மனம் போன போக்கில்

கவிதை வாங்கி வந்தேன்

Posted on: June 10, 2013

சில புத்தகங்களைப் படிக்கத் தொடங்கும்போது, ஏதோ ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்பில் இருப்போம், ஆனால் அவற்றைப் படித்து முடிக்கும்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு பலன் கிடைத்துவிடும்.

உதாரணமாக, ஒரு தனி நபருடைய வாழ்க்கை வரலாறுப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்குகிறோம், ஆனால் அதன்மூலம் அவர் சார்ந்திருக்கும் துறையைப்பற்றிய முழுமையான பார்வை கிடைத்துவிடுகிறது.

அல்லது, ஒரு நாவலைக் கதைக்காகப் படிக்க  எடுக்கிறோம், ஆனால் அந்த நாவல் எழுதப்பட்டிருக்கும் களம்பற்றிய நுணுக்கமான தகவல்களை அறிந்துகொள்கிறோம், அப்போது அது Fictionனாகவே இருப்பினும், கிட்டத்தட்ட ஒரு Non Fictionபோல் தொனிக்கிறது.

உரப்புளி நா. ஜெயராமன் எழுதியிருக்கும் ‘மஞ்சத் தண்ணி’ சிறுகதைத் தொகுப்பும் அப்படிதான். சில நல்ல கிராமத்து மனிதர்களின் ஆளுமைகள், பழக்கவழக்கங்கள், உணர்வுகளைக் கதைவடிவில் தெரிந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தால், அங்கே மிக வித்தியாசமான ஒரு முத்து ஒளிந்திருக்கிறது.

எழுபதுகள், எண்பதுகளில் வந்த இந்தக் கதைகளில் செய்நேர்த்திக்குக் குறைச்சல் இல்லை. ஆங்காங்கே பிரசார வாசனை இருப்பினும், அருமையான பாத்திரங்கள், ஆழமான சிந்தனைகள், காட்சி அமைப்புகள், வசனங்கள், நுணுக்கமாக அமைக்கப்பட்ட படிமங்கள் என்று சுவையான வாசிப்பு அனுபவம் உள்ளது.

ஆனால், 11 கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகள்மட்டும் சற்றே வித்தியாசப்பட்டு நிற்கின்றன. மற்ற ஒன்பது கதைகளைக் கொஞ்சம் மெனக்கெட்டால் வேறு யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கமுடியும், இந்த இரண்டு கதைகளை, இவரால்மட்டும்தான் எழுதமுடியும்.

அப்படி என்ன விசேஷம் இந்தக் கதைகளில்?

இன்றைக்கு நாம் ஒரு பொத்தானைத் தட்டினால் உலகில் எங்கு வேண்டுமானாலும் பேசிவிடுகிறோம். சிறு கிராமங்களில்கூட செல்பேசி நுழைந்துவிட்டது.

இதனால், இதற்கு முன்பாக நிகழ்ந்த தொலைதொடர்புப் புரட்சியை, அதாவது, Landline என்று நாம் சற்று இழிவாகவே குறிப்பிடும் தொலைபேசிக் கட்டமைப்பு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்த விதத்தை நாம் கொஞ்சம் அலட்சியமாகவே பார்க்க வாய்ப்புள்ளது. ‘அது ஒரு பெரிய விஷயமா? ஒரு டவரை வெச்சா சிக்னல் வருது!’

உண்மை அப்படியில்லை. தொழில்நுட்பத்தின் ஆரம்ப நிலையிலிருந்த அன்றைய நாள்களில், இந்தியாவின் ஒவ்வொரு குக்கிராமத்தையும் தொலைபேசி வலைப்பின்னலில் இணைப்பதற்காக BSNL நிறுவனம் உழைத்திருக்கிறது. இதை நேருக்கு நேர் பார்த்த, அதில் நேரடியாகப் பங்கு பெற்ற உரப்புளி நா. ஜெயராமன் தனக்குப் பிடித்த கதை வடிவத்தில் அந்த அவஸ்தையை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

உதாரணமாக, ஒரு கிராமத்திற்குத் தொலைபேசி இணைப்பு வரவேண்டும் என்றால், அதை முன்னெடுத்துச் செல்வது யார்? கிராமவாசிகளா, அல்லது அரசு அதிகாரிகளா?

அப்படியே ஒருவர் முன்னெடுத்துச் சென்றாலும், மற்றவர்களைத் திரட்டுவது யார்? போதுமான எண்ணிக்கையில் இணைப்புகள் இல்லாவிட்டால் என்ன செய்வார்கள்? எப்படி ஆதரவு சேர்ப்பார்கள்?

இணைப்புகள் கிடைத்துவிட்டாலும், கருவிகளுக்கு எங்கே போவது? அவற்றை எங்கே வைப்பது? ஃபோனைப் பொறுப்பாக வீட்டில் வைத்து, மற்றவர்களைப் பேச விட்டு, காசு வாங்கி, மாதம் முடிந்ததும் பில் கட்டுவது யார்? அதற்கு என்னமாதிரி எதிர்ப்புகள் இருந்தன, அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்?

இத்தனை சிரமப்பட்டுக் கிராமம் கிராமமாகச் சென்று வேலை செய்யும் அளவு அந்த அதிகாரிகளுக்குச் சேவை மனப்பான்மை இருந்ததா? அவர்களுக்கு இதில் என்ன லாபம்? ஏன் இதில் முனைப்போடு ஈடுபட்டார்கள்? சம்பளத்துக்காகவா? மேலதிகாரிகளின் அதட்டலுக்குப் பயந்தா? வேறு காரணமா?

புதிதாக வந்த ஃபோனை கிராமவாசிகள் எப்படிப் பார்த்தார்கள்? அவற்றை ஒழுங்காகப் பராமரித்துக்கொண்டார்களா? அதில் நிகழ்ந்த வேடிக்கையான அனுபவங்கள் என்னென்ன?

இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தொலைபேசி என்கிற ஒரு சின்ன விஷயம், இந்தக் கிராமவாசிகளின் வாழ்க்கையை எப்படி(நல்லவிதமாக)ப் புரட்டிப்போட்டது, அதன்மூலம் எத்துணை உயிர்கள் காப்பாற்றப்பட்டன, எத்துணை உறவுகள் நிலைநிறுத்தப்பட்டன!

இந்த விவரங்கள் அனைத்தையும் கதைப்போக்கில் அழகாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். சுமார் 15 நிமிடங்களில் வாசிக்கக்கூடிய இரண்டே கதைகளின்மூலம், எனக்குக் கண் திறந்தமாதிரி ஓர் உணர்வு. மாட்டு வண்டி செல்லக்கூடப் பாதை இல்லாத கிராமங்களையெல்லாம் தொலைபேசியின்மூலம் இணைத்த ஒரு மாபெரும் புரட்சியை நாம் சற்றும் கண்டுகொள்ளாமல், அதற்காக உழைத்தவர்களை மனத்தளவில்கூடக் கௌரவிக்காமல் ஜஸ்ட் லைக் தட் தாண்டிச் சென்றுவிட்டோமோ என்கிற குறுகுறுப்பு.

உரப்புளி நா. ஜெயராமன் அவர்கள் இதுபற்றி இன்னும் விரிவாக எழுதவேண்டும், கதையாகமட்டுமின்றி, சரித்திரப் பதிவாகவே செய்யவேண்டும், ஒரு கிராமத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு அதில் தொலைபேசி வந்த விதத்தை, அதில் எழுந்த சவால்களை, அரசாங்க நெருக்கடிகளை, மக்களின் உணர்வுகளை, உதவிகளை, எதிர்ப்புகளை, சவால்களையெல்லாம் விரிவாகச் சொன்னால், நாம் இன்றைக்குப் பத்தோடு பதினொன்றாக நினைக்கும் அரசாங்கத் தொலைபேசி நிறுவனத்தின் உண்மையான சமூகப் பங்களிப்பு என்ன என்பது புரியும்.

(மஞ்சத் தண்ணி : உரப்புளி நா. ஜெயராமன்  : 128 பக்கங்கள் : விலை ரூ 70 : அட்சயா பதிப்பகம் : (0)9486101986)

***

என். சொக்கன் …

10 06 2013

8 Responses to "கவிதை வாங்கி வந்தேன்"

2013/6/10 karpaka vinayagar enterprises madurai

> மரம் வைத்தவன் ஒருவன் பலன் அனுபவிப்பான் ஒருவன்
> என்பதற்கு உதாரணம் bsnl தான்
>
> இன்றைய வசதிகளில் பல அன்று இல்லை ஆனால் அன்றைய
> ஊழியர்கள் கடமையும் கண்ணியமும் சிரத்தையும் கொண்டிருந்தார்கள்
> அர்ப்பணிப்பு உணர்வு அனைவரிடமும் இருந்தது
>
> அன்று மிகச் சிலரிடம் தான் தொலைபேசி இருந்தது
> தொலைபேசி அழைப்பு பக்கத்து வீடுகளுக்கும் வரும்
> நேரம் காலம் கிடையாது ஆனால் முழு மனதோடு
> உதவும் குணம் இருந்தது
>
> இப்படி எத்தனையோ
> அது அந்தக் காலம் பொற்காலம்
> இன்றோ அத்தனையும் போர்க்கோலம் தான்
>
>
> ச கம்பராமன்
> 10 06 13
>
>

மரம் வைத்தவன் ஒருவன் பலன் அனுபவிப்பான் ஒருவன்
என்பதற்கு உதாரணம் bsnl தான்

இன்றைய வசதிகளில் பல அன்று இல்லை ஆனால் அன்றைய
ஊழியர்கள் கடமையும் கண்ணியமும் சிரத்தையும் கொண்டிருந்தார்கள்
அர்ப்பணிப்பு உணர்வு அனைவரிடமும் இருந்தது

அன்று மிகச் சிலரிடம் தான் தொலைபேசி இருந்தது
தொலைபேசி அழைப்பு பக்கத்து வீடுகளுக்கும் வரும்
நேரம் காலம் கிடையாது ஆனால் முழு மனதோடு
உதவும் குணம் இருந்தது

இப்படி எத்தனையோ
அது அந்தக் காலம் பொற்காலம்
இன்றோ அத்தனையும் போர்க்கோலம் தான்

ச கம்பராமன்
10 06 13

மரம் வைத்தவன் ஒருவன்
தண்ணீர் ஊற்றியவன் ஒருவன்
அனுபவிப்பவன் ஒருவன்

2013/6/10 karpaka vinayagar enterprises madurai

>
>
> 2013/6/10 karpaka vinayagar enterprises madurai
>
>> மரம் வைத்தவன் ஒருவன் பலன் அனுபவிப்பான் ஒருவன்
>> என்பதற்கு உதாரணம் bsnl தான்
>>
>> இன்றைய வசதிகளில் பல அன்று இல்லை ஆனால் அன்றைய
>> ஊழியர்கள் கடமையும் கண்ணியமும் சிரத்தையும் கொண்டிருந்தார்கள்
>> அர்ப்பணிப்பு உணர்வு அனைவரிடமும் இருந்தது
>>
>> அன்று மிகச் சிலரிடம் தான் தொலைபேசி இருந்தது
>> தொலைபேசி அழைப்பு பக்கத்து வீடுகளுக்கும் வரும்
>> நேரம் காலம் கிடையாது ஆனால் முழு மனதோடு
>> உதவும் குணம் இருந்தது
>>
>> இப்படி எத்தனையோ
>> அது அந்தக் காலம் பொற்காலம்
>> இன்றோ அத்தனையும் போர்க்கோலம் தான்
>>
>>
>> ச கம்பராமன்
>> 10 06 13
>>
>>

இர்விங்க் வேலஸ் எழுதிய PRIZE நாவலில் நோபல் பரிசு பற்றிய தகவல்கள் ஏராளம். அதனாலும் அந்த நாவல் வெற்றி பெற்றது.= psr

மிகவும் அருமையான மதிப்புரை! இந்த ‘மஞ்சத் தண்ணி’ சிறுகதைத்தொகுப்பை எங்களது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பரமக்குடி கிளை 31.05.2013 அன்று நடத்திய வெளியீட்டு விழாவில் வெளியிட்டு மிகச் சிறப்பான மதிப்புரைகளையும் பாராட்டுக்களையும் அளித்துச் சிறப்பித்தது. (பார்க்க-தினமலர் 08.06.2013- பக்கம்.13-இராமநாதபுரம்,சிவகங்கை.)
அ.ஜோசப்,பரமக்குடி.

மிகச் சிறந்த எழுத்தாளர் திரு சொக்கன் அவர்கள் பார்வைக்கு எனது ‘மஞ்சத் தண்ணி’ சிறுகதை வந்தது கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.எனது மைந்தர் ஜெ. உமாமகேஸ்வரன் மூலம் அறிந்து
11-6-13 அன்றே பார்த்துவிட்டேன். விரிவான பதில் எழுதும் ஆவலால் தாமதித்து விட்டதற்காக சொக்கன் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
பிஎஸ் என் எல்லில் டிஜிஎம் ஆக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி (மதுரை)
‘என் பணிக்கால போராட்டங்கள்’ என்று ஒரு நூல் எழுதியுள்ளார். 1996 ல்
ஜுனியர் டெலிகாம் ஆபிஸராகப் பணியேற்றேன். ஐந்து வருடத்துக்கு மேலாக தொலைபேசி கேட்டுக் காத்திருப்போருக்குத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2002 வாக்கில் கேட்டவுடன் தொலைபேசி என்ற வேகத்தில் செயல் பட்டது பி எஸ் என் எல். பெங்களூரில் மகன் வீட்டில் தங்கியபோது சொக்கன் அவர்கள் சொல்வது போல் பி எஸ் என் எல் சம்பந்தமாய் நாவல் எழுதும் எண்ணமும் தலை தூக்கியது. மனம் இப்போது அது பற்றி அசை போடத் தொடங்கி விட்டது, கடமையில் மூழ்கும் மனம் காலத்தைக் குறித்து வைக்கச் சிலபோது தவறிவிடுகிறது. அண்மையில் திரு தி.க.சி அவர்களுக்குத் துணையாய் அமைந்து, அவரை திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் மக்கள் சிந்தனைப் பேரவையின் தொடக்க விழாவுக்கு ஈரோட்டுக்கு அழைத்து வந்த குள்ளக்காளிபாளையம் கே. பாலசுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்தேன். அவர் 6-10-2009 முதல்
28-1-2013 வரை தி.க.சி அவர்களுடன் இடையறா கடிதத் தொடர்பில்
இருந்துள்ளார். தி.க.சி அவர்களும் அவருக்குத் தொடர்ந்து பதில் எழுதியுள்ளார். இக்கடிதத் தொடர்புகள் ‘நிழல் விடுத்து நிஜத்திற்கு’ என்ற
நூலாக கே. பாலசுப்பிரமணியம் அவர்களால் வெளியிடப் பட்டுள்ளது.
நான் இப்போது கே.பாலசுப்பிரமணியம் அவர்களோடு 14-7-13 முதல்
அவர்களோடு கடிதத் தொடர்பில் இருக்கிறேன். அவரும் தொடர்ந்து எனக்கு எழுதுகிறார். இப்படி ஒரு கால ஆவணம் பின்னால் திரும்பிப் பார்ப்பதற்குச் சரியாக உதவும் என நினைக்கிறேன்.
எனது கதைகள் fiction ஆக இருப்பினும் கிட்டத்தட்ட ஒரு
non fiction போல் தொனிக்கிறது என்றும்,கதைகளுக்கூடே ஒரு வித்தியாசமான ஒரு முத்து தெரிகிறதென்றும், சுமார் 15 நிமிடங்களில்
வாசிக்கக் கூடிய இரண்டே கதைகளின் மூலம் தனக்குக் கண் திறந்தமாதிரி ஓர் உணர்வு ஏற்பட்டதென்றும் பாராட்டும் சொக்கன் அவர்களுக்கு என்
பணிவான வணக்கங்கள். பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் என் புத்தகம் வாங்கியவுடனே முதல் கதையைப் படித்து உரை நல்கியும் அதை இங்கு
பதிவு செய்தவருமான திரு அ.ஜோஸப் அவர்களுக்கும் என் நன்றி.

விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி ஐயா! தன்யனானேன்!

மிகவும் நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,750 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2013
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
%d bloggers like this: