மனம் போன போக்கில்

Archive for November 2012

இயக்குனர் வசந்தின் அடுத்த படம்பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐந்து நிலங்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் வருகின்றனவாம்.

இதைப் படித்தவுடன், இந்த ஐவகை நிலங்கள் பெயரைக் கேட்டதும் உடனே என்னுடைய நினைவுக்கு வரும் பாடல்கள் என்னென்ன என்று யோசித்தேன். உதாரணமாக, குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை, முல்லை மலர் மேலே, பாலைவனத்தில் ஒரு ரோஜா… இப்படி.

அதேசமயம், வசந்த் இப்படி மொக்கையாக யோசித்திருக்கமாட்டார் என்று தோன்றியது. அவர் ஐவகை நிலங்கள் / திணை ஒழுக்கங்களின் தன்மையை அடிப்படையாக வைத்துப் பாடல்களை வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.

அந்த ஊகத்தின்படி, இந்த ஐந்து நிலங்களின் இலக்கணங்களுக்குப் பொருத்தமாக என்னென்ன பாடல்களைச் சொல்லலாம் என்று யோசிக்கிறேன். அதாவது, என்னுடைய புரிதலின்படி:

  • முல்லை: அவன்(ள்) வரவுக்காகக் காத்திருத்தல்
  • நெய்தல்: பிரிந்தவர் இன்னும் திரும்பவில்லையே என எண்ணி வருந்துதல்
  • பாலை: பிரிவை எண்ணி வாடுதல்
  • மருதம்: ஊடல்
  • குறிஞ்சி: கூடல்

Assuming this is right, என்னுடைய பட்டியல் இங்கே:

  • முல்லை: மாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)
  • நெய்தல்: ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு (வைதேகி காத்திருந்தாள்)
  • பாலை: எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலை பாயுதே)
  • மருதம்: இதில் எனக்கு முழுத் திருப்தியான ஒரு பாடல் கிடைக்கவில்லை, அரைத் திருப்தி தந்தவை : பொன் மானே கோபம் ஏனோ (ஒரு கைதியின் டைரி) மற்றும் என் கண்மணியே கண்மணியே (சின்ன வாத்தியார்)
  • குறிஞ்சி: இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்)

உங்கள் பட்டியலைப் பின்னூட்டத்தில் தாருங்கள்.

***

என். சொக்கன் …

30 11 2012

ஓர் ஆங்கிலப் புத்தகம், ‘There lived a rich man’ என்று தொடங்குகிறது. அதைத் தமிழில் ‘அங்கு ஒரு தனவந்தர் வாழ்ந்தார்’ என்று மொழிபெயர்த்துள்ளனர்.

’தனவந்தர்’ என்பது வடமொழிச் சொல் என்பது ஒருபக்கமிருக்க, இப்போது அது தமிழ்நாட்டில் பழக்கத்திலேயே இல்லை, பழைய்ய்ய மொழி அது. அதைப் பயன்படுத்தினால், <40 வயதுள்ள, தினசரிப் பேச்சால்மட்டுமே தமிழ் Vocabularyயை வளர்த்துக்கொண்டுள்ளவர்கள் யாருக்கும் புரியாது.

சில சமயங்களில் வேண்டுமென்றே பழைய நடையில் எழுதுவது உண்டு. உதாரணமாக, நான் அடிக்கடி ‘அன்பர்காள்’ என்று தொடங்கி ஈமெயில்கள் எழுதுவேன், ’உள்ளன’ என்பதற்குப் பதில் ‘உள’ என்று பயன்படுத்துவேன், ‘யார்’ என்பதற்குப் பதில் ‘ஆர்’ என்று எழுதுவேன், இவையெல்லாம் அதிகப் பேருக்குப் புரியாது என்று தெரியும், ஆனாலும் வாசிக்க வித்தியாசமான சுவையாக இருக்கும்.

அப்படிச் சிலர் தெரிந்தே கிறுக்குத்தனம் செய்வது வேறு விதம், இந்த மொழிபெயர்ப்பாளர் ‘Rich Man’க்கு இணையாகத் ‘தனவந்தர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது அப்படி அல்ல என்று நம்புகிறேன்.

இன்னொரு விஷயம், மொழியை வார்த்தைக்கு வார்த்தை மொக்கையாகப் பெயர்க்காமல் உள்ளூர்க் கலாசார அம்சங்களையும் கொண்டுவரவேண்டும்.

உதாரணமாக, ’ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ என்று கதை தொடங்கும் மரபு இங்கே தமிழில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி, ‘There lived a rich man’ … ’ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரர்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் வாசிக்க லகுவாக இருக்கும்.

இன்னோர் உதாரணம், ஓர் இன்ஷூரன்ஸ் விளம்பரத்தில் ‘Your Plan B’ என்று இருக்கிறது. இதன் அர்த்தம் ஆங்கில மொழி அறிந்தவர்களுக்குதான் புரியும்.

இதையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். எப்படி தெரியுமா? ‘உங்கள் திட்டம் பி’ என்று.

இந்தமட்டும் ‘B’ என்பதை ‘பி’ என்று மொழிபெயர்த்தார்களே, ‘திட்டம் ஆ’ என்று எழுதாமல்!

’திட்டம் பி’ என்பதில் என்ன தவறு? என்று நீங்கள் கேட்டால், உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று அர்த்தம், ‘Plan B’ என்பதன் அர்த்தம் புரிந்த உங்களால், ‘திட்டம் பி’ என்பதையும் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடிகிறது.

ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், ‘Plan B’ என்பதை மொழிபெயர்ப்பதன் நோக்கம், ஆங்கிலம் தெரியாத, தமிழ்மட்டுமே தெரிந்த ஒருவருக்கு அது புரியவேண்டும். அல்லவா? ‘திட்டம் பி’ என்பது அவர்களுக்குப் புரியாது, ஆங்கிலமும் தெரிந்தவர்கள் அதை ஆங்கிலத்திலேயே படித்துவிடுவார்கள், தமிழ் மொழிபெயர்ப்பு அவர்களுக்கு அவசியம் இல்லை.

ஆக, ‘Plan B’ என்பதை, ‘உங்களது மாற்றுத் திட்டம்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் அது உரிய நபர்களுக்குச் சென்றுசேரும். காரணம் ‘Plan B’ (அல்லது) ‘திட்டம் பி’ (அல்லது) ‘திட்டம் ஆ’ என்று பேசும் கலாசாரம் / வழக்கம் நம்மிடையே இல்லை. இது மொழிபெயர்த்த நல்லவருக்குத் தெரியவில்லை.

Of course, நான் இங்கே சொல்லியிருப்பவைதான் சிறந்த மொழிபெயர்ப்புகள் என்பதல்ல. இவை சர்வசாதாரணமான உதாரணங்கள். நாம் எல்லாரும் தினந்தோறும் இதுமாதிரி எளிய, ஆனால் அபத்தமான மொழிபெயர்ப்புத் தவறுகளைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

வருத்தமான விஷயம், ஒரு நல்ல மொழிபெயர்ப்பு எப்பேர்ப்பட்ட மேஜிக் செய்யக்கூடும், எப்படி ஒரு புதிய உலகத்தை அந்த மொழி தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடும் என்று நம் ஊரில் யாருக்கும் புரியவில்லை, அதன் முக்கியத்துவம் தெரியாமல் கடமைக்கு ஏதோ தட்டித் தள்ளுகிறார்கள். இழப்பு ஜாஸ்தி.

***

என். சொக்கன் …

27 11 2012

சென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய சிறுகதையின் வலைப்பதிவு வடிவம் இது.

‘வலைப்பதிவு வடிவம்’ என்று குறிப்பிட ஒரு காரணம் உண்டு. இந்த நிகழ்ச்சி முழுக்க உண்மையில் நடந்ததுதான். ஆகவே, இதை இந்த Blogக்கான ஒரு வலைப்பதிவாகவே எழுதத் தொடங்கினேன். பாதி எழுதிக்கொண்டிருக்கும்போது, ’இதைக் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு சிறுகதையாக மாற்றிவிடலாமே’ என்று தோன்றியது. ’என்ன பெரிய வித்தியாசம்?’ என்று யோசித்தபடி எழுதி முடித்தேன்.

இப்போது அதனை வாசித்தபோது, வலைப்பதிவும் கதையும் (என்னுடைய அளவுகோலில்) ஒன்றாகாது என்று தோன்றியது. முக்கியமான வித்தியாசம், 200 பேர்மட்டும் படிக்கப்போகும் வலைப்பதிவில் கொஞ்சம் வளவளா என்று அளக்கலாம். நுணுக்கமான வர்ணனைகள், விடையில்லாத கேள்விகளுக்கெல்லாம் இடம் உண்டு, சில முடிச்சுகளை அவிழ்க்காமல்கூட விட்டுவிடலாம், யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். வெகுஜனப் பத்திரிகைக்கு எழுதும் கதையில் அதெல்லாம் முடியாது.

ஆகவே, இந்தப் பதிவில் சிறுகதை வடிவத்துக்குப் பொருந்தாது என்று எனக்குத் தோன்றிய பகுதிகளையெல்லாம் வெட்டி எடுத்துவிட்டு, ‘கல்கி’க்கு அனுப்பினேன். அதை அவர்கள் அப்படியே வெளியிட்டது எனக்கு மகிழ்ச்சி.

இப்போது, you have two choices:

1. கல்கியில் வெளியான வடிவத்தைமட்டுமே படிக்க விரும்பினால், இந்த URLக்குச் சென்று, இரண்டாவதாக உள்ள கதையை வாசிக்கலாம்: http://venkatramanan.posterous.com/505-25112012

2. மற்றபடி, பொறுமை உள்ளவர்களுக்காக, நான் எழுதிய முழுமையான வலைப்பதிவு வடிவம் இங்கே:

சிண்ட்ரெல்லா

‘அப்பா, செருப்பைக் காணோம்!’

மகள் பரிதாபமாக வந்து சொல்ல, மும்முரமாக நடந்துகொண்டிருந்த நான் ஏதோ ஞாபகத்தில் தலையாட்டினேன். ‘வெரி குட் கண்ணு.’

அவள் குழப்பத்துடன் விழித்தாள். ‘அம்மா திட்டுவாங்களே!’

அப்போதுதான் எனக்கு லேசாகச் சுரீரென்றது. ’ஏன் கண்ணு? என்னாச்சு? அம்மா யாரைத் திட்டுவாங்க? உன்னையா? என்னையா?’ என்றேன்.

’செருப்பைக் காணோமே’ என்றாள் அவள் மறுபடி. கண்களில் உடனடி அழுகையின் ஆரம்பம் தெரிந்தது, ‘இங்கேதான்ப்பா விட்டேன்.’

விஷயத்தின் தீவிரம் உணர்ந்து, காதில் மாட்டியிருந்த சினிமாப் பாட்டை அவிழ்த்துப் பாக்கெட்டில் போட்டேன். ‘செருப்பைக் காணோமா?’

‘ஆமாப்பா, உனக்கு எத்தனைவாட்டி சொல்றது?’

நான் பரபரப்பாக அந்தப் பார்க்கைச் சுற்றி நோட்டமிட்டேன். மாலை வெளிச்சம் மங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த அரையிருட்டில் சின்னப் பிள்ளையின் செருப்புகளை எங்கே தேடுவது?

பொதுவாகக் குழந்தைகளுக்கு எதையும் பத்திரமாகப் பாதுகாக்கும் அக்கறையும் கிடையாது, அவசியமும் கிடையாது, அவற்றைத் தொலைப்பதுபற்றி அவை பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதும் இல்லை.

ஆனால் பெரியவர்கள் அப்படி விட்டேத்தியாக இருந்துவிடமுடியாது. செருப்பு தொலைந்தது என்றால், குழந்தை வெறுங்காலுடன் நடந்து காலில் கல்லோ முள்ளோ குத்திவிடுமோ என்கிற நினைப்புக்குமுன்னால், அந்தச் செருப்பை எத்தனை காசு கொடுத்து வாங்கினோம் என்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘ஏன் தொலைச்சே? காசு என்ன மரத்துல காய்க்குதா’ என்று அதன்மீது பாய்கிறோம்.

நான் பாயப்போவதில்லை, என் மனைவி பாய்வாள். அதற்காகதான் குழந்தை அழுகிறாள், செருப்பைத் தொலைத்துவிட்டோமே என்பதற்காக அல்ல.

பெரியவர்களின் புரியாத காசுக் கணக்கினால், தாங்கள் அணிந்துள்ள, பயன்படுத்துகிற பொருள்களின்மீது ஓர் இயல்பற்ற, அவசியமற்ற போலி அக்கறையைப் பிள்ளைகள் வளர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால் அதன்மூலம் அவை அந்தப் பொருள்களைத் தொலைக்காமல் பத்திரமாகப் பாதுகாக்கப்போவதும் இல்லை என்பது இந்தப் பெரியவர்களுக்குப் புரிந்து தொலைப்பதில்லை.

இந்த அபத்தக் கூட்டணியின் விளைவு, பிள்ளைகள் எதையாவது எக்குத்தப்பாகத் தொலைத்துவிட்டுப் பதறுகிறார்கள். அப்படிப் பதறுவதைத்தவிர அவர்களால் வேறு எதையும் செய்துவிடமுடியாது எனும்போது, நாம் அந்த அநாவசிய மன அழுத்தத்தை அவர்களுக்கு ஏன் தரவேண்டும்?

இத்தனை விளக்கமாக எழுதிவிட்டேனேதவிர, இதை எப்போதும் என் மனைவியிடம் சொல்லிப் புரியவைக்க என்னால் முடிந்ததில்லை. ‘அதுக்காக, எல்லாத்துலயும் கேர்லஸா இருன்னு பிள்ளைக்குச் சொல்லித்தரணுமா?’ என்பார் நேர் எதிர்முனையில் நின்று.

இதனால், வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம், உறவுக்காரர்கள் திருமணம் என்றால் பிள்ளையைவிட, எனக்குப் பதற்றம் அதிகமாகிவிடும். பெண் குழந்தையாச்சே என்று அதன் கழுத்தில் நகையை மாட்டுவானேன், பிறகு தொலைத்துவிட்டுப் பதறுவானேன்?

ஒன்று, குழந்தைக்கு நகையைமட்டும் மாட்டவேண்டும், அதுவாக வந்து ‘இந்த நகை எனக்கு வேண்டும்’ என்று விரும்பிக் கேட்டாலொழிய, நம் ஆசைக்காக அதை அலங்கரித்துவிட்டு, பின்னர் அந்த நகையைப் பராமரிக்கிற பொருந்தாத பொறுப்பை இலவச இணைப்பாகத் தரக்கூடாது.

அல்லது, குழந்தைக்கு நகை அணிவிப்பது என் ஆசை, ஆகவே, அந்த நகை தொலையக்கூடும் என்கிற சாத்தியத்துக்கும் நான் மனத்தளவில் தயாராகிவிடவேண்டும். ஒருவேளை அதைப் பாதுகாத்தே தீர்வதென்றால், அந்தப் பொறுப்பை நான்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லவா?

என் கட்சி, கடையில் திரும்பக் கிடைக்காத அபூர்வமான பொருள்களைத் தொலைத்தாலேனும் கொஞ்சம் வருந்தலாம், மற்றவற்றைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டுவிடலாம், குழந்தை மனத்தைவிடவா அந்த அற்ப செருப்பு முக்கியம்?

இந்தத் தத்துவ விசாரங்கள் ஒருபக்கமிருக்க, இப்போது அந்தச் செருப்பு எங்கே போனது?

குழந்தை இங்கேதான் அவிழ்த்துவிட்டேன் என்கிறாள். அந்த இடத்தில் பல பாதச் சுவடுகள்மட்டுமே உள்ளன. செருப்பைக் காணவில்லை.

செருப்பு என்ன தங்கச் சங்கிலியா? அதற்கென்று யாரும் திருடர்கள் வரப்போவதில்லை. பல குழந்தைகள் ஓடியாடும் இடம், ஏதாவது ஒன்று அந்தச் செருப்பை ஓரமாகத் தள்ளிவிட்டிருக்கக்கூடும். கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும்.

மிச்சமிருக்கும் சொற்ப வெளிச்சத்தில் என்னுடைய செல்ஃபோனையும் துணையாகச் சேர்த்துக்கொண்டு மெதுவாகத் தேட ஆரம்பித்தேன். குழந்தை விசும்பியபடி என் பின்னால் நடந்துவந்தாள். நான் குனிந்து தேடுகிற அதே இடங்களில் அவளும் அக்கறையாகத் தேடினாள்.

நாங்கள் அந்த மணல் தொட்டியை முழுக்கச் சுற்றிவந்தாயிற்று. சறுக்குமரம், ஊஞ்சல்கள், சீ சா, குரங்குக் கம்பிகள் போன்றவற்றின் கீழும், ஏ, பி, சி, டி வடிவத்தில் அமைந்த இரும்பு வலைகளுக்குள்ளும், அக்கம்பக்கத்து பெஞ்ச்களின் இருட்டுக் கால்களுக்கிடையிலும்கூடக் குனிந்து தேடியாகிவிட்டது. செருப்பைக் காணவில்லை.

ஒருவேளை, ஒற்றைச் செருப்பு கிடைத்திருந்தாலாவது தொடர்ந்து தேடலாம். இரண்டுமே கிடைக்கவில்லை என்பதால், யாரோ அதனை எடுத்துப் போயிருக்கவேண்டும். குழந்தைச் செருப்பை யாரும் வேண்டுமென்றே திருடமாட்டார்கள், தவறுதலாகதான் கொண்டுசென்றிருப்பார்கள்.

எப்படியும் அந்தச் செருப்பு இன்னொரு சின்னக் குழந்தைக்குதானே பயன்படப்போகிறது? அனுபவிக்கட்டும்! நான் தேடுவதை நிறுத்திவிட்டேன்.

ஆனால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள். ‘அம்மா திட்டுவாங்க’ என்பதைத் தவிர வேறு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை.

‘பரவாயில்லை கண்ணு, நான் சொல்றேன் அம்மாகிட்டே’ என்றேன் நான். ‘திட்டமாட்டாங்க, கவலைப்படாதே!’

அவள் திருப்தியடையவில்லை. மறுபடி ஒருமுறை அந்த மணல் தொட்டியை ஏக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். ‘இங்கேதான்ப்பா விட்டேன்’ என்று வேறோர் இடத்தைக் காட்டினாள்.

இதற்குள் பூங்காவில் மற்ற எல்லாரும் கிளம்பிச் சென்றிருந்தார்கள். நாங்கள்மட்டும்தான் தனியே நின்றோம். அந்த வெறுமையில் செருப்பு அங்கே இல்லாத உண்மை ‘பளிச்’சென்று உறைத்தது.

பாதரச விளக்கு வெளிச்சம். தரையில் கிடந்த சிறு சருகுகளுக்கும் நிழல் முளைத்திருந்தது. அவற்றைப் பார்க்கப் பார்க்க, ஒவ்வொன்றும் சிறு பிள்ளைச் செருப்புகளைப்போலவே தோன்றியது.

நாங்கள் இன்னொருமுறை அந்த விளையாட்டுப் பூங்காவை மெதுவாகச் சுற்றி வந்தோம். ஒருவேளை மணலுக்குள் ஒளிந்திருக்குமோ என்கிற சந்தேகத்தில் காலால் விசிறிக்கூடத் தேடினோம். பலன் இல்லை.

இனிமேலும் தேடுவது நேர விரயம். வீட்டுக்குப் போகலாம்.

‘எப்படிப்பா? கால் குத்துமே.’

‘வேணும்ன்னா என் செருப்பைப் போட்டுக்கறியா?’ அவிழ்த்துவிட்டேன்.

‘உனக்குக் கால் குத்துமே.’

’பரவாயில்லை, போட்டுக்கோ.’

அவள் நிச்சயமில்லாமல் அந்தச் செருப்புக்குள் நுழைந்தாள். இப்போதுதான் நடை பழகுகிறவளைப்போல் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தாள்.

நானும் செருப்பில்லாமல் வெறும் தரையில் நடப்பது ரொம்ப நாளைக்குப்பிறகு இப்போதுதான். உள்ளங்காலில் நறநறத்த சின்னச் சின்ன மண் துகள்கள்கூட, கண்ணாடித் துண்டுகளாக இருக்குமோ, காலைக் கிழித்துவிடுமோ என்று கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

சிறிது நேரத்துக்குள், அவள் பொறுமை இழந்துவிட்டாள். ‘எனக்கு இந்தச் செருப்பு வேணாம்ப்பா’ என்றாள். ‘ரொம்பப் பெரிசா இருக்கு.’

‘அதுக்காக? வெறும் கால்ல நடப்பியா?’ எனக்குச் சட்டென்று அந்த யோசனை தோன்றியது. ‘அப்பா உன்னை உப்பு மூட்டை தூக்கிக்கட்டுமா?’

‘ஹை!’ என்றாள் அவள் அனிச்சையாக, ‘நிஜமாவா சொல்றே?’

’ஆமா கண்ணு’ என்று குனிந்தேன், ‘ஏறிக்கோ, வீட்டுக்குப் போகலாம்!’

அவள் உற்சாகமாக என் முதுகில் தாவி ஏறினாள். சற்றே சிரமத்துடன் எழுந்து என்னுடைய செருப்பை அணிந்துகொண்டேன், நடக்க ஆரம்பித்தேன்.

இதற்குமுன் அவளை உப்பு மூட்டை தூக்கிச் சென்றது எப்போது என்று எங்கள் இருவருக்குமே நினைவில்லை. சின்ன வயதில் ஆசையாகத் தூக்கியது, வயதாக ஆக இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்வதுகூடக் குறைந்துவிட்டது. ‘இனிமே நீ பிக் கேர்ள், நீயே நடக்கணும்’ என்று பொறுப்பைச் சுமக்கவைத்துவிட்டோம்.

ஆகவே, இந்தத் திடீர் விளையாட்டு எங்கள் இருவருக்குமே இனம் புரியாத பரவசத்தைக் கொடுத்தது. இருபது ப்ளஸ் கிலோ முதுகில் கனத்தபோதும்.

ரோட்டில் எங்களைப் பார்த்தவர்கள் விநோதமாக நினைத்திருப்பார்கள். ‘ஏழெட்டு வயசுப் பொண்ணை முதுகுல தூக்கிட்டுப் போறானே, இவனுக்கென்ன பைத்தியமா?’

நினைத்தால் நினைக்கட்டுமே. அதற்காக ஒவ்வொருவரிடமும் போய் ‘செருப்பு தொலைஞ்சுடுச்சு’ என்று தன்னிலை விளக்கமா கொடுத்துக்கொண்டிருக்கமுடியும்?

ஒருவேளை செருப்பு தொலையாவிட்டாலும்கூட, என் பிள்ளையை நான் உப்பு மூட்டை சுமக்கிறேன்? உனக்கென்ன? சர்த்தான் போய்யா!

சிறிது தொலைவுக்குப்பின் காதருகே கிசுகிசுப்பாக அவள் குரல் கேட்டது, ‘அப்பா, நீ ஏன் எதுவும் பேசமாட்டேங்கறே?’

‘பேசலாமே, நோ ப்ராப்ளம்’ என்றேன். ‘நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’

‘அப்பா, உனக்கு ஏன் இப்டி மூச்சுவாங்குது?’ என்றாள் அவள், ‘நான் ரொம்ப கனமா இருக்கேனா? கீழே இறங்கிடட்டுமா?’

‘சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, அப்பாவுக்குப் பெரிய தொப்பை இருக்குல்ல, அதான் மூச்சு வாங்குது!’

‘தொப்பையைக் குறைக்கதானே நீ பார்க்ல வாக்கிங் போறே?’ அவள் பெரிதாகச் சிரித்தாள், ‘நீ வாக்கிங்ன்னு டெய்லி பார்க்குக்கு வர்றதால எனக்கும் ஜாலி, உன்னோட வந்து விளையாடலாம்.’

‘ஆமா, ஆனா செருப்பைத் தொலைக்கக்கூடாது, அம்மா திட்டுவாங்க.’

‘சரிப்பா, இனிமே தொலைக்கலை’ என்றவள் மறுநிமிடம் அதை மறந்து, ‘அப்பா, உன் தொப்பை குறைஞ்சுட்டா நீ டெய்லி வாக்கிங் போகமாட்டியா? என்னையும் பார்க்குக்குக் கூட்டிகிட்டு வரமாட்டியா?’

‘என் தொப்பை குறையறதுக்குள்ள நீ பிக் கேர்ள் ஆகிடுவேம்மா, அப்போ உனக்குப் பார்க்ல்லாம் தேவைப்படாது.’

அவளுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின், ‘நிலா சூப்பரா இருக்குப்பா’ என்றாள் மிக மெல்லிய குரலில்.

நான் மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் தொற்றியிருந்த அவளுடைய கைகள் சுவாசத்தை இறுக்கின. மெதுவாக நடந்தபோதும் மூச்சிரைத்தது, அதற்கு நடுவிலும், நிலா அழகாகதான் இருந்தது.

ஐந்து நிமிட நடையில், எங்கள் வீடு நெருங்கிவிட்டது. ‘நான் இறங்கிக்கறேன்ப்பா’ என்றாள் அவள்.

’ஏன்ம்மா?’

‘நான் அம்மாகிட்டே போகணும். செருப்பு தொலைஞ்சுடுச்சுன்னு சொல்லணும். இறக்கி விடுப்பா, ப்ளீஸ்!’

இது என்னமாதிரி மனோநிலை என்று புரியாமல், மெல்லக் குனிந்து அவளைக் கீழே இறக்கிவிட்டேன். வெற்றுப் பாதங்களைப் பற்றித் துளி கவலையில்லாமல் குடுகுடுவென்று வீட்டை நோக்கி ஓடினாள். அந்த வேகம், எனக்குப் பொறாமை தந்தது.

நிமிர்ந்து நிலாவைப் பார்த்தபடி நடந்தேன். வீட்டுக்குள் உற்சாகமான பேச்சுக்குரல் கேட்டது. ’பரவாயில்லை விடு கண்ணு, அது பழைய செருப்புதான், நாளைக்குக் கடைக்குப் போய்க் குட்டிக்குப் புதுச் செருப்பு வாங்கலாமா?’

***

என். சொக்கன் …

23 11 2012

சென்ற வாரம் சென்னையில் வாங்கி வந்த அழ. வள்ளியப்பா பாடல் சிடியைக் குழந்தைகள் மிகவும் ரசித்துக் கேட்கிறார்கள், ஒரு நாள் தவறாமல்.

இத்தனைக்கும், அவை ‘மாடர்ன்’கூட இல்லை. எப்போதோ எழுதப்பட்ட எளிய பாடல்கள், கதைகள்தாம். அழ. வள்ளியப்பா பாடல்களில் பெரும்பாலும் கிராமத்து, சிறு நகரக் குழந்தைகளே அதிகம் வருவார்கள், ’ஆகாயக் கப்பல்’, ‘வந்தனன்’மாதிரி அருகிவிட்ட வார்த்தைகளும், கந்தன், குப்பன்மாதிரி நாமே மறந்துவிட்ட பெயர்களும், ’அறுபது ரூபாய் மரக்குதிரை’மாதிரி அன்றைய விலைகளும் அடிக்கடி தட்டுப்படும்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, அவற்றில் இருக்கும் சந்த நயமும், லகுத்தன்மையும் என்றைக்கும் குழந்தைகளை ஈர்க்கும். ஆங்கில ரைம்ஸ், அந்த ஊர் Folk Tales, டிஸ்னியால் உருவாக்கப்பட்ட (அ) பிரபலப்படுத்தப்பட்ட Modern Folk Tales அளவுக்கு அழ. வள்ளியப்பா, கவிமணி, வாண்டுமாமா, பூவண்ணன், ரேவதி, அ. செல்வகணபதி போன்றோர் நம்மால் கொண்டாடப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

அழ. வள்ளியப்பா பாடல்களை நாங்கள் எங்கே தேடுவது என்று கேட்காதீர்கள். அவரது பெரும்பாலான புத்தகங்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. எல்லாவற்றையும் டவுன்லோட் செய்ய நேரம் இல்லாவிட்டாலும், ‘மலரும் உள்ளம்’ இரண்டு பாகங்களைமட்டுமாவது கொத்திக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்: http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-35.htm

அது நிற்க. நான் சொல்லவந்த விஷயம் வேறு. அழ. வள்ளியப்பா பாடல்களை ஒருவாரம் தொடர்ந்து கேட்டபடியால், இன்றைக்குக் குழந்தைகள் இருவருக்கும் எதுகை, மோனை, இயைபு சமாசாரங்களை அறிமுகப்படுத்தினேன். அவர் பாட்டுகளில் இருந்தே அவற்றுக்கு உதாரணம் காட்டினேன். அவர்கள் பள்ளியில் படித்த Rhyming Words பாடத்தை நினைவுபடுத்தித் தொடர்பு உண்டாக்கினேன்.

நான் எதிர்பார்த்ததுபோலவே, அவர்கள் இதைச் சட்டென்று பிடித்துக்கொண்டுவிட்டார்கள், விதவிதமான உதாரணங்களை அடுக்கினார்கள், இன்றைய காலை டிஃபனான தோசையை எடுத்துக்கொண்டு, அழ. வள்ளியப்பா அடிக்கடி பயன்படுத்திய அதே மெட்டில் நாங்கள் நால்வரும் சேர்ந்து ஒரு சுமாரான பாட்டுக் ‘கட்டினோம்’.

குட்டிக் குட்டி தோசை,

….குண்டு குண்டு தோசை,

வட்ட வட்டமாக அம்மா

….வார்த்துத் தந்த தோசை,

அட்டகாசம், அற்புதம்,

….ஆசையாகத் தின்னலாம்,

தட்டு காலி ஆனதும்

….தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம்!

இனி ஒவ்வொரு சாப்பாட்டு வேளையும் இட்லி, சப்பாத்தி, சட்னி, சாம்பாருக்கெல்லாம் புதுப்புதுப் பாட்டுகளை உருவாக்கலாம் என்று மகள்கள் உறுதியளித்திருக்கின்றனர். ஜாலி ஜாலி!

***

என். சொக்கன் …

23 11 2012

பின்குறிப்புகள்:

1. மேற்சொன்ன சிடி ‘அபிராமி ஆடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பு. ‘செல்லமே செல்லம்’ பாகம் 3, 4, 5 என்று வாங்கலாம், விலை தலா ரூ 99/-

2. இந்த சிடிகளில் அழ. வள்ளியப்பா பெயர் குறிப்பிடப்பட்டிருக்காது. ஆனால் எழுதியது அவர்தான். நம்பி வாங்குங்கள், நான் கேரன்டி 🙂

3. இதே ‘செல்லமே செல்லம்’ பாகம் 1, 2வும் நல்ல தயாரிப்புகள்தாம். ஆனால் அவற்றில் வரும் பாடல்களை எழுதியது அழ. வள்ளியப்பா இல்லை

’Small Talk’ எனப்படும் சம்பிரதாயப் பேச்சுகள் என்றால் எனக்கு ரொம்ப அலர்ஜி.

உதாரணமாக, ஒரு நிகழ்ச்சியில் யாரோ ஒரு புதியவரைச் சந்திக்கிறேன். பொது நண்பரோ, உறவினரோ எனக்கு அவரை அறிமுகப்படுத்திவைக்கிறார். ஹலோ சொல்லிக் கை குலுக்குகிறோம். அதன்பிறகு?

அந்த நபர் தானாகத் தொடர்ந்து ஏதாவது பேசினால் உண்டு. இல்லாவிட்டால் நான் பேந்தப்பேந்த விழித்துக்கொண்டு பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பேன். ஒரு மணி நேரம் ஆனாலும் என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வராது.

ஆச்சர்யமான விஷயம், இதெல்லாம் புதியவர்களிடம்மட்டும்தான். ஏற்கெனவே பழகிய நபர்களிடம் வாய் ஓயாமல் பேசுகிறவன் நான்.

பெரும்பாலும் இந்தப் பிரச்னை திருமண விழாக்களிலும், பர்த்டே பார்ட்டிகளிலும் அதிகம். நிறைய புதியவர்களைச் சந்திப்பேன். அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாது. யாராவது என்னைக் கிள்ளி எடுத்து வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டால் பரவாயில்லை எனத் தோன்றும்.

எதற்கு அவ்ளோ கஷ்டம்? கையில் உள்ள ஃபோனில் ஈமெயில், ட்விட்டர் படிக்க ஆரம்பித்துவிடலாமே?

செய்யலாம். அது அவர்களை அவமானப்படுத்துவதுபோல் ஆகிவிடுமோ என்று நினைப்பேன். ஆகவே, அசட்டுச் சிரிப்பு, ப்ளஸ் தூரப் பார்வை, ஆனால் பேச்சுமட்டும் வராது.

இந்த விஷயத்தில் என் மனைவி எனக்கு நேர் எதிர். புதிதாகச் சந்திக்கும் யாரிடமும் தொடர்ந்து பேசுவதற்கு ஏதோ ஒரு பொதுப் புள்ளி அவருக்கு உடனே கிடைத்துவிடும். அல்லது, அதைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்.

அந்த அக்கறையோ முனைப்போ எனக்குச் சுத்தமாகக் கிடையாது. ’தயவுசெய்து என்னைத் தனியே விடுங்கள், கையில் ஒரு புத்தகத்தைக் கொடுங்கள், அதன்பிறகு என்னால் உங்களுக்கு எந்தச் சிரமமும் வராது’ என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்ளவே விரும்புவேன்.

தனிப்பட்ட சந்திப்புகளில்மட்டுமல்ல, அலுவலகத்திலும் நான் இப்படிதான். 20 மாணவர்களுக்குப் பதினைந்து நாள் ட்ரெய்னிங் எடுத்திருப்பேன், ஆனால் 15 * 8 = 120 மணி நேரத்தில் பாடத்துக்கு வெளியே நான் அவர்களிடம் பேசியது ‘ஹலோ’, ‘குட் மார்னிங், ‘ஸீ யு டுமாரோ’ என்று ஆறே வார்த்தைகளாகதான் இருக்கும்.

இப்படிதான் ஒருமுறை, எங்கள் அலுவலகத்துக்குச் சில விருந்தாளிகள் வந்திருந்தனர். எல்லாரும் ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பிரதிநிதிகள். அவர்களுடன் இணைந்து நாங்கள் ஒரு ப்ராஜெக்டில் வேலை செய்யத் திட்டம்.

எங்கள் பாஸ் அவர்களை வரவேற்றார். எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். கை குலுக்கினோம். ‘நீங்க பேசிகிட்டிருங்க, இதோ வந்துடறேன்’ என்று வெளியேறிவிட்டார்.

இதைச் சற்றும் எதிர்பார்த்திராததால், நான் திகைத்துப்போனேன். ‘இவர்களுடன் நான் என்னத்தைப் பேசுவது? இந்தக் கம்பெனியைப்பற்றி எனக்கு ஒரு விவரமும் தெரியாதே!’

டிவி மெகாசீரியல்களில் வருவதுபோல, ‘காபி, டீ வேணுமா?’ என்று பேச்சை இழுக்கலாமா? ‘உங்க ஊர்ல மழை அதிகமோ?’ என்று கிண்டலாமா?

ம்ஹூம், வாய்ப்பில்லை. காபி, டீ, தண்ணீர், பிஸ்கோத்துகள் எல்லாம் ஏற்கெனவே பரிமாறப்பட்டுவிட்டன. இவர்களும் எங்களைப்போல் பெங்களூர்வாசிகள்தான். ஆகவே, வானிலை விசாரிப்புகளுக்கு வாய்ப்பில்லை.

இருக்கிற தக்கனூண்டு மூளையைப் பயங்கரமாகக் கசக்கியபடி யோசித்தேன். இவர்களுடன் என்ன பேசுவது? இந்தக் கம்பெனியைப்பற்றி எனக்கு என்ன தெரியும்?

ரொம்ப யோசித்தபிறகு, ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. நான் வழக்கமாக நடைபயிற்சிக்குச் செல்லும் பாதையில் இவர்களுடைய கம்பெனியின் பிரமாண்டமான அலுவலகம் உள்ளது. அதை எட்டத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அதை வைத்து ஏதாவது ஒப்பேற்றவேண்டியதுதான்.

’நான் வாக்கிங் போற வழியிலதான் உங்க ஆஃபீஸ் இருக்கு’ என்று பேச ஆரம்பித்தேன், ‘அங்கே இருக்கற லிஃப்ட் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.’

‘என்னது? லிஃப்டா?’ அவர்கள் திகைப்போடு கேட்டார்கள்.

‘ஆமாங்க, ரோட்லேர்ந்து பார்க்கும்போது அந்த லிஃப்ட் ரொம்ப அழகா இருக்கும், மேலே மொட்டை மாடியிலேர்ந்து கீழே ஒரு பெரிய ரிப்பனைத் தொங்கவிட்டமாதிரி அழகா வண்ணம் தீட்டி, வரிசையா உங்க கம்பெனி Employeesஓட சிரிச்ச முகங்களையே வெச்சு டிஸைன் செஞ்சிருப்பாங்க. லிஃப்ட்தானேன்னு அலட்சியமா விடாம அந்த இடத்தையும் க்ரியேட்டிவ்வா பயன்படுத்தியிருப்பாங்க. ரொம்பப் பிரமாதமான ஐடியா!’

அப்போது அவர்களுடைய ரியாக்‌ஷனை நீங்கள் பார்த்திருக்கவேண்டும்!

***

என். சொக்கன் …

12 11 2012

’கங்னம் ஸ்டைல்’ என்று ஒரு வீடியோ / நடனம் சமீபத்தில் உலகப் பிரபலமாகிவிட்டதை அறிந்திருப்பீர்கள்.

நான் அந்தப் பெயரை ட்விட்டரில் கேள்விப்பட்டதோடு சரி. வீடியோவாகப் பார்த்ததோ, ஆடியோவாகக் கேட்டதோ இல்லை. அதற்கு ஆர்வமும் இல்லை.

உலகப் புகழ் பெற்ற லோக்கல் தயாரிப்பான ‘வொய் திஸ் கொலவெறி’யைக்கூட, ஒரே ஒருமுறை ஆடியோவாகக் கேட்டிருக்கிறேன், அதுவும் நண்பர் ஒருவர் தன்னுடைய ஃபோட்டோ ஆல்பத்தின் பின்னணி இசையாக அதை ஒலிக்கவிட்டிருந்ததால். ‘கொலவெறி’ வீடியோவை நான் இதுவரை பார்த்ததில்லை. Again, Same Reason: ஆர்வம் இல்லை.

அது நிற்க. நேற்று ஒரு விழாவில் கலந்துகொண்டேன். அதில் கங்னம் ஸ்டைல் வீடியோவை ஒளிபரப்பினார்கள். முதன்முறையாகப் பார்த்தேன், ரசித்தேன்.

ஆனால் இந்தப் பாட்டை இதற்குமுன் எங்கேயோ கேட்டிருக்கிறேனே என்று தோன்றிக்கொண்டே இருந்தது. விழா முடிந்து வீடு வரும் வழியில் பஸ்ஸுக்குக் காத்திருக்கையில் ஞாபகம் வந்துவிட்டது.

போன வாரம் பெங்களூருவில் ஒரு Walkathan நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விழாவின் மேடையில்தான் இந்தப் பாட்டு (ஆடியோமட்டும்) திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது.

இதில் காமெடியான விஷயம், அப்போது ‘கங்னம் ஸ்டைல்’ என்பது என் காதில் தெளிவாகக் கேட்கவில்லை. ‘கன்னடம் ஸ்டைல்’ என்றுதான் ஒலித்தது. விழா நடைபெற்றது பெங்களூரில் என்பதால், யாரோ உள்ளூர்ப் பாடகர் ‘இதுதாண்டா எங்க கன்னடர்களின் ஸ்டைல்’ என்று ஆங்கிலத்தில் ’வாழ்த்தி’ப் பாடியிருக்கிறார்போல என்று ஊகித்துவிட்டேன்.

சிரிக்காதீர்கள். என்னைமாதிரி ஆன்லைனில் இருந்தும் பாறைக்கடியில் வாழ்பவர்கள் உலகம்முழுக்க உண்டு :>

***

என். சொக்கன் …
12 11 2012

அலுவலக நண்பர் ஒருவர். எப்போதும் உற்சாகமாக இருக்கிறவர்தான். நேற்று அவர் முகத்தில் அதீத குழப்பம் தெரிந்தது. ‘என்னாச்சுங்க?’ என்று விசாரித்தேன். ‘இது Performance Appraisal சீஸனாச்சே, அந்த டென்ஷனா?’

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை’ என்றார் அவர். ‘நாளைக்கு என் பொண்ணு ஸ்கூல்ல Parents : Teacher Meeting.’

‘ஸோ?’

‘என் பொண்ணைப்பத்தி உங்களுக்குத் தெரியாது. சரியான வாலு. எப்பப்பார் குறும்பு, எதையாவது போட்டு உடைக்கறது, டெய்லி யார்கூடயாவது சண்டை போட்டு சட்டையைக் கிழிச்சு முகத்தைப் பிராண்டிவெக்காம வீட்டுக்கு வரமாட்டா, போதாக்குறைக்கு, எந்தப் பாடத்துலயும் உருப்படியா மார்க் வாங்கறதும் கிடையாது. அதனால, ஒவ்வொரு பேரன்ட்ஸ் மீட்டிங்லயும் இதே கதைதான், டீச்சர் எங்களை வண்டைவண்டையாத் திட்டுவாங்க, முகத்தைக் கொண்டுபோய் எங்கே வெச்சுக்கறதுன்னு தெரியாது.’

‘ஏங்க, யுகேஜி படிக்கற பொண்ணு இப்படி இருக்கறது சகஜம்தானே.’

‘அதெல்லாம் இல்லைங்க, அதே க்ளாஸ்ல மத்த பொண்ணுங்க, பசங்கல்லாம் ஒழுங்காப் படிக்கலியா, இவளால எங்களுக்குதான் கெட்ட பேரு’ என்றார் அவர். ‘நாளைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங்ன்னு போன வாரம் லெட்டர் வந்ததுலேர்ந்தே இந்த டென்ஷன்தான். பேசாம இந்தவாட்டி ஆஃபீஸ்ல அர்ஜென்ட் மீட்டிங்ன்னு பொய் சொல்லி நைஸா எஸ்கேப் ஆகிடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்.’

****

அதே நாள் மாலை, இன்னொரு நண்பரை ஒரு விழாவில் சந்தித்தேன். சம்பிரதாய அரட்டையின் நடுவே, ‘உங்க பையனை ஸ்கூல்ல சேர்த்தாச்சா?’ என்று கேட்டேன்.

‘அடுத்த வருஷம்தான்’ என்றார் அவர். ‘சீட் வாங்கியாச்சு.’

‘எங்கே?’

ஒரு மிகப் பிரபலமான பள்ளியின் பெயரைச் சொன்னார் அவர். ‘அங்கே அவனுக்கு சீட் கிடைச்சது, டொனேஷன் எவ்ளோ தெரியுமா? நாலே கால் லட்சம்.’

‘யம்மாடி!’ நிஜமான அதிர்ச்சியுடன் கேட்டேன். ‘நிஜமா அவ்ளோ பணம் கொடுத்தா சீட் வாங்கியிருக்கீங்க?’

’சேச்சே’ என்று அவர் பெரிதாகத் தலையாட்டினார். ‘I can afford it, But not interested. வேற ஒரு ஆவரேஜ் ஸ்கூல்லதான் சீட் வாங்கியிருக்கேன்.’

‘அப்படியா? ஆச்சர்யமா இருக்கே, அந்த ஸ்கூல்ல சீட் கிடைக்கணும்ன்னு பலர் ஆணிப் படுக்கையில தலைகீழா நின்னு தவம் இருக்கறதாக் கேள்விப்பட்டிருக்கேன், அப்பேர்ப்பட்ட இடத்துல சீட் கிடைச்சும், கைல பணம் இருந்தும் வேணாம்ன்னு விட்டுட்டீங்களே, ஏன்?’

அவர் சற்றும் யோசிக்காமல் சொன்னார், ‘அவ்ளோ பணம் கொடுத்து, கடைசியில பய படிக்காம விட்டுட்டான்னா? Waste of money’, அரை விநாடி இடைவெளிவிட்டு, ‘என் புள்ள என்னைமாதிரிதானே இருப்பான்?’

***

என். சொக்கன் …

10 11 2012

இன்று ட்விட்டரில் ஒரு விவாதம். வழக்கம்போல் எங்கேயோ தொடங்கி எங்கேயோ சென்று நின்றது!

அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாட்டைச் சிலாகித்து நான் எழுதினேன். நண்பர் @NattAnu அதற்குப் பதில் சொல்லும்போது, ‘இந்தப் பாட்டில் ஓர் இடத்தில் சின்னப் பெண் என்கிற வார்த்தை வரும், அதை சித்ரா ‘Sinna’ப் பெண் என்று பாடியிருப்பார், அது ஏன்? ‘Chinna’ப் பெண் என்பதுதானே சரி?’ என்று கேட்டார்.

நான் கொஞ்சமும் யோசிக்காமல் ‘Sinna’ என்பதும் சரிதான் என்று பதில் சொல்லிவிட்டேன்.

நண்பர் @elavasam அதை ஏற்கவில்லை. இங்கே ‘Chinna’தான் சரி என்றார்.

அப்போதும் எனக்குக் குழப்பம் தீரவில்லை. காரணம் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்ற பாரதியார் பாட்டை S, Ch கலந்த உச்சரிப்பில் பலர் பாடிக் கேட்டிருக்கிறேன் எது சரி?

இதேபோல், ‘சிங்காரச் சென்னை’யில் சிங்காரத்துக்கு S, ஆனால் சென்னைக்கு Ch. இது சரிதானா? ஆம் எனில் எப்படி சாத்தியம்?

இப்படியே விவாதம் நீண்டது, @psankar @mohandoss @anoosrini என்று பலர் பங்கேற்றார்கள். நிறைய மேற்கோள்கள் / தொல்காப்பியச் சூத்திரங்கள் காட்டப்பட்டன. ஆனால் அவை எல்லாச் சாத்தியங்களையும் தொட்டுச் சென்றதாக எனக்குத் தோன்றவில்லை. குழப்பம் நீடித்தது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், S, Ch இரண்டுமே வெவ்வேறு சூழ்நிலைகளில் பொருத்தம் என்றுதான் நாங்கள் யோசித்தோம், ஆனால் எப்போது எந்த உச்சரிப்பு என்று தெரியவில்லை.

அப்போது நண்பர் @madhankarky ஒரு தனிச்செய்தி அனுப்பி ஓர் எளிய விதிமுறையைச் சொன்னார்:

  • ‘ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் தொடக்கத்தில் வந்தால், அது ‘Cha’ என்று உச்சரிக்கப்படும் (Rule 1)
  • ’ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் மையத்தில் வந்தால் அதற்கு முன்னால் இருக்கும் எழுத்து என்ன என்று பார்க்கவேண்டும்:
  • ‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இருந்தால், அதை ‘Cha’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 2)
  • ‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இல்லாவிட்டால் அதை ‘Sa’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 3)

உதாரணமாக:

சந்திரன் வந்தான், யாரோ பாட்டுப் பாடினார்கள், உச்சரிப்பு சரியாக இருக்குமா என்று அச்சத்துடன் பார்த்தான், அட்சர சுத்தமான உச்சரிப்பைக் கேட்டு அசந்துபோனான்

இதில்:

  • சந்திரன் = Chandiran (Rule 1)
  • உச்சரிப்பு = Uchcharippu (Rule 2)
  • சரியாக = Chariyaaga (Rule 1)
  • அச்சத்துடன் = Achchaththudan (Rule 2)
  • அட்சர = Atchara (Rule 2)
  • சுத்தமான = Chuthamaana (Rule 1)
  • அசந்து = Asanthu (Rule 3)

இந்த மூன்று ரூல்களில் எல்லாச் சாத்தியமும் அடங்கிவிடுமா? தெரியவில்லை. சில பெயர்களுக்கும் (உதாரணம்: Senthil), வடமொழி / வேற்று மொழிகளில் இருந்து இங்கே வந்த சொற்களுக்கும் (உதாரணம்: சிங்கம்) இவை பொருந்தாமல் போகலாம். இன்னும் சில விதிவிலக்குகளும் இருக்கலாம். இவற்றைத் தவிர்த்துப் பெரும்பாலான சொற்களுக்கு இந்த மூன்று விதிமுறைகள் போதும் என்று தோன்றுகிறது.

அதுமட்டுமில்லை, இதே விதிமுறையை க (Ka, Ga), த (Tha, Dha), ட (Ta, Da) போன்ற குடும்பங்களுக்கும் நீடிக்கமுடியும் என்றார் @madhankarky.

இதுகுறித்து உங்கள் கருத்துகளையும் இங்கே சேருங்கள். அதாவது, CheerungaL, Not SeerungaL 🙂

***

என். சொக்கன் …

08 11 2012

இன்றைக்கு ராமாயணத்தில் பெயர்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அநேகமாக எல்லாப் பெயர்களுக்குப் பின்னாலும் வெவ்வேறு காரணங்கள், கதைகள்.

தசரதன் மகன் என்பதால் ராமனுக்கு ‘தாசரதி’ என்று ஒரு பெயர் உண்டு.

லட்சுமணனும் அதே தசரதன் மகன்தானே? அவனுக்கும் ஒரு unique பெயர் வேண்டாமா?

சுமித்திரையின் மகன், ஆகவே லட்சுமணனுக்கு ‘சௌமித்ரி’ என்று பெயர்.

அனுமன் காற்றின் மைந்தன். காற்றுக்கு ‘மாருதம்’ என்று பெயர் உண்டு. அதன் மகன் என்பதால்தான் அனுமனை ‘மாருதி’ என்று அழைக்கிறோம்.

பெண்களுக்கும் இதே கதைதான். கேகயன் மகள், கைகேயி. ஜனகன் மகள் ஜானகி.

இதே பாணியில் பெயர் சூட்டல் அரக்கர் பக்கமும் உண்டு. இராவணன் மகன் இந்திரஜித்துக்கு ’இராவணி’ என்று ஒரு பெயர்.

இந்திரஜித் என்பதே காரணப் பெயர்தான். இந்திரனை ஜெயித்தவன் என்பதால் அப்படிப் பெயர் சூட்டினார்கள். அவனது இயற்பெயர் மேகநாதன்.

அட, அதுவும் காரணப்பெயர். பிறந்தவுடன் அவன் மேகத்தில் இடிபோல ஒலி எழுப்பிக் கத்த, அப்படிப் பெயர் சூட்டிவிட்டார்கள்.

அந்த மேகநாதனின் சித்தப்பா கும்பகர்ணன். இது சினையாகுபெயர், அதாவது சினை (உடல் உறுப்பு) ஒன்று (கும்பம் : குடம் போன்ற கர்ணம் : காதுகள்) அதைக் கொண்டிருக்கும் நபருக்கே பெயராகி வருவது.

‘மகளிர் மட்டும்’ மேனேஜர் நாசரை நினைவிருக்கும். அவருக்குப் பெண்கள் ‘மூக்கன்’ என்று பெயர் சூட்டுவது இப்படிதான். இதேமாதிரி உடல் உறுப்புகள் / குறைபாடுகளை மையமாக வைத்துச் சூட்டப்படுகிற பெயர்கள் நிறைய. பெரும்பாலும் கேலி நோக்கத்துடன்.

இவைதவிர, ஊர் பெயரைச் சூட்டுவதும் உண்டு. வாழப்பாடியார், வீரபாண்டியார் முதலான அரசியல் பெயர்களும், கரகாட்ட ராமராஜன் ‘சேந்தம்பட்டியாரே’ என்று செல்லமாக அழைக்கப்படுவதும் இந்த வகைதான்.

எனக்கு ராமாயண உதாரணமேதான் வேண்டும் என்றால், அந்த வகை பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் நிறைய இருக்கின்றன. கோசல தேசத்து அரசி கோசலை. மிதிலையின் இளவரசி மைதிலி.

கோசலை கணவன், மைதிலியின் மாமனார் தசரதனுக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது?

4 மெயின் திசைகள், 4 இடைத்திசைகள் மேலே, கீழே என ஒரே நேரத்தில் பத்து திசைகளிலும் அதிவேகமாக ஓடிச் சென்று எதிரிகளைத் தாக்கக்கூடிய ரதம் கொண்டவன் அவன். ஆகவே, தச(10)ரதன்.

ராமாயணத்துக்கு வெளியேயும் இதுமாதிரி அழகிய காரணப் பெயர்கள் ஏராளம். என் ஃபேவரிட், மால்மருகன்.

சும்மா முருகா, மால்மருகா என ரைமிங்குக்காகச் சூட்டிய பெயர் அல்ல அது. கொஞ்சம் பிரித்துப் படித்தால் அர்த்தம் தெளிவாகப் புரியும்.

முருகனின் மாமன் விஷ்ணு, அதாவது (திரு)மால். ஆகவே, முருகனை நாம் ‘மால் மருமகன்’ என்று சொல்லலாம்.

தமிழில் மருமகனைக் குறிக்கும் இன்னோர் அழகிய சொல், மருகன். அதேபோல் மருமகளுக்கு மருகி.

அந்த விதிப்படி, முருகன், மால்மருகன். சரிதானே?

’முருகன்’ என்பதும் காரணப் பெயர்தான். ’முருகு’ என்றால் அழகு, ஆகவே அழகன் முருகன்!

இதுமட்டுமில்லை, அநேகமாக முருகனின் எல்லாப் பெயர்களுமே காரணப் பெயர்களே. உதாரணமாக, சரவணன் (அந்தப் பெயர் கொண்ட ஒரு பொய்கையில் பிறந்தவன்), சிவக்குமார் (சிவனின் மைந்தன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்).

இப்படிக் காரணத்துடன் பெயர் சூட்டும் அழகான கலாசாரத்தை நாம் நடுவில் எங்கேயோ, எப்படியோ இழந்துவிட்டோம்.

***

என். சொக்கன் …

07 11 2012

அன்றைய போர்களில் தலைவர்கள் தேரில் சென்றால், கூடவே சேமத்தேர்’ என்று இன்னும் சில தேர்களும் வருமாம். எதற்கு?

தலைவர் தன் தேர் உடைந்தால் தரையில் நின்று போரிடமுடியாது, ரிப்பேர் செய்யும்வரை சண்டையை Pause செய்யவும் முடியாது, சட்டென ஒரு சேமத்தேரில் ஏறிப் போரைத் தொடர்வார்

உதாரணமாக, ‘சேமத்தேர் மிசைப் போத ஏனைய பல் படைக் கலமும் செறிந்து’ என்று கந்தபுராணத்தில் வரும்!

ஆக, சேமத்தேர் என்பது, இப்போது நம் பைக், கார் டயர் பஞ்சரானால் மாற்று ஏற்பாடாக ஸ்டெப்னி டயர் இருப்பதுபோல, ஸ்டெப்னி தேர்!

என்ன? ‘ஸ்டெப்னி’ என்றால் ‘வேறு’ அர்த்தம் உண்டே என்று யோசிக்கிறீர்களா?

அதுவும் உண்மைதான். சேமத்தேருக்கு இன்னொரு தமிழ்ப்பெயர், வைப்புத்தேர்!

தமிழ்ப்பாடம் போரடிக்கும் என்று யார் சொன்னது? 😉

***

என். சொக்கன் …
06 11 2012


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2012
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930