மனம் போன போக்கில்

செம்பட்டைக்குக் கல்யாணம்

Posted on: September 21, 2011

நேற்று இணையத்தில் ஒரு திரைப்பட விமர்சனம் வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி: ‘படத்தில் சில நிமிடங்களே வருகிற சின்னச் சின்னக் கதாபாத்திரங்களைக்கூட இயக்குனர் கவனித்துச் செதுக்கியிருக்கிறார்.’

இதைப் படித்தபோது (வழக்கம்போல்) எனக்கு ஒரு பாட்டுதான் நினைவுக்கு வந்தது: ’அன்னக்கிளி’ புகழ் தேவராஜ் – மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘வெத்தல வெத்தல வெத்தலயோ’!

மிஞ்சிப்போனால் ஆறு நிமிடம்மட்டுமே ஒலிக்கும் பாடல் இது. ஆனால் அதற்குள் ஒரு கிராமத்தின் குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பார்த்துவிடமுடியும்.

அந்தக் கிராமத்தின் பெயர் வண்டிச்சோலை. அங்கே வசிக்கும் செம்பட்டை என்பவனுக்குக் கல்யாணம். அதைப்பற்றி ஊரில் உள்ளவர்களுக்குச் சொல்லியபடி பாடிச் செல்கிறான்.

பொதுவாக திரையிசையில் மெலடிக்குதான் மரியாதை அதிகம். கொஞ்சம் வேகமான தாளக்கட்டோடு வருகிற பாடல்களெல்லாம் ரசிக்கப்படும், விரைவில் மறக்கவும் படும்.

ஆனால் இந்தப் பாட்டு அப்படியில்லை. மேலோட்டமாகப் பார்க்கும்போது வெறும் துள்ளாட்டப் பாடலாகத் தெரிந்தாலும், வெளியாகி முப்பது வருடங்கள் கடந்து இன்றும் அதே துள்ளலுடன் கேட்கப்படுவதே இதன் தரத்துக்குச் சாட்சி.

’வெத்தல வெத்தல வெத்தலையோ’ என்று தொடங்கும் பல்லவியில் ஒரு குழந்தைக் குதூகலத்தைக் கொண்டுவருகிறார் மலேசியா வாசுதேவன். பின்னர் சரணங்களில் இது இன்னும் authenticஆக ஒலிக்கிறது (‘ச்சொன்னாங்க ச்சொன்னாங்க’). இந்தப் பாடலில் ஏகப்பட்ட பரத நாட்டிய பாவனைகளோடு நடித்திருக்கும் சிவக்குமாருக்கு இவருடைய குரல் மிகக் கச்சிதமாகப் பொருந்திப்போகும்.

சிவக்குமாரைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும். இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் கமல், மோகன், ராமராஜனுக்குதான் சென்றிருக்கின்றன என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்பாக அந்த அதிர்ஷ்டம் சிவக்குமாருக்கு அடித்தது. தன்னுடைய முதல் பட நாயகன் என்பதாலோ என்னவோ, இவருக்குமட்டும் ராஜா குறை வைத்ததே  இல்லை. சாம்பிள் வேண்டுமென்றால், ’மனிதனின் மறுபக்கம்’ படத்தில் வருகிற  ‘ஊமை நெஞ்சின் சொந்தம்’ அல்லது ‘கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன?’ பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்.

நிற்க. சிவக்குமார் புராணம் போதும், செம்பட்டைக்குத் திரும்புவோம்.

’வெத்தல’ப் பாட்டில் ’அரை டவுசர்’ சகிதம் ஊரைச் சுற்றிவரும் செம்பட்டை சந்திக்கும் முக்கியமான பாத்திரங்கள்: ‘ஏலே சோதாப்பயலே, ஜோரா நடந்து வாடா முன்னாலே’ என்றும் ‘கோணவாயா’ என்றும் அவனால் விளிக்கப்படுகிற உதவிப்பையன்கள் இருவர், கிராமவாசிகளுக்கு இட்லி விற்கும் பாட்டி, மோர்ப்பந்தல் தாத்தா, கள்ளுக்கடை வாசலில் மஸாஜ் செய்துகொண்டபடி சின்னப் பானையில் போதை ஏற்றிக்கொள்ளும் உள்ளூர் பயில்வான்.

பாட்டியிடம் இட்லி (ஓர் அணாவுக்கு நான்கு) வாங்கித் தின்னும் சின்னப் பையன் ஒருவன் ‘இட்லி வரவர எளைச்சுகிட்டே வருதே’ என்று குற்றம் சாட்டுகிறான். அதற்குப் பாட்டி சொல்லும் பதில்: ‘ரெண்டணாவுக்கு ஒரு இட்லி வாங்கித் தின்ற காலம் வரும்டா’!.

இப்போது இலையில் இட்லி பரிமாறும் பாட்டிக் கடைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுக்குச் சரவண பவன் / அடையாறு ஆனந்த பவன் விலை நிலவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பாட்டியின் கடையில் செம்பட்டை இட்லி சாப்பிடுவதில்லை. திருமண விவரத்தைச் சொல்கிறான். ‘சேலத்துக்குப் போறேன், ஏதாவது வாங்கிவரணுமா?’ என்று கேட்டு ஒரு மினி மளிகை லிஸ்டை வாங்கிக்கொள்கிறான். இதுவும் கிராமத்துப் பழக்கம்தான். என்னைமாதிரி பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்குப் புரியாது.

செம்பட்டையிடம் பத்தமடைப் பாயும் ஏலக்காயும் வாங்கிவரச் சொல்லும் பாட்டி கடைசியாகக் குரலை இறக்கி ‘ஒரு மூக்குப்பொடி டப்பி’யும் வாங்கிவரச் சொல்கிறாள். இதில் ரகசியம் ஏன் என்பது நம் ஊகத்துக்கு விடப்படுகிறது.

தவிர, பாட்டி சொல்வது ‘டப்பா’ இல்லை, ‘டப்பி’. ஹிந்தியிலிருந்து வந்த ‘டப்பா’ இப்படி மாறியதற்குக் காரணம் புரியவில்லை. இப்போது யாரும் இதைப் புழங்குகிறார்களா என்பதும் தெரியவில்லை.

வசனக் காட்சிகள் முடிந்ததும், Raja takes over. கம்பன் வீட்டுக் கட்டுத்தறி, சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு வரிசையில் ஒரு மளிகை லிஸ்டை மெட்டில் உட்காரவைத்து, அதையும் ரசிக்கும்படி செய்தது ராஜா – கங்கை அமரன் (பாடலாசிரியர் அவர்தான் என்று நினைவு) இருவரின் மேதைமைதான்.

செம்பட்டை அடுத்ததாகச் சந்திக்கும் தாத்தா ஒரு ஜொள்ளர். வயசுப்பெண்ணிடம் ‘என்னைக் கட்டிக்கறியா?’ என்று கேட்டு அறை வாங்குகிறார். அதைப் பார்த்துச் சிரிப்பதற்காக ஒரு வெட்டிக் கூட்டம் அங்கே உட்கார்ந்திருக்கிறது.

அவரிடம் போய் செம்பட்டை தன்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்கிறான். ‘உன் பொண்டாட்டிக்கு மொதோ ராத்திரியில மொதோ ஆசிர்வாதம் நான்தான் செய்வேன். சம்மதமா?’ என்கிறார் சபலிஸ்ட் தாத்தா. விவரம் புரியாத செம்பட்டை ‘ஆகட்டுமுங்க’ என்கிறான். வெட்டிக் கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கிறது. இவன் திருதிருவென்று விழித்தபடி விலகிச் செல்கிறான்.

அப்போதும் அவனுக்கு விஷயம் புரியவில்லை. ‘(மனைவியை அழைத்துக்கொண்டு) நெசமாக வருவேங்க, வயசான மனுஷங்க, வாயார மனசார வாழ்த்தணும் நீங்க’ என்று பாடியபடி செல்கிறான்.

அடுத்து வரும் பயில்வானும் ஒரு சுவாரஸ்யமான பாத்திரம்தான். அவருக்கு ஏற்கெனவே செம்பட்டையின் திருமணத்தைப்பற்றித் தெரிந்திருக்கிறது. அவனிடமே முந்திரியும் பாதாமும் பிஸ்தாவும் திராட்சையும் வாங்கிவரச்சொல்லிப் பரிசளிக்கிறார். ‘இதையெல்லாம் சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கோ’ என்கிறார்.

வழக்கம்போல், செம்பட்டை விழிக்கிறான். ‘எதுக்குங்க? நான் என்ன குஸ்தியா பிடிக்கப்போறேன்?’ என்கிறான்.

’குஸ்தி ரொம்ப சுலபம். இது அப்படியில்லை’ என்று கண்ணடிக்கிறார் பயில்வான். செம்பட்டை இதையும் பாடியபடி சேலத்தை நோக்கி நடக்கிறான்.

சேலம்? பின்னாளில் ‘செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே, சேல உடுத்தத் தயங்கறியே’ என்று பாடி அருளிய மிஸ்டர் சின்ராசுவின் வண்டிச்சோலைதானா இது? சேலம் அருகே எங்கே இருக்கிறது? அடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது விசாரிக்கவேண்டும்.

இன்னொரு சந்தேகம், பயில்வான் ’ஏழு தோலானுக்கு பாதாமும் பிஸ்தாவும்’ என்கிறாரே. அதென்ன தோலான்? எடை அளவா? அல்லது அந்தக் காலக் கரன்ஸியா? (Update: ’தோலா’ புதிருக்கு விடை இங்கே: http://minnalvarigal.blogspot.com/2011/09/blog-post.html )

நிறைவாக, அதிமுக்கியமான கேள்வி, செம்பட்டைக்குக் கல்யாணம் ஆச்சா, இல்லையா? அந்த மோர்ப்பந்தல் தாத்தாவுக்கு?

***

என். சொக்கன் …

21 09 2011

14 Responses to "செம்பட்டைக்குக் கல்யாணம்"

எடை அளவாகத்தான் இருக்க முடியும்.. தங்கத்தை நாம் பவுன் (8 கிராம்) கணக்கில் சொல்வதுபோல் வடக்கிலே தோலா(10 கிராம்) கணக்கில்தான்ன் சொல்வார்கள். அதை ஒட்டிய வார்த்தையாக இருக்கலாம்.

டப்பி சகஜமாக உபயோகிக்கும் வார்த்தைதான். பொதுவாக டப்பாவில் குட்டி சைஸ் டப்பி. எப்பொழுதுமே பொடி டப்பிதான்.

மிக நன்றாக சுவை பட கூறியுள்ளீர்கள். நன்றி. ஒரு தொலாம் ரெண்டு தொலாம் என்று ஊர்பக்கம் சிறுவயதில் கேள்விபட்டிருக்கிறேன்.

அசத்தல் சார். இந்த படம் டவுன்லோட் லிங்க் இருந்தா கூட கொடுங்க.

டப்பி ஜெயஸ்ரீ அவர்கள் சொல்வது போல நிறைய பேர் சொல்வது தான்.

நல்ல பதிவு.
தோலா ஒரு எடை அளவு.
வாழ்த்துக்கள்.

I remember you had quizzed the tweeps on this song, and had similar feelings about the song. But not such an organized flow of thought. Enjoyed reading this post as much as I enjoyed watching it 🙂

நேத்து நெனச்சிட்டிருந்தேன். இப்பல்லாம் மெல்லிசைன்னா மெல்லப் பாடுறாங்க. துள்ளிசைன்னா கூச்சல்னு மட்டும் ஆயிருச்சே. இந்த மெ.மன்னரும் இ.ஞானியும் ரெண்டுக்கும் நடுவுல நெறையப் பாட்டு குடுத்திருக்காங்களேன்னு. நீங்களும் அதையே நெனச்சிருக்கீங்க 🙂

எல்லாவிதமான பாடல்களும் வர்ர மாதிரி கதையம்சங்கள் பொதுவாவே இப்பக் குறைவு. இந்தப்படத்துல எல்லாம் உண்டு. இது கன்னடப்படத்தின் தழுவல். ஆனாலும் நம்மூருக்கும் பொருந்தி வரும் கதை. உண்மையிலேயே கன்னட உலகம் பெருமைப்பட வேண்டிய லோகேஷ் நடித்திருக்கிறார். இப்போது அவர் இல்லை. நடுவயதிலேயே நடுவன் கொண்டுபோய்விட்டான்

பலம், சேர், வீசை, தோலா என்பதெல்லாம் பழங்கால அளவை முறைகள் என்று என் சித்தப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். தற்கால அளவுமுறைகளின் படி இவையெல்லாம் எவ்வளவு என்பதை கேட்டு எழுதுகிறேன். நல்ல கட்டுரை சொக்கன் சார்!

தோலான் – எடை அளவுதான். 7 தோலா என்றால் 80 கிராம் 🙂

// செம்பட்டைக்கு கல்யாணம் ஆச்சா \\ அட ரோசாப்பு ரவிக்கைகாரியையே தெரியாதா உங்களுக்கு? படம் பாருங்க. வினு சக்ரவர்த்திதான் கதைன்னு நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் வரும் எல்லா பாடல்களும் நாட்டுபுற சாயல் கொண்ட மெட்டுகள்தான். ‘உச்சி வகிடெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி’ கேட்டிருக்கீங்களா? அது கதையோட அடுத்தபகுதியை சொல்லும்.

ஏற்காடு போகும் வழியில்(அயோத்தியாப்பட்டிணம்வழி-மலையின் பின்புறம்ஏற வேண்டும்) உள்ளது அந்த கிராமம்.அடுத்தமுறை சேலம் வரும்போது சொல்லுங்கள் போகலாம். 🙂

Vethala Vethala
Manchana Paatheengala(Annakili)
Manja Kulichi(16 vayathinilae)
Namma Veetu Kalyanam(Annakili)
Arisi Kutham Akka magalae(Man Vaasanai)
Maanguyilae Poonguyilae(Karakaatakaran)
Entha songs ellam Ilayaraja sir Patent panni vaikalaam, even though these are all Karamathu Kizhavi Paadiya metukkal(Ethu Ilayaraja Vaimozhi seithe) endralum, entha metukalai Raja sir kai aanda vitham, paarampariya isai evaiellam miga unnatham, Vataara vazhakathai pathivu seithirrukirathu.
Engal Karamathil, Thola (11gms), Arika kassu patri ellam kelvi patuirrukken. Athu poola, entha padal theme pathivu seiya padaveendiya ondru! Invitation illatha antha kalathil Vethala paaka koduthu azhaipathu vazhakam.

When I was recently researching for a quiz question, I came across the unit tola – http://en.wikipedia.org/wiki/Tola_(unit). Nice post!

நல்ல கிராமியப் படம். படத்தில் ‘என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்… ஏன் கேட்கிறது’ என்று ஒரு அருமையான மெலடியும் உண்டு. கேட்டதுண்டா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 609,224 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

September 2011
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
%d bloggers like this: