மனம் போன போக்கில்

இன்னொரு மீன்

Posted on: June 5, 2009

ஒற்றை மீன்’ பதிவைப்பற்றி ஒரு நண்பரிடம் ஜிடாக்-கில் பேசிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய சிறுகதை ஒன்றை நினைவுபடுத்தினார்.

உண்மையில் அது சிறுகதை அல்ல, குட்டிக் கதை. தெருவில் எதேச்சையாகப் பார்த்து ஏமாந்த / அதிர்ந்த ஒரு விஷயத்தை டைரியில் கிறுக்கிவைத்தேன். பின்னர் ஆனந்த விகடனில் சின்னஞ்சிறு கதைகள் பிரசுரிக்கப்போகிறோம் என்று அறிவித்தபோது ஒரு கதைபோல மாற்றி எழுதி அனுப்பினேன். உடனடியாகப் பிரசுரமானது.

அதன்பிறகு, அந்தக் கதையை முழுவதுமாக மறந்துவிட்டேன். இந்த நண்பர் அதைக் குறிப்பிட்டபின்னர்தான் ஞாபகப்படுத்திக்கொண்டு திரும்ப எடுத்துப் படித்துப் பார்த்தேன். அந்த எதிர்பாராத வலியை எப்படி மறக்கமுடிந்தது என்று இன்னும் விளங்கவில்லை.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னால் (07 07 2004) எழுதிய அந்தக் கதையை லேசாக இலக்கணப் பிழைகளைமட்டும் திருத்தி இங்கே பதிவு செய்து வைக்கிறேன்:

*****

விஜயராகவனின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பதினைந்து நிமிட நடை தூரம்தான். ஆனால் தினந்தோறும் ஒரே பாதையில் பயணம் செய்யவேண்டியிருப்பது கிட்டத்தட்ட நரகத்துக்குச் சமமான சிரமம் என்று அவனுக்குத் தோன்றியது.

இந்த ‘தினந்தோறும்’ என்கிற வார்த்தைதான் இங்கே முக்கியம் – எத்தனை வளமான சூழலையும் வறட்சியானதாகத் தெரியச் செய்துவிடுகிற சூட்சுமம் அதற்கு உண்டு. பார்த்த காட்சிகளையே திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருப்பதால் மனம் அலுத்துச் சலித்துப்போகிறது, ஏதேனும் ஒரு மாற்றம் தட்டுப்படாதா என்று ஏங்கச்செய்துவிடுகிறது.

அப்படி அவன் ஏங்கிக்கொண்டிருந்தபோதுதான், அவனுடைய பயணப் பாதையில் ஒரு சின்ன மாறுதல், வழியிலிருந்த ஒரு சிறிய கல்யாண மண்டபத்தின் அருகே திடுதிப்பென்று தோன்றிய புதிய கடை. அதன் வாசலில் ஏகப்பட்ட மீன் தொட்டிகளை நிறுத்திவைத்து வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள்.

அந்தப் பிரம்மாண்டமான தொட்டிகளுக்குள் நீந்தி விளையாடும் பல வண்ண மீன்கள் விஜயராகவனின் புதிய பொழுதுபோக்காயின. காலை வெளிச்சத்தில் அவற்றைப் பார்ப்பதற்கும், இரவின் செயற்கை வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிடும் அளவுக்கு விற்பன்னனாகிவிட்டான் அவன்! சோர்ந்திருந்த அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மலர்ச்சியாக இந்த மீன்கள்.

சீக்கிரத்திலேயே விஜயராகவனின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது – மீன்களை அதிக நேரம் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காக, வழக்கமான நேரத்துக்குமுன்பாகவே கிளம்பத்துவங்கினான் அவன். செயற்கை ஆக்ஸிஜனின் தொடர்ந்த முட்டைகளிடையே சுழன்று சுழன்று திரும்பும் அந்த மீன்களுக்கு, செல்லப் பெயர்கள்கூட வைத்துவிட்டான் – அவற்றைப் பார்க்கப்பார்க்க, தன்னை ஒரு சின்னக் குழந்தையாக உணர்ந்தான் விஜயராகவன்.

ஒன்றிரண்டு வாரங்களுக்கு இந்தப் பொழுதுபோக்கு தொடர, திடீரென்று அவனுக்கு ஓர் ஆசை தோன்றியது – யாரோ வளர்க்கும் மீனைப் பார்ப்பதிலேயே இத்தனை சந்தோஷம் என்றால், நாமே ஒரு சில மீன்களை வாங்கி வளர்த்தால் என்ன? வீட்டில் தொட்டி வைத்து மீன் வளர்த்தால் இதய நோய் வருகிற வாய்ப்புகள் குறையும் என்று எங்கோ படித்ததை நினைத்துக்கொண்டான் அவன்.

ஆனால், மீனை எங்கே வாங்குவது? எப்படி வளர்ப்பது? அவனுக்குத் தெரியவில்லை.

‘அதனால் என்ன? வாசல்முழுக்க மீன்களை நிரப்பிவைத்திருக்கிற அந்தக் கடையிலேயே கேட்டால் ஆச்சு!’, என்று சொல்லிக்கொண்டான் அவன்.

அன்று மாலையே, தனது செல்ல மீன்களை ஆசையாகப் பார்வையிட்டபடி அந்தக் கடையினுள் நுழைந்தான் விஜயராகவன்.

உள்ளே புகுந்ததும், குப்பென்று தீர்க்கமான ஒரு வாசனை அவனைத் தாக்கியது. லேசாக மூக்கைத் தடவிக்கொண்டபடி உள்ளே நடந்தான்.

அறையின் மூலையிலிருந்த பெரிய மேஜைக்குப் பின்னால் ஒரு மீசைக்காரன் அமர்ந்திருந்தான். புதியவர்களிடம் சகஜமாகப் பேசும் பழக்கமில்லாத விஜயராகவன் அவனை நெருங்கி, ‘மீன் வேணும்’, என்றான் திணறலாக.

‘எந்த மீன் வேணும் சார்? எவ்ளோ கிலோ?’, என்றபடி கீழ் ட்ரேயிலிருந்து ஒரு மீனை எடுத்து, நடு உடம்பில் வெட்டினான் அவன்.

***

என். சொக்கன் …

05 06 2009

7 Responses to "இன்னொரு மீன்"

>>>அந்த மீன்களுக்கு, செல்லப் பெயர்கள்கூட வைத்துவிட்டான்<<>>ஒரு மீனை எடுத்து, நடு உடம்பில் வெட்டினான்<<>>
ஒரு மீன், அடுத்த மீன், ’இது புதுசு’ல வைட்ட”மீன்”கள்… ”என்ன எல்லோரும் மீன் மீன்னே சொல்லீண்டு போறார்?” #மைக்கேல்மதனகாமராஜன்

remba smell varuthu,pothum intha meen kathai…..(naan vegitarian).

தங்கள் எழுத்து நடை எப்போதுமே என்னை வசீகரிக்கும். மிகச் சொற்பமானவர்களுக்கு மட்டுமே இந்த நடை கைவரப் பெற்றிருக்கிறது. தங்கள் கதையை ஏற்கெனவே நான் படித்திருக்கிறேன். இந்தக் கதையைப் படித்ததும், எங்கள் விகடன் சேர்மன் திரு.எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
அவரது பண்ணையில் அற்புதமான பறவைகள் உண்டு. அபூர்வமான வகைகள் அவை. ஊரிலிருந்து சேர்மனுக்குத் தெரிந்த கிராமத்துப் பெரியவர் ஒருவர் வந்து அந்தப் பண்ணையைச் சுற்றிப் பார்த்திருக்கிறார். அவரிடம் ஒரு கல்ர்ஃபுல்லான குருவி சைஸில் இருந்த அபூர்வ வகைப் பறவை ஒன்றைக் காண்பித்து, ‘இதன் விலை என்ன தெரியுமா? நம்ம ஊர் மதிப்புல ஒண்ணரை லட்சம் ரூபாய்!’ என்றாராம் சேர்மன். அதற்கு அந்தப் பெரியவர், “அடி ஆத்தாடி! அம்புட்டு விலையா? நறுக்கி ஆக்கினா கடைவாய்க்குக் கூட காணாது போலருக்கு… இதுக்கு ஏன் அம்புட்டு வெல?” என்று கேட்டாராம்.

” தங்கள் எழுத்து நடை எப்போதுமே என்னை வசீகரிக்கும். மிகச் சொற்பமானவர்களுக்கு மட்டுமே இந்த நடை கைவரப் பெற்றிருக்கிறது. ”

God Bless you.
anbudan,
srinivasan.

மறைந்த எழுத்தாளர் சொல்வார், மீன் தொட்டி வீட்டில் வைத்து விட்டால் டென்ஷன் குறையும் என்று.

ஆனால் ஒற்றை மீனால் டென்ஷனான நிகழ்வை மிக அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். எழுத்தும் நடையும் அருமை.

இதே போல ஒரு தங்க மீனுக்காக ஏங்கும் சுட்டி பெண்ணை பற்றிய ஈரானிய சினிமா என் பதிவில்

http://butterflysurya.blogspot.com/search/label/White%20Balloon

பார்க்கவும். நிறை / குறை கூறவும்.

நன்றி.

வாழ்த்துகள்.

dYNo, உருப்புடாதது_அணிமா, Kesava Pillai, n.raviprakash, Srinivasan, வண்ணத்துபூச்சியார்,

நன்றி 🙂

//என்ன எல்லோரும் மீன் மீன்னே சொல்லீண்டு போறார்?” #மைக்கேல்மதனகாமராஜன்//

ஆஹா, மறக்கமுடியாத காட்சியாச்சே அது – அந்தப் படம்மட்டும் எத்தினிவாட்டி பார்த்தாலும் சலிக்காது ஒய் 🙂

//remba smell varuthu,pothum intha meen kathai//

சரி சரி, நிறுத்திட்ட்ட்ட்ட்ட்டேன் 🙂

//தங்கள் எழுத்து நடை//

தங்கள் மனம் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி!

//அடி ஆத்தாடி! அம்புட்டு விலையா? நறுக்கி ஆக்கினா கடைவாய்க்குக் கூட காணாது போலருக்கு… இதுக்கு ஏன் அம்புட்டு வெல?//

🙂 மிகச் சுவாரஸ்யமான தகவல்!

//மீன் தொட்டி வீட்டில் வைத்து விட்டால் டென்ஷன் குறையும் என்று. ஆனால் ஒற்றை மீனால் டென்ஷனான நிகழ்வை//

அடுத்தவர்கள் மீனை வைத்தால் டென்ஷன் அதிகரிக்கும் என்று ஒரு வரி சேர்த்துக்கொள்ளுங்கள்!

//இதே போல ஒரு தங்க மீனுக்காக ஏங்கும் சுட்டி பெண்ணை பற்றிய ஈரானிய சினிமா என் பதிவில்//

மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள், நன்றி!

Leave a comment

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 638,057 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2009
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930