மனம் போன போக்கில்

Archive for March 2016

முன்குறிப்பு: இது ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல், ஓர் அவசியம் கருதிப் பொதுவில் வைக்கிறேன்.

பெறுநர்: திரு. மெய்யப்பன், உரிமையாளர், மதி நிலையம், சென்னை

அன்புடையீர்,

நலம். நாடலும் அதுவே.

என்னுடைய புத்தகங்கள் விற்பனை/ ராயல்டி தொடர்பாக உங்களிடமிருந்து ஒரு மிக நீண்ட மௌனத்தை நன்கு அனுபவித்தபின் எழுதும் கடிதம் இது.

கடைசியாக நாம் பேசியது எந்த நூற்றாண்டு என்று நினைவில்லை, அப்போது நான் என் புத்தகங்களின் பதிப்புரிமையை உங்களிடமிருந்து திரும்பப் பெறுவதாகச் சொன்னேன், அதற்கு நீங்கள் எனக்குச் சொன்ன பதில்:

* கைவசம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் உள்ளன, அவற்றை விற்க டிசம்பர் 2015வரை நேரம் தேவை, ஆகவே அதுவரை நூல்களை வேறு யாருக்கும் தரவேண்டாம்

எனக்கு நீங்கள் செய்த பச்சைத்துரோகத்துக்குப்பிறகு, இதை நான் ஏற்கவேண்டிய அவசியமே இல்லை, எனினும் ஏற்றுக்கொண்டேன், அத்துடன் நமது ஈமெயில் நாடகம் முடிந்து மௌன நாடகம் தொடங்கியது.

இன்றுவரை உங்களிடமிருந்து எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை. நாம் பேசியபிறகு விற்ற புத்தகங்களின் கணக்கோ ராயல்டியோ வரவில்லை,

எனினும், நீங்கள் கேட்ட டிசம்பர் 2015 முடிந்து பல மாதங்களாகிவிட்டதால், முறைப்படி என் நூல்களின் உரிமை எனக்குத் திரும்பிவிட்டது, இனி அவற்றை நீங்கள் அச்சிடவோ விற்பனை செய்யவோ வேண்டாம் என்பதைத் தெரிவிப்பதற்காகவே இந்த மின்னஞ்சல்,

ஒருவேளை இதற்குப்பிறகும் என் நூல்கள் உங்கள் பதிப்பகத்தின்மூலம் விற்பனையில் இருப்பதாகத் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்,

எல்லாவற்றுக்கும் நன்றி, இனியெந்தப் பிறப்பிலும் நும்மைக் காணாத, நும் குரல் கேளாதவொரு வரத்தை எம்பெருமான் எனக்கருள்வானாக,

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.

சிறுவயதில் ஹிந்தி பிரசார சபா தேர்வுகளுக்காகப் படித்தபோது, அந்தப் பாடங்களில் ‘99ன் சுழல்’ என்று ஒரு கதை வந்தது. குத்துமதிப்பாக நினைவில் உள்ளதைச் சொல்கிறேன்.

ஓர் ஏழை, நிம்மதியாக இருப்பான், அதைப்பார்த்து ஒரு பணக்காரன் பொறாமைப்படுவான், அவன் நிம்மதியைக் கெடுப்பதற்காக, 99 தங்கக்காசுகள் கொண்ட ஒரு மூட்டையை அவன் வீட்டில் போட்டுவிடுவான்.

அவ்வளவுதான், கையில் ஏதும் இல்லாதபோது நிம்மதியாக இருந்த அந்த ஏழை, ’எனக்கு ஏன் 99 தங்கக்காசுகள் கிடைக்கவேண்டும்? அது நூறாக இருந்திருக்கக்கூடாதா?’ என்று தவித்துத் திண்டாடுவான், அவனுடைய நிம்மதி கெடும்.

கிட்டத்தட்ட அதுபோன்ற நிலைதான் எனக்கு.

சுமார் ஓராண்டு முன்பு நான் 95 கிலோ எடை இருந்தேன், மிக விரைவில் செஞ்சுரி போட்டுவிட உத்தேசித்திருந்தேன்.

நண்பர்களின் நல்லெண்ணமும் எப்பிறவியிலோ செய்த நல்லூழும் என்னைச் சரிவிகித உணவுகளின்பக்கம் திருப்பியது, தினசரி நடையைச் சரிசெய்தேன், காய்கறிகளை அதிகரித்து, மாவுச்சத்தைக் குறைத்தேன், எடை குறையத் தொடங்கினேன்.

என்னுடைய இலக்கு 74 கிலோ, சிரிக்காதீர்கள், 95லிருந்து 74 என்பது கஷ்டம் என்பது தெரியும், ஆனால், என் உயரத்துக்கு அதுதான் சரியான எடை. ஆகவே, அந்த இலக்கை எப்படியாவது எட்டிவிடவேண்டும் என்று எண்ணினேன். இழுத்துப்பிடித்து 76 கிலோவரை வந்துவிட்டேன்.

அதன்பிறகு? ம்ஹூம்! எவ்வளவு முயன்றபோதும் எடை சிறிதும் குறையவில்லை.

கடந்த 4 மாதங்களாக, என் எடை 76லிருந்து 78க்குள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. என்ன பாடுபட்டாலும் 76க்குக் குறைவதில்லை, 78க்குமேலே செல்வதும் இல்லை.

என் நண்பர்கள், ‘இதுதான் உன்னுடைய வரம்பு, அதைதான் உன் உடல் சொல்கிறது, இதற்குமேல் குறைக்க முயற்சி செய்யாதே’ என்கிறார்கள்.

ஆரம்பத்தில் நான் அவர்களை நம்பவில்லை. ஆனால் இப்போது, நான் கனவுகண்ட 74 கிலோ கிடைக்கும் என்கிற நம்பிக்கை நாளுக்குநாள் குறைகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது.

2 கிலோ ஒரு பெரிய மேட்டரா? 19 கிலோ குறைந்தேனே என்று என்னால் மகிழ்ச்சியடைய இயலவில்லை. இலக்கைத் தொட இயலவில்லையே என்று மிகவும் வேதனையாயிருக்கிறது.

74ஐ ஒரே ஒருமுறை பார்த்துவிட்டால் போதும், அதன்பிறகு 80கிலோகூட எனக்கு ஓகே, இத்தனை உண்மையாகச் சிரமப்பட்டபிறகும் அந்த 74ஐத் தொட இயலவில்லை என்ற தோல்வி எரிச்சலூட்டுகிறது. இத்தனைக்கும், 95 கிலோவில் நான் (மனத்தளவில்) நிம்மதியாகவே இருந்தேன்!

ஆனாலும், விடுவதாக இல்லை, ஏ கூப்பிடுதூரத்திலிருக்கும் எழுபத்து நாலே, வருகிறேன், இரு!

***

என். சொக்கன் …

23 03 2016

ஒரு மாமரத்தில் ஒரு மாங்காய் காய்த்தது.

ஒரு மாங்காய் என்றால், ஒரே ஒரு மாங்காய்தான், ரெண்டு மாங்காய் இல்லை, மூணு மாங்காய் இல்லை, ஒரே ஒரு மாங்காய்!

அந்த மாங்காய் சுற்றிலும் பார்த்தது. தனக்கு யாராவது தோழர்கள் கிடைப்பார்களா என்று தேடியது.

ம்ஹூம், எவ்வளவு தேடினாலும் ஒரு மாங்காயைக்கூடக் காணோம். ஆகவே, அந்த மாங்காய்க்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.

இதைப்பார்த்த ஒரு மாம்பூ அந்த மாங்காய்க்கு ஆறுதல் சொன்னது, ‘கவலைப்படாதே, இன்னும் கொஞ்சநாள்ல நாங்க எல்லாரும் மாங்காயா மாறிடுவோம், அப்ப நாம எல்லாரும் ஒண்ணா விளையாடலாம்!’

‘அப்படியா?’ அந்த மாங்காய்க்கு நம்பிக்கை வரவில்லை!

‘ஆமா’ என்றது அந்த மாம்பூ, ‘நீயும் பூவாதான் இருந்தே, நாம எல்லாரும் ஒண்ணாதான் பூத்தோம், உனக்கு என்ன அவசரமோ, திடீர்ன்னு காயா மாறிட்டே! கொஞ்சநாள் பொறு, நாங்களும் காயாகிடுவோம், அப்புறம் உனக்கு நூத்துக்கணக்கான நண்பர்கள் கிடைப்பாங்க.’

‘சரி’ என்று தலையாட்டியது அந்த மாங்காய், நம்பிக்கையோடு காத்திருந்தது.

சில நாள்களில், அந்த மாம்பூக்கள் எல்லாம் காயாக மாறின. மரம்முழுக்கப் பச்சைப்பசேலென்று மாங்காய்கள்.

இதனால், முதல் மாங்காய்க்கு நிறைய தோழர்கள் கிடைத்தார்கள், எல்லாரும் ஒன்றாக விளையாடினார்கள்.

சில நாள் கழித்து, அந்த முதல் மாங்காய்க்கு ஓர் எண்ணம், ‘நான்தானே இந்த மரத்தில் முதலாவதாகக் காய்த்தேன்? அப்படியென்றால், நான்தானே இந்த மரத்துக்கு ராஜா?’ என்றது.

‘ஹாஹா’ என்று சிரித்தது இன்னொரு மாங்காய், ‘அப்படிப்பார்த்தால் நான்தான் இந்த மரத்தில் முதன்முதலாகப் பூத்தேன், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது.

‘நீங்கள் ரெண்டுபேரும் ராஜா இல்லை’ என்றது இன்னொரு மாங்காய், ‘இந்த மரத்திலேயே நான்தான் ரொம்பப் பெரிய மாங்காய், ஆகவே, ராஜா பட்டம் எனக்குதான்!’

‘முட்டாள்களே, ராஜா எங்கே இருப்பார்? உயரத்தில்தானே? இந்த மரத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பவன் நான், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய்.

‘இந்த மரத்திலேயே அதிக வாசனை கொண்ட காய் நான்தான், ஆகவே, நான்தான் மரத்துக்கு ராஜா’ என்றது வேறொரு மாங்காய்.

‘என்னைப்போல் சுவையான காய் இந்த மரத்தில் எங்கும் கிடையாது. ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய்.

‘சும்மா இருங்கள்’ என்று அதட்டியது ஒரு மாம்பழம், ‘நீங்களெல்லாம் இன்னும் பழுக்கவில்லை, நான்தான் முதலில் பழுத்தேன், ஆகவே, நான்தான் ராஜா!’

இப்படி இரவும் பகலும் அந்த மரத்திலிருந்த காய்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. எல்லாக் காய்களும் ஏதோ ஒரு காரணத்தைச்சொல்லித் தன்னை ராஜா என்று அறிவித்தன. மற்ற காய்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

சில நாளில், அந்த மாங்காய்கள் எல்லாம் பழுத்துவிட்டன. ஆனால் இப்போதும், யார் ராஜா என்கிற சண்டை தீரவில்லை.

ஒருநாள், அந்த மரத்தின் உரிமையாளர் அங்கே வந்தார். மரத்தின்மேல் ஏறி எல்லா மாம்பழங்களையும் பறித்தார், கூடையில் போட்டு எடுத்துச்சென்றார்.

கூடையிலிருந்த மாம்பழங்கள், வெறுமையாக இருந்த மாமரத்தைப் பார்த்தன. ‘இப்போது அந்த மரத்தில் யாருமே இல்லை, அதற்கு நாம் எப்படி ராஜா ஆகமுடியும்?’ என்று நினைத்தன.

அப்போது, கூடைக்குக்கீழேயிருந்து ஒரு குரல் கேட்டது, ‘நான்தான் இந்தக் கூடையில் முதலில் வந்து விழுந்தேன், நான்தான் இந்தக் கூடைக்கு ராஜா!’

***

என். சொக்கன் …

21 03 2016

சென்ற வருடம் கிட்டத்தட்ட இதே நேரம், என்னுடைய அலுவலக அறையில் குளிர்சாதனப் பிரச்னை.

அதாவது, என் அறைக்கு வெளியே இருக்கும் குளிர்சாதனப்பெட்டியில் என்ன வெப்பநிலை வைத்தாலும் சரி, அது தானாக பதினேழு டிகிரிக்கு மாறிவிடும், சிறிதுநேரத்தில் உடம்பெல்லாம் நடுங்கும், ஒரு நாளைக்கு முப்பதுமுறை மூச்சா போகவேண்டியிருக்கும்.

எனக்குமட்டும்தான் இந்தப் பிரச்னை, என் அறைக்கு வெளியே அமர்ந்திருப்போருக்கும் அதே ஏஸிதான், ஆனால் அவர்களுடைய வெப்பநிலை சரியாகவே இருந்தது.

அவ்வப்போது என் ரூமில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் அலங்காரம்போலப் பனியெல்லாம் பொழிய ஆரம்பித்துவிடும், பதற்றத்தோடு ஓடிச் சென்று அந்த ஏஸியை அணைத்துவைப்பேன். ஐந்தாவது நிமிடம் வெளியே அமர்ந்திருக்கிற யாராவது அதை மறுபடி முடுக்கிவிடுவார்கள், உள்ளே நான் நடுங்க ஆரம்பித்துவிடுவேன்.

’இதைச் சரிசெஞ்சு தொலைங்களேன்’ என்று எங்கள் அலுவலக நிர்வாகியிடம் பலமுறை கேட்டுவிட்டேன், ‘நாளைக்கு, நாளைக்கு’ என்றாரே தவிர, பிரச்னையைச் சரிசெய்யவில்லை.

ஒருகட்டத்தில், ‘இதைக் கட்டட முதலாளிதான் சார் சரிசெய்யணும், நாம கைவைக்கமுடியாது’ என்று தட்டிக்கழிக்க ஆரம்பித்தார். நான் கடுப்பாகிவிட்டேன். ‘எனக்கு ஏஸியே வேணாம், இதை முதல்ல எடுங்க’ என்று சொல்லிவிட்டேன்.’

‘சார், உங்க கேபினுக்குமட்டும் தனி ஏஸி கிடையாதே, நான் எதை எடுக்க?’

’என் ரூமுக்குள்ள குளிர்காத்து வர்ற துவாரம் ஒண்ணு இருக்குமில்லையா? அதை அடைங்க!’

அவர் என்னை விநோதமாகப் பார்த்து, ‘சார், ஏஸி இல்லாம எப்படி வேலை பார்ப்பீங்க?’ என்றார்.

‘பதினேழு டிகிரியில பதுங்கிக்கிடக்கறதைவிட அது பெட்டர்’ என்றேன், ‘பெங்களூர்ல எதுக்கு ஏஸி? முதல்ல இதை அடைங்க!’

அவர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், நான் கேட்கவில்லை. ‘ஒன்று பிரச்னையைச் சரிசெய், இல்லாவிட்டால் எனக்கு ஏஸியே வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்.

ஒருநாள், இரண்டு பேரைக் கூட்டிக்கொண்டுவந்து ஏணி போட்டு மேலே ஏறி ஏதோ செய்தார்கள், இனி குளிர்க்காற்று என் அறைக்குள் வராது.

அன்றைக்குமுழுக்க எதையோ சாதித்துவிட்டதுபோல் திமிராக இருந்தது. நாள்முழுக்க ஏஸியில வேலை செஞ்சா உடம்புக்கு நல்லதில்லை என்று எங்கேயோ படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. அலுவலகக் கூட்டங்களில் ‘உஸ்ஸ்….’ என்று ஏஸி ரிமோட்டைத் தேடுகிறவர்களைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தேன்.

அதன்பிறகு, பல மாதங்களாகிவிட்டன, என் அறையில் ஏஸி என்று ஒரு சமாசாரம் இருந்ததையே மறந்துவிட்டேன்.
இன்று காலை, ஈகோவை மென்று தின்றுவிட்டு, அதே நிர்வாகியைத் தொலைபேசியில் அழைத்து, ‘ஓபன் தி டாஸ்மாக்’, ச்சே, ‘ஓபன் தி ஏஸி’ என்று சொல்லியிருக்கிறேன்.
ஆமாம், பெங்களூரில் கோடை தொடங்கியாயிற்று!
***
என். சொக்கன் …
21 03 2016
சேலம் வந்துள்ளேன். வழக்கமாகப் புத்தகம் வாங்கும் கடைக்கு வந்தேன்.
 
கம்யூனிஸ்ட் சார்புள்ள பதிப்பகமொன்றின் கடை அது. ஆனால் எல்லாவகை நூல்களும் கிடைக்கும். தள்ளுபடியும் தருவார்கள். ஆகவே, எப்போது சேலம் வந்தாலும் இங்கே சில நூல்கள் வாங்குவேன்.
 
இம்முறை, நூல்கள் கண்டபடி மாறியிருந்தன. கவிதை, கதை, கட்டுரை, பழந்தமிழ் இலக்கியம் என்று வகைப்படுத்தாமல், எல்லாம் கலந்துகட்டிப் பழைய புத்தகக்கடைபோல் கிடந்தன.
 
குழப்பத்துடன், ‘என்னாச்சுங்க?’ என்று கேட்டேன்.
 
‘நீங்க எந்த யுனிவர்சிட்டி?’ என்றார் அங்கிருந்த பெண்.
 
‘யுனிவர்சிட்டியெல்லாம் இல்லைங்க, பொதுஜனம்’ என்றேன்.
 
அவர் என்னை விநோதமாகப் பார்த்து, ‘அந்தந்த யுனிவர்சிட்டி புக்கை அந்தந்த ரேக்ல அடுக்கியிருக்கோம், வேணும்ன்னா பார்த்து எடுத்துக்குங்க’ என்றார்.
 
இது எனக்குப் பெரிய திகைப்பாகிவிட்டது. கல்லூரியில் படிக்கிறவர்களைத்தவிர வேறு யாரும் தமிழ் நூல்கள் வாங்குவதில்லையா என்ன?!
 
எப்படியோ தேடி, சில புத்தகங்களை எடுத்துக்கொண்டுவந்தேன். பில் போட்டு நீட்டினார்கள். ‘தள்ளுபடி போடலையே!’ என்றேன்.
 
‘அதெல்லாம் தர்றதில்லைங்க’ என்றார் அவர்.
 
‘அட, நீங்க புதுசுபோல, இதுவரைக்கும் இருபதுவாட்டிக்குமேல உங்ககிட்ட புத்தகம் வாங்கியிருக்கேன், எப்பவும் தள்ளுபடி உண்டுங்க’ என்று பில்லை அவரிடமே நீட்டினேன், ‘10% குறைச்சுட்டு மறுபடி பில் போடுங்க!’
 
அவர் என்னை மீண்டும் அதேபோல் விநோதமாகப் பார்த்துவிட்டு, ‘பாடப் புத்தகத்துக்கெல்லாம் தள்ளுபடி கிடையாதுங்க’ என்றார்.
 
‘எனக்கு இது பாடப் புத்தகம் இல்லைங்க’ என்றேன்.
 
அவர் சலிப்போடு, ‘தள்ளுபடி தரமுடியாதுங்க, வேணும்ன்னா ரெண்டு திருக்குறள் தர்றேன்’ என்று மேஜைமேல் அடுக்கிவைத்திருந்த சாணித்தாள் பாக்கெட் புத்தகங்களில் ஒன்றிரண்டை எடுத்துப்போட்டார்.
***
என். சொக்கன் …
05 03 2016

’விருது பெற்ற சிவசாமியின் மகன் கந்தசாமியே, வாழ்க’ என்று (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஒரு சுவரொட்டியைக் கண்டேன்.

இங்கே விருது பெற்றவர் சிவசாமியா, கந்தசாமியா?

வாழ்த்து கந்தசாமிக்குதான் என்பதால், விருதுபெற்றவரும் அவரே என்று ஊகிக்கிறேன். இந்த வாசகத்தைக் குழப்பமின்றி இப்படி எழுதியிருக்கலாம்: விருது பெற்றவரே, சிவசாமியின் மகனே, கந்தசாமியே, வாழ்க!

அதுநிற்க. இந்தக் குழப்பம் கவிஞர்களுக்கும் உண்டு. வாலியின் பிரபலமான இந்தப் பாடல்:

ஒரு மான், மழுவும்
சிறு கூன் பிறையும்
சடைவார் குழலும்
விடை வாகனமும்
கொண்ட(*) நாயகனின்(**)
குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே,
இட பாகத்திலே.

இங்கே ஒற்றை நட்சத்திரக்குறி உள்ள இடத்தில் நிறுத்திப் படித்தால், மான், மழு, பிறை, குழல், விடை வாகனம் எல்லாம் நாயகி(உமையம்மை)க்குச் சொந்தமாகிவிடும்.

அதற்குப்பதிலாக, இரட்டை நட்சத்திரக்குறி உள்ள இடத்தில் நிறுத்திப்படித்தினால், இவை அனைத்தும் நாயகனுக்கு(சிவனுக்கு)ச் சொந்தமாகிவிடும்.

இளையராஜா & குழுவினர் இதைப் பாடும்போது எங்கே நிறுத்துகிறார்கள் என்று கவனியுங்கள். இந்த மெட்டு அந்த இரட்டை நட்சத்திரக்குறி உள்ள இடத்தில்தான் நிறுத்தப்படும், ஆகவே, வாலி அந்த மீட்டரைக் கணக்குவைத்து மிகச் சரியாக எழுதியுள்ளார்.

இன்னோர் இளையராஜா பாட்டு, அதுவும் வாலி எழுதியதுதான்:

’மாசுஅறு பொன்னே வருக,
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!’

இதைப் பாடும்போது எங்கே நிறுத்தவேண்டும்?

திரிபுரத்தை எரித்தவன் ஈசன், ஆகவே, ‘திரிபுரம் அதை எரித்த ஈசனின்’ என்று சொல்லிவிட்டு, அதன்பிறகு ‘பங்கே’ என்று சொல்லவேண்டும்.

ஆனால் பாடுகிறவர்கள் அப்படியா பாடுகிறார்கள்?

‘மாசறு பொன்னே வருக, திரிபுரமதை எரித்த’ என்று pause விட்டு, ஈசனின் பங்கே என்கிறார்கள். இதன் பொருள், திரிபுரத்தை எரித்தவளே, ஈசனின் பங்கே என்பது, அதாவது, திரிபுரத்தை எரித்தவள் தேவி என்று பொருளாகிறது. (கவனமாக, இருவிதமாகவும் சொல்லிப்பாருங்கள், வித்தியாசம் புரியும்!)

அவள் திரிபுர சுந்தரி, அவன்தான் திரிபுர சம்ஹாரன் 🙂

இது பாடகர்களின் பிழை அல்ல, அந்த மெட்டு அந்த இடத்தில்தான் நிற்கும் என்று முன்கூட்டியே அறிந்த கவிஞர்தான் அதைக் கவனித்திருக்கவேண்டும். ஒருவேளை அவர் எழுதியபின் இசையமைப்பாளர் மெட்டமைத்திருந்தால், அவர் மெட்டை அதற்கேற்ப வளைத்திருக்கவேண்டும். குறைந்தபட்சம், பாடல் பதிவின்போது இதனைக் கண்டறிந்து சரி செய்திருக்கவேண்டும்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது யாருடைய பிழையும் அல்ல. திரிபுரத்தை எரித்தவனின் இடபாகத்தில் அவள்தானே இருக்கிறாள், ஒரு(வர்) கை வில்லை இழுத்தால், இன்னொரு(வர்) கைதானே அம்பை விட்டிருக்கும்!

சிவன் அம்பே பயன்படுத்தாமல் முப்புரத்தைச் சிரிப்பால் எரித்தான் என்பார்களே.

அப்படிப் பார்த்தாலும், அந்தப் புன்னகையில் பாதி அம்பிகையுடையது!

***

என். சொக்கன் …
01 03 2016


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031