மனம் போன போக்கில்

ஓர் அப்பாவியின் மீள்வாசிப்பு

Posted on: January 28, 2012

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘Animal Farm’ (குறு?)நாவலை முதன்முறையாக வாசித்தபோது, எனக்கு அது ஒரு சாதாரணமான கற்பனைக் கதையாகவே தெரிந்தது. சொல்லப்போனால் அதை ஒரு வித்தியாசமான Fairy Tale என்றே நினைத்தேன்.

Fairy Tale சரி, அது என்ன ‘வித்தியாசமான’?

மற்ற தேவதைக் கதைகளைப்போலவே இந்தக் கதையிலும் மிருகங்கள் பேசிக்கொண்டன மனிதர்களை எதிர்த்துச் சண்டை போட்டன, ஹீரோக்களும் வில்லன்களும் இயல்பாக உருவானார்கள், பரவசமான காட்சிகளும் சந்தோஷங்களும் விவரிக்கப்பட்டன.

அதற்கப்புறம்தான் வித்தியாசமே, அதுவரை எல்லாவிதங்களிலும் சமமாக இருந்த மிருகங்களில் சில திடீரென்று மனம் மாறுவதும், பழைய வில்லன்களைப்போல் தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதும் இவையே மற்றவற்றை அடக்கி ஒடுக்கப் பார்ப்பதும் எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. கதையின் முடிவு தேவதைக் கதைகளைப்போல் சந்தோஷமாக இல்லாமல் துயரமாக இருந்ததும் ஒரு முக்கியமான வேறுபாடு.

ஆனால் இத்தனைக்குப்பிறகும், என்னுடைய மரமண்டைக்கு இந்தக் கதையின் ‘உள்செய்தி’ (பழந்தமிழில் சொல்வதென்றால் ‘இறைச்சிப் பொருள்’) புரியவில்லை. அதை ஒரு கற்பனைக் கதையாகமட்டுமே (ஜார்ஜ் ஆர்வெல்கூட இதனை ‘A Fairy Story’ என்றுதான் குறிப்பிடுகிறார்) எண்ணிப் படித்தேன், முழுமையாக ரசித்தேன்.

(‘Animal Farm’ முதல் பதிப்பின் முன்னட்டை

Image Courtesy : http://en.wikipedia.org/wiki/File:AnimalFarm_1stEd.jpg)

கொஞ்ச நாள் கழித்து ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக இந்தக் கதையைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘அட்டகாசமான ஃபான்டஸி சார்’ என்றேன் நான் பரவசமாக.

அந்த நண்பர் என்னை அற்பமாகப் பார்த்தார். ‘இதுல ஃபேண்டஸி எங்கே வந்தது? அந்தக் கதை  மொத்தமும் உண்மையாச்சே’ என்றார்.

‘உண்மையா? என்ன சார் சொல்றீங்க?’

அவர் உலகமே இடிந்து விழுந்துவிட்டதுபோல் பதறினார். ‘அடப் படுபாவி, அந்தக் கதை எதைப்பத்தினதுன்னு உனக்கு நிஜமாத் தெரியாதா?’ என்றார். ‘Animal Farm’ல் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வோர் இடமும் ஒவ்வோர் அசைவும் ரஷ்யா  / புரட்சி / கம்ப்யூனிஸ்ட் ஆட்சி போன்றவற்றை எப்படிக் குறிப்பிடுகிறது என்று நிதானமாக விளக்கிச் சொன்னார். நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

என்னுடைய ஆச்சர்யத்துக்கு முதல் காரணம், அதுவரை எனக்கு ஒரு புனைவாக(Fiction)மட்டுமே தோன்றிய ‘Animal Farm’ கதை அவர் பேசியபின்னர் திடீரென்று அபுனைவாக(Nonfiction) உருப்பெற்றுவிட்டது. அது வெறும் தேவதைக் கதை அல்ல, சென்ற நூற்றாண்டின் முதல் 40 வருடங்களாக ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளை மறைமுகமாக விவரிக்கிற படைப்பு.

ஜார்ஜ் ஆர்வெல் நினைத்தால் ரஷ்யக் கம்யூனிஸ்ட் அரசுபற்றிய தன் விமர்சனத்தை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கலாம். ஆனால் இந்தக் கதையின்மூலம் அவர் அதனை ஒரு கார்ட்டூன் / கேலிச் சித்திரம்போல் பதிவு செய்துவிட்டார். (நிச்சயம் ஒருசார்பான பதிவுதான், ஆனாலும் அது அற்புதமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை)

என்னைப்போன்ற மக்குப் பேர்வழிகள் இந்தக் கதையைச் ‘சும்மா’ படித்து ரசிக்கலாம், விஷயம் தெரிந்தவர்கள் அரசியல் கேலியை ஒப்பிட்டு மகிழலாம், இருதரப்பினருக்கும் திருப்தி தரக்கூடிய அபூர்வக் கலவை அந்தப் புத்தகம். அதுதான் ஜார்ஜ் ஆர்வெலின் மேதைமை.

அந்த நண்பரிடம் பேசியபிறகு, நான் இணையத்துக்குச் சென்று ‘Animal Farm’ கதையின் அரசியல் பின்னணி பற்றிப் படித்தேன். யார் லெனின், யார் ஸ்டாலின், யார் ட்ராட்ஸ்கி, யார் ஹிட்லர், கதையில் வரும் காற்றாலை எதைக் குறிக்கிறது, குதிரைகள் யார், கோழிகள் யார் என்றெல்லாம் வாசித்து ஒப்பிடும்போது நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. திடீரென்று கண் திறந்துவிட்டாற்போலிருந்தது.

அதன்பிறகு, மீண்டும் ஒருமுறை ‘Animal Farm’ கதையை முழுமையாகப் படித்துப்பார்த்தேன். (இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது : http://www.gutenberg.net.au/ebooks01/0100011h.html) ஜார்ஜ் ஆர்வெல் மேதைமட்டுமல்ல, செம குறும்புக்காரர் என்பது புரிந்தது. முன்பைவிடக் கூடுதலாக ரசிக்கமுடிந்தது.

சில வருடங்கள் கழித்து, ரஷ்ய உளவுத்துறையாகிய KGBபற்றி ஒரு புத்தகம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ‘Animal Farm’ல் வரும் கொடூர நாய்களைதான் நினைத்துக்கொண்டேன்.

ஆச்சர்யமான விஷயம், இப்போது ரஷ்யாபற்றி நான் படித்த ஒவ்வொரு விவரமும் என்னை ‘Animal Farm’ கற்பனை உலகத்துக்குள் கொண்டுசென்றது. இந்த நிகழ்ச்சியை ஜார்ஜ் ஆர்வெல் அந்தக் கதையில் சேர்த்திருக்கிறாரா, இல்லை எனில் ஏன்? ஒருவேளை சேர்த்திருந்தால் அது எப்படி அமையும், எந்தக் கதாபாத்திரம் இதைச் செய்யும், அதனால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றெல்லாம் பலவிதமாக யோசித்துச் சந்தோஷப்படத் தோன்றியது.

இப்போது, ‘Animal Farm’ புத்தகம் ‘விலங்குப் பண்ணை’ என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது. மொழிபெயர்த்திருப்பவர் பி. வி. ராமஸ்வாமி. கிழக்கு பதிப்பகம் வெளியீடு, 144 பக்கங்கள், விலை ரூ 85.

(Image Courtesy : https://www.nhm.in/shop/978-81-8493-521-9.html)

Animal Farm ஏற்கெனவே சிலமுறை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இணையத்தில்கூட எங்கேயோ அதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் நான் இந்தக் கதையைத் தமிழில் முழுமையாக வாசித்தது இந்தப் புத்தகத்தில்தான்.

தமிழில் மொழிபெயர்ப்புகளே குறைவு, நல்ல மொழிபெயர்ப்புகள் அதைவிடக் குறைவு. எனக்குத் தெரிந்து இதுவரை மூன்று முறை வெவ்வேறு தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்கி வாசித்துவிட்டு வெறுத்துப்போய் ஒரிஜினல் ஆங்கிலப் புத்தகங்களையே மீண்டும் காசு செலவழித்து வாங்கியிருக்கிறேன்.

இதனால், ‘விலங்குப் பண்ணை’யைக் கொஞ்சம் சந்தேகத்துடன்தான் கையில் எடுத்தேன். முடிந்தால் படிக்கலாம், இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை, ஏற்கெனவேதான் ஒரிஜினலை ரெண்டு முறை படித்தாகிவிட்டதே!

’விலங்குப் பண்ணை’யில் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்திய விஷயம், பி. வி. ராமஸ்வாமியின் சரளமான மொழி நடை. அதிநவீனமாகவும் இல்லை, அரதப்பழசாகவும் இல்லை, நாற்பதுகளில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைக் கிட்டத்தட்ட எழுபது வருடம் கழித்து வாசிக்கும்போது அதே உணர்வுகளைக் கொண்டுவருவதற்கு எத்தகைய மொழியைப் பயன்படுத்தவேண்டுமோ அதை மிகுந்த தேர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார்.

குறிப்பாக, இந்தக் கதையின் ஆன்மா, எத்தனை புரட்சிகள் வந்தாலும் அப்பாவி விலங்குகள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றன என்கிற செய்தி அதன் மெலிதான பிரசார தொனியுடன் அப்படியே இந்த மொழிபெயர்ப்பில் அழகாக இறங்கியிருக்கிறது. மற்றபடி சில பத்திகள் நீளமானவை, பயன்படுத்தப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் வழக்கில் இல்லாதவை என்பதுபோன்ற சிறு குறைகளெல்லாம் இரண்டாம்பட்சமே.

இன்னொரு விஷயம், கதையின் மிக முக்கியமான பகுதிகளில் மூல வடிவத்தைப் படிக்கும்போது வரும் அதே உணர்வுகள் (நான் அதை ஏற்கெனவே இருமுறை வாசித்திருந்தாலும்) இங்கேயும் பிசிறின்றி வருகின்றன. வார்த்தைக்கு வார்த்தை எனச் செய்யப்படும் (Transactional) மொழிபெயர்ப்புகளில் இது சாத்தியமே இல்லை. கதையின் தன்மையை உணர்ந்து மறு உருவாக்கம் செய்தால்தான் உண்டு.

உதாரணமாக, இந்தக் கதையின் மிக முக்கியமான பகுதிகளாக நான் நினைப்பது, மிருகங்கள் இணைந்து கட்டுகின்ற காற்றாலை இரண்டு முறை இடிந்து விழுவது, வயதான மிருகங்களின் நலவாழ்வுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்கள் பிடுங்கப்படுவது, பன்றிகள் சுகவாழ்க்கைக்குப் பழகிக்கொண்டு மற்ற மிருகங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வது, பாக்ஸர் என்கிற கடும் உழைப்பாளிக் குதிரையிடமிருந்து சகல உழைப்பையும் பிடுங்கிக்கொண்டு அதைச் சக மிருகங்களே கசாப்புக் கடைக்காரனுக்கு விற்றுவிடுகிற காட்சி, எழுதப் படிக்கத் தெரிந்த, தெரியாத மிருகங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொய்ப் பிரசாரத்தின்மூலம் மூளை மழுங்கச்செய்யப்படுவது, திடீரென்று தோன்றும் வேட்டை நாய்கள் நிகழ்த்தும் கொடூரங்கள்… இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றிலும் எழவேண்டிய தன்னிரக்கம், கோபம், ஆத்திரம், சோகம், பயம் போன்ற உணர்வுகள் அனைத்தும் தமிழ் மொழிபெயர்ப்பில் மறுபடி வாசிக்கும்போதும் அதேபோல் எழுகின்றன. இதற்கு ஒருபாதிக் காரணம் ஜார்ஜ்  ஆர்வெல் என்றால், இன்னொருபாதிக் காரணம் பி. வி. ராமஸ்வாமியின் மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இதுதான். நீங்கள் இதுவரை ‘Animal Farm’ வாசித்ததில்லை என்றால், தாராளமாக இதை நம்பி வாங்கலாம். அதற்கு நீங்கள் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை, என்னைப்போல் அரசியல் தெரியாத கோயிந்துகளாலும் ரசிக்கமுடிகிற படைப்பு இது.

***

என். சொக்கன் …

28 01 2012

8 Responses to "ஓர் அப்பாவியின் மீள்வாசிப்பு"

அழகான விமர்சனம்! தாங்கள் animal farmஐ ரசித்தவராக இருந்திருப்பதால் 1984 பற்றியும் உங்கள் கருத்து வரும் என பதிவு முழுவதும் எதிர்பார்த்தேன்!

தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்றாலே கொஞ்சம் பயம்தான். கடைசியாகப் படித்தது தகழியின் செம்மீன். மிக நல்ல நடை.

பஞ்சரமேர் பாகான் என்ற வங்க மொழிப் படத்தைத் தமிழில் நாவல் வடிவில் எழுத வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. அடுத்து அதை எடுக்க வேண்டும். நினைவூட்டியமைக்கு நன்றி.

தேவதைக் கதைகளுக்குள் நாட்டு நடப்பை மறைத்துக் கொடுப்பது ரொம்பவும் சிரமமான வேலை.

இரண்டு எடுத்துக் காட்டுகள் எனக்குத் தெரிந்து இருக்கின்றன. மிகப் பிரபலமான லார்டு ஆஃப் தி ரிங்ஸ் கதை உலகப்போர் பிரச்சனையை மையமாக வைத்துத்தான் எழுதப்பட்டதாம். அதை முதலில் படிக்கும் போது எனக்கும் தெரியவில்லை. பின்னால் தெரிந்ததும் கதையில் யார் எந்தப் பாத்திரம் என்றுதான் மூளை சிந்தித்தது. ஹாரி பாட்டரில் ஒரு சில பகுதிகள் நாஜிகளின் கொடுமையை வைத்து எழுதப்பட்டதாக ஜே.கே.ரௌலிங் கூறியிருக்கிறார்.

படிப்போம். ஆனால் படிக்கும் போது கம்யூனிஸ நினைவுகளே வந்து யார் ஸ்டாலின், யார் லெனின் என்று தேடும்.

மிக்க நன்றி. இதற்குமேல் சொல்லத் தெரியவில்லை. 🙂

எனக்குத் தெரிந்து 2 சினிமாப் படங்களும் உண்டு:

1) http://www.youtube.com/watch?v=6MKXgrF9IRc (72 நிமிட, அனிமேஷன் – நான் YouTubeல் பார்த்துவிட்டேன்)
2) http://www.imdb.com/title/tt0204824/ Trailer.

அருமையான விமர்சனம். மொழிபெயர்ப்பு நூல்களில் நல்ல புத்தகங்கள் வராததற்கு காரணம். புத்தக நிறுவனங்களால் சரியான மொழிபெயர்ப்பாளரை கண்டறிய முடியாமை அல்லது மொழிபெயர்ப்பாளருக்கு போதிய நேரம் கொடுக்காதது, கதைகளில் ஆர்வமில்லாதவர் மொழி பெயர்த்தது போன்றவை காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எச்சம் திண்ணிகளுக்கு சுயமரியாதையைப் பற்றி என்ன தெரியும்!

குறியீடுகள் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து தான் தொடங்கியதோ? உடனே படிக்கவேண்டும் இந்தப் புத்தகத்தை :-))

amas32

Leave a comment

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,359 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2012
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031