நகை வேண்டுமா?
Posted January 26, 2017
on:மகளை நடன வகுப்பிலிருந்து அழைத்துவரச் சென்றிருந்தேன்.
நான் சென்ற நேரம், வகுப்பு இன்னும் நிறைவடைந்திருக்கவில்லை. சிறிதுநேரம் வாசலில் காத்திருந்தேன். என்னைப்போல் இன்னும் சில பெற்றோரும் அங்கே இருந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து, ஒரு பெண் படியேறி வந்தார். அவரைப்பார்த்ததும் உள்ளேயிருந்து குடுகுடுவென்று ஒரு சிறுமி ஓடிவந்தாள், கையில் முழநீள நோட்டுப்புத்தகம், ‘ஆன்ட்டி, ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’ என்றாள்.
‘என்ன நகை?’ என்றார் அந்தப் பெண்.
‘ஜனவரி 31ம் தேதி நடன நிகழ்ச்சி இருக்கே, அதுக்கு அலங்காரம் செய்யறதுக்காக நகை, சவுரி முடி, செயற்கைப் பூக்கள், குஞ்சலம் எல்லாம் மேடம் மொத்தமா வாங்கறாங்க, அதான் கேட்கறேன், ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’
அந்தப் பெண் (அதாவது, ஷ்ரேயாவின் அம்மா) சிறிது யோசித்துவிட்டு, ‘ஏற்கெனவே இருக்கு, வேணாம்!’ என்றார்.
‘சவுரிமுடி, செயற்கைப் பூக்கள் வேணுமா?’
‘ம்ஹூம், அதுவும் இருக்கு.’
‘குஞ்சலம்?’
‘அது வேணும்.’
‘ஓகே ஆன்ட்டி’ என்று அந்த நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டாள் அச்சிறுமி, ‘இதுக்கு என்ன விலைன்னு அப்புறமா மேடம் உங்களுக்கு வாட்ஸாப் அனுப்புவாங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.
உள்ளே ஓர் இளம்பெண் இவள் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிச்சென்ற இவள், ‘சரியாப் பேசினேனாக்கா?’ என்றாள்.
‘வெரிகுட்’ என்று தட்டிக்கொடுத்தாள் அவள்.
மறுகணம், அச்சிறுமி முகத்தில் அப்படியொரு பிரகாசம், ‘தேங்க்யூக்கா’ என்றாள் மலர்ந்து.
இப்போது அந்த இளம்பெண், ‘சில பெற்றோருக்குச் சவுரிமுடி, குஞ்சலம்ன்னா என்னன்னு தெரியாது, அதையெல்லாம் நீதான் விளக்கிச்சொல்லணும், சரியா?’ என்றாள்.
‘ஓகேக்கா!’
அதற்குள், வாசலில் ஒரு புதிய தந்தை வந்திருந்தார், மீண்டும் குடுகுடுவென்று ஓடிவந்தாள் இவள், ‘அங்கிள், பூமிகாவுக்கு நகை வாங்கணுமா?’ என்று ஆரம்பித்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் இப்படி ஏழெட்டுப் பெற்றோரிடம் பேசிவிட்டாள் அச்சிறுமி, அனைவரிடமும் அதே Script, அதே கேள்விகள், பதில்களை அதே நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டு உள்ளே ஓடுதல், அதே இளம்பெண்ணிடம் அதே ‘வெரிகுட்’ வாங்குதல், அதே ‘தேங்க்யூக்கா’ சொல்லுதல்…
வகுப்பெடுத்துக்கொண்டிருந்த ஆசிரியை இவர்களை நிமிர்ந்துபார்க்கக்கூட இல்லை, அவர் தன்னுடைய வேலையை வெற்றிகரமாக Delegate செய்துவிட்டார், இதுபோன்ற சிறு பணிகளை ஆர்வத்துடனும் விசுவாசத்துடனும் செய்வதற்காகத் தனக்குக்கீழே ஒரு சிறு படையை உருவாக்கிவிட்டார்.
இன்றைக்கு ‘வெரிகுட்’ சொல்லிக்கொண்டிருக்கிற அந்த இளம்பெண், சில ஆண்டுகள்முன்னே இந்தச் சிறுமிபோல் நோட்டுப்புத்தகத்தோடு ஓடியாடி விவரம் சேகரித்திருக்கக்கூடும், இப்போது அவள் ஒரு கண்காணிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராகச் செயல்புரிகிறாள், நடனம் கற்பதுடன் கொஞ்சம் மேலாண்மை/நிர்வாகமும் கற்றுக்கொள்கிறாள்.
இந்த ஏணியின் அடிமட்டத்திலிருக்கும் அச்சிறுமி கிட்டத்தட்ட unpaid labourதான். மிஞ்சிப்போனால் அவளுக்கு ஓரிரு சாக்லெட்கள் கிடைக்கலாம், ஆனால், நடனம் கற்கவந்த இடத்தில் தகவல்தொடர்பைக் கற்றுக்கொள்ளவும், கொடுத்த விஷயத்தைப் பொறுப்போடு செய்து சமர்ப்பிக்கும் ஒழுங்கைக் கற்றுக்கொள்ளவும் இதுவொரு வாய்ப்பல்லவா? பல மாணவர்களுக்கு இது கிடைப்பதில்லையே!
அந்தச் சிறிய நடனவகுப்பில் தானே உருவாகியிருந்த சின்னஞ்சிறு ‘சமூக மாதிரி’ மிகவும் சுவையாக இருந்தது.
***
என். சொக்கன் …
26 01 2017
1 | nparamasivam1951
January 26, 2017 at 3:54 pm
Mini-IIM போல இது இல்லையா.