மனம் போன போக்கில்

Archive for December 2011

34th Book Fair Logo

எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது மூன்று புத்தகங்கள் வெளியாகின்றன. அவைபற்றிய சிறு அறிமுகம் இங்கே:

1. மொஸாட்

ஏற்கெனவே சிஐஏ, கேஜிபி ஆகிய உளவுத்துறைகளின் சரித்திரத்தை எழுதியுள்ளேன், அந்த வரிசையில் இஸ்ரேல் உளவுத்துறையாகிய மொஸாட் குறித்த விரிவான அறிமுக நூல் இது. ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் தொடராக வெளியானது.

B01

2. திருப்பு முனைகள்

கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கி 2010ம் ஆண்டுவரை 107 வாரங்களுக்கு ‘முத்தாரம்’ இதழில் ‘திருப்பு முனை’ என்ற தொடரை எழுதிவந்தேன். வாரம் ஒரு பிரபலமான ஆளுமையை எடுத்துக்கொண்டு அவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த திருப்புமுனைச் சம்பவம் ஒன்றை கதை வடிவில் கொடுத்த இந்தத் தொடர் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது அதன் ஒரு பகுதி (50 கதைகள்மட்டும்) நூல் வடிவம் பெறுகிறது, மீதமுள்ள கதைகள் அடுத்த பாகமாகப் பின்னர் வெளிவரும்.

B02

3. விண்டோஸ் 7 கையேடு

சென்ற வருடம் விண்டோஸ் XP குறித்த எளிய கையேடு ஒன்றை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, இப்போது விண்டோஸ் 7க்கான இந்த நூல். டெக்னிகல் மொழியில் அன்றி எவரும் வாசிக்கக்கூடிய மொழியில் கணினியைப் பயன்படுத்தும் நுட்பங்களை எழுத முயன்றுள்ளேன், கிட்டத்தட்ட dummies guideமாதிரி என்று வைத்துக்கொள்ளலாம்.

B03

இந்த மூன்று புத்தகங்களையும் ‘மதி நிலையம்’ வெளியிடுகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் 018 மற்றும் 019 ஆகிய ஸ்டால் நம்பர்களில் இவற்றை வாங்கலாம். விலை விவரம் எனக்குத் தெரியவில்லை, தெரிந்ததும் இங்கே அப்டேட் செய்கிறேன்.

இவைதவிர, எனது இன்னும் சில நூல்கள் தயாரிப்பு நிலையில் உள்ளன. அவை புத்தகக் கண்காட்சிக்கு வருமா என்பது நிச்சயமாகத் தெரியாததால் இங்கே சேர்க்கவில்லை, தெரிந்ததும் சொல்கிறேன்.

என்னுடைய மற்ற பெரும்பாலான புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும். அவர்களது ஸ்டால் நம்பர்: F7 மற்றும் F20.

***

என். சொக்கன் …

26 12 2011

இணையத்தில் @Ursquizzically என்ற புதிர் நிகழ்ச்சிக்காக என்னைச் சிறு பேட்டி எடுத்தார்கள், அந்தப் பேட்டியைக் கீழே உள்ள லிங்க்கில் கேட்கலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம், க்விஸ்ஸுக்காக நான் கேட்ட கேள்விகள் பின்னர் வரும், நீங்கள் கலந்துகொண்டு மார்க் வாங்கலாம் (நான் நல்ல வாத்தியாராக்கும், சிம்பிள் கொஸ்டின்ஸ்தான் கேட்பேன் 😉

N. Chokkan Interview For Yours Quizzically

***

என். சொக்கன் …

23 12 2011

இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:

1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது

2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே

குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.

லலிதா  ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.

image

உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.

ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:

இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?

கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?

ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.

ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!

முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.

இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா  ராம்.

இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.

இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.

உதாரணமாக, சில விஷயங்கள்:

1

கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.

அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.

ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.

நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.

2

இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.

சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.

அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.

அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.

மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.

3

இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.

பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.

தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.

4

பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.

5

மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.

பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.

அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.

6

ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.

ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.

‘எப்படி?’

‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’

‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’

’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.

அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.

அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.

அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய  உயர்வு ரத்தாகிறது.

ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.

7

மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய  வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.

‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’

’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.

8

எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.

இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.

ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.

9

ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.

‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.

ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.

அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.

இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.

‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.

இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.

10

பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.

ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!

*

இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.

Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.

On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.

இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார் Smile

அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.

இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது Winking smile

உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!

(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)

***

என். சொக்கன் …

20 12 2011

நங்கையின் பள்ளியில் தமிழ்ப் பாடங்கள் இல்லை. ஆகவே நம் ஊரிலிருந்து ஒண்ணாங்கிளாஸ் தமிழ்ப் புத்தகம் வாங்கித் தந்திருக்கிறோம். இன்று காலை அதில் ஒரு தமிழ்ப் பாடல் / Rhyme (எழுதியவர் பெயர் தெரியவில்லை) எழுத்துக் கூட்டிப் படித்துக்கொண்டிருந்தாள்:

மல்லிகைப் பூவே! மல்லிகைப் பூவே! எங்க போறீங்க?

மஞ்சள் சாமந்தி பூத்துச்சான்னு பார்க்கப் போறேங்க!

சாமந்திப் பூவே! சாமந்திப் பூவே! எங்க போறீங்க?

வெள்ளைத் தாமரை பூத்துச்சான்னு பார்க்கப் போறேங்க!

தாமரைப் பூவே! தாமரைப் பூவே! எங்க போறீங்க?

சிவப்பு ரோஜா பூத்துச்சான்னு பார்க்கப் போறேங்க!

ரோஜாப்பூவே! ரோஜாப்பூவே! எங்க போறீங்க?

பூத்த பூவைப் பறிச்சு உனக்குச் சூட்டப் போறேங்க!

அப்போது அவளுடைய தங்கை கையில் பாதாம் பருப்புடன் ஓடி வர, அதை வைத்து இந்தப் பாட்டின் அடிப்படையில் அவள் ஒரு ‘காப்பி’ப் பாடலை இட்டுக்கட்டிப் பாடினாள்:

பாதாம் மாமா! பாதாம் மாமா! எங்கே போறீங்க?
முந்திரிப் பருப்பு மாமாவத்தான் பார்க்கப் போறேங்க!
முந்திரி மாமா! முந்திரி மாமா! எங்கே போறீங்க?
திராட்சை மாமாவைத்தான் பார்க்கப் போறேங்க!
திராட்சை மாமா! திராட்சை மாமா! எங்கே போறீங்க?
பழம் பறிச்சு நான் உனக்கு ஊட்டப் போறேங்க!
இதை நான் ட்விட்டரில் போட, நண்பர் @balaav குறுக்கிட்டுக் கிண்டலாக ஒரு வரி சொன்னார்:
ட்விட்டர் மாமா! ட்விட்டர் மாமா! எங்கே போறீங்க?
சர்வர் டவுனு ஆனதால நான் தூங்கப் போறேங்க!
இப்படிக் கோடு போட்டால் விடமுடியுமா? ட்விட்டரில் ஆரம்பித்து நானும் ஒரு ‘சோஷியல் மீடியா ரைம்’ நீட்டிவிட்டேன்:

ட்விட்டர் மாமா! ட்விட்டர் மாமா! எங்கே போறீங்க?

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய நானும் போறேங்க!

ஃபேஸ்புக் மாமா! ஃபேஸ்புக் மாமா! எங்கே போறீங்க?

ப்ளாக் எழுத, ஃபீட்பேக் போட நானும் போறேங்க!

ப்ளாக் மாமா! ப்ளாக் மாமா! எங்கே போறீங்க?

ஃபோர் ஸ்கொயரில் மேயராக நானும் போறேங்க!

4ஸ்கொயர் மாமா! 4ஸ்கொயர் மாமா! எங்கே போறீங்க?

கூகுள் ப்ளஸ்ஸில் ப்ரொஃபைல் க்ரியேட் பண்ணப் போறேங்க!

கூகுள் மாமா! கூகுள் மாமா! எங்கே போறீங்க?

நான் எங்கே போவேன், இங்கேயேதான் கிடக்கப்போறேங்க!

:>

***
என். சொக்கன் …

18 12 2011

நேற்று ட்விட்டரில் எழுதிய 31 ட்வீட்களை நண்பர் டாக்டர் விஜய் (@scanman) தொகுத்துத் தந்தார். மொத்தமாகப் படிக்க செம ஜாலியாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று சில திருத்தங்கள், கூடுதல் குறிப்புகளுடன் இங்கே தொகுத்துவைக்கிறேன்:

இன்று மார்கழி 1. வருடாந்திர வழக்கப்படி திருப்பாவை, திருவெம்பாவை 50 பாட்டுகளையும் ஒருமுறை நிதானமாகப் படித்து முடித்தேன்.

திருப்பாவைப் பாடல்களைவிட, நமக்கு நன்கு தெரிந்த ஆண்டாள் கதையே மேலோங்கி நிற்பதால், சூப்பர் ஸ்டார் படம் பார்க்கும் உணர்வு, ஆனால் திருவெம்பாவையில் அந்தப் பிரச்னை இல்லை. No super stars, No பின்னணிக் கதை, எல்லாப் பெண்களும் சமம் என்பதால் சுவாரஸ்யம் மிகுகிறது.

திருப்பாவை ஹீரோ(யின்) சப்ஜெக்ட் என்றால், திருவெம்பாவை அந்தக்கால ஆர். பி. சௌத்ரி ரக 4 ஹீரோ(யின்) சப்ஜெக்ட்.

அடிக்கடி ஒலி வடிவத்தில் கேட்டதாலோ என்னவோ, திருப்பாவையில் உள்ள வார்த்தைகள் எளிதாகவும் திருவெம்பாவையில் கடினமாகவும் உள்ளதுபோல் தோற்றம்.

ஆனால் இரண்டிலும் பளிச்சென்று கவனம் ஈர்ப்பவை சில இரு வரித் துணுக்குகள்தான். ட்விட்டர் வடிவத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துபவை. உதாரணமாக எனக்குப் பிடித்த பாவை ட்வீட் வரிகள் இங்கே:

  • செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம் (திருப்பாவை 2)
  • வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் (திருப்பாவை 3)
  • ஆழி உள் புக்கு, முகந்துகொடு, ஆர்த்து ஏறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கருத்து (திருப்பாவை 4)
  • வாழ உலகினில் பெய்திடாய் (திருப்பாவை 4)
  • வாயினால் பாடி மனத்தினால் (’மனதினால்’ அல்ல, அப்படி எழுதுவது பிழை) சிந்திக்க (திருப்பாவை 5)
  • அரி என்ற பேரரவம் உள்ளே புகுந்து குளிர்ந்து… (திருப்பாவை 6)
  • வாச (அது என்ன வாசம்?) நறும் குழல் ஆய்ச்சியர் (திருப்பாவை 7)
  • கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெரும்துயில்தான் தந்தானோ? (திருப்பாவை 10)
  • செல்வப் பெண்டாட்டி (வாவ்!) (திருப்பாவை 11)
  • எருமை கன்றுக்கு இரங்கி, நினைத்து முலைவழியே நின்று பால் சோர (திருப்பாவை 12)
  • மனத்துக்கு இனியானை (திருப்பாவை 12)
  • வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று (திருப்பாவை 13)
  • எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் (திருப்பாவை 14)
  • எல்லே! இளம்கிளியே, இன்னும் உறங்குதியோ? (திருப்பாவை 15)
  • தூயோமாய் வந்தோம், துயில் எழப் பாடுவோம் (திருப்பாவை 16)
  • மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயில்இனங்கள் கூவின காண் (திருப்பாவை 18)
  • செந்தாமரைக் கையால் சீர்ஆர் வளைஒலிப்ப வந்து திறவாய் (திருப்பாவை 18)
  • நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் (திருப்பாவை 19) Don’t be a bed potato 😉
  • கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் (திருப்பாவை 22) எப்பேர்ப்பட்ட உவமை!
  • யாம் வந்த காரியம் ஆராய்ந்து, அருள் (திருப்பாவை 23) நாங்கள் கேட்கிறோமே என்று இரக்கப்பட்டுக் கொடுத்துவிடாதே, ஆராய்ந்து முடிவு செய்
  • ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர (திருப்பாவை 25)
  • கூடி இருந்து குளிர்ந்து… (திருப்பாவை 27) சோஷலிஸம்? 🙂
  • குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா (திருப்பாவை 28) பின்னர் ராஜாஜி எழுதிய மறைமூர்த்தி கண்ணாப் பாட்டுக்குத் தொடக்கம் இது
  • எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் (திருப்பாவை 29)
  • மற்றை நம் காமங்கள் மாற்று (திருப்பாவை 29) நீ இருந்தால் வேறெதும் வேண்டாம் (இதே கருத்தைத் திருவெம்பாவையும் ஓர் இடத்தில் சொல்கிறது, கீழே)
  • ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதி (திருவெம்பாவை 1)
  • வன் செவியோ நின் செவிதான் (திருவெம்பாவை 1)
  • அமளி(படுக்கை)க்கே நேசமும் வைத்தனையோ? (திருவெம்பாவை 2)
  • நின் அன்பு உடைமை எல்லோம் அறியோமோ? (திருவெம்பாவை 3)
  • இன்னம் புலர்ந்தின்றோ(திருவெம்பாவை 4)
  • துயின்று அவமே காலத்தை போக்காதே(திருவெம்பாவை 4)
  • மால் அறியா, நான்முகனும் காணா மலை(திருவெம்பாவை 5)
  • தானே வந்து எம்மைத் தலை அளித்து ஆட்கொண்டு அருளும் (திருவெம்பாவை 6)
  • தீ சேர் மெழுகு ஒப்பாய் (திருவெம்பாவை 7)
  • ஏழைப் பங்காளனை (திருவெம்பாவை 8) இன்று அரசியலால் அர்த்தம் இழந்துவிட்ட வார்த்தை இங்கிருந்து வந்ததுதான் 🙂
  • முன்னைப் பழம்பொருள்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே (திருவெம்பாவை 9)
  • என்ன குறையும் இலோம் (திருவெம்பாவை 9, எப்போது குறை இல்லை? தெரிந்துகொள்ள அட்டகாசமான இந்தப் பாட்டை முழுக்கப் படியுங்கள்!)
  • ஓத உலவா ஒரு தோழன் (திருவெம்பாவை 10)
  • நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும்வகையெல்லாம் உய்ந்துஒழிந்தோம் (திருவெம்பாவை 11)
  • முன் இக்கடலைச் சுருக்கி, எழுந்து, உடையாள் என்னத் திகழ்ந்து (திருவெம்பாவை 16)
  • செங்கண் அவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால் எங்கும் இலாத ஓர் இன்பம் நம் பால் (திருவெம்பாவை 17)
  • கண் ஆர் அமுதம் (திருவெம்பாவை 18)
  • எம் கொங்கை நின்அன்பர்அல்லார் தோள் சேரற்க (திருவெம்பாவை 19)
  • எங்கு எழில் என் ஞாயிறு? (திருவெம்பாவை 19) நீமட்டும் அருள் செய்துவிட்டால் அதன்பிறகு சூரியன் எங்கே உதித்தால் எனக்கென்ன?
  • போற்றி, எல்லா உயிர்க்கும் (திருவெம்பாவை 20) #முடிச்சுக்கறேன் 🙂

***
என். சொக்கன் …

18 12 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,575 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2011
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031