மனம் போன போக்கில்

Archive for March 2009

நேற்று வழக்கமான மாலை நடை நேரம். காதில் ஓர் ஆடியோ புத்தகத்தை மாட்டிக்கொண்டு தினசரிப் பாதையில் போய்க்கொண்டிருந்தபோது யாரோ என்னைக் கை தட்டிக் கூப்பிட்டார்கள்.

பெங்களூரில் பொதுவாக யாரும் யாரையும் கை தட்டி அழைக்கிற பழக்கம் இல்லை. ஆகவே கொஞ்சம் ஆச்சர்யத்துடன்தான் திரும்பிப் பார்த்தேன்.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம், நாராசமான போக்குவரத்து ஒலியைத் தடுப்பதற்காகவே காதுகளில் சத்தமாக எம்பி3 திரை போட்டுக்கொள்வது என்னுடைய வழக்கம். அதையும் மீறி இவர் என்னுடைய கவனத்தைக் கவர்ந்துவிட்டார் என்றால், அவரது கை தட்டல் எத்தனை பலமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்.

நாம் திரும்பிப் பார்த்ததும் அவர் வாயெல்லாம் பல், ‘என்ன சார், சௌக்யமா?’ என்றார் மிகுந்த அக்கறையுடன்.

நானும் ear-phoneகளைக் கழற்றிவிட்டு அவரை நலம் விசாரித்தேன், ‘என்னங்க? எதுனா புது புஸ்தகம் வந்திருக்கா?’

அவர் வழக்கம்போல், ‘தெரியலை சார்’ என்றார், ‘நீங்களே உள்ள வந்து பாருங்களேன்’

அந்தக் கடை மிகச் சிறியது. அலுவலகத்தில் நான் அமர்ந்திருக்கும் மேஜைகூட இதைவிடச் சற்றே பெரியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்தச் சிறிய இடத்துக்குள் எப்படியோ நுணுக்கி நுணுக்கி ஏகப்பட்ட செய்தித் தாள்கள், புத்தகக் கட்டுகளை அடுக்கிவைத்திருந்தார் அவர். ஆங்காங்கே பழைய சாக்குப் பைகள், காலி பாட்டில்கள், சப்பையாக நசுங்கிய அட்டைப் பெட்டி(?)கள், ஓரமாக எடை போடும் இயந்திரம் ஒன்று.

இதுமாதிரி கடைகளை நீங்களும் நிறையப் பார்த்திருப்பீர்கள். பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்கு எடுத்துக்கொண்டு கிலோவுக்கு ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ கொடுப்பார்கள். சாக்குப் பை, தராசுடன் வீடு வீடாக வருகிற ‘மொபைல்’ வியாபாரமும் இதில் உண்டு.

இப்படி நாம் எடைக்குப் போடும் ‘பழையது’கள் அதன்பிறகு என்ன ஆகிறது என்று எனக்கு இதுவரை தெரியாது. மறுசுழற்சி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உறுதியாகச் சொல்வதற்கில்லை.

அது சரி. இந்தப் பழைய பேப்பர் கடைக்காரர் எனக்கு எப்படிச் சிநேகிதமானார்? அது ஒரு சுவாரஸ்யமான கதை!

நாங்கள் வழக்கமாக காபிப்பொடி வாங்குகிற இடத்துக்குப் பக்கத்தில்தான் இவருடைய கடை. அந்தச் சிறிய பொந்துக்குள் காகிதக் கட்டுகளுக்குமேல் எப்படியோ காலை மடக்கி அமர்ந்திருப்பார். சில சமயங்களில் அவருடைய மனைவி, மகனும் உள்ளே இருப்பார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் எப்படி உள்ளே போனார்கள், எப்படி வெளியே வருவார்கள் என்று யோசிப்பதற்கே அதிசயமாக இருக்கும்.

அப்போதும், அவர் எனக்கு ஒரு வேடிக்கைக் காட்சியாகதான் தோன்றினாரேதவிர, அவர் கடைக்குள் சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தது கிடையாது. பழைய பேப்பர் கடைக்குள் எனக்கு என்ன வேலை?

பின்னர் ஒருநாள், எதேச்சையாக அவர் கடையைக் கவனித்தபோது பேப்பர் கட்டுகளுக்கு நடுவே பிதுங்கிக்கொண்டிருந்த ஒரு காமிக்ஸ் புத்தகம் என் கண்ணில் பட்டது. சட்டென்று கடைக்குள் பாய்ந்துவிட்டேன்.

நான் ஒரு காமிக்ஸ் பைத்தியம். Archies, Dilbert, Garfield மூன்றும் உயிர். அடுத்த நிலையில் Peanuts, Calvin & Hobbs மற்றும் MAD.

ஏனோ, Super-man, He-man, Hulk ரக ஆக்‌ஷன் காமிக்குகள் எனக்குப் பிடிக்காது. மற்றபடி லேசாக நகைச்சுவை தூவின பொம்மைக் கதைகள் எதுவானாலும் விரும்பிப் படிப்பேன்.

அன்றைக்கு நான் அங்கே பார்த்த காமிக்ஸ் புத்தகம் எது என்று இப்போது நினைவில்லை. ஆனால் அந்தப் பழைய பேப்பர் கடையில் நான் அதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதுமட்டும் உண்மை.

அடுத்த நிமிடம், அதைவிடப் பெரிய ஆச்சர்யம் ஒன்று காத்திருந்தது.

நான் எடுத்த காமிக்ஸ் புத்தகத்தை அந்தக் கடைக்காரரிடம் காண்பித்து, ‘இது என்ன விலை?’ என்று கேட்டேன்.

அவர் என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு, ‘நீங்களே ஏதாவது கொடுங்க சார்’ என்றார்.

வழக்கமாக இதுபோல் சொல்கிறவர்கள்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் எவ்வளவு கொடுத்தாலும் ‘போதாது’ என்பதுபோல் முறைப்பார்கள். அதற்குப் பதிலாக அவர்களே ஒரு விலை சொல்லிவிட்டால் நல்லது என்பது என் கட்சி.

ஆகவே, நான் தொடர்ந்து வற்புறுத்தினேன், ‘பரவாயில்லை, சொல்லுங்க’

அவர் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு ரொம்ப யோசித்தார். பிறகு அவருக்கே நம்பிக்கையில்லாததுபோல் கைகளைக் கட்டிக்கொண்டு, ‘ரெண்டு ரூபா?’ என்றார்.

முதலில் என் காதில் ஏதோ கோளாறு என்றுதான் நினைத்தேன். பின்னே? பெங்களூரில் இரண்டு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?

சாதாரணமாக ஒரு காமிக் புத்தகம் அதன் அளவைப் பொறுத்து பத்து ரூபாயிலிருந்து இருநூறு, முன்னூறு ரூபாய்வரை செல்லும். பழைய புத்தகக் கடையில் வாங்கினால் அதன் விலை ஐம்பது சதவிகிதம்வரை குறையலாம்.

ஆகவே, அவர் சொன்ன ‘இரண்டு ரூபாய்’ விலையை என்னால் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

ஆனால் அவர், என்னுடைய திகைப்பைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார், ’இந்தப் புத்தகத்துக்கு இரண்டு ரூபாய் ஜாஸ்தி’ என்று நான் நினைப்பதாக அவர் எண்ணிவிட்டார். கொஞ்சம் அதட்டினால், ‘எட்டணா கொடுங்க சார் போதும்’ என்று சொல்லியிருப்பார்போல.

ஒருவழியாக நான் சுதாரித்துக்கொண்டு அவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்தேன். முடிந்தவரை குரலைச் சாதாரணமாக வைத்துக்கொண்டு, ‘வேற எதுனா காமிக்ஸ் இருக்கா?’ என்றேன்.

’எனக்குத் தெரியாது சார், நீங்களே பார்த்துக்கோங்க’ என்று அவர் கடையிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

நானும் மிக ஆவலுடன் கடைக்குள் புகுந்து தேடினேன். இரண்டு ரூபாய்க்கு காமிக்ஸ் புத்தகம் என்றால் சும்மாவா?

அந்தக் கடைமுழுக்க வுமன்ஸ் எராவும் இந்தியா டுடேயும்தான் நிறைந்து கிடந்தது. ஆங்காங்கே குமுதம், கல்கி, மங்கையர் மலர், ஒன்றிரண்டு கன்னட இதழ்கள், விமானத்தில் பயணிகளுக்குப் படிக்கத் தரும் Inflight Magazines, தாஜ் குழுமத் தங்குமிடங்களில் விருந்தினர்களுக்குத் தரப்படும் கலாசார இதழெல்லாம்கூடக் கிடைத்தது.

ஆனால், எதுவும் புதிது இல்லை. அரதப் பழசு. அவற்றுக்கு நடுவே என்னுடைய தூசு அலர்ஜியைப் போறுத்துக்கொண்டு ஏதேனும் உருப்படியாகத் தென்படுகிறதா என்று வலை வீசவேண்டியிருந்தது.

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடத் தேடலுக்குப்பிறகு எனக்கு மூன்று காமிக்ஸ் புத்தகங்கள், ஒரு நாவல், இரண்டு குழந்தைக் கதைகள் கிடைத்தன. எல்லாவற்றுக்கும் சேர்த்து அவர் பத்து ரூபாய்மட்டும் வாங்கிக்கொண்டார்.

எனக்கு அவரை ஏமாற்றுகிறோமோ என்று ஒரு குற்ற உணர்ச்சி. கவலையுடன் என் மனைவியிடம் வந்து விஷயத்தைச் சொன்னேன்.

இதுமாதிரி சமாசாரங்களில் அவர் ரொம்பக் கில்லாடி. என் கையிலிருந்த புத்தகங்களை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, ‘இதெல்லாம் சேர்த்தாலும் கால் கிலோ தேறாது’ என்றார்.

‘பழைய புத்தகம் கிலோ அஞ்சு ரூபான்னு வெச்சாலும்கூட, அவருக்கு இது ஒண்ணே கால் ரூபாய்க்குக் கிடைச்சிருக்கும், நீ 12 ரூபாய் கொடுத்திருக்கே, அதுவே ஜாஸ்தி’

என் மனைவியின் லாஜிக் சுத்தமானதுதான். அந்தக் கடைக்காரரைப் பொறுத்தவரை இவை புத்தகங்களே அல்ல, வீசி எறியப்பட்ட காகிதக் குப்பைகள். அவ்வளவுதான். அதற்கு இந்த விலையே அதிகம்.

ஆனால் எனக்கு அவற்றின் நிஜமான மதிப்பு தெரியுமல்லவா? கல்லூரியில் ‘Value Engineering’ பாடமெல்லாம் படித்து மறந்திருக்கிறேனே!

இந்த ஏழு புத்தகங்களை நான் வேறொரு ‘நிஜமான’ பழைய புத்தகக் கடையில் வாங்கியிருந்தால் குறைந்தபட்சம் நூற்றைம்பது ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்திருக்கும். அந்தக் கணக்கில் யோசித்தால், நான் செய்தது மிகப் பெரிய தவறு என்று எனக்கே புரிந்தது.

ஆனால், சரி, தவறு பார்த்தா வாழ்க்கையில் எல்லாம் நடக்கிறது? அதன்பிறகு அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர் என்னைப் பார்த்துப் பல் இளிப்பதும், நான் அவருடைய கடையை ரெய்ட் செய்து சில புத்தகங்களை அடிமாட்டு விலைக்கு அள்ளிவருவதும் தொடர்ந்தது.

ஒவ்வொருமுறையும் நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களுக்கு அவர் நம்பமுடியாத விலைதான் நிர்ணயித்தார். அதிகபட்சம் ஒரு புத்தகத்துக்கு ஒன்றரையிலிருந்து இரண்டரை ரூபாய். அதற்குமேல் மறந்தும் கேட்கமாட்டார்.

இதனால், ஒவ்வொருமுறையும் நான் அவருக்கு அதிகபட்சம் ஐந்து அல்லது பத்து ரூபாய்தான் தரவேண்டியிருக்கும். அதை வாங்கிக்கொள்கிறபோது அவர் முகத்தில் மலர்கிற சிரிப்பைப் பார்க்கவேண்டும் – பத்து ரூபாய்க்கு ஒரு மனிதன் இவ்வளவு சந்தோஷப்படமுடியுமா என்கிற ரகசியம் எனக்கு இதுவரை புரியவில்லை.

அதேசமயம், அவருடைய அறியாமையை நான் எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறேன் என்கிற உறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது. அதனால்தானோ என்னவோ, கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கடைப் பக்கம் போவதைக் குறைத்துக்கொண்டுவிட்டேன்.

இத்தனைக்கும், தினசரி அதே பாதையில்தான் நடந்து செல்கிறேன். நேற்று அவர் என்னைக் கவனித்துக் கை தட்டி அழைக்கும்வரை, அவரையோ அவரது கடையையோ எனக்குச் சுத்தமாக நினைவில்லாமல் போய்விட்டது.

சில நண்பர்களை ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கும்போதும், அந்த இடைவெளி தெரியாது. சென்றமுறை விட்ட அதே இடத்திலிருந்து பேச்சைத் தொடரமுடியும்.

அதுபோல, நேற்றைக்கும் நான் பழைய உற்சாகத்துடன் அவருடைய காகிதக் கட்டுகளுக்குள் புகுந்து புறப்பட்டேன். சில நாவல்கள், நான்கு காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன.

இந்தமுறை, நான் அவரிடம் விலை கேட்கவில்லை. வழக்கமாக அவர் ஒரு புத்தகத்துக்கு எவ்வளவு தொகை நிர்ணயிப்பார் என்பது எனக்குத் தெரியும். குத்துமதிப்பாக அதைப்போல் இரண்டு மடங்கு கணக்கிட்டு நானே கொடுத்துவிட்டேன். ஏதோ, Inflation காலத்தில் அவருக்கு என்னால் முடிந்த உதவி, என் குற்றவுணர்ச்சிக்கும் கொஞ்சம் மருந்து.

அவர் எப்போதும்போல் முகம் மலர்ந்து சிரித்தார். ‘அடிக்கடி வந்து போங்க சார்’ என்றார்.

கண்டிப்பாக வருவேன். தினமும் இந்த வழியாகதானே நடக்கப்போகிறேன்?

***

என். சொக்கன் …

31 03 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நாங்கள் ஹைதராபாதில் தங்கி வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரம். அப்போது எங்களுடன் புதுச் சிநேகிதமாகியிருந்த ஒருவன், ஹரி (வழக்கம்போல், நிஜப் பெயரை மாற்றியிருக்கிறேன்).

ஹரிக்குச் சொந்த ஊர் கட்ப்பாடி. வேலூர் அருகில் உள்ள ‘காட்பாடி’ இல்லை. ஆங்கிலத்தில் அதே ஸ்பெல்லிங் (Katpadi), ஆனால் இது வேறு ஊர்.

கர்நாடகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் குக்கிராமமாகிய கட்ப்பாடியை ஹரிக்கு அதிகம் நினைவில்லை. காரணம், அவன் பிறந்து சில  மாதங்களுக்குள் அவனுடைய குடும்பம் மொத்தமும் சென்னைக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்துவிட்டது.

திருநெல்வேலியில் பொறியியல் படித்த ஹரி, எங்களுடன் ஹைதராபாதில் வேலைக்குச் சேர்ந்தான். ஆரம்பத்தில் வெளியே வேறொரு கோஷ்டியுடன் தங்கியிருந்தவன், பிறகு எங்களோடு ஐக்கியமாகிவிட்டான்.

அப்போதும், எங்களுக்கு ஹரியின் காதல் கதை தெரியாது. பயல் வாயைத் திறக்கவில்லை. செம அழுத்தமான பேர்வழி.

ஹரி எங்கள் வீட்டில் தங்கத் தொடங்கிய அதே நேரத்தில், எங்களுடைய வேலை நிரந்தரமானது, மாதச் சம்பளம் அதிகரித்தது. கூடுதலாக ஒரு சின்னச் சலுகையும் அறிவித்தார்கள்.

’ஊழியர்காள், நீங்களெல்லாம் உடனடியாக வங்கிக் கடனில் இரு சக்கர வாகனம் வாங்கிக்கொள்ளலாம், நீங்கள் மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து எங்களுடைய நிறுவனத்திலேயே வேலை பார்த்தால், அந்தக் கடன் தொகையில் 50% நாங்கள் கட்டிவிடுகிறோம். ஓகேயா?’

பச்சையாகச் சொல்வதென்றால், பாதி விலையில் பைக். கசக்குமா? சட்டென்று நாங்களெல்லாம் ஆளுக்கு ஒரு பைக் வாங்கிப் போட்டோம்.

பைக் டெலிவரி எடுத்த தினத்தன்றுதான், ஹரி தன்னுடைய காதல் கதையைச் சொன்னான்.

அவனுடைய காதலி பெயர் ரம்யா. சென்னையில் ஹரிக்குப் பக்கத்து வீடு. 16 வயதில் தொடங்கிய தெய்வீகக் காதல், அப்போதுதான் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி முடித்திருந்தது.

ஹரியும் ரம்யாவும் காதலிக்கத் தொடங்கிய சில மாதங்களுக்குள், அவர்கள் சந்தித்த முதல் பெரிய பிரச்னை: ப்ளஸ் டூ பாடங்கள், ’பப்ளிக்’ பரீட்சைகள்.

பெரிய ‘படிப்பாளி’யாகிய ஹரி, காதலுக்காகத் தங்களுடைய எதிர்காலத்தைத் தியாகம் செய்ய விரும்பவில்லை. ‘இந்த ஒரே ஒரு வருஷம் பல்லைக் கடிச்சுகிட்டு ஓட்டினா போதும், அப்புறம் வாழ்நாள்முழுக்க(?) நிம்மதியா உட்கார்ந்திருக்கலாம்’ என்பதுபோல் வீராவேசமாக ஏதோ டயலாக் பேசியிருக்கிறான்.

பிறகென்ன? இரண்டு பேரும் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு இயற்பியலும், வேதியியலும் சிரத்தையாகப் படித்து மனப்பாடம் செய்தார்களாம். இவர்களுடைய ‘க்ரூப் ஸ்டடி’ மகிமையைப் பார்த்து இருவீட்டாரும் திருஷ்டி சுற்றி மகிழ்ந்திருக்கிறார்கள்.

அந்த ஆண்டுப் பொதுத் தேர்வில் ஹரி வாங்கிய மதிப்பெண்கள் 1087, ரம்யா அவனைவிட ஏழு மதிப்பெண் அதிகம்.

உடனடியாக, அவர்களுக்கு ஒரு புதிய கனவு: நாம் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும்.

ம்ஹூம், ரம்யாவுக்குச் சென்னையிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்டது. ஒரு சில மார்க் Cut-Off வித்தியாசத்தில் அந்த வாய்ப்பைத் தவறவிட்டான் ஹரி.

அதைவிட மோசம், ஹரிக்குத் திருநெல்வேலியில்தான் எஞ்சினியரிங் சீட் கிடைத்தது. சென்னையிலிருந்து மிக அதிகபட்சத் தூரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி அது 😦

மறுபடியும் அவர்கள் எதிர்காலம் கருதித் தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொண்டார்கள், கண்ணீரும் கம்பலையுமாகப் பிரிந்தார்கள்.

அப்போது செல்ஃபோனெல்லாம் வெகுஜனப் புழக்கத்தில் இல்லை. ஆகவே, அடுத்த நான்கு வருடங்கள், ஹரியும் ரம்யாவும் ஏகப்பட்ட கடிதங்களை எழுதிக் குவித்தார்கள். ’இன்னும் கொஞ்ச நாள், அதுக்கப்புறம் நாம ஒரே கம்பெனியில வேலை பார்க்கலாம்’ என்று கனவில் மிதந்தார்கள்.

அவர்களுடைய இந்தக் கனவும் நிறைவேறவில்லை. மறுபடியும் ரம்யாவுக்குச் சென்னையிலேயே வேலை கிடைத்தது. ஹரிக்கு ஹைதராபாத்.

சென்னை – திருநெல்வேலிகூடக் கொஞ்சம் பரவாயில்லை. சென்னை – ஹைதராபாத் ரயிலில் போய்த் திரும்புவதற்குள் முதுகெலும்பு முறிந்துவிடும்.

இன்னொரு பையனாக இருந்தால் ஹைதராபாத் வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்னையில் வேலை தேடியிருப்பான். ஏனோ, ஹரி அப்படிச் செய்ய விரும்பவில்லை.

‘இந்த ஆறு வருஷத்தில, நாங்க நேர்ல ஏழெட்டு மணி நேரம் அந்நியோன்யமாப் பேசியிருந்தா அதுவே அதிகம்’ என்றான் ஹரி, ‘எங்களோட லவ் முழுக்க, லெட்டர்லயும் ஃபோன்லயும்தான்’

அது சரி, இந்தக் கதையையெல்லாம் இப்போது ஏன் இவன் எங்களிடம் சொல்கிறான்?

காரணம் இருக்கிறது. ரம்யாவுக்கு பைக் என்றால் ரொம்ப இஷ்டம். கடிதம், தொலைபேசி வழியே அவர்கள் காதலித்துக்கொண்ட தருணங்களிலெல்லாம் தனது இந்த விருப்பத்தை அவர் அவனிடம் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.

ரம்யாவைப் பொறுத்தவரை, ‘உல்லாசப் பயணம்’ என்பது, ஹரியுடன் பைக்கில் நீண்ட தூரம் போய்க்கொண்டே இருப்பதுதான்! இதைக் கேள்விப்பட்ட ஹரி, சீக்கிரத்தில் காசு சேர்த்து ஓர் ‘இரண்டாம் கை’ பைக்காவது வாங்கிவிடவேண்டும் என்று ரொம்பக் காலமாக நினைத்துக்கொண்டிருந்தான்.

ஆகவே, ஹைதராபாதில் பைக் வாங்கியதும் பையனுக்குக் காதலி ஞாபகம் வந்துவிட்டது. அவரை இங்கே வரவழைக்கவேண்டும், பைக்கில் ஒரு ரவுண்ட் கூட்டிச் செல்லவேண்டும் என்று துடிதுடித்தான்.

நியாயமான ஆசைதானே? நாங்களெல்லாம் ‘டபுள் ஓகே’ சொல்லி அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தோம். மறுவிநாடி, ‘ட்ரீட் எப்போ?’ என்று ஆவலாகக் கேட்டோம்.

பதில் சொல்ல ஹரி அங்கே இல்லை. ரம்யாவுடன் ஃபோன் பேசுவதற்காக STD பூத்தைத் தேடிச் சென்றுவிட்டான்.

அடுத்த வாரம், ரம்யாவின் பயணத் திட்டம் தயாராகிவிட்டது. ‘ஹைதராபாதில் ஒரு ஃப்ரெண்டுக்குக் கல்யாணம்’ என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் ரயில் பிடித்துப் புறப்பட்டு வந்தார் அவர்.

மறுநாள் காலை, அவரை வரவேற்பதற்கு நாங்கள் எல்லோரும் ரயில் நிலையத்துக்குச் சென்றிருந்தோம். இத்தனை பேரை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவருடைய ஏமாற்ற முகபாவத்தில் தெரிந்தது.

நல்ல வேளையாக, ஹரியின் புது பைக்கைப் பார்த்ததும், அந்த வருத்தம் மறைந்துவிட்டது. முகமெல்லாம் பரவசத்துடன் பைக்கைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார் அவர்.

ரம்யாவுக்கு சைக்கிள்மட்டுமே ஓட்டத் தெரியும். இதுவரை அவருடைய அப்பாவின் ஓட்டை ஸ்கூட்டர்தவிர வேறெந்த பைக்கிலும் அவர் பயணம் செய்தது கிடையாது.

அதனால்தானோ என்னவோ, அவருக்குப் பைக் பைத்தியம் பிடித்துவிட்டது. வீட்டில் ஏராளமான வெளிநாட்டு பைக் வகைகளின் புகைப்படங்களைக் கத்தரித்துச் சேமித்துவைத்திருப்பதாகச் சொன்னார்.

அவர் பேசிக்கொண்டே போக, ஹரி சங்கடமாக நெளிந்தான். நான் பக்கத்தில் இருந்தவன் இடுப்பில் கிள்ள, அவன் சட்டென்று பேச்சைத் திசை மாற்றினான், ‘சரி, நீங்க கிளம்புங்க, நாங்க பின்னாடியே வர்றோம்’

ரம்யாவின் பெட்டியை நாங்கள் எடுத்துக்கொள்ள, அவர் ஹரியின் பைக் பின் சீட்டிலிருந்து எங்களுக்கெல்லாம் ‘டாட்டா’ காட்டியபடி பயணம் செய்தார். அப்போது அவருடைய முகத்தில் தெரிந்த அந்தக் குழந்தைக் குதூகலத்தை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.

ஹரிக்குப் பிறகு புறப்பட்ட நாங்கள், அவனுக்கு முன்னாலேயே வீடு சென்று சேர்ந்துவிட்டோம், ‘இவன் எங்கடா போனான்?’

‘அவசரப்படாதே மச்சான்’ என்று கண்ணடித்தான் ஒருவன், ’ரொம்ப நாளைக்கப்புறம் மீட் பண்றாங்க, நிறைய சடன்ப்ரேக் போட்டு மெதுவா வண்டியை ஓட்டிகிட்டு வருவான் பையன்’

‘அசிங்கமாப் பேசாதேடா ஃபூல்’

நாங்கள் சத்தமாகக் கத்திக்கொண்டிருக்கும்போதே, படியில் ஹரியின் செருப்பொலி கேட்டது. திறந்திருந்த கதவை வேகமாகத் தள்ளியபடி உள்ளே வந்தவன், ‘எங்கடா ரம்யாவோட பெட்டி?’ என்றான் நேரடியாக.

எங்களுக்குக் குழப்பம், ‘என்னடா தனியே வந்திருக்கே? அவங்க எங்கே?’

’அவளை வினு வீட்ல தங்கவெச்சிருக்கேன்’ என்ற ஹரி, டிவி பெட்டிக்குக் கீழே இருந்த சூட்கேஸை எடுத்துக்கொண்டான், ‘இதை அவகிட்டே கொடுத்துட்டு வந்துடறேன்’ என்று படிகளில் இறங்கி மறைந்தான்.

வினு(தா) எங்களுடன் வேலை செய்யும் தோழி. தன்னுடைய இரு சிநேகிதிகளுடன் தனியே வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தார்.

அவர் வீட்டில் ரம்யாவைத் தங்கவைப்பது நல்ல யோசனைதான். ஆனால் இந்தப் பயல் இதுவரை அதைப்பற்றி எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை.

அன்றுமுழுக்க, ஹரி மிகுந்த பரபரப்புடன் சுற்றிக்கொண்டிருந்தான். எங்கள் வீட்டுக்கும் வினு வீட்டுக்கும் இடையே அவனுடைய பைக் ஏகப்பட்ட பயணங்கள் சென்று திரும்பியது.

இரவு, ஹரி, ரம்யா சார்பில் எங்கள் எல்லோருக்கும் ட்ரீட். வினுவும் அவருடைய சிநேகிதிகளும்கூட வந்திருந்தார்கள்.

அந்த விருந்தில் எங்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென்று புரிந்தது. ரம்யாவுக்கு வினு கோஷ்டியினரைக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.

அவர்கள்மேல் எந்தத் தப்பும் இல்லை. இத்தனை நாளாகக் காதலனைப் பிரிந்திருந்த ரம்யா, இப்போது அவனுடன் கொஞ்சம் நிம்மதியாகப் பேசலாம், நேரம் செலவிடலாம் என்று நினைத்துக்கொண்டு வந்தால், இந்த உத்தம புத்திரன் அவரை வேறு எங்கேயோ அந்நிய வீட்டில் தங்கவைத்துவிட்டான்.

மறுநாள் காலை ஆறு மணிக்கு எங்கள் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. கண்ணைத் தேய்த்துக்கொண்டு கதவைத் திறந்தால், ரம்யா.

‘ஹலோ குட்மார்னிங்’

நாங்கள் அரக்கப்பரக்க நாற்காலியை இழுத்துப் போட்டோம். ஹரியை எழுப்புவதற்கு ஓடினான் ஒருவன்.

‘அவன் இன்னும் எழுந்திருக்கலியா?’ ரம்யாவின் குரலில் ஏமாற்றம்.

‘இல்லை, ராத்திரி ரொம்ப நேரம் படிச்சுகிட்டிருந்தான்’ நான் அவசரமாகப் பொய் சொன்னேன். ‘டேய் ஹரி, படுபாவி, எங்கேடா போனே?’

குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்த ஹரி ஒருவழியாக எழுந்து உட்கார்ந்தான். அவன் நிதானமாகப் பல் தேய்த்து, குளித்து முடித்து அவர்கள் கிளம்புவதற்கு எட்டு மணி தாண்டிவிட்டது.

படிகளில் இறங்குவதற்குமுன்னால் என்னிடம்மட்டும் தகவல் சொன்னான் ஹரி, ‘இங்கேதான், பக்கத்தில நல்ல பிக்னிக் ஸ்பாட் ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்க, வழியில ஏதோ ஃபேமஸ் கோவிலும் இருக்காம். பார்த்துட்டு சீக்கிரமா வந்துடறோம்’

’மெதுவா வாங்க, எதுவும் அவசரம் இல்லை’ என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தோம்.

அந்த ஞாயிற்றுக்கிழமை மிக நிதானமாக நகர்ந்தது. நாங்கள் எல்லோருமே ஹரி, ரம்யாவைப்பற்றிதான் விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தோம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

அன்றைக்கு ஹரியும் ரம்யாவும் சென்றிருந்த சுற்றுலாத் தலம், ஹைதராபாத் அருகில் உள்ள ஓர் அணைக்கட்டுப் பிரதேசம். அங்கே சென்று பச்சைப் புல்வெளியில் நாள் முழுக்கக் கடலை போட்டுவிட்டு, மதியச் சாப்பாட்டுப் பொட்டலத்தைக் காலி செய்துவிட்டு, பொழுது சாய்ந்ததும் திரும்பியிருக்கிறார்கள்.

காதலியை ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிற பரவசமோ என்னவோ, அவரிடம் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிய ஹரிக்குச் சாலையில் கவனம் பதியவில்லை.

அவர்கள் ஹைதராபாத் எல்லையை நெருங்கும் நேரம். புறநகர்ப் பகுதியில் அவசரமாகச் சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெரியவர்மேல் ஹரியின் வண்டி மோதிவிட்டது.

சாதாரணமாக ஹரி வேகமாக வண்டி ஓட்டமாட்டான். எப்போதும் மிதவேகம்தான்.

அன்றைக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த காதலியைக் குஷிப்படுத்துவதற்காக அவன் பைக்கை அதிவேகமாக விரட்டினானா, அல்லது அவனால் மோதப்பட்ட தாத்தா ரொம்பப் பலவீனமானவரா, தெரியவில்லை. அடி வலுவாகப் பட்டுவிட்டது, ஏகப்பட்ட ரத்தம்.

ஹரிக்கு அதுதான் முதல் விபத்து. அதற்குமுன் ஒரு நாய்க்குட்டியைக்கூட அவன் காயப்படுத்தியதில்லை.

அதிர்ச்சியில் உறைந்து நின்றவனுக்கு, அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதுகூடப் புரியவில்லை. அவனை சமாதானப்படுத்தி உட்காரவைத்து எங்களுக்கு ஃபோன் செய்ததுகூட, ரம்யாதான்.

அவர் அரைகுறையாகச் சொன்ன இடம், வழி விவரங்கள் எங்களுக்குப் புரியவில்லை, அல்லது போதவில்லை. நாங்கள் கேட்கும் தொடர்ச்சியான கேள்விகளால் எரிச்சலடைந்த அவர், ‘கொஞ்சம் பொறுங்க, நான் மறுபடி ஃபோன் பண்றேன்’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

இதற்குள், ஹரி சுய நினைவுக்கு வந்திருந்தான். விபத்துப் பகுதியைச் சூழ்ந்திருந்த பொதுமக்களில் யாரோ ஆம்புலன்ஸுக்கும் ஃபோன் செய்திருந்தார்கள்.

யார் செய்த புண்ணியமோ, அன்றைக்கு ஹரிக்கு அடி விழவில்லை. ஆம்புலன்ஸில் அந்தப் பெரியவருடன் ரம்யாவும் ஏறிக்கொள்ள, அவர்களைப் பின்தொடர்ந்து பைக்கில் போனான் ஹரி.

புறநகர்ப் பகுதி என்றாலும், பக்கத்திலேயே மருத்துவமனை இருந்தது. சினிமாவில் வருவதுபோல், ‘போலீஸ் கேஸ், கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போ’ என்றெல்லாம் யாரும் விரட்டவில்லை.

பெரியவரை அட்மிட் செய்து, காவல்துறையினருக்குத் தகவல் சொல்லியானபிறகு, ரம்யா எங்களுக்கு ஃபோன் செய்தார். தொலைபேசியின் அருகேயே பதற்றத்துடன் காத்திருந்த எங்களுக்கு, கச்சிதமாக முகவரி சொல்லி, ‘உடனே புறப்பட்டு வாங்க’ என்றார்.

எங்கள் வீட்டிலிருந்து அந்த மருத்துவமனை பதினைந்து நிமிடப் பயண தூரம்தான். நாங்கள் ஆளுக்கொரு பைக்கில் அங்கே சென்று சேர்ந்தபோது, ஹரி குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தான்.

அந்தப் பெரியவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் போலீஸ் அவனிடம் கேட்ட கேள்விகள், தோரணையில் பையன் ரொம்பப் பயந்துவிட்டான்.

அவனுக்கு நாங்களோ, ரம்யாவோ சொன்ன ஆறுதல்கள் பலன் அளிக்கவில்லை. இனிமேல் அவனால் ஒருபோதும் இரு சக்கர வாகனம் ஓட்டமுடியாது என்று எனக்குத் தோன்றியது.

’புலம்பினது போதும்’ என்று அவனை அதட்டினார் ரம்யா, ‘கொஞ்சம் வெளிய வா, ஒரு வாய் சாப்டுட்டு வந்துடலாம்’

’ம்ஹூம், நான் வரலை’, ஹரி அங்கிருந்து நகர மறுத்துவிட்டான். தன்னால் அடிபட்ட பெரியவரிடம் பேசி, நேரடியாக ஒரு வார்த்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டுதான் போவேன் என்று வறட்டுப் பிடிவாதம்.

இத்தனைக்கும், அந்தப் பெரியவரின் குடும்பத்தினர்கூட ஹரியிடம் கடுமையாக நடந்துகொள்ளவில்லை, ‘ஏதோ நடந்தது நடந்துபோச்சு, இனிமே பார்த்து வண்டி ஓட்டுங்க தம்பி’ என்றுதான் அறிவுரை சொன்னார்கள்.

ஆனால் ஹரிக்குக் குற்றவுணர்ச்சி தாங்கமுடியவில்லை. எந்நேரமும் பிரம்மை பிடித்தவன்போல் தரையைப் பார்த்துக்கொண்டு ஒரேமாதிரி உட்கார்ந்திருந்தான். சாப்பாடு இறங்கவில்லை, எப்போதாவது ஒரு வாய் காபிமட்டும் குடித்தான்.

அடுத்த இரண்டு நாள்கள், ஹரி அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையைவிட்டு நகரவில்லை. கண்ணில் படுகிற டாக்டர்கள், நர்ஸ்களிடமெல்லாம் அந்தப் பெரியவரைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தான்.

‘ரம்யா, நீங்களாவது வினு வீட்டுக்குப் போய்த் தூங்கிட்டுக் காலையில வாங்களேன்’

‘வேணாம்’ என்றார் அவர், ‘ஐயாம் ஓகே’

கடைசியில் வேறு வழியில்லாமல் நாங்கள்மட்டும் தனியாக வீடு திரும்பவேண்டியிருந்தது. அன்று இரவு எங்களில் யாருக்கும் தூக்கம் வந்திருக்காது.

மறுநாள் அவர்களுக்குக் காலைச் சாப்பாடு பார்சல் வாங்கிக்கொண்டு நான் மருத்துவமனைக்குச் சென்றேன். வரவேற்பறையில் நேற்று பார்த்த அதேமாதிரி உட்கார்ந்திருந்தான் ஹரி.

அவன் என்னைத் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவில்லை. ரம்யாமட்டும் சிவந்த விழிகளுடன் புன்னகைத்தார், ‘தேங்க்ஸ்’

ஹரி அசிரத்தையாக இட்லியை மென்றுகொண்டிருக்க, ரம்யா நன்றாகச் சாப்பிட்டார், ‘உங்ககிட்டே இன்னும் ஒரு சின்ன ஹெல்ப் வேணுமே’ என்றார்.

’என்னது?’

‘என்னோட பெட்டி வினு வீட்ல இருக்கு. அதைக் கொஞ்சம் வாங்கிட்டு வந்துடறீங்களா?’

‘எதுக்கு?’

’இன்னிக்கு நைட் ட்ரெயின்ல நான் சென்னை திரும்பணுமே’ என்றார் அவர், ‘அநேகமா அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வரதுக்கு நேரம் இருக்காதுன்னு நினைக்கறேன்’

ஹரி சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாள் ஓடியதே தெரியவில்லை.

அதைவிட, ஓர் அபூர்வமான சந்திப்பு வாய்ப்பைத் தன்னுடைய அசட்டைத்தனத்தால் பாழாக்கிவிட்டோம் என்பது அவனுக்கு இப்போது புரிந்திருக்கவேண்டும். ஆனால், இனிமேல் என்ன செய்யமுடியும்?

நான் வினுவை அலுவலகத்தில் சந்தித்து, ரம்யாவின் சூட்கேஸைக் கேட்டேன். அவர் என்னை ஒருமாதிரி பார்த்துவிட்டு, ‘நேத்து நைட் முழுக்க அவ வீட்டுக்கே வரலை, தெரியுமா?’ என்றார் குற்றம் சாட்டும் தொனியில்.

ஒரே ஒரு நாள் பழக்கத்தில், இவர்களால் எப்படி மற்றவர்களின் கலாசாரக் காவலர்களாக மாறிவிடமுடிகிறது? நடந்ததை முழுக்க விளக்கிக்கொண்டிருக்க நேரம் இல்லை, ‘அவசரமாக சூட்கேஸ் வேண்டும்’ என்றுமட்டும் திரும்பச் சொன்னேன்.

வினு அதற்குமேல் பிகு பண்ணவில்லை. என்னுடன் புறப்பட்டு வந்து வீட்டைத் திறந்து சூட்கேஸை எடுத்துக் கொடுத்தார். அவரை அலுவலகத்தில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றேன்.

இதற்குள், ஹரியால் விபத்துக்குள்ளான பெரியவர் கண் விழித்திருந்தார். சாதாரண அதிர்ச்சிதான். ரத்த இழப்புதவிர வேறு பெரிய பிரச்னை எதுவும் இல்லை. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்ததால் உயிர் பிழைத்துவிட்டார்.

ஹரி அவரிடம் மன்னிப்புக் கேட்டானா, கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்கினானா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பைவிட அவன் அதிக உற்சாகத்துடன் இருந்ததுமட்டும் எனக்குப் புரிந்தது.

ரம்யா எப்போதும்போல் தெம்பாக இருந்தார், ‘கடங்காரா, இனிமேலாவது ஒழுங்கா வண்டி ஓட்டு’ என்று அவன் கன்னத்தில் இடித்தார்.

‘ஹலோ, எனக்குக் கடன் கொடுத்தது நீ இல்லை, ஆந்திரா பேங்க்’

‘யார் கடன் கொடுத்தா என்ன? ஒருத்தர்கிட்டே கடன் வாங்கினவன் எல்லோருக்கும் கடன்காரன்தான்’

அவர்கள் பழையபடி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்க நிம்மதியாக இருந்தது. இதற்காக ஒரு நாள் அலுவலகத்துக்கு லீவ் போடலாம், தப்பில்லை!

மாலை, ரம்யா அங்கிருந்தே ரயில்வே நிலையத்துக்குப் புறப்பட்டார், ‘நாம ஆட்டோவிலே போயிடலாமா ரம்யா?’ என்றான் ஹரி.

‘இல்லை, பைக்லதான் போகணும்’ ரம்யா பிடிவாதமாகச் சொன்னார்.

ஹரி தடுமாறினான். அவனுக்கு மறுபடி ரம்யாவை வண்டியில் அழைத்துச் செல்ல விருப்பம் இல்லையோ, அல்லது பயமோ.

ஆனால் ரம்யா தன் முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை, ‘உன் பைக்லதான் போறோம்’ என்று ஏறி உட்கார்ந்துவிட்டார்.

ரம்யாவின் பெட்டியை முன்னால் வைத்து பேலன்ஸ் செய்தபடி கிக்கரை உதைத்தான் ஹரி. லேசான பதற்றத்துடன் அவர்களைக் கையசைத்து வழியனுப்பி வைத்தேன்.

அதன்பிறகு, இன்றுவரை நான் ரம்யாவை நேரில் பார்க்கவில்லை. அடுத்த வருடம் அவர் ஒரு ஸ்கூட்டி வாங்கியதாகவும், அவரே இரண்டு நாளில் ஓட்டக் கற்றுக்கொண்டுவிட்டதாகவும் ஹரி சொன்னான்.

ரம்யாவின் புது ஸ்கூட்டியைப் பார்க்க ஹரி சென்னை போகவில்லை. ஆறு மாதம் கழித்து அங்கேயே ஒரு வேலை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அவனுடைய பைக்கும் சாக்குப் பைகளால் இறுகக் கட்டப்பட்டு அதே ரயிலில் அவனுடன் பயணம் செய்தது.

கிட்டத்தட்ட இதே நேரத்தில், எங்கள் பேட்ச்சில் எல்லோருக்கும் ஹைதராபாத் சலித்துவிட்டது. திருமண வாழ்க்கையில் ‘7 Year Itch’ என்று சொல்வார்களே, அதுபோல, சாஃப்ட்வேர் எழுதுவோர் மத்தியில் வழக்கமான இரண்டாம் வருட அரிப்பு. ஆளாளுக்கு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டோம்.

ஹைதராபாதில் நாங்கள் ஏழு பேர் தங்கிய அந்த வீட்டுக்கு, ‘வான வில்’ என்று செல்லப் பெயர் சூட்டியிருந்தோம். ஹரியைத் தொடர்ந்து அதில் ஒவ்வொரு வண்ணமாக நீங்கத் தொடங்கியது.

ஹரியுடன் வாங்கிய அந்த வண்டி என்னோடு ரயிலில் பெங்களூர் வந்து சேர்ந்தது. இப்போதும் எங்கள் வீட்டு முன்னே தூசு படிந்து நின்றுகொண்டிருக்கிறது.

நான் எந்த வாகனத்தையும் ஓட்டுவதை நிறுத்திப் பல மாதங்கள் ஆகிறது. என்றாலும், அந்த பைக்கைமட்டும் விற்க மனமில்லாமல் ஒரு sentiment valueக்காக விட்டுவைத்திருக்கிறேன்.

இப்போது ஹரி, ரம்யா இருவரும் அமெரிக்காவில் இருப்பதாக அறிகிறேன். திருமணம் செய்துகொண்டுவிட்டார்களா என்பது தெரியவில்லை.

அது முக்கியமில்லை. நான் அறிந்துகொள்ள விரும்புவது வேறொரு விஷயம். ரம்யா விரும்பிய அந்த ’உல்லாச பைக் பயணம்’ எப்போதேனும் அவருக்குக் கிடைத்ததா? இனி கிடைக்குமா? அவர் இன்னும் பைக் படங்களைக் கத்தரித்துச் சேகரிக்கிறாரா? அல்லது, வேறு படங்களுக்கு மாறிவிட்டிருக்கிறாரா?

***

என். சொக்கன் …

26 03 2009

(முன்குறிப்பு: இது கதை இல்லை, முழு உண்மையும் இல்லை, இதே அரக்கு வண்ணத்தில் இருக்கும் அந்தக் கடைசிப் பகுதிதவிர, மற்றதெல்லாம் இன்று மாலை நிஜமாகவே நடந்தது. சும்மா சுவாரஸ்யத்துக்காகக் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனையைக் கலந்தேன் 🙂 )

’உங்களில் எத்தனை பேருக்குத் திருமணமாகிவிட்டது?’, மேடையில் இருந்தவர் கணீர் குரலில் கேட்டார்.

அந்த அரங்கில் இருந்த பாதிப் பேர் கை தூக்கினார்கள்.

’சரி, இதில் எத்தனை பேருக்குக் குழந்தைகள் உண்டு?’

சட்டென்று பாதிப் பேரின் கைகள் கீழே இறங்கின.

‘கடைசியாக, உங்களில் யாரெல்லாம் பள்ளியில் படிக்கும்போது க்ளாஸுக்குக் கட்டடித்துவிட்டு சினிமா போயிருக்கிறீர்கள்?’

இப்போது, கிட்டத்தட்ட எல்லோருமே கை தூக்கினார்கள். அரங்கம்முழுக்கக் குறும்பான நமுட்டுச் சிரிப்பு.

மேடைப் பேச்சாளர் சிரித்தார், ‘நாமெல்லாம் கட் அடித்துக் கெட்டுப்போனது போதாதா? நம் குழந்தைகள் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்று உருப்படவேண்டும் என்று நமக்கு ஆசை இருக்கிறதுதானே?’

‘ஆமாம், ஆமாம்’ எல்லோருடைய தலைகளும் ஒரேமாதிரியாக அசைந்தன.

’உங்களுக்காகவே, நாங்கள் ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கியிருக்கிறோம்’ கம்பீரமாக அறிவித்தார் அவர், ‘இந்த சாஃப்ட்வேரை உங்களுடைய குழந்தையின் பள்ளியில் இணைத்துவிட்டால் போதும்., அதன்பிறகு அவர்களுடைய தினசரி அட்டெண்டென்ஸ், அவர்கள் சரியாக வீட்டுப் பாடம் செய்கிறார்களா இல்லையா, மாதாந்திரத் தேர்வில் அவர்கள் வாங்கும் மதிப்பெண்கள், மற்றபடி அவர்கள் சந்திக்கும் தண்டனைகள், ஒழுங்கு நடவடிக்கைகள் சகலமும் உடனடியாக உங்கள் கவனத்துக்கு வந்துவிடும்’

நாங்கள் ஆர்வமாக நிமிர்ந்து உட்கார்ந்தோம். அவர் உற்சாகத்துடன் தனது மென்பொருளை இன்னும் விவரிக்கத் தொடங்கினார்.

’இதற்காக நீங்கள் இன்டர்நெட்டுக்குச் செல்லவேண்டியதுகூட இல்லை. ஒவ்வொருமுறை உங்கள் மகன் அல்லது மகள் வகுப்புக்குக் கட் அடிக்கும்போதும், அரை மணி நேரத்தில் உங்களுக்கு எஸ். எம். எஸ். செய்தி வந்துவிடும், கூடவே ஓர் ஈமெயிலும் அனுப்பிவிடுவோம்’

‘தொடர்ந்து உங்கள் பிள்ளை மூன்று நாள்களுக்கு வகுப்புக்கு வராவிட்டால், எங்கள் மென்பொருளே உங்களுக்கு ஃபோன் செய்து அதனை அறிவிக்கும்’

‘ஒவ்வொரு பரீட்சையின்போதும், உங்கள் பிள்ளை எத்தனை சதவிகித மார்க் எடுக்கவேண்டும் என்பதை நீங்கள் எங்களுக்குச் சொல்லிவிட்டால் போதும். அதற்குக் கீழே அவர்களுடைய மதிப்பெண் இறங்கினால் உடனடியாக உங்களுக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கும் எஸ். எம். எஸ். பறக்கும்’

‘இப்படி இன்னும் உங்கள் குழந்தையின் கல்விபற்றிய சகல தகவல்களையும் எஸ். எம். எஸ்., ஈமெயில் வழியே உங்களுக்குக் கொண்டுவர நாங்கள் காத்திருக்கிறோம். இதற்கான கட்டணம் மிகவும் குறைவு’

அவர் பேசி முடித்ததும், கைதட்டல் பலமாகவே இருந்தது. மக்கள் இந்த சாஃப்ட்வேரைக் காசு கொடுத்து வாங்கப்போகிறார்களோ, இல்லையோ, அதைப்பற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள்.

சலசலப்புப் பேச்சுச் சத்தத்துக்கு நடுவே, யாரோ கீபோர்டில் விறுவிறுவென்று தட்டும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தால், பின் வரிசையில் ஓர் இளைஞன் லாப்டாப்பில் மும்முரமாக ஏதோ அடித்துக்கொண்டிருந்தான்.

எல்லோரும் கூட்டத்தைக் கவனித்துக்கொண்டிருக்கும்போது, இவன்மட்டும் அக்கறையில்லாமல் என்னவோ டைப் செய்துகொண்டிருக்கிறானே? அப்படி என்ன முக்கியமான விஷயமாக இருக்கும்? விசாரித்தேன்.

அவன் புன்னகையுடன் சொன்னான், ‘அந்த அங்கிள் ஒரு சாஃப்ட்வேர் சொன்னாரில்ல? அந்த ப்ரொக்ராமை முறியடிக்கறதுக்கு ஒரு Hack எழுதிகிட்டிருக்கேன். அல்மோஸ்ட் ஓவர், இன்னும் பத்து நிமிஷத்தில முடிஞ்சிடும்’

***

என். சொக்கன் …

23 03 2009

வார இறுதிகளில் ஏதேனும் ‘ஷாப்பிங் மால்’களுக்குச் செல்கிறபோதெல்லாம், நான்  எதையேனும் வாங்குகிறேனோ இல்லையோ, புதிதாக என்னென்ன பொருள்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன என்பதைக் கூர்ந்து கவனிப்பது வழக்கம்.

காரணம், இன்றைய பெருநகர வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு ’ஷாப்பிங் மால்’கள்தான் ஒரே வழி. நகரவாழ் மக்களின் ஆசைகள், விருப்பங்கள், கோபங்கள், பொறாமைகள், சோம்பேறித்தனங்கள், இயலாமைகள், ஏக்கங்கள் என சகலத்தையும் வெளிப்படுத்தக்கூடிய, பூர்த்தி செய்யக்கூடிய பொருள்கள் இங்கே அரங்கேறுகின்றன.

இந்தப் பொருள்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு நமக்குத் தேவைப்படாது. ஆனால் இதையும் காசு கொடுத்து வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள் எனும்போது, அதற்கான காரணங்களை யோசித்துக் கற்பனை செய்வது மிகச் சுவாரஸ்யமான ஒரு விஷயம்.

உதாரணமாக, நேற்று நான் கவனித்த ஒரு புதுத் தயாரிப்பைப்பற்றிச் சொல்கிறேன்.

அது ஒரு குப்பைத் தொட்டி. வழவழவென்று உலோக உடம்பு, சுமார் முக்கால் அடி உயரம். ஆனால் விலைமட்டும், 1599 ரூபாய்.

ஆரம்பத்தில் நான் 15 ரூபாய் 99 காசு என்றுதான் நினைத்தேன். நெருங்கிப் பார்த்தபோதுதான் ஆயிரத்து ஐநூற்றுத் தொண்ணூற்றொன்பது ரூபாய் என்று புரிந்தது.

இவ்வளவு காசு கொடுத்துக் குப்பைத் தொட்டி வாங்குவதா? எதற்கு? அப்படி இதில் என்ன விசேஷம்? குப்பையை உடனே நசுக்கிப் பொடியாக்கி நவீன உரமாக மாற்றி நம் தோட்டத்துக்கு அனுப்பிவிடுமா? அல்லது, நாம் இருக்கும் இடத்துக்கே நடந்து வந்து குப்பையை வாங்கிக்கொள்ளுமா? அல்லது, விண்வெளி ஆராய்ச்சிக் கலங்களில் சிறுநீரைக் குடிநீராக்குகிறார்களாமே, அதுபோல, நம் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்துக் கொடுக்குமா? அல்லது, குப்பைத் தொட்டியில் FM ரேடியோ, USB துளை வைத்து MP3 பாடல் கேட்கலாமா? அல்லது, …

நல்லவேளையாக, அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி என் அவசரக் கற்பனைகளைக் கலைத்தார், ‘மே ஐ ஹெல்ப் யூ சார்?’

’ஷ்யூர்’ என்றேன் நான், ‘இந்த குப்பைத் தொட்டியில என்ன விசேஷம்?’

அவர் பெருமிதத்துடன் டை முடிச்சைச் சரி செய்தார். தொண்டையை ஒருமுறை செருமிக்கொண்டு அந்தக் குப்பைத் தொட்டியின் மகிமைகள், வீர, தீரப் பராக்கிரமங்களைப்பற்றி எனக்கு விளக்கத் தொடங்கினார்.

ஆக்ஸ்ஃபோர்ட்(?) ஆங்கிலத்தில் நீட்டி முழக்கி அவர் பேசியதன் சுருக்கம்: இந்தக் குப்பைத் தொட்டியின் உச்சியில் ஒரு சென்சர் இருக்கிறது. நீங்கள் குப்பையைப் போடுவதற்காகக் கை நீட்டியதும் அதை உணர்ந்து, இதன் மூடி தானாகத் திறந்துகொள்ளும். நீங்கள் கையை நகர்த்தியதும், பழையபடி மூடிக்கொள்ளும். விலை ‘ஜஸ்ட் 1599 ரூபாய்’.

அவர் சொன்னதை இந்த விநாடிவரை என்னால் நம்பமுடியவில்லை. குப்பைத் தொட்டியைத் தானியங்கியாகத் திறக்க ஒரு சென்சர் வைக்கவேண்டும் என்று யோசித்த புண்ணியவான் எவன்? இந்தியனா? அல்லது வெளிநாட்டுக்காரனா?

குனிந்து குப்பையைப் போடச் சோம்பேறித்தனப்படுகிறவர்களுக்காகதான், ‘பெடல்’ வகைக் குப்பைத் தொட்டிகள் வந்தன. நின்ற நிலையில் காலால் பெடலை அமுக்கி இந்தக் குப்பைத் தொட்டிகளைத் திறக்கலாம், குப்பை போடலாம், நாம் காலை எடுத்ததும் குப்பைத் தொட்டி மூடிக்கொண்டுவிடும்.

இப்போது அதுவும் வேண்டாம் என்று சென்சர் வைத்த குப்பைத் தொட்டிகள் வந்திருக்கின்றன. குப்பைத் தொட்டிவரை நடந்து செல்கிறவர்களுக்குக் குனிந்து குப்பையைப் போடவோ, பெடலை அமுக்கவோ சோம்பேறித்தனமா? அபத்தமாக இல்லை?

ஆரம்பத்தில் கோபமூட்டிய இந்த விஷயம், அடுத்த சில நிமிடங்களுக்குள் பெரிய நகைச்சுவையாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. தானியங்கிக் குப்பைத் தொட்டியைத் தொடர்ந்து இன்னும் இதுபோல் என்னென்ன பொருள்கள் விற்பனைக்கு வரக்கூடும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஜாலியாகப் பொழுது போனது.

அதற்காகவேனும், அந்த ஆயிரத்தறுநூறு ரூபாய்க் குப்பைத் தொட்டிக்கு ஒரு நன்றி சொல்லவேண்டும்!

***

என். சொக்கன் …

23 03 2009

இன்னும் பத்து நாளில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரப்போகிறது. அதன்பிறகு, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரும். இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நம் ஊரில் முட்டாள்கள் தினம் இரண்டு வகையாகக் கொண்டாடப்படுகிறது. அகப்பட்டவர்களிடம் விதவிதமாகப் பொய் சொல்லி நம்பச் செய்து ஏமாற்றுவது சாஃப்ட்வேர் வகை, இங்க் தெளித்தல், பூ வெட்டிய உருளைக்கிழங்கை மையில் ஒற்றி முத்திரையிடுதல் போன்றவை ஹார்ட்வேர் வகை.

கல்லூரி ‘ஏப்ரல் 1’களில் ஹார்ட்வேர் கலாட்டாக்கள் குறைவு. பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஏமாற்றுகள்தான் அதிகமாக இருக்கும்.

இப்படி மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதுதவிர, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற முட்டாள்தனத்தையும் கல்லூரிகளில் நிறையப் பார்க்கலாம். உதாரணமாக, திவாகரும் நானும்.

திவாகருக்குச் சொந்த ஊர், ஈரோடு தாண்டி ஒரு கிராமம். கல்லூரியில் என் வகுப்புத் தோழனாகவும் நெருங்கிய சிநேகிதனாகவும் வாய்த்தான்.

நாங்கள் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில், Y2K ஜூரம் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. ஆகவே, எங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள எப்படியாவது கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் இடம் பிடித்துவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் முட்டிமோதினோம்.

விருப்பம் சரி. தகுதி என்று ஒன்று இருக்கிறதில்லையா? முன்னூற்றுச் சொச்ச பேரில் அறுபது அல்லது எழுபது பேருக்குதான் கணினிப் பொறியியல் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. மிச்சமிருந்தவர்கள் அவர்களுடைய மதிப்பெண்கள் அடிப்படையில் மெக்கானிகல், எலக்ட்ரிகல் (EEE), கம்யூனிகேஷன் (ECE) என்று வெவ்வேறு பிரிவுகளில் ஐக்கியமானார்கள்.

இப்படி முக்கியப் பிரிவுகள் எல்லாவற்றிலும் மாணவர்களைச் சேர்த்தபிறகு, மதிப்பெண் பட்டியலின் அடிமட்டத்தில் சிலர் எஞ்சியிருப்பார்கள் இல்லையா? அந்த பின்பெஞ்ச் பார்ட்டிகளுக்காகவே சில ’டிபார்ட்மென்ட்’கள் உண்டு: EIE, Production, Civil.

இதன் அர்த்தம், இந்தப் பிரிவுகளெல்லாம் மோசமானவை என்பது அல்ல. ‘நான் சிவில் எஞ்சினியரிங்க்தான் படிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்துச் சேர்ந்தவர்களெல்லாம்கூட உண்டு. ஆனால் பெரும்பாலும் இந்த மூன்று பிரிவுகளில் ‘தள்ளிவிடப்பட்டவர்’கள்தான் அதிகம்.

நானும் திவாகரும் அந்தக் கேஸ். கம்ப்யூட்டர் சைன்ஸ் அல்லது மெக்கானிகல் என்று ஆசைப்பட்டோம், நாங்கள் வாங்கிய மார்க்குக்கு ப்ரொடக்‌ஷன் எஞ்சினியரிங்தான் கிடைத்தது.

ஒரே சந்தோஷம், மற்ற எல்லாப் பிரிவுகளையும்விட இங்கே மாணவர்கள் குறைவு. அங்கெல்லாம் அறுபது, எழுபது, எண்பது பேர் ஒரே வகுப்பில் பிதுங்கி வழிந்துகொண்டிருக்க, ப்ரொடக்‌ஷன் பிரிவில்மட்டும் ’சிக்’கனமாக முப்பதே முப்பது பேர்.

இங்கிருந்த ஆசிரியர்களும் எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒழுங்காகப் படிக்காவிட்டால் ஒரு கண்டிப்பு? வீட்டுப் பாடம் செய்யாவிட்டால் தண்டனை? சரியான நேரத்தில் அசைன்மென்ட் சமர்ப்பிக்காவிட்டால்  திட்டு? பரீட்சையில் ஃபெயில் ஆனால் அப்பாவுக்கு லெட்டர்? ம்ஹூம், எதுவும் கிடையாது. ‘வேறு வழியில்லாமல் இங்கே தள்ளிவிடப்பட்ட பையன்கள்தானே, அப்படிதான் இருப்பார்கள்’ என்று அலட்சியமாகத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.

இந்த வாய்ப்பை நாங்கள் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் சரியான கலாட்டா, கிண்டல், கேலி, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியிராத அசட்டை வாழ்க்கை.

கல்லூரியில் எங்களுடன் படித்தவர்கள் பலர், பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருந்தார்கள். மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய பாஷைபோலவே நினைக்காமல் அசட்டையாக ஊதித்தள்ளினார்கள். இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட ஆங்கிலத்தில்தான் உரையாடுவது வழக்கமாக இருந்தது!

குறிப்பாக, பெண்கள் – அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்றமுடியாததாக இருந்தது. அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்கிற காரணத்தாலேயே எங்களில் பலருக்குப் பெண் நண்பிகள் இல்லை.

எப்போதேனும் என்னைப்போன்ற, திவாகரைப்போன்ற பாமர நிலையிலுள்ள பையன்கள் இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும். ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருவதுபோல, பிறமொழி அறிவினால் முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்களின் ஞான ஒளிப் பிரகாசத்தைத் தாங்கியவாறு அவர்கள் படபடவென்று பேசுவதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நாங்கள் திகைப்போடு நின்றிருப்போம். நாமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது, நாங்கள் மனக்கணக்காக ஆங்கில இலக்கணத்தை உருட்டி, ஈஸ் – வாஸ் வேற்றுமைகள் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவர்கள் இன்னும் ஏழெட்டுப் பத்திகள் பேசிவிட்டு எங்களை இளக்காரமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

தூர்தர்ஷனில் உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகையில் ஆங்கிலத்துக்கு ஒன்று, ஹிந்திக்கு ஒன்று என இரண்டு வர்ணனையாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பந்தும் வீசப்பட்டு, விளாசப்பட்டபின்னர் ஹிந்தியில் பேசுகிறவர் ஏதேனும் கேள்விகள் கேட்பார். மற்றொரு வர்ணனைக்காரர் அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார், பதிலுக்கு அவர் ஒரு கேள்வியை வீச, மற்றவர் பிடிவாதமாக ஹிந்தியில் பதில் சொல்வார் – நீ எந்த பாஷையில் பேசினால் எனக்கென்ன, நான் என்னுடைய மொழியில்தான் பதில் சொல்வேன் என்பதுபோல் இருவரும் மாறிமாறி விளையாட, பார்ப்பதற்கு மகா வேடிக்கையாக இருக்கும்.

உண்மையில், அது வேடிக்கையாக அன்றி, கொடுமையாகவும் இருக்கக்கூடும் என்பதைக் கல்லூரியில்தான் நான் உணர்ந்துகொண்டேன்.

எங்களின் சக மாணவர்கள் பலரும் (சில ஆசிரியர்களும்கூட) ஆங்கிலம் தெரியாதவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் புரிந்து, தொடரமுடியாத வேகத்தில் அவர்கள் பேசப்பேச, சற்றே அவமானமாகத் தலைகுனிந்தபடி மெலிதான குரலில் நாங்கள் தமிழில் மறுமொழி சொல்வோம். அதைக் கேட்டதும் அவர்களின் வீம்பு மேலும் உயர்ந்துகொள்ள இன்னும் பண்டிதத்தனமான ஆங்கிலப் பேச்சில் எங்களைத் தொடர்ந்து தாக்குவார்கள்.

இதையெல்லாம் கவனிக்கிறவர்கள், ‘அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்பதுபோல் எங்களைப் பரிதாபத்துடன் அல்லது அலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும். வில்லும் அம்புமாக நிற்கிறவனை, பீரங்கியால் துளைப்பது தவறு என்னும் அடிப்படை யுத்த தர்மம், எல்லாருக்குமே மறந்துபோய்விட்டதுபோல.

என்னுடைய இந்த நிலைமைக்கு நான் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. பள்ளி இறுதிவரை தமிழ் மீடியத்திலேயே படித்த எனக்கு ஆங்கிலம் என்பது ஒரு மொழிகூட இல்லை – வெறும் பாடம்தான். அவ்வளவாக நமக்கு நெருக்கமில்லாத அந்தப் பாடத்தையும் கவனமாகப் படித்து நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வத்தோடுதான் நான் ஆங்கிலத்தை அணுகியிருக்கிறேன். மற்றபடி அதில் நன்றாக பேசிப் பழகவேண்டும் என்கிற எண்ணத்தை யாரும் எனக்குள் உருவாக்கவில்லை – அந்தவிதத்தில்தான் நான் இந்த கான்வென்ட் பறவைகளிலிருந்து வித்தியாசப்பட்டுவிட்டேன்.

இந்தக் கல்லூரியில் சேர்ந்தபோதே, எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில்தானா என்று கொஞ்சம் மலைப்பாக இருந்தது. ஆனாலும் சமாளித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை – பன்னிரண்டாம் வகுப்புவரை ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடத்தை சிரமப்பட்டுப் படிக்கவில்லையா? அதில் ஃபர்ஸ்ட் பேப்பர், செகன்ட் பேப்பர் என்று வருவதுபோல் கல்லூரியில் ஏழெட்டு பேப்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஆச்சு.

குருட்டுத்தனமான சிந்தனைதான். என்றாலும் என்னளவில் அது பலித்தது – ஆங்கில அகராதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படித்தால் அநேகமாக எல்லாப் பாடங்களுமே தத்தம் கடுமைத் திரைகளை உடைத்து எளிமை முகம் காட்டின. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அகராதியைப் புரட்டிக்கொண்டிருப்பது சிரமம்தான், ஆனால் இந்த மொழிப் பிரச்சனை என்னும் பெரிய தடைக்கல்லை உடைப்பதற்காக இந்த கஷ்டத்தைக்கூட அனுபவிக்காவிட்டால் எப்படி?

இப்படி ஒவ்வொரு பாடத்தையும் ஆங்கிலத்தில் படித்து, அதன் பொருளைத் தமிழில் புரிந்துகொண்டு, அதை அப்படியே மனத்தில் பதித்துக்கொண்டுவிட்டால் போதும். பரீட்சை எழுதும்போது நம்முடைய அரைகுறை இலக்கண அறிவைப் பயன்படுத்தி அந்தக் கருத்தை எளிய ஆங்கில வாசகங்களாக மொழிபெயர்த்து எழுதிவிடலாம். ஆசிரியர்களும் நம்மிடம் விஷய ஞானத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் மதிப்பெண்களுக்குக் குறைவிருக்காது.

இப்போது யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நானும் திவாகரும் அப்படிதான் யோசித்தோம். எங்களுடைய முதல் மாதாந்திரத் தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகள் வரும்வரை மனத்தில் தாளமுடியாத வலியுடன்தான் சுற்றிக்கொண்டிருந்தோம்.

இருபதே மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட மிகச் சிறிய தேர்வு அது. மற்ற மாணவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் இருவர்மட்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தமிழில் படித்து ஆங்கிலத்தில் எழுதுகிற எங்களுடைய பரிசோதனை முயற்சிக்கு வெற்றியா, தோல்வியா என்று தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதியாக நாங்கள் அந்தத் தேர்வை மதித்தோம்.

கிட்டத்தட்ட பதினைந்து நாள் காத்திருப்புக்குப்பின், அந்தத் தேர்வின் திருத்திய விடைத்தாள்கள் வகுப்பில் விநியோகிக்கப்பட்டன. நானும் திவாகரும் இருபதுக்குப் பதினேழோ, பதினாறோ மதிப்பெண்கள் எடுத்திருந்தோம்

அதைவிட முக்கியம், எங்கள் இருவருடைய விடைத்தாள்களிலும் ஆங்காங்கே பச்சை அடிக்கோடுகள் இட்டுப் பாராட்டியிருந்தார் அந்த புரொஃபஸர்.

அந்தச் சின்ன அங்கீகாரம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதுவரை ’நமக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே’ என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழன்றுகொண்டிருந்த நாங்களும், இப்போது எங்களை மற்றவர்களுக்கு இணையாகக் கருதிக்கொள்ளத் தொடங்கினோம். படிக்கிற பிள்ளைக்கு நல்லபடியாக மார்க் வாங்குவதுதானே முக்கியம்? மற்றபடி யார் எந்த பாஷையில் பேசினால் எங்களுக்கென்ன?

எங்களைப் பெரிதும் உறுத்திக்கொண்டிருந்த இந்த ஒரு கவலையைத் துறந்தபிறகு, எங்களுக்கிடையிலான நாடகத்தில் ஹீரோ – வில்லன் பாத்திரங்கள் இடம்மாறிவிட்டன. இப்போது, ஆங்கிலத்தில் பேசி அலட்டுகிறவர்களை நாங்கள் அலட்சியமாகப் பார்க்கத் தொடங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தீவீரமான போட்டிகள் தொடங்கின – அவர்கள் ஆங்கிலத்தில் பட்டிமன்றம் நடத்தினால், நாங்கள் கல்லூரி தமிழ் மன்றத்தைப் புதுப்பித்துக் கவியரங்கங்களுக்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் தினமும் ஹிண்டு வாங்கிப் படிப்பதால், எங்கள் ஹாஸ்டல் சரித்திரத்திலேயே முதன்முறையாக, தினத்தந்திக்குச் சந்தா செலுத்திய கலகக்காரனாக ஆனேன் நான்.

இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம் – தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் நானும் சுதாகரும் நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆங்கிலேயர்கள் எங்களுக்கெதிரே நடத்திய யுத்தத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டதாகவே நம்பினோம்.

ஆனால் உண்மையில் தோற்றது யார்? ஜெயித்தது யார்? புத்திசாலி யார்? முட்டாள் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்களுக்குக் கிடைக்க இரண்டு வருடங்கள் ஆனது.

அப்போது நாங்கள் மூன்றாம் வருடப் படிப்பின் நிறைவில் இருந்தோம். அடுத்த வருடம் வரப்போகிற ‘Campus Interview’களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம்.

மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், நானும் திவாகரும் எங்கள் வகுப்பில் முதல் நான்கைந்து இடங்களுக்குள் இருந்தோம். ஆகவே, எங்களுடைய பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நேர்முகத் தேர்வில் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கண்டுபிடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினோம்.

கண்டுபிடிப்பது சரி, அதை வாயைத் திறந்து சொல்லவேண்டாமா? அங்கேதான் பிரச்னை.

இரண்டு வருடங்களாக, வாத்தியார்மேல் கோபப்பட்டு, பள்ளிக்கூடத்தைக் கொளுத்தியதுபோல், யார்மீதோ கொண்ட விரோதத்தால், அவர்களைப் பழிவாங்கி, ஜெயித்தாகவேண்டும் என்கிற அசட்டுத் துடிப்பால் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இப்போது அது பெரிய இடியாக எங்கள்மேல் இறங்கியது.

எங்கள் கல்லூரியில், நிஜமான எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் தொடங்குமுன், அவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். சக மாணவர்கள், சீனியர்கள், சில சமயங்களில் ஆசிரியர்கள் எங்களை இண்டர்வ்யூ செய்து, என்ன தப்புச் செய்கிறோம் என்று சுட்டிக்காட்டுவார்கள், ஆலோசனை சொல்வார்கள்.

இதுபோன்ற ‘பயிற்சி இண்டர்வ்யூ’க்கள் ஒவ்வொன்றும், எங்களுக்கு மிகக் கொடுமையான அனுபவமாக இருந்தது. ’முள்மேல் உட்கார்வது’ என்று நிறையப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அது நிஜத்தில் சாத்தியம் என்று அப்போதுதான் புரிந்தது.

இத்தனைக்கும், அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் எளிமையானவைதான். எல்லாக் கேள்விகளுமே எங்களுக்குப் புரிகிறது, பதிலும் தெரிகிறது, ஆனால் அதைக் கோர்வையாக விவரித்துச் சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் போதவில்லை – கொச்சை ஆங்கிலமோ தமிழைக் கலந்து பேசுகிற அசுத்தமோ அங்கே அனுமதிக்கப்படவில்லை என்பதால், நாங்கள் வாயில்லாப் பிள்ளைகளாகப் பின்தங்கினோம்.

மெல்ல, நாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கினோம். இரண்டு வருடங்களுக்குமுன்னால், ஆங்கிலத்தில் நன்கு பேசத் தெரிந்த மேன்மக்கள் எங்களை அவமானப்படுத்தியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அந்த மொழியைப் பேசிக் கற்றிருக்கவேண்டும். காலம் கடந்த ஞானம்.

அந்த வருட இறுதியில், எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வ்யூத் திருவிழாக்கள் தொடங்கின. முதல் பத்துப் பதினைந்து நாள்களிலேயே, கிட்டத்தட்ட இருபத்தைந்து கம்பெனிகளுக்குமேல் பங்குபெற்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் தொடங்கி, இப்போதுதான் ரிப்பன் வெட்டிய கத்துக்குட்டிகள்வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கான்பூர், திருவனந்தபுரம், பூனா, பாட்னா, இன்னும் எங்கெங்கிருந்தோ விமானத்தில் ஆள் பிடிக்க வந்து சேர்ந்தார்கள்.

நம் ஊர் சினிமாக் கொட்டகைகளில் புதுப் படங்கள் வெளியாகும்போது, காலைக் காட்சி முடிவதற்குள் மேட்னிக்கான கூட்டம் நெரித்துத் தள்ளும். அதுபோல, இந்த நிறுவனங்கள் ஒருவர்பின் ஒருவராக வந்துகொண்டேயிருப்பதைப் பார்த்தபோது, வெளியே ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக்கிடப்பதாக எங்களுக்குத் தோன்றியது.

‘அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூட, ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்’ என்று ஒரு பழைய படத்தில் சிவாஜி கணேசன் சொல்வார். அதுபோல, இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்செல்லமுடியாதபடி எங்களுக்கு இந்த மொழித் தடை, நிஜமான இண்டர்வ்யூக்களை நினைத்தாலே நாங்கள் பயந்து நடுங்கினோம்.

என்னுடைய அதிர்ஷ்டம், என்னை முதன்முதலாக இண்டர்வ்யூ செய்த அதிகாரி, ஒரு தமிழர். நான் தயங்கித் தயங்கிப் பேசிய பட்லர் ஆங்கிலம் அவருக்கு ஒரு பெரிய குறையாகத் தோன்றவில்லை. என் நிலைக்கு இறங்கி வந்து, பயமுறுத்தாத எளிய சொற்களில் கேள்வி கேட்டு, என்னுடைய இலக்கணமற்ற ஒற்றை வார்த்தைப் பதில்களை அங்கீகரித்து, சில விரிவான பதில்களைப் பேச்சில் அன்றி, படம் வரைந்து விளக்கச் சொல்லி, இன்னும் என்னென்னவோ வழிகளில் அந்த மொழித் தடையைத் தாண்டியும் எனக்குத் திறமை இருக்கிறதா என்பதைமட்டுமே அவர் பார்த்தார்.

இன்றுவரை நான் சந்தித்த ஒரே இண்டர்வ்யூ அதுதான். முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்துவிட்டது.

திவாகருக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவன் பல மாதங்கள் போராடிப் பார்த்துப் பரிதாபமாகத் தோற்றுப்போனான்.

கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபிறகு, திவாகருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் குறைந்து போயின. மூன்று மாதமோ, ஆறு மாதமோ முயற்சி செய்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு(ME)க்குச் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள்.

இன்றைக்கு திவாகர் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் என்னைப்போல் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கவேண்டும் என்றுமட்டும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

ஆனால், அன்னிய மொழியைப் படிக்கமுடியாத, அல்லது படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற எங்களைப்போன்ற ’முட்டாள்’களையெல்லாம், அதிர்ஷ்டம்தான் காப்பாற்றவேண்டுமா?

***

என். சொக்கன் …

19 03 2009

சில மாதங்களுக்குமுன்னால் ஒரு மாலை, நங்கையுடன் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது செல்பேசி மணி ஒலித்தது.

என்னுடைய மிகப் பெரிய கெட்ட பழக்கம், தொலைபேசி மணி ஒலித்தால் போச்சு. அந்த விநாடியில் நான் எப்பேர்ப்பட்ட வேலையில் இருந்தாலும் அதை அப்படியே நிறுத்திவிட்டு ஃபோனை எடுக்கவேண்டும் என்று தோன்றும். மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு சும்மா இருந்தாலும்கூட கை நடுங்கும், என்ன விஷயமோ, என்ன அவசரமோ என்று பதைபதைக்கும். விஷயம் அவ்வளவு முக்கியம் என்றால் அவர்களே மறுபடி அழைப்பார்கள், பின்னால் பேசிக்கொள்ளலாம் என்று தோன்றாது. கடந்த சில ஆண்டுகளில் இது ஒரு பெரிய வியாதியாகவே மாறிவிட்டது.

ஆகவே, அன்றைக்கு விளையாடுவதை நிறுத்திவிட்டு ஃபோனை எடுத்தேன். மறுமுனையில் ஒரு கரகரப்பான நடுத்தர வயதுக் குரல், ‘ஹலோ, நான்தான் தாமோதரன் பேசறேன், தஞ்சாவூர்லேர்ந்து’ என்றது.

எனக்குத் தஞ்சாவூரில் எந்தத் தாமோதரனையும் தெரியாது. ஆனால், என்னுடைய அநியாய ஞாபக மறதியால் நான் எத்தனை தூரம் பழகியவர்களையும் சுலபத்தில் மறந்துவிடக்கூடும்.

ஆகவே, எதற்கு வம்பு? யாருடன் ஃபோன் பேசினாலும் அவர்களை ரொம்ப நன்றாகத் தெரிந்ததுபோல்தான் அளவளாவுவேன். அதேசமயம், உள்ளுக்குள் ‘யார் இந்த ஆள்?’ என்று ஒரு கூகுள் சர்ச் துளி பிரயோஜனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்.

ஃபோனில் ஒரு வசதி. சம்பந்தப்பட்ட நபர் ரொம்ப ப்ளேட் போடுகிறார் என்றால், அல்லது அவர் யார் என்று சுத்தமாக ஞாபகம் வராவிட்டால், ‘ஹலோ, ஹலோ’ என்று ஏழெட்டுமுறை சத்தமாகக் கத்திவிட்டு, ‘ஸாரிங்க, நீங்க பேசறது கேட்கலை, சிக்னல் வீக்கா இருக்கு’ என்று இணைப்பைத் துண்டித்துவிடலாம்.

ஆனால், இதுபோன்ற நபர்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் பெரிய அவஸ்தை. அவர்கள் யார் என்றே தெரியாமல் நலம் விசாரித்து, அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் மையமாகப் பதில் சொல்லிவிட்டுத் தப்பித்து வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும்.

முக்கியமாக நான் இப்படி மாட்டிக்கொள்வது திருமணங்கள், குடும்ப விழாக்களுக்குச் செல்கிறபோது.

எங்களுடைய மிக நெருங்கிய இருபது அல்லது இருபத்தைந்து உறவுக்காரர்களைத்தவிர மற்ற யாருடைய முகமும் எனக்குச் சுத்தமாக நினைவில் இருக்காது. அவர்கள் எங்களுக்கு எந்த வகையில் உறவு என்பதுகூட ஞாபகம் வராது, கட்டபொம்மன்போல், ‘மாமனா, மச்சானா’ என்று மூளையைக் குழப்பிக்கொண்டு யோசிக்கவேண்டியிருக்கும்.

என் மனைவி இதில் மிகவும் சமர்த்தர். அவர் குறைந்தபட்சம் நானூற்றைம்பது நண்பர்கள், உறவுக்காரர்கள், அக்கம்பக்கத்து வீட்டாரின் முகம், பெயர், குடும்ப விவரங்கள், உடல்நிலை (வியாதிகள்), பொழுதுபோக்குகள் என்று சகலத்தையும் நினைவில் வைத்திருக்கிறார். யாரைப் பார்த்தாலும் பத்து நிமிடத்துக்காவது அவர்களைப் ‘பர்ஸனலாக’ நலம் விசாரிக்கிற திறன் அவருக்கு உண்டு.

நான்தான் பேந்தப் பேந்த விழித்தபடி பக்கத்தில் நின்றிருப்பேன். சம்பந்தப்பட்ட நபர் கடந்து சென்றபிறகு, ‘இவர் யாரு?’ என்று விசாரித்துத் தெரிந்துகொள்வேன்.

இந்த விஷயமெல்லாம் எப்படி என் மனைவியின் மூளைக்குள் தங்குகிறது என்பது இதுவரை எனக்குப் புரியவில்லை. பல வருடங்களுக்குப்பிறகு சந்திக்கிறவரைக்கூடச் சட்டென்று நினைவில் கொண்டுவந்து, ‘உங்க வீட்ல சாம்பல் கலர்ல ஒரு பூனைக்குட்டி இருந்ததே, அது சௌக்கியமா?’ என்பதுபோல் நுணுக்கமாக விசாரிப்பது எப்படி?

பல சந்தர்ப்பங்களில், என் மனைவியால் விசாரிக்கப்படும் நபருடன் அவரைவிட நான்தான் அதிகம் பழகியிருப்பேன். ஆனால் என்னைவிட அவர்களைப்பற்றி அவர் அதிகம் தெரிந்துவைத்திருப்பார்.

உதாரணமாக, என் அலுவலக நண்பர்கள் யாருடைய பெயரைச் சொன்னாலும், அவர்களுடைய மனைவி / கணவர் பெயரை என் மனைவியால் சொல்லமுடியும். இன்னும் விசாரித்தால் அவர்கள் திருமணம் எந்த மண்டபத்தில் நடந்தது, அந்தத் திருமணத்துக்கு நாங்கள் ஆட்டோவில் சென்றோமா, டாக்ஸியில் சென்றோமா, கல்யாணப் பந்தியில் பரிமாறிய குலோப் ஜாமூன் லேசாகக் கருகியிருந்ததுவரை சகலத்தையும் விவரிப்பார்.

சரி, இவருக்கு ஞாபக சக்தி அதிகம். அதனால்தான் இதையெல்லாம் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறார் என்றும் நினைத்துவிடமுடியாது. காரணம், இந்த ஒரு விஷயத்தைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் என் மனைவியின் ஞாபக சக்தி சராசரியானதுதான். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் என்று எதைப் பார்த்தாலும், படித்தாலும் மிக விரைவில் மறந்துவிடுவார். மனிதர்களை, அவர்களைப்பற்றிய விவரங்களைமட்டும் மறப்பதில்லை.

ஒருவேளை, மனித மூளைக்குள் இதுபோன்ற விஷயங்களுக்காகச் சில தனி செல்கள் இருக்கின்றனவோ? நான் பிறக்கும்போதே அந்த செல்களை எரித்துத் தீர்த்துவிட்டேனோ? டாக்டர் புரூனோவை விசாரிக்கவேண்டும்.

நிற்க. எதையோ பேசத் தொடங்கி எங்கேயோ சென்றுவிட்டேன். மறுபடியும் தஞ்சாவூர் தாமோதரன்.

’என்ன சார் சௌக்யமா?’ அவர் மிகவும் சகஜமாக விசாரித்தபோது என்னுடைய குழப்பங்கள் தொடங்கிவிட்டன. இந்தக் குரலை இதற்குமுன்னால் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா? இல்லையா?

என்னுடைய புத்தகம், அல்லது கட்டுரைகளைப் படித்தவர்கள், அபூர்வமாகச் சில சமயங்களில்,  அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு ஃபோன் பேசி, என்னுடைய நம்பரைக் கேட்டுப் பெற்று நேரடியாகப் பாராட்டுவார்கள், அல்லது திட்டுவார்கள். அதுபோல் இந்தத் தஞ்சாவூர் தாமோதரனும் என்னுடைய வாசகராக இருப்பாரோ?

இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் சொன்ன அடுத்த வாக்கியம் என்னை இன்னும் குழப்பத்தில் தள்ளியது, ‘நாளைக்குப் பவுர்ணமி’

இதென்ன? தெலுங்கு டப்பிங் படத்துக்குப் பெயர் சூட்டுவதுபோல் ‘நாளைக்குப் பவுர்ணமி’ என்கிறார்? எனக்கும் பவுர்ணமிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, இவர் பவுர்ணமிக்குப் பவுர்ணமி உலக மக்கள் எல்லோருக்கும் ஃபோன் செய்து விசாரிக்கும் பழக்கம் கொண்டவரோ?

விதவிதமான கற்பனைகளின் தீவிரத்தில் நான் தலையைப் பிய்த்துக்கொள்வதற்குள் அவரே புதிரை அவிழ்த்துவிட்டார், ’நீங்கதான் அம்மனுக்குப் பவுர்ணமி பூஜை பண்ணனும்ன்னு சொல்லியிருந்தீங்க, அதான் ஃபோன் பண்ணேன்’

அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. அம்மன், பூஜை, அச்சச்சோ, இது என் மனைவி டிபார்ட்மென்ட்.

அவர்தான் சமீபத்தில் தஞ்சாவூர் சென்று திரும்பியிருந்தார். அங்கே ஏதோ ஓர் அம்மன் கோவிலில் பூஜைக்குப் பணம் செலுத்தியதாகவும் சொல்லியிருந்தார். நான்தான் வழக்கம்போல் மறந்துவிட்டேன்.

‘ஒரு நிமிஷம்’ என்று ஃபோனை என் மனைவியிடம் கொடுத்தேன், ‘யாரோ தஞ்சாவூர்லேர்ந்து பேசறாங்க, பேர் தாமோதரனாம்’

மறு விநாடி என் மனைவியின் முகம் மலர்ந்தது. ஃபோனை வாங்கிக்கொண்டு, ‘சொல்லுங்கோ மாமா’ என்று சகஜமாகப் பேசத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு வாக்கியம் கழித்து, தாமோதரன் வீட்டு நாய்க்குட்டியை நலம் விசாரிப்பாராக இருக்கும்.

அன்றைக்கு நாங்கள் பூங்காவிலிருந்து வீடு திரும்பும்வரை என் மனைவி தாமோதரன் குருக்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அம்மனின் பவுர்ணமி பூஜை எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கான திட்டம் ஒரு சின்னப் பிசிறு இல்லாமல் தயாராகிவிட்டது.

ஒரு வாரம் கழித்து எங்களுக்கு ஒரு கொரியர் வந்தது. தாமோதரன் குருக்களின் கொட்டைக் கையெழுத்தில் என் பெயர் ‘நாகா’ என்பதற்குப்பதில் ‘நாதா’ என்று எழுதப்பட்டிருந்தது.

மைதா மாவுக் கெட்டிப் பசையில் ஒட்டப்பட்டிருந்த அந்தக் கொரியரைக் கஷ்டப்பட்டுப் பிரித்தோம். உள்ளே இன்னொரு பார்சல், அதைப் பிரித்தால் ஓர் எவர்சில்வர் டிபன் பாக்ஸ், அதற்குள் ஒரு குங்குமப் பொட்டலம், அப்புறம் செங்கல் செங்கல்லாக பத்துப் பதினைந்து ’மைசூர் பா’க்கள்.

‘என்னாச்சு? தாமோதரன் குருக்கள் கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குப் போட்டியா மைசூர் பா வியாபாரத்தில இறங்கிட்டாரா?’

என்னுடைய கிண்டலை என் மனைவி அங்கீகரிக்கவில்லை, ‘ஸ்வாமி பிரசாதம், குறை சொல்லக்கூடாது’ என்றபடி டிபன் பாக்ஸைப் பூஜை அறைக்குக் கொண்டுசென்றார்.

அன்று இரவுச் சாப்பாட்டுடன் எல்லோருக்கும் அரை மைசூர் பா ஸ்வாமி பிரசாதம். டர்கிஷ் அல்வா அளவுக்குச் சுவையாக இல்லாவிட்டாலும், மொறுமொறுவென்று மொசுக்க நன்றாகதான் இருந்தது.

அடுத்த சில நாள்களுக்கு, என் மனைவி தாமோதரன் குருக்களை மனதாரப் புகழ்ந்துகொண்டிருந்தார், ‘நாம சொன்னதை ஞாபகம் வெச்சிருந்து ஃபோன் செஞ்சு, பூஜை பண்ணி, பிரசாதம் அனுப்பி, எவ்ளோ நல்ல மனசு பாரேன்!’

‘இத்தனையும் அவர் சும்மாச் செய்யலையே, பைசா பாக்கியில்லாம காசு வாங்கிட்டுதானே செஞ்சார்? இதென்ன பெரிய விஷயம்?’ நான் அலட்சியமாகச் சொன்னேன்.

’காசு கொடுத்தா எல்லாம் கிடைக்குமா? நான்தான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன், அம்மனுக்கு ஒரு பௌர்ணமி பூஜை செஞ்சுட்டு வா பார்க்கலாம்’

அத்துடன் அந்த விவாதம் முடிவடைந்தது. தாமோதரன் குருக்களின் கடமை உணர்ச்சி எங்கள் வீட்டில் எல்லோராலும் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இரண்டு மாதம் கழித்து, மறுபடி தாமோதரன் குருக்கள் எனக்கு ஃபோன் செய்தார். இந்தமுறை விவரமாக, ‘ஒரு பூஜை விஷயமாப் பேசணும்’ என்றே தொடங்கினார்.

வழக்கம்போல் ஃபோன் என் மனைவியின் கைக்கு மாறியது, ‘மாமா, சௌக்யமா’ என்று அவர் விசாரிக்கத் தொடங்கியதும் நான் வேறு அறைக்கு நகர்ந்தேன்.

தாமோதரன் குருக்களை நான் இதுவரை பார்த்தது கிடையாது. ஆனால் அவருடைய டயரிமுழுக்க என்னைப்போன்ற பக்தர்களின் தொலைபேசி எண்கள் நிறைந்திருப்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது.

பவுர்ணமியோ, பிரதோஷமோ, பிறந்த நாளோ, நட்சத்திரமோ, இன்னும் என்னென்னவோ, வருடத்தில் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் யார் யார் என்னென்ன பூஜை செய்யக்கூடும் என்பதை அவர் ஒரு எக்ஸெல் ஷீட்போல எழுதிவைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்தந்தத் தேதியில் அந்தந்த நபர்களை அழைத்துப் பேசினால் பூஜை உறுதியாகிவிடுகிறது. மணி ஆர்டரில் பணம் வந்துவிடும், பூஜை செய்து பிரசாதத்தைக் கொரியரில் அனுப்பிவிடலாம்.

கிட்டத்தட்ட இதே வேலையை நிறைய ‘ஈ-பூஜை’ இணைய தளங்கள் செய்துகொண்டிருக்கின்றன. அவர்களெல்லாம் NRIகளிடம் கிரெடிட் கார்டில் பணம் வாங்கி ஏர் மெயிலில் பிரசாதம் அனுப்புவார்களாக இருக்கும்.

தாமோதரன் குருக்களால் இவர்களைப் போன்றவர்களுடன் போட்டியிடமுடியாது. ஆனால், என் மனைவியைப் போன்றவர்களால்தான் அவர் வீட்டில் அடுப்பு எரிகிறதோ என்னவோ.

இந்தமுறை அம்மன் பிரசாதம் மைசூர் பா-வா, அல்லது ஜாங்கிரியா தெரியவில்லை. எனக்கென்னவோ அதைத் தீர்மானிக்கப்போவது தாமோதரனின் மகனோ, பேரனோதான் என்று தோன்றுகிறது.

***

என். சொக்கன் …

17 03 2009

டர்கிஷ் அல்வா கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பெங்களூரில் ‘ப்ளூ பெல்’ என்ற இனிப்புக் கடையில் கிடைக்கும் விசேஷ சமாசாரம் அது. கிட்டத்தட்ட ரோஸ் மில்க் சுவையில், கெட்டியான சச்சதுரத் துண்டுகளாக மனத்தை மயக்கும்.

இந்த டர்கிஷ் அல்வாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது, என் மனைவியின் சகோதரர் ராம் குமார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் டப்பா டப்பாவாக அல்வா கொடுத்து, சீக்கிரத்தில் நாங்களும் அந்தச் சுவைக்கு அடிமையாகிவிட்டோம்.

ரொம்ப நாளைக்கு, அந்த அல்வாவின் பெயர்க் காரணமே எங்களுக்குச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. நிஜமாகவே துருக்கியில் அப்படி ஓர் அல்வா கிடைக்கிறதா, அல்லது ’மைசூர் பாக்’போல சும்மா ஒரு பந்தாவுக்கு ‘துருக்கி அல்வா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்களா என்று  குழம்பினோம்.

பின்னர், என் கல்லூரித் தோழர், அலுவலக நண்பர் வெங்கடேசன் ஏதோ வேலை விஷயமாக துருக்கி சென்றார். அங்கே இப்படி ஓர் அல்வா கிடைக்கிறதா என்று அவரைத் தேடிப் பார்க்கச் சொன்னேன்.

வெங்கடேசனின் பூர்வீகம் திருநெல்வேலி. இருட்டுக்கடை அல்வாவைச் சுவைத்து வளர்ந்த அவரையும், இந்தத் துருக்கிக்கடை அல்வா கவர்ந்திருந்தது. பெங்களூரில் சுவைத்த அதே அல்வா துருக்கியிலும் உண்டா என்று ஆவலுடன் ஆராய்ச்சி செய்து, தேடிக் கண்டுபிடித்து வாங்கிவிட்டார்.

ஆனால், Anti Climax, அந்த நிஜமான துருக்கி அல்வா எங்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அதே சதுரம், அதே கெட்டித்தனம், வாயில் போட்டு மெல்லும்போது கிட்டத்தட்ட அதே அனுபவம். ஆனால் சுவை? பெங்களூர் டர்கிஷ் அல்வாவுக்குப் பக்கத்தில்கூட வரவில்லை.

ஆகவே, நாங்கள் மீண்டும் ‘ப்ளூ பெல்’ கடைகளைத் தஞ்சமடைந்தோம். கொஞ்சம் விலை ஜாஸ்தியாக இருந்தாலும், ஒரு விசேஷம் என்றால் டர்கிஷ் அல்வா இல்லாமல் அது நிறைவடையாது என்று நினைக்கத் தொடங்கிவிட்டோம்.

நங்கை பிறந்தபோது, அலுவலகத்தில் எல்லோருக்கும் டர்கிஷ் அல்வாதான் வாங்கிக் கொடுத்தேன். அதைச் சாப்பிட்டவர்களில் பெரும்பாலானோர், ‘இது என்ன? எங்கே கிடைக்கும்? எவ்வளவு விலை? எனக்கு ஒரு டப்பா வாங்கிவரமுடியுமா?’ என்று வாயையும் பர்ஸையும் அகலத் திறந்தார்கள்.

எனக்குப் பெருமை தாங்கவில்லை. இந்த அற்பப் பதர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று என் தலைக்குப் பின்னால் நானே ஓர் ஒளிவட்டம் வரைந்துகொண்டேன். கேட்டவர்களுக்கெல்லாம் டர்கிஷ் அல்வா வாங்கிக் கொடுத்தேன் – இலவசமாக இல்லை, காசு வாங்கிக்கொண்டுதான்.

அடுத்த சில தினங்களுக்குள், நான் ‘ப்ளூ பெல்’லின் அதிகாரப்பூர்வமற்ற விற்பனைப் பிரதிநிதியாக மாறியிருந்தேன். என்மூலமாகமட்டும் எங்கள் அலுவலகத்தில் குறைந்தபட்சம் பத்துப் பதினைந்து கிலோ அல்வா விற்பனையாகியிருக்கும்.

இப்படியாக ஒருநாள், நண்பர் ஒருவர் என்னைத் தேடி வந்தார், ‘நாளைக்கு மாமனார் வீட்டுக்குப் போறேன், எனக்காக அரை கிலோ டர்கிஷ் அல்வா வாங்கிட்டு வரமுடியுமா?’

என் தலைக்குப் பின்னாலிருந்த ஒளிவட்டம் அதிவேகத்தில் சுழன்றது, ‘ஓ, தாராளமா’ என்று புன்னகைத்தேன்.

அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில், அரை கிலோ அல்வா வாங்கிக்கொண்டேன். வீட்டுக்குச் சென்று அதை ரெஃப்ரிஜிரேட்டரில் பத்திரப்படுத்தினேன். அதன்பிறகு, அதைப்பற்றிச் சுத்தமாக மறந்துவிட்டேன்.

பிரச்னை, ராத்திரி பதினொரு மணிக்குத் தொடங்கியது.

என்னைப்போன்ற பூசணிக்காய் வயிறன்களுக்கு, மூன்று வேளைச் சாப்பாடு போதாது. ஒழுங்காக டின்னர் சாப்பிட்டுவிட்டுத் தூங்கினால் பரவாயில்லை, அப்படியில்லாமல் பதினொரு மணி, பன்னிரண்டு மணி என்று ராத்தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு படிப்பது, எழுதுவது, டிவி பார்ப்பது என நேரத்தைச் செலவிட்டால், அதற்கேற்பக் கடுமையாகப் பசிக்க ஆரம்பித்துவிடும். உலகக் கலாசாரத்தில் இதற்கு ‘Midnight Snacks’ என்று  கவித்துவமாகப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

அன்று இரவு, வயிற்றைக் கிள்ளும் பசியுடன் ஃப்ரிட்ஜைத் திறந்தேன். சட்டென்று அந்த அல்வா பாக்கெட்தான் என் கண்ணில் பட்டது.

அனிச்சையாகக் கையை நீட்டிவிட்டேன். அப்போதுதான், அது யாருக்கோ வாங்கிய சமாசாரம் என்பது நினைவுக்கு வந்தது.

என் கெட்ட நேரம், ‘ப்ளூ பெல்’ கடைக்காரர்களுக்கு இனிப்பு டப்பாக்களை உறுதியாக மூடி சீல் செய்கிற வழக்கம் இல்லை. சும்மா ரப்பர் பாண்ட் போட்டுச் சுழற்றியிருப்பார்கள், அவ்வளவுதான்.

அதாவது, நான் இந்த ரப்பர் பாண்டை விலக்கிவிட்டு, ஒன்றிரண்டு அல்வாக்களை நீக்கிச் சாப்பிடலாம். மீண்டும் அதைப் பழையபடி பேக் செய்துவிடலாம். விஷயம் யாருக்கும் தெரியாது.

இப்போது என் கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன. அடுத்தவர்களுக்காக வாங்கிய பொருளை நான் எடுத்துச் சாப்பிடுவதா? அசிங்கமில்லையா? ஏமாற்று இல்லையா? நம்பியவர்களை ஏமாற்றும் துரோகம் இல்லையா? இது தகுமா? நீதியா? நியாயமா? அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் படங்களின் கதாநாயகிகள் பேசும் வசனங்களைப்போல் எனக்குள் குழப்பக் கேள்விகள் சுற்றிவந்தன.

ஆனால், குழப்பமெல்லாம் என் மனத்துக்குதான். கைகள் சட்டென்று அந்த டப்பாவைப் பிரித்து ஒரு துண்டு அல்வாவை எடுத்து வாயில் போட்டுவிட்டன.

அத்துடன் என் பசி அடங்கிவிட்டது. தன்னிரக்கமும் குற்றவுணர்ச்சியும் தொடங்கிவிட்டது.

மறுநாள் காலை, குறைபட்ட அந்த அல்வா டப்பாவுடன் அலுவலகம் சென்றேன். ஒழுங்காக வண்டி ஓட்டக்கூட முடியாதபடி எனக்குள் ஏகப்பட்ட மனக் குழப்பம்.

ஐநூறு கிராமில் நான் எடுத்துத் தின்ற அல்வாத் துண்டு ஐம்பது கிராம் இருக்குமா? இது 500 இல்லை, 450தான் என்பதை அந்த நண்பர் எடை போட்டுப் பார்த்துவிடுவாரா? எங்கள் அலுவலகத்தில் தராசு எதுவும் இல்லையே!

பேசாமல், இந்த டப்பாவை நானே வைத்துக்கொண்டு, அவருக்கு இன்னொரு புதிய டப்பா அல்வா வாங்கித் தந்துவிடலாமா?

செய்யலாம். ஆனால், இந்த யோசனை தோன்றுவதற்குள் நான் ‘ப்ளூ பெல்’ கடையைத் தாண்டிச் சென்றிருந்தேன். ’யு டர்ன்’ அடித்துத் திரும்பிப் போகலாம் என்றால், போக்குவரத்து நெரிசல், அதற்குமேல் சோம்பேறித்தனம்.

ஆகவே, நான் தொடர்ந்து வண்டி ஓட்டியபடி எனக்கான நியாயங்களை உருவாக்கிக்கொண்டேன்:

  1. முதல் தவறு, ப்ளூபெல் கடைக்காரன்மேல். அவன் டப்பாவை ஒழுங்காக மூடி சீல் செய்திருந்தால், நான் அல்வாவைத் திருடியிருப்பேனா?
  2. அடுத்து, அந்த நண்பர் கேட்டவுடன் அல்வா வாங்கிக்கொடுக்க நான் என்ன அவர் வைத்த வேலைக்காரனா? இந்த வேலைக்குக் கூலியாக நான் ஒரு துண்டு அல்வாவை எடுத்துச் சாப்பிட்டால் என்ன தப்பு?
  3. என் வீட்டிலிருந்து அந்தக் கடை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம். ஆகவே, போக ஒன்றரை, வர ஒன்றரை என மூன்று கிலோ மீட்டர்கள் கூடுதலாகப் பயணம் செய்திருக்கிறேன். அந்த பெட்ரோல் காசுக்கு ஒரு துண்டு அல்வா சரியாப் போச்சு

இப்படி ஆயிரம் அசட்டுச் சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும், எனக்குள் நடுக்கம் தீரவில்லை. ஒருபக்கம் இந்த ஊழலை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது என்கிற நம்பிக்கை, இன்னொருபக்கம், ‘ஒருவேளை கண்டுபிடித்துவிட்டால்?’ என்கிற திகில், பலவிதமான அவமானங்களைக் கற்பனை செய்து என்னை நானே வருத்திக்கொண்டேன்.

அன்றைக்கு விபத்து எதுவும் இல்லாமல் நான் ஒழுங்காக அலுவலகம் சென்று சேர்ந்தது பூர்வ ஜென்ம புண்ணியம்தான். அல்வாப் பாக்கெட்டுடன் படியேறுகையில் அங்கேயே சுருண்டு விழுந்துவிடுவேனோ என்று கலக்கமாக இருந்தது, அந்த டப்பாவுடன் யார் கண்ணிலும் பட அவமானமாக உணர்ந்தேன்.

ஆகவே, அதற்குமேல் ஒரு விநாடிகூடத் தாமதிக்காமல், நேராக அந்த நண்பரின் மேஜைக்குச் சென்றேன். அல்வா டப்பாவைக் கொடுத்தேன்.

அவர் சட்டென்று எழுந்து, ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்று புன்னகைத்தார்.

ஆனால், என்னால் அவரை நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை. நேற்றிரவு சாப்பிட்ட அல்வாத் துண்டின் மிச்சம் இன்னும் வாயில் ஒட்டியிருப்பதுபோலவும், அவர் என் உதட்டையே உற்றுப் பார்ப்பதுபோலவும் தோன்றியது. ‘நானும் கால் கிலோ அல்வா வாங்கி சாப்பிட்டேன்’, என்று அவசியமில்லாமல் பொய் சொன்னேன்.

அவர் பர்ஸைக் கையில் எடுத்தபடி, ‘நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்?’ என்றார்.

’சரியா ஞாபகமில்லை, அப்புறமா கணக்குப் போட்டுச் சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக என் மேஜைக்குத் திரும்பினேன்.

அதன்பிறகு, நானும் அந்த விஷயத்தை எடுக்கவில்லை, அவரும் சுத்தமாக மறந்துவிட்டார். 50 கிராம் அல்வாவைத் திருடியதற்குப் பரிகாரம், 450 கிராம்!

போகட்டுமே, அதனால் கிடைத்த நிம்மதி? அதற்கு விலை உண்டா?

அந்த சந்தோஷத்துடன், அடுத்தவர்களுக்கு அல்வா வாங்கித் தருகிற பழக்கத்துக்கு நான் ஒரு முழுக்குப் போட்டுவிட்டேன். என் தலைக்குப் பின்னே சுழன்றுகொண்டிருந்த ஒளிவட்டமும் சுருண்டு படுத்து மறைந்துவிட்டது.

***

என். சொக்கன் …

09 03 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

எங்கள் வீட்டில் ஒரு கார் இருக்கிறது, கம்பெனியில் கொடுத்தது. ஆனால் நான் இன்னும் அதனை ஓட்டப் பழகவில்லை.

ஒருமுறை கார் ஓட்டும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பத்து நாள் செம மொக்கை போட்டபிறகு, லைசென்ஸ் பரீட்சைக்குப் போனேன். அங்கே நான் சந்தித்த ’வரலாறு காணாத தோல்வி’யைப்பற்றி இன்னொரு நாள் விவரமாக எழுதப்பார்க்கிறேன். இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு.

கார் ஓட்டுவதற்கான தகுதியோ திறமையோ எனக்குச் சுத்தமாக இல்லாததால், என்றைக்காவது வெளியே ஷாப்பிங், பிக்னிக் அல்லது சுற்றுலாப் போக நினைத்தால், ஒன்று, ஆட்டோவை நாடவேண்டும், இல்லாவிட்டால், வெளியிலிருந்து கார் டிரைவர்களை வாடகைக்குக் கூப்பிடவேண்டும்.

பெங்களூரில் ‘On Call Drivers’க்குக் குறைச்சலே இல்லை. ஆனால், தேவை ஜாஸ்தி என்பதால், நான்கைந்து மணி நேரம் முன்னதாகவே பதிவு செய்யவேண்டும். அதன்பிறகும், திடீரென்று ஃபோன் செய்து, ‘இன்னிக்கு வரமுடியாது சார்’ என்று கழுத்தறுப்பார்கள். திட்டத்தை மாற்றவேண்டியதுதான்.

அதுமட்டுமில்லை, யாரோ ஒரு ஊர், பெயர் தெரியாத டிரைவரை நம்பி எப்படிக் காரில் உட்கார்வது? எங்கேனும் வண்டியை நிறுத்திவிட்டுக் கடைகளுக்கோ, தியேட்டருக்கோ போகவேண்டியிருந்தால், எந்த நம்பிக்கையில் அவரிடம் சாவியைக் கொடுப்பது? நாங்கள் இந்தப் பக்கம் போனதும், அவர் இன்னொரு பக்கம் காரைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடமாட்டார் என்பது என்ன நிச்சயம்? அதற்காக, சாவியை வாங்கிக்கொண்டு அவரை வெளியே வெய்யிலில் நிற்க வைப்பதும் மனிதத்தன்மை இல்லையே!

இப்படி ஏகப்பட்ட பிரச்னைகளால், கொஞ்ச நாள் காரைத் தொடாமலே வைத்திருந்தோம். அப்படிச் சும்மா போட்டுவைத்தால் கார் வயர்களை எலி கடிக்கும், எறும்பு கடிக்கும் என்று சில நண்பர்கள் பயமுறுத்தியதால், வேறு வழிகளை யோசித்தோம்.

வழக்கம்போல், இந்தமுறையும் என் மனைவிதான் ஒரு பிரமாதமான மாஸ்டர் ப்ளானை முன்வைத்தார்.

எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கிற ஒருவருக்கும், அவருடைய கம்பெனியில் கார் கொடுத்திருக்கிறார்கள், கூடவே சம்பளத்துக்கு டிரைவரும் போட்டிருக்கிறார்கள்.

இந்த டிரைவர், தினமும் அதிகாலையிலேயே சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு எங்கள் அபார்ட்மென்ட் வாசலுக்கு வந்துவிடுவார். அவருடைய ‘பாஸ்’ குளித்துச் சாப்பிட்டுப் படி இறங்கி வரும்வரை சும்மா உட்கார்ந்திருக்காமல், காரைத் திறந்து துடைப்பது, கழுவுவது என்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பார்.

இவருக்கு, வாரத்தில் ஐந்து நாள்கள்தான் வேலை. சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை.

’அதனால், யாரோ ஒரு டிரைவருக்கு அலைவதைவிட, விடுமுறை நாள்களில் இவருடைய ஓய்வு நேரத்தை நாம் உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளலாமே’ என்றார் என் மனைவி, ‘பாவம், அவருக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வருமானம் கிடைச்சமாதிரி இருக்கும், நமக்கும் நிம்மதி’

நல்ல யோசனைதான். தலையாட்டிவைத்தேன். மறுநாளே அந்த டிரைவரிடம் இதுபற்றிப் பேசி, அவருடைய சம்மதத்தையும், மொபைல் நம்பரையும் வாங்கிவைத்துவிட்டார் என் மனைவி.

அந்த வார இறுதியில், நாங்கள் ஒரு நண்பர் வீட்டுக்குப் போகவேண்டியிருந்தது. இந்த டிரைவரைத் தொலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொன்னோம், ‘நாலரை மணிக்கு வரமுடியுங்களா?’

‘வந்துடறேன் சார்’

நான்கு இருபத்தைந்துக்கு அவர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார், ‘கார் சாவி?’ என்றார்.

இந்த அளவு நேரம்தவறாமை எங்களுக்குப் பழக்கமில்லை. நாங்கள் நிதானமாக ஐந்தே கால் மணிக்குத் தயாராகிக் கீழே வரும்போது, அவர் வண்டியைச் சுத்தமாகத் துடைத்துக் கழுவி வைத்திருந்தார்.

அவருடைய தாய்மொழி கன்னடம். என்றாலும், உடையாத தமிழ் பேசினார், காரை மிகவும் நிதானமாக ஓட்டினார், அநாவசியமாக நம்முடைய குடும்பப் பேச்சுகளில் குறுக்கிடுகிற, அரசியலோ, சினிமாவோ, கிரிக்கெட்டோ பேசி வம்பு வளர்க்கிற பழக்கம் இல்லை, அவசியம் ஏற்பட்டாலொழிய வாய் திறப்பதில்லை, எங்கே, எவ்வளவு தாமதமானாலும் முகம் சுளிக்கவில்லை.

வீடு திரும்பியதும், நாங்கள் வழக்கமாக ‘On Call Drivers’க்குக் கொடுக்கிற தொகையை நிமிட சுத்தமாகக் கணக்கிட்டுக் கொடுத்தோம். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, முகமெல்லாம் சிரிப்பாக வாங்கிக்கொண்டு, நான்குமுறை கும்பிட்டுவிட்டு விடைபெற்றார்.

அதன்பிறகு, நான் அலுவலகம் போகப் படியிறங்கும்போதெல்லாம், அவர் என்னைப் பார்த்துச் சிரிப்பது வழக்கமாயிற்று. வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம் என்றால் அவருக்கும் ஒரு கப் ஸ்வீட், காரம் கண்டிப்பாகப் போகும்.

அவருடன் அடிக்கடி வெளியே சுற்றிவந்ததில், அவர் எங்களுடன் மிகவும் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். ஆனாலும், அதே அமைதி, சுலபத்தில் வாய் திறப்பது கிடையாது.

ஒரு விஷயம்மட்டும் அவர் சொல்லாமலே எங்களுக்குப் புரிந்தது. என்னதான் மாதச் சம்பளம் வாங்கினாலும், அது அவருடைய குடும்பத்துக்குப் போதவில்லை. எங்கள்மூலமாகக் கிடைக்கும் இந்தக் கூடுதல் வருமானம் அவருக்குப் பெரிய உதவியாக இருக்கும்.

போன வாரம், என் அப்பா இங்கே பெங்களூர் வந்திருந்தார். அவரை வெளியே அழைத்துச் செல்வதற்காக இந்த டிரைவரை அழைத்தோம்.

வழக்கம்போல், சரியான நேரத்துக்கு வந்தார், பத்திரமாக வண்டி ஓட்டினார், கொடுத்த காசைக் கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

அப்போதுதான், பிரச்னை தொடங்கியது. எங்களிடம் பேசிவிட்டுப் படியிறங்கிச் சென்றவரை, அவருடைய ‘பாஸ்’ஸின் மனைவி பார்த்திருக்கிறார்.

ஞாயிற்றுக் கிழமை, டிரைவருக்கு விடுமுறை நாள், அப்போது அவர் என்ன செய்கிறார் என்பது அவருடைய சொந்த விருப்பம். அதன்மூலம் அவருக்கு ஐம்பது, நூறு வருமானம் வந்தால், அது அவருடைய செலவுகளுக்குத் தோள் கொடுக்கும் – இந்த விஷயமெல்லாம் அந்த நல்ல மனத்துக்காரருக்குப் புரியவில்லை. நேராகத் தன் கணவரிடம் சென்று வத்தி வைத்துவிட்டார்.

அவரும் நல்ல மனத்துக்காரர்தான். உடனடியாகத் தன்னுடைய நிறுவனத்துக்கு ஒரு ஈமெயில் எழுதியிருக்கிறார், ‘நீங்கள் கொடுத்த டிரைவர் சரியில்லை, அடிக்கடி வெளி ஆள்களுக்குக் கார் ஓட்டப் போய்விடுகிறார்’

மறுநாள், அந்த நிறுவனத்தில் ஒரு விசாரணைக் கமிஷன் நிறுவப்பட்டிருக்கிறது. ‘ஞாயிற்றுக் கிழமைகளில்மட்டும்தான் நான் வெளி நபர்களுக்குக் கார் ஓட்டுகிறேன், அதுவும் எப்போதாவதுதான்’ என்று அவர் சொன்ன பதில், அம்பலம் ஏறவில்லை.

இப்போது, அந்த டிரைவர் எந்த நேரத்தில் தன் வேலை போகுமோ என்று பயந்துகொண்டிருக்கிறார். Technically, அவரும் ஓர் ஐடி நிறுவனத்தின் ஊழியர் என்பதால், யூனியன் சமாசாரமெல்லாம் அவருக்குத் துணை வராது.

இந்த விஷயத்தில் எங்கள் நிலைமைதான் பரிதாபம். ஒருவருக்கு உதவி செய்வதாக நினைத்து, எங்கள் சவுகர்யத்துக்காக அவருடைய உத்தியோகத்துக்கு வேட்டு வைத்துவிட்டோமோ என்று நினைக்க மிகவும் குற்றவுணர்ச்சியாக இருக்கிறது 😦

***

என். சொக்கன் …

04 03 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,575 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031