மனம் போன போக்கில்

Archive for October 2009

’அப்படியே தூக்கிட்டுப் போய் எங்க வேணும்ன்னாலும் வெச்சு வெட்டலாம்-ங்க’ என்றார் கடைக்காரர் – தலைமுடியைதான் சொல்லியிருப்பார் என நம்புகிறேன்.

(பெங்களூர் – 25 அக்டோபர் 2009 – மாலை 4:16)

25102009098

***

என். சொக்கன் …

29 10 2009

நேற்று இரவு (அல்லது அதிஅதிகாலை) இரண்டு பதினெட்டுக்கு எனக்கு ஓர் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்தது:

நண்பர்களே, ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்ம சத்யமூர்த்திக்கு மகன் பிறந்திருக்கிறான். தாய், சேய் நலம். இப்படிக்கு, மனோஜ்குமார்

சத்யமூர்த்தி, மனோஜ்குமார் இருவரும் நல்ல நண்பர்கள், எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஊழியர்கள்.

மனோஜ்குமாரின் எஸ்.எம்.எஸ். வந்தபோது நான் செம தூக்கத்தில் இருந்தேன். ஆனாலும் அந்த ‘டொய்ங் டொய்ங்’ சத்தத்தில் விழிப்பு வந்துவிட்டது. மப்பு கலையாமலே தலைமாட்டில் இருக்கும் செல்ஃபோனை இயக்கிச் செய்தியைப் படித்தேன், சந்தோஷம்.

அதோடு, நான் மறுபடி தூங்கப் போயிருக்கவேண்டும். ஆனால் ஏனோ, சத்யமூர்த்திக்கு வாழ்த்து அனுப்பவேண்டும் என்று தோன்றியது.

பகல் நேரமாக இருந்தால், உடனே தொலைபேசியில் அழைத்திருப்பேன். அர்த்தஜாமம், இப்போதைக்கு எஸ்.எம்.எஸ். வாழ்த்து போதும், நாளைக் காலை பேசிக்கொள்ளலாம்.

ஆனால், இந்த நடுராத்திரியில் பிரசவமான மனைவியை, குழந்தையைக் கவனித்துக்கொண்டிருக்கும் சத்யமூர்த்திக்கு, என்னுடைய வாழ்த்துச் செய்தியைப் படிக்கவா நேரம் இருக்கப்போகிறது?

நான் இதை யோசிக்கவில்லை, மளமளவென்று எஸ்.எம்.எஸ். எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அதிகமில்லை. ‘வாழ்த்துகள்! மனைவி, புது மகனை நல்லாக் கவனிச்சுக்கோ’ என்று இரண்டே வாக்கியங்கள்தான். அதைத் தட்டி முடிப்பதற்குள் கண் சொக்கி மறுபடி தூக்கம் வந்துவிட்டது.

அப்போதாவது, நான் தூங்கப் போயிருக்கலாம். செய்யவில்லை. கண்கள் செருக என் செல்ஃபோனில் உள்ள Contacts மத்தியில் சத்யாவின் நம்பரைத் தேடி எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அப்படியே ஃபோனைக் கையில் வைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன்.

இன்று காலை, பல் தேய்த்துக் காப்பி குடிப்பதற்குமுன்னால், ‘நம்ம சத்யாவுக்குப் பையன் பொறந்திருக்காம்’ என்றேன் என் மனைவியிடம்.

‘அடடே, வெரிகுட், எப்ப?’

‘நேத்து நைட் ரெண்டரைக்கு SMS வந்தது’

உடனடியாக என் மனைவியின் அடுத்த கேள்வி, ‘நார்மல் டெலிவரியா, சிசேரியனா’

அதென்னவோ, இந்தக் கேள்வியைமட்டும் ஆண்களுக்கு விசாரிக்கத் தோன்றுவதே இல்லை. பெண்களுக்கு இது ஒன்றுதான் அதிமுக்கியமாகத் தோன்றுகிறது. ‘தெரியாதே’ என்று உதட்டைப் பிதுக்கினால், ‘அற்பனே’ என்பதுபோல் பார்க்கிறார்கள்.

அதனால், இப்போதெல்லாம் என் மனைவி இந்தக் கேள்வியைக் கேட்டால், அப்போதைக்கு என்ன பதில் தோன்றுகிறதோ அதைச் சொல்லிவிடுவேன், சராசரியாக சிசேரியனும், நார்மல் டெலிவரியும் இரண்டுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் வருமாறு என் பதில்களை ஒழுங்குபடுத்திக்கொண்டால் அவை நம்பகமாகக் கருதப்படுவது நிச்சயம்.

போகட்டும், மறுபடி சத்யமூர்த்தி மேட்டருக்கு வருகிறேன். நடுராத்திரியில் வந்த எஸ்.எம்.எஸ்., அதற்குப் பதிலாக நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியைப்பற்றியெல்லாம் என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேனா, இத்தனையையும் கேட்டபிறகு அவர் ஒரு நியாயமான கேள்வியை எழுப்பினார், ‘ரெண்டரை மணிக்கு அரைத் தூக்கத்தில எஸ்.எம்.எஸ்.ஸா? அதை ஒழுங்கா சத்யமூர்த்திக்குதான் அனுப்பினியா, இல்லை தூக்கக் கலக்கத்தில வேற யாருக்கோ வாழ்த்துச் சொல்லிட்டியா?’

அவர் இப்படிக் கேட்டதும் எனக்குப் பகீரென்றது. அந்த நேரத்து அரைகுறைச் சுயநினைவில் நான் யாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேனோ, தெரியவில்லையே.

சட்டென்று செல்ஃபோனை எடுத்து ‘Sent Items’ தேடினேன். உச்சியில் முதல் எஸ்.எம்.எஸ்., அத்தனை தூக்கத்திலும் ஒரு சின்ன எழுத்துப் பிழைகூட இல்லாத உன்னத எஸ்.எம்.எஸ்., ஆனால், மிகச் சரியாக (ம்ஹூம், மிகத் தவறாக) அது சதீஷ்குமார் என்ற இன்னொரு நண்பருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

செல்ஃபோன் ‘Contacts’ பட்டியலில் சத்யமூர்த்தியும் சதீஷ்குமாரும் அடுத்தடுத்து வருகிறார்கள். உறக்கக் கலக்கத்தில் கை விரல் தவறி சத்யமூர்த்திக்கு அனுப்பவேண்டியதை சதீஷ்குமாருக்கு அனுப்பிவிட்டேன்.

ஒரே பிரச்னை, சதீஷ்குமாருக்கு இரண்டு மாதம் முன்னால்தான் திருமணமாகியிருக்கிறது. அவனுடைய புது மனைவி இந்த எஸ்.எம்.எஸ்.ஸைப் படித்தால் என்ன ஆகும்?

Of Course, தொலைக்காட்சி மெகாசீரியல்களில் வருவதுபோல் ரொம்ப Exaggerated கவலைதான். ஆனாலும், ரொம்ப சென்சிடிவான சமாசாரம் என்பதால், இதுவிஷயமாக அந்த சதீஷ்குமாருக்கு ஃபோன் செய்து மன்னிப்புக் கேட்கக்கூடக் கொஞ்சம் தயக்கமாக, அல்லது பயமாக இருக்கிறது.

பேசாமல், இந்தப் பதிவின் URLஐ அவருக்கு அனுப்பிவைத்துவிடட்டுமா?

***

என். சொக்கன் …

28 10 2009

நான் எழுதிய Infosys நாராயணமூர்த்தி வாழ்க்கை வரலாறு தற்போது ஹிந்தியில் வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்தவர்: மகேஷ் ஷர்மா. வெளியீடு: பிரபாத் பிரகாஷன் (நியூ ஹொரைசான் மீடியா வழியாக), டெல்லி. விலை: ரூ 200/-

Infosys_Narayana_Murthy_Hindi_Prabhat_Prakashan_N_Chokkan

’நாராயண’மூர்த்தி என்று பெயர் வைத்ததால்தானோ என்னவோ, ஏற்கெனவே இந்தப் புத்தகம் தமிழில் மூன்று, ஆங்கிலத்தில் இரண்டு, மலையாளத்தில் ஒன்று என ஐந்து ஆறு அவதாரங்கள் எடுத்திருக்கிறது. இப்போது ஏழாவதாக ஹிந்தி அவதாரம். இன்னும் மூன்றுதான் பாக்கி 🙂

Infosys நாராயணமூர்த்திஇன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்திஒலிப்புத்தகம்: இன்ஃபோசிஸ்  நாராயணமூர்த்தி

Narayana Murthy - IT GuruNarayana Murthy ഇന്‍ഫോസിസ്‌ നാരായണമൂര്‍ത്തി

***

என். சொக்கன் …

16 10 2009

Update – 17 நவம்பர் 2009

எட்டாவது அவதாரம் – குஜராத்தியில் – Narayana Murthy: Mulyona Jatanni Anokhi Safar – மொழிபெயர்ப்பு: ஆதித்ய வாசு – வெளியீடு: R. R. Sheth & Co., – 120 பக்கங்கள் – விலை ரூ 90/-

சென்ற வாரம் மும்பையில் அலுவலக நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.

’நான் குடியிருக்கிற வீட்டு ஓனருக்கு என்மேல பயங்கர கோவம்’

’ஏன், என்னாச்சு? வாடகை பாக்கி வெச்சுட்டீங்களோ?’

‘அதெல்லாம் இல்லை, எங்க வீட்ல ஒரு குழாய் ரிப்பேர், ப்ளம்பரைக் கூட்டிவந்து ரிப்பேர் செஞ்சேன்’

’இதுக்குப்போய் யாராச்சும் கோவப்படுவாங்களா?’

’கோவம் அதுக்கில்ல, ரிப்பேரைச் சரி செஞ்சதுக்கு அந்த ப்ளம்பர் நூத்தம்பது ரூபாய் கேட்டார், கொடுத்தேன், அதுதான் எங்க ஓனருக்குப் பிடிக்கலை’

‘ஏன்? உங்க காசைத்தானே கொடுத்தீங்க?’

‘ஆமாம், ஆனா இனிமே இந்த வீட்ல எந்தக் குழாய் ரிப்பேர்ன்னாலும் நூறு, நூத்தம்பதுன்னு கேட்கலாம்ன்னு அந்த ப்ளம்பருக்குத் தோணிடுமாம், அவர் இன்னும் பத்துப் பதினஞ்சு பேருக்குச் சொல்வாராம், காய்கறி விக்கறவங்க தொடங்கி, கார்பென்டர், எலக்ட்ரீஷியன், கால் டாக்ஸிக்காரன்வரைக்கும் எல்லாரும் இங்கே குடியிருக்கிறவங்க பணக்காரங்க, இவங்ககிட்டே நல்லாக் காசு கறக்கலாம்ன்னு முடிவு செஞ்சுடுவாங்களாம்’

’என்னங்க இது, அநியாயத்துக்கு அபத்தமா இருக்கே’

‘நீங்க அபத்தம்ன்னு சொல்றீங்க, ஆனா அவர் நம்ம சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரிமேலயே செம காண்டுல இருக்கார், நாமதான் பெங்களூரைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டோம், இங்கே காஸ்ட் ஆஃப் லிவிங் எகிறினதுக்கு நாமதான் காரணம்-ன்னு புலம்பறார்’

’அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஐடி நிறுவனங்கள் கால் பதிக்காத அந்தக் காலத்திலயே பெங்களூர் செம காஸ்ட்லி ஊர்தான், எங்கப்பா சொல்லியிருக்கார்’

’ஆனா இவர் சொல்றார், பெங்களூர்ல ஒவ்வொண்ணுக்கும் எக்ஸ்ட்ரா காசு கொடுத்து பழக்கப்படுத்தினது சாஃப்ட்வேர்காரங்கதான், அதனால இப்ப எல்லாரும் பாதிக்கப்படறாங்க-ன்னு’

‘விட்டுத்தள்ளுங்க, இதெல்லாம் வெறும் வயித்தெரிச்சல்’

அதோடு அந்த விவாதம் முடிந்தது. கிட்டத்தட்ட இதேமாதிரி குற்றச்சாட்டை நான் நிறையக் கேட்டிருந்ததாலும், அதில் கொஞ்சம் உண்மை, மிச்சம் ஊதிப் பெரிதாக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டிருந்ததாலும் நான் அதைப்பற்றி எதுவும் யோசிக்கவில்லை.

இன்றைக்கு, வேறொரு சம்பவம். எங்கள் வீட்டுக்கு வழக்கமாக வருகிற பணிப்பெண் மட்டம் போட்டுவிட்டார். என் மனைவி பெரிதாகப் புலம்பிக்கொண்டிருந்தார்.

‘ஏன்? என்னாச்சு?’ பட்டுக்கொள்ளாமல் விசாரித்தேன். இதுமாதிரி நேரங்களில் ரொம்பக் கரிசனம் காட்டினால் காரணமே இல்லாமல் நம்மீது அம்பு பாயும், அதற்காகக் கண்டுகொள்ளாமல் விட்டால் ஈட்டியே பாயும்.

‘வேலைக்காரி வராததைப்பத்தி எனக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, நானே எல்லா வேலையையும் செஞ்சுக்குவேன், ஆனா, என்னால வரமுடியாதுன்னு அவ முன்கூட்டியே சொல்லணும்ல? இப்படி திடுதிப்ன்னு ஆப்ஸன்ட் ஆனா எப்படி? இவளால என்னோட மத்த ப்ளான்ல்லாம் கெட்டுப்போகுது’

‘அவங்க வழக்கமா இப்படிச் சொதப்பமாட்டாங்களே, போன மாசம்வரைக்கும் ஒழுங்காதானே வந்துகிட்டிருந்தாங்க? இப்போ திடீர்ன்னு என்ன ஆச்சு?’

‘அவளுக்குக் கிறுக்குப் பிடிச்சுடுச்சு’ என்றார் என் மனைவி, ‘அடுத்த தெருவில ஒரு புது அபார்ட்மென்ட் வந்திருக்கில்ல? அங்க ஒரு வீட்ல இவளுக்கு வேலை கிடைச்சிருக்கு’

‘அதனால?’

‘அவங்க வீடு பெருக்கித் துடைச்சு, பாத்திரம் கழுவி, துணி துவைக்கறதுக்கு மாசம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் தர்றாங்களாம்’

‘அப்படியா?’

’என்ன அப்படியா? இந்த வேலைக்கு மூவாயிரத்து ஐநூறு அதிகமில்லையா?’

‘என்னைக் கேட்டா? இதே வேலைக்கு நாம எவ்ளோ தர்றோம்?’

‘வேலைக்காரிக்கு மாசம் என்ன சம்பளம்ங்கற விஷயம்கூடத் தெரியாதா? நீ என்ன மண்ணுக்குக் குடும்பத் தலைவன்?’

‘ஹலோ, நான் எப்பவாச்சும் என்னைக் குடும்பத் தலைவன்னு சொல்லிகிட்டிருக்கேனா? நீங்களா ஏமாந்தவன் தலையில ஒரு மூட்டையைத் தூக்கி வெச்சுடவேண்டியது’

நான் இப்படிச் சொன்னதும், என் மனைவி எதையோ நினைத்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார். என்னைப்போல் அஞ்சு கிலோ அரிசி பாக்கெட்டைத் தூக்குவதற்குக்கூட மேல் மூச்சு, கீழ் மூச்சு, நடு மூச்சு விடுகிற குண்டோதரன், தலையில் மூட்டையைச் சுமப்பதுபோல் கற்பனை செய்தால் யாருக்கும் சிரிப்பு வரும்தான்.

‘சரி அதை விடு, அந்த அபார்ட்மென்ட்காரங்க மூவாயிரத்து ஐநூறு தர்றதுக்கும், இவங்க நம்ம வீட்டுக்கு வராம டிமிக்கி கொடுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?’

‘அங்க செய்யற அதேமாதிரி வேலையைதான் அவ நம்ம வீட்லயும் செய்யறா, இந்த அபார்ட்மென்ட்ல இன்னும் ரெண்டு வீடுகள்லயும் அவளுக்கு இதே வேலைதான், ஆனா சம்பளம் ஆயிரம், ஆயிரத்து இருநூறு ரூபாயைத் தாண்டாது’

‘ஓ’, எனக்கு இந்த இடைவெளி விநோதமாக இருந்தது. ஒரே வேலைக்கு இரண்டு வெவ்வேறு இடங்களில் முற்றிலும் மாறுபட்ட சம்பளமா? அதுவும் மூன்று மடங்கு வித்தியாசமா? இது பெரிய யுகப் புரட்சி சமாசாரமாக இருக்கிறதே!

’இப்ப அவங்க மாசம் மூவாயிரத்து ஐநூறு கொடுத்து பழக்கப்படுத்திட்டாங்களா, இவ நம்மகிட்டயும் அவ்ளோ தொகை எதிர்பார்க்கறா’

‘நியாயம்தானே?’

’என்ன நியாயம்? போன மாசம் செஞ்ச அதே வேலையைதானே இந்த மாசமும் செய்யறா? விலைவாசி ஏறிப்போச்சுன்னு நூறு, இருநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டாக்கூடப் பரவாயில்லை, அவங்க யோசிக்காம பணத்தை அள்ளிக்கொடுக்கறாங்க-ங்கறதுக்காக நாம இவளுக்கு ஆயிரத்திலிருந்து மூவாயிரத்துக்குச் சம்பளத்தை உயர்த்தமுடியுமா?’

நண்பர் வீட்டுச் சொந்தக்காரர் சொன்னதில் இருக்கும் நியாயம், இப்போது எனக்குப் புரிகிறது.

***

என். சொக்கன் …

11 10 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அலுவல் நிமித்தம் மும்பை வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாள் இங்கேதான் ஜாகை.

பெங்களூரிலிருந்து விமானத்தில் மும்பை வருவதற்கு ஒன்றரை மணி நேரம்தான் ஆகிறது. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று சேர்வதற்குச் சுத்தமாக இரண்டே கால் மணி நேரம்.

நேற்று மாலை, நானும் என் அலுவலக நண்பரும் விமான நிலையம் செல்கிற பேருந்துக்காகக் காத்திருந்தோம். சுவாரஸ்யமான அரட்டையில் நேரம் ஓடியதே தெரியவில்லை.

ஐந்தே முக்கால் மணிவாக்கில், எதேச்சையாக அவர் கடிகாரத்தைப் பார்த்தார், ‘யோவ், ரொம்ப லேட் ஆயிடுச்சுய்யா, பஸ் எங்கே?’

எங்கள் ஏரியாவிலிருந்து விமான நிலையத்துக்குச் செல்ல மணிக்கு ஒரு பஸ் உண்டு. ஆனால் நேற்றைக்கு அந்த பஸ் வரவில்லை, என்ன காரணமோ தெரியவில்லை.

பேருந்து நிறுத்தத்தில் இருந்த டைம் கீப்பரைத் (நேரக் காப்பாளர் என்றால் கோபித்துக்கொள்வீர்களா?) தேடிப் பிடித்தோம், ‘ஏர்போர்ட் பஸ் என்னாச்சு?’

‘தெரியலையே’ என்று ஒரு பொறுப்பான பதிலைச் சொன்னார் அவர், ‘எங்கனா டிராஃபிக்ல மாட்டிகிட்டிருக்கும்’

‘எப்ப வரும்?’

‘எனக்கென்ன தெரியும்?’

அத்துடன் அவர் கடமை முடிந்தது. நாங்கள் பழையபடி சாலையோரத்துக்குத் திரும்பினோம், ‘இப்ப என்ன பண்றது? காத்திருக்கறதா, வேண்டாமா?’

எங்களுடைய குழப்பத்தைப் பார்த்த ஒருவர் அன்போடு ஆலோசனை சொன்னார், ‘பேசாம இந்த வண்டியைப் பிடிச்சு ஹெப்பால் போயிடுங்க, அங்கிருந்து ஏர்போர்ட்க்கு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் இருக்கு’

நல்ல யோசனைதான். ஆனால், ஒரே பேருந்தில் விமான நிலைய வாசல்வரை சென்று சேர்கிற சொகுசு, சோம்பேறித்தனம் பழகிவிட்டதே. வழியில் இறங்கி பஸ் மாறுவது என்றால் உடம்பு வலிக்கிறதே!

இத்தனைக்கும், என் கையில் இருந்தது ஒரே ஒரு பெட்டி, நண்பருக்கோ ஒரு தோள் பைமட்டும்தான். இதை வைத்துக்கொண்டு பஸ் மாறுவதற்கு அத்தனை தயக்கம்.

இன்னொரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தோம், விமான நிலைய பஸ் வரவே இல்லை.

’இனிமேலும் காத்திருந்தா ஃப்ளைட் மிஸ் ஆயிடும்’ என்றார் நண்பர், ‘வாய்யா, ஹெப்பால் போயிடலாம்’

ஹெப்பால் செல்கிற அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஏறி உட்கார்ந்தோம். அதன்பிறகும், பின்னால் திரும்பித் திரும்பி ஏர்போர்ட் பஸ் வருகிறதா என்று பார்த்ததில் கழுத்து சுளுக்கிக்கொண்டது.

அந்த பஸ், ஐந்து நிமிடம் கழித்துதான் கிளம்பியது. மிக மெதுவாக ஊர்ந்து செல்வதுபோல் தோன்றியது, ‘ஏர்போர்ட் பஸ்ன்னா சூப்பர் ஃபாஸ்ட்ல போகும்’ என்றேன் ஏக்கமாக.

‘பெங்களூர்ல எந்த பஸ்ஸும் சூப்பர் ஃபாஸ்ட்ல போகமுடியாது’ என்றார் நண்பர், ‘மனுஷ புத்தி அப்படிதான், நாம ஏறாத பஸ் வேகமாப் போகுதுன்னு தோணும், நாம ஒரு க்யூவில நிக்கும்போது, பக்கத்து வரிசை மளமளன்னு நகர்றமாதிரி இருக்கும், எல்லாம் மனப் பிராந்தி’

‘இருந்தாலும், ஏர்போர்ட்க்கு ஒரே பஸ்ல போறது சவுகர்யம்தான், இப்ப ஹெப்பால்ல இறங்கி அடுத்த வண்டி தேடறதுக்கு எவ்வளவு நேரம் ஆகுமோ, யாருக்குத் தெரியும்?’

‘ஒண்ணும் கவலைப்படாதே, எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்’ நண்பர் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார். நான் செல்ஃபோனைப் பிரித்து எம்பி3 தேட ஆரம்பித்தேன்.

வண்டி இரண்டு கிலோ மீட்டர் சென்றிருக்கும், சலசல என்று மழை பெய்ய ஆரம்பித்தது.

’அச்சச்சோ, இந்த மழையில நாம எப்படி பஸ் மாறமுடியும்?’

‘யோவ், ஹெப்பாலுக்கு இன்னும் 30 கிலோமீட்டர் இருக்கு, அதுக்குள்ள மழை நின்னுடும், படுத்தாம வேலையைப் பாருய்யா’

சிறிது நேரம் கழித்து, எங்கள் பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது எங்களைக் கடந்து சென்ற பஸ் விமான நிலையத்துக்கானது.

‘ச்சே, ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்’ என்றேன் நான்.

‘வெயிட் பண்ணியிருந்தா, மழையில நல்லா நனைஞ்சிருப்போம்’, நண்பர் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார், ’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’

அவர் சொல்வது உண்மைதான். இருந்தாலும், தாண்டிச் சென்றுவிட்ட அந்த பஸ்ஸில் இருப்பவர்கள் எங்களுக்கு முன்பாகவே விமான நிலையம் போய்ச் சேர்ந்துவிடுவார்கள். தவிர, அவர்களுக்கு ஹெப்பாலில் இறங்கி மழையில் நனைந்தபடி வண்டி மாறுகிற அவஸ்தை இருக்காது.

என்னுடைய புலம்பல் வேகத்தை இன்னும் அதிகரிப்பதுபோல், எங்கள் வண்டி மிக மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இத்தனை மழையிலும் பெங்களூர் ஸ்பெஷல் டிராஃபிக் சூடு பிடித்துவிட்டது.

கடைசியாக, நாங்கள் ஹெப்பால் வந்து சேர்ந்தபோது எங்கள் விமானம் புறப்பட ஒன்றே கால் மணி நேரம்தான் இருந்தது. அவசரமாக இறங்கி அடுத்த பஸ்ஸைத் தேடினோம்.

நல்ல வேளை. மழை நின்றிருந்தது, லேசான தூறல்மட்டும், எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி விறுவிறுவென்று நடக்கையில் லேசாக வியர்த்தது.

இத்தனைக்கும் என் நண்பர் அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர்பாட்டுக்குக் கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளை, பெண்மீது பூப் போடுகிறவர்போல டங்கு டங்கென்று எனக்குப் பின்னால் நடந்துவந்தார்.

இரண்டு நிமிடம் கழித்து, அவர் என்னைக் கைதட்டிக் கூப்பிடுவது கேட்டது, ‘இந்த நேரத்தில என்னய்யா பேச்சு’ என்று யோசித்தபடி திரும்பினால், ஒரு கார் பக்கத்தில் நின்றிருந்தார், ‘இந்த வண்டி காலியாதான் போவுதாம், இதில போயிடலாம் வா’

’எவ்ளோ?’

’பஸ் டிக்கெட்க்கு எவ்ளோ கொடுப்பீங்களோ அதைமட்டும் கொடுங்க சார், போதும்’ என்றார் டிரைவர்.

ஐயா, நீர் வாழ்க, நும் கொற்றம் வாழ்க, உங்க புள்ளகுட்டியெல்லாம் நல்லா இருக்கட்டும், காரை வேகமா விரட்டுங்க, விமானம் ஓடிப்போயிடும்.

எக்ஸ்ட்ரா வருமானம் தருகிற திருப்தியில் டிரைவர் ஜிவ்வென்று கியர் மாறினார். நாங்கள் ஹெப்பால்வரை வந்த பஸ்ஸுக்குப் பாடம் சொல்லித்தருவதுபோல் அதிவேகம், பிரமாதமான சாலை, பதினெட்டு நிமிடத்தில் இருபத்தைந்து கிலோமீட்டரைக் கடந்துவிட்டார்.

அவருக்கு நன்றி சொல்லி, காசு கொடுத்துவிட்டு நிதானமாக உள்ளே நடந்தோம், ஒன்றும் அவசரம் இல்லை, இன்னும் விமானத்துக்கு நிறைய நேரம் இருக்கிறது!

நண்பர் சிரித்தார், ‘நான்தான் சொன்னேன்ல?’

’ஆமா, இன்னிக்கு உனக்கு அதிர்ஷ்டம், இப்படி ஒரு கார் அனாமத்தாக் கிடைச்சது, இல்லைன்னா?’

‘அப்பவும் பெரிசா எதுவும் நடந்திருக்காது, இந்த ஃப்ளைட் இல்லாட்டி இன்னொண்ணு, அவ்ளோதானே?’

‘இருந்தாலும் …’

‘இதில இருந்தாலும்-ன்னெல்லாம் யோசிக்கக்கூடாது, பஸ்ல உட்கார்ந்து புலம்பறதால உன்னால வேகமாப் பயணம் செய்யமுடியுமா?’

‘ம்ஹூம்’

‘அப்புறம் புலம்பி என்ன பிரயோஜனம்? அமைதியா சாஞ்சு உட்கார்ந்துகிட்டு நடக்கிறதைக் கவனிச்சுக்கோ, முடிஞ்சா உன் நிலைமையைப் பார்த்து நீயே கொஞ்சம் சிரிச்சுக்கோ, அம்புட்டுதான் மேட்டர்!’

விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்பி, மிகத் தாமதமாகத் தரையிறங்கியது. ராத்திரி பத்தே முக்கால் மணிவாக்கில் மும்பை வந்து சேர்ந்தோம்.

இங்கே நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு நேர் எதிரே ஒரு நெடுஞ்சாலை. (LBS சாலை-யாம், அந்த LBSக்கு விளக்கம் யாருக்கும் தெரியவில்லை, கடைசியாக இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன் – லால் பகதூர் சாஸ்திரி) எனவே, ராத்திரிமுழுக்க வண்டிகளின் பேரோசை.

சத்தம்கூடப் பரவாயில்லை. அந்த வெளிச்சம்தான் மகாக் கொடுமை. என்னதான் ஜன்னல்களை இழுத்து மூடினாலும், ஓரத்தில் இருக்கும் கொஞ்சூண்டு இடைவெளியின்வழியே அறைக்குள் இடது வலதாக, வலது இடதாக ஓடும் மஞ்சள் ஹெட்லைட் ஒளி, அவை நிலைக் கண்ணாடியில் பட்டு எதிரொளிப்பதால் எல்லாத் திசைகளிலும் எல்லா நேரத்திலும் வெளிச்சம் நிலையற்று ஓடிக்கொண்டே இருப்பதுபோல், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு இரண்டாக உடைவதுபோல் தோன்றியது. ஒரு கலைடாஸ்கோப்புக்குள் படுத்துத் தூங்குவதுமாதிரி உணர்ந்தோம்.

அதிகாலையில் ஏழெட்டு அலாரம்கள் ஒலிக்கத் திருப்பள்ளியெழுச்சி. கண்றாவி காபி (நான் மும்பையை வெறுக்கக் காரணம் இதுவே), ஜில் தண்ணீர்க் குளியல், கெமிக்கல் வாடையோடு ஆட்டோவில் பயணம் செய்து நாங்கள் வகுப்பு நடத்தவேண்டிய அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

அந்தக் கட்டடத்துக்கு வெளியே ஒரு பிளாட்ஃபாரக்கடை. டைம்ஸ் ஆஃப் இந்தியாமுதல் தினத்தந்திவரை எல்லாச் செய்தித்தாள்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால் விற்பனைக்கு ஆள்தான் இல்லை.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரைக் கேட்டேன், ‘இது உங்க கடையா’

’இல்லை, நான் பஸ்ஸுக்குக் காத்திருக்கேன்!’

‘இந்தக் கடைக்காரர் எப்ப வருவார்ன்னு தெரியுமா? எனக்கு நியூஸ் பேப்பர் வேணுமே’

‘எது வேணுமோ எடுத்துக்கோங்க, அப்படியே காசை டப்பாவில போட்டுட்டுப் போய்கிட்டே இருங்க, அவ்ளோதான்’

நான் அவரை விநோதமாகப் பார்த்தேன். நிசமாத்தான் சொல்லுறியளா, இல்லை என்னைவெச்சு காமெடி கீமெடியா?

இதற்குள், அவருடைய பஸ் வந்துவிட்டது, ஏறிக்கொண்டு போயே போய்விட்டார்.

இப்போது, நானும் என் நண்பரும் நிறைய செய்தித்தாள்களும்மட்டும் தனியே, ‘என்ன செய்யறது?’

‘அவர் சொன்னமாதிரி, காசைப் போட்டுட்டுப் பேப்பரை எடுத்துகிட்டு வா, வேற என்ன செய்யமுடியும்?’

ஐந்து ரூபாய் போட்டுவிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்டேன், அதன் விலை ரூ 4.50. பாக்கிக் காசு ஐம்பது பைசா டப்பாவிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு பயம். யாராவது நான் காசு எடுப்பதைப் பார்த்துத் திருடன் என்று முடிவு கட்டிவிட்டால்?

போனால் போகட்டும், அம்பது காசுதானே? மக்கள் நேர்மையை நம்பி ஆளில்லாத கடை போட்டவருக்கு எங்களுடைய இத்தனூண்டு பரிசாக இருக்கட்டும்.

பேப்பரைப் பிரித்துப் படித்துக்கொண்டே உள்ளே நடந்தோம். முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் விசனப்பட்டிருந்தார்கள், ‘இந்த மாதம் ஏழு நாள் சாராயக்கடைகள் லீவ்’ (காந்தி ஜெயந்தி, உள்ளூர்த் தேர்தல் காரணமாக).

இதுதாண்டா மும்பை!

***

என். சொக்கன் …

01 10 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2009
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031