்துக்கொள்ளும் கமல், நிலைமையைச் சமாளிப்பதற்காக ஒரு பிட்டைப் போடுவார், ‘ஒரு கலைஞனுக்குப் பாராட்டுகள், கைதட்டல்தான் முக்கியம், ஆகவே நிறையப் பாராட்டுங்கள்’ என்று அவர் ஏதோ உணர்ச்சிமயமாகப் பேசிவைக்க, ரசிகர்களாகிய துணை நடிகர்களும் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் கண்டபடி கைதட்டி ஸ்பீக்கரைக் கிழிப்பார்கள்.

கலைஞர்களுக்குமட்டுமில்லை, உங்களுக்கும் எனக்கும்கூடப் பாராட்டுகள் முக்கியம்தான். ‘இன்னிக்கு நீங்க ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க’ என்பதுபோன்ற சாதாரண வாசகங்கள் தொடங்கி, ஏதாவது ஒரு வேலையை உருப்படியாகச் செய்து சக ஊழியர் அல்லது மேலதிகாரியிடம் வாங்குகிற முதுகுதட்டல், ஷொட்டுகள்வரை அவ்வப்போது இந்த மானசீகக் கைதட்டல்கள் இல்லாவிட்டால், யாரும் ’காலை எழுந்தவுடன் ஆஃபீஸ்’ என்று உற்சாகமாகக் கிளம்பிவரமாட்டார்கள் என நினைக்கிறேன்.

இணையத்தில்மட்டுமென்ன? ஒரு பதிவு எழுதி ‘Publish’ பொத்தானை அமுக்கிய இரண்டாவது நிமிடத்திலிருந்து, யாராவது feedback அனுப்பமாட்டார்களா என்று மெயில்பாக்ஸைத் தேட ஆரம்பித்துவிடுகிறோம். மின்னஞ்சலிலோ, கூகுள் அரட்டையிலோ யாராவது கூப்பிட்டு இரண்டு வரி பாராட்டிவிட்டால் அன்று முழுக்க மிதந்துதான் நடக்கவேண்டியிருக்கிறது.

நாங்கள் Corporate Clients-க்கு Training எடுக்கும்போதெல்லாம், அதன் முடிவில் மாணவர்களுக்கு Feedback Forms கொடுப்போம் – முன்பு பேப்பரில் எழுதச் சொல்வோம், இப்போது அவர்கள் ஆன்லைனிலேயே நிரப்பவேண்டியதுதான், எப்படியாயினும், பூஜ்ஜியம் முதல் ஐந்துவரை நம்முடைய வகுப்புக்கு மக்கள் என்ன மரியாதை தருகிறார்கள் என்பது உடனுக்குடன் தெரிந்துவிடும்.

சென்னையில் ‘தி ஹிந்து’ அலுவலகத்துக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள கேன்ட்டீனில் ஒரு வித்தியாசமான சமாசாரம் பார்த்தேன். சாப்பிட்டுவிட்டுக் கை கழுவும் இடத்தில் நிறைய சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறப் பந்துகளை ஒரு குடுவையில் நிரப்பிவைத்திருந்தார்கள்.

‘இது எதுக்கு?’ என்னை அழைத்துச்சென்ற நண்பரிடம் விசாரித்தேன்.

‘ஓ, அதுவா? கேன்ட்டீன் சாப்பாட்டுக்கு Feedback’

எனக்குப் புரியவில்லை, அவர் விளக்கினார், ‘ஒவ்வொரு நாளும் சாப்பிட்டுக் கைகழுவி முடிச்சப்புறம், நமக்கு அன்றைய சாப்பாடு பிடிச்சிருந்தா ஒரு பச்சைப் பந்தை எடுத்து இந்த ஜாடியில போடணும், பிடிக்கலைன்னா சிவப்புப் பந்து, நிச்சயமாத் தெரியலை, குழப்பமா இருக்குன்னா மஞ்சள் பந்து, இப்படி ஒவ்வொரு நாளும் ஜாடியில எத்தனை பந்து எந்தெந்த நிறத்திலே இருக்குன்னு எண்ணிப் பார்த்து Feedback Score கணக்கிடுவாங்க’

மேடைக் கச்சேரி செய்கிற கர்நாடக சங்கீதப் பாடகர்களுக்கு இந்தப் பிரச்னையே இல்லை, ஒவ்வொரு வரிக்கும் தொடையைத் தட்டித் தாளம் போட்டபடி ரசிகர்கள் ஆனந்தமாகத் தலையாட்டுவது அவர்களுக்கு மினி கைதட்டல்களாகவே கேட்கும்.

ஆனால், கல்யாணக் கச்சேரிப் பாடகர்களுக்கு இந்தப் பாக்கியம் வாய்ப்பதில்லை. அவர்கள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிகளாக இருந்தாலும் சரி, என்னதான் பிரமாதமாகப் பாடினாலும் சரி, பெரும்பாலான மக்கள் தங்களுடைய சலசல பேச்சில்தான் கவனமாக இருப்பது வழக்கம்.

ஒருமுறை திருப்பூரில் என் சிநேகிதன் தங்கை திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒரு மிகப் பெரிய பாடகியின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருடைய பெயரைச் சொன்னால் பிரச்னை வரும், நான் அந்தக் கச்சேரிக்காகவே கோயம்பத்தூரிலிருந்து திருப்பூர் ஓடினேன் என்பதைமட்டும் சொல்லிவிடுகிறேன்.

ஆனால், அங்கே போய்ச் சேர்ந்த எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அப்பேர்ப்பட்ட பாடகிக்கு ஒரு சரியான மேடைகூட அமைத்துத் தராமல் அந்தக் கல்யாண மண்டபத்தின் ஒரு மூலைக்கு ஒதுக்கிவிட்டிருந்தார்கள், நான்கைந்து ஸ்பீக்கர்களில் நிரம்பி வழியும் அவருடைய கணீர் குரலைத் தாண்டி எட்டுத் திசைகளிலும் அரட்டை இரைச்சல், எதிரே முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த சில சீனியர் சிட்டிசன்களைத்தவிர வேறு யாரும் அவருடைய பாட்டுத்திறமையைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இப்படி ரசிக்கவோ, பாராட்டவோ தெரியாத ஜனங்களுக்குமத்தியில் பாடுவது அந்தக் கலைஞர்களுக்கு எப்பேர்ப்பட்ட கொடுமையாக இருந்திருக்கவேண்டும்! ஆனால் அதை அந்தக் கல்யாண வீட்டில் யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை, ‘அதான் காசு வாங்கிட்டேல்ல? மூலையில உட்கார்ந்து பாடு’

Feedback தருவது, பாராட்டுவதுகூட ஒரு கலைதான். இதற்குத் தனிப்பட்ட திறமையைவிட, மனசுதான் வேண்டும். அது பலருக்கு அமைவதில்லை.

இதற்கு நேரெதிராக, மிகப் பெரிய மனதுக்காரர் ஒருவரை சென்ற வாரம் சந்தித்தேன். அவரைப்பற்றி எழுதுவதற்குதான் இம்மாம்பெரிய பீடிகை.

நான் டெல்லியிலிருந்து பெங்களூருக்குப் பயணம் செய்த விமானத்தில், அவர் எனக்குப் பக்கத்து இருக்கை, மோகன்போல மீசை, நல்ல உயரம், சியாமள வண்ணம்.

விமானம் புறப்பட்டுச் சில நிமிடங்கள் கழித்து, அவர் ஒரு பொத்தானை அழுத்தி ஏர் ஹோஸ்டஸை அழைத்தார், ‘எனக்குக் கழுத்து வலிக்குது, உங்ககிட்ட ஏதாவது பெயின் கில்லர் இருக்குமா?’

’ஷ்யூர் சார்’, அவர் ஒரு மஞ்சள் நிற மருந்தைக் கொண்டுவந்து கொடுத்தார், ‘ஐஸ் க்யூப்ஸ் கொண்டுவரட்டுமா சார்?’

‘வேணாங்க, இதுவே போதும்’ அவர் அந்த மருந்தைப் பரபரவென்று கழுத்தில் தடவிக்கொண்டார். அப்போதும் வலி குறையவில்லை என்பது அவருடைய முகபாவனையில் தெளிவாகத் தெரிந்தது.

இப்போது அந்த விமானப் பணிப்பெண் ஒரு சின்னத் தலையணை கொண்டுவந்து அவர் முதுகில் வைத்தார், ‘கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க சார், எல்லாம் சரியாயிடும்’

‘தேங்க் யூ’, அவர் ட்யூபைத் திருப்பிக் கொடுத்துவிட்டு லேசாகச் சரிந்து ஓய்வெடுத்தார். இமைகளை மூடினாலும், கண்கள் இலக்கில்லாமல் அங்கும் இங்கும் அலைபாய்வது தெரிந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில், அந்தப் பணிப்பெண் அவருக்கு ஏகப்பட்ட சேவைகளைச் செய்துகொண்டிருந்தார், முதலில் ஐஸ் கட்டிகளும், அதில் நனைத்த பூந்துவாலைகளும் வந்தன, அது சரிப்படவில்லை என்றதும் வெந்நீர் ஒத்தடம் தருகிற உபகரணம் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார், பழைய மஞ்சள் ட்யூபுக்குப் பதில் இன்னொரு சிவப்பு ட்யூப் மருந்து வந்தது, இதெல்லாம் அவருக்குப் பலன் அளிக்கிறதா என்பதுதான் தெரியவில்லை.

சிறிது நேரத்துக்குப்பிறகு, எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. என்னருகே உட்கார்ந்திருந்தவர் சாப்பிட மறுத்துவிட்டார்.

நீங்கள் நினைத்தது சரி, மீண்டும் அந்தப் பணிப்பெண் தோன்றினார், ‘சார், சாப்பிடாம இருந்தீங்கன்னா வலி அதிகமாத் தெரியும், தயவுசெஞ்சு எதாச்சும் சாப்பிடுங்க, நான் உங்களுக்கு பிஸ்கெட்ஸ், ஃப்ரூட்ஸ், ஜூஸ் ஏதாவது கொண்டுவரட்டுமா?’

கடைசியில் அவர் ஒரு வாழைப்பழமும் தேங்காய் குக்கீஸும் சாப்பிட்டார். அந்தத் தட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான வண்டி வருவதற்குள், நன்றாகத் தூங்கிவிட்டார்.

முக்கால் மணி நேரம் கழித்து அவர் விழித்தபோது, விமானம் பெங்களூரை நெருங்கிக்கொண்டிருந்தது. தலையணை சரிய எழுந்து நின்றவர், தன்னுடைய ஃபேவரிட் பணிப்பெண்ணைத் தேட ஆரம்பித்தார்.

உடனடியாக, அந்தப் பெண் எங்கிருந்தோ ஓடி வந்தார், ‘இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க சார்?’

‘பெட்டர்’ என்றார் அவர், ‘ஃப்ளைட் லாண்ட் ஆகப்போகுதா?’, அவருடைய பதற்றத்தைப் பார்த்தால் விமானத்தைக் கடத்த நினைத்து மறந்துபோய் தூங்கிவிட்டவரைப்போல் தெரிந்தது.

’ஆமா சார், இன்னும் டென் மினிட்ஸ்’

’எனக்கு ஒரு Feedback Form வேணுமே’

‘இதோ கொண்டுவர்றேன் சார்’

இரண்டாவது நிமிடம் Feedback Form வந்து சேர்ந்தது. அவர் தனது பேனாவைப் பிதுக்கிக்கொண்டு விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தார்.

சிறிது நேரத்துக்குள், அந்தப் பக்கம்முழுக்க எழுதிமுடித்துவிட்டார், அடுத்த பக்கமும் தொடர்ந்தார். ஒருவேளை என்னைமாதிரி நீளநீளமாக வலைப்பதிவு எழுதிப் பழக்கமோ என்னவோ.

பத்து நிமிடத்தில், விமானம் ஒரு மிகப் பெரிய படிக்கட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தவழ்ந்து இறங்குவதுபோல் தரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தது. அவர் எழுதி முடித்துவிட்டு, அந்தப் பணிப்பெண்ணைத் தேடினார், ரேடியோ நாடகம்போல் அவர் உடனே வந்து நின்றார், ‘எஸ் சார்?’’

‘உங்க பேர் என்ன?’

’ரீனா தாமஸ்’

’ஸ்பெல்லிங் சொல்லுங்க’

அவர் சொல்லச்சொல்ல கவனமாக அதனை Feedback Formல் நிரப்பினார், ‘இது கரெக்டா இருக்கா?’

‘யெஸ் சார்’

‘இங்கே கொஞ்சம் உட்காருங்க’ அந்தப் பக்கமிருந்த காலி இருக்கையைக் காட்டினார் அவர்.

ரீனா தாமஸுக்குத் தயக்கம், விருந்தினர்முன்னால் உட்காரக்கூடாது என்று அவருக்குச் சொல்லித்தரப்பட்டிருக்கிறதோ என்னவோ, ‘இருக்கட்டும் சார், பரவாயில்லை’ என்றார்.

இப்போது அவர் தான் எழுதிய Feedback வாசகங்களைக் கவனமாகப் படிக்க ஆரம்பித்தார். அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் கவனிக்கிறார்களே என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் நன்கு சத்தமாகவே படித்தார், இந்த விமானம் ஏறியதுமுதல் சென்ற நிமிடம்வரை ரீனா தாமஸ் அவருக்குச் செய்த சேவைகளையெல்லாம் குறிப்பிட்டு, தாராளமான வார்த்தைகளில் பாராட்டியிருந்தார்.

அவர் படிக்கப் படிக்க, ரீனா தாமஸ் முகத்தில் பரவிய சிவப்பை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம். அவர் தினம் தினம் வானத்தில் பறந்து சென்றாலும், நிஜமான மிதப்பை அப்போதுதான் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

முழுக்கப் படித்து முடித்துவிட்டு, பசைக் காகிதத்தைக் கிழித்து ஒட்டினார் அவர், ‘தேங்க் யூ, மிஸ் ரீனா’ என்று அவர் கையில் கொடுத்தார், ‘இந்த Feedback எங்கே போகுமோ எனக்குத் தெரியாது, இதைப் படிக்கிறவங்க உங்ககிட்டே இதைச் சொல்வாங்களாங்கறதும் தெரியலை, அதனாலதான் முதல்ல உங்ககிட்டே படிச்சுக் காட்டிடணும்ன்னு நினைச்சேன், தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்’

இப்போது விமானம் தரையிறங்க ஆரம்பித்திருந்தது. ஜன்னல் கண்ணாடிவழியே Horizontal கோடுகளைக் கிழித்துச் சென்றது மழை.

***

என். சொக்கன் …

24 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இது எங்க வீட்டுப் பிள்ளையார் – விளையாட்டுக் களிமண் (Funskool Play-Doh) கொண்டு நங்கை செய்தது – கொஞ்சம் உற்றுக் கவனித்தால் பிள்ளையாருடன் மூஞ்சூறு, கொழுக்கட்டை (இனிப்பு தனி, காரம் தனி), லட்டு, பாயசம், அதில் மிதக்கும் முந்திரிப்பருப்பு, வடை, சுண்டல், அப்பம் முதலானவற்றைப் பார்க்கலாம்.

பிள்ளையார்தான் கொஞ்சம் கிறிஸ்துமஸ் தாத்தா சாயலில் இருக்கிறார், அதனால் என்ன? ஹேப்பி பர்த்டே பிள்ளையார்!

SDC13867

***

என். சொக்கன் …

23 08 2009

இந்தியாவில் மொபைல் ஃபோன் அல்லது ப்ரீபெய்ட் கரன்ஸி வகையறாக்கள் விற்காத கடை எதுவும் மிச்சமிருக்கிறதா?

(இந்தப் புகைப்படம் குர்காவ்னில் எடுத்தது – 20 ஆகஸ்ட் 2009)

20082009054

***

என். சொக்கன் …

21 08 2009

முந்தாநாள் டாக்டர்களைப்பற்றி லேசாகக் கிண்டலடித்து எழுதியதன் நல்லூழ், அதே நாளில் ஒரு சின்னஞ்சிறிய விபத்தில் சிக்கிக்கொண்டேன்.

எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே ஓர் அகன்ற சுற்றுச்சாலை (100 Feet Ring Road) உண்டு. அந்தச் சாலையைக் கடந்தால்தான் நான் வீட்டுக்குப் போகமுடியும்.

இதனால், தினமும் காலையில் அலுவலகம் வரும்போது ஒன்று, மதியம் சாப்பிடச் செல்லும்போது இரண்டு, மாலையில் வீடு திரும்புகையில் ஒன்று எனக் குறைந்தபட்சம் நான்குமுறை நான் அந்தச் சாலையைத் தாண்டியே தீரவேண்டும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.

ஒரே பிரச்னை, அந்தச் சாலையில் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்குக்கூட வண்டிகள் நிறைந்திருக்கும். பெரும்பாலும் ஓசூர் ரோட்டில் உள்ள ‘எலக்ட்ரானிக் சிட்டி’க்குச் சென்று திரும்புகிற சாஃப்ட்வேர் புள்ளிகளின் சொகுசு வாகனங்கள். ஒவ்வொன்றினுள்ளும் 90% இடம் காலியாக இருக்க, மூலையில் ஒரே ஒரு அப்பாவி ஜீவன் காதில் ப்ளூ டூத் சகிதம் ஸ்டீயரிங் சக்கரத்தையோ, ஹாரனையோ பொறுமையில்லாமல் அழுத்திக்கொண்டிருக்கும்.

இப்படிச் சாலை முழுக்க அரை சதுர இஞ்ச்கூட இடம் மீதமில்லாமல் காலி(Empty என்ற அர்த்தத்தில் வாசிக்கவும்)க் கார்கள் குவிந்திருந்தால், என்னைப்போல் நடந்துபோகிறவர்களுக்கு ஏது இடம்? அரசாங்கம் மனது வைத்து இங்கே ஒரு பாலமோ, தரையடிப் பாதையோ அமைத்துக் கொடுத்தால்தான் உண்டு. அதுவரை, ஒற்றைக்கால் கொக்குபோல் காத்திருந்து, போக்குவரத்து குறைகிற நேரமாகப் பார்த்து ஓட்டமாக ஓடிச் சாலையைக் கடப்பதுதான் ஒரே வழி.

நான் இந்த வீட்டுக்குக் குடிவந்து நான்கரை வருடமாகிறது. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் முறை இந்தச் சாலையைக் குறுக்கே ஓடிக் கடந்திருப்பேன், கடந்த திங்கள்கிழமைவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.

அன்றைக்கு மதிய நேரத்தில் மழை பெய்து ஊர்முழுக்க நனைந்திருந்தது, சாலையும் வழுக்கல், அதன் நடுவே அமைத்திருந்த Dividerரும் வழுக்கல், இதை நான் கவனிக்கவில்லை.

வழக்கமாக நான் பாதிச் சாலையைக் கடந்ததும், மறுபுறத்தில் போக்குவரத்து எப்படி என்பதைக் கவனிப்பதற்காக அந்த Dividerமேல் அரை நிமிடமாவது நிற்பது வழக்கம். சில சமயங்களில் (முக்கியமாக மாலை நேரங்களில்), அடுத்த பக்கத்திலிருந்து வருகிற போக்குவரத்து மிகப் பலமாக இருந்தால், பத்து நிமிடம்வரைகூட அங்கேயே நின்றபடி தேவுடு காக்க நேர்ந்துவிடும்.

ஆனால் அன்றைக்கு, மறுபுறம் ஒரு வாகனம்கூட இல்லாமல் ‘வெறிச்’சிட்டிருந்தது. ‘ஆஹா, இன்னிக்கு என் அதிர்ஷ்ட நாள்’ என்று நினைத்துக்கொண்டே அவசரமாக ஒரு காலைக் கீழே வைத்தேன், மறுகால் வழுக்கி உள்ளே விழுந்துவிட்டேன்.

உண்மையில், ’விழுந்துவிட்டேன்’ என்பதுகூடச் சரியில்லை, ‘விழுந்’ என்பதற்குள் சமாளித்துக்கொண்டு ’எழுந்’தாகிவிட்டது, ஏதும் அடிபட்டதாகத் தெரியவில்லை, துளி வலி இல்லை, இல்லாத மீசையில் ஒட்டாத மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு மிச்சச் சாலையைக் குறுக்கே கடந்து சௌக்கியமாக வீட்டுக்குப் போய்விட்டேன்.

அதன்பிறகு மீண்டும் இரண்டுமுறை அதே சாலையைக் கடந்து நடந்தேன், ஆனால் காலில் வலி எதுவும் தெரியவில்லை, சில மணி நேரங்களுக்குள் கீழே விழுந்த விஷயத்தையே சுத்தமாக மறந்துபோய்விட்டேன்.

இரவு ஒன்பதரை மணிவாக்கில், வலி ஆரம்பித்தது. சுருக் சுருக்கென்று உள்ளே யாரோ கந்தல் துணி தைப்பதுபோல் ஆரம்பித்து, சிறிது நேரத்துக்குள் சம்மட்டியால் அடிப்பதுபோல் அதிகமாகிவிட்டது.

அடுத்த அரை மணி நேரத்தில் எந்த இடத்தில் துவங்கியது என்றே தெரியாதபடி பாதம்முழுக்க வலி பரவியிருந்தது. நமஸ்காரம் செய்கிற பாவனையில் உடம்பை வளைத்து நான் என் காலையே பிடித்துக்கொண்டிருக்கும் விநோதக்காட்சியைப் பார்த்து என் மனைவி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.

நான் வெறும் தரையில் காலை அழுத்தி நிற்க முயன்றேன். தடுமாற்றமாக இருந்தது, முதன்முறையாக அந்தச் சந்தேகம் வந்தது – ஒருவேளை எலும்பு முறிவா இருக்குமோ?

’அதெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்றார் என் மனைவி, ‘அயோடெக்ஸ் தடவிகிட்டுப் படு, எல்லாம் சரியாப் போய்டும்’

மனைவி சொல் மிக்க மந்திரம் ஏது? மருந்தை அதிகம் அழுத்தாமல் மெல்லத் தேய்த்துக்கொண்டு தூங்கினேன், காலை எழுந்தவுடன் கால் வலி காணாமல் போய்விடும் என்று ஒரு நம்பிக்கை.

ஆனால், தூங்கி எழுந்தபோது வலி அதிகரித்திருந்தது. காலைக் கீழே ஊன்றமுடிந்தது, ஆனால் சரியாக நடக்கமுடியவில்லை, உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்த்தாகவேண்டும்.

சோதனைபோல், நேற்றைக்கு அலுவலகத்தில் இரண்டு முக்கியமான கூட்டங்கள். எதையும் தள்ளிப்போடமுடியாது, மட்டம் போடவும் கூடாது.

எப்படியோ சமாளித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், இரண்டு கூட்டங்களுக்கு நடுவே பக்கத்து மருத்துவமனையில் மாலை ஏழு மணிக்கு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டேன்.

இதனிடையே, ஒரு வேடிக்கையான விஷயத்தைக் கவனித்தேன், ஷூ போட்டுக்கொண்டு நடந்தால் கால் நன்றாக வலிக்கிறது, ஆனால் அதைக் கழற்றிவிட்டு வெறும் (சாக்ஸ்) காலோடு நடந்தால் சுத்தமாக வலி இல்லை, என்ன காரணமாக இருக்கும்? விதவிதமான ஊகங்களில் நேரம் சுவாரஸ்யமாக ஓடியது.

ஆறு ஐம்பத்தைந்துக்கு நான் மருத்துவமனை சென்று சேர்ந்தபோது, ஏற்கெனவே ஐந்து பேர் எலும்பு நிபுணருக்காகக் காத்திருந்தார்கள். என்னுடைய தொலைபேசி அப்பாயிண்ட்மென்ட்க்கு அங்கே மரியாதை இல்லை என்று புரிந்தது, வரிசையில் ஆறாவதாக இணைந்துகொண்டேன்.

நல்லவேளையாக, டாக்டர்  சரியான நேரத்தில் வந்தார், மளமளவென்று பதினைந்து நிமிடங்களுக்குள் ஆறு பேரையும் பார்த்து முடித்துவிட்டார்.

அதன்பிறகுதான் பிரச்னை ஆரம்பித்தது, இப்போது எங்கள் ஆறு பேருக்கும் எக்ஸ்ரே எடுக்கவேண்டும், அந்தச் சிறிய மருத்துவமனையின் சின்னஞ்சிறிய எக்ஸ்ரே அறைக்குள் நாங்கள் முட்டி மோதி நுழைய முயன்றதில் ஒன்றிரண்டு எலும்புகளாவது எக்ஸ்ட்ராவாக உடைந்திருக்கும்.

’சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே? வரிசையில வாங்க சார்’

‘ஏன்ய்யா, நீயும் படிச்சவன்தானே? கால்ல அடிபட்டுகிட்டு எக்ஸ்ரே எடுக்க வர்றவங்களுக்கு சவுகர்யமா உட்கார்றதுக்கு ஒரு சேர்கூட இங்கே இல்லை, என்னய்யா லேப் நடத்தறீங்க?’, ஒரு பெரியவர் சத்தம் போட்டுக் கத்த, பயந்துபோன எக்ஸ்ரே பணியாளர் அவரை முதலாவதாக உள்ளே அனுமதித்துவிட்டார், அவருடைய கத்தல் உடனே அடங்கியது.

நான் பொறுமையாகக் காத்திருந்து ஆறாவதாக உள்ளே நுழைந்தேன். ரயில் பெர்த் சைஸ் படுக்கை ஒன்றில் படுக்கச் சொன்னார்கள்.

‘கால்லதானே எக்ஸ்ரே, அதுக்கு எதுக்குப் படுக்கணும்? உட்கார்ந்து காலை நீட்டினாப் போதாதா?’

’சொன்னாக் கேளுங்க சார்’, அவர் அலுத்துக்கொண்டார், ‘இல்லாட்டி Angle சரியா வராது, அப்புறம் உங்களுக்குதான் பிரச்னை’

பேசாமல் படுத்துக்கொண்டேன். அவர் என் காலைக் கண்டபடி இழுத்து வளைத்து ஒரு ஜில்லென்ற பலகைமீது வைத்தார், பின்னர் அதை எக்ஸ்ரே மெஷினின் மஞ்சள் வெளிச்சத்துக்குக் கீழே பொருத்தினார். அப்புறம் அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்த குழல் விளக்கை அணைத்துவிட, நெஞ்சு நிறையத் துணி கட்டித் தொப்பி போட்ட அந்தப் பணியாளரை அரையிருட்டில் பார்க்கையில் அச்சு அசல் ஸ்டார் ஹோட்டல் சமையல்காரரைப்போலவே இருந்தது.

அவர் என் காலைச் சரியான கோணத்தில் பிடித்துக்கொண்டு, ‘46/50’ என்பதுபோல் ஏதோ சொன்னார், பதிலுக்கு அதே அறையின் இன்னொரு மூலையில் இருந்த வேறொரு பணியாளர், ‘ஆன் பண்ணலாமா?’ என்றார்.

எனக்கு அவர்கள் சங்கேத மொழியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. நாம் டிவியில் சத்தத்தை ஏற்றி இறக்குவதுபோல், எக்ஸ்-ரே-யின் வலிமையைக் கூட்டி, குறைக்கிறார்களோ என்னவோ, ஒருவேளை அவர் தப்பான பொத்தானை அழுத்திவிட்டால் இந்த எக்ஸ்ரே மெஷினிலிருந்து வரும் கதிர்கள் என்னைச் சுருட்டிச் சாப்பிட்டுவிடுமோ என்றெல்லாம் கேனத்தனமான பயங்கள்.

இதற்குள், என் காலைப் பிடித்திருந்தவர் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, இன்னொருவர் பொத்தானை அழுத்தினார், மஞ்சள் விளக்குப் பிரதேசத்திலிருந்து ‘பொய்ங்ங்ங்ங்க்’ என்பதுபோல் ஒரு சத்தம் வந்தது, அவ்வளவுதான்.

’எழுந்து உட்காருங்க’

’ஆச்சா?’

‘இன்னும் இல்லை, காலை இப்படி மடக்குங்க’

அப்புறம், உட்கார்ந்த நிலையில் ஒன்று, ரங்கநாதர் அனந்த சயன போஸில் இன்னொன்று என மூன்று எக்ஸ்ரேக்களும் சுபமாக முடிந்தன, ‘பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க’ என்றார்கள்.

வெளியே ஒரு பெரியவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தார், இடுப்பில் வலி தாங்காமல் அனத்திக்கொண்டிருந்தார், அவர் தமிழில் புலம்ப, ஸ்ட்ரெச்சரைத் தள்ளிய பணியாளர் கன்னடத்தில் ஆறுதல் சொன்னதைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.

பதினைந்து நிமிடம் கழித்து என் எக்ஸ்ரே வெளியில் வந்தது, அதற்காகவே காத்திருந்த டாக்டர் பாய்ந்துவந்து பற்றிக்கொண்டார்.

மற்ற டாக்டர்களாவது கொஞ்சம் பரவாயில்லை, வருகிற நோயாளிகளை ஒவ்வொருவராகப் பார்த்து அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய்ச்சேரலாம், ஆனால், எலும்பு நிபுணர்கள் ஒவ்வொருவருடைய எக்ஸ்ரே திரும்பி வரும்வரை தேவுடு காக்கவேண்டும், ஷூட்டிங் முடிந்து, படம் வெளியாகி, முதல் ஷோ பார்த்து விமர்சனம் சொல்லாமல் அவர்களுடைய பணி முடிவடைவதில்லை.

இந்த டாக்டர் பாவம், எங்கள் ஆறு பேருக்கும் கால் மணி நேரத்தில் எக்ஸ்ரே குறிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு, அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா படித்துக்கொண்டு பொறுமையாகக் காத்திருந்தார், ஒவ்வொரு எக்ஸ்ரேவாக வெளிவரும்போது, அவருக்கு இரண்டு நிமிடமோ, ஐந்து நிமிடமோ எக்ஸ்ட்ரா வேலை, மற்றபடி டைம்ஸ் ஆஃப் இந்தியாவே கதி.

இதனால், கடைசியாக வந்த என்னுடைய எக்ஸ்ரேவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம், வீட்டுக்குப் போகிற வேகத்தில் விறுவிறுவென்று அதில் கண்களை ஓட்டிவிட்டு, ‘எலும்பு முறிவு எதுவும் இல்லை, ஒரு மாத்திரை எழுதித் தர்றேன், க்ரீம் தர்றேன், நாலு நாள்ல எல்லாம் சரியாப் போய்டும்’ என்று நெஞ்சில் பால் வார்த்தார்.

‘டாக்டர் ஒரு சந்தேகம்’

‘என்னது?’

’நாளைக்கு நான் ஆஃபீஸ் விஷயமா டெல்லி போகவேண்டியிருக்கு, அதைக் கேன்ஸல் பண்ணனுமா?’

‘டெல்லிக்கு நடந்தா போகப்போறீங்க?’ அவர் கிண்டலாகக் கேட்டார்.

’இல்லை டாக்டர், ஃப்ளைட்ல’

‘அப்ப தாராளமாப் போய்ட்டு வாங்க, நோ ப்ராப்ளம்’

விறுவிறுவென்று எனக்கு மருந்து எழுதிக் கிழித்துக் கொடுத்துவிட்டு அவர் உற்சாகத் துள்ளலுடன் வெளியேறினார். அவரும் அதே சாலையைக் கடந்துதான் வீட்டுக்குப் போகவேண்டும்.

ஜாக்கிரதை டாக்டர்!

***

என். சொக்கன் …

19 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நேற்று மதியம் இரண்டரை மணி, கதவு மெதுவாகத் தட்டப்பட்டது, திறந்து பார்த்தால் இன்னும் மீசை முளைக்காததுபோன்ற தோற்றத்தில் ஓர் இளைஞன், ‘ஹலோ’ என்றான்.

‘ஹலோ?’

‘நாங்க மேலே 201க்குப் புதுசாக் குடிவந்திருக்கோம், என் பேர் ஜேம்ஸ்’

‘ஓகே?’

’எங்க வீட்ல ஒரு சின்ன எலக்ட்ரிக்கல் ப்ராப்ளம், உங்களுக்குத் தெரிஞ்ச எலக்ட்ரீஷியன்ஸ் யாராச்சும் இருக்காங்களா?’

டைரியைப் புரட்டித் தேடி நம்பரைக் குறித்துக்கொடுத்தேன், ‘ஆனா இவருக்குக் கன்னடம்மட்டும்தான் பேச வரும்’

‘பரவாயில்லைங்க, ஐ கேன் மேனேஜ்’ என்றான் அவன், ‘ரொம்ப தேங்க்ஸ்’

’இட்ஸ் ஓகே’

அவன் இரண்டிரண்டு படிகளாகத் தாண்டி மேலே சென்றான். நான் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தேன்.

அப்போதுதான் பால்கனியிலிருந்து வந்த என் மனைவி விசாரித்தார், ‘யாரு கதவைத் தட்டினது?’

’யாரோ சின்னப் பையன், மேலே 201க்குக் குடிவந்திருக்காங்களாம்’

’சின்னப் பையனா?’ அவர் என்னை விநோதமாகப் பார்த்தார், ‘201தானே சொன்னாங்க?’

‘ஆமா, அதுக்கென்ன?’

’201ல ஜேம்ஸ்ன்னு ஒரு டாக்டர்தான் புதுசாக் குடிவந்திருக்காரு’

‘என்னது? டாக்டரா?’ நான் அதிர்ந்துபோனேன், ‘சின்னப் பையன்மாதிரி இருக்கானே!’

‘ஆமா, சின்னப் பையன்தான், ஆனா டாக்டர்’

சட்டென்று என் குரலில் மரியாதை ஏறிக்கொண்டது, ‘அவரைப் பார்த்தா டாக்டர்மாதிரியே தெரியலை’

என்னைப்போன்ற வெகுஜனங்களுக்கு டாக்டர் என்றாலே குறைந்தபட்சம் நாற்பது வயதாகியிருக்கவேண்டும். அதற்குக் கீழே இளமையாக ஒரு டாக்டரைப் பார்த்த நினைவில்லை.

விநோதம் என்னவென்றால், இதற்கு நேர் எதிராக, ‘எஞ்சினியர்’ என்றாலே இளமையான பிம்பம் ஒன்று தோன்றிவிடுகிறது. ஆனானப்பட்ட சுஜாதாவே ஆனாலும், முதியவரானதும் அவரும் ஓர் எஞ்சினியர் என்பது சுத்தமாக மறந்துபோயிருந்தது.

சில வாரங்களுக்குமுன்னால் எங்கள் வீட்டு மின் இணைப்பை என் பெயருக்கு மாற்றுவதுகுறித்து ஓர் அரசாங்க அதிகாரியைச் சந்திக்கப் போயிருந்தேன், ‘அப்படி உட்காருங்க, ஜூனியர் எஞ்சினியர் வருவாரு’ என்றார்.

சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருந்தபிறகு, அந்த ‘ஜூனியர் எஞ்சினியர்’ வந்தார், அவருக்கு வயது ஐம்பது கடந்திருக்கும்.

ஜூனியரே 50+ என்றால், இவருடைய சீனியர் எஞ்சினியருக்கு என்ன வயதாகியிருக்கும்? எனக்குத் தலை சுற்றியது.

கடைசிவரை, என்னால் அந்த 50+ பேர்வழியை எஞ்சினியராக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதேபோல்தான் இந்த 20+ டாக்டரையும்.

வருங்கால எஞ்சினியர்களும் டாக்டர்களும் ஒன்றாகதான் ப்ளஸ் டூ படிக்க ஆரம்பிக்கிறார்கள், அதன்பிறகு, எஞ்சினியர் என்றால் இளமை, டாக்டர் என்றால் முதிர்ச்சி என்கிற அசட்டுத்தனமான Prejudice பிம்பம் எப்படி வருகிறது?

நான் வழக்கம்போல் திருதிருவென்று குழம்பிக்கொண்டிருக்க, என் மனைவி 201-புராணம் பாட ஆரம்பித்தார் – இந்த ஜேம்ஸ், மிகச் சமீபத்தில்தான் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் பணிக்குச் சேர்ந்திருக்கிறாராம், போன மாதம்தான் திருமணம் முடிந்ததாம், அவருடைய மனைவி எலக்ட்ரானிக் சிட்டி பக்கம் ’விப்ரோ’வில் வேலை பார்க்கிறாராம்.

’விப்ரோவிலயா? இன்ஹவுஸ் டாக்டர்-ங்கறாங்களே, அந்தமாதிரி வேலையா?’

’டாக்டரா? யாரு?’

‘ஜேம்ஸோட மனைவி?’

‘ஹலோ, ஜேம்ஸ்தான் டாக்டர், அவரோட வொய்ஃப் உன்னைமாதிரி சாஃப்ட்வேர்ல இருக்காங்க’

நான் மறுபடியும் அசடு வழிந்தேன், டாக்டர்கள் சக டாக்டர்களைமட்டும்தான் திருமணம் செய்துகொள்வார்கள் என்கிற இன்னொரு வெகுஜன Mythஐயும் இந்த ஜேம்ஸ் கண்டுகொள்ளவில்லைபோல.

‘அப்புறம்?’

‘இங்கே என்ன கதையா சொல்றாங்க, அவ்ளோதான் விஷயம்’

’நாளைபின்னே நமக்கு உடம்பு சரியில்லைன்னா மேலே 201க்குப் போனாப் போதுமா? டாக்டர் ஜேம்ஸ்கிட்டே இலவசமா வைத்தியம் பார்த்துக்கலாமா?’

‘ம்ஹூம், சான்ஸே இல்லை’

’ஏன்?’

‘அவர் ஓசியில வைத்தியம் பார்க்கமாட்டாராம், குறிப்பா, அவரைச் சின்னப் பையன்னு மட்டம் தட்டறவங்களுக்கு’

நியாயம்தான்!

***

என். சொக்கன் …

17 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ரத்தன் டாடா

எனது ‘ரதன் டாடா’ புத்தகத்தின் விமர்சனம்: ’வாரணம்’ தளத்திலிருந்து:

ரத்தன் நவல் டாடா, சுருக்கமாக ரத்தன் டாடா. இந்தியத் தொழிற் துறையின் பீஷ்மர். ஆனால், ஒட்டுமொத்த டாடா குழுமத்தை உருவாக்கியது அவரில்லை. நூற்றாண்டு கண்ட நிறுவனமான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர். ஆனால், 1962 ஆம் ஆண்டு அவர் டாடா ஸ்டீலில் ஒரு பயிற்சிபெறும் ஊழியர். ஒரு கடை நிலை ஊழியர், அந்நிறுவனத்தின் தலைவரா? எப்படி? இதை சுவாரசியமான ஒரு புத்தகமாக தந்துள்ளார் என்.சொக்கன்.

புத்தகம் எதோ ரத்தன் டாடாவைப் பற்றி இருந்தாலும், நூறாண்டு கண்ட டாடா நிறுவனத்தின் வரலாற்றையே விவரமாகத் தருகிறது. கவனத்தைக் குவித்துப் படித்தால், இரண்டு மணிநேரத்திலேயே புத்தகம் முழுவதையும் படித்துவிடலாம்.

முழுவதும் படிக்க: http://vaaranam.blogspot.com/2009/08/blog-post_15.html

புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-051-1.html

எனது மற்ற புத்தகங்கள்: http://nhm.in/shop/N.-Chokkan.html

***

என். சொக்கன் …

15 08 2009

பெங்களூர் விநாயக சதுர்த்திக்குத் தயாராகிறது

08082009048

***

என். சொக்கன் …

14 08 2009

SDC13824

SDC13831 SDC13830

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் – அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)

– ’கண்ண’தாசன்

நன்றி: http://kannansongs.blogspot.com/2006/12/16.html

ஒரு மாதம் முன்பாக, அவர் என்னைத் தேடி வந்திருந்தார்.

அவர் பெயர் ஸ்ரீமதி. ஆறு மாதங்களுக்குமுன்புவரை எங்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். சில தனிப்பட்ட காரணங்களால் பணியிலிருந்து விலகிவிட்டார்.

இப்போது, அவருக்கு இன்னோர் இடத்தில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. இங்கே அவர் வாங்கிக்கொண்டிருந்ததைப்போல் இருமடங்குக்குமேல் சம்பளம், வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள், இன்னபிற சவுகர்யங்கள்.

ஆனால், நான்கு சுற்று நேர்முகத்தேர்வுகளுக்குப்பிறகும், அந்த நிறுவனம் ஸ்ரீமதியின் வேலை நியமனத்தை இன்னும் உறுதி செய்யவில்லை. அதற்குமுன்னால், அவருடைய முந்தைய பணியிடத்தில் உள்ள சிலரின் Reference (இதற்கு என்ன தமிழ் வார்த்தை?) கேட்டிருக்கிறார்கள்.

‘ரெஃபரன்ஸ்க்காக நான் உங்க பேர், நம்பரை அவங்களுக்குக் கொடுக்கலாமா சார்?’

‘ஓ, தாராளமா’

அவருடைய ‘தேங்க் யூ’வில் உண்மையான நன்றி தெரிந்தது. அதன்பிறகு சிறிது நேரம் வேறு ஏதோ பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு அவர் விடை பெற்றுச் சென்றார்.

இரண்டு நாள் கழித்து, நான் ஒரு சூப்பர் மார்க்கெட் க்யூவில் நின்றுகொண்டிருந்தபோது என் செல்பேசி ஒலித்தது, ‘ஹலோ, நாங்க ____ கம்பெனியிலிருந்து பேசறோம், உங்களோட வொர்க் பண்ண மிஸ். ஸ்ரீமதி எங்க கம்பெனியில வேலைக்கு விண்ணப்பம் செஞ்சிருக்காங்க, அவங்களைப்பத்திக் கொஞ்சம் உங்ககிட்ட பேசமுடியுமா?’

நான் பதில் சொல்வதற்குள், எனக்குமுன்னே வரிசையில் நின்றிருந்தவர்கள் இருவரும் பணம் செலுத்திவிட்டுப் போய்விட்டார்கள். அடுத்து, என் முறை.

இந்த நேரத்தில் நான் செல்பேசியில் விலாவரியாகப் பேசிக்கொண்டிருந்தால், கவுன்டரில் இருக்கிற கன்னிகை மனத்துக்குள் திட்டுவாள், பின்னால் காத்திருப்பவர்கள் வெளிப்படையாகவே திட்டுவார்கள், எல்லோருடைய நேரமும் வீணாகும், தேவையா?

ஆகவே, மறுமுனையில் இருந்தவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன், ‘ஒரு ட்டூ மினிட்ஸ் கழிச்சுக் கூப்பிடமுடியுமா?’

’நோ ப்ராப்ளம்’ என்றபடி அவர் இணைப்பைத் துண்டித்தார்.

நான் நிம்மதியாகப் பணத்தைச் செலுத்திவிட்டு வெளியே வந்தேன், மறுசுழற்சி பிளாஸ்டிக் பையினுள் தேடி, பார்லே குழுமத்திலிருந்து சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் டக்கரான ‘LMN‘ எலுமிச்சை பானத்தைத் திறந்து குடித்தேன், செல்ஃபோனில் இளையராஜாவின் லேட்டஸ்ட் கன்னடப் பாடல் ‘ரங்கு ரங்கு’வை ஒலிக்கவிட்டபடி சாலையைக் கடந்து நடந்தேன்.

இதற்குள், நிச்சயமாகப் பத்து நிமிடமாவது கடந்திருக்கும். ஆனால் ‘ட்டூ மினிட்ஸ்’ல் திரும்ப அழைப்பதாகச் சொன்ன அவர்கள் என்னைக் கூப்பிடவில்லை.

அப்போதுமட்டுமில்லை, அன்று முழுக்க, அடுத்த ஒரு வாரத்துக்கு அந்த நிறுவனத்திலிருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. தேவைப்பட்டால் கூப்பிடுவார்கள் என்று நானும் சும்மா இருந்துவிட்டேன்.

நேற்று காலை, ஸ்ரீமதி என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘சார், நான் சொன்னேனே, அந்தக் கம்பெனியிலிருந்து உங்களுக்கு யாராவது ஃபோன் பண்ணாங்களா?’

‘ஆமாம் ஸ்ரீமதி, ஒரு ஃபோன் வந்தது’

‘நீங்க என்ன சொன்னீங்க?’

‘நான் அப்போ கொஞ்சம் பிஸியா இருந்தேன், அதனால ட்டூ மினிட்ஸ் கழிச்சுக் கால் பண்ணச் சொன்னேன், ஆனா அவங்க அதுக்கப்புறம் என்னைக் கூப்பிடவே இல்லை’

மறுமுனையில் நிசப்தம். சில விநாடிகளுக்குப்பிறகு, ‘கூப்பிடவே இல்லையா?’ என்று அதிர்ச்சியாகக் கேட்டார் அவர்.

‘இல்லைங்க ஸ்ரீமதி’ நான் என் குற்றவுணர்ச்சியைக் குறைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்து பேசினேன், ‘அவங்க மறுபடி கூப்பிட்டிருந்தா நான் உங்களைப்பத்தி நல்லவிதமா சொல்லியிருப்பேன், பட் ஏனோ அவங்க கால் பண்ணவே இல்லை’

ஸ்ரீமதி என்னை நம்பினாரா, இல்லையா, தெரியவில்லை, ‘சரி சார், நான் கொஞ்சம் விசாரிச்சுட்டு, அப்புறமாக் கூப்பிடறேன்’ என்று ஃபோனை வைத்துவிட்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு வந்தது, ‘சார், அவங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க’

‘எ-என்னாச்சு ஸ்ரீமதி’

‘ஆமா சார், நீங்க பிஸியா இருக்கீங்கன்னதும் அவங்க உங்க கம்பெனியிலயே இன்னொருத்தரைக் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க, அவர் என்னைப்பத்தி ரொம்ப நெகட்டிவ்வா சொல்லியிருக்கார்போல, அதனால எனக்குக் கொடுக்கறதா இருந்த அந்த Offer-ஐ இன்னொருத்தருக்குக் கொடுத்துட்டாங்களாம்’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது, இப்படியெல்லாமா செய்வார்கள்?

இப்போது, அவர் அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்திருந்தார், ‘உங்க கம்பெனியில ஒன்னரை வருஷம் சின்ஸியரா வேலை பார்த்தேன் சார், என்னைப்பத்தி நல்லவிதமா எதுவும் சொல்லவேணாம், உதவி செய்யவேணாம், இப்படி எனக்குக் கிடைச்ச நல்ல சான்ஸையும் அழிக்காம இருக்கலாம்ல? இப்ப நான் என்ன செய்வேன் சார்?’

அவர் திட்டுவது என்னையா? அல்லது, அவரைப்பற்றித் தவறாகக் கருத்துச் சொன்ன அந்த இன்னொருவரையா? எனக்குச் சரியாகப் புரியவில்லை.

ஆனால், அழுகிறவர்களுக்கு உடனடியாகச் சமாதானம் சொல்வதைவிட, அவர்களை அழ விடுவதுதான் உத்தமமான விஷயம். ஆகவே, செல்பேசியின் சத்த அளவைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, அடுத்த சில நிமிடங்கள் அவருடைய அழுகையை, புலம்பலைப் பொறுமையாகக் கேட்டு ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தேன்.

அவருக்கு என்னால் என்ன ஆறுதல் சொல்லமுடியும்? அவர் வேலைக்குச் சேர்வதாக இருந்த நிறுவனம், மிக மிகப் பெரியது. அங்கே அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைத்திருக்கவேண்டும். ஆனால், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிற இன்னொருவரால், அந்த அபூர்வமான வாய்ப்பு பறிபோயிருக்கிறது.

அதுமட்டுமில்லை, இனி அவர் எங்கே விண்ணப்பம் செய்தாலும், நிச்சயமாக முந்தைய நிறுவனத்திலிருந்து Reference கேட்பார்கள். எதை நம்பி, யாருடைய பெயரைக் கொடுப்பார் அவர்?

அப்போதுதான் எனக்கு இன்னொரு திகிலான கற்பனை தோன்றியது. ஒருவேளை, நான்தான் ஸ்ரீமதியைப்பற்றி எதிர்மறையான விமர்சனம் சொல்லி அவருடைய வேலைவாய்ப்பைக் கெடுத்துவிட்டதாக அவர் நினைக்கிறாரோ? நிஜமாகவே நான் அவர்களிடம் எதுவும் பேசவில்லை என்பதை எப்படி அவருக்கு நிரூபிப்பேன்?

இப்படி நினைக்க ஆரம்பித்ததும், என்னுடைய குற்றவுணர்ச்சி அதிகமாகிவிட்டது. சாதாரண சூப்பர் மார்க்கெட் க்யூ, அது ரொம்ப முக்கியமா? இரண்டு நிமிடம் அவரைப்பற்றி நல்லவிதமாகப் பேசிவிட்டு, அதன்பிறகு பில் போட்டிருந்தால் நான் என்ன குறைந்துபோயிருப்பேனா? ‘எல்லாம் ட்டூ மினிட்ஸ் கழிச்சுப் பேசிக்கலாம்’ என்று நான் அலட்சியம் காட்டியதால்தானே அவர்கள் இன்னொருவரை அழைத்தார்கள்? அதனால்தானே இந்தப் பெண்ணின் வேலைவாய்ப்பு கெட்டுப்போச்சு?

யார் கண்டது? ஒருவேளை நான் அந்த அழைப்பைத் துண்டிக்காமல் தொடர்ந்து பேசியிருந்தால், இப்போது ஸ்ரீமதி தொலைபேசியில் அழுகிற அவசியம் ஏற்பட்டிருக்காதோ என்னவோ.

ஸ்ரீமதி சிறிது நேரம் அழுதார், நிறைய நேரம் புலம்பினார், அதன்பிறகு அவரே ஏதோ ஒருவிதத்தில் சமாதானம் அடைந்தார், ‘சரி சார், உங்க உதவிக்கு நன்றி’ என்று வஞ்சப் புகழ்ச்சி அணியில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

இனிமேல், ஸ்ரீமதி இழந்த அந்த வேலையைத் திரும்ப வாங்கித்தருவதற்கு என்னால் எதுவும் செய்யமுடியாது. ஆனால் அடுத்தமுறை ‘ட்டூ மினிட்ஸ்’ என்று என் சவுகர்யத்துக்காக ஒரு விஷயத்தைத் தள்ளிப்போடுவதற்குமுன்னால், கொஞ்சமாவது யோசிப்பேன்.

***

என். சொக்கன் …

10 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஒரு வாரமாக, அலுவலகம் போகிற வழியில் தினந்தோறும் அந்தக் காட்சியைத் தவறாமல் பார்க்கிறேன் – அதிகப் போக்குவரத்து இல்லாத எங்கள் தெருவின் சிமென்ட் சாலையில் மூன்று பேர் நடை பழகுவதுபோல் முன்னே, பின்னே மாறி மாறி நடந்துகொண்டிருக்கிறார்கள்.

பெங்களூரின் ஒவ்வொரு தெருவிலும் எந்நேரமும் ஏதாவது ஒரு வீடு கட்டிக்கொண்டிருப்பார்கள். புது வீடாக இல்லாவிட்டாலும், இருக்கும் பழைய வீட்டை இடித்துக் கட்டுவார்கள், அல்லது ஒரு மாடி சேர்ப்பார்கள், இருப்பதைப் புதுப்பித்து அழகுபடுத்துவார்கள், இதை அதாகவும் அதை இதாகவும் மாற்றுவார்கள், இங்குள்ளவர்களுக்குக் காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவ்வப்போது வீட்டை ஏதாவதுவிதமாக மாற்றாவிட்டால் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும் என்று நினைக்கிறேன் – சில இளைஞர்கள், இளைஞிகளின் ’செல்ஃபோன் மாற்றும் பித்து’போல.

இது ஒரு புதிய அடுக்ககம். இரண்டு மாடிகள் கட்டி முடித்து மூன்றாவதில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான செங்கல், மணல், இன்னபிற சமாசாரங்கள் கீழிருந்து மேலே போய்ச் சேரவேண்டும்.

இதற்குத் தோதாக அவர்கள் ஒரு தாற்காலிக ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலே ஒரு சின்னக் கிணறு ராட்டினம் அமைத்து, அதில் நீளமான தாம்புக் கயிறு தொங்கவிடப்பட்டிருந்தது, அதன் ஒரு முனையில் ’S’ வடிவ இரும்புக் கொக்கி ஒன்று, இன்னொரு முனையில் ஒரு நான்கடி மரக்கட்டையை நன்றாக இறுக்கிக் கட்டியிருந்தார்கள்.

இப்போது, கொக்கியில் ஒரு கனமான மூட்டையைத் தொங்கவிடுகிறார்கள், இன்னொரு முனையில் உள்ள மரக்கட்டையை மூன்று பேர் சேர்ந்து இழுத்தபடி தெருவோடு நடக்கிறார்கள், அந்தப் பக்கம் மூட்டை மேலே போய்ச் சேர்ந்துவிடுகிறது.

மூன்றாவது மாடியில் வேலை பார்க்கிறவர்கள், மூட்டையில் உள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு, கயிற்றை இழுத்து சிக்னல் கொடுக்கிறார்கள். உடனே, பின்னோக்கி நடந்தவர்கள் திரும்ப முன்னோக்கி வருகிறார்கள், காலி மூட்டை கீழே வந்து சேர்கிறது.

காலை தொடங்கி, மதியம், மாலைவரை இவர்கள் இப்படியே நடந்துகொண்டிருப்பார்கள், அவ்வப்போது ஒருவர் ஓய்வு எடுப்பார், அவருக்குப் பதில் இன்னொருவர் ஜோதியில் ஐக்கியமாவார், மற்றபடி நீதி கேட்கும் நெடும்பயணம் நிற்காமல் தொடர்கிறது.

அடிப்படையில் இது Pulley தத்துவம்தான் என்பதால், எத்தனை கனமான மூட்டையைத் தூக்குவதற்கும் அதிக உடல் உழைப்பு தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஒரே நேரத்தில் மூன்று பேர் சேர்ந்து இழுப்பதால், இன்னும் எளிதாக இருக்கவேண்டும்.

ஆனால், செக்கு மாட்டின் வட்டப்பாதையை நீட்டிவிட்டாற்போல் இப்படி மாற்றி மாற்றி நாள்முழுக்க முன்னாலும் பின்னாலும் நடந்துகொண்டிருந்தால் போரடிக்காது?

ஹிட்லரின் சித்திரவதைக் கேம்ப்களைப்பற்றிப் பல கதைகள் சொல்வார்கள். இவற்றில் எது நிஜம், எது கற்பனை என்று கண்டுபிடிப்பதுகூடச் சிரமம்.

அப்படி ஒரு கதை, கைதிகளுக்குத் தரப்படுகிற விநோதமான ‘வேலை’களைப்பற்றியது.

இந்தக் கைதிகள், ஒவ்வொரு நாளும் தரையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டவேண்டும். அதைத் தோண்டி முடித்ததும், உடனடியாகப் பக்கத்தில் குவித்திருக்கும் மண்ணைப் போட்டு அதை  மூடிவிடவேண்டும்.

அதாவது, ஆறு மணி நேரம் கஷ்டப்பட்டுப் பள்ளம் தோண்டியது வீண். உள்ளே எதையும் போட்டுப் புதைக்காமல், அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் அவர்களே அதை முழுவதுமாக மூடிவிடுகிறார்கள். தரை பழையபடி சமதளமாகிவிடுகிறது.

மறுநாள் காலை, மறுபடியும் பள்ளம், மறுபடியும் மூடல், சமதளம், பள்ளம், மூடல், சமதளம், … இப்படியே தினசரி தொடர்ந்து செய்துகொண்டிருந்தால், ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற அந்த Boredomமட்டுமே அவர்களைக் கொன்றுவிடுமாம்.

அந்தக் கைதிகளோடு ஒப்பிடும்போது, இந்த ’நடை’யர்களின் வேலை கொஞ்சம் பெட்டர். வெட்டியாக மண்ணைத் தோண்டி மூடாமல், கண்ணெதிரே ஒரு கட்டடம் உருவாவதையாவது அவர்கள் பார்க்கலாம்.

ஆனால், அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டபிறகு, அதைப் பார்க்கும்போது இவர்களுக்கு ஏதேனும் பெருமையுணர்வு இருக்குமா? இதைக் கட்டியதில் என்னுடைய பங்களிப்பும் இருந்திருக்கிறது என்று தோன்றுமா? அல்லது ‘சும்மா முன்னே பின்னே நடந்தேன், அவ்ளோதானே’ என்று விரக்தியாக நினைத்துக்கொள்வார்களா?

எந்தக் காரணத்தால் இவர்கள் இப்படி ஒரு ’போர’டிக்கும் Templatized / Cookie Cutter வேலைக்கு ஒத்துக்கொள்கிறார்கள்? மற்ற வேலைகளைச் செய்ய இவர்களுக்கு வலு போதாதா? அனுபவம் போதாதா? திறமை போதாதா? ஆர்வம் இல்லையா? இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சம்பளத்தில் என்ன வித்தியாசம்? இப்படி இவர்கள் ஆறு மாதம் முன்னும் பின்னும் நடந்தால் பிரமோஷன் கிடைத்து மற்ற கட்டட வேலைகளுக்கு நகரலாமா? அல்லது டைப் ரைட்டர் Platenபோல காலத்துக்கும் முன்னே, பின்னே நடந்துகொண்டிருக்கவேண்டியதுதானா?

இன்று காலை, இந்த மூவர் அணியின் நடை பயணத்தில் ஒரு சின்ன மாற்றம். புதிதாக ஒரு சின்னப் பையன் அவர்களோடு கூட்டணி சேர்ந்திருந்தான்.

அவன் கட்டையை இழுக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் இழுக்கிற தாம்புக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு தொங்கி விளையாடினான்.

இப்போது, ‘நடை’யர்கள் பின்னோக்கி நடக்க நடக்க, கயிற்றில் தொங்கியவன் அதைப் பற்றிக்கொண்டு சரசரவென்று இன்னும் மேலே ஏறிச் சென்றான், தவறி விழுந்துவிடுவானோ என்று எனக்குப் பயமாக இருந்தது.

ஒருவேளை விழுந்தால், கீழே துளி மண் இல்லை, உறுதியான சிமென்ட் சாலை, எலும்பு உடையுமோ, மண்டை உடையுமோ, அல்லது இரண்டும் உடையுமோ, அந்தக் கடவுளுக்குதான் வெளிச்சம்.

ஆனால், அந்தப் பையனும் சரி, ‘நடை’யர்களும் சரி, அதைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு இது ஒரு புதிய விளையாட்டாகத் தோன்றியிருக்கவேண்டும், ஏதோ பேசிச் சிரித்தபடி அவனைக் கிண்டலடித்துக்கொண்டு வழக்கம்போல் வேலையைக் கவனித்தார்கள்.

கயிறு முழு நீளத்துக்கு இழுக்கப்பட்டதும், மேலே மூட்டை காலி செய்யப்பட்டது, இதனால் கயிற்றில் இறுக்கம் குறைந்தது.

சட்டென்று அதைப் புரிந்துகொண்ட அந்தப் பையன், இருந்த உயரத்திலிருந்து அப்படியே பத்திரமாகக் கீழே குதித்தான். கையைத் தட்டிக்கொண்டு எழுந்து அடுத்த ஏற்றத்துக்குத் தயாரானான்.

முன்னே, பின்னே நடப்பதும், மேலே, கீழே ஏறிக் குதிப்பதும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான். ஆனால் ஏனோ எனக்கு அந்த ‘நடையர்’கள்மேல் தோன்றிய பரிதாபம், அந்தப் பையன்மீது வரவில்லை.

***

என். சொக்கன் …

06 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

வழக்கம்போல், சாப்பாட்டுத் தட்டு முன்னே வைக்கப்பட்டதும் ‘அப்பா ஒரு கதை சொல்லுப்பா’ என்று ஆரம்பித்தாள் நங்கை.

‘நீ சாப்பிடு, நான் சொல்றேன்’

‘நீ சொல்லு, நான் சாப்பிடறேன்’

‘சரி, உனக்கு என்ன கதை வேணும்?’

’ம்ம்ம்ம்ம்’ என்று கொஞ்ச நேரம் உம் கொட்டிக்கொண்டு யோசித்தவள் கடைசியில், ‘பாம்பும் பூனையும்’ என்றாள்.

எங்கள் வீட்டில் இது ஒரு புதுப் பழக்கம். தினமும் ராத்திரிச் சாப்பாட்டு நேரத்தில் நானோ என் மனைவியோ ஒரு கதை சொல்லவேண்டும், அதுவும் நங்கை தேர்ந்தெடுக்கிற இரண்டு மிருகங்கள் கதையின் முக்கியப் பாத்திரங்களாக வரவேண்டும்.

சாதாரணமாக ஆடு, மாடு என்றால் பரவாயில்லை, வேறு பிரபலக் கதைகளை எடுத்துக்கொண்டு பாத்திரங்களைமட்டும் வேறுவிதமாக மாற்றிச் சமாளித்துவிடலாம். கதை முடிவதற்குள் தட்டு காலியாகிவிடும்.

ஆனால், வெகு சீக்கிரத்தில் நங்கைக்கு இந்தத் தந்திரம் புரிந்துவிட்டது. ‘ஒட்டகமும் முதலையும்’ என்பதுமாதிரி கேனத்தனமான கூட்டணிகளையெல்லாம் அறிமுகப்படுத்த ஆரம்பித்தாள்.

அப்போதும் நான் சளைக்கவில்லை, ‘ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டு வித்துகிட்டிருந்தாளாம், அப்போ அந்த வடையை ஒரு ஒட்டகம் திருடிகிட்டுப் போச்சாம், அங்கே ஒரு முதலை வந்து, ‘ஒட்டகம், ஒட்டகம், ஒரு பாட்டுப் பாடேன்’னு கெஞ்சிக் கேட்டதாம்’ என்று சமாளிக்கத் தொடங்குவேன்.

’ஏய் அப்பா, நீ என்ன லூஸா?’

‘அதெப்படி உனக்குத் தெரியும்?’

‘முதலைக்குதான் பெரிய வால் இருக்கில்ல? அத்தனை ஷார்ப்பா பல்லெல்லாம் இருக்கில்ல? அப்புறம் எதுக்கு அநாவசியமாக் கெஞ்சிகிட்டிருக்கணும்? ஒட்டகத்துக் காலை அடிச்சு உடைச்சுக் கடிச்சுட்டா வடை தானாக் கீழ விழுந்திடுமில்ல?’

குழந்தைகளுக்கு வன்முறை எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக, நாங்கள் இன்றுவரை நங்கைக்கு ஒரு துப்பாக்கி பொம்மை, கத்தி, கபடா, வில், அம்பு எதுவும் வாங்கித்தந்தது கிடையாது. ஆயுத வாசனையே இல்லாத சமர்த்து பொம்மைகளாகதான் தேடித் தேடி வாங்குகிறோம், தொலைக்காட்சியிலும் அடிதடி, வெட்டு, குத்து சமசாரங்கள், மெகாசீரியல்கள் வைப்பது கிடையாது, பிறகு எப்படி அவளால் ஒட்டகத்தின் காலைக் கடித்துத் தின்னும் முதலைகளையெல்லாம் இப்படியொரு கொடூர நுணுக்கத்துடன் கற்பனை செய்யமுடிகிறது?

இன்னொரு பிரச்னை, நங்கை இப்படிக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் சாப்பாடு உள்ளே இறங்காது. எப்படியாவது அவளை மீண்டும் கதைக்குள் இழுத்தாகவேண்டும். இதனால், நான் ஒவ்வொரு நாளும் (நிஜமாகவே) புதுப்புதுக் கதைகளை  கற்பனை செய்யவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.

உண்மையில், அவை எவையும் புதுக் கதைகளே இல்லை. நங்கை சொல்லும் இரண்டு மிருகங்களை வைத்துக்கொண்டு, நான் எங்கேயோ படித்த, யாரிடமோ கேட்ட சமாசாரங்களையெல்லாம் கலந்துகட்டிச் சமாளிக்கவேண்டியதுதான், வேறு வழி?

உதாரணமாக, காந்தி சின்ன வயதில் ஹரிச்சந்திரன் கதையைக் கேட்டாரா? இனிமேல் எப்போதும் எதற்காகவும் பொய் சொல்வதில்லை என்று ஒரு சபதம் எடுத்தாரா? இந்தக் கதையில் காந்திக்குப் பதிலாக ஒரு குட்டி எலி அல்லது பெரிய ஆமையை Replace செய்து கடைசி வரியில் ஒரு ‘நீதி’யைச் சேர்த்தால் புதுக்கதை ரெடி.

இப்படியே திருப்பதிக்குப் போன கரடி, ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் எட்டு தங்க மெடல் வாங்கிய வாத்து, ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பெரும் பணக்காரனான பாம்பு, நாலு மணி நேரம் போராடி விம்பிள்டன் ஜெயித்த முயல் குட்டி, ஏர்போர்ட்டில் தங்கம் கடத்திப் பிடிபட்ட பெங்குவின், தன்னைத்தானே சிலைகளாகச் செய்து ஊர்முழுக்க வைத்துக்கொண்ட சிங்கம், ‘கௌன் பனேகா க்ரோர்பதி’யில் கலந்துகொண்ட பெருச்சாளி என்று பத்திரிகைச் செய்திகள், துணுக்குத் தகவல்களெல்லாம் நங்கைக்கான கதைகளாக மறு அவதாரம் எடுத்தன.

இந்தக் கதைகளைச் சொல்வதற்கும் ஒரு டெக்னிக் இருக்கிறது. பரபரவென்று வேகமாகச் சொல்லிவிட்டால், கதை தீர்ந்துவிடும், சாப்பாடு மிச்சமிருக்கும், ரொம்ப நீட்டி முழக்கினால், சாப்பாடு காலியாகிவிடும், கதை முடிந்திருக்காது, இந்தப் பிரச்னைகள் இன்றி இரண்டும் சரிசமமாகக் காலியாகும்படி கதையை நீட்டி, குறுக்கி ஒழுங்குபடுத்திக்கொள்ளவேண்டும்.

கிட்டத்தட்ட, பஜ்ஜி போடுவதுபோல்தான். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காய்த் துண்டங்கள், இன்னொன்றில் கரைத்துவைத்த கடலை மாவு, ஒவ்வொரு துண்டமாகத் தோய்த்துத் தோய்த்து எண்ணெயில் போட, கடைசி பஜ்ஜி உள்ளே விழும்போது, வாழைக்காயும் காலியாகியிருக்கவேண்டும், மாவும் மீதமிருக்கக்கூடாது. அவ்வளவுதான் விஷயம்.

இப்படி நான் மனத்துக்குத் தோன்றிய சமாசாரங்களையெல்லாம் நங்கைக்குக் கதைகளாக மாற்றிக்கொண்டிருக்க, என் மனைவிக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை, ‘குழந்தைக்கு நல்லதா நாலு கருத்துள்ள விஷயம் சொல்றதை விட்டுட்டுக் கண்டபடி கதை சொல்றியே’ என்று கண்டிக்க ஆரம்பித்தார்.

’ப்ச், அவளுக்கு இதெல்லாம் புரியப்போகுதா என்ன?’ நான் அலட்சியமாகச் சொன்னேன், ‘அப்போதைக்குச் சாப்பாடு உள்ளே இறங்கணும், அதுக்குதான் ஏதோ ஒரு கதை, கொஞ்ச நேரம் கழிச்சு அவளே அதை மறந்துடுவா’

ஆனால், நான் நினைத்தது தப்பு என்று பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் புரிந்தது. இரண்டு நாள் முன்பாக நான் சொன்ன ஒரு கதையை, நங்கை அப்படியே அவளுடைய தங்கைக்குத் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஆச்சர்யமான விஷயம், அந்தக் கதையில் எலி சிவப்புச் சட்டை போட்டிருந்தது, போலீஸ்காரரிடம் மாட்டிக்கொண்டபோது, ‘ப்ளீஸ், ப்ளீஸ்’ என்று சரியாக ஏழு முறை கெஞ்சியது, கடைக்குச் சென்று மசால் தோசை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, கை கழுவத் தண்ணீர் இல்லாமல் தொப்பியில் துடைத்துக்கொண்டது என்று அந்தக் கதையில் நான் அப்போதைக்கு யோசித்துச் சொன்ன விஷயங்களைக்கூட, அவள் மிகத் துல்லியமாக நினைவில் வைத்திருந்தாள். கடைசியாகச் சொன்ன நீதியையும், நான் பயன்படுத்திய அதே வாக்கிய அமைப்பில் சொல்லி முடித்தாள்.

நங்கை சொன்ன கதை, அவளுடைய ஒன்றரை வயதுத் தங்கைக்குச் சுத்தமாகப் புரிந்திருக்காது. ஆனால் தான் அறிந்ததை முழுமையாகச் சொல்லவேண்டும் என்கிற அக்கறையில் அவள் ஒரு குறை வைக்கவில்லை. இதைப் பார்த்த எனக்குதான் ரொம்ப வெட்கமாக இருந்தது.

அது சரி, நேற்றைய கதை என்ன ஆச்சு?

நங்கை ‘பாம்பும் பூனையும்’ என்று சொன்னாளா, இந்த இரண்டு மிருகங்களை வைத்துப் பொருத்தமான ஒரு கதையை நான் யோசித்துக்கொண்டிருந்தேனா, அதற்குள் என் மனைவி உதவிக்கு வந்தார்.

‘நான் ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தபோது நடந்த ஒரு கதையைச் சொல்றேன், கேட்கிறியாடீ?’

’அந்தக் கதையில பாம்பு வருமா?’

‘வரும்’

’சரி சொல்லு’

’ஒருத்தன் வயல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தானாம், அவனை ஒரு பாம்பு கொத்திடுச்சாம், சட்டுன்னு வண்டியில போட்டு எங்க ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு வந்தாங்க’

’அங்கே எங்க டாக்டர் அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க ஆரம்பிச்சார். ஆனா, அவனைக் கடிச்சது எந்தப் பாம்புன்னு அவரால கண்டுபிடிக்கமுடியலை’

’அதனால, அவனைத் தூக்கிட்டு வந்தவங்ககிட்டே கேட்டார், ‘ஏம்ப்பா, இவனை எந்த வகைப் பாம்பு கொத்திச்சு? உங்களுக்குத் தெரியுமா?’’

’உடனே அவங்க ’எந்தப் பாம்புன்னு எங்களுக்குச் சரியாத் தெரியலை டாக்டர், எதுக்கும் நீங்களே ஒருவாட்டி பார்த்துச் சொல்லிடுங்க’ன்னு ஒருத்தன் பைக்குள்ள கையை விட்டு வெளிய எடுத்தா, உயிரோட ஒரு பாம்பு நெளியுது’

’அவ்ளோதான், நாங்கல்லாம் அலறிக்கிட்டே ஆளுக்கு ஒரு பக்கமா ஓடிட்டோம், டாக்டர்கூட பயந்துபோய் ரூமுக்குள்ளே மறைஞ்சுகிட்டார்’

நங்கை மனத்துக்குள் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்துச் சிரித்தாள். பிறகு, ‘அப்புறம்? பாம்பு கொத்தின ஆளுக்கு என்ன ஆச்சு?’ என்றாள்.

’பாம்பை அரெஸ்ட் பண்ணி ஜூவுக்கு அனுப்பினப்புறம்தான் டாக்டர் நடுங்கிக்கிட்டே வெளியே வந்தார், அந்த ஆளுக்கு ட்ரீட்மென்ட் தந்து பிழைக்கவெச்சார்’

’சரி, இந்தக் கதையால நமக்குப் புரியற நீதி என்ன?’

’டாக்டரா இருக்கிறவங்க பாம்பைப் பார்த்துப் பயப்படக்கூடாது’

’ஏதோ ஒண்ணு, தட்டு காலியானா சரி!’

***

என். சொக்கன் …

03 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நாளை (2 ஆகஸ்ட் 2009, ஞாயிறு) மதியம் 12 மணிக்கு, ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ஏ. ஆர். ரஹ்மான் புத்தகம்பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கி என்னுடன் உரையாடியவர்: திரைத்துறை ஆய்வாளர், எழுத்தாளர் திரு. பா. தீனதயாளன். தொலைபேசிவழியே திரு. ஐகாரஸ் பிரகாஷ், பாடகி ஸ்ரீமதுமிதா ஆகியோரும் பங்கேற்றார்கள்.

ARR_Wrapper

சுவாரஸ்யமான இந்த அரட்டையின் வழியே, ’ரோஜா’வுக்கு முன்பிருந்து, ஸ்லம்டாக் மில்லியனர்’வரையிலான ரஹ்மானின் இசைப் பயணத்தைத் தொட்டுச்சென்றிருக்கிறோம். நிகழ்ச்சியின் இடையே, ‘ஏ. ஆர். ரஹ்மான்’ புத்தகத்திலிருந்து இரண்டு முக்கியமான பகுதிகளை ஒலி வடிவத்திலும் கேட்கலாம்.

ஆஹா FM சென்னையில்மட்டும்தான் ஒலிபரப்பாகிறது என்று நினைக்கிறேன், பெங்களூரில் நானோ, சேலத்தில் என் பெற்றோரோ இந்த நிகழ்ச்சியைக் கேட்க வாய்ப்பில்லை. இணையத்தில் கிடைக்கிறது என்கிறார்கள், ஆனால் அதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. இணையத்தில் http://www.loka.fm என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டு, அரை மணி நேரத் தாமதத்தில் (அதாவது, இந்திய நேரம் 12 மணி நிகழ்ச்சி 12:30க்கு வரும்) இந்த நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

ஆகவே, சென்னையில் உள்ள நண்பர்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கருத்துச் சொல்லவும், மற்றவர்கள், தங்களுக்குத் தெரிந்த சென்னைவாசிவர்களுக்குத் தகவல் சொல்லவும். நன்றி 🙂

Update:

1. நண்பர் கணேஷ் சந்திரா வலைப்பதிவில் இந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவைக் கேட்கலாம், அல்லது MP3 வடிவில் இறக்கிக்(டவுன்லோட் செய்து)கொள்ளலாம்:

http://chumma.posterous.com/kizhakku-pod-cast-2

நன்றி கணேஷ் சந்திரா!

2. இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

***

என். சொக்கன் …

01 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2009
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31