மனம் போன போக்கில்

Archive for February 2009

சென்ற வாரம் சென்னையில் ஒரு பத்திரிகை நண்பரைச் சந்தித்தபோது சுவாரஸ்யமான கேள்வி ஒன்றை எழுப்பினார்:

‘இன்றைய தமிழ் தினசரி, வார, மாதப் பத்திரிகைகள்ல, நீங்க தவறாம படிக்கிற, அடுத்த அத்தியாயம் எப்ப வருமோன்னு பதைபதைப்போட எதிர்பார்க்கிற, ஒருவேளை தவறவிட்டுட்டா மனம் வருத்தப்படறமாதிரி தொடர் கதை அல்லது தொடர் பகுதி (Non-fiction Series) ஏதாவது இருக்கா?’

அவர் கேட்டுவிட்டாரே என்பதற்காக எவ்வளவோ யோசித்துப் பார்த்தேன். ம்ஹூம், எதுவும் தோன்றவில்லை. நேர்மையாக அன்றி, சும்மா பாவ்லாவுக்காகக்கூட ஒரு பதில் சொல்லமுடியவில்லை.

உங்களுக்கு எப்படி?

***

என். சொக்கன் …

28 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இலங்கையில் ஓர் அரசன். அவனுக்கு இரண்டு மகன்கள்.

தன்னுடைய மகன்களுக்கு நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுக்க நினைத்த அரசன், ஐநூறு புத்த பிட்சுகளை அழைக்கிறான். அவர்களுக்கு நல்ல விருந்துச் சாப்பாடு போட்டு உபசரிக்கிறான்.

விருந்து முடிந்தபிறகு, பிட்சுக்கள் எல்லோரும் சாப்பிட்டு மீதி இருக்கும் உணவை அரசன் மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறான். அதைத் தனித்தனி தட்டுகளில் வைத்துவிட்டு, தன் மகன்களை அழைக்கிறான்.

’கண்ணுங்களா, நம்ம குடும்பத்தை, குலத்தைப் பாதுகாக்கிறவர்கள் இந்த பிட்சுகள்தான். அவர்களை எப்போதும் மறக்கமாட்டோம்-ங்கற நினைப்போட இந்த முதல் தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’

அரசனின் மகன்கள் மறுபேச்சு இல்லாமல் அந்தச் சாப்பாட்டை உண்டு முடிக்கிறார்கள். அடுத்து, இரண்டாவது தட்டைக் காண்பிக்கிறான் அரசன்.

‘அண்ணன், தம்பி நீங்க ரெண்டு பேரும் எப்போதும் சண்டை போட்டுக்கக்கூடாது, ஒண்ணா ஒற்றுமையா வாழணும், அந்த உறுதியோட இந்த ரெண்டாவது தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’

மறுபடியும், அரசனின் மகன்கள் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறார்கள். அரசன் கடைசியாக மிச்சம் உள்ள மூன்றாவது தட்டைக் காண்பித்துச் சொல்கிறான்:

‘நம்ம ஊர்ல உள்ள தமிழர்களோட நீங்க எப்பவும் சண்டை போடக்கூடாது, அதுக்காக இந்த மூணாவது தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’

இப்போது, அந்த இளவரசர்களின்  முகம் மாறுகிறது. தட்டைத் தள்ளிவிடுகிறார்கள், சாப்பிட மறுத்துவிடுகிறார்கள்.

ஒருபக்கம், பத்து, பன்னிரண்டு வயதுச் சின்னப் பையன்களுக்குச் சக மனிதர்கள்மீது இத்தனை வெறுப்பா, பகைமை உணர்ச்சியா என்கிற கேள்வி. இன்னொருபக்கம், இன்றைய இலங்கையில் நடைபெறும் படுகொலைகளின் பின்னணியில் இந்தக் கதையை யோசித்துப் பார்க்கும்போது, நிஜமாகவே அதிர்ச்சியாகதான் இருக்கிறது.

இந்தக் கதை இடம்பெற்றிருக்கும் நூல், மகா வம்சம். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் மஹாநாம தேரா என்பவரால் தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகம், இலங்கையின் பூர்வ சரித்திரமாக மதிக்கப்படுகிறது.

நிஜமாகவே மகா வம்சம் சரித்திரம்தானா? அல்லது, முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட கதைகள், மிகை உணர்ச்சிகளின் தொகுப்பா? உண்மை இந்த இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கலாம்.

சில ஆண்டுகளுக்குமுன்னால் ஏதோ ஒரு பத்திரிகைக் கட்டுரைக்கான ஒரு தகவலைத் தேடி மகா வம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அதில் ஆங்காங்கே தென்பட்ட ‘மேஜிக்கல்’ அம்சங்கள் வியப்பூட்டின. பின்நவீனத்துவ பாணியில் ஓர் இதிகாசத்தை யாரோ எழுதியிருக்கிறார்கள் என்பதுபோல் அரைகுறையாகப் புரிந்துகொண்டேன். அத்துடன் அதை மறந்துவிட்டேன்.

அதன்பிறகுதான் மகா வம்சம் தமிழில் வெளிவந்தது. இதனை மொழிபெயர்த்திருப்பவர், ஆர். பி. சாரதி. (கிழக்கு பதிப்பக வெளியீடு – ஜனவரி 2007 – 238 பக்கங்கள் – விலை: ரூ 130/-)

மகாவம்சம்

இந்த நூலின் பின்னட்டையிலிருந்து ஒரு வாசகம்:

சிங்களப் பேரினவாதம்’ என்று தமிழர்களால் வருணிக்கப்பட்டு, இன்றளவும் இலங்கையில் கொழுத்து விட்டெரியும் இனப் பிரச்னையின் வேர், மகாவம்சத்தில் இருந்துதான் உதிக்கிறது. அதனால்தான், சர்ச்சைக்குரிய ஒரு நூலாக மகா வம்சம் கருதப்படுகிறது

மகா வம்சத்தைத் தமிழர்கள் ஏற்கிறார்களோ, புறக்கணிக்கிறார்களோ, சிங்களவர்கள் இதனை ஒரு புனித நூலாகக் கருதுகிறார்கள். மூன்றாவது தட்டுச் சோற்றைச் சாப்பிட மறுத்த இளவரசர்களைப்போல, அவர்கள் முரட்டுத்தனமாகத் தமிழர்கள்மீது இன்னும் பகைமை கொண்டிருப்பதன் ஆதி காரணம் இதுவாக இருக்கலாம்.

அப்படி என்னதான் சொல்கிறது மகா வம்சம்?

நம் ஊர் ராமாயணம், மகா பாரதம்போல் மகா வம்சத்தில் சுவாரஸ்யமான ஒரு கதைத் தொடர்ச்சி இல்லை. வரிசையாக இலங்கையை ஆண்ட அரசர்களின் வாழ்க்கைக் கதைதான். ஏதோ ஓர் அரசர், அவருடைய புத்த மதப் பிரியம், பிட்சுக்கள்மீது அவர் செலுத்திய மரியாதை, கட்டிய கோவில்கள், நிகழ்த்திய மதமாற்றங்கள், அப்புறம் அடுத்த அரசர் என்று கோடு போட்டதுபோல் நீண்டு செல்லும் பதிவுகள்.

மதன் எழுதிய ‘வந்தார்கள், வென்றார்கள்’ படித்தவர்களுக்கு மகா வம்சம் செம போர் அடிக்கும். காரணம், முகலாய ஆட்சியின் மிகச் சுவாரஸ்யமான சம்பவங்களை நேர்த்தியாகத் தொகுத்துச் சுவையான கதைப் பின்னணியில் விவரித்திருந்தார் மதன். அதற்கு நேரெதிராக, மகா வம்சத்தில் ஒரே கதையைப் பல அத்தியாயங்களாகக் காபி – பேஸ்ட் செய்து படிப்பதுபோல் இருக்கிறது.

ராமாயணம், மகாபாரதம், முகலாய சரித்திரம், மகா வம்சம் நான்கையும் ஒரே புள்ளியில் வைத்து ஒப்பிடுவது சரியில்லைதான். ஆனாலும், மகா வம்சம்மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் படிக்கத் தொடங்கியவர்களுக்கு அது ஓர் ஒழுங்கற்ற கட்டமைப்பு கொண்ட பிரதியாகத் தோன்றுவது சாத்தியமே.

நல்லவேளையாக, ஆர். பி. சாரதி அவர்களின் சரளமான தமிழ் மொழிபெயர்ப்பு வாசிக்கச் சுகமாக இருக்கிறது. குறிப்பாக, ஆங்காங்கே தென்படும் மாந்த்ரீக எதார்த்த (Magical Realism) அம்சங்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. உதாரணத்துக்குச் சிலது:

  • ஓர் இளவரசி, யாத்திரை போகிறாள். அவள் போன கோஷ்டியை ஒரு சிங்கம் தாக்குகிறது. ஆனால், அவளைப் பார்த்ததும் காதல் கொண்டு, வாலை ஆட்டிக்கொண்டு, காதுகளைப் பின்னே தள்ளிக்கொண்டு பக்கத்தில் வருகிறது. அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். சிங்க வடிவத்தில் அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள். (இங்கிருந்துதான் ‘சிங்கள’ இனம் தொடங்குகிறது)
  • இன்னோர் இடத்தில், ஏரியிலிருந்து கிளிகள் தொண்ணூறாயிரம் வண்டிச் சுமை நெல்லைக் கொண்டுவருகின்றன. அதைச் சுண்டெலிகள் அரிசி முனை முறியாமல், உமி, தவிடு இல்லாமல் கைக்குத்தல் அரிசியாகச் சுத்தமாக்குகின்றன
  • பாலி என்ற இளவரசி, சாப்பாட்டுக்காகத் தட்டு வேண்டி ஆல மர இலைகளைப் பறிக்கிறாள். உடனே அவை தங்கப் பாத்திரங்களாக மாறுகின்றன
  • போதி மரத்தை வெட்டக்கூடாது. அதுவே விடுபட்டுக் கீழே விழுந்தால்தான் உண்டு. அதற்காக ஒரு ரசாயன(?)ப் பேனா இருக்கிறது. தங்கப் பிடி வைத்த அந்தப் பேனாவால் போதி மரக் கிளையில் ஒரு கோடு போட்டுவிட்டு வணங்கினால், மரம் தானே துண்டாகிக் கீழே விழுந்து நிற்கிறது

இப்படித் தொடங்கும் புத்தகம், கொஞ்சம் கொஞ்சமாக மாயங்கள் குறைந்து, அற்புதங்கள் என்று சொல்லத் தகுந்த விஷயங்கள் அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் கதைகள்மட்டும் வருகின்றன. பின்னர் ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் ஒரு தத்துவம் தவறாமல் தென்படுகிறது. இப்படி:

புனிதர்கள் மிகச் சிறந்த ஆசிகளைப் பெற, சிறப்பான தூய பணிகளைச் செய்வார்கள். அவ்வாறு சிறந்த தூய பலரைத் தொண்டர்களாகப் பெறுவதற்காக, அவர்களையும் தூய மனத்துடன் பணியாற்றச் செய்வார்கள்

மகா வம்சம் இலங்கையின் சரித்திரமாகச் சொல்லப்பட்டாலும், ஆங்காங்கே இந்திய வாசனையும் அடிக்கிறது. சில சமயங்களில் நாம் நன்கு கேட்டிருக்கக்கூடிய உள்ளூர்க் கதைகளுக்கு வெளிநாட்டுச் சாயம் பூசியதுபோல் தோன்றுகிறது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக, எலரா என்ற தமிழ் அரசனின் கதை.

எலராவுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப்பட்டிருக்கிறது. நீதி கேட்டு வருகிறவர்கள் எந்நேரமும் அதை அடிக்கலாம்.

ஒருநாள், எலராவின் மகன் தேரில் போகும்போது தெரியாமல் ஒரு கன்றுக் குட்டியைக் கொன்றுவிடுகிறான். வேதனையில் அந்தப் பசு எலராவுடைய மணியை அடிக்க, அவன் அதே தேர்ச் சக்கரத்தின் அடியின் தன் மகனைக் கிடத்திக் கொன்று தண்டனை கொடுக்கிறான்.

நம் ஊர் மனு நீதிச் சோழன் கதையும் கிட்டத்தட்ட இதேதான். ஆனால் எலராவின் கதையில் இன்னொரு சம்பவம் கூடுதலாக இருக்கிறது.

இன்னொரு நாள், எல்ரா வீதியில் போய்க்கொண்டிருக்கும்போது, அவனுடைய வாகனத்தின் முனை புத்த ஸ்தூபியின்மீது இடித்துவிடுகிறது. வேண்டுமென்றே செய்யாவிட்டாலும், அது தவறுதான் என்பதை உணர்ந்த அரசன் எல்ரா, வீதியில் படுத்துக்கொண்டு, தன்மீது தேரை ஏற்றிக் கொல்லும்படி உத்தரவிடுகிறான். புத்த பிட்சுக்கள் அவனை மன்னித்து ஆசி வழங்குகிறார்கள்.

இன்னோர் அரசனுக்கு, பத்து மகன்கள், ஒரு மகள். அந்தப் பெண் பிறந்ததும், ‘இவளுடைய மகன், தன்னுடைய மாமன்களை, அதாவது அந்தப் பெண்ணின் அண்ணன்களைக் கொல்லப்போகிறான்’ என்று ஜோதிடம் சொல்கிறது.

பதறிப்போன அண்ணன்கள், கம்சனைப்போல் ரொம்ப நாள் காத்திருக்காமல், உடனே தங்களுடைய தங்கையைக் கொன்றுவிட முடிவெடுக்கிறார்கள். அவர்களுடைய அப்பா தலையிட்டுத் தடுத்து நிறுத்துகிறார்.

பிறகு, அவர்கள் அந்தத் தங்கையைச் சிறை வைக்கிறார்கள். அப்படியும் அவள் ஒருவனைக் காதலித்து, கல்யாணம் செய்து, குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை கை மாறி இன்னோர் இடத்தில் வளர்கிறது.

இதைக் கேள்விப்பட்ட மாமன்கள், அந்த ஏரியாவில் உள்ள குழந்தைகளையெல்லாம் கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள். அப்படியும் அந்தக் குழந்தைமட்டும் என்னென்னவோ மாயங்களைச் செய்து வளர்கிறது, அதுவும் இடையனாக.

இப்படிப் பல இடங்களில் மகா வம்சமும் இந்தியாவில் நாம் கேட்டிருக்கக்கூடிய இதிகாச, புராண, செவி வழிச் செய்திகள், குழந்தைக் கதைகளும் கலந்து வருகின்றன – சம்பவங்களில்மட்டுமில்லை, சில வர்ணனைகளில்கூட இதுபோன்ற ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யம்தான்.

கடைசியாக, புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு குட்டிக் கதைகளைச் சொல்லவேண்டும்.

தேவனாம் பிரியதிசா என்ற ஓர் அரசன். அவனைச் சந்திக்கும் துறவிகள் அரசனைப் பரிசோதிப்பதற்காகச் சில கேள்விகளைக் கேட்கிறார்கள்.

‘அரசே, இந்த மரத்தின் பெயர் என்ன?’

‘மாமரம்’

‘இதன் பக்கத்தில் மேலும் ஒரு மாமரம் இருக்கிறதா?’

‘பல மாமரங்கள் இருக்கின்றன’

‘மாமரங்களையடுத்து வேறு மரங்கள் இருக்கின்றனவா?’

‘மாமரம் தவிரவும் பல வேறு மரங்கள் இருக்கின்றன’

‘இவற்றைத் தவிர வேறு ஏதாவது மரம் இருக்கிறதா?’

‘இதோ, இந்த மாமரம்தான் இருக்கிறதே?’

கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடியை நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுங்கள். அடுத்த கேள்வியையும் படித்துவிடுங்கள்:

’அரசே, உனக்கு உறவினர்கள் இருக்கிறார்களா?’

‘பலர் இருக்கிறார்கள் ஐயா’

‘உறவினர்கள் அல்லாத பலரும்கூட இருக்கிறார்கள் அல்லவா?’

‘உறவினர்களை விட அதிகமான அளவில் இருக்கிறார்கள்’

‘நீ கூறிய உறவினர்கள், உறவினரல்லாத பிறரைத் தவிரவும் இன்னும் யாராவது இருக்கிறார்களா?’

‘நான் இருக்கிறேனே ஐயா’

‘அரசே, நீ புத்திசாலிதான்’

நேர்முகத் தேர்வில் அடுத்தடுத்து ஒரேமாதிரி இரண்டு கேள்விகள் கேட்கக்கூடாது என்கிற நவீன மனித வளத் தத்துவம் அந்தத் துறவிக்குத் தெரியவில்லைபோல, அரசனின் புத்திசாலித்தனத்தை தாராளமாகப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.

இந்த அரசன் புத்திசாலி என்றால், இன்னோர் அரசன் வீண் குறும்புத்தனத்தால் அழிகிறான். அவன் கதை இப்படி:

ஒரு காவலன் அரசனைப்போலவே தோற்றம் கொண்டிருந்தான். வேடிக்கைக்காக, அவனை அரசனைப்போலவே அலங்கரித்து, சிம்மாசனத்திலும் அமரவைப்பான். அரசன் காவல்காரனுடைய உடை, தலைப்பாகைகளை அணிவான். கையில் கோலுடன் காவல் பணி மேற்கொள்வான்.

ஒருநாள், இவ்வாறு வேடமிட்ட காவல்கார அரசனைப் பார்த்து, காவல்கார வேடத்தில் இருந்த உண்மையான அரசன் பலமாகச் சிரித்தான்.

‘என் முன்னே காவல்காரன் சிரிப்பதா?’ என்று அவனைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டுவிட்டான் காவல்கார அரசன்.

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை, ஒருவர் இலங்கை அரியணையில் அமர்ந்தாலே, இதுபோன்ற கிறுக்குத்தனங்களும், இரக்கமில்லாத மனமும் தானாக வந்துவிடும்போலிருக்கிறது!

***

என். சொக்கன் …

28 02 2009

நேற்றிலிருந்து ஒரு வாரம் சென்னையில் ஜாகை. வழக்கம்போல் ’ட்ரெய்னிங்’தான், வேறென்ன?

ஞாயிற்றுக் கிழமை காலை செம டென்ஷனுக்கு நடுவே சதாப்தி எக்ஸ்பிரஸைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன். முதல் இரண்டு மணி நேரம் படு வேகம், அடுத்த மூன்று மணி நேரம் ஆமை வேகம் என்று சதாப்தி செம போர்.

ரயிலில்மட்டுமில்லை, அதன்பிறகு ஹோட்டல் அறையிலும் நாள்முழுக்கச் சும்மா உட்கார்ந்திருந்ததில் வெறுத்துப் போனேன். மாலை நேரத்தில் எங்காவது உலாத்தலாமே என்று வெளியே வந்து, தி. நகரின் உலகப் புகழ் (?) பெற்ற ரங்கநாதன் தெருவைத் தரிசித்துத் திரும்பினேன்.

இந்தப் புனிதப் பயணத்தின் விளைவாக எனக்குள் எழுந்த பத்து கேள்விகளைப் பதிவுலகத்தின் பரிசீலனைக்காகப் பணிவுடன் (எத்தனை ‘ப’!) சமர்ப்பிக்கிறேன்.

ஒன்று

’சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரங்கநாதன் தெருவுக்குள்மட்டும் போகாதே, நசுங்கிவிடுவாய்’ என்று நண்பர்கள் பலர் பயமுறுத்தியிருக்கிறார்கள். அதற்கு ஏற்ப, அந்தத் தெருவினுள் நுழைந்த விநாடிமுதல் ‘மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும் தேரு போகுது’ என்று இளைய ராஜா குரலில் பாடிக்கொண்டுதான் மிக மெதுவாக நகர்ந்து செல்லவேண்டியிருக்கிறது.

ஆனால் எனக்கென்னவோ ரங்கநாதன் தெருவைவிட, மிச்சமுள்ள தி. நகர் ஷாப்பிங் தெருக்கள்தான் அதிகக் கூட்ட நெரிசல் கொண்டவையாகத் தோன்றின. எல்லோரும் ‘நசுங்க’லுக்குப் பயந்து ரங்கநாதன் தெருவுக்கு வெளியிலேயே ஷாப்பிங்கை முடித்துக்கொண்டுவிடுகிறார்களோ?

இரண்டு

ரங்கநாதன் தெரு என்பதை ஏன் இன்னும் தமிழ் முறைப்படி ‘அரங்கநாதன் தெரு’ என்று மாற்றவில்லை? இதற்காக ஓர் அறப் போராட்டம் நடத்தி பப்ளிசிட்டி தேடிக்கொள்ள ஒரு கட்சிகூடவா இல்லை?

மூன்று

ரங்கநாதன் தெருவுக்குள் நுழையும் மக்கள், தானாக ஓர் ஒழுங்கு அமைத்துக்கொண்டு நடப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இடதுபக்கம் உள்ளே நுழைகிறவர்கள், வலதுபக்கம் வெளியே வருகிறவர்கள், நடுவில் உள்ள சிமெண்ட் மேடு, அவ்வப்போது வரிசை தாண்டி ஓடும் அவசரப் பிறவிகள், நோட்டீஸ் விநியோகிக்கும் பேர்வழிகளுக்கானது.

இந்த ஒழுங்கு ஏன், அல்லது எப்படி வந்தது? Mob Mentality / Social Behaviorபற்றி ஆய்வுகள் செய்யும் Malcolm Gladwell போன்ற எழுத்தாளர்கள், ரங்கநாதன் தெருவைப்பற்றி ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதுவார்களா?

நான்கு

கடைக்காரர்களின் ‘வாங்க சார், வாங்க மேடம்’ கூக்குரல்கள், மக்களின் விவாதங்கள், கருத்து மழைகள், இலவச ஆலோசனைகள் போதாது என்று, எல்லாக் கடை வாசலிலும் டிவி வைத்து திராபை டிவிடி ப்ளேயரில் வண்ணமயமான விளம்பரங்களைத் திரும்பத் திரும்ப ‘லூப்’பில் ஒளிபரப்புகிறார்களே, யாருக்குக் கேட்கும் அது? இந்த ஏற்பாட்டால் என்ன பிரயோஜனம்?

ஐந்து

’இந்தமாதிரி ஒரு படத்தை நான் என் லைஃப்ல பார்த்ததே கிடையாது மச்சி’ என்று சொல்லிக்கொண்டே ஒருவர் கடந்து போனார். எந்தப் படம்? Word Of Mouth Publicity இப்படி வீணாகலாமா?

ஆறு

ரங்கநாதன் தெருவில் அதிகம் தென்படும் பெயர், ‘சரவணா’. ஒரு கடை அண்ணனுடையது, இன்னொன்று தம்பியுடையது, மூன்றாவது அண்ணாச்சி பங்காளியுடையது, நான்காவது அண்ணாச்சியின் சித்தப்பாவின் ஒன்றுவிட்ட ஓர்ப்படியா பேரனுடையது என்று விதவிதமாகக் கதை சொல்கிறார்கள். இந்தக் குழப்பம் எதுவும் ரெகுலராக அங்கே பொருள் வாங்கும் மக்களுக்கு இல்லையா? Are they loyal to every ‘Saravana’ Branded Shop? (யம்மாடி!)

ஏழு

’சரவணா’ புண்ணியத்தில், ரங்கநாதன் தெருவில் எங்கு திரும்பினாலும் நடிகை சிநேகாவின் முகம் தட்டுப்படுகிறது. அந்த அம்மணிக்கு நல்ல முகவெட்டு(?), அழகு, திறமை இருந்தாலும், பெரிய நடிகர்களுடன் அவ்வப்போது நடித்தாலும், இன்றுவரை ‘நம்பர் 2 / 3’ இடங்களைக்கூடப் பிடிக்கமுடியாமல் போகக் காரணம் இந்த  ‘Over Exposure’தானா?

பெப்ஸியிடம் பல கோடி ரூபாய்களை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டபிறகும் அதன் விளம்பரத்தில் சில விநாடிகள் முகம் காட்ட மைக்கேல் ஜாக்ஸன் எவ்வளவு தூரம் தயங்கினார் என்பதை யாரேனும் சிநேகாவுக்கு விளக்கிச் சொல்வார்களா?

எட்டு

ரங்கநாதன் தெரு, அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல ‘குடும்ப’ நிறுவனங்களின் அரவணைப்பில் (ஆக்கிரமிப்பில்?) இருக்கிற ’சென்னை வாடிக்கையாளர்’கள் ‘பிக்பஜார்’, ’Next’, ‘eZone’, ‘SKC’ போன்ற கார்ப்பரேட் சங்கிலி நிறுவனங்களை ஆதரிக்கிறார்களா? இவர்களுடைய சென்னை Vs பெங்களூர் (அல்லது மும்பை அல்லது டெல்லி) விற்பனை விகிதம் என்னவாக இருக்கும்?

கோககோலா, பெப்ஸி போன்ற மார்க்கெட்டிங், விளம்பரங்களுக்குப் புகழ் பெற்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனம், ரங்கநாதன் தெருக் கடை ஒன்றை விலைக்கு வாங்கினால், என்ன செய்வார்கள்? எந்தெந்த உத்திகளைப் பயன்படுத்துவார்கள்? யோசித்தால் ஓர் அறிவியல் புனைகதை சிக்கலாம் 😉

ஒன்பது

தி. நகரில் எங்கு பார்த்தாலும் ’பைரேட்’டட் புத்தகக் கடைகள். முன்னூறு, நானூறு ரூபாய்ப் புத்தகங்கள்கூட, ஐம்பது, அறுபது ரூபாய் விலைக்கு சல்லிசாகக் கிடைக்கின்றன. இது எல்லா ஊரிலும் இருக்கிற சமாசாரம்தான். ஆனால், பக்கத்திலேயே தமிழ்ப் புத்தகங்களும் (அவற்றின் ஒரிஜினல் விலையில்) கிடைப்பது புதுசாக இருக்கிறது. குறிப்பாக கிழக்கு பதிப்பக, விகடன் பிரசுரப் புத்தகங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.

பிரச்னை என்னவென்றால், பைரேட்டட் ஆங்கிலப் புத்தகங்களின் விலை, தடிமன், நேரடித் தமிழ்ப் புத்தகங்களின் விலையைவிட அதிகமாக இருக்கிறது. இது வாங்குபவர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தாதா? ’அத்தனை பெரிய புக் 60 ரூவா, இந்த மெல்லீஸ் புக்கும் 60 ரூவா, என்னய்யா ஏமாத்தறியா?’ என்று அதட்டமாட்டார்களா? கடைக்காரர் பைரேட் விஷயத்தை விளக்கிச் சொன்னால் புரியுமா? ’பேசாமல் தமிழ்ப் புத்தகத்திலயும் பைரேட் செய்யவேண்டியதுதானே?’ என்று யாரேனும் தொடங்கிவிடுவார்களோ?

பத்து

இந்தப் பதிவில் ‘ரங்கநாதன்’ என்கிற வார்த்தை எத்தனைமுறை வருகிறது? யார் அந்த ரங்கநாதன்?

***

என். சொக்கன் …

23 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

எங்கள் அடுக்ககத்தில் (அபார்ட்மென்ட்) மொத்தம் எட்டே வீடுகள்.

தரைத் தளத்தில் ஒன்று, மூன்றாவது மாடியில் ஒன்று, இடையில் உள்ள இரு மாடிகளிலும் தலா மூன்று. ஆகமொத்தம் எட்டு வீடுகள். நாங்கள் இருப்பது முதல் மாடியில்.

இப்படி ஒரு ‘சிறிய’ அபார்ட்மென்டில் இருப்பது பலவிதங்களில் வசதி. கிட்டத்தட்ட தனி வீட்டின் சவுகர்யம் உண்டு, அதைவிடக் கூடுதல் பாதுகாப்பு.  அதேசமயம், நூறு, இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்ககங்களில் பக்கத்து, எதிர் வீட்டுக்காரர்களின் பெயரோ முகமோகூடத் தெரிந்துகொள்ளாமல் ஒரே வளாகத்தினுள் பல வருடங்கள் வாழ்ந்துவிடுவது போன்ற அபத்தங்கள் நேராது.

ஆனால், இதற்கு நேர் எதிராக, சிறிய அபார்ட்மென்ட்களுக்கென்றே தனித்துவமான சில பிரச்னைகளும் உண்டு. உதாரணமாக, ஏழெட்டுப் பேர்மட்டும் எல்லாப் பராமரிப்புச் செலவுகளையும் பகிர்ந்து கொள்வதால், மாதந்தோறும் இதற்காகவே ஏகப்பட்ட தொகையை எடுத்துவைக்கவேண்டியிருக்கும். நீச்சல் குளம், உடற்பயிற்சி அறை, பூங்கா, குழந்தைகள் விளையாட்டுக் கூடம் போன்ற ஆடம்பர சவுகர்யங்கள் எவையும் இல்லாமலேயே ‘Maintenance Charge’ ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என்று எகிறும்.

இப்படி எங்கள் அடுக்ககத்தை இப்போது சூழ்ந்திருக்கும் ஒரு புதுப் பிரச்னை, லிஃப்ட் – மின் உயர்த்தி.

மூன்றே மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் லிஃப்ட் அவசியம் இல்லைதான். ஆனாலும் அது இல்லாவிட்டால் வீடுகள் விலை போகாது என்பதால், எங்கள் அபார்ட்மென்டைக் கட்டியவர் மீன் பிடிப் படகொன்றை நிமிர்த்தி வைத்தாற்போல் சின்னதாக ஒரு லிஃப்ட் அமைத்துக் கொடுத்துவிட்டார்.

ஆரம்பத்தில் எல்லாம் ஒழுங்காகதான் சென்றுகொண்டிருந்தது. இரண்டு வருடம் கழித்து, லிஃப்ட் தயாரிப்பு நிறுவனம் வருடாந்திரப் பராமரிப்புக் கட்டணமாகப் பதினேழாயிரத்துச் சொச்ச ரூபாய் கேட்கிறது.

வருடத்துக்குப் பதினேழாயிரம் ரூபாய் என்றால், தினமும் கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய் கணக்கு ஆகிறது. லிஃப்டுக்காக இவ்வளவு செலவழிக்கவேண்டுமா என்று நாங்கள் இப்போது யோசிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

மறுபடியும் எங்களுடைய அபார்ட்மென்ட் கட்டமைப்பை யோசியுங்கள். கீழ்த் தளத்தில் இருப்பவருக்கு லிஃப்ட் தேவையில்லை, முதல் மாடியில் இருக்கும் மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களும் லிஃப்டுக்குக் காத்திருக்கிற, கதவு திறந்து, மூடுகிற நேரத்தில் சட்டென்று படியேறி மேலே வந்துவிடுகிறோம்.

ஆக, இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் உள்ள 4 வீடுகளுக்குதான் லிஃப்ட் தேவை. மற்றவர்கள் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை லிஃப்ட் பயன்படுத்தினால் அபூர்வம்.

இதனால், லிஃப்ட் பராமரிப்புக்காகப் பதினெட்டாயிரம் ரூபாயில் எட்டில் ஒரு பங்கைத் தர நாங்கள் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக லிஃப்டை நிரந்தரமாக மூடி வைத்துவிடலாம் என்பது எங்கள் கருத்து.

ஆனால், மற்ற நான்கு வீடுகளைச் சேர்ந்தவர்களும் இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள். அவர்களுக்கு லிஃப்ட் தேவைப்படுகிறது. தம் பிடித்து தினமும் இரண்டு மாடி ஏறி இறங்க அவர்கள் தயாராக இல்லை.

‘சரி, நீங்கள் நாலு பேரும் சேர்ந்து, இந்தப் பதினெட்டாயிரத்தைச் செலுத்திவிடுங்கள், லிஃப்ட் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றேன் நான், ‘நாங்கள், அதாவது மற்ற நாலு வீட்டைச் சேர்ந்தவர்களும் அந்த லிஃப்டைத் தொடமாட்டோம்’

இதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். எல்லோரும் சம அளவு பணம் போட்டு லிஃப்ட் பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்தியே தீரவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்.

எப்படி இருக்கிறது கதை? நான் எப்போதாவது பயன்படுத்துகிற லிஃப்டுக்காக, கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வெட்டியாகச் செலுத்தவேண்டுமா? என் நெற்றியில் ’இளிச்சவாயன்’ என்று தமிழிலோ, கன்னடத்திலோ எழுதியிருக்கிறதா என்ன? நான் நிச்சயமாகப் பர்ஸைத் திறக்கப்போவதில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்த இழுபறி எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இதைச் சுமுகமாகத் தீர்க்க உங்களிடம் ஏதேனும் வழி இருக்கிறதா?

***

என். சொக்கன் …

18 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அண்ணாந்து பார்!

திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய அண்ணா நூற்றாண்டு இலக்கியப் போட்டிகளில் நான் எழுதிய   ‘அண்ணாந்து பார்’ (அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு) நூல் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

’அண்ணா’ந்துபார் உள்பட, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஏழு நூல்கள் இந்தப் பரிசுக்குத் தேர்வாகியுள்ளன. முழுப் பட்டியல் இங்கே: http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_17.html

கூடுதல் விவரங்கள், புத்தகம் வாங்க:

http://nhm.in/shop/978-81-8368-006-6.html

http://www.amazon.com/Annandhu-Paar-Tamil-Mr-Chokkan/dp/8183680062/ref=sr_1_5?ie=UTF8&s=books&qid=1234843714&sr=1-5

***

என். சொக்கன் …

17 02 2009

சென்ற வார இறுதியில் திடீர்ப் பயணமாக மைசூர் கிளம்பினோம்.

இந்த இடங்களையெல்லாம் பார்த்தாகவேண்டும் என்பதுபோல் எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் ‘சும்மா சுற்றிவிட்டு வரலாமே’ என்று புறப்பட்டது. ஆகவே டென்ஷனின்றி நிம்மதியாகப் போய்த் திரும்ப முடிந்தது.

பெங்களூர் மைசூர் புதிய நெடுஞ்சாலை வெண்ணெயாய் வழுக்குகிறது. அதில் பாய்ந்து செல்கிற வாகனங்களும் காலை வெய்யிலில் புத்தம்புதுசுபோல் பளபளக்கின்றன.

ஆனால், சாலையோரங்கள்? ஒரு சூப்பர் மார்க்கெட்டை விலைக்கு வாங்கி, அதில் இருக்கும் பொருள்களையெல்லாம் ஒவ்வொன்றாகத் தின்றுவிட்டு வீசி எறிந்துகொண்டே நடந்து போனால் எப்படி இருக்கும்? அதுபோல சிப்ஸ் பாக்கெட்கள், தண்ணீர் பாட்டில்கள், பழ ரச டப்பாக்கள், பிஸ்கெட், சாக்லெட் உறைகள் இன்னும் என்னன்னவோ. கர்நாடகாவின் மிக நீளமான குப்பைத் தொட்டி பெங்களூர் – மைசூர் நெடுஞ்சாலையாகதான் இருக்கவேண்டும்.

குப்பைகளை மறக்கடிப்பதற்காகவே, நெடுஞ்சாலையெங்கும் விளம்பரப் பலகைகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றை வரிசையாகப் படித்துக்கொண்டுவந்தால் நன்றாகப் பொழுதுபோகிறது. உதாரணமாக ஒரு சின்ன சாம்பிள்: காஃபி டே கடையில் காப்பித் தண்ணியுடன் ஆம்லெட், கார்ன் ஃப்ளேக்ஸ், ஆலு பரோட்டா கிடைக்குமாம், புகழ் பெற்ற (?) ’காடு மனே’ உணவகம் இன்னும் எட்டு கிலோ மீட்டரில் தென்படுமாம்,  ஏதோ ஓர் எண்ணெயை உணவில் போட்டுச் சமைத்தால் அது கொழுப்பை எதிர்த்துச் சண்டை போடுமாம், மைசூரில் பட்ஜெட் விலையில் தங்குவதற்கு ஒரு டக்கரான புது ஹோட்டல் திறந்திருக்கிறார்களாம், தங்கத்தை இந்தியாவிலேயே மிக மலிவாக விற்கும் நகைக்கடை ஒன்று மைசூரில் அறுபத்தைந்து ஆண்டு காலப் பாரம்பரியத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறதாம், இப்போது ‘காடு மனே’ உணவகம் இன்னும் ஏழு கிலோ மீட்டரில் தென்பட்டுவிடுமாம்.

இப்படியே ஒவ்வொரு கடைக்கும் ஆறு கிலோ மீட்டர், ஐந்து கிலோ மீட்டர் என்று கவுண்ட் டவுன் விளம்பரப் பலகைகள் அமைத்துப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லாதபடி மக்கள் எல்லாக் கடைகளிலும் கூட்டமாகக் குவிந்து ஆதரிக்கிறார்கள்.

‘காமத்’ சாப்பாட்டுக் கடையில் கால் வைக்க இடம் இல்லை. அறுபது ரூபாய் கொடுத்தால் தென்னிந்திய பஃபே, மசாலா தோசை, இட்லி, கேசரி, உப்புமா, காபி, ஜூஸ் என்று எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் வயிற்றில் இடம் உள்ளவரை சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பாருடன் ஓரத்து மரங்களில் குரங்குகள் ஓடியாடி வேடிக்கை காட்டுகின்றன.

கசப்பான காபியை சப்புக்கொட்டி ருசித்தபடி வெளியே வந்தால், சின்னதாக ஒரு பெட்டிக் கடை. அதில் விதவிதமான சுடுமண் விநாயகர்களை அடுக்கிவைத்திருக்கிறார்கள்.

ஒரு விநாயகர், லாப்டாப்பில் மும்முரமாக வேலை(?) பார்க்கிறார், அந்த லாப்டாப்பைத் தாங்கியிருக்கும் டேபிள், அவருடைய வாகனம் மூஞ்சூறு. பக்கத்தில் இன்னொரு விநாயகர் ஆலிலைக் கிருஷ்ணனாகப் படுத்திருக்கிறார், அடுத்து ஆதிசேஷன்மேல் ஆனந்த சயன போஸில் ‘ரங்கநாத’ விநாயகர்.

SDC13080

இன்னும் மூன்று தலை விநாயகர், சிவலிங்கத்தைத் தழுவியபடி மார்க்கண்டேய விநாயகர், பானை வடிக்கும் விநாயகர், மரத்தில் ஏறிக் குறும்பு செய்யும் விநாயகர், நாற்காலியில் கால் மேல் கால் போட்டு பந்தாவாக அமர்ந்திருக்கும் விநாயகர், குப்புறப் படுத்தபடி டிவி பார்க்கும் விநாயகர், விதவிதமான வாத்தியங்களை வாசிக்கும் விநாயகர்களின் ஆர்க்கெஸ்ட்ரா, .. அத்தனூண்டு மேஜைக்குள் கிட்டத்தட்ட அறுபது, எழுபது வகையான விநாயகர்களைப் பார்க்கமுடிந்தது.

SDC13082

இதில் விசேஷமான விஷயம், அங்கிருந்த எந்த விநாயகரும் இயந்திரத் தயாரிப்பாகத் தோன்றவில்லை. அப்படி ஒரு செய்நேர்த்தி, அழகு. ஒவ்வொன்றும் சராசரியாக நாற்பதிலிருந்து எண்பது ரூபாய்க்குள் விலை.

மைசூரின் புண்ணியத்தில், அங்கே போகும் வழியில் உள்ள சென்னபட்னா, மத்தூர், மாண்ட்யா போன்ற பல கர்நாடகக் குட்டி நகரங்கள் பலன் பெறுகின்றன. கொஞ்சம் கவனமாகப் பேரம் பேசத் தெரிந்தால் நியாயமான விலைக்கு நிறைய நல்ல பொருள்களை அள்ளி வரலாம் – முக்கியமாக சென்னபட்னாவின் மர பொம்மைகள் தவறவிடக்கூடாத பொக்கிஷம், அப்புறம் மத்தூரின் விசேஷமான உள்ளங்கை அகல வடை.

பொதுவாக மைசூருக்கு வருகிறவர்கள் எல்லோரும் கண்டிப்பாகப் பார்க்கும் இடங்கள் ஏழெட்டு உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே சென்றால் சுற்றுலாத் தலங்களைவிட, பிற பயணிகளின் முதுகுகளைதான் அதிகம் தரிசிக்கவேண்டியிருக்கும். ஆகவே, நிறையப் பேர் எட்டிப்பார்க்காத இடமாக, மைசூர் ஜங்ஷன் அருகில் உள்ள ரயில்வே மியூசியத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

இந்தியாவின் மிகப் பழமையான ரயில்கள் சில மைசூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியிருக்கின்றன. குத்துமதிப்பாக நாற்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் ரூபாய் விலையில் அம்மாம்பெரிய நீராவி எஞ்சின்களை இறக்குமதி செய்து இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள் – அதே தொகைக்கு இப்போது நல்லதாக ஒரு பைக்கூட வாங்கமுடியாது.

ஆச்சர்யமான விஷயம், கிட்டத்தட்ட நூற்றாண்டு காலப் பழசான இந்த ரயில் எஞ்சின்களின் சில பாகங்கள் இன்னும் ஒழுங்காக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்ப்பது ரொம்பப் புதுசான ஓர் அனுபவம். ஏதோ ஒரு சிவப்புப் பிடியில் கை வைத்துக்கொண்டு ரயிலை ஓட்டுவதுபோல் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அல்ப ஆசைக்கும் அனுமதிக்கிறார்கள்.

அப்புறம் அந்தக் கால ரயில் பெட்டிகள். பொதுவாக ரயில்வே நிலையங்களில் ஒரு நீளமான மர பெஞ்ச்களைப் பார்த்திருப்போம். கிட்டத்தட்ட அதேமாதிரியான அமைப்பில் ஒவ்வொரு பெட்டியிலும் மூன்று வரிசைகளில் முப்பது பேர் உட்கார்ந்துகொண்டு பயணம் செய்கிற ஏற்பாடு.

அங்கிருந்த ஒரு புகைப்படத்தில், ‘டபுள் டெக்கர்’ ரயில்களைப் பார்த்தேன், ‘அட’ என்று ஆச்சர்யப்பட்டபோது என் மனைவி என்னைப் பூமிக்குக் கொண்டுவந்தார், ‘இந்தக் காலத்திலயும் எல்லா ரயிலும் டபுள் டெக்கர்தானே? பாதிப் பேர் லக்கேஜ் வைக்கிற இடத்தில ஏறி உட்கார்ந்துகிட்டுதானே பயணம் செய்யறாங்க?’

SDC12971

மைசூர் ரயில்வே மியூசியத்தில் பழமையான எஞ்சின்கள், பெட்டிகளைவிட ஆச்சர்யம் அளிக்கும் விஷயம், ரயில் பாதைகளின் பரிசோதனைக்காக இயங்கிய ‘Inspection Cars’.

பெரிய எஞ்சினியர்கள், அதிகாரிகளை ஏற்றிச் சென்ற இந்த விசேஷ பெட்டிகளில் படுக்கை அறை, உட்கார்ந்து எழுதுவதற்கான மேஜை, வராண்டா, வேலைக்காரர்கள் தூங்குவதற்கு ஒரு தீப்பெட்டி என சகல வசதிகளும் உண்டு. இதேபோல், ரயில் பாதையில் இயங்கக்கூடிய ஒரு விசேஷ ஜீப்கூட அங்கே நின்றுகொண்டிருக்கிறது.

SDC12932

ரயில்வே அருங்காட்சியகம் என்பதால், டிக்கெட் கொடுக்கும் அறை, குப்பைத் தொட்டியைக்கூட ரயில் பெட்டி, எஞ்சின்போலதான் வடிவமைத்திருக்கிறார்கள். குழந்தைகள் பயணம் செய்ய பொம்மை ரயிலும் இருக்கிறது.

SDC12887

SDC12921

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி திரும்பும்போதுதான் எதேச்சையாக அந்த போர்டைக் கவனித்தோம், ‘மகாராணி சலூன்’.

இவருக்காகவே தனியாக ஒரு சலூன் வைத்து முடி வெட்டும் அளவுக்கு மகராணிக்கு அத்தனை பெரிய கூந்தலா என்று ஜோக்கடித்தபடி அந்தப் பழைய கட்டடத்தினுள் நுழைந்தால், உள்ளே பிரம்மாண்டமான ரயில் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. அந்தக் காலத்து மவராசன்கள், மவராசிகள் பயன்படுத்திய சொகுசு ரயில்.

அங்கே நின்றுகொண்டிருந்த தாத்தா ஒவ்வொரு ஜன்னலாகத் திறந்து காண்பித்து எங்களுக்கு விளக்கினார், ‘இந்த பெல் அமுக்கினா ப்ரேக்ஃபாஸ்ட், அந்த பெல் அமுக்கினா லஞ்ச், அதோ அந்த பெல் அமுக்கினா டின்னர் வரும் சார்’

இதென்ன விநோதம்? ஒரு நேரத்தில் ஒருவகையான சாப்பாடுதானே உண்ணமுடியும்? ஒரு பெல் போதாதா? ஏதோ ஞாபகத்தில் மகாராணி காலை நேரத்தில் மறந்தாற்போல் ’டின்னர் பெல்’லை அமுக்கிவிட்டால், சூரியனை ஆஃப் செய்துவிட்டு இரவு உணவைக் கொண்டுவருவார்களோ?

யார் கண்டது, மேதகு மகாராஜாக்கள், மேன்மை தாங்கிய மகாராணிகள், செய்தாலும் செய்வார்கள்.

மகாராணியின் வண்டியில் நீளமான படுக்கை, அலங்கார நிலைக்கண்ணாடி, எழுதும் மேஜை, சீட்டாட்டத்துக்காக ஒரு தனி மேஜை, குளியல் அறை, வெந்நீருக்கு பாய்லர் என்று சகலமும் இருக்கிறது. பக்கத்திலேயே ஊழியர்களுக்கான படுக்கை அறை, அம்மி, குழவி சகிதம் சமையலறை என பெட்டிக்குள் ஒரு குட்டி அரண்மனையையே ஒளித்துவைத்திருக்கிறார்கள்.

SDC12940

அத்தனையையும் வேடிக்கை பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கிவந்தால், பழங்காலத் தொலைபேசிகள், மோர்ஸ் தந்தி அனுப்புவதற்கான கருவிகள், புராதன ரயில் தண்டவாளங்கள், பெட்டிகள், பாலங்களின் மாதிரி வடிவங்கள். 1900ம் வருடக் கடிகாரம் ஒன்று இன்னும் சரியாக நேரம் காட்டிக்கொண்டிருக்கிறது, பக்கத்தில் விளக்கோடு கூடிய அந்தக் கால மின் விசிறி ஒன்று ஏகப்பட்ட சத்தத்துடன் ஓடுகிறது.

இத்தனையையும் எங்களுக்காக விரிவாக விளக்கிச் சொன்ன தாத்தா, நாங்கள் கொடுத்த பத்து ரூபாயைக் கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டார். மகாராணிக்காக இல்லாவிட்டாலும், அவருக்காகவேனும் இங்கே கொஞ்சம் கூட்டம் வரலாம்.

அடுத்தபடியாக, மைசூர் மிருகக் காட்சியகம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகம். ஆனால் நாலு கிலோ மீட்டர் நடக்கிற வாய்ப்பு என்பதற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.

இதற்குமுன் நாங்கள் பார்த்திருந்த அத்தனை மிருகக் காட்சியகங்களையும்விட, மைசூர் ஜூ பலவிதங்களில் சிறப்பாக இருந்தது. நடப்பதற்கு அழகான பாதைகள், தெளிவான இரு மொழி அறிவிப்புகள், மக்கள் கண்ட இடத்தில் பிளாஸ்டிக்கை வீசி எறியாமல் இருப்பதற்காகத் தனியே உணவு உட்கொள்வதற்கான இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.

அதைவிட முக்கியம், பெரும்பாலான மிருகங்களைத் தொலைவில் ஒளித்துவைக்காமல் பக்கத்திலேயே பார்க்கமுடிந்தது. ‘ஜூ என்பது வெறும் பொழுதுபோக்குத் தலம் அல்ல, கற்றுக்கொள்வதற்கான ஓர் அபூர்வமான வாய்ப்பு, இங்கே உங்கள் குழந்தைகளுக்கு மிருகங்களைப்பற்றி ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைச் சொல்லிக் கொடுங்கள்’ என்று அறிவிப்புப் பலகைகள் ஆலோசனை சொல்கின்றன.

வழக்கம்போல், ஜூவினுள் நுழைந்த விநாடியிலிருந்து தென்படும் ஜீவராசிகளையெல்லாம் புகைப்படம் எடுத்துத் தள்ளுகிறேன். இந்த ஜூரம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தபிறகு, என்னுடைய படங்களில் மிருகங்கள், பறவைகளைவிட கம்பிக் கூண்டுகள்தான் அதிகம் தெரிகின்றன என்பதை உணர்ந்து, கேமெராவை மூடி வைக்கிறேன்.

நாங்கள் சென்ற நேரம் நட்டநடு மத்தியானம் என்பதால், பெரும்பாலான மிருகங்கள் தூக்கக் கலக்கத்தில் இருந்தன. மக்கள்தான் அவற்றை உறங்கவிடாமல் சத்தம் போட்டு எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

மிருகக் காட்சியகத்தினுள் தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர்க் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் அங்குள்ள சுத்திகரிக்கும் கருவிகளின் லட்சணத்தைப் பார்த்தால், அந்த நீரைக் குடிக்க மனம் வருவதில்லை. பாட்டில் தண்ணீர் வாங்கிச் செல்வது நல்லது.

SDC13053

மைசூர் ஜூ-வின் நான்கு கிலோ மீட்டர்கள் சுற்றி வருவதற்குக் குத்துமதிப்பாக மூன்று மணி நேரம் ஆகிறது. ஆனால் அதன்பிறகும், எதையோ தவறவிட்டதுபோன்ற ஓர் உணர்வைத் தவிர்க்கமுடிவதில்லை.

திரும்பும் வழியில், மீண்டும் காமத் உணவகத்தைக் கடந்து செல்கிறோம். ஆனால் இப்போது அங்கு வாசலில் இருக்கும் சுடு மண் விநாயகர்களைப் பார்த்தால், மைசூரில் கால் மேல் கால் போட்டு நின்ற ஆப்பிரிக்க யானையின் நினைவுதான் வருகிறது!

SDC13069

***

என். சொக்கன் …

17 02 2009

இந்தப் பதிவில் எழுதிய மலையாள மனோரமா – கள்ளுக்கடை சம்பவம், இந்த வார(22/02/09)க் கல்கியில் ‘விசுவாசம்’ என்கிற சிறுகதையாக வெளியாகியிருக்கிறது – ஒருசில ‘மசாலா’ மாற்றங்களுடன் 😉

வாய்ப்புள்ளவர்கள் வாசித்துக் கருத்துச் சொல்லவும். நன்றிகள்!

Image179

***

என். சொக்கன் …

26 02 2009

சென்ற புதன்கிழமை, (பெங்களூரு) ஜெயநகரில் உன்னி கிருஷ்ணன் கச்சேரி.

ஆறு மணிக்கு ஆரம்பமாகவேண்டிய கச்சேரியைப் பத்து நிமிடம் முன்னதாகவே தொடங்கிவிட்டார் உன்னி. ஆனால் ஒலி ஏற்பாடுகள் அநியாயத்துக்குச் சொதப்பியதால், பத்து நிமிடம் அவரை வெறுமனே சிரித்துக்கொண்டு மேடையில் உட்காரவைத்துவிட்டு ‘ஹலோ மைக் டெஸ்டிங், ஒன், டூ, த்ரீ’ என்று எல்லோருடைய பொறுமையையும் சோதித்தார்கள்.

உன்னி கிருஷ்ணன் ஜம்மென்று ஜிப்பா போட்டுக்கொண்டு, பெயருக்கு ஏற்ற சின்னக் கண்களால் எல்லோரையும் உன்னித்துக்கொண்டிருந்தார். அவருடைய மைக்கிற்குமுன்னால் வெள்ளைவெளேர் ஸ்டாண்டில் ஓர் ஐபாட் கம்பீரமாக உட்கார்ந்திருந்தது ஏன் என்று தெரியவில்லை.

ஒருவழியாக மைக், ஸ்பீக்கர் பிரச்னைகள் சரியாகி மீண்டும் அதே தியாகராஜர் கீர்த்தனையுடன் தொடங்கினார் உன்னி கிருஷ்ணன். அடுத்த மூன்று மணி நேரங்களுக்குமேல் உட்கார்ந்த இடத்திலிருந்து எழமுடியாதபடி கட்டிப்போட்டுவிட்டார்.

காரணம், அவருடைய பாட்டுத்திறன்மட்டுமில்லை. கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்தனை பேரையும் தாண்டிக்கொண்டு வெளியே போகவேண்டும் என்று நினைத்தாலே மலைப்பாக இருந்தது.

உன்னி கிருஷ்ணனின் குரலில் ஒருவிதமான கெஞ்சல் தொனி எப்போதும் இருக்கிறது. அவர் எந்தப் பாடலைப் பாடினாலும் தெய்வத்திடம் எதற்காகவோ இரங்கிக் கேட்பதுபோன்ற ஓர் உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. திரை உலகில் அவர் அதிகம் சோபிக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பரவாயில்லை, சினிமாவின் இழப்பு, கர்நாடக இசைக்கு லாபம். அன்றைய கச்சேரி முழுவதும், கடவுள் வாழ்த்தில் தொடங்கி துக்கடாக்கள், மங்களம்வரை சகலத்திலும் உன்னி கிருஷ்ணனின் மேதைமை, உழைப்பு தெரிந்தது. சாதாரண துள்ளிசை கீதமாகத் தோன்றுகிறவற்றில்கூட, ஆங்காங்கே நல்ல சங்கதிகள் பொங்கி வந்தன.

முக்கியமாக, எம்.எஸ். அவர்களின் புகழ் பெற்ற ‘குறையொன்றும் இல்லை’ பாடல், உன்னி கிருஷ்ணன் குரலில் முற்றிலும் வேறுவிதமாகக் கேட்டது. அதனை ஒப்பிடவோ, வர்ணிக்கவோ வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது.

ஏழெட்டு வருடங்களுக்குமுன்னால் ஹைதராபாதில் இதே உன்னி கிருஷ்ணனின் இன்னொரு கச்சேரி, ‘குறையொன்றும் இல்லை’ பாடக் கேட்டுச் சீட்டு அனுப்பினோம். அவர் பாடவில்லை.

விழாவுக்குப்பிறகு ஒரு பெரிய கூட்டத்துக்கு நடுவே அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் நண்பர் விடாமல், ‘குறையொன்றும் இல்லை பாடலியே நீங்க’ என்றார்.

‘அதைத்தான் எல்லோரும் பாடறாங்களே, நானும் எதுக்கு?’ என்றார் உன்னி கிருஷ்ணன்.

அப்போது அதனைத் திமிரான பதில் என்றுதான் நினைக்கத்தோன்றியது. ஆனால் பல வருடங்கள் கழித்து, வெகுஜன எதிர்பார்ப்புகள், மேதைமை இடையே சமநிலைக்குப் போராடும் கலைஞர்களின் சிரமங்களை ஓரளவு புரிந்துகொண்டபிறகு, உன்னி கிருஷ்ணனின் கேள்வியில் இருந்த நியாயம் தெரிந்தது.

அன்றைய கச்சேரியைவிட, அதற்கு வந்திருந்த மக்கள் இன்னும் சுவாரஸ்யம். பெரும்பாலும் தலை நரைத்தவர்கள், அல்லது வழுக்கையர்கள். சுமார் 30% இளைஞர் கூட்டம் இருந்திருக்கலாம். எல்லோரும் ஜோராகத் தாளம் தட்டி ரசித்துக்கொண்டிருந்தார்கள். அநாவசியப் பேச்சுகள், வம்பளப்புகள் இல்லை. கேண்டீன் பஜ்ஜி, போண்டா, மசாலா தோசையும் இல்லை.

ஒரே பிரச்னை, எனக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஒரு தம்பதி. அவர்களுடைய மகள், நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம், கச்சேரியை ரசிக்கிற வயது இல்லை. விளையாடவேண்டும் என்கிற ஆவல், ஆனால் இங்கே எப்படி விளையாடுவது?

அந்தக் குழந்தைக்கு வசதியாக, கைப்பிடிச் சுவர்தான் கிடைத்தது. அதில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தது.

பிரச்னை என்னவென்றால், அந்தக் கைப்பிடிச் சுவர் ஒரு முழ உயரம்கூட இல்லை, அதற்குமேல் ஒரு பெரிய கம்பியை நிறுத்திவைத்திருந்தார்களேதவிர, பாதுகாப்பு பூஜ்ஜியம்.

நானும் என்னருகே உட்கார்ந்திருந்த சிலரும் இதைப் பார்த்துப் பதறிக்கொண்டிருக்கையில், அந்தத் தம்பதியர் துளி கலக்கம் இல்லாமல் கச்சேரியில் மூழ்கியிருந்தார்கள். எப்படி முடிகிறது?

நல்லவேளையாக, அந்தப் பெற்றோரைவிட, குழந்தைக்குப் பாதுகாப்பு உணர்வு அதிகம்போல. அதிகம் எம்பாமல் எகிறாமல் சமர்த்தாக விளையாடிக்கொண்டிருந்தது. நாங்களும் டென்ஷனாகாமல் மறுபடி கச்சேரியில் கவனம் செலுத்த முடிந்தது.

இதுவாவது கொஞ்சம் பரவாயில்லை. சில வருடங்களுக்குமுன்னால் சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரி ஒன்றில், கைக்குழந்தையுடன் வந்திருந்த ஒரு தாய் ரொம்ப அவதிப்பட்டுவிட்டார். அதன் அழுகையைச் சமாளிக்கவும் முடியாமல், கச்சேரியைத் தவறவிடவும் மனம் இல்லாமல் அவர் பட்ட பாடு, பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில் அழுகையை நிறுத்திவிட்ட குழந்தை, இப்போது சஞ்சய் சுப்ரமணியத்துக்குப் போட்டியாகத் தான் ஒரு மழலை ஆலாபனை நடத்தத் தொடங்கிவிட்டது. ஆனால் அதை ரசிக்க யாரும் தயாராக இல்லை. எல்லோரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்து ‘உஸ் உஸ்’ என்று சத்தமிட, பாவம் அந்தத் தாய் தவித்துப்போய்விட்டார்.

‘செல்போன்களையும் குழந்தைகளையும் உள்ளே கொண்டுவர வேண்டாம்’ என்று சில சபாக்களில் போர்ட் போட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன், செல்போனையாவது ம்யூட் செய்யலாம், குழந்தைகளை என்ன செய்வது?

ஆகவே, குழந்தைகளோடு கச்சேரிக்கு வருகிறவர்களிடம் ரசிகர்கள் ராட்சஸத்தனமாக நடந்துகொள்வது சரியில்லை. பேசாமல் அந்த மாதிரி சமயங்களில் பாடகர்கள் (பாடகிகள் என்றால் இன்னும் விசேஷம்) பெரிய மனது பண்ணி நீலாம்பரி பாடினால் குழந்தை சமர்த்தாகத் தூங்கிவிட்டுப்போகிறது!

இந்த உன்னி கிருஷ்ணன் கச்சேரியில் எந்தக் குழந்தையும் அழவில்லை. மேடையில் அவர் ஒரு மாயக் குழந்தையைத் தாலாட்டிக்கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம்.

உன்னி கிருஷ்ணன் பாடும்போது, அவருடைய கைகள் ஒரு தேர்ந்த நாட்டியக் கலைஞரைப்போல் பாவம் காட்டுகின்றன. தொடையில் தாளம் தட்டக்கூட முடியாமல், சட்டென்று விரல்களால் அபிநயம் புரியத் தொடங்கிவிடுகிறார்.

இதனால், தொலைவில் இருந்து பார்க்கிறவர்களுக்கு, உன்னி கிருஷ்ணனுக்கும் மைக்கிற்கும் நடுவே கண்ணுக்குத் தெரியாத ஒரு குழந்தை உட்கார்ந்திருப்பதுபோலவும், அதை அவர் வருடி வருடிக் கொஞ்சுவதுபோலவும் தோன்றுகிறது. அதனால்தானோ என்னவோ, அவர் உச்சஸ்தாயியில் பாடும்போதுகூடக் கைகளை அளவுக்கு மீறி உயர்த்துவதில்லை, கொனஷ்டைகள் செய்வதில்லை.

கைகளைப்போலவே, உன்னி கிருஷ்ணன் தன் குரலையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மகிழ்ச்சி, சோகம், அழுகை, அரற்றல், கிண்டல், துள்ளல், எதையும் குரலிலேயே கொண்டுவந்துவிடுகிறார். தெள்ளத்தெளிவான உச்சரிப்பு, காதுகளில் தேன்.

வழக்கம்போல், தனி ஆவர்த்தனத்தின்போது ரசிகர்கள் எழுந்துபோய் அசிங்கப்படுத்தினார்கள். ’அவ்வளவுதான், கச்சேரி முடிந்துவிட்டது’ என்பதுபோல் கிளம்பிச் சென்ற அவர்களைப் பழிவாங்குவதற்காகவே, தனி-க்குப்பிறகும் எங்களுக்காகச் சில அருமையான பாடல்களைப் பாடினார் உன்னி கிருஷ்ணன்.

கிட்டத்தட்ட மூன்றே கால் மணி நேரக் கச்சேரி. இறுதிவரை பாடகர், பக்கவாத்தியக் கலைஞர்கள் யாரும் உற்சாகம் குறையாமல் விருந்து கொடுத்தார்கள். நன்றி – அவர்களுக்கும், விழாவுக்கு ஏற்பாடு செய்த  ஸ்ரீ ராம லலிதகலா மந்திரா (http://www.srlkmandira.org/) அமைப்பினருக்கும்.

இன்றைக்கு அதே அரங்கத்தில் பாம்பே (மும்பை?) ஜெயஸ்ரீ கச்சேரி. அலுவலக நேரம் ஒத்துழைத்தால் கேட்டுவிட்டு வந்து எழுதுகிறேன்!

***

என். சொக்கன் …

12 02 2009

இரண்டு வாரம் முன்னால் நடந்த கூத்து இது.

வழக்கம்போல், எங்கள் அலுவலகத்துக்கு ஒரு புதுப் பிரமுகர் வந்திருந்தார். பெருந்தலைகள் அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தன, ‘மீட் மிஸ்டர் ….., இவங்க கம்பெனிதான் அமெரிக்காவிலே காபிக்கொட்டை விக்கறதில நம்பர் 1’

இதுபோன்ற அலட்டல் அறிமுகங்களைக் கேட்டு வாய் பிளப்பதை நாங்கள் எப்போதோ நிறுத்திக்கொண்டாகிவிட்டது. எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் ’நம்பர் 1’தான்.

தவிர, வருகிறவன் காப்பி தயாரிக்கிறானா, பீப்பி தயாரிக்கிறானா என்பதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்களுக்கு என்ன தேவை, அதைமட்டும் கேட்டு ஒழுங்காகச் செய்து கொடுத்தால் போதாதா?

இப்படி ஒரு பற்றற்ற நிலையை எட்டவேண்டுமானால், நீங்கள் குறைந்தபட்சம் நூறு ’Prospect’ எனப்படும் ’வருங்கால வாடிக்கையாளர்’களுக்கு ’Proposal’ எனப்படும் ‘வருங்காகச் செயல்திட்ட’ங்களை அனுப்பியிருக்கவேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் 99 நிராகரிக்கப்பட்டிருக்கவேண்டும்.

இந்தச் ‘சிறு’ அனுபவம் போதும். அதன்பிறகு இந்த உலகத்தில் எதுவும் யாரும் உங்களுக்குப் பெரிதாகத் தோன்றாது. எதையும் எதற்காகவும் எதிர்பார்க்காமல் ஞானிகளைப்போல் காற்றைத் தின்று உயிர்வாழக்கூடத் துணிந்துவிடுவீர்கள்.

நிற்க. காபிக் கம்பெனி அழைக்கிறது, ’இப்ப உங்களுக்கு எக்ஸாக்டா என்ன வேணும் சார்?’

வந்தவர் டை முடிச்சை இறுக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தார். முக்கால் மணி நேரம் அவர்களுடைய தொழில் எப்படிப்பட்டது, அவர்களது டீலர்கள் யார், யார், அவர்களுக்கிடையே உள்ள வலைப்பின்னல் நெட்வொர்க் என்னவிதமானது என்றெல்லாம் விளக்கிச் சொன்னார். இவை அனைத்தையும் தொகுக்கக்கூடிய, அதேசமயம் பிஸினஸ் பிரம்ம ரகசியங்களையெல்லாம் பத்திரமாகப் பாதுகாக்கும்படியான ஓர் இணைய தளம் வேண்டும் என்றார்.

நன்றி ஐயா, தங்கள் சித்தம், எம் பாக்கியம் என்று கும்பிட்டுவிட்டு வேலையில் இறங்கினோம்.

அடுத்த மூன்று நாள்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் தீர்ந்தன. மண்டையை உடைத்துக்கொள்ளாத குறையாகச் சண்டை போட்டபிறகு, ஒருவழியாக காபி டீலர் நெட்வொர்க் இணைய தளத்திற்கான காகித வரைபடங்கள் தயாராகிவிட்டன.

இப்போது, இந்தக் காகித வரைபடங்களை வைத்துக் கம்ப்யூட்டர்  பொம்மைகள் செய்கிற வேலை தொடங்கியது. அதுவும் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்பட்டு, திரும்பத் திரும்பச் செய்து பார்த்துக் கடைசியில் எல்லாம் முடிந்தது. சகலத்தையும் ‘ஜிப்’ போட்டு இறுக்கி, காபிக்கடைக்காரர்களுக்கு ஈமெயிலில் அனுப்பிவைத்தோம்.

உடனடியாக பதில் வந்தது, ‘ஆஹா, பிரமாதம், நாங்கள் சொன்னதை நன்றாகப் புரிந்துகொண்டு செய்திருக்கிறீர்கள். நாங்களே உட்கார்ந்திருந்தால்கூட இத்தனை அழகான ஒரு மாதிரியைச் செய்திருக்கமுடியாது’

பாராட்டெல்லாம் சரி, எப்போது நிஜமான இணைய தளத்துக்கான வேலையைத் தொடங்குவது?

இந்தக் கேள்விக்குதான் பதில் காணோம். ஒரு வாரம், பத்து நாள் ஆச்சு, காபிக்கடையிலிருந்து எந்தச் சலனமும் இல்லை.

இதெல்லாம் எங்களுக்குப் பழகிப்போன விஷயம்தான். எத்தனை ‘நிராகரிப்பு’களைப் பார்த்திருப்போம்? அத்தனையையும் துடைத்துப்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் பழகிவிட்டோம்.

ஆனால், இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, பத்து நாள் கழித்து இன்னோர் ஈமெயில் வந்தது. ’ஆஹா, ப்ராஜெக்ட் ஓகே ஆயிடுச்சா?’ பரபரப்பாகப் பிடித்துப் படித்தோம்.

அன்புடையீர்,

நாங்கள் கேட்டுக்கொண்டபடி எங்களுடைய டீலர் நெட்வொர்க் இணைய தளத்துக்கான ஒரு மாதிரியை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி. எங்கள் எல்லோருக்கும் இந்த வடிவமைப்பு மிகவும் பிடித்திருக்கிறது.

எனினும், தவிர்க்கமுடியாத பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக, நாங்கள் இந்த ப்ராஜெக்டைத் தள்ளிவைக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

மறுபடி எப்போது தொடங்குவோம் என்று எங்களுக்கே தெரியாது. அப்போது உங்களைதான் முதலில் தொடர்புகொள்வோம் என்று உறுதியளிக்கிறோம்.

இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு எங்களுடைய சிறு நன்றியாக, உங்களுக்கு இரண்டு கிலோ உயர்தரக் காப்பிக் கொட்டைகள் கூரியரில் அனுப்பியிருக்கிறோம்.

இப்படிக்கு,

…..

இதைப் படித்ததும், எங்களுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. கூரியரில் வரப்போகும் காபிக்கொட்டைகளை என்ன செய்வது என்றும் புரியவில்லை.

ஆனால் ஒன்று, இப்படியே போனால் அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கதான் பயமாக இருக்கிறது. சுபிக்‌ஷா ஊழியர்களின் சம்பள பாக்கிக்கு மொபைல் ஃபோன் கொடுத்தார்களாமே, அதுபோல, எங்களுக்கும் அடுத்த மாதச் சம்பளத்தைக் காபிக் கொட்டைகளாகதான் தருவார்களோ என்னவோ!

***

என். சொக்கன் …

11 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நண்பர் நெப்போலியன் (http://www.neps.in) இணைய தளத்திலிருந்து ஒரு செய்தி.

நம் ஊரில் இசை ரசிகர்கள் நிறைய. ஆனால் இசை எனும் கலையை, அதன் நுணுக்கங்களை நாம் எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்பது கொஞ்சம் சந்தேகம்தான், ‘கேட்க நல்லா இருக்கு, அது போதும்’ என்கிற அளவில் என்னைப்போன்றோரின் இசை விருப்பங்கள் நின்றுவிடுகின்றன.

ரசிக்கவும் சரி, இசைக்கவும் சரி, அந்தக் கலைபற்றிய ஓர் அடிப்படைப் புரிதல் தேவைப்படுகிறது. ஆனால் அதை யார் நமக்குச் சொல்லித்தருவார்கள்? வெளிப்படையாகக் கேட்டால் மற்றவர்கள் சிரிப்பார்களோ, கேலி செய்வார்களோ என்கிற பயத்திலேயே பலர் வாய் திறப்பதில்லை.

இசைபற்றிய நமது கேள்விகள், சந்தேகங்களை அந்தத் துறை சார்ந்த நிபுணர் ஒருவரிடம் கேட்டுத் தெளிவுபெறுவதற்கு நண்பர் நெப்போலியன் ஒரு வாய்ப்புத் தருகிறார். மேல் விவரங்கள் இங்கே:

http://neps.in/2009/01/01/learning-art-of-music-howto-questions-invited/

***

என். சொக்கன் …

08 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இன்று மதியம் ஓர் அவசர வேலையாக ஜெயநகர் போகவேண்டியிருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கும் நேரத்தில் என் செல்பேசி ‘ட்விங் ட்விங் எஸ்ஸெமெஸ்’ என்று சங்கீதக் குரலில் அறிவித்தது.

பிரித்துப் பார்த்தால் சென்னை ட்விட்டர் நண்பர் @vickydotin, ‘பெங்களூர் வந்துவிட்டேன், எப்போது எங்கே சந்திக்கலாம்?’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள், இன்னொரு ட்விட்டர் நண்பர் @girisubraவும் எங்களுடன் இணைந்துகொண்டார். SMS வழியாகவே சந்திப்புத் திட்டம் முடிவானது. மாலை ஆறு மணிக்கு, எம்ஜி ரோட்டில்.

ஆனால், ஆறு மணிக்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கிறதே. அதுவரை என்ன செய்வது? வீட்டுக்குப் போய்த் திரும்பச் சோம்பேறித்தனம். வேறு எங்காவது சுற்றலாம் என்று முடிவெடுத்தேன்.

அப்போதுதான், நேற்றைக்கு நண்பர்கள் சொன்ன ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. எம்ஜி ரோட்டுக்குச் சற்றுத் தொலைவில் இருக்கும் ஒரு பிரபலமான புத்தகக் கடையில், வருடாந்திரத் தள்ளுபடி விற்பனை. புத்தகங்களெல்லாம் கொள்ளை மலிவில் 40%, 60%, இன்னும் 80%வரைகூட விலை குறைத்து விற்கிறார்களாம். அதைக் கொஞ்சம் எட்டிப்பார்த்துவிட்டு வந்தால் என்ன?

கப்பன் பார்க்வரை பஸ் கிடைத்தது. அதன்பிறகு பதினைந்து நிமிட நடராஜா சர்வீஸில் அந்தப் புத்தகக் கடையை எட்டிப் பிடித்தேன்.

அந்தக் கடையில் புத்தகங்கள்மட்டுமில்லை, இசைத் தகடுகள், பொம்மைகள், எழுதுபொருள்கள், அலங்கார சாதனங்கள், கைக் கடிகாரம், மூக்குக் கண்ணாடி, பரிசுப் பொருள்கள், இன்னும் என்னென்னவோ கிடைக்கின்றன. இவை அனைத்தையும் தொகுத்து ‘லைஃப் ஸ்டைல் ஸ்டோர்’ என்று பொதுவாகச் சொல்கிறார்கள் அதற்கு என்ன அர்த்தம் என்பதுதான் எனக்குச் சரியாகப் புரியவில்லை.

மதிய நேரத்திலும், கடைமுழுக்க ஏகப்பட்ட கூட்டம். மூலைச் சுவர் ஒன்றில் பள்ளங்கள் பதித்து, குழந்தைகள் உள்ளே சவுகர்யமாக அமர்ந்துகொள்ளும்படியான பிறை வடிவங்களை உருவாக்கியிருந்தார்கள். பக்கத்தில் அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள் அசௌகர்யமாகக் கை கட்டி நின்றபடி, ‘ஏய், பார்த்து உட்காரும்மா, விழுந்துடாதே’ என்று விநாடிக்கு இரண்டு முறை பதறினார்கள்.

நான் நிதானமாகப் புத்தகங்களைப் புரட்டத் தொடங்கினேன். நண்பர்கள் சொன்னது உண்மைதான், பெரும்பாலான புத்தகங்களுக்குக் கணிசமான தள்ளுபடி தரப்பட்டிருந்தது.

எங்களுடைய அலுவலக நூலகத்தை ‘நிரப்பும்’ பொறுப்பு என்னுடையது. ஆகவே, எப்போதும் என் பாக்கெட்டில் ஏழெட்டுப் புத்தகங்களின் பட்டியல் இருக்கும்.

அந்தப் பட்டியலைக் கடை ஊழியர் ஒருவரிடம் கொடுத்து, ‘இந்த புக்ஸ் எல்லாம் வேணும்’ என்றேன்.

அவர் என்னை நம்பமுடியாமல் பார்த்தார். பிறகு, ‘நீங்களே கொஞ்சம் பார்த்து எடுத்துக்குங்களேன் சார்’ என்றார் சங்கடமாக.

‘இல்லைங்க, இதெல்லாம் புது புக்ஸ், நீங்க எதை எங்கே வெச்சிருப்பீங்கன்னு உங்களுக்குதானே தெரியும்?’

‘புது புக்ஸா?’ அவர் முகத்தில் மறுபடி குழப்பம், ‘இங்கே புதுப் புத்தகம் எதுவும் கிடையாது சார், எல்லாமே பழைய ஸ்டாக்தான்’

அவர் அப்படிச் சொன்னதும், நான் திகைத்துப்போய்விட்டேன். இதென்ன கூத்து? ‘எங்களிடம் புதுச் சரக்கு இல்லை, அத்தனையும் பழசுதான்’ என்று எந்தக் கடைக்காரராவது சொல்வாரா? அப்படிச் சொல்கிறவரிடம் ஜனங்கள் வாங்குவார்களா?

இவர் சொல்கிறார். ஜனங்கள் வாங்குகிறார்கள், கடையில் எள் விழுந்தால் நசுங்கிப்போய்விடுகிற அளவுக்குக் கூட்டம்.

நான் மௌனமாகப் புத்தக அலமாரிகளின்பக்கம் திரும்பினேன். எனக்கு ஆர்வம் ஊட்டிய, விலை ஒத்துவரக்கூடிய தலைப்புகளைமட்டும் எடுத்துக் கூடையில் போடத் தொடங்கினேன்.

சிறிது நேரத்துக்குப்பிறகு, எனக்கு ஒரு சந்தேகம். நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் எல்லாமே, 40% அல்லது 60% தள்ளுபடி வகையைச் சேர்ந்தவை. ஆனால், அந்தத் தள்ளுபடியின்மூலம் புத்தக விலை ரொம்பக் குறைந்ததாகத் தெரியவில்லை. அது எப்படி?

கொஞ்சம் கவனமாகக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். ம்ஹூம், தள்ளுபடிக்குப்பிறகும், பெரும்பாலான புத்தகங்களின் விலை நானூற்றைம்பது, ஐநூற்றைம்பது ரூபாய் என்கிற அளவில்தான் இருந்தது.

அவசரமாக அலுவலகத் தோழி ஒருவரைத் தொலைபேசியில் அழைத்தேன், நான் தேர்ந்தெடுத்த ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி, இணையத்தில் அதன் விலையைத் தேடிக் கண்டுபிடிக்கக் கேட்டுக்கொண்டேன்.

இரண்டு நிமிடம் கழித்து, பதில் வந்தது, ‘ரூ 480/-’

அதே புத்தகம், இந்தக் கடையில் 40% தள்ளுபடி, ஆனால், விலைமட்டும் ரூ 550/-

தள்ளுபடி என்றால் புத்தகத்தின் விலை குறையவேண்டும். இங்கே எழுபது ரூபாய் கூடியிருக்கிறது. எப்படி?

கூடையிலிருந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வெளியில் எடுத்தேன், அவற்றின் பின் அட்டை விலையைக் கூர்ந்து கவனித்தேன். விஷயம் புரிந்தது.

நான் தேர்ந்தெடுத்திருந்த புத்தகங்கள் அனைத்தும் வெளிநாட்டுப் பதிப்புகள். ஆகவே, அவற்றின் விலை 18 டாலர், 12 யூரோ என்பதுபோல் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்தப் புத்தகங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும்போது. அவற்றை இங்கே அதே விலையில் விற்றால் போணியாகாது. ஆகவே, உள்ளூர் விலை ஒன்று நிர்ணயிப்பார்கள். அதை ஒரு சின்ன ஸ்டிக்கராகப் புத்தகத்தின் பின் அட்டையில் ஒட்டுவது வழக்கம்.

உதாரணமாக, ஒரு புத்தகத்தின் விலை 18$, அதன் இந்திய மதிப்பு சுமார் 900 ரூபாய், ஆனால் இந்தியாவில் அதனை விற்பனை செய்கிறவர்கள் 400 ரூபாய்க்கு அதை விற்பதாக முடிவெடுக்கலாம். இந்த விலைதான் புத்தகத்தின் பின் அட்டையில் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டு, கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஆனால், இந்தக் கடைக்காரர்கள், அந்த ஸ்டிக்கரைப் பிய்த்துவிட்டார்கள். உடனே, அந்தப் புத்தகம் 18$ – அதாவது 900 ரூபாய் மதிப்புள்ள புத்தகமாகிவிட்டது.

அடுத்தபடியாக, அதில் 40% தள்ளுபடி என்று ஒரு ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள் – அதாவது, 900 ரூபாயில் 360 தள்ளுபடி, மீதி 540 ரூபாய்.

இந்த விவரமெல்லாம், வாங்குகிறவருக்குத் தெரியாது. அவர் ‘ஆஹா, 40% தள்ளுபடி’ என்று மகிழ்கிறார். புத்தகத்தை 540 ரூபாய் கொடுத்து வாங்கிச் செல்கிறார். ஆனால், அதே புத்தகம், பக்கத்துக் கடையில் 400 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

இப்படி ஒரு புத்தகம், இரண்டு புத்தகம் இல்லை, அந்தக் கடையில் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டிருந்த பெரும்பான்மைப் புத்தகங்களின் பின் அட்டை ஸ்டிக்கர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்த எனக்கு பகீரென்றது.

நிறைய வாங்கலாம் என்கிற எண்ணத்துடன் அங்கே சென்ற நான், கடைசியில் ஒன்றிரண்டு இந்தியப் புத்தகங்களைமட்டும் (உண்மையான தள்ளுபடியில்) வாங்கிக்கொண்டு திரும்பினேன். ஆனால் எனக்கு முன்பும் பின்பும் வரிசையில் நின்றவர்கள் இரண்டாயிரம், ஐயாயிரம் என்று கிரெடிட், டெபிட் கார்ட்களை இஷ்டப்படி தேய்த்துக்கொண்டிருந்தார்கள், பாவம்.

வெளியே ‘80% தள்ளுபடி’ பேனர்கள் ஊசலாடிக்கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும்போது எனக்கு எரிச்சல்தான் வந்தது.

விற்பனைத் தந்திரம் என்று நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காக இப்படியா திருட்டு வேலை செய்வது? இது சட்டப்படி செல்லுமா? அல்லது, ஏமாற்றா? எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், இனி அந்தக் கடையில் கால் வைப்பதற்குமுன்னால் நான் ரொம்ப யோசிப்பேன்.

அது சரி, இதே கடைக்காரர்கள் நாடுமுழுவதும் ‘ஃப்ரெஷ்’ஷாகக் காய்கறிகளை விற்கிறார்களே, அங்கேயும் இதுபோன்ற ஏமாற்றுகள், தில்லுமுல்லுகள் இருக்குமா? யோசித்துக்கொண்டே எம்ஜி ரோட்டுக்கு பஸ் ஏறினேன்.

அடுத்த இரண்டு மணி நேரம், செம அரட்டை. நண்பர்கள் விக்கி, கிரீஷ் இருவரையும் முதன்முறை நேரில் சந்திக்கிறேன். ஆனால் ஏற்கெனவே ட்விட்டரில் நல்ல அறிமுகம் இருந்ததால், வழக்கமாகத் தமிழர்கள் எங்கு சந்தித்தாலும் பேசிக்கொள்கிற கிரிக்கெட், சினிமாவில் ஜன ரஞ்சகமாகத் தொடங்கி புத்தகங்கள், வேலைச் சூழல், பொருளாதாரச் சரிவு, பெங்களூர், சென்னை வித்தியாசங்கள், ஒற்றுமைகள் என ஒரு ரவுண்ட் வந்தோம்.

எட்டரை மணிக்குப்பிறகும், தொடர்ந்து பேச ஆசையாகதான் இருந்தது. ஆனால் ’ஆளுக்கு ஒரு கப் காபி குடித்துவிட்டு இத்தனை நேரம் மொக்கை போடுகிறான்களே’ என்று கடைக்காரர்கள் எங்களை முறைக்கத் தொடங்கியதால், வேறு வழியின்றி எங்கள் அரட்டையை முடித்துக்கொண்டோம்.

வீடு திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்ததைத் தேடினால், சாலையை இடது, வலதாக மாற்றிப்  போட்டிருந்தார்கள், ‘பஸ் ஸ்டாப் எங்கே போச்சு?’ என்று பதற்றத்துடன் விசாரித்தபோது, ரோட்டின் மத்தியில் கை காட்டினார்கள்.

நான் முதலில், அவர்கள் ஜோக் அடிப்பதாகதான் நினைத்தேன். ஆனால் நிஜமாகவே, அந்தப் பேருந்து நிறுத்தம் சாலைக்கு நடுவே இடம் பெயர்ந்திருந்தது. அங்கே ஏழெட்டு பேர் கடிகாரத்தை முறைத்தபடி பஸ்ஸுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

இப்படி ஒரு புதுமையான யோசனை யாருக்கு வந்ததோ தெரியவில்லை. உலகத்திலேயே, இருபுறமும் பரபரப்பாக டிராஃபிக் ஓடிக்கொண்டிருக்க, நடு மத்தியில் பேருந்து நிறுத்தம் அமைத்த ஒரே நகரம், பெங்களூராகதான் இருக்கவேண்டும்.

போக்குவரத்து நெரிசலைக் கஷ்டப்பட்டுக் கடந்து அந்தச் சாலையின் நடுவே சென்றடைந்தேன். அங்கிருந்த மற்றவர்களைப்போலவே நானும் கையைக் கட்டிக்கொண்டு பஸ் வரும் திசையில் விழி வைத்தேன்.

’நீயெல்லாம் நடுத்தெருவிலதான் நிக்கப்போறே’ என்று எப்போதோ, யாரோ என்னைத் திட்டியிருக்கவேண்டும், இன்றைக்குப் பலித்துவிட்டது.

காத்திருந்த நேரத்தில், அங்கே ஒட்டப்பட்டிருந்த ஒரு நோட்டீஸைக் கவனித்தேன். குழந்தைக் காப்பகம் ஒன்றுக்கான விளம்பரம் அது. ’Baby Crush Time: Morning 9 To Evening 4′ என்று எழுதியிருந்தார்கள்.

அத்தனை நேரம் குழந்தையைப் போட்டு நசுக்கினால் அதற்கு வலிக்காதோ என்று நான் யோசித்து முடிப்பதற்குள், பஸ் வந்துவிட்டது. முண்டியடித்து ஏறிக்கொண்டேன்.

என்னோடு காத்திருந்தவர்கள் எல்லோரும், அதே பஸ்ஸில்தான் ஏறினார்கள். ஒருவர்மட்டும் அங்கேயே தயங்கி நின்றார்.

காரணம், அவர் கையிலிருந்த சிகரெட். அப்போதுதான் அதைக் கொளுத்தி வாயில் வைத்திருந்தார். எனவே, மொத்தத்தையும் வீசி எறிந்து வீணாக்கிவிட்டு பஸ்ஸில் ஏற அவர் விரும்பவில்லை, முழுக்கப் புகைத்துவிட்டு சாவகாசமாக அடுத்த பஸ்ஸைப் பிடித்துக்கொள்ளலாம் என்று அவர் நினைத்திருக்கவேண்டும்.

அதேசமயம், இந்த பஸ்ஸைக் கைவிடவும் அவருக்கு மனம் இல்லை, அடுத்த பஸ் எப்போது வருமோ? யாருக்குத் தெரியும்?

ஆகவே, அவர் தன்னுடைய சிகரெட்டைக் கீழே வீசுவதுபோல் கை உயர்த்தினார், ஆனால் வீசவில்லை.

அரை நிமிடத்துக்குப்பிறகு, டிரைவர் வண்டியைக் கிளப்பி வேகம் எடுப்பதற்கும், அவர் சிகரெட்டை வீசி எறிவதற்கும் சரியாக இருந்தது. விறுவிறுவென்று ஓடி வந்த அவர் எங்கள் பஸ்ஸில் ஏற முயன்றபோது, ஆட்டோமேடிக் கதவு அறைந்து சாத்தப்பட்டது.

நான் ஜன்னல்வழியே திரும்பிப் பார்த்தேன். கீழே இன்னும் அணையாமல் விழுந்து கிடந்த சிகரெட்டை வெறித்துப் பார்த்தபடி அவர் இன்னமும் நடு ரோட்டில்தான் நின்றுகொண்டிருந்தார்.

***

என். சொக்கன் …

08 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அந்தக் கால ஆனந்த விகடன் அட்டைப் படங்களில் தொடங்கி, இன்றைய எஸ்ஸெம்மெஸ் குறுஞ்செய்திகள்வரை நகைச்சுவைத் துணுக்குகளில் அதிகம் அடிபடுகிறவர்கள் யார் என்று பார்த்தால், டாக்டர்கள், மாமியார் – மருமகள்கள், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் காசில்லாமல் மாவு ஆட்டுகிறவர்கள், சமைக்கும் கணவன்மார்கள், அவர்களை அதட்டும் மனைவிகள், ராப்பிச்சைக்காரர்கள், குறும்புப் பையன்கள், அசட்டு வாத்தியார்கள், கல்யாணத் தரகர்கள், அலட்டல் சினிமா ஹீரோக்கள், (அவ்வப்போது இந்தியா தோற்கிறபோது) கிரிக்கெட் வீரர்கள்.

இந்தச் சமநிலை, சமீப காலத்தில் கொஞ்சம்போல் மாறியிருக்கிறது. இப்போதெல்லாம் நூற்றுக்கு எண்பது நகைச்சுவைகள் சாஃப்ட்வேர்காரர்களைப்பற்றியவையாக இருக்கின்றன.

அந்த வகையில், சமீபத்தில் ஒரு நண்பர் சொல்லக் கேட்ட சம்பவம், இது நிஜமா, நகைச்சுவையா என்பது தெரியவில்லை. ஆனால் கேட்கச் சுவாரஸ்யமாக இருந்தது, கேட்டு முடித்ததும் லேசாகப் பயமாகவும் இருந்தது.

ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில், ஒரு பெரிய மேனேஜர். அவருக்குக் கீழே இருபது பேர் வேலை பார்க்கிறார்கள். கம்பீரமாகத் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட சிற்றரசை நிர்வாகம் செய்துகொண்டு இருக்கிறார் மனிதர்.

திடீரென்று ஒருநாள், இந்தச் சிற்றரசரின் பாஸ், அதாவது பேரரசர் அவரைத் தேடி வருகிறார், ‘அண்ணாச்சி, நம்ம ஊர்ல இப்பல்லாம் மாதம் மும்மாரி பெய்யறதில்லை, என்ன செய்யலாம்?’

‘நீங்களே சொல்லுங்கய்யா’

’நம்ம கம்பெனி அநியாயத்துக்குப் பெருத்துக் கிடக்குது, எப்படியாவது இளைக்கவைக்கணும்’ என்கிறார் பேரரசர், ‘உங்க டீம்ல 20 பேர் அநாவசியம், பத்து போதாது?’

இவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘போதும்ங்கய்யா, சமாளிச்சுடலாம்’ என்கிறார் அவஸ்தையாக.

‘சரி, உங்க டீம்ல ரொம்ப மோசமான பர்ஃபார்மர்ஸ்ன்னு பத்து பேர் லிஸ்ட் கொடுங்க, அவங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிடலாம்’

உடனே இவர் மொட்டை பாஸுக்குத் தலையாட்டும் அடியாள்போல் சம்மதிக்கிறார், ‘சரிங்கய்யா, போட்றலாம்ங்கய்யா’

அன்று மதியமே, அவர் தன்னுடைய குழுவின் ‘Bottom 10’ பட்டியலைத் தயார் செய்கிறார். மறுநாள் காலை, இந்த அடிப்பத்து ஊழியர்களுக்கும் டிஸ்மிஸ் கடிதம் விநியோகிக்கப்படுகிறது.

எப்படியோ நம் தலை தப்பியது என்று சிற்றரசர் நிம்மதியாக இருக்கிற நேரத்தில், பேரரசரிடம் இருந்து ஃபோன் வருகிறது, ‘உங்க டீம்ல மிச்சமிருக்கிற பத்து பேரில், யார் ரொம்ப பெஸ்ட்-ன்னு நீங்க நினைக்கறீங்க?’

அந்தக் கேள்வியின் உள் அரசியல் புரியாமலே, இவர் ஒரு பெயரைச் சொல்கிறார், ‘எதுக்குக் கேட்கறீங்கய்யா?’

‘அவர்தான் இனிமே இந்த டீமுக்கு மேனேஜர், நீங்க வீட்டுக்குப் போகலாம்’ என்கிறார் பேரரசர்.

அத்துடன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

***

என். சொக்கன் …

07 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஒருவழியாக, அன்னபூரணிக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. இப்போது பழையபடி குறுந்தகடுகள் சரியாக இயங்குகின்றன, வீட்டிலும் சுமுக நிலைமை திரும்பியிருக்கிறது.

ஆனால் ஒன்று, எனக்குப் பிடிவாதமாகத் திறக்க மறுத்த டிவிடி ப்ளேயர், அதற்கான நிபுணர் கை வைத்ததும், பத்தே விநாடிகளில் ’சட்டென மலர்ந்தது நெஞ்சம்’ என்று ஜானகி குரலில் பாடிக்கொண்டே கண் திறந்தது, இது அநியாயம், அழுகுணி ஆட்டம், சொல்லிவிட்டேன்!

எப்படியோ, இப்போதைக்கு புது ப்ளேயர் அவசியப்படவில்லை. பழசு இன்னும் எத்தனை நாள் / வாரம் / மாதம் தாங்குகிறது என்று பார்க்கவேண்டும்.

முந்தைய பதிவில் டிவிடி ப்ளேயரின் உபயோகங்களைப்பற்றி எழுதியபோது, ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன். என் மகள்களுக்கு அன்னபூரணியாகப் பயன்படும் அந்தச் சாதனம், சமீபகாலமாக, எனக்குச் சரஸ்வதியாக இருக்கிறது.

அதுவும், சாதாரண சரஸ்வதி இல்லை. கன்னட சரஸ்வதி.

பெங்களூரில் குடியேறி முழுசாக எட்டு வருடங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இன்னும் பேச்சுக் கன்னடத்தை உருப்படியாகக் கற்றுக்கொள்ளவில்லையே என்கிற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.

முன்பு ஹைதராபாதிலும் இதே தப்பைச் செய்து தெலுங்கு பேசக் கற்கும் வாய்ப்பை இழந்தேன். அவ்வப்போது தெலுங்கு நேரடி, தமிழிலிருந்து அங்கே ‘டப்’ ஆகும் படங்களைப் பார்த்ததில், மற்றவர்கள் பேசும் தெலுங்கு ஓரளவு நன்றாகவே புரியும், ஆனால் பேசுவதற்குப் பயம்.

பிரச்னை என்னவென்றால், பெங்களூரில் ஒருவர் கன்னடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அநேகமாக எல்லாக் கடைக்காரர்களும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கொங்கணி, சௌராஷ்டிரா, துளுவில்கூடப் பேசுவார்கள். கன்னடத்தில் ஒரு வார்த்தைகூடத் தெரியாமல் சந்தோஷமாகப் பிழைப்பை ஓட்டிவிடலாம்.

ஆனால், எனக்குமட்டும் ஏதோ உறுத்தல். இந்த ஊரில் வசித்துக்கொண்டு இவர்களுடைய பாஷையைப் புறக்கணிப்பது தப்பு என்று தோன்றியது.

தவிர, நாளைக்கே ஒரு பிரச்னை வந்து கன்னடர்கள் தமிழர்களை அடிக்கத் துரத்துகிறார்கள் என்றால், நன்றாக நாலு வாக்கியம் கன்னடத்தில் பேசத் தெரிந்துகொண்டால் உயிர் பிழைக்கலாமே? 😉

இப்படிப் பல காரணங்களை உத்தேசித்து, ஐந்தாறு வருடங்களுக்குமுன்னால் நான் கன்னடம் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். அப்போதைய எனது அறை நண்பன் ஒருவனும் என்னுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டான்.

என்ன செய்யலாம்? ஹைதராபாதில் செய்ததுபோல் இங்கேயும் சகட்டுமேனிக்குக் கன்னடப் படங்களைப் பார்க்கத் தொடங்கலாமா?

ம்ஹூம், அது சரிப்படாது, கன்னட வெகுஜன சினிமா இன்னும் போன தலைமுறையில்தான் இருக்கிறது. இந்த ஜிகினா வெத்துவேட்டுகளை மூன்று மணி நேரம் உட்கார்ந்து பார்ப்பதைவிட, கன்னடம் கற்றுக்கொள்ளாமலே இருந்துவிடலாம்.

அப்போதுதான், என்னுடைய நண்பன் அவனது பெட்டியைத் தோண்டி ஒரு பொக்கிஷத்தைக் கண்டெடுத்தான். எப்போதோ எதற்காகவோ அவன் வாங்கிவைத்த ‘முப்பது நாள்களில் கன்னடம்’ புத்தகம் அது.

போதாதா? நாங்கள் இருவரும் பேப்பர், பேனா சகிதம் ஆனா, ஆவன்னாவில் தொடங்கி கன்னடத்தை அடக்கி ஆளத் தொடங்கினோம்.

முதல் நாள், கன்னட ‘அ’ எழுதிப் பழகிவிட்டு ஆஃபீஸ் கிளம்பிய தினத்தை மறக்கவேமுடியாது. வழியில் தென்பட்ட பெயர்ப் பலகைகள், சுவர் விளம்பரங்கள், பாத்ரூம் கிறுக்கல்களில்கூட அந்த ‘அ’ தென்படுகிறதா என்று குழந்தை ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு ‘அ’வைக் கண்டறியும்போதும், உள்ளுக்குள் ஏகப்பட்ட பரவசம். ஆஹா, ஆஹா, மன்னிக்கவும், ‘அ’ஹா, ‘அ’ஹா!

மறுநாள், ‘ஆ’ எங்களுக்கு வசப்பட்டது. மலையை உருட்டி விழுங்கிவிட்டவர்கள்போல் கம்பீரமாக நிமிர்ந்து நடக்கத் தொடங்கினோம், இன்னும் இருநூற்றுச் சொச்ச எழுத்துகள்தான். அதன்பிறகு, கன்னடம் எங்கள் கையில்!

இப்படி தினம் ஓர் எழுத்து என்கிற விகிதத்தில் தொடர்ந்த எங்களுடைய இந்தக் கன்னடக் கல்வித் திட்டம், மிகச் சரியாக ஏழு நாள்கள் நீடித்தது. எட்டாவது நாள், இருவருக்கும் ஆஃபீசில் வேலை ஜாஸ்தி, தூக்கம் சொக்கி வீழ்த்திவிட்டது. ஒன்பதாவது நாள், நண்பர்களோடு புதுப்படம், பார்ட்டி, பத்தாவது நாளில் தொடங்கி, இதைப்பற்றிச் சுத்தமாக மறந்துபோய்விட்டோம்.

இரண்டு வாரம் கழித்து, எதேச்சையாக என்னுடைய கன்னட நோட்டைப் புரட்டிப் பார்த்தேன். ஆனாவும் ஆவன்னாவும் ஒன்றுடன் ஒன்று சூப்பர் இம்போஸ் ஆகிச் செமையாகக் குழப்பத் தொடங்கியிருந்தது.

அன்று இரவு, என் நண்பனைக் கேட்டேன், ‘மறுபடி ஆரம்பிக்கலாம் மச்சி’

‘வேண்டாம் விடுடா, நாம கன்னடம் எழுதக் கத்துகிட்டு ஞானபீடம் அவார்டா வாங்கப்போறோம்?’

அத்துடன், எனக்கும் ஆர்வம் போய்விட்டது. ஏதோ ஒரு நம்பிக்கையில், அந்த ‘முப்பது நாள் கன்னட’ப் புத்தகத்தைமட்டும் என் அலமாரியில் பத்திரப்படுத்திவைத்தேன்.

அந்த நேரத்தில்தான், என்னுடைய திருமணம். திருச்சியிலிருந்து கிளம்பி வந்த என் மனைவி, கையோடு கொணர்ந்தது ஒரே ஒரு புத்தகம்: ‘முப்பது நாள்களில் கன்னடம்’.

என்னைப்போலவே, அவரும் அதில் ஆனா, ஆவன்னா எழுத முயன்றிருக்கிறார். சில நாள்களில் ஆர்வம் குறைந்து வெறும் புத்தகமும் ஆர்வமும் குற்றவுணர்ச்சியும்தான் மிஞ்சியிருக்கிறது.

அவர் அப்படிச் சொன்னதும், எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை, ‘நாங்கள் ரொம்பப் பொருத்தமான ஜோடிதான்’ என்று நினைத்துக்கொண்டேன்.

சில வருடங்கள் கழித்து, மறுபடியும் எனக்குக் கன்னடம் கற்கிற ஆசை வந்தது. அதற்குக் காரணம், என் மகளுக்காக வாங்கிய ‘ஆரம்பக் கல்வி’ சிடிக்கள்.

A, B, C, D, 1, 2, 3, 4 என்று அசைந்தாடும் பொம்மைகள், பாடல்கள், அனிமேஷன்களைப் பார்த்துக் சின்னக் குழந்தைகள் ஆங்கிலம் அல்லது தமிழைக் கற்றுக்கொள்ளமுடியும் என்றால், நாமும் அதேபோல் கன்னடம் கற்றுக்கொண்டால் என்ன?

டக்கரான யோசனை. மார்க்கெட்டில் ஏதாவது ’கன்னடக் கல்வி’ சிடி கிடைக்குமா என்று தேடினேன். அப்படிக் கிடைத்தவர்தான், மங்கண்ணா என்கிற குரங்கு வாத்தியார்.

‘மங்கண்ணா’ என்பது, அந்த சிடியில் வரும் குரங்குக் கதாபாத்திரம். விதவிதமான குழந்தைப் பாடல்களைத் தொகுத்து வழங்கும் இந்தக் குரங்குதான், இப்போது எனக்குக் கன்னட ஆசிரியர்.

குழந்தைப் பாடல்கள் என்பதால், ஒவ்வொரு வார்த்தையையும் மிகத் தெளிவாக உச்சரிக்கிறார்கள், காட்சிபூர்வமாக அனிமேஷன் செய்திருக்கிறார்கள். ஒரு பாட்டுக்குக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புதிய வார்த்தைகளை அர்த்தத்துடன் கற்றுக்கொண்டுவிடமுடிகிறது.

ஏதாவது வார்த்தை புரியாவிட்டால்? பிரச்னையே இல்லை, அதைமட்டும் பேப்பரில் குறித்துக்கொண்டு ஆஃபீசுக்குப் போனால், யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டுவிடலாம். மிகச் சுவாரஸ்யமான விளையாட்டு இது.

சில சமயங்களில் ஒரு பாடல் முக்கால்வாசி புரிந்துவிடும், ஒன்றிரண்டு வார்த்தைகள்மட்டும் அர்த்தம் தெரியாமல் குழப்பியடிக்கும். அப்போது அந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் தெரிந்துகொண்டு பாட்டை முழுக்கத் திரும்பக் கேட்கும்போது உலகமே கூடுதல் வெளிச்சத்துடன் தெரியும்.

அதுமட்டுமில்லை, இந்தப் பாடல்கள்மூலம் வெறும் வார்த்தைகளைமட்டுமின்றி கன்னட மொழி இலக்கணமும் ஓரளவு தெரிந்துகொள்ளமுடிகிறது, அதை மற்ற வார்த்தைகளில் பொருத்திப் பார்த்துப் பயிற்சி செய்வதும் செம ஜாலியாக இருக்கிறது.

மங்கண்ணா குரங்கு வாத்தியார் உபயத்தில், கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நான் ஓரளவு சுமாரான ‘பட்லர் கன்னடம்’ பேசப் பழகிவிட்டேன். பேருந்து, அரசு அலுவலகங்கள், தபால் நிலையம், ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனில்கூட என்னுடைய கன்னடத்தை முயன்று பார்த்துச் சமாளித்துவிட்டேன்.

ஆனால் இதெல்லாம், முன்பின் தெரியாத மூன்றாம் நபர்களிடம்மட்டும்தான். கன்னடம் நன்றாகத் தெரிந்த ஒரு நண்பர் அல்லது உறவினருக்குமுன்னால் கன்னடத்தில் பேசுவதென்றால் ஏகப்பட்ட பயமும் கூச்சமும் என்னைச் சூழ்ந்துகொள்கிறது.

ஏனெனில், என்னுடைய கன்னடத்தில் ஏகப்பட்ட இலக்கணப் பிழைகள் இருப்பது எனக்கே தெரியும், அதை எப்படித் திருத்திக்கொள்வது என்பதுதான் தெரியாது.

என்ன அவசரம்? மெதுவாகக் கற்றுக்கொள்ளலாம், மங்கண்ணா இருக்க பயமேன்!

***

என். சொக்கன் …

06 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

கிட்டத்தட்ட விளம்பர நோட்டீஸ்போல்தான் இருந்தது அந்தக் கடிதம்:

அன்புடையீர்,

உங்கள் மகள் எப்படிப் படிக்கிறாள் என்று நீங்களே நேரில் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமா? வரும் புதன்கிழமை மதியம் பன்னிரண்டே கால் மணியளவில் எங்கள் பள்ளிக்கு வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

இப்படிக்கு,

பள்ளி நிர்வாகத்தினர்

நங்கையின் பள்ளியில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்படிக் கடிதம் அனுப்புவார்கள். ஒரு குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில், காலை பத்தே கால், பதினொன்றே கால், பன்னிரண்டே கால் என்று மூன்று ‘பேட்ச்’களில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் படிக்கும் லட்சணத்தை நேரடியாகப் பார்வையிடலாம், கல்விமுறைபற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

அதென்னவோ, ஒவ்வொருமுறையும் எனக்கென்று மதியம் பன்னிரண்டே கால் மணிக் கோட்டாதான் வாய்க்கும். அலுவலக நேரத்தில் வெளியே போக அனுமதி பெற்று, வேகாத வெய்யிலில் லொங்கடா லொங்கடா என்று ஓடவேண்டும்.

ஆயிரம்தான் இருந்தாலும், மகள் படிப்பு விஷயம், இதற்கெல்லாம் சலித்துக்கொண்டால் நான் ஓர் உத்தமப் பெற்றோன் ஆகும் வாய்ப்பை இழந்துவிடுவேனில்லையா? உச்சுக்கொட்டாமல் நேற்று மதியம் அவளுடைய பள்ளியைத் தேடி நடந்தேன்.

உச்சி வெய்யில் நேரத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தார்ச்சாலையில் வறுபடவேண்டும் என்று எனக்கொன்றும் வேண்டுதல் இல்லை. ஆனால் எ(பெ)ங்களூர் ஆட்டோ டிரைவர்களுக்கு இதுபோன்ற ‘குறைந்த’ தூரங்கள் அலர்ஜி, கெஞ்சிக் கேட்டால்கூட யாரும் வரமாட்டார்கள், அவர்களிடம் சண்டை போட்டு வாய் வலிப்பதற்கு, கால் வலி பரவாயில்லை என்று நடந்துவிடலாம்.

தவிர, உடற்பயிற்சிக்கென்று அதிக நேரம் ஒதுக்கமுடியாத என்னைப்போன்ற சோம்பேறிகளுக்கு, நடை பழக்கம் நல்லது. லேசாக வியர்க்கும்படி நடையை எட்டிப் போட்டால் இன்னும் நல்லது.

ஆனால், நேற்று எனக்கு வியர்த்தது நடையால் அல்ல, வெயிலால். தொப்பலாக நனைந்த நிலையில்தான் நங்கையின் பள்ளிக்குச் சென்று சேர்ந்தேன்.

பள்ளி வாசலில் ஒரு சிறு மண் குவியல், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம். அதற்குப் பக்கத்தில் பிளாஸ்டிக் ட்ரே வைத்துப் பிள்ளைகள் தவறவிட்ட கர்ச்சீப், பென்சில், இன்னபிற அம்சங்களை அடுக்கிவைத்திருந்தார்கள்.

அழகிய சிறு மரக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால், நிர்வாக அதிகாரி கை குலுக்கி வரவேற்றார். என்னைப்போலவே இன்னும் சிலர் அங்கே காத்திருந்தார்கள். ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலத்தில் எல்லோரையும் குசலம் விசாரித்த அவரைச் சமாளித்து உள்ளே நடந்தால், தரையில் பாய் விரித்து எட்டுக் குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள்.

பாய் இல்லை, பாய்கள்.

ஒவ்வொருவருக்கும் குட்டிக் குட்டியான மிதியடி சைஸ் பாய். அதை அவர்களே விரித்து, அதன்மீது அமர்ந்து வேலைகளைச் செய்யவேண்டும், முடித்ததும், ஒழுங்காகச் சுருட்டி எடுத்துவைத்துவிடவேண்டும்.

நங்கை அந்த அறையின் மூலையில் இருந்தாள், என்னைப் பார்த்ததும் உற்சாகமாக ஓடிவந்து, ‘ஏன் லேட்?’ என்றாள்.

அவளுக்கு மணி பார்க்கத் தெரியாது. ஆனால் இன்று நான் பள்ளிக்கு வருவேன் என்று ஏற்கெனவே அவள் அம்மாவும், ஆசிரியர்களும் சொல்லிவைத்திருந்ததால், காலையிலிருந்து எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்போல. ஆகவே, அவளைப் பொறுத்தவரை நான் வந்தது தாமதம்தான். இந்தமுறைமட்டுமல்ல, ஒவ்வொருமுறையும்.

கடந்த ஒன்றிரண்டு ‘பார்வையிடல்’களின்போது நான் கவனித்த இன்னொரு விஷயம், நங்கை பள்ளியில் பேசுவதற்கும், வீட்டில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.

வீட்டில், அவள் ஒரு நவரச நாடகம். சாதாரணமாகத் ‘தண்ணி வேணும்’ என்பதைக்கூட உரத்த குரலில் கத்தி, அதிகாரம் செய்து வாங்கிதான் பழக்கம். அரை நிமிடம் தாமதமானாலும், ‘தண்ணி கேட்டேனே, மறந்துட்டியா?’ என்று அதட்டுவாள்.

இதற்கு நேரெதிராக, பள்ளியில் அவள் மிக மிக அமைதியானவளாகத் தெரிந்தாள். ’நங்கை ரொம்ப மெதுவாப் பேசறாங்க, எங்களைப் பார்த்துப் பேசினாலும், தனக்குள்ளேயே வார்த்தையை முழுங்கிடறாங்க, பல சந்தர்ப்பங்கள்ல அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு எங்களுக்கே புரியறதில்லை’ என்று அவளுடைய ஆசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள், குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார்கள், அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நங்கைமட்டுமில்லை, அவளுடைய பள்ளியில் பல குழந்தைகள், இப்படிதான் மெதுவாகப் பேசுகிறார்கள், பணிவாக நடந்துகொள்கிறார்கள். பின்னர் இதே பிள்ளைகள் (என் மகள்தான் இந்த கலாட்டாக் கூட்டத்தின் ’மினி’ தலைவி) பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே வந்ததும் வேனில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டபடி டிரைவரை வம்புக்கிழுப்பதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம்? எனக்கு நிச்சயமாகப் புரியவில்லை.

நங்கையின் பள்ளியில் மாணவர்களை அடிக்கிற, அதட்டுகிற வழக்கம் கிடையாது. ஏதேனும் தவறு செய்தால் அழுத்தமாகக் கண்டிப்பார்கள், மீண்டும் செய்தால், மூலையில் உட்காரவைப்பார்கள். அவ்வளவுதான். வேறு கடுமையான தண்டனைகள், மிரட்டுதல் இல்லை.

அப்படியானால், நாலரை வயதுக் குழந்தைக்குப் பெற்றோரிடம் அதிகாரம் செய்யலாம், ஆனால் ஆசிரியர்களிடம் பணிந்து(கொஞ்சம் ஜனரஞ்சகமாகச் சொல்லவேண்டுமென்றால், ‘பம்மி’)ப் போகவேண்டும், குறும்புகளைச் சுருட்டி ஓரமாக வைக்கவேண்டும் என்று எப்படித் தோன்றுகிறது. அடி, அதட்டல், மிரட்டல் இல்லாமல் அவர்கள் இதை எப்படிச் சாதிக்கிறார்கள்?

அன்பாலா? ம்ஹூம், என்னால் நம்பமுடியவில்லை 🙂

நான் வளர்ந்த சூழல் அப்படி. எங்கள் முனிசிபாலிட்டி ஸ்கூலில் பிரம்பு இல்லாத ஆசிரியர்களே கிடையாது. முரட்டு அடி, குட்டு, கிள்ளு, முட்டிபோடுதல் இன்னபிற தண்டனைகளால்மட்டுமே வழிக்குக் கொண்டுவரப்பட்ட ’தடிமாட்டுத் தாண்டவராயன்’கள் நாங்கள், எங்களிடம் அன்பெல்லாம் நிச்சயமாகச் சரிப்படாது என்பது அந்த ஆசிரியர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.

இதனால், எங்களுக்கு ஆசிரியர்கள்மீது பக்தி வந்ததோ இல்லையோ, பயம் வந்தது. அந்த பயத்தால், மரியாதை(?)யால்மட்டும்தான் ஒருசிலராவது உருப்படியாகப் படித்தார்கள்.

ஆனால், நாங்கள் படித்த பள்ளிகளில் எந்தப் பெற்றோரையும் இப்படிப் ‘பார்வையிட’க் கூப்பிட்டு சேரில் உட்காரவைத்துக் குளிர்பானம் கொடுத்து உபசரிக்கிற வழக்கம் கிடையாது. ஒருவேளை அப்படிச் சில அப்பாக்கள், அம்மாக்கள் வந்திருந்தாலும்கூட, எங்களுடைய வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடுமோ என்கிற பயத்தில் நாங்கள் வகுப்பிலிருந்து தலைமறைவாகியிருப்போம்.

நிற்க. வழக்கம்போல் எங்கோ தொடங்கி எங்கேயோ போய்விட்டேன். மறுபடியும் உச்சி வெயிலில் நங்கையின் வகுப்பறைக்குத் திரும்பவேண்டும்.

நான் போனபோது நங்கை சில படங்களுக்குப் பொருத்தமான எழுத்துகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள். அதாவது, அட்டையில் ஒரு மேஜையின் படம் இருக்கும், அதைப் பார்த்து பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட t-a-b-l-e எனும் எழுத்துகளை ஒவ்வொன்றாக அடுக்கிவைக்கவேண்டும்.

அதை முடித்ததும், அடுத்த படம், கப்பல், s-h-i-p என்று அடுக்கவேண்டும்.

பிரச்னை என்னவென்றால், இந்த பிளாஸ்டிக் எழுத்துகள் எல்லாம் சற்றுத் தொலைவில் இருந்த இன்னோர் அறையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு முறையும் அங்கே சென்று ஒவ்வோர் எழுத்தாகக் கொண்டுவந்து அடுக்கவேண்டும். பிறகு அதைப் பார்த்து நோட்டுப் புத்தகத்தில் எழுதும் பயிற்சி.

இரண்டு நிமிடத்தில், எனக்கு அந்த விளையாட்டு போரடித்துவிட்டது. ‘அடுத்து என்ன?’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால், அங்கிருந்த குழந்தைகள் யார் முகத்திலும் சலிப்பைக் காணோம். ஒரு மொழிப் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் விளையாட்டாக, ஜாலியாக அனுபவித்துச் செய்துகொண்டிருந்தார்கள்.

இப்படி நான்கைந்து வார்த்தைகள் எழுதி முடித்தபிறகு, அதுவரை அடுக்கிய எழுத்துகளையெல்லாம் பழையபடி பெட்டியில் கொண்டுபோய்ப் போடவேண்டும். படங்களை எடுத்துவைக்கவேண்டும், பாயைச் சுருட்டவேண்டும்.

நான் இப்போது எல்லாக் குழந்தைகளையும் கவனிக்கத் தொடங்கியிருந்தேன். சிலர் பொறுமையுடன் ஒவ்வோர் எழுத்தாகப் பெட்டியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். இன்னும் சிலர், எல்லா ‘S’களையும் ஒரு நடை, எல்லா ‘a’க்களையும் ஒரு நடை என ஷார்ட் கட்டில் நேரம் மிச்சப்படுத்தினார்கள்.

அடுத்து, கணிதப் பாடம். கிட்டத்தட்ட சதுரங்கப் பலகைபோன்ற ஓர் அட்டை. அதன் சதுரங்களில் 1 முதல் 18வரையிலான எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. அதையும், சில உலோகப் பட்டைகளையும் வைத்துக்கொண்டு குழந்தைகள் சுலபமாகக் கழித்தல் கணக்குப் போடத் தொடங்கினார்கள்.

இதில் எனக்கு ஆச்சர்யமாகத் தோன்றிய விஷயம், பெரும்பாலான குழந்தைகள் எந்தவிதமான வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கவில்லை. எப்போதோ சொல்லிக்கொடுத்ததை நினைவில் வைத்துக் கச்சிதமாகக் கணக்குப் போட்டுக் குறிப்பேட்டில் எழுதிவிட்டன.

அதுமட்டுமில்லை. ஒவ்வொரு பயிற்சி முடிந்ததும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்கள் குழந்தையின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். குழந்தை என்ன செய்ய விரும்புகிறதோ, அதைச் செய்யலாம், தடுப்பதில்லை.

வழக்கம்போல், நேரம் ஓடியதே தெரியவில்லை. அரை மணி நேரம் முடிந்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை திரும்பி வந்து நினைவுபடுத்தியபிறகுதான், நாங்கள் மனசில்லாமல் எழுந்துகொண்டோம்.

மீண்டும் நாங்கள் அலுவலக அறைக்குத் திரும்பியபோது, என் முன்னே நடந்துகொண்டிருந்த ஒருவர் சத்தமாகக் கேட்டார், ‘டெய்லி ஸ்கூல் இப்படிதான் ஒழுங்கா நடக்குமா? இல்லை, இன்னிக்கு நாங்க அப்ஸர்வேஷனுக்காக வர்றோம்ன்னு சும்மா செட்டப் செஞ்சிருக்கீங்களா?’

இப்படி ஒரு கேள்வியை, அந்த நேரத்தில் நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பெரும்பாலானோர் சங்கடமாக நெளியத் தொடங்கினோம்.

அந்த ஆசிரியையின் நிலைமைதான் ரொம்பப் பரிதாபம். அவர் முகத்தில் அடிபட்ட பாவனை, இந்த நேரடிக் குற்றச்சாட்டு அவர் மனத்தைச் சுட்டிருக்கவேண்டும் என்பது புரிந்தது. சங்கடமாகப் புன்னகைத்து ஏதோ சொல்லி மழுப்பினார். பத்துப் பேர் மத்தியில் இப்படி அவமானப்பட்டுவிட்டோமே என்கிற உணர்வில், அவருடைய குரல் வெகுவாகத் தணிந்திருந்தது.

நல்லவேளை, அப்போது எங்களைப் ’பார்வையிட’ எங்களுடைய குழந்தைகள் யாரும் அங்கே இல்லை.

***

என். சொக்கன் …

05 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728