ஈயொன்று
Posted June 8, 2016
on:- In: Fun | Imagination | Kids | Play
- 2 Comments
எங்கள் வீட்டில் இரண்டு சுழற்பொம்மைகள். பச்சை நிறத்தொரு பொம்மை, இளஞ்சிவப்பு நிறத்தொரு பொம்மை. மின்விசிறிக்கு இருபுறமும் உள்ள விளக்குகளில் அவை தொங்கிக்கொண்டிருக்கின்றன, மின்விசிறி ஓடும்போதெல்லாம் காற்றில் வேகமாகச் சுழலும், மற்றநேரங்களிலும், நன்கு காற்றடித்தால் மெதுவாகச் சுழலும், அருகே சென்று பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும்.
மிகச் சாதாரணமான பொம்மைதான், பொறியியல்ரீதியில் பார்த்தால் ஒரு நீண்ட பிளாஸ்டிக் துண்டு, அவ்வளவுதான், ஆனால், அதன் சுழற்சி அலாதியான அழகைக்கொண்டிருக்கிறது. எத்துணை மனஅழுத்தம் இருந்தாலும் மெல்லக் கரைத்துவிடும், கிறங்கடித்துவிடும்.
இன்று காலை, மங்கை என்னை அழைத்து, ‘அப்பா, நேத்திக்கு இந்த பொம்மையில ஈ ஒண்ணு உட்கார்ந்திருந்ததுப்பா’ என்றாள்.
‘ஈதானே? அது பெரிய அதிசயமா?’ என்றேன்.
‘இல்லைப்பா, அந்த பொம்மை சுத்தும்போது ஈயும் சேர்ந்து சுத்திச்சு, அதுக்கு ஜாலி ரைடா இருந்திருக்கும்ன்னு நினைக்கறேன்!’ என்றாள் அவள்.
அட, ஆமாம். இந்தக் கோணம் நமக்குத் தோன்றவில்லையே என்று எண்ணிக்கொண்டேன், அவளுடைய கற்பனையைப் பாராட்டினேன்.
மறுவிநாடி, ‘அப்பா’ என்று கத்தினாள் அவள், ‘அதோ பாரு, ஈ, பொம்மையில உட்கார்ந்திருக்கு’ என்றாள்.
சட்டென்று இருவரும் அருகே சென்று பார்த்தோம், ஓர் ஈ அந்தப் பொம்மையோடு சேர்ந்து ஜாலியாகச் சுற்றிக்கொண்டிருந்தது.
‘நாமெல்லாம் WonderLaல புது Ride போட்டிருக்கான்னு ஓடறோம்ல? அந்தமாதிரி இந்த ஈ ஓடிவந்திருக்கும்ன்னு நினைக்கறேன்’ என்றேன், ‘இன்னிக்கு மத்தியானம், இந்த ஈ மத்த ஈக்கள்கிட்டே போய் ‘Friends, அந்த வீட்ல ரெண்டு புது Rides சேர்த்திருக்காங்க, வாங்க, எல்லாரும் ஜாலியா விளையாடலாம்’ அப்டீன்னு சொல்லும், அதுங்களையும் கூட்டிகிட்டு வந்து, நீ பிங்க் ரைட் விளையாடு, நான் பச்சை ரைட் விளையாடறேன்னு பங்குபிரிச்சுகிட்டு விளையாடும்.’
‘ஆமாம்ப்பா’ என்று பரவசமாகச் சிரித்தாள் மங்கை. இருவரும் நெடுநேரம் அந்த ஈ சுழல்வதையே வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தோம்.
***
என். சொக்கன் …
08 06 2016
2 Responses to "ஈயொன்று"

Appa ,pen moments are precious and make pleasant memories! Both of you are lucky!

1 | nparamasivam1951
June 8, 2016 at 7:41 pm
குழந்தைகள் தான் எவ்வளுவு வெகுளியாகவும் புதுமையாகவும் எண்ணுகிறார்கள். நாம் தான் அவர்களை கெடுக்கிறோம்–ஈ ஐ கண்டவுடன் அதை அடிக்க ஓடுகிறோம், கேட்டால் சில காரணங்கள். ஆனால், குழந்தைகள் வேறு மாதிரியாக எண்ணுகிறார்கள். அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் பல்லி, தவளை, என வளர்க்க பள்ளிகளே உற்சாகப்படுத்துகிரார்கள். இயற்கை அரவணைப்பு.