மனம் போன போக்கில்

Archive for June 2009

சில இடங்களுக்குச் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போகவேகூடாது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் மருத்துவமனை.

வாரம்முழுக்கக் குழந்தைகளுக்கு வருகிற சளி, இருமல், காய்ச்சல், இன்னபிற உபாதைகளெல்லாம், பெரும்பாலும் சனி, ஞாயிறு விடுமுறைவரையில் காத்திருக்கவேண்டியிருக்கிறது. பத்துக்கு எட்டு தாய்மார்களும் தந்தைமார்களும் அப்போதுதான் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கிறார்கள்.

சென்ற சனிக்கிழமை, நங்கையோடு நானும் அப்படி ஒரு பெரிய கூட்டத்தில் மாட்டிக்கொண்டேன். சினிமாத் தியேட்டர் முதல் நாள் க்யூபோல நெரிசல் என்றால் அப்பேர்ப்பட்ட நெரிசல். க்ளினிக் தாண்டி, அதன் வாசல் தாண்டித் தார்ச் சாலையிலும் பெற்றோர், குழந்தைகள் அசதியோடு நின்றிருந்தார்கள்.

நங்கையிடம் ஒரு கெட்ட பழக்கம், வரிசையில் நாங்கள் கடைசியாக நிற்கிறோம் என்றால் அவளால் அதை எப்போதும் ஏற்றுக்கொள்ளவேமுடியாது, ‘எல்லோரையும் தாண்டி முன்னாடி போயிடலாம் வா’ என்பாள் அடாவடியாக.

’இல்லைம்மா, இத்தனை பேர் நமக்கு முன்னாடி வந்திருக்காங்கல்ல? அவங்கல்லாம் போனப்புறம்தான் நாம, சரியா?’

‘நாம ஏன் முன்னாடி வரலை?’

நியாயமான கேள்விதான். ஆனால் என்ன பதில் சொல்வது? மேலே நிழல் பரப்புகிற மரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் அம்மாக்களுக்குப் பேசுவதற்கு ஏதாவது பொது விஷயம் கிடைத்துவிடுகிறது. குழந்தை ஆணா, பெண்ணா என்பதில் தொடங்குவார்கள், அப்புறம் நார்மல் டெலிவரியா, சிசேரியனா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டபிறகுதான் குழந்தையின் பெயரை விசாரிப்பார்கள், தொடர்ந்து என்ன சாப்பாடு, ஒரு வேளை சாப்பிட்டு முடிக்க எவ்வளவு நேரமாகிறது, முதல் பல் வந்துவிட்டதா, ஆம் எனில், மேல் பல்லா, கீழ்ப் பல்லா? முதல் தவணையில் எத்தனை பற்கள் வந்தன? கீழே படுக்கவிட்டால் குழந்தை தவழ்கிறதா, புரள்கிறதா, எழுந்து நடக்கிறதா, ஓடுகிறதா, ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்குகிறது, எவ்வளவு நேரம் தூங்குகிறது, பகல் நேரத்தில் அது விழித்து எழுந்தவுடன் செய்கிற அடாவடியில் மற்ற வீட்டு வேலைகளைப் பார்ப்பது எத்தனை சிரமமாக இருக்கிறது, ஸ்கூல் அட்மிஷன் வாங்கியாகிவிட்டதா, ஆம் எனில் எங்கே, எவ்வளவு செலவு ஆச்சு, இண்டர்வ்யூ உண்டா, அது கஷ்டமா எளிதா, அதில் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் … இப்படியெல்லாம் இவர்கள் தங்களுக்குள் மணிக்கணக்காகப் பேசுவதற்காகவே, க்யூ அதிகமுள்ள மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள் என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இப்படி அரட்டையடிப்பவர்களில் இரண்டு பேர் தமிழ் பேசுவார்கள், மூன்று பேர் கன்னடம், மீதமுள்ளவர்கள் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த மொழியில் கேள்வி கேட்க, அடுத்தவர்கள் அவர்களுடைய மொழியில் பதில் சொல்ல, ஆனால் விஷயம்மட்டும் எப்படியோ பரிமாறப்பட்டுவிடும்.

உள்ளே மருத்துவர் ஒரு குழந்தைக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்க, இங்கே காத்திருப்பு அறையில் இன்னொரு மினி மருத்துவமனையே நடந்துகொண்டிருக்கும் – ஒவ்வொரு பிரச்னைக்கும் தாய்மார்கள் தங்களுக்குத் தெரிந்த வீட்டு மருந்து, ஆயுர்வேதம், ஹோமியோபதிக் குறிப்புகளையெல்லாம் இஷ்டம்போல் அள்ளி வீசுவார்கள், ‘இது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை, தேங்காய் எண்ணெயை நல்லாக் காய்ச்சி அதில நாலு கத்தரிக்காய்க் காம்பை வாட்டி அரைச்சு எடுத்துப் பத்துப் போட்டா ரெண்டு நாள்ல சரியாப் போயிடும்’ என்று போகிறபோக்கில் சொல்வார்கள். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டால், ‘எங்க மாமியாரோட சித்தி சொன்னாங்க’ என்று அசட்டையாகப் பதில் வரும்.

நாட்டு மருத்துவம்மட்டுமில்லை, பெரும்பாலான தாய்மார்களுக்கு அலோபதியும் நன்றாகவே தெரிந்திருப்பதுதான் ஆச்சர்யம். ’போனவாட்டி டாக்டரைப் பார்த்தப்போ ABCD மருந்து கொடுத்தார், நல்லாக் கேட்டுச்சு, ஆனா இந்தவாட்டி அதைக் கொடுத்தும் ஜுரம் மட்டுப்படலை, சரி, இப்போ PQRS மருந்தைக் கொடுத்துப் பார்க்கலாமான்னு டாக்டரை விசாரிச்சுகிட்டுப் போக வந்தேன்’ என்பார்கள் சர்வ சாதாரணமாக.

இப்படி எல்லா வியாதிக்கும் தெளிவாக மருத்துவம் தெரிந்துவைத்திருக்கிற பெண்கள், ஏன் டாக்டர்களைப் பார்க்க வரவேண்டும்? எனக்கு இன்றுவரை புரியாத விஷயம் இது.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் க்யூவில் காத்திருந்தபிறகுதான் எங்களால் மருத்துவமனைக் கூரைக்குள்ளேயே நுழையமுடிந்தது. இன்னும் டாக்டர் அறையை நெருங்க ஏழெட்டு பேரைத் தாண்டவேண்டும்.

இதற்குள் நங்கை முற்றிலுமாகப் பொறுமையிழந்திருந்தாள், ‘நாம எப்பப்பா டாக்டரைப் பார்க்கறது’

’கொஞ்சம் பொறும்மா, இவங்கல்லாம் உள்ளே போய்ட்டு வந்துடட்டும், அப்புறம் நாமதான்’

’போப்பா, எப்பப் பார்த்தாலும் நமக்கு முன்னாடி யாராச்சும் இருக்காங்க, சுத்த போர்’ என்றாள் அவள், ‘எனக்கு உடனே டாக்டரைப் பார்க்கணும்’

’ஃபைவ் மினிட்ஸ் பொறுத்துக்கோம்மா, பார்த்துடலாம்’, அன்றைய தினத்தில் இருபதாவது தடவையாகச் சொன்னேன்.

அது ஒரு சின்னஞ்சிறிய அறை. சுவரில் சில குழந்தைப் படங்கள், டாக்டரின் மனைவியோ, மகளோ வரைந்த மயில் ஓவியம், இதே க்ளினிக்(Hospital = மருத்துவமனை, Clinic = ??)கிற்கு வேறு நேரங்களில் வருகை தரும் மற்ற டாக்டர்களைப்பற்றிய விவரங்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன. சின்ன பெஞ்ச் ஒன்று, நாற்காலிகள் மூன்று, மூலையில் ஒரு வாஷ் பேஸின், அதை ஒட்டினாற்போல் தண்ணீர் சுத்திகரிக்கும் உருளை.

தடுப்புக்குப் பின்னாலிருந்து டாக்டரின் குரல் கேட்டது. சரளமாக மலையாளம் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த டாக்டர் மலையாளி இல்லை, உள்ளூர்க் கன்னடக்காரர்தான். ஆனால் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு என எல்லாமே நன்றாகப் புரிந்துகொள்வார், தடங்கலில்லாமல் பேசுவார்,

மற்ற இடங்களில் எப்படியோ, மருத்துவமனையில், டாக்டரிடம் தங்களுடைய பிரச்னையைச் சொந்த மொழியில் சொல்லி, அதே மொழியில் சந்தேகங்களைக் கேட்டு ஆலோசனை பெறுவதுதான் பெரும்பாலானோருக்குப் பிடித்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ, பெரிய மருத்துவமனைகளில்கூட இல்லாத கூட்டம் இந்தச் சின்னஞ்சிறு Multi-Lingual க்ளினிக்கைத் தேடி வருகிறது.

நாங்கள் மருத்துவரின் அறையை நெருங்கியபோது, எங்களுக்குப் பின்னால் இன்னும் நீண்ட கூட்டம் நின்றுகொண்டிருந்தது. மணியைப் பார்த்தேன், 1:15.

மருத்துவமனை போர்டில் ‘பார்வை நேரம்: 9:30 முதல் 1 வரை’ என்று எழுதியிருந்தது. ஆனால் இங்கே இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால், இந்த டாக்டர் மூன்றரை, நான்கு மணிக்குக்கூட வீட்டுக்குப் போகமுடியாது என்று தோன்றியது.

இதற்குள், எங்களுக்கு முன்னால் இருந்த ஒரு தம்பதியர் இரட்டைக் குழந்தைகளோடு டாக்டர் அறைக்குள் சென்றார்கள். அடுத்து நாங்கள்தான்.

இப்போது க்யூவில் நாங்கள்தான் முதலாவதாக நிற்கிறோம் என்பதால், நங்கையின் முகத்தில் முதன்முறையாகச் சிரிப்பு வந்தது, அதை உறுதி செய்துகொள்வதற்காக, ‘இவங்க வெளியே வந்ததும் நாம டாக்டரைப் பார்க்கலாமாப்பா?’ என்றாள்.

‘ஆமாம்மா’

இந்த நேரத்தில், வரிசையை நெட்டித் தள்ளிக்கொண்டு இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள், ‘டாக்டரைப் பார்க்கணும்’

நான் அவர்களை விரோதமாகப் பார்த்தேன், ‘நாங்க எல்லோரும் அதுக்குதான் காத்திருக்கோம், பின்னாடி க்யூவிலே வாங்க’

முதல் ஆள் இரண்டாவது ஆளின் தோளைத் தொட்டுக் காண்பித்தார், ‘இவருக்கு ரொம்ப உடம்பு சரியில்லை, மயக்கம் போட்டு விழுந்திடுவார்போல, நாங்க உடனடியா டாக்டரைப் பார்த்தாகணும், ப்ளீஸ்’

எனக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது, ‘இவர் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட், தெரியாதா?’ என்றேன்.

‘அப்படீன்னா?’

‘குழந்தைங்களுக்குதான் வைத்தியம் பார்ப்பார்’

’பரவாயில்லை சார், இவருக்கு ரொம்ப முடியலை’ என்றார் அவர், ‘கொழந்தைங்க டாக்டரோ, பெரியவங்க டாக்டரோ, ஏதாச்சும் ஒரு மருந்து கொடுத்தாப் போதும்’

’சரி ஓகே’, நான் பின்னே நகர்ந்துகொண்டேன், அவர்கள் டாக்டர் அறைக் கதவுக்கு அருகே போய் நின்றார்கள்.

இப்போதுதான் என்னால் அவர்களைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. இருவரும் மிக அழுக்கான ஆடைகளை உடுத்தியிருந்தார்கள். நோயாளியின் பனியன், லுங்கி, துண்டு, அவரோடு வந்தவருடைய பேன்ட், சட்டை அனைத்திலும் திட்டுத் திட்டாகக் கறுப்பு அப்பியிருந்தது.

அதுகூடப் பரவாயில்லை, அவர்களிடமிருந்து வந்த நாற்றம், அதுதான் தாங்கமுடியாததாக இருந்தது. அது குளிக்காத நாற்றமா, அல்லது ஏதாவது ‘அருந்தி’விட்டு வந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

பொதுவாகக் குழந்தை மருத்துவமனைகளுக்கென்றே ஒரு விசேஷமான நறுமணம் உண்டு. அதை இந்த இருவரும் தலைகீழாக மாற்றிக்கொண்டிருந்தார்கள்.

இவர்கள் இருவரையும் வரிசையில் அனுமதித்த குற்றத்துக்காக, பின்னால் காத்திருந்த மற்ற பெற்றோர் என்னை முறைக்க ஆரம்பித்திருந்தார்கள். நான் வேண்டுமென்றே பார்வையை வேறு திசைக்குத் திருப்பவேண்டியிருந்தது.

அதுவரை, ஒற்றைக் காலில் மாறி மாறி நின்றபடி, ‘எப்போப்பா நாம டாக்டரைப் பார்க்கலாம்’ என்று கெஞ்சிக்கொண்டிருந்த நங்கை, இப்போது அந்த இருவரையும் ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்தாள். என் சட்டையைப் பிடித்து இழுத்து, ‘அந்த மாமாவுக்கு என்ன ஆச்சு?’ என்றாள்.

‘உடம்பு சரியில்லைம்மா, டாக்டரைப் பார்க்கப் போறாங்க’

’டாக்டர் அவங்களுக்கு ஊசி போடுவாரா?’

‘தெரியலையே’

அவள் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘அவங்க போனப்புறம்தான் நாம போகணுமா?’ என்றாள்.

நான் பதில் சொல்வதற்குள், டாக்டரின் அறைக் கதவு திறந்தது. அந்த இருவரும் அவசரமாக உள்ளே நுழைந்தார்கள்.

பத்து நிமிடம் கழித்து அவர்கள் வெளியேறும்வரை, நங்கை எதுவும் பேசவில்லை. அதன்பிறகும், அவர்களைதான் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

முழுசாக ஒன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப்பிறகு, நாங்கள் டாக்டரிடம் சரியாக இரண்டு நிமிடங்கள்மட்டும் பேசினோம். வழக்கமான மருந்துகளை எழுதி வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது, பின்னணியில் யாரோ ‘ஜரகண்டி ஜரகண்டி’ என்று ஆறு மொழிகளில் சொல்வதுபோலத் தோன்றியது.

எங்களை முந்திச் சென்ற அந்த இருவர், மருத்துவமனை வாசலில் தளர்ந்து உட்கார்ந்திருந்தார்கள். லுங்கி அணிந்திருந்தவர் சாக்கடையில் குனிந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு என்ன பிரச்னை? இந்தக் குழந்தை மருத்துவருடைய வைத்தியம் அவருக்குப் போதுமா? அல்லது, இன்னொரு பெரிய மருத்துவரைத் தேடிச் செல்லவேண்டியிருக்குமா? நானும் நங்கையும் செய்வதறியாது அவரைப் பார்த்துக்கொண்டு நின்றோம்.

சிறிது நேரத்துக்குப்பிறகு, மருந்து வாங்குவதற்காக நாங்கள் சாலையைக் கடந்தபோது, அவர்கள் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தார்கள். அப்போது இருவருடைய நடையிலும் கொஞ்சம் வேகம் கூடியிருந்ததாகத் தோன்றியது என்னுடைய கற்பனையாகக்கூட இருக்கலாம்.

நான்கைந்து ’டானிக்’ அல்லது ’சிரப்’களுக்குள் எல்லா வியாதிகளும் குணமாகிவிடுகிற, நம்முடைய மருந்துகளை அம்மா நினைவில் வைத்துக்கொள்கிற குழந்தைப் பருவம் கடந்துவிட்டால், வாழ்க்கைதான் எத்தனை சிக்கலாகிவிடுகிறது!

***

என். சொக்கன் …

29 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அலுவலகத்தில் என் மேனேஜரும், வீட்டில் என் மனைவியும் யோகாசனப் பிரியர்களாக மாறிச் சில மாதங்கள் ஆகின்றன.

’ஆஃபீஸ் பாஸ்’பற்றிப் பிரச்னையில்லை. எப்போதாவது, ‘You should try Yoga, Its amazing’ என்று புதுச் சினிமாவுக்கு சிபாரிசு செய்வதுபோல் ஒரு வரி சொல்வார். அதற்குமேல் வற்புறுத்தமாட்டார்.

ஆனால் என் மனைவிக்கு, யோகாசனம் என்பது ஒரு செல்ல நாய்க்குட்டியை வளர்ப்பதுமாதிரி. அவர்மட்டும் அதைக் கவனித்துப் போஷாக்கு பண்ணிக்கொண்டிருக்கையில், நான் சும்மா வெட்டியாக உட்கார்ந்திருப்பதை அவருக்குப் பார்க்கப் பொறுக்கவில்லை.

ஆகவே, ‘யோகாசனம் எப்பேர்ப்பட்ட விஷயம் தெரியுமா? அதைமட்டும் ஒழுங்காச் செஞ்சா உடம்பில ஒரு பிரச்னை வராது, ஆஸ்பத்திரிக்கே போகவேண்டியிருக்காது’ என்று தன்னுடைய பிரசாரங்களை ஆரம்பித்தார்.

அடுத்தபடியாக, அவருடைய யோகாசன மாஸ்டரைப்பற்றிய பிரம்மிப்புகள் தொடர்ந்தன, ‘அவரை நீ நேர்ல பார்த்தா, எண்பது வயசுன்னு நம்பக்கூட முடியாது, அவ்ளோ சுறுசுறுப்பு, கை காலெல்லாம் ரப்பர்மாதிரி வளையுது, கடந்த இருபது வருஷத்தில நான் எதுக்காகவும் மருந்து சாப்பிட்டது கிடையாது-ங்கறார், ஒவ்வொரு வருஷமும் யோகாசனத்தால அவருக்கு ரெண்டு வயசு குறையுதாம்’

எனக்கு இதையெல்லாம் நம்பமுடியவில்லை. யோகாசனம் ஒரு பெரிய விஷயம்தான். ஆனால் அதற்காக அதையே சர்வ ரோக நிவாரணியாகச் சொல்வது, எண்பது வயதுக்காரர் உடம்பில் ‘தேஜஸ்’ வருகிறது, எயிட்ஸ், கேன்சர் போன்ற வியாதிகளுக்கு மருந்து கிடைக்கிறது என்றெல்லாம் இஷ்டத்துக்கு அளந்துவிட்டால் அவநம்பிக்கைதானே மிஞ்சும்?

ஆகவே, என் மனைவியின் பிரசார வாசகங்கள் ஒவ்வொன்றையும் நான் விடாப்பிடியாகக் கிண்டலடிக்க ஆரம்பித்தேன், ‘உங்க யோகாசன மாஸ்டர் பெயர் என்ன பிரபு தேவா-வா? ஆஸ்பத்திரிக்குப் போறதில்லை, மருந்து சாப்பிடறதில்லைன்னா அவர் தனக்குன்னு சொந்தமா மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்காரா? இல்லையா? வருஷத்துக்கு ரெண்டு வயசு குறைஞ்சா இன்னும் பத்து வருஷத்தில அவர் வேலைக்குச் சேர்ந்து, அடுத்த இருபது வருஷத்தில காலேஜ் போவாரா?’

இத்தனை கிண்டலுக்கும் அடிப்படைக் காரணம் என்ன என்று யோசித்தால், என்னுடைய சோம்பேறித்தனம்தான். அதிகாலை ஐந்தே காலுக்கு எழுந்து குளித்துத் தயாராகி ஆறு மணி யோகாசன வகுப்புக்குச் செல்வது எனக்குச் சரிப்படாது.

இந்த விஷயம், என்னைவிட என் மனைவிக்குதான் நன்றாகத் தெரியும். ஆனாலும் என்னை எப்படியாவது யோகாசனப் பிரியனாக்கிவிடுவது என்று அவர் தலைகீழாக நிற்கிறார் (Literally).

’இப்ப உன் உடம்பு நல்லா தெம்பா இருக்கு, அதனால உனக்கு யோகாசனத்தோட மகிமை தெரியலை, நாற்பது தாண்டினப்புறம் பாடி பார்ட் எல்லாம் தேய்ஞ்சுபோய் வம்பு பண்ண ஆரம்பிக்கும், வாரம் ஒருவாட்டி ஆஸ்பத்திரிக்கு ஓடவேண்டியிருக்கும், அப்போ நீ யோகாசனத்தோட மகிமையைப் புரிஞ்சுப்பே’

‘சரி தாயி, அதுவரைக்கும் என்னைச் சும்மா வுடறியா?’

ம்ஹூம், விடுவாரா? வீட்டிலேயே எந்நேரமும் யோகாசன வீடியோக்களை ஒலிக்கவிட்டார், வழக்கமாக எந்தப் புத்தகத்திலும் மூன்றாவது பக்கத்தில் (நான் எழுதிய புத்தகம் என்றால் இரண்டாவது பக்கத்திலேயே) தூங்கிவிடுகிறவர் , விதவிதமான யோகாசனப் புத்தகங்களைப் புரட்டிப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். செக்கச்செவேலென்று தரையைக் கவ்விப்பிடிக்கும்படியான ஒரு பிளாஸ்டிக் விரிப்பு வாங்கி அதில் கன்னாபின்னாவென்று உடம்பை வளைத்து, ‘இது சிங்க யோகா, இது மயில் யோகா, இது முதலை யோகா’ என்று விதவிதமாக ஜூ காட்ட ஆரம்பித்தார்.

அவர் அப்படிக் காண்பித்த மிருகாசனங்களில் இரண்டுமட்டும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒன்று, நாய்போல நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, ‘ஹா ஹா ஹா ஹா’ என்று மூச்சு விடுவது. இன்னொன்று, சிங்கம்போல கண்களை இடுக்கிக்கொண்டு பெரிதாகக் கர்ஜிப்பது.

ஆனால், இதையெல்லாம் வீட்டில் ஒருவர்மட்டும் செய்தால் பரவாயில்லை. யோகாசன வகுப்பில் முப்பது, நாற்பது பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் கர்ஜித்தால் வெளியே தெருவில் நடந்துபோகிறவர்களெல்லாம் பயந்துவிடமாட்டார்களா?

என்னுடைய கிண்டல்கள் ஒவ்வொன்றும் என் மனைவியின் யோகாசனப் பிரியத்தை அதிகரிக்கவே செய்தன. எப்படியாவது என்னையும் இதில் வளைத்துப்போட்டுவிடவேண்டும் என்கிற அவருடைய விருப்பம்மட்டும் நிறைவேற மறுத்தது.

இந்த விஷயத்தில் அவருடைய பேச்சைக் கேட்கக்கூடாது என்கிற வீம்பெல்லாம் எனக்குக் கிடையாது. யோகாசனம் என்றில்லை, எந்த ஒரு விஷயத்தையும் logical-ஆக யோசித்து, ‘இது ரொம்ப உசத்தி, எனக்கு இது தேவை’ என்கிற தீர்மானத்துக்கு நானே வரவேண்டும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த உணர்ச்சிமயமான சிபாரிசுகளை நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை.

அதற்காக, யோகாசனம் புருடா என்று நான் சொல்லவரவில்லை. என் மனைவி அதை ஒரு ‘பகவான் யோகானந்தா’ ரேஞ்சுக்குக் கண்கள் பனிக்க, இதயம் இனிக்கப் பிரசாரம் செய்தாரேதவிர, அது ஏன் உசத்தி, எப்படி அது நிச்சயப் பலன் தருகிறது என்பதைல்லாம் தர்க்கரீதியில் விளக்கவில்லை, இன்றுவரை.

இன்னொரு விஷயம், என்னுடைய ’ராத்திரிப் பறவை’ லைஃப் ஸ்டைலுக்கு யோகாசனம் நிச்சயமாகப் பொருந்தாது. அதிகாலையில் எழுந்து யோகா செய்யவேண்டுமென்றால் அதற்காக நான் சீக்கிரம் தூங்கவேண்டும், அதனால் மற்ற எழுத்து, படிப்பு வேலைகள் எல்லாமே கெட்டுப்போகும்.

சரி, ஆஃபீஸ் போய் வந்தபிறகு சாயந்திர நேரத்தில் யோகாசனம் பழகலாமா என்று கேட்டால், எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள். அதைக் காலையில்மட்டும்தான் செய்யவேண்டுமாமே 😕

இப்படிப் பல காரணங்களை உத்தேசித்து, யோகாசனம் இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். எல்லாம் பிழைத்துக் கிடந்து ரிடையர் ஆனபிறகு நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம்.

இதற்கும் என் மனைவி ஒரு விமர்சனம் வைத்திருந்தார், ‘அப்போ யோகாசனம் கத்துக்க ஆரம்பிச்சா, உடம்பு வளையாது’

‘வளையறவரைக்கும் போதும்மா, விடேன்’

இப்படி எங்கள் வீட்டில் யோகாசனம் ஒரு சுவாரஸ்யமான விவாதப் பொருளாகவே தொடர்ந்துகொண்டிருந்த சூழ்நிலையில், நேற்று ஒரு விநோதமான அனுபவம்.

என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் தலைப்பு: Yogic Management.

அதாவது, யோகாசனத்தின் வழிமுறைகள், தத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய மேலாண்மை விஷயங்களைக் கற்றுத்தருகிறார்களாம். பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியப் பொறுப்புகளில் உள்ள மேலாளர்களெல்லாம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்களாம்.

நிகழ்ச்சியை நடத்துகிறவரும், ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் கால் நூற்றாண்டு காலத்துக்குமேல் பணிபுரிந்தவர்தான். பிறகு அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, யோகாசனம், ஆன்மிகம், Ancient Wisdom போன்ற வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டியது, இவர் நிச்சயமாக ‘யோகாசனம்தான் உசத்தி, எல்லோரும் தொட்டுக் கும்பிட்டுக் கன்னத்திலே போட்டுக்கோங்க’ என்று பிரசாரம் செய்யப்போவதில்லை, கொஞ்சமாவது Logical-லாகப் பேசுவார், ஆகவே, இவருடைய பேச்சைக் கேட்டு நான் யோகாசனத்தின் மேன்மைகளைப் புரிந்துகொண்டு அதன்பக்கம் திரும்புவேனோ, என்னவோ, யார் கண்டது?

ஒருவேளை, நான் நினைத்த அளவுக்கு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஏதோ சில மேனேஜ்மென்ட் சமாசாரங்களைக் கற்றுக்கொண்டோம் என்று திருப்தியாகத் திரும்பி வந்துவிடலாம்.

இப்படி யோசித்த நான், நண்பரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். மின்னஞ்சல் அழைப்பிதழை இரண்டு பிரதிகள் அச்செடுத்துக்கொண்டு மாலை ஆறரை மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தோம்.

நாங்கள் உள்ளே நுழைந்தபோது, அங்கே விழா ஏற்பாட்டாளர்களைத்தவிர வேறு யாரும் இல்லை. பெரிய நிறுவனத் தலைவர்கள், மேனேஜர்களெல்லாம் இனிமேல்தான் வருவார்கள்போல.

முக்கியப் பேச்சாளர், ஜம்மென்று சந்தனக் கலர் பைஜாமா போட்டுக்கொண்டு, நரைத்த தலையைப் பின்பக்கமாக இழுத்து வாரியிருந்தார். குடுமி இருக்கிறதா என்று பார்த்தேன், இல்லை.

அட்டகாசமான ஆங்கிலம், காலில் ரீபாக் ஷூ, கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலி, எனக்கு அவரை ஒரு யோகா குருநாதராகக் கற்பனை செய்ய மிகவும் சிரமமாக இருந்தது.

ஆறரை மணி தாண்டி இருபத்தைந்து நிமிடங்களாகியும், முதல் இரண்டு வரிசைகள்மட்டுமே ஓரளவு நிரம்பியிருந்தன. இதற்குமேல் யாரும் வரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதால், அரைமனதாகக் கூட்டம் தொடங்கியது.

பேச்சாளர் மிகவும் நிதானமாகப் பேசினார், எளிமையான ஆங்கிலம், பார்வையாளர்களைத் தன் வசம் இழுத்துக்கொள்கிற பார்வை, சிநேக முகபாவம், பேச்சோடு ஆங்காங்கே தூவிய நகைச்சுவை முந்திரிகள், குட்டிக் கதை உலர்திராட்சைகள், மைக் இல்லாமலேயே அவருடைய குரல் கடைசி வரிசைவரை தெளிவாக ஒலித்திருக்கும், கேட்பதற்கு அங்கே ஆள்கள்தான் இல்லை.

‘நாம் நம்முடைய உடம்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ள, தினமும் குளிக்கிறோம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகம் கழுவுகிறோம், வீட்டில் உள்ள பொருள்களைத் துடைத்து, தூசு தட்டி வைக்கிறோம், ஆனால் உள்ளத்தை எப்போதாவது சுத்தப்படுத்துகிறோமா? அதற்குதான் யோகாமாதிரியான விஷயங்கள் தேவைப்படுகின்றன’ என்று பொதுவாகத் தொடங்கியவர், வந்திருப்பவர்கள் எல்லோரும் தொழில்துறையினர் என்று உணர்ந்து, சட்டென்று வேறொரு கோணத்துக்குச் சென்றார்.

’உங்கள் மனம் அமைதியாக இல்லாதபோது, நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது, ஒரு தவறான முடிவு எடுத்துவிட்டுப் பின்னர் பல மணி நேரம், பல நாள், பல வருடங்கள், சில சமயங்களில் வாழ்நாள்முழுக்க வருந்திக்கொண்டிருப்பதைவிட, எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்குமுன்னால் ஐந்தே ஐந்து நிமிடங்கள் செலவழியுங்கள், அதற்கு ஒரு சின்ன ப்ரேக் விடுங்கள்’

’ப்ரேக் என்றால், விளம்பர ப்ரேக் இல்லை, உங்கள் மனத்தை அமைதிப்படுத்திக்கொள்ள, சுத்தமாக்கிக்கொள்ள சில சின்னப் பயிற்சிகள், நான் சிபாரிசு செய்வது, மூச்சுப் பயிற்சி, அல்லது பாட்டுப் பாடுவது’

இப்படிச் சொல்லிவிட்டுச் சட்டென்று பின்னோக்கி நகர்ந்தவர், ஒரு ஸ்ருதிப் பெட்டியை முடுக்கிவிட்டார். அது ‘கொய்ங்ங்ங்ங்ங்’கென்று ராகம் இழுக்க ஆரம்பித்தது, ‘இப்போது நாம் எல்லோரும் பாடப்போகிறோம்’ என்றார்.

எனக்குப் பகீரென்றது. மற்றவர்கள் சரி, நான் பாடினால் யார் கேட்பது? அப்படியே பின்னே நகர்ந்து ஓடிவிடலாமா என்று யோசித்தேன்.

என் குழப்பம் புரிந்ததுபோல் அவர் சிரித்தார், ‘கவலைப்படாதீங்க, எல்லோரும் சேர்ந்து பாடும்போது யார் குரலும் தனியாக் கேட்காது, அந்த Harmony இந்தச் சூழலையே மாத்திடும், உங்க மனசை அமைதியாக்கிடும்’

பரபரவென்று கை விரல்களில் சொடக்குப் போட்டபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தார் அவர், ‘நீங்க எல்லோரும் கைகளை அகல விரிச்சுத் தொடையில வெச்சுக்கோங்க, உள்ளங்கை மேல்நோக்கிப் பார்க்கணும்’

’அடுத்து, கால்களை முன்னாடி வெச்சு, நிமிர்ந்து நேரா உட்காருங்க, பாதம் நல்லாத் தரையில பதியணும்’ என்றவர் சட்டென்று தன்னுடைய ஷூவைக் கழற்றினார், ‘நீங்களும் கழற்றிடுங்க’

அதுவரை அவர் சொன்னதையெல்லாம் செய்த பார்வையாளர்கள் இப்போது ரொம்பத் தயங்கினார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தபடி நெளிந்தார்கள், ஒருவேளை, சாக்ஸ் நாற்றம் காரணமாக இருக்குமோ?

’இப்போ எல்லோரும் கண்ணை மூடிக்கோங்க, மூச்சை நல்லா இழுத்து, மெதுவா விடுங்க’

மற்றவர்கள் எப்படியோ, எனக்கு முழுசாகக் கண் மூடத் தயக்கமாக இருந்தது. காரணம், மடியில் பயம், ச்சே, மடியில் செல்ஃபோன்.

எல்லோரும் கண்களை மூடியிருக்கிற நேரத்தில் யாரோ ஒருவர் உள்ளே வந்து எங்களுடைய செல்ஃபோன்களையெல்லாம் மொத்தமாகத் தூக்கிப் போய்விட்டால்? எதற்கும் இருக்கட்டும் என்று அரைக் கண்ணைத் திறந்தே வைத்திருந்தேன்.

அதற்குள், பேச்சாளர் மெல்லப் பாட ஆரம்பித்திருந்தார், ‘ஓம்’ என்கிற பிரணவ மந்திரத்தில் தொடங்கி வரிசையாக நிறைய இரண்டு வரிப் பாடல்கள், அல்லது ஸ்லோகங்கள்: ’புத்தம் சரணம் கச்சாமி’, ‘ராம் ராம், ஜெய்ராம், சீதாராம்’, ‘அல்லேலூயா அல்லேலூயா’, ‘அல்லாஹூ அக்பர் அல்லாஹு அக்பர்’க்குப்பிறகு, மறுபடியும் ‘ஓம்’ என்று வந்து முடித்தார். மீண்டும் சிலமுறை மூச்சுப் பயிற்சிகள், ‘இப்போ மெதுவா உங்க கண்ணைத் திறங்க, பார்க்கலாம்’

அவருடைய பாடல் தேர்வைப் பார்க்கும்போது யோகாவையும் மதத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பது புரிந்தது. ஆனால் மற்றபடி, அந்த ஐந்து நிமிடம்கூட என்னால் அமைதியாகக் கண் மூடி இருக்கமுடியவில்லை, சொல்லப்போனால், எதைப்பற்றியும் யோசிக்காமல் மனத்தை வெறுமையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று வலிய நினைக்கிறபோதுதான், வேண்டுமென்றே பல பழைய நினைவுகள், வருங்காலக் கற்பனைகள், சந்தேகங்கள் எல்லாம் நவீன கொலாஜ்போல ஒன்றன்மீது மற்றொன்று பதிந்தவாக்கில் வந்து போயின.

பேச்சாளர் கேட்டார், ‘உங்கள்ல யாரெல்லாம் முன்பைவிட இப்போ அதிக ஃப்ரெஷ்ஷா, மேலும் அமைதியா உணர்றீங்க?’

எல்லோரும் கை தூக்கினார்கள், என்னைத்தவிர.

ஆக, தியானம், யோகாசனத்தால்கூட அமைதிப்படுத்தமுடியாத அளவுக்குக் கெட்டவனாகிப்போயிருக்கிறேன். இனிமேல் சிங்கம், புலி, யானை, ஏன், டைனோசர், டிராகன் யோகாசனங்கள் செய்தால்கூட நான் தெளிவாகமுடியாது என்று நினைக்கிறேன்!

***

என். சொக்கன் …

26 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

போன வாரம், ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

அவருக்கு ஒரே மகள், வயது ஐந்தரையோ, ஆறோ இருக்கலாம், ஒரு கால் பிறவியிலேயே கொஞ்சம் ஊனம், அதைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடாமல் தன்னம்பிக்கையோடு வளர்க்கிறார்கள்.

ஆனால், இந்தமுறை நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். என் நண்பரும் அவருடைய மனைவியும் அவளைத் தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தார்கள்.

நான் தர்ம சங்கடமாக விழிக்க, நண்பர் என்னையும் அந்தச் சண்டைக்குள் இழுத்துப்போட்டார், ‘நல்ல நேரத்தில வந்திருக்கே, நீயே இவளுக்கு ஒரு நல்ல புத்தி சொல்லுப்பா’

‘என்னாச்சு?’

சென்ற வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி, நண்பரும் அவருடைய மனைவியும் தங்கள் மகளுக்காக ஒரு நல்ல பள்ளியைத் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். பெங்களூரில் இருப்பதிலேயே ‘தி பெஸ்ட்’ பள்ளிகளைமட்டும் வடிகட்டி அப்ளிகேஷன் வாங்கியிருக்கிறார்கள்.

அப்புறமென்ன? வரிசையாக இண்டர்வ்யூக்கள், அலுவலகத்துக்குக்கூட டை கட்டாத நண்பர், கோட், சூட் சகிதம் கல்யாண மாப்பிள்ளைபோல் பள்ளிப் படிகளில் ஏறி இறங்கியிருக்கிறார்.

அவரை விடுங்கள், அந்தப் பெண்? ஐந்து வயதுக் குழந்தையை, இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று சரமாரியாகக் கேள்வி கேட்டு, அதையும் இதையும் எழுதச் சொல்லிப் பரீட்சை வைத்து பாடுபடுத்தியிருக்கிறார்கள். அதுவும் அப்பா, அம்மா திட்டுவார்களே என்று பயந்து ஒவ்வோர் இண்டர்வ்யூவாகப் போய்வந்திருக்கிறது.

கடைசியாக, ஒரு மிகப் பெரிய பள்ளியில் அவளுக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டது. நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பெருமை தாங்கவில்லை. தன் மகளைச் சான்றோள் எனக்கேட்ட சந்தோஷத்துடன், டொனேஷன், ஸ்கூல் ஃபீஸ், இன்னபிற செலவுகளுக்காக எங்கே பர்ஸனல் லோன் போடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போதுதான், அவர்களுடைய மகள் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறாள், ‘எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை, நான் இங்கே சேரமாட்டேன்’

இதைக் கேட்டதும், அவளுடைய அப்பா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. பொறுமையாக மகளுக்கு அறிவுரை சொல்வதில் ஆரம்பித்தார்கள், அந்தப் பள்ளியின் மேன்மை, அதில் படித்தவர்கள் எப்படியெல்லாம் பெரிய ஆள்களாக வளர்ந்திருக்கிறார்கள் என்கிற சரித்திரத்தை விளக்கிச் சொன்னார்கள், அங்கே சீட் கிடைக்காதா என்று எத்தனையோ பேர் ஏங்கிக் காத்திருப்பதைச் சொன்னார்கள், அவர்கள் தங்களுடைய தகுதிக்கு மீறி இந்தப் பள்ளிக்காகச் செலவு செய்யத் தயாராக இருப்பதையும், அங்கே படித்தால்தான் அவளுடைய எதிர்காலம் வளமாக இருக்கும் என்பதையும் படம் வரைந்து பாகம் குறித்தார்கள்.

ஆனால், இதெல்லாம் குழந்தைக்குப் புரியுமா? ‘நீங்க எவ்வளவுதான் கத்தினாலும் நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு டிவியில் பப்பாய் கார்ட்டூன் பார்க்கப் போய்விட்டது.

அப்புறம், கத்தல், மிரட்டல், அடிதடி, கெஞ்சல், கொஞ்சல் எல்லாமே வரிசைக்கிரமமாக அரங்கேறியது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, மாமி, பக்கத்துவீட்டு நாய்க்குட்டிவரை அவளுக்கு ’நல்ல புத்தி’ சொல்லியாகிவிட்டது.

அப்போதும், அவள் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை, ‘இந்த ஸ்கூலுக்குப் போகமுடியாது, அவ்ளோதான்’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

அதன்பிறகு, வேறு வழியில்லாமல் மகளை இன்னொரு ‘சாதாரண’(?)ப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் நண்பர். அவளும் கடந்த ஜூன் மூன்றாம் தேதியிலிருந்து உற்சாகமாகப் பள்ளிக்குப் போய் வருகிறாள்.

ஆனால், என் நண்பருக்குதான் இன்னும் மனசே ஆறவில்லை, ’பொண்ணை எங்கே சேர்த்திருக்கீங்க?’ என்று யாராவது கேட்டால், அவர் முகம் உடைந்து விழுந்துவிடுகிறது, அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கூச்சத்துடன் பேச்சை மாற்றுகிறார்.

இத்தனைக்கும், அவருடைய மகள் இப்போது படிக்கும் பள்ளியும், பிரபலமான தனியார் பள்ளிதான். மிக நல்ல ஆசிரியர்கள், வகுப்பறைகள், மற்ற வசதிகளைக் கொண்டதுதான்.

ஆனால், பெங்களூரின் மிகச் சிறந்த ‘நம்பர் 1’ பள்ளியில் படிக்க வாய்ப்புக் கிடைத்தும், அதைத் தன் மகள் முட்டாள்தனமாகத் தவறவிட்டுவிட்டாளே என்பதை நினைக்கும்போது அவர் கூனிக் குறுகிப்போகிறார். எந்நேரமும் கலகலப்பாகப் பேசுகிற அவருடைய ஆளுமையே இப்போது தலைகீழாக மாறிவிட்டது.

இதனால், தினந்தோறும் வீட்டில் அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட திட்டு, அடி, உதை. அம்மாவும் அப்பாவுமாகச் சேர்ந்து ‘அறிவில்லாத ஜென்மம், நீயே உன் தலையில மண்ணை வாரிப் போட்டுகிட்டே’ என்பதில் ஆரம்பித்து, ’நீ பன்னி மேய்க்கதான் லாயக்கு’வரை எல்லாவிதமான வசவுகளையும் அவள்மேல் திணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த விஷயத்தையெல்லாம், நண்பர் எனக்கு நேரடியாகச் சொல்லவில்லை. பின்னால் அவருடைய குழந்தையிடம் தனியாகப் பேசியதைவைத்து ஒருமாதிரியாக ஊகித்துக்கொண்டேன்.

அப்போதும், எனக்கு ஒரு சந்தேகம் தீரவில்லை, ‘உனக்கு ஏன்ம்மா அந்த ஸ்கூல் பிடிக்கலை?’

நான் இப்படிக் கேட்டதும், அவள் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை. உற்சாகமாக அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

’அந்த ஸ்கூல்ல என்னை இண்டர்வ்யூ செஞ்ச ஆன்ட்டி, என் கையைப் பிடிச்சு முறுக்கி இழுத்துட்டுப் போனாங்க, எனக்கு ரொம்ப வலிச்சது தெரியுமா?’

‘அப்புறம், அப்பா, அம்மாவை வெளியே இருக்கச் சொல்லிட்டு, என்னை இன்னொரு ரூம்ல உட்காரவெச்சுக் கதவைச் சாத்தினாங்க, அது எனக்குப் பிடிக்கலை’

’அவங்க என்னை உச்சா போகக்கூட அலவ் பண்ணலை, வரிசையா இங்க்லீஷ், மேத்ஸ், சைன்ஸ்ல கேள்வியாக் கேட்டாங்க, நிறைய எழுதச் சொன்னாங்க’

நான் குறுக்கிட்டுக் கேட்டேன், ’அந்த டெஸ்ட்ல்லாம் உனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்ததா?’

’ம்ஹூம், இல்லவே இல்லை, அவங்க கேட்டது எல்லாமே செம ஈஸி’ என்று சிரித்தாள் அவள், ’நான்தான் ஏற்கெனவே எல்கேஜி யுகேஜியில அதெல்லாம் படிச்சுட்டேனே’

’அந்த மிஸ் கேட்டதை எல்லாமே நான் கரெக்டா எழுதிட்டேன். ஆனா அவங்கதான் இன்னும் இன்னும் டெஸ்ட் கொடுத்துகிட்டே இருந்தாங்க, கை வலிக்குது மிஸ்-ன்னு சொன்னேன், கீப் ரைட்டிங்-ன்னு அதட்டினாங்க’

’அப்புறம் என்ன ஆச்சு?’

’இண்டர்வ்யூ முடிஞ்சதும் அவங்க எனக்கு ‘வெரி குட்’ சொன்னாங்க, அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு, ‘யு ஆர் வெரி ப்ரைட்’ன்னாங்க’

‘அப்புறம்?’

’ஆனா, எனக்குதான் அவங்களைப் பிடிக்கலையே, நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டேன்’

யாராவது அரைகுறையாகப் பேசினால், ‘குழந்தைத்தன’மான சிந்தனை என்று சொல்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில் நான் ’நல்ல புத்தி’ சொல்லவேண்டியது இந்தப் பெண்ணுக்கா, அல்லது அவளுடைய அப்பா, அம்மாவுக்கா என்று இன்னும் விளங்கவில்லை!

***

என். சொக்கன் …

23 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

காலை ஏழே கால் மணிக்கும், எட்டே கால் மணிக்கும் இடையே எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன?

’அறுபது’ என்கிறது கடிகாரம். ஆனால் நான் அதை நம்புவதற்கில்லை.

ஏனெனில், எங்கள் வீட்டில் தினந்தோறும் காலை நேரத்தில் நடக்கிற ஒரு மணி நேரக் கூத்து, அந்த அறுபது நிமிடங்களைக்கூட இருபதாகத் தோன்றச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அதைவிடக் குறைவாக, நேரம் நெகட்டிவ்வில் ஓடுகிறதோ என்றுகூட பயந்துபோகிறேன்!

இத்தனைக்கும் காரணம், ஏழே கால்: நங்கை துயிலெழும் நேரம், எட்டே கால்: அவளுடைய பள்ளி வாகனம் வந்து சேரும் நேரம். இந்த இரண்டுக்கும் நடுவே இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக்கொண்டு சமாளிக்கவேண்டிய பொறுப்பு எங்களுடையது.

உண்மையில், நங்கை ஏழே காலுக்குத் துல்லியமாக எழுந்துவிட்டால், பிரச்னையே இல்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காக முடித்துச் சரியாக எட்டே காலுக்கு அவளை வேன் ஏற்றி டாட்டா காண்பித்துவிடலாம்.

ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கிறது? நாங்கள் எழுப்பும்போதுதான், நங்கை ‘தூக்கக் கலக்கமா இருக்கும்மா(அல்லது ப்பா)’ என்று செல்லம் கொஞ்சுவாள்.

உடனடியாக, என் மனைவிக்கு முதல் டென்ஷன் தொடங்கும், ‘தூங்கினது போதும் எழுந்திருடி’ என்று அவளை உலுக்க ஆரம்பிப்பார்.

தூக்கக் கலக்கக் கொஞ்சல் சரிப்படவில்லை என்றதும், நங்கை ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தாள், ‘இரும்மா, காலையில எழுந்ததும் ஒரு ஸ்லோகம் சொல்லணும்ன்னு பாட்டி சொல்லிக்கொடுத்திருக்கா, நான் அதைச் சொல்லிட்டுதான் பல் தேய்க்க வருவேன்’

என் மனைவியின் பலவீனங்களில் ஒன்று, சாமி, பூஜை, ஸ்லோகம் என்றால் அப்படியே உருகிவிடுவார். குழந்தையின் பக்தியைத் தடை செய்யக்கூடாது என்று கிச்சனுக்குத் திரும்பிவிடுவார்.

ஆனால், அந்த நேரத்தில் நங்கை நிஜமாகவே ஸ்லோகம்தான் சொல்கிறாளா என்று எனக்கு இதுவரை சந்தேகமாக இருக்கிறது. சும்மா பேருக்குக் கைகளைக் கூப்பிக்கொண்டு உட்கார்ந்தவாக்கில் தூங்குகிறாள் என்றுதான் நினைக்கிறேன்.

ஐந்து நிமிடம் கழித்து, கிச்சனில் இருந்து குரல் வரும், ‘என்னடி? எழுந்துட்டியா?’

‘இரும்மா, ஸ்லோகம் இன்னும் நாலு லைன் பாக்கி இருக்கு’

நங்கையின் அந்த மாய எதார்த்த ஸ்லோகம் முடியவே முடியாது, எப்போதும் ’நாலு லைன் பாக்கி’ நிலையிலேயே அவள் தரதரவென்று பாத்ரூமுக்கு இழுத்துச் செல்லப்படுவதுதான் வழக்கம்.

சரியாக இதே நேரத்தில்தான் என் மனைவியின் பொறுமை குறைய ஆரம்பிக்கும். பல் தேய்த்தல், ஹார்லிக்ஸ் குடித்தல், தலை பின்னுதல், குளித்தல் என்று ஒவ்வொரு வேலைக்கும் அவள் தாமதப்படுத்த, கன்னத்தில் கிள்ளுவது, முகத்தில் இடிப்பது, முதுகில் அடிப்பது என்று வன்முறையை ஆரம்பித்துவிடுவார்.

எனக்குக் குழந்தைகளை யார் அடித்தாலும் பிடிக்காது. இதைச் சொன்னால், ‘நீ சும்மா இரு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று பதில் வரும், தேவையா?

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நங்கையை நான் குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய்வது இல்லை. அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண்ணி அடி வாங்கிக்கொள்கிறாள்.

இதே நங்கையும் அவளுடைய அம்மாவும் மாலை நேரங்களில் இழைந்துகொள்ளும்போது பார்க்கவேண்டும். ஊரில் இருக்கிற, இல்லாத எல்லாக் கொஞ்சல் வார்த்தைகளும், முத்த மழைகளும் கணக்கின்றி பொழியப்படும். அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே சண்டை மூட்டிவிட எந்தச் சக்தியாலும் முடியாது என்று தோன்றும்.

ஆனால், மறுநாள் காலை? ’குடிகாரன் பேச்சு’ கதைதான் – ஏழே கால் தொடங்கி எட்டே காலுக்குள் நங்கைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு அடிகளாவது விழுவது, பதிலுக்கு அவள் எட்டூருக்குக் கேட்பதுபோல் அழுவது இரண்டும் சர்வ நிச்சயம்.

இப்படி மாலையில் கொஞ்சுவது, காலையில் அடித்துக்கொள்வதற்குப் பதில், என்னைமாதிரி அதிகம் கொஞ்சாமல், அதிகம் அடிக்காமலும் இருந்துவிடலாமில்லையா? இதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடி ஒரு ‘உனக்கு ஒண்ணும் தெரியாது’ பட்டம் வாங்கவேண்டியிருக்கும். எதற்கு வம்பு?

இந்த நிலைமையில், ஏழெட்டு நாள் முன்னால், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு யோகா குருஜி தோன்றினார். குழந்தை மருத்துவர்களுக்குமட்டுமே உரிய நிதானமான குரலில் வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கினார்.

அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், ‘குழந்தைகளை அவசரப்பட்டு அடிக்காதீர்கள். பொறுமையாக அன்பால் திருத்துங்கள், அவர்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்வார்கள்’

இதையே நான் சொல்லியிருந்தால், ‘அடி உதவறமாதிரி அக்கா, தங்கை உதவமாட்டார்கள்’ என்பதுபோல் ஒரு பழமொழி வந்து விழுந்திருக்கும். சொன்னவர் தாடி வைக்காத சாமியார், அதுவும் தொலைக்காட்சியில் தோன்றுகிற அளவுக்குப் பிரபலமானவர் என்பதால், என் மனைவி அக்கறையுடன் கேட்டுக்கொண்டார்.

குருஜி தொடர்ந்து பேசினார், ‘குழந்தைகளை அடித்துப் பழகியவர்களுக்கு, சட்டென்று அதை நிறுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அதற்கும் ஒரு சுலபமான வழி இருக்கிறது’

என் மனைவி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். இதுபோன்ற பத்து நிமிடத் தொலைக்காட்சி அறிவுரைகளில் ஆர்வம் இல்லாத நான்கூட, அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

கடைசியில், அவர் சொன்ன விஷயம், உப்புச்சப்பில்லாத ஒரு வறட்டு யோசனை: ‘கோபம் வரும்போதெல்லாம் குழந்தையை அடிப்பதற்குப் பதில் கைகள் இரண்டையும் உயர்த்தி முருகா, முருகா என்று ஏழெட்டு முறை சத்தமாகச் சொல்லுங்கள், கோபம் போய்விடும்’

இதைக் கேட்டபிறகு எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால் என் மனைவிக்குமட்டும் இந்த உத்தி நிச்சயமாக வேலை செய்யும் என்று தோன்றிவிட்டது.

இந்த நேரத்தில், நானாவது சும்மா இருந்திருக்கலாம், ‘உன்னால நிச்சயமா கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாது, முருகா முருகான்னு சொல்லிகிட்டே குழந்தையை அடிச்சு விளாசப்போறே’ என்று கிண்டலடித்துவிட்டேன்.

போதாதா? என் மனைவிக்கு இது ரோஷப் பிரச்னையாகிவிட்டது, ‘இன்னும் 30 நாள் நங்கையை அடிக்காம இருந்து காட்டறேன்’ என்று சபதம் போட்டார்.

எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும், ‘பார்க்கலாம்’ என்று மையமாகச் சொல்லிவைத்தேன்.

மறுநாள் காலை ஏழே காலுக்கு, நிஜமான சவால் நேரம் தொடங்கியது. ‘முருகா முருகா’ விஷயம் தெரியாத நங்கை வழக்கம்போல் எல்லாவற்றுக்கும் முரண்டு பிடித்தாள். ஆனால் பதிலுக்கு அம்மா தன்னை அடிப்பதில்லையே, அது ஏன் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை.

அதுகூடப் பரவாயில்லை. பூஜை அறையில் சொல்லவேண்டிய ’முருகா முருகா’வை, இந்த அம்மா ஏன் நடு ஹாலில், பாத்ரூமிலெல்லாம் சொல்கிறார்? அப்படிச் சொல்லும்போது அம்மாவின் பற்கள் நறநறப்பது ஏன்? கைகளைப் பிசைந்துகொண்டு கண்ணில் தண்ணீர் வர அப்படி ஓர் ஆவேசத்துடன் முருகாவை அழைத்து என்ன ஆகப்போகிறது?

ஆரம்பத்தில், என்ன நடக்கிறது என்பதே நங்கைக்கு விளங்கவில்லை. ஆனால் மறுநாள், விஷயத்தை ஒருவழியாக ஊகித்துவிட்டாள்.

அம்மா தன்னை அடிக்கப்போவதில்லை என்று தெரிந்ததும், அவளுடைய முரண்டுகள், குறும்புகள் இருமடங்காகிவிட்டன. ஒவ்வொரு விஷயத்தையும் வழக்கத்தைவிட மெதுவாகச் செய்ய ஆரம்பித்தாள், ‘முருகா முருகா’க்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்துக்கொண்டிருந்தது.

அதன்பிறகு ஒவ்வொரு நாளும், தன்னுடைய ‘முப்பது நாள், முப்பது பொறுமை’ சவாலைக் காப்பாற்றுவதற்காக என் மனைவி படுகிற பாடு இருக்கிறதே, அதை வைத்து முழு நீள நகைச்சுவை நாவலே எழுதலாம்! (பயப்படாதீர்கள், சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் :))

குருஜியின் ‘முருகா’ அறிவுரையை என் மனைவி பின்பற்றத் தொடங்கி ஒரு வாரமாகிறது. ஆச்சர்யமான விஷயம், இதுவரை நங்கைக்கு அடி விழவில்லை. ஆனால், இந்த நிலைமை அடுத்த வாரமும் தொடருமா என்பது சந்தேகம்தான்.

ஏனெனில், இந்த ‘முருகா’வையே மையமாக வைத்துப் பல புதிய குறும்புகளை உருவாக்கிவிட்டாள் நங்கை. வேண்டுமென்றே ஏதாவது செய்துவிட்டு, அம்மா முறைக்கும்போது, ‘சீக்கிரம், முருகா, முருகா சொல்லும்மா’ என்று வெறுப்பேற்றுகிறாள்.

இப்போது, என் மனைவிக்கு Catch-22 சூழ்நிலை. நங்கையின் பேச்சைக் கேட்டு ’முருகா, முருகா’ சொன்னால், அவளுக்கு இன்னும் தைரியம் வந்துவிடும், வேண்டுமென்றே வம்பு செய்வாள், குறும்புகளின் வேகம், சேதம் மேலும் அதிகரிக்கும்.

அப்படிச் செய்யாமல் ‘என்னையா கிண்டலடிக்கிறே?’ என்று குழந்தையை அடித்து விளாசவும் அவரால் முடியாது. ‘முப்பது நாள்’ சபதம் அவருடைய கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக, நான் இந்த விஷயத்தைப்பற்றிப் பேசுவதையே தவிர்க்கிறேன், பூஜை அறையில்கூட ‘முருகா, முருகா’ சத்தம் கேட்டால் சட்டென்று வேறு பக்கமாக விலகி ஓடிவிடுகிறேன்.

பின்னே? கோபம் ரொம்ப அதிகமாகி, நங்கைக்குப் பதிலாக என்னை அடித்துச் சபதத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று என் மனைவி தீர்மானித்துவிட்டால், நான் ‘முருகா’வைக் கூப்பிடமுடியாது, ‘ஆதிமூலமே’ என்று அலறினால்தான் உண்டு!

***

என். சொக்கன் …

12 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நண்பர் திரு. ரவிபிரகாஷ் அவர்கள் கேட்டுக்கொண்டபடி, இந்தக் கேள்வி – பதில் வலைப்பதிவு ஆட்டத்தில் நானும் தொபுக்கடீர்ன்னு குதிக்கிறேனுங்கோவ் 🙂

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

அது ஒரு பெரிய கதை – முடிந்தவரை சுருக்கமாகச் சொல்லப்பார்க்கிறேன் 🙂

ஆரம்பத்தில் நான் எழுதிய கதைகளையெல்லாம், என்னுடைய சொந்தப் பெயரில்தான் பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அந்தப் பெயரில் நான் எழுதி அனுப்பியவற்றில் நூற்றுக்கு நூற்று ஐந்து கதைகள் உடனடியாக நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வந்துவிட்டன.

பொதுவாக, ஒரு பிரச்னை என்றால் உடனே பழியைத் தூக்கி வேறு ஒருவர் தலையில் போடுவதுதானே நம் பழக்கம்? என்னுடைய எழுத்தில் குறைபாடு இருப்பதாக ஏற்றுக்கொள்ள எனக்கு முதிர்ச்சி போதவில்லை. பெயரில்தான் ஏதோ இடிக்கிறது என்று நானே முடிவு கட்டிக்கொண்டுவிட்டேன்.

பின்னே? ‘நாக சுப்ரமணியன்’ என்று நீளமான பெயரில் கதை எழுதினால் யார் பிரசுரிப்பார்கள்? அதை ‘ஷார்ட் & ஸ்வீட்’டாகச் சுருக்கலாமே என்று யோசித்து, நண்பர்கள் உதவியுடன் ஐந்து பெயர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

அப்போதெல்லாம் நான் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு என்கிற கணக்கில் கதைகளைக் கிறுக்கித் தள்ளிக்கொண்டிருந்தேன். அடுத்த ஒரு மாதத்தில் நான் எழுதிய ஐந்து கதைகளை, இந்த ஐந்து பெயர்களில், ஐந்து வெவ்வேறு பத்திரிகைகளுக்குத் தனித்தனியே அனுப்பிவைத்தேன்.

ஆச்சர்யமான விஷயம், அதுவரை என் கதைகளை விடாப்பிடியாக நிராகரித்துக்கொண்டிருந்த பத்திரிகைகள், இந்த ஐந்தில் இரண்டைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்துவிட்டன – ஒரு கதை ‘எ நாவல் டைம்’ என்கிற மாத இதழில் வந்தது, அடுத்த வாரமே இன்னொரு கதை ஆனந்த விகடன் 1997 சுதந்தரப் பொன்விழா மலரில் (வேறொரு பெயரில்) வந்தது.

அதன்பிறகு, நான் என்னுடைய நிஜப் பெயரைப் பயன்படுத்தவே இல்லை. புனைபெயரில்தான் விளையாடிக்கொண்டிருந்தேன். அந்த அதிர்ஷ்டமோ என்னவோ, வரிசையாகப் பல கதைகள் பிரசுரம் கண்டன. ஒன்றிரண்டு சிறுகதைப் போட்டிகளில் பரிசுகூடக் கிடைத்தது.

பின்னர், இதற்கும் ஒரு பிரச்னை வந்தது. நான் பயன்படுத்திக்கொண்டிருந்த அதே புனைபெயரில் இன்னொருவரும் எழுதிவருவது தெரிந்தது. அவர் என்னைவிடப் பல வருடங்கள் சீனியர் என்பதால், அந்தப் பெயரையும் விட்டுக்கொடுத்துவிட்டேன்.

இதனால், தொடர்ந்து எழுதுவதற்கு வேறொரு புதிய புனைபெயரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம். விதவிதமாக யோசித்துக் குழம்பிக்கொண்டிருந்தபோது, நண்பர் பா. ராகவன் ஒரு நல்ல யோசனை சொன்னார்.

அப்போது எங்களுடைய நிறுவனத்தில் எல்லோருக்கும் மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தார்கள். அதில் எங்களுடைய பெயரின் முதல் எழுத்து + தந்தை பெயரில் வரும் முதல் 7 எழுத்துகள் இடம்பெற்றிருந்தன.

இதன்படி, ‘நாகசுப்ரமணியன் சொக்கநாதன்’ ஆகிய எனக்கு, ‘nchokkan@baan.com’ என்கிற மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தார்கள். ’இந்தப் பெயரே ரொம்ப நல்லா இருக்கு, இனிமே இதிலயே தொடர்ந்து எழுது’ என்று சொல்லிவிட்டார் பா. ரா.

ஆரம்பத்தில் நான் கொஞ்சம் தயங்கினேன், ‘சொக்கன்-னா ரொம்பப் பழைய பெயரா, சுத்தக் கர்நாடகமா இருக்கே சார்’ என்றேன்.

பாராவுக்குக் கோபம் வந்துவிட்டது, ‘தடியா, இந்தப் பேருக்கு என்ன குறைச்சல்? பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சுங்கற பேர்லயெல்லாம் எழுதினவங்க ஜெயிக்கலியா?’ என்று அதட்டினார், ‘இனிமே இதுதான் உன் பெயர், இதில எந்த மாற்றமும் இல்லை’

அரை மனதாகதான் அந்தப் பெயரை ஏற்றுக்கொண்டேன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிவிட்டது.

இன்றைக்கு, அலுவலகத்திலும் சரி, வெளியில் நண்பர்கள் வட்டாரத்திலும் சரி, என்னுடைய நிஜப்பெயரைவிட இந்தப் பெயர்தான் அதிகப் பேருக்குத் தெரிந்திருக்கிறது எனும்போது, பிடிக்காமல் போகுமா?

2) கடைசியா அழுதது எப்போது?

1998 ஆகஸ்ட் 25ம் தேதி, என்னையும் என் சகோதரனையும் வளர்த்த அத்தை திருமதி ராஜேஸ்வரி மரணமடைந்தபோது.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ம்ஹும், சான்ஸே இல்லை. என் கையெழுத்து கோழிக் கிறுக்கலைவிட மோசமா இருக்கும்!

4) பிடித்த மதிய உணவு?

பிடிச்சதுன்னு எதுவும் கிடையாது. பெரும்பாலான நாள்களில் மதியம் சாப்பிடுவது சப்பாத்தி, ப்ளஸ் பருப்பு.

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் வலியச் சென்று பேசுகிற, நட்பை வளர்த்துக்கொள்கிற நல்ல குணம் எனக்கு இல்லை. இந்தத் தயக்கம் காரணமாகவே பல நல்ல நட்புகளை, வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

நமக்கெல்லாம் பாத்ரூம் குளியல்தாங்க சுகம்

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

ம்ஹூம், எதையும் கவனிக்கமாட்டேன்

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: கன்னாபின்னான்னு கனவு காணறது (தூங்காமலே). வேலையிலயும் சரி, எழுத்திலயும் சரி, இந்த குணம்தான் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு

பிடிக்காதது: சோம்பேறித்தனம். ஒரு வேலையை முடிச்சதும் உடனடியா அடுத்ததைத் தொடங்காம ஓய்வு எடுத்துக்கதானே இந்த மனசு நினைக்குது?

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பிடித்தது: பொறுப்பு அதிகம், முன்பின் தெரியாத மனுஷங்களிடம்கூட ரொம்ப அக்கறையாப் பழகுவாங்க

பிடிக்காதது: ஒண்ணு இந்த முனை, இல்லாட்டி அந்த முனை, ரெண்டுக்கும் நடுவில ஒரு compromise இருக்கலாம்ங்கறதை அவங்க மனசு ஏத்துக்கவே ஏத்துக்காது 🙂

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

#2ல் சொன்ன அதே அத்தைதான்!

கண் தெரியாத அந்த அத்தைக்குப் பொன்னியின் செல்வன்’ வாசிச்சுக் காட்டினதுல தொடங்கினதுதான் என் வாசிப்புப் பழக்கம். இன்னிக்கு என் வீட்ல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கு, நானே சில புத்தகங்களும் எழுதியிருக்கேன், அதையெல்லாம் படிச்சுக் காட்ட அவங்கதான் இல்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

சட்டை சந்தனக் கலர்போலத் தெரியுது, அதில லேசா சாக்லெட் ஒட்டியிருக்கு.

பேன்ட், நீலக் கலரு ஜிங்குச்சா!

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

எழுதும்போது எதையும் கேட்கமாட்டேன். கவனம் சிதறும்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

நீலம்

14) பிடித்த மணம்?

அப்படிக் குறிப்பிட்டுச் சொல்றமாதிரி எதுவும் இல்லை.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

மூன்று பேரை அழைக்க விரும்புகிறேன்:

  • ச. ந. கண்ணன் (’கிழக்கு’ கேங்கில் எல்லோரும் என் நெருங்கிய நண்பர்கள்தான். யாரேனும் ஒருவரைமட்டும் இங்கே அழைக்கலாமே என்று Random-ஆக ச. ந. கண்ணனைத் தேர்ந்தெடுத்தேன்)
  • ’என்றும் அன்புடன்’ பாலா (GCTயில் என் சீனியர், ட்விட்டரில் அறிமுகமானார், தன்னுடைய இணைய எழுத்தை மிக சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடிய தீவிர வலைப்பதிவர்)
  • ஸ்ரீதர் நாராயண் (இவரும் ட்விட்டரில் அறிமுகமான நண்பர்தான். ஆர்வமாகப் பல விஷயங்களை முயன்று பார்க்கும் ஆல் ரவுண்டர், இவருக்கும் எனக்கும் எத்தனை விஷயங்களில் ஒத்துப்போகிறது என்று கணக்குப் போட்டால் இந்த வலைப்பதிவு போதாது)
  • இவர்கள் மூவரைத்தவிர, பா. ராகவனையும் அழைக்கவேண்டும் என்று விருப்பம்தான். ஆனால் அவர் ஏற்றுக்கொண்டு எழுதுவாரா, அல்லது ‘சுத்த சின்னப்பிள்ளைத்தனமா இருக்கே’ என்று திட்டுவாரா எனத் தெரியவில்லை, ஆகவே, இதனை ‘ஓப்பன் டிக்கெட்’டாகவே வைத்துக்கொள்கிறேன்

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ஏகப்பட்ட சஸ்பென்ஸ் வைத்து அவர் எழுதும் சமீபத்திய (சுயசரிதைப்) பதிவுகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. வலைப்பதிவுக்கு வெளியே அவர் எழுதியதில் எனக்கு ரொம்பப் பிடித்தது, ‘ஏடாகூடக் கதைகள்’ என்கிற தொகுப்பு – இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள எல்லாக் கதைகளுமே ஏதோ ஒருவிதத்தில் நம் புருவத்தை உயர்த்தக்கூடியவை, மிகப் புதுமையான முயற்சிகள்!

17) பிடித்த விளையாட்டு?

பார்க்கப் பிடித்தது, கிரிக்கெட். ஆடப் பிடித்தது, கம்ப்யூட்டரில் சாலிடெர்

18) கண்ணாடி அணிபவரா?

இல்லை

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை

20) கடைசியாகப் பார்த்த படம்?

அபியும் நானும்

21) பிடித்த பருவ காலம் எது?

வியர்வை பொங்கும் கொடுமையான கோடைக் காலம்தவிர பாக்கி எல்லாம் பிடிக்கும்

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

’சாவி’ எழுதிய ‘பழைய கணக்கு’, ஜெஃப்ரே ஆர்ச்சரின் ‘Not A Penny More, Not A Penny Less’ மற்றும் விகாஸ் ஸ்வரூப்பின் ‘Six Suspects’

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

மாற்றுவதில்லை

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அப்படி எதுவும் சொல்லத் தோன்றவில்லை

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

இந்தியாவுக்குள், டெல்லி. இந்தியாவுக்கு வெளியே, டோக்கியோ

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தெரியலியேப்பா … (’நாயகன்’ கமலஹாசன் குரலில் படிக்கவும்)

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம் சுயநலத்துக்காக விதிமுறைகளை மீறுவது

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம், பொறுமையின்மை

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

பாரிஸ் (காரணம் கேட்காதீங்க, தெரியாது!) 

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பா

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

டயட்டை ஏமாற்றி நொறுக்குத் தீனி மொசுக்குவது

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

24 * 7

***

என். சொக்கன் …

08 06 2009

ஒற்றை மீன்’ பதிவைப்பற்றி ஒரு நண்பரிடம் ஜிடாக்-கில் பேசிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய சிறுகதை ஒன்றை நினைவுபடுத்தினார்.

உண்மையில் அது சிறுகதை அல்ல, குட்டிக் கதை. தெருவில் எதேச்சையாகப் பார்த்து ஏமாந்த / அதிர்ந்த ஒரு விஷயத்தை டைரியில் கிறுக்கிவைத்தேன். பின்னர் ஆனந்த விகடனில் சின்னஞ்சிறு கதைகள் பிரசுரிக்கப்போகிறோம் என்று அறிவித்தபோது ஒரு கதைபோல மாற்றி எழுதி அனுப்பினேன். உடனடியாகப் பிரசுரமானது.

அதன்பிறகு, அந்தக் கதையை முழுவதுமாக மறந்துவிட்டேன். இந்த நண்பர் அதைக் குறிப்பிட்டபின்னர்தான் ஞாபகப்படுத்திக்கொண்டு திரும்ப எடுத்துப் படித்துப் பார்த்தேன். அந்த எதிர்பாராத வலியை எப்படி மறக்கமுடிந்தது என்று இன்னும் விளங்கவில்லை.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னால் (07 07 2004) எழுதிய அந்தக் கதையை லேசாக இலக்கணப் பிழைகளைமட்டும் திருத்தி இங்கே பதிவு செய்து வைக்கிறேன்:

*****

விஜயராகவனின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பதினைந்து நிமிட நடை தூரம்தான். ஆனால் தினந்தோறும் ஒரே பாதையில் பயணம் செய்யவேண்டியிருப்பது கிட்டத்தட்ட நரகத்துக்குச் சமமான சிரமம் என்று அவனுக்குத் தோன்றியது.

இந்த ‘தினந்தோறும்’ என்கிற வார்த்தைதான் இங்கே முக்கியம் – எத்தனை வளமான சூழலையும் வறட்சியானதாகத் தெரியச் செய்துவிடுகிற சூட்சுமம் அதற்கு உண்டு. பார்த்த காட்சிகளையே திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருப்பதால் மனம் அலுத்துச் சலித்துப்போகிறது, ஏதேனும் ஒரு மாற்றம் தட்டுப்படாதா என்று ஏங்கச்செய்துவிடுகிறது.

அப்படி அவன் ஏங்கிக்கொண்டிருந்தபோதுதான், அவனுடைய பயணப் பாதையில் ஒரு சின்ன மாறுதல், வழியிலிருந்த ஒரு சிறிய கல்யாண மண்டபத்தின் அருகே திடுதிப்பென்று தோன்றிய புதிய கடை. அதன் வாசலில் ஏகப்பட்ட மீன் தொட்டிகளை நிறுத்திவைத்து வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள்.

அந்தப் பிரம்மாண்டமான தொட்டிகளுக்குள் நீந்தி விளையாடும் பல வண்ண மீன்கள் விஜயராகவனின் புதிய பொழுதுபோக்காயின. காலை வெளிச்சத்தில் அவற்றைப் பார்ப்பதற்கும், இரவின் செயற்கை வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிடும் அளவுக்கு விற்பன்னனாகிவிட்டான் அவன்! சோர்ந்திருந்த அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மலர்ச்சியாக இந்த மீன்கள்.

சீக்கிரத்திலேயே விஜயராகவனின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது – மீன்களை அதிக நேரம் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காக, வழக்கமான நேரத்துக்குமுன்பாகவே கிளம்பத்துவங்கினான் அவன். செயற்கை ஆக்ஸிஜனின் தொடர்ந்த முட்டைகளிடையே சுழன்று சுழன்று திரும்பும் அந்த மீன்களுக்கு, செல்லப் பெயர்கள்கூட வைத்துவிட்டான் – அவற்றைப் பார்க்கப்பார்க்க, தன்னை ஒரு சின்னக் குழந்தையாக உணர்ந்தான் விஜயராகவன்.

ஒன்றிரண்டு வாரங்களுக்கு இந்தப் பொழுதுபோக்கு தொடர, திடீரென்று அவனுக்கு ஓர் ஆசை தோன்றியது – யாரோ வளர்க்கும் மீனைப் பார்ப்பதிலேயே இத்தனை சந்தோஷம் என்றால், நாமே ஒரு சில மீன்களை வாங்கி வளர்த்தால் என்ன? வீட்டில் தொட்டி வைத்து மீன் வளர்த்தால் இதய நோய் வருகிற வாய்ப்புகள் குறையும் என்று எங்கோ படித்ததை நினைத்துக்கொண்டான் அவன்.

ஆனால், மீனை எங்கே வாங்குவது? எப்படி வளர்ப்பது? அவனுக்குத் தெரியவில்லை.

‘அதனால் என்ன? வாசல்முழுக்க மீன்களை நிரப்பிவைத்திருக்கிற அந்தக் கடையிலேயே கேட்டால் ஆச்சு!’, என்று சொல்லிக்கொண்டான் அவன்.

அன்று மாலையே, தனது செல்ல மீன்களை ஆசையாகப் பார்வையிட்டபடி அந்தக் கடையினுள் நுழைந்தான் விஜயராகவன்.

உள்ளே புகுந்ததும், குப்பென்று தீர்க்கமான ஒரு வாசனை அவனைத் தாக்கியது. லேசாக மூக்கைத் தடவிக்கொண்டபடி உள்ளே நடந்தான்.

அறையின் மூலையிலிருந்த பெரிய மேஜைக்குப் பின்னால் ஒரு மீசைக்காரன் அமர்ந்திருந்தான். புதியவர்களிடம் சகஜமாகப் பேசும் பழக்கமில்லாத விஜயராகவன் அவனை நெருங்கி, ‘மீன் வேணும்’, என்றான் திணறலாக.

‘எந்த மீன் வேணும் சார்? எவ்ளோ கிலோ?’, என்றபடி கீழ் ட்ரேயிலிருந்து ஒரு மீனை எடுத்து, நடு உடம்பில் வெட்டினான் அவன்.

***

என். சொக்கன் …

05 06 2009

போன வாரத்தில் ஒருநாள், ராத்திரி ஒன்பதரை மணி. வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். எங்களுடைய பேச்சுச் சத்தத்தைக் கண்டிப்பதுபோல் வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

என் மனைவி உட்கார்ந்தவாக்கில் நிமிர்ந்து பார்த்தார், அழைப்பு மணியோடு இணைந்த கறுப்பு வெள்ளைக் குட்டித் திரையில் மசங்கலாக ஏதோ ஓர் உருவம் தெரிந்தது.

அரை விநாடியில், வந்திருப்பது யார் என்று அவருக்குப் புரிந்துவிட்டது, ‘ஹையா, மீன் வருது’ என்றபடி துள்ளி எழுந்தார்.

எனக்கு ஆச்சர்யம். மீன் தண்ணீரில் வாழும் பிராணியாச்சே, அது எப்படி எங்கள் வீட்டு வாசலில் நிற்கமுடியும்? அப்படியே வந்து நின்றாலும், அழைப்பு மணியை அழுத்துவதற்கு மீனுக்குக் கை உண்டா? விரல் உண்டா?

என்னுடைய கிறுக்குத்தனமான கற்பனைகள் தறிகெட்டு ஓடுவதற்குள் என் மனைவி கதவைத் திறந்துவிட்டார். உள்ளே நுழைந்தது மீன் அல்ல, மேல் மாடியில் குடியிருக்கிற மிஸ். மனோகரி.

மன்னிக்கவும், அவர் ‘மிஸ்’ அல்ல, ஒரு மாதம் முன்புதான் அவருக்குத் திருமணமாகிவிட்டது, ‘மிஸஸ். மனோகரி’ என்று திருத்தி வாசிக்கவும்.

மிஸஸ் மனோகரி கையில் ஒரு கண்ணாடிப் பாத்திரம். அதற்குள் ஒரு குட்டித் தங்க மீன் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தது.

’வாங்க, வாங்க’ என்று மனோகரியை வரவேற்றபடி அவர் கையிலிருந்த தொட்டிக்குள் எட்டிப் பார்த்தார் என் மனைவி, ’ஒரு மீன்தானா?’

’ஆமா, இன்னொண்ணு இன்னிக்குதான் செத்துப்போச்சு’ என்றவர் முகத்தில் துளியும் வருத்தம் இல்லை, ‘இதை நான் எங்கே வைக்கட்டும்?’

தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே இருந்த வெற்றிடத்தைக் காண்பித்தார் என் மனைவி, ‘இங்கே வெச்சுடுங்க, நாங்க பார்த்துக்கறோம்’

எனக்கு இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எதற்காக மனோகரியின் மீன் எங்கள் வீட்டுக்கு இடம்பெயர்கிறது?

நல்லவேளையாக, மனோகரியே என்னுடைய குழப்பத்தைத் தெளிவித்துவிட்டார், ‘நாங்க ஒரு வாரம் ஊருக்குப் போறோம், அதுவரைக்கும் எங்க மீனைக் கொஞ்சம் பார்த்துக்கமுடியுமா?’

மீனைத் தொட்டியோடு கொண்டுவந்து நடு ஹாலில் வைத்துவிட்டு இப்படி அனுமதி கேட்டால் என்ன பதில் சொல்வது? எச்சில் கையோடு ராஜேந்திரகுமார் பாணியில் ‘ஙே’ என்று விழித்தேன்.

’ஏற்கெனவே உங்க வொய்ஃப்கிட்டே பேசிட்டேன், அவங்க ஓகேன்னு சொல்லிட்டாங்க, இருந்தாலும் உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாமேன்னுதான் …’ என்று இழுத்தார் அவர்.

அப்புறமென்ன அம்மணி? மேலிடத்திடம் அனுமதி வாங்கியாகிவிட்டது, இப்போது நான் தலையசைப்பதா முக்கியம்? தவிர, ஒற்றை மீன் பிரச்னைக்காக ஒரு ஜோடியின் ஹனி மூனைக் கெடுத்தவன் என்கிற பாவம் எனக்கு வேண்டாம். நீங்கள் சந்தோஷமாகப் போய்வாருங்கள்.

அன்று இரவே, மனோகரி தம்பதியர் புறப்பட்டுச் சென்றார்கள். அடுத்த ஒரு வாரம், அந்த மீன் எங்களுடைய பொறுப்பாகிவிட்டது.

இதுவரை, நாங்கள் வீட்டில் நாய், பூனை, கோழி, ஆடு, மாடு, மீன் எதுவும் வளர்த்தது கிடையாது. ஆகவே, திடுதிப்பென்று எங்கள் வீட்டுக்கு நடுவே ஒரு மீன் சுற்றிவருவது கொஞ்சம் விநோதமாக இருந்தது.

முதலாவதாக, அந்த மீனை எங்கள் இளைய மகள் பிடியிலிருந்து காப்பாற்றவேண்டும். அவள்மட்டும் அந்தத் தொட்டியை எட்டிப் பிடித்துவிட்டாள் என்றால், அவ்வளவுதான். கொஞ்சமும் தயங்காமல் உள்ளே கை விட்டு மீனைக் கையில் எடுத்துப் பிதுக்கிவிடுவாள், பாவம்!

நல்லவேளையாக, எங்களுடைய தொலைக்காட்சி மேஜை கொஞ்சம் பெரியது. அதன் இன்னொரு முனையில் சுவர் ஓரமாக மீனை நகர்த்தி வைத்துவிட்டால் போதும், எல்லோரும் மீனைப் பார்க்கலாம், அத்தனை சுலபத்தில் தொட்டுவிடமுடியாது, ஓரளவு பத்திரம்.

அடுத்தபடியாக, மீனுக்குச் சாப்பாடு போடும் பொறுப்பு.

மீன் என்ன தலை வாழை விரித்து விருந்துச் சாப்பாடா கேட்கப்போகிறது? கலர் கலராகக் கொஞ்சம் பெரிய சைஸ் கடுகு, அல்லது சின்ன சைஸ் மிளகுபோல் சில உருண்டைகள், அதில் தினத்துக்கு ஒன்றாகத் தண்ணீரில் போட்டால் மீனே தேடி வந்து சாப்பிட்டு ஏப்பம் விடுமாம்.

மனிதர்களுக்கும் இப்படி ஒரு மாத்திரை இருந்தால் நன்றாக இருக்கும் என்று என் மனைவி கருத்துத் தெரிவித்தார். தினமும் சமைக்கிற, பாத்திரம் கழுவுகிற தொல்லையே இருக்காதாம்.

நியாயம்தான். ஆனால், என்னதான் ஒற்றை மாத்திரையில் வயிறு நிரம்பினாலும், மனித நாக்குக்கு அது திருப்தியாக இருக்குமா? எனக்கென்னவோ சந்தேகமாகவே இருக்கிறது.

நல்லவேளை, மீனுக்கு அறுசுவை உணவெல்லாம் பழக்கமில்லைபோல, அந்தக் கடுகு சைஸ் உருண்டையைச் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாகச் சுற்றிவந்துகொண்டிருந்தது.

வழக்கமாக எங்கள் வீட்டுக்கு வரும் குட்டிக் குட்டி பொம்மைகளுக்குக்கூடப் பெயர் சூட்டிவிடுகிற நங்கை, இந்த மீனைமட்டும் ஏனோ பெயரிடாமலே கொஞ்சத் தொடங்கிவிட்டாள். காலை எழுந்தவுடன் மீனுக்குச் சாப்பாடு போடும் வேலையை அவளே ஏற்றுக்கொண்டுவிட்டதால் எங்களுக்கு ஒரு தலைவலி தீர்ந்தது.

சாப்பாடு போடும்போதுமட்டுமில்லை, கால் மணி நேரத்துக்கு ஒருமுறை மீன் குடுவை அருகே ஓடி வந்து அது என்ன செய்கிறது என்பதை வேடிக்கை பார்ப்பது அவளுடைய பிரியமான பொழுதுபோக்காக மாறிவிட்டது, ‘இத்தனை பெரிய மீனுக்கு இந்தக் கொஞ்சூண்டு சாப்பாடு போதுமா?’, ‘மீன் ஏன் அடிக்கடி வாயைத் திறந்து மூடுது?’, ‘ஏன் நேரா நீந்தாம சுத்திச் சுத்தி வருது?’, ‘இந்த மீன் ஏன் தங்கக் கலர்ல இருக்கு? யார் அதுக்குப் பெயின்ட் அடிச்சாங்க?’ என்றெல்லாம் மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள்.

எங்களுக்கும் அந்த மீன் ஒரு விநோதமான, உயிருள்ள விளையாட்டு பொம்மையாகத் தோன்றியது. முக்கியமாக, வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறபோது அந்த மீன் பெரியதாகவும் சின்னதாகவும் மாறி மாறித் தெரிவதை ஆச்சர்யத்துடன் ரசித்தேன்.

முதல் இரண்டு நாள் எந்தப் பிரச்னையும் இல்லை, மூன்றாவது நாள், மீனின் வேகம் லேசாகக் குறைவதுபோல் தோன்றியது. சும்மா மனப் பிரம்மை என்று நினைத்துச் சமாதானப்படுத்திக்கொண்டேன்.

நான்காவது நாள், கண்ணாடிக் குடுவையில் இருக்கும் நீர் ரொம்பக் கலங்கலாக மாறியிருந்தது. தண்ணீரை மாற்றவேண்டும்.

அதற்காகவே, ஒரு குட்டி வலை கொடுத்திருந்தார்கள். ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி, மீனை வலையில் பிடித்து அதற்குள் போட்டோம். பிறகு கண்ணாடிப் பாத்திரத்தைக் கழுவிச் சுத்தமான தண்ணீர் நிரப்பினோம்.

நாங்கள் இந்த வேலையில் ‘பிஸி’யாக இருந்தபோது, எங்களுடைய இளைய மகள் அந்த பக்கெட்டைக் கவனித்துவிட்டாள், நேராக ஓடி வந்து தண்ணீருக்குள் கை விட்டு மீனைப் பிடிக்க முயன்றாள்.

நல்ல வேளை, கடைசி நிமிடத்தில் நான் சுதாரித்துக்கொண்டு அவளைத் தூக்கிவிட்டேன். இல்லாவிட்டால் அந்தத் தங்க மீனின் கதி அவ்வளவுதான்.

ஒருவழியாக, பாத்திரம், தண்ணீர் சுத்தமாகிவிட்டது, மீன் மீண்டும் பழைய குடுவைக்குள் சென்று சுற்றிவர ஆரம்பித்தது.

திடீரென்று என் மனைவிக்கு ஒரு சந்தேகம், ‘இந்தத் தண்ணியில உப்புப் போடணுமா?’

‘உப்பா? அது எதுக்கு?’

‘கடல்ல மீனெல்லாம் உப்புத் தண்ணியிலதானே உயிர் வாழும்?’

’யம்மாடி, இதெல்லாம் வீட்ல வளர்க்கறதுக்காகவே உருவாக்கப்பட்ட Factory மீன், இதெல்லாம் எப்பவும் கடலைப் பார்த்திருக்காது, இதுக்கு உப்புத் தண்ணியெல்லாம் தேவையில்லை’

இப்படிப் பெரிய மேதைமாதிரி பதில் சொல்லிவிட்டேனேதவிர, எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. அப்புறமாக இணையத்தில் தேடிப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

பளபளா பாத்திரத்தில் மீன் உற்சாகமாகச் சுற்றிவந்தது. டிவியில் ஏதாவது குத்துப் பாட்டு போட்டால் ஸ்பீக்கர் அதிர்வை உணர்ந்து முன்பைவிட அதிவேகமாகச் சுற்றியது, நங்கை பழையபடி நாள்முழுக்க அதையே வேடிக்கை பார்த்துக்கொண்டும் செல்லம் கொஞ்சிக்கொண்டும் நேரத்தைச் செலவிட்டாள்.

ஆனால், தண்ணீர் மாற்றியபிறகு, மீனின் நீச்சல் வேகம் இன்னும் குறைந்துவிட்டதுபோல் தோன்றியது. பல சந்தர்ப்பங்களில் நீந்தாமல் சும்மா அப்படியே still ஆக நின்றுகொண்டு பயமுறுத்தியது.

அப்போதெல்லாம், மீன் உண்மையாகவே உயிரோடு இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக பாத்திரத்தின் ஓரத்தில் தட்ட ஆரம்பித்தோம். எங்கள் சத்தம் கேட்டதும் அது விழித்துக்கொண்டு லேசாக துடுப்பை அசைக்கும், எங்களுக்கு நிம்மதி.

‘ஏன் இப்படி சோர்ந்துபோய்க் கிடக்கு?’

‘தெரியலையே, நம்ம வீட்டுக்கு வந்த நேரம், நம்மோட சோம்பேறிக்குணம் அதுக்கும் தொத்திகிச்சோ?’

வெளியே கிண்டலடித்தாலும், உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகதான் இருந்தது. அவர்கள் நம்பிக் கொடுத்த மீனை நாம் சரியாகப் பராமரிக்கவில்லையோ என்கிற பதற்றம்.

ஆனால், நாங்கள் என்ன செய்திருக்கமுடியும்? தினமும் ஓர் உருண்டை சாப்பாடு போடச் சொன்னார்கள், போட்டோம். தண்ணீர் கலங்கினால் மாற்றச் சொன்னார்கள், மாற்றினோம், அதற்குமேல் அதற்கு என்ன பிரச்னை என்று diagnose / debug செய்ய எங்களுக்குத் தெரியவில்லையே.

மீனுக்கெல்லாம் வியாதி வருமா? அதைப் பரிசோதித்து மருந்து கொடுக்கக் கால்நடை(?) மருத்துவர்கள் இருப்பார்களா? சாப்பாடே கடுகு சைஸ் என்றால், அந்த மருந்து என்ன சைஸ் இருக்கும்?

சென்ற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அந்த அழகிய தங்க மீன் துவண்டுபோய்க்கொண்டிருந்தது. நாங்கள் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தோம்.

திங்கள்கிழமை நங்கை போட்ட சாப்பாட்டைக்கூட அது ஏற்றுக்கொள்ளவில்லை, கடுகு உருண்டை அப்படியே தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது, உள்ளே மீனும் அதற்கு இணையாக உயிரற்றதுபோல் கிடந்தது, எப்போதாவது துடுப்புகள் லேசாக அசைந்தன, மற்றபடி நீச்சலெல்லாம் அதிகம் இல்லை.

’பாவம்ப்பா, மீனுக்கு என்னவோ ஆயிடுச்சு’ என்று புலம்பத் தொடங்கினாள் நங்கை. ‘நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா, எல்லாம் சரியாயிடும்’ என்று அவளுக்குப் பொய் ஆறுதல் சொன்னபடி நாங்கள் மனோகரி குடும்பத்தார் திரும்பி வரும் நாளை எதிர்நோக்க ஆரம்பித்தோம்.

அவர்கள் கிளம்பியபோது, ‘எப்போது திரும்பி வருவீர்கள்’ என்று கேட்டுக்கொள்ளத் தோன்றவில்லை. தவிர, ஹனி மூன் கிளம்புகிறவர்களிடம் அப்படிக் கேட்பதும் நாகரிகமாக இருக்காது.

ஆனால் இப்போது, அவர்கள் இன்றைக்கே திரும்பி வந்துவிட்டால் பரவாயில்லை என்று நாங்கள் தவிக்க ஆரம்பித்தோம். எப்படியாவது மீனை அவர்களிடம் உயிரோடு ஒப்படைத்துவிடவேண்டும். அதன்பிறகு, அது அவர்களுடைய பிரச்னையாகிவிடும், எப்படியோ வைத்தியம் பார்த்துக் காப்பாற்றிக்கொள்ளட்டும்.

அதுமட்டுமில்லை. ஒருவேளை இந்த மீன் உயிரை விட்டுவிட்டால், இத்தனை நாள் நாங்கள் அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டோம் என்பதற்கு என்ன அத்தாட்சி? நாங்கள் அலட்சியமாக இருந்து அதைக் கொன்றுவிட்டோம் என்றுதானே மனோகரி நினைப்பார்? எங்கள்மேல் எந்தத் தவறும் இல்லை, we tried our best என்பதை அவருக்கு எப்படி நிரூபிப்பது?

நேற்று மாலை, அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கழுத்துப் பட்டையைக் கழற்றும்போதே, டிவி அருகில் என்னவோ உறுத்துவதுபோல் உணர்ந்தேன். நெருங்கிப் பார்த்தபோது, அந்த ஒற்றை மீன் செத்துப்போய் மிதந்துகொண்டிருந்தது.

இந்த ஒரு வாரம், பத்து நாளில் அந்த மீனுடன் எங்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டுவிட்டதாகவெல்லாம் ஜல்லியடிக்கமாட்டேன். ஆனால், நம் கண்ணெதிரே ஓடி விளையாடிக்கொண்டிருந்த ஓர் உயிர் இப்படி மரக்கட்டைபோல் செத்து மிதக்கும்போது, மிகவும் மன வருத்தமாக இருந்தது.

இன்று காலை, மனோகரி திரும்பி வந்திருக்கிறார். மாலை மீனை வாங்க வருகிறவர் கையில் வெறும் தொட்டியை எப்படிக் கொடுப்பது? வேறொரு தங்க மீனை விலைக்கு வாங்கிப் போட்டுக் கொடுத்துவிடலாமா? அவர் அடையாளம் கண்டுபிடித்துவிடுவாரா? உண்மை தெரிந்து எங்களைக் கோபிப்பாரா? கோர்ட்டுக்குப் போவாரா? பெங்களூரில் எது நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

வழக்கம்போல், இந்தப் பிரச்னையை என் மனைவி தலையில் சுமத்திவிட்டு, நான் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டேன். மாலை நான் வீடு திரும்புவதற்குள் மீன் தொட்டி காணாமல் போயிருந்தால் நிம்மதி!

ஆனால் ஒன்று, எங்கள் அடுக்ககத்தில் இன்னொரு ஹனி மூன் தம்பதியின் மீனுக்கோ, மானுக்கோ தாற்காலிகப் புகலிடம் ஒன்று தேவைப்பட்டால், நிச்சயமாக எங்கள் வீட்டுக் கதவைத் தட்டமாட்டார்கள். அதற்காக சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்றுதான் தெரியவில்லை.

***

என். சொக்கன் …

03 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,575 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2009
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930