மனம் போன போக்கில்

Archive for October 2010

நம்முடைய ஊடகங்களில் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறைபற்றி இரண்டுவிதமான பிம்பங்களே உள்ளன. ஒன்று, ‘இங்கே நுழைந்தால் லட்சங்களில் சம்பளம் அள்ளலாம், உலகைச் சுற்றிவரலாம், கோடிகளில் சேமித்து ’பில் கேட்ஸ்’ மாதிரியோ ‘சிவாஜி’ ரஜினிமாதிரியோ சமூக சேவை செய்யலாம். எட்ஸட்ரா எட்ஸட்ரா’. இன்னொன்று ‘ஐடில நுழைஞ்சுட்டா ராத்திரி, பகல் கிடையாது, பொண்டாட்டி, புள்ளயோட நேரம் செலவிடமுடியாது, கண்ணு கெட்டுப்போகும், தூக்கமில்லாம உடம்பு கெட்டுப்போகும், உட்கார்ந்த இடத்தில வேலை பார்க்கறதால முப்பது வயசுல ஹார்ட் அட்டாக் வரும், அப்புறம் மூச்சு முட்டி ரிடையராகவேண்டியதுதான்.’

வழக்கம்போல், நிஜம் இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கிறது. அதைப் பதிவு செய்யும் எழுத்துகள் (தமிழில்) அதிகம் இல்லை.

சில வருடங்கள்முன் விகடனில் வெளிவந்த எனது ‘வல்லினம், மெல்லினம், இடையினம்’ தொடர் சிலருக்கு நினைவிருக்கலாம். ஐடி துறைபற்றிய ஒரு ‘behind-the-screens’ பார்வையாக வந்த அந்தத் தொடர் வெளியானபோதும் பின்னர் புத்தகமானபோதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வல்லினம் மெல்லினம் இடையினம்

’வ-மெ-இ’ எழுதி முடிந்தபிறகு ஐடி துறையில் நிறைய மாற்றங்கள். அவற்றைத் தொட்டுச்செல்லும்வகையில் இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தை இன்னொரு பத்திரிகையில் எழுத உத்தேசித்திருக்கிறேன். முதல் பாகம் படித்தவர்கள் அதில் எதெல்லாம் விடுபட்டது என்று யோசனை சொன்னால் இந்தமுறை சரி செய்துவிடலாம். நீங்கள் இதில் இடம்பெறவேண்டும் என்று நினைக்கிற தலைப்புகள், யோசனைகளையும் இங்கே பின்னூட்டத்தில் சொல்லலாம். அட்வான்ஸ் நன்றிகள்!

ஒரு ‘த்ரில்’லுக்காக ’வ-மெ-இ’ முதல் பாகத்தில் இடம்பெற்ற அத்தியாயத் தலைப்புகள்மட்டும் இங்கே – எந்த அத்தியாயத்தில் என்ன மேட்டராக இருக்கும் என்று ஊகித்துப் பாருங்கள் 😉

01. கண்ணாடிக் கூண்டு
02. கோடி ரூபாய்க் கேள்வி
03. ‘மேனியாக்’தனம்
04. ரகசியம், பரம ரகசியம்
05. சின்னச் சின்னப் படிக்கட்டுகள்
06. வன்பொருள், மென்பொருள்
07. திறமைக்கு(மட்டுமே) மரியாதை
08. ஜாலியாக ஒரு பரீட்சை
09. பெஞ்ச் வாசம்
10. நிரந்தர கிராக்கி?
11. டிஜிட்டல் ஊழல்
12. உற்சாகக் கவசம்
13. வெல்லுவதே இளமை
14. ஈ-குப்பைகள்
15. கணினிக் கல்வி
16. பூங்கா நகரம்
17. சில சில்மிஷங்கள்
18. சமூகப் பொறுப்பு
19. கண்ணாடிக் கூரை
20. காகிதக் கத்தி
21. திருடாதே, ப்ராஜெக்ட் திருடாதே
22. ஆளுக்கொரு கம்ப்யூட்டர்
23. மூக்கை நுழைக்காதே
24. எல்லாம் எல்லோருக்கும்
25. பதினைந்து பைசா சம்பளம்
26. நவீன ஏமாற்றுகள்
27. மூர்த்தி பெரிது
28. ஆதலினால், காதல் செய்வீர்

***

என். சொக்கன்

29 10 2010

’வல்லினம், மெல்லினம், இடையினம்’ புத்தகம்பற்றிய மேலதிக விவரங்களுக்கு –> https://www.nhm.in/shop/978-81-8368-179-7.html

சிவப்பு விளக்கு அணைந்து பச்சை ஒளிர்ந்தது. எங்கள் பஸ் வலதுபக்கம் திரும்பி வேகம் பிடிக்கத் தொடங்கிய மறுவிநாடி அந்தச் சத்தம் கேட்டது.

முதலில் நான் முன்டயர் வெடித்துவிட்டதாகதான் நினைத்தேன். கவலையோடு ஜன்னலுக்கு வெளியே தலையை நுழைத்தபோது சரேலென்று படுக்கைவசத்தில் தரையோடு உராய்ந்துகொண்டு வழுக்குகிற பைக்கைப் பார்த்தேன்.

சென்ற விநாடிவரை அதை ஓட்டிக்கொண்டிருந்தவர் இப்போது நான்கடி தள்ளிக் கிடந்தார். அவர் தலையிலிருந்த ஹெல்மெட் கழன்று எகிறி வேறு எங்கோ விழுந்திருந்தது.

நான் அவசரமாகத் தலையை உள்ளே இழுத்துக்கொண்டேன். பஸ்ஸிலிருந்த எல்லோருமே வாசல் கதவை நோக்கி ஓடினோம்.

நாங்கள் கீழே இறங்குவதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்த வாகன ஓட்டுனர்கள் அடிபட்டவரை நெருங்கியிருந்தார்கள். இரண்டு பேர் அவரைக் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு சாலை ஓரத்துக்கு ஓடினார்கள். ஒல்லிப்பிச்சிப் பையன் ஒருவன் வண்டியைத் தூக்கி நிறுத்தி எஞ்சினை அணைத்தான்.

அடிபட்டவர் தான் உயிர் பிழைத்துவிட்டோமா என்பதை நம்பமுடியாதவர்போல் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தார். மற்றவர்கள் அவரைப் பதற்றமாக விசாரிக்க ‘ஐ யாம் ஆல்ரைட்’ என்று எழுந்து நிற்க முயன்றார். முடியவில்லை.

கூட்டம் ஆவேசமாக எங்கள் பேருந்தின் ஓட்டுனர்மீது திரும்பியது. ‘ஏன்ய்யா, கவர்ன்மென்ட் வண்டியில ஏறிட்டா நீ பெரிய மஹாராஜாவா? பார்த்து வர்றதில்ல?’

இவரும் விடாமல் திருப்பி முறைத்தார். ‘நான் சரியாதான் வந்தேன். அந்தாள்தான் ரெட் சிக்னலைப் பார்க்காம குறுக்கே வந்து அடி வாங்கினான்.’

பஸ் டிரைவர் சொல்வது உண்மைதான் என்பது எல்லோருக்கும் புரிந்தது. ஆனாலும் இரண்டு வண்டிகள் மோதிக்கொள்ளும்போது பெரிய வண்டியின் ஓட்டுனர்தானே தப்புச் செய்தவராக இருக்கமுடியும்?

‘இப்ப என்ன பண்றது?’ யாரோ கேட்டார்கள். ‘பக்கத்திலதான் போலிஸ் ஸ்டேஷன்!’

‘போலிஸ் இருக்கட்டும். இப்படி நடு சிக்னல்ல பஸ்ஸை நிறுத்திவெச்சா எப்படி? முதல்ல அதை ஓரங்கட்டி நிறுத்துங்க.’

எங்கள் ஓட்டுனர் பஸ்ஸில் ஏறிக்கொண்டார். நாங்களும். வலதுபக்கம் திரும்பி ஓர் ஓரமாக அவர் வண்டியை நிறுத்தியவுடன் சினிமாவில் வருவதுபோல் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

இதற்குள் அடிபட்டவர் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றிருந்தார். அவருக்கு உதவி செய்தவர்கள் யாரிடமும் குடை இல்லை. மழை மிக விரைவில் நன்கு வலுத்துவிட்டதால் சில நிமிடங்கள் கழித்து வண்டிக்குள் இருந்த எங்களால் அவர்களைச் சரியாகப் பார்க்கக்கூட முடியவில்லை.

‘சரி. வண்டியை எடுங்க!’ யாரோ தீர்ப்புச் சொன்னார்கள்.

‘அதெப்படி? நாளைக்கு ஏதாவது பிரச்னை வந்தா எங்க வேலைதானே போகும்?’ என்றார் கண்டக்டர். ‘டிப்போவுக்கு ஃபோன் பண்றேன். இதுபத்தி அவங்கதான் முடிவெடுக்கணும்.’

எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவருக்கு எரிச்சல். ‘யோவ், பசி நேரத்தில ஏன்ய்யா கடுப்பேத்தறீங்க? அதான் ரத்த காயம் இல்லைன்னு தெரியுதுல்ல? ஒண்ணும் பிரச்னை வராது. வண்டியை எடு!’

கண்டக்டர் அவரைக் கண்டுகொள்ளாமல் தன்னுடைய செல்பேசியில் ஓர் எண்ணை ஒற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ’சார், இங்கே மடிவாலா மார்க்கெட் பக்கத்தில ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்!’ … ‘இல்லை சார். பெரிசா ஒண்ணும் காயம் இல்லை’ … ‘வண்டிக்குக்கூட பெரிய டேமேஜ்லாம் இல்லை சார்’ … ‘இங்கே நல்லா மழை பெய்யுது சார். ஜன்னல் வழியா ஒண்ணும் தெரியலை!’ … ‘அப்படியா? சரி சார், நாங்க வெய்ட் பண்றோம்.’

பயணிகள் பெரிதாக உச்சுக்கொட்டினார்கள். ‘அவனவனுக்கு ஆயிரம் வேலை இருக்கு. ஒண்ணுமில்லாத விஷயத்தை இப்படிப் பெரிசு பண்றீங்களே!’

டிரைவரும் கண்டக்டரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். சில நிமிடங்களில் மழை லேசாகக் குறைந்து தூறல்மட்டும் மிச்சமிருந்தது.

இப்போது நாங்கள் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கினோம். டிரைவர், கண்டக்டரோடு நானும் இன்னொருவரும் அடிபட்டவரைப் பார்ப்பதற்காகச் சாலையைக் கடக்க முயன்றோம். ‘பார்த்து கவனமாப் போங்க’ என்றார் ஒருவர். இன்னும் அரை மணி நேரத்துக்காவது எங்கள் எல்லோருக்கும் சாலைப் பாதுகாப்புகுறித்த ஒழுக்க விதிமுறைகள் மறக்காமல் நினைவிருக்கும்.

சாலையின் மறுபக்கம் அடிபட்டவரைக் காணவில்லை. அவருடைய பைக்கும் இல்லை. மழையிலேயே ஓட்டிக்கொண்டு கிளம்பிச் சென்றுவிட்டாரோ என்னவோ!

’ஆக்ஸிடென்ட் ஆன ஆளும் இல்லை. வண்டியும் இல்லை. இன்னும் எதுக்குய்யா காத்திருக்கணும்?’ என்றார் என்னோடு நின்றவர். ‘இப்ப வண்டியை எடுக்கலாம்ல?’

‘இல்லைங்க. ஆஃபீஸ்ல விஷயத்தைச் சொல்லிட்டோம். அவங்க வர்றவரைக்கும் வண்டியை எடுக்கமுடியாது!’

’அப்ப எங்களையெல்லாம் வேற பஸ்ல மாத்திவிடுங்க.’

‘ஓகே!’

நாங்கள் மீண்டும் சாலையைக் கடந்தோம். அந்த வழியாகச் சென்ற இன்னொரு பஸ்ஸைக் கை காட்டி நிறுத்தினார் எங்கள் டிரைவர். ஏறிக்கொண்டோம். எனக்குக் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது.

பஸ் புறப்படும்போது அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். அந்த இன்னொரு பஸ்ஸும் அதன் டிரைவர், கண்டக்டரும் சாலையோரத்தில் பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

அவர்களுக்கும் பசி நேரம்தான் என்று எங்களில் யாருக்கும் தோன்றவில்லை. தலைமை அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும்கூடத் தோன்றியிருக்காது.

***

என். சொக்கன் …

23 10 2010

’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’

தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன்.

சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’

’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’

’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’

‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா  வருவோம். முதல்ல, நீ ஏன் போஸ்ட் பாக்ஸ் பத்தி விசாரிக்கறே?’

‘தசரா ஹாலிடேஸ்க்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்ன்னு மிஸ் சொன்னாங்க. சீட்டுக் குலுக்கிப் போட்டதில எனக்குப் போஸ்ட் பாக்ஸ்ன்னு வந்தது’ என்றாள் நங்கை. ‘உனக்கு போஸ்ட் பாக்ஸ் செய்யத் தெரியுமாப்பா?’

‘தெரிஞ்சுக்கணும். வேற வழி?’

அன்றுமுழுக்க போஸ்ட் பாக்ஸ்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாள் டவுசரின் பின்பக்கக் கிழிசல் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு படத்தில் (நிஜ) போஸ்ட்  பாக்ஸுக்குள் கையை விட்டுச் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிற நடிகர் சார்லியின் ஞாபகம்கூட வந்தது. ஆனால் போஸ்ட் பாக்ஸ் எப்படிச் செய்வது என்றுமட்டும் புரியவில்லை.

இன்டர்நெட்டில் ‘How to make a post box’ என்று தேடிப் பார்த்தேன். ஏராளமான கட்டுரைகள், வீடியோக்கள், ட்யூட்டோரியல்கள், உதவிக் குறிப்புகள் சிக்கின. ஆனால் அவை எல்லாம் மேலை நாட்டுத் தபால் பெட்டிகள். அதையெல்லாம் செய்து கொடுத்தால் இந்தியத் தபால்துறையினர் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இதனிடையே நவராத்திரி கொலு, சுண்டல் வேலைகளில் பிஸியாக இருந்த என் மனைவி அவ்வப்போது என்னைக் கிலிப்படுத்த ஆரம்பித்தார். ‘லீவ் முடியறதுக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்கு, தெரியும்ல? போஸ்ட் பாக்ஸ் வேலையை எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?’

‘இது என்ன அநியாயம்? ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?’

‘அவளுக்குதான்!’

‘அப்புறம் ஏன் என்னைப் போஸ்ட் பாக்ஸ் செய்யச் சொல்றே?’

‘செய்யவேணாம். போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னன்னு அவளுக்கு விளக்கிச் சொல்லிடு. அவளே செஞ்சுக்கட்டும்!’

அதையும் முயற்சி செய்து பார்த்தேன். புகை சிக்னல்கள், புறா விடு தூது-வில் ஆரம்பித்து ஈமெயில், ப்ளூடூத், வைஃபை நெட்வொர்க்வரை தகவல் தொடர்பு சாதனங்களின் சரித்திரத்தைக் கதையாக விளக்கிச் சொல்லியும் நங்கைக்குப் ’போஸ்ட் பாக்ஸ்’ புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நிஜ போஸ்ட் பாக்ஸைக் கண்ணெதிரே காண்பித்தும் பிரயோஜனமில்லை. ’கொழப்பாதேப்பா, கொஞ்சமாவது எனக்குப் புரியறமாதிரி சொல்லு’ என்றாள் திரும்பத் திரும்ப.

இந்த அவஸ்தைக்கு போஸ்ட் பாக்ஸே செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான பொருள்களைத் தேட ஆரம்பித்தேன்.

முதலில் சிலிண்டர் வடிவத்தில் ஏதாவது வேண்டும். சமையலறையில் கோதுமை மாவு கொட்டிவைக்கிற பிளாஸ்டிக் டப்பா இருக்கிறது. அதைச் சுட்டுவிடலாமா?

‘பக்கத்தில வந்தேன்னா பிச்சுப்புடுவேன்’ என்று பதில் வந்தது. ‘உங்க ப்ராஜெக்டுக்கு என்னோட டப்பாதான் கிடைச்சுதா?’

வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்.

டப்பா இல்லை. அடுத்து? வீட்டில் உருளை வடிவத்தில் வேறென்ன இருக்கிறது? (இங்கே ஓர் இடைச்செருகல், ‘உருளைக் கிழங்கு’ பர்ஃபெக்ட் சிலிண்டர் வடிவத்தில் இல்லையே, அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்கள்?)

நானும் நங்கையும் நெடுநேரம் தேடியபிறகு உருளை வடிவத்தில் ஒரே ஒரு பிஸ்கட் டின் கிடைத்தது. அதில் தபால் பெட்டியெல்லாம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் உண்டியல் பண்ணலாம். எப்படி ஐடியா?

‘ம்ஹூம், எனக்கு போஸ்ட் பாக்ஸ்தான் வேணும்.’

’ஓகே. வேற சிலிண்டர் தேடு!’

இன்னொரு அரை மணி நேரம் சென்றபிறகு எப்போதோ ஷூ வாங்கிய ஒரு டப்பா கிடைத்தது. ‘இதை சிலிண்டரா மாத்தமுடியாதாப்பா?’

அப்போதுதான் எனக்கு(ம்) ஒரு ஞானோதயம். தபால் பெட்டி உருளை வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று எவன் சொன்னான்? இப்போதெல்லாம் செவ்வகப் பெட்டி வடிவத்தில்கூடத் தபால் பெட்டிகளை அமைக்கிறார்களே!

சட்டென்று நங்கை கையிலிருந்த ஷூ டப்பாவைப் பிடுங்கிக்கொண்டேன். ஏதோ நிபுணனைப்போல நாலு பக்கமும் அளந்து பார்த்துவிட்டு ‘பர்ஃபெக்ட்’ என்றேன். ‘சரி வா, போஸ்ட் பாக்ஸ் பண்ணலாம்!’

நங்கைக்கு செம குஷி. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சிவப்புக் காகிதம், பசை, ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், செல்லோடேப், இன்னபிற சமாசாரங்களைத் தரையில் பரப்பிவிட்டுக் கை கட்டி உட்கார்ந்துகொண்டாள். ‘போஸ்ட் பாக்ஸ் பண்ணுப்பா’ என்றாள் அதிகாரமாக.

அதான் சொன்னேனே? உரிமைதுறப்பதில் பெண்கள் வல்லவர்கள். ஆறரை வயதானாலும் சரி.

நான் இதுவரை ஆயிரக்கணக்கான ’போஸ்ட் பாக்ஸ்’களைச் செய்து முடித்தவன்போன்ற பாவனையோடு வேலையில் இறங்கினேன். ஷூ பெட்டியின் மூடியை அதிலேயே நிரந்தரமாகப் பொருத்தி செல்லோடேப் போட்டு ஒட்டினேன். மேலே செக்கச் செவேல் காகிதத்தைச் சுற்றிப் பரிசுப் பார்சல்போல் மாற்றினேன்.

சும்மா சொல்லக்கூடாது. சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த ஷூ பெட்டி அச்சு அசல் ஒரு செங்கல்லைப்போலவே இருந்தது. நங்கைக்குதான் செங்கல்லும் தெரியாது, போஸ்ட் பாக்ஸும் தெரியாதே, அவள் அதை ஒரு தபால் பெட்டியாகவே கற்பனை செய்துகொண்டாள்.

ஒரே பிரச்னை. நங்கையின் அம்மாவுக்குத் தபால் பெட்டி தெரியும். இந்தச் செங்கல் அவருடைய பார்வைக்குச் செல்வதற்குமுன்னால் அதைக் கொஞ்சமாவது தட்டிக்கொட்டிச் சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஏழெட்டு வருடத்துக்கு மானம் போய்விடும்.

அவசரமாகக் கத்தியைத் தேடி எடுத்தேன். செங்கல்லின் ஒரு  முனையில் நாலு விரல் நுழையும் அளவுக்குச் செவ்வகம் வரைந்தேன். அதன் மூன்று பக்கங்களை வெட்டி நிமிர்த்தி Sun Shadeபோல 45 டிகிரி கோணத்தில் நிறுத்தினேன். அங்கே ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டிக் கொட்டை எழுத்துகளில் ‘POST’ என்று அறிவித்தாகிவிட்டது.

தபால் போடுவதற்குத் திறப்பு வைத்தாகிவிட்டது. அடுத்து? அந்தக் கடிதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு கதவு திறக்கவேண்டும். கத்தியை எடு, வெட்டு, நிமிர்த்து, வேலை முடிந்தது. அந்தக் கதவின் பின்பகுதியில் நங்கையை இஷ்டப்படி டிசைன் வரையச் சொன்னேன். இந்தப் ப்ராஜெக்டில் அவளும் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டதாக இருக்கட்டுமே!

கடைசியாக இன்னும் சில பல வெட்டல், ஒட்டல், ஜிகினா வேலைகளைச் செய்துமுடித்தபிறகு தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தோம். ’சூப்பரா இருக்குப்பா’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள் நங்கை.

அவ்வளவுதான். நான் போஸ்ட் பாக்ஸை மறந்து எழுதச் சென்றுவிட்டேன்.

இன்று காலை. நங்கைக்கு மீண்டும் பள்ளி திறக்கிறது. பாலித்தீன் பையில் போஸ்ட் பாக்ஸைப் பார்சல் செய்தவாறு கிளம்பியவள் புறப்படுமுன் ஒரு விஷயம் சொன்னாள். ‘அப்பா, இன்னிக்கு வர்ற ப்ராஜெக்ட்ஸ்லயே இதுதான் பெஸ்டா இருக்கும். எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும். தெரியுமா?’

ம்க்கும். முதலில், போஸ்ட் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதே  இவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் என்னென்ன ப்ராஜெக்ட் செய்திருக்கிறார்கள், அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய போஸ்ட் பாக்ஸுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாள். குழந்தைகளுக்குமட்டுமே சாத்தியமான அதீத தன்னம்பிக்கை இது!

அந்த போஸ்ட் பாக்ஸ்(?)ன் நிஜமான லட்சணம் தெரிந்த என்னால் அவளுக்குப் போலியாகக்கூட ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லமுடியவில்லை. மற்ற குழந்தைகளின் பெற்றோரெல்லாம் நிஜமான Crafts Materials வாங்கி ஒவ்வொரு ப்ராஜெக்டையும் என்னாமாக இழைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நான்மட்டும் கிடைத்ததை வைத்து ஒட்டுப்போட்டுக் குழந்தையை ஏமாற்றிவிட்டேனே என்கிற குற்றவுணர்ச்சி உறுத்தியது.

இரண்டு நிமிடத்தில் நங்கையின் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அதிலிருந்த உதவிப் பையனிடம் தன்னுடைய புத்தகப் பை, சாப்பாட்டுப் பையைக் கொடுத்தவள் போஸ்ட் பாக்ஸைமட்டும் தானே கவனமாகக் கையில் ஏந்தியபடி ஏறிக்கொண்டாள். டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

எங்களுடைய செங்கல் பெட்டிக்கு ஓர் ஆறுதல் பரிசாவது கிடைக்கவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்!

***

என். சொக்கன் …

18 10 2010

இன்று மாலை 5:30 மணி(இந்திய நேரம்)க்குக் ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் ‘பணம் வரும் நேரம்’ நிகழ்ச்சியில் என்னுடைய (தொலைபேசிப்) பேட்டி ஒன்று ஒளிபரப்பாகிறது.

Ambani & Sons

ஆனால், இந்தப் பேட்டி பணம் பற்றியதல்ல. ஹமீஷ் மெக்டொனால்ட் எழுதிச் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘Ambani & Sons’ புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் அல்லது விமர்சனம். வாய்ப்புள்ளவர்கள் பார்த்துகேட்டுவிட்டுச் சொல்லவும். எனக்கு வாய்ப்பில்லை 😦

***

என். சொக்கன் …

08 10 2010


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2010
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031