மனம் போன போக்கில்

ஒட்டுக்கேட்டவன் குறிப்புகள்

Posted on: January 25, 2012

நேற்று இரவு அலுவல் நிமித்தம் ஓர் ஆஸ்திரேலியரைச் சந்தித்தோம். இந்திய வம்சாவளிக் குடும்பம்தான். ஆனால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறிவிட்டார்கள். இப்போது தொழில்முறைப் பயணமாக இங்கே வந்திருக்கிறார்.

அவர் தங்கியிருந்தது பெங்களூரின் மிகப் பழமையான நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்று. அங்கே எங்களுக்குப் பிரமாண்டமான விருந்து அளித்தார். ஒரு ப்ளேட் வெஜிடபிள் பிரியாணி: ரூ 1500/- தொட்டுக்கொள்ளத் தயிர்ப் பச்சடி ரூ 350/- என்று மெனுவைப் பார்த்தாலே எனக்குப் பசி தீர்ந்துவிட்டது.

ஆனால், அவருக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்கமுடியாது. போன வருடம்தான் அவர் தனது சொந்த நிறுவனத்தை இன்னொரு மிகப் பெரிய நிறுவனத்திடம் விற்று ஐநூற்றுச் சொச்ச கோடிகளை அள்ளியிருந்தார். இப்போது அந்தப் பெரிய நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

ஆஃபீஸ் விஷயம் என்பதால், இந்த ஐநூறு கோடீஸ்வரருடைய பெயரையோ வேறு விவரங்களையோ தெரிவிக்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் பிரச்னையில்லை, அவர் சொன்ன விஷயங்கள்தான் முக்கியம். சும்மா அவருடைய பெயர் மிஸ்டர் கோயிஞ்சாமி என்று வைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

உண்மையில் எனக்கு இதுபோன்ற பெரும்புள்ளிகளுடன் ஒப்பந்தம் பேசிப் பழக்கமும் இல்லை, அதற்கான நெளிவுசுளிவுகளும் எனக்குத் தெரியாது. என்னுடைய boss அதில் பெரிய விற்பன்னர். எதற்காகவோ இந்தமுறை என்னையும் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டு போயிருந்தார். நானும் ஆயிரத்தைநூறு ரூபாய் பிரியாணியில் என்ன விசேஷம் என்று பரிசோதித்தபடி அவர்கள் இருவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் அலுவலக விஷயங்களைப் பேசியவர்கள் ஒருகட்டத்தில் (ஒயின் தாக்கத்தில்?) பர்ஸனல் சமாசாரங்களுக்கு நகர்ந்தார்கள். குறிப்பாக, மிஸ்டர் கோயிஞ்சாமி தன்னுடைய தனிப்பட்ட தொழில்முனைவோர் (Entrepreneur) அனுபவங்களை மிகச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

அதாகப்பட்டது, நீங்கள் ஒரு தொழில் தொடங்கி நடத்துகிறீர்கள், அடிமட்டத்திலிருந்து அதனை வளர்த்து ஆளாக்கி ஒரு பெரிய நிறுவனத்துக்கு விற்க நினைக்கிறீர்கள், அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும்? மிஸ்டர் கோயிஞ்சாமி கொடுத்த டிப்ஸ் இவை:

முன்குறிப்புகள்:

1. ஓர் ஒழுங்கில் இல்லாமல் என் நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன் (Unstructured Notesபோல) தவறுகளோ, அபத்தங்களோ இருந்தால் நானே முழுப் பொறுப்பு

2. இந்த சீரியஸான மேட்டரை இப்படி dilute செய்து விளையாட்டாக எழுதியிருக்கிறானே என்று நினைக்கவேண்டாம், நான் சொந்தத் தொழில் தொடங்கியவன் அல்லன், அப்படி ஒரு யோசனையும் இல்லை, ஆகவே எனக்கு இது சும்மா ஜாலியாகக் கவனித்த விஷயம்தான், இப்படிதான் என்னால் எழுதமுடியும்

3. இவை முழுமையான குறிப்புகள் அல்ல, அவர் சொன்னதில் என் நினைவில் தங்கியவைமட்டுமே, அவர் சொல்ல மறந்தவை இன்னும் நிறைய இருக்கலாம்

4. இந்த பலவீனங்களையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்புகள் யாருக்காவது பயன்படும் என்று நம்புகிறேன்

  • தொழில் நடத்துவதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு பொருளை (அல்லது சேவையை) தயாரிப்பது, அதனை விற்பது. Production, Sales எனப்படும் இந்த இரண்டு பகுதிகளில் நீங்கள் எதில் கில்லாடி?
  • பெரும்பாலான புதிய தொழில்முனைவோர் தங்களுடைய துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் பெரிய ஆள்களாக இருப்பார்கள். அதை அடிப்படையாக வைத்து ஒரு பிரமாதமான தயாரிப்பை உருவாக்கிவிடுவார்கள், அப்புறம் அதை எப்படி விற்பது, எப்படிச் சந்தைப்படுத்துவது (மார்க்கெட்டிங்) என்று தெரியாமல் விழி பிதுங்குவார்கள்
  • நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மேற்சொன்ன இரண்டையுமே நீங்கள் செய்யவேண்டியிருக்கும், பழகிக்கொள்ளுங்கள், அல்லது, உங்களுக்கு எதில் திறமை போதாதோ அந்த விஷயத்தில் கில்லாடியான ஒரு நபரைப் பார்த்துப் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்
  • A : ஓரளவு நல்ல Product, அருமையான Sales Team
  • B : அற்புதமான Product, சுமாரான Sales Team
  • மேற்சொன்ன இரண்டில் Aதான் பெரும்பாலும் ஜெயிக்கும். Its unfair, ஆனால் அதுதான் எதார்த்தம்
  • உங்களுடைய பொருளை (உதாரணமாக: சாஃப்ட்வேர் அல்லது சலவை சோப்பு) விற்பது ஒரு கலை என்றால், உங்களுடைய கம்பெனியை விற்பது வேறுவிதமான கலை, அதற்கு நீங்கள் தனியே பல நுட்பங்களைப் பழகவேண்டும்
  • பெரிய கம்பெனிகள் உங்களுடைய கம்பெனியை எதற்காக வாங்கவேண்டும்? உங்களிடம் என்ன ஸ்பெஷல்?
  • பெரும்பாலான பெரிய கம்பெனிகள் சேவை சார்ந்த நிறுவனங்களை (Service Based Companies) சீண்டுவதே இல்லை, Product Based Companies, அதிலும் குறிப்பாக IP எனப்படும் Intellectual property, அதாவது நீங்களே உருவாக்கிய தனித்துவமான தயாரிப்புகள் இருந்தால் எக்ஸ்ட்ரா மரியாதை
  • ஒருவேளை நீங்கள் Service Based Company என்றாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை / உழைப்பை ஒதுக்கி உங்களுக்கான IP ஐடியாக்களைத் தேடுங்கள், அவற்றுக்கு ஒழுங்காகக் காப்புரிமை (Patent) வாங்கிவைத்துக்கொள்ளுங்கள், உங்கள் நாட்டில்மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா என்று எங்கெல்லாம் இந்தத் தயாரிப்பு காப்பியடிக்கப்படக்கூடுமோ அங்கெல்லாம் பேடன்ட் வாங்கிவிடுங்கள்
  • பேடன்ட் வாங்குவது வேறு, பொருளை உண்மையில் தயாரிப்பது வேறு, முதல் விஷயம்(ஐடியா)தான் ரொம்ப முக்கியம், அதை வைத்தே பெரிய ஆளானவர்கள் இங்கே உண்டு
  • சாஃப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் எப்படிச் சிறிய நிறுவனங்களை ‘வாங்கு’ கின்றன?
  • இதில் இரண்டு வகைகள் உண்டு: Horizontal Acquisitions, Vertical Acquisitions
  • Horizontal என்றால், ஒரே சாஃப்ட்வேர் (அல்லது அடிப்படைக் கட்டமைப்பு) எல்லாத் துறைகளிலும் (உதாரணமாக: வங்கிகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மீடியா, விமான சேவை நிறுவனங்கள் etc.,) பயன்படும், நீங்கள் அதுமாதிரி சாஃப்ட்வேர்களை எழுதி, ஓரளவு பிரபலமாகியிருந்தால் போதும், பெரிய நிறுவனங்கள் உங்களை வாங்குவதற்காகக் காசுக் கணக்கே பார்க்காமல் அள்ளித் தரத் தயாராக இருப்பார்கள். ஆனால் இதுமாதிரி Acquisitions மிகக் குறைவு, மிக அபூர்வம்
  • ஆகவே, Vertical Acquistionsதான் நமக்கு வசதி. ஏதாவது ஒரு துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் துறைக்கு என்று இருக்கும் பிரச்னைகளைக் கவனியுங்கள், புரிந்துகொள்ளுங்கள், அதில் அனுபவம் மிக்க நபர்களை உங்கள் குழுவில் இணைத்துக்கொள்ளுங்கள், உங்களது வாடிக்கையாளர்களுடன் பேசுங்கள், அந்தத் துறையில் உள்ள எல்லாருக்கும் பயன்படக்கூடியவிதமாக ஒரு சாஃப்ட்வேரை எழுதுங்கள். அதை ஒன்று, ஐந்து, பத்து, இருபது நிறுவனங்களில் செயல்படுத்திப் பரீட்சித்துப் பாருங்கள்
  • இப்படி நீங்கள் எழுதும் ‘அபூர்வ’ சாஃப்ட்வேரை, மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் சீண்டக்கூட மாட்டார்கள். பரவாயில்லை, அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல் என்று தீர்மானித்திருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் வேலையைத் தொடருங்கள், அந்தத் துறை சார்ந்த புதுப்புது விஷயங்களைக் கவனித்துச் சேர்த்துக்கொண்டே இருங்கள்
  • இதனால், ஒருகட்டத்தில் அந்தக் குறிப்பிட்ட துறையில் பெரிய நிறுவனங்களைவிட உங்களுடைய தயாரிப்பு ஒரு படி மேலே போய்விடும், ஆனால் இப்போதும், அவர்கள் உங்களை அலட்சியமாகதான் பார்ப்பார்கள். ‘நேத்து வந்த பொடிப்பய, இவனால என்னை என்ன செய்யமுடியும்?’
  • அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். அடுத்தடுத்து பல இடங்களில் அவர்களுடைய சாஃப்ட்வேரை வாங்கப்போகிற கஸ்டமர்கள் உங்களைப் பற்றிப் பேசி ஒப்பிட ஆரம்பித்தால், அப்போது அவர்களுக்குப் புரியும், ‘இந்தப் பயலுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்’ என்று உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவார்கள்
  • இப்போது, அந்தப் பெரிய நிறுவனம் தன்னுடைய பெருந்தலைகளைக் கூப்பிட்டு விவாதிக்கும் ‘எது பெட்டர்? நம்ம சாஃப்ட்வேரை இன்னும் சிறப்பாக்கறதா? அல்லது அந்தக் கம்பெனியை மொத்தமா வாங்கிப் போடறதா?’
  • நீங்கள்தான் ஏற்கெனவே அந்த Verticalலில் பிஸ்தாவாச்சே, உங்கள் சாஃட்வேரை (அதாவது கம்பெனியை) வாங்கிவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்று அவர்களே முடிவு செய்வார்கள். இதற்காக நீங்கள் செய்யவேண்டியது எதுவுமே இல்லை (உங்களது Productஐத் தொடர்ந்து Improve செய்துகொண்டிருப்பதைத்தவிர)
  • அடுத்த விஷயம், என்னதான் நீங்கள் உங்கள் கம்பெனியைப் பெரிய நிறுவனம் ஒன்றிடம் விற்க விரும்பினாலும், நீங்களே அவர்களிடம் சென்று பேசாதீர்கள், விலை பாதியாகக் குறைந்துவிடும், அவர்களே வரும்வரை காத்திருங்கள்
  • வந்தார்களா? வாழ்த்துகள், பாதி வேலை முடிந்தது, மிச்சத்தைக் கவனியுங்கள்
  • ஏற்கெனவே சொன்னதுபோல், உங்கள் சாஃப்ட்வேரை விற்பது வேறு, உங்கள் கம்பெனியை விற்பது வேறு, அதற்கு நீங்கள் உங்களுடைய கம்பெனியைப் பலவிதமாகப் பொட்டலம் கட்டிக் காட்டவேண்டியிருக்கும் (IP, Employees’ Skills, Balance Sheet, Profit, Market Potential என்று வரிசையாக ஏதேதோ சொன்னார், எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, இங்கே உங்களுக்குத் தெரிந்தபடி மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டுக்கொள்ளவும்)
  • பெரிய கம்பெனிகளுடன் பேரம் பேசும்போது, ஆரம்பத்தில் அவர்கள் அதிரடியாகதான் இறங்குவார்கள், ‘நீயெல்லாம் ஒரு கம்பெனியா? உன்னைக் காசு கொடுத்து வாங்கணும்ன்னு எனக்குத் தலையெழுத்தா? உன்னைவிட பக்கத்து கம்பெனிக்காரன் பலமடங்கு பெட்டர், தெரியுமா?’
  • இப்படி யாராவது பேசினால் சளைக்காதீர்கள். ‘ஆமா சார், நீங்க அவன்கிட்டயே பேசிக்கோங்க, குட் பை’ என்று எழுந்து வந்துவிடுங்கள் (கத்தரிக்காய் பேரம் பேசும் அதே டெக்னிக்?)
  • அப்புறம், அந்தப் பேரம்பேசிகள் தங்களது பெருந்தலைகளோடு உரையாடுவார்கள், உங்களது ‘வொர்த்து’ தெரிந்து அவர்கள் இறங்கிவருவார்கள், ‘சரி, என்ன விலை  எதிர்பார்க்கறீங்க?’ என்று கேட்பார்கள்
  • உடனடியாக, உங்கள் வாயை ஃபெவிகால் போட்டு மூடிக்கொண்டுவிடுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைச் சொல்லாதீர்கள், அவர்கள் முதலில் பேசட்டும்
  • அவர்கள் பேசியதும் ‘This is too low’ என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக்கொள்ளுங்கள். எந்தப் பெரிய கம்பெனியும் உங்களிடம் ஆரம்பத்தில் சொல்லும் விலையைப்போல் இரண்டு முதல் மூன்று மடங்குவரை தரத் தயாராக இருப்பார்கள்
  • அப்புறம், பேரங்கள் தொடங்கும், முடிந்தவரை இந்த விஷயத்தில் அனுபவம் உள்ள ஒருவரை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள், பெரும்பாலான Entrepreneurs அடி வாங்குவது இந்த இடத்தில்தான், இந்த அனுபவம் கிடைத்தபிறகு, நீங்கள் இன்னொரு பிஸினஸ் நடத்தினால் அதைச் சரியான விலைக்கு விற்பீர்கள்
  • நமக்கு அந்த Trial and Error எல்லாம் சரிப்படாது. அனுபவம் உள்ள ஒருவர் உங்களுடன் இருந்தால் அடிமாட்டு விலையைத் தவிர்க்கலாம்
  • உங்கள் கம்பெனியை விற்றபின்னர், நீங்களும் அந்தப் பெரிய நிறுவனத்தில் (சில மாதங்களாவது) வேலை செய்யவேண்டியிருக்கும். அப்போது ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாராக இருங்கள், சொந்தமாகத் தொழில் நடத்துவதன் சவால்கள் வேறு, பெரிய கம்பெனியில் வேலை செய்வதன் சவால்கள் வேறு, அப்புறம் வருத்தப்படாதீர்கள்
  • நிறைவாக ஒன்று, என்னதான் கை நிறையக் காசு வாங்கிக்கொண்டு பெரிய கம்பெனியில் பிரமாதமான சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், அநேகமாக நீங்க அதை ரசிக்கமாட்டீர்கள், சொந்தமாக ஒரு விஷயத்தை உருவாக்குகிற த்ரில் உங்களைச் சும்மா விடாது, விரைவில் அடுத்த Entrepreneurial முயற்சியில் இறங்கிவிடுவீர்கள், இது நிச்சயம் Winking smile

***

என். சொக்கன் …

25 01 2011

15 Responses to "ஒட்டுக்கேட்டவன் குறிப்புகள்"

// உங்களுக்கு எதில் திறமை போதாதோ அந்த விஷயத்தில் கில்லாடியான ஒரு நபரைப் பார்த்துப் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளுங்கள். //

வெறும் திறமையில் மட்டுமில்லாமல், கேரக்டரிலும் பேலன்ஸ் பண்ணுகிற கில்லாடி கிடச்சா போதும்! 🙂

அநேகமாக இதை நாம் எல்லாவற்றிலும் நடைமுறைப்படுத்தலாம்.

மிகவும் அற்புதமான விஷயங்கள். நன்றி சார்

தேவையான செய்திகளை சுவையாக பகிர்ந்ததற்கு நன்றி. அடுத்தமுறை ஒட்டுக்கேக்கும் பொழுதே notes எடுத்துக் கொள்ளுங்கள்! :>

அருமையான உபயோகக் குறிப்புகள். சமீபத்தில் சின்னதாக தொழில் முனைவோர் ஆன என் இரு நண்பர்களுக்கு இந்தப் பதிவின் லிங்க்-ஐ அனுப்பிவிட்டேன்.

வெஜ் பிரியாணி என்னமாய் வேலை செய்திருக்கிறது. Just Kidding!

நன்றி!

நீங்கள் நன்றாகத்தான் கவனித்து இருக்கிறீர்கள்.பகிர்வுக்கு நன்றி.

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

நன்றி,ரொம்ப தெளிவாக விவரங்களை பதிவிட்டு உள்ளிர்கள்.

நன்றி, ரொம்ப தெளிவாக பதிவிட்டுள்ளீர்கள்.

எனக்கு இது Unstructured நோட்ஸ் மாதிரி தெரியல, ரொம்ப நல்லா இருக்கு. பகிர்ந்ததற்கு நன்றி.

read bommai….very nice. keep it up.

romba nalla vishayam

மிகவும் சிறந்த அனுபவக்குறிப்புகளை, ஆயிரத்து ஐநூறு ரூபாய் வெஜ்.பிரியாணியுடன் அளித்திருக்கிறார். பகிர்தலுக்கு நன்றி!

சமிபகாலமாக உங்களோட “பதிவுகள் அனைத்தும் மேலாண்மை சமந்தமாக உள்ளது ” என்று நினைக்கிறன்….கூடிய சீக்கிரம் நீங்கள உங்கள் கம்பெனியில் அடுத்த CEO என்கிற நல்ல செய்தியாக சொல்லுங்க பாஸ்….மற்றபடி நீங்கள சொந்தமாக ஒரு கம்பெனி கோட ஆரம்பிக்கலாம் …….

We just acquired a Software company and i was observing the negotiations too close….believe me, u r 99% right….the rest 1% i’m not gonna tell you 😉

Ah, not fair 🙂 at least email please :))))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2012
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
%d bloggers like this: