முகமும் அகமும்
Posted March 14, 2015
on:- In: Students | Uncategorized | Women | Youth
- Leave a Comment
நண்பர் வைப்ரண்ட் சுப்புவுடன் இன்னொரு கல்லூரிக்குச் சென்று பேசி வந்தேன்.
மற்ற கல்லூரிகளுக்கும் இதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம், இங்கே பயில்பவர்கள் பலரும் வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருப்பவர்கள். குறைந்தபட்சம் 40% பேரின் குடும்பத்தில் முதன்முதலாகக் கல்லூரிக்குச் செல்பவர்களே இவர்கள்தான், அதில் பெரும்பாலானோர் வீட்டில் முதன்முதலாக எழுதப் படிக்கக் கற்பவர்களே இவர்கள்தான்.
முக்கியமாக, எல்லாரும் பெண்கள். பலர் ஏழைப் பெண்கள், மலைவாழ் குடும்பத்தினர், சிலர் திருமணமானவர்கள், ஒரு கர்ப்பிணிப் பெண்கூட இருந்தார். இவர்கள் MBA படிக்கக் கடந்துவந்திருக்கக்கூடிய மன, நிஜத்தடைகளைக் கற்பனை செய்வது சுலபம்தான்.
இதற்குமுன் சுப்பு அவர்களுடன் நான் சென்று பேசிய கல்லூரிகள் அனைத்திலும் ஒரு பொதுமைத்தன்மையைப் பார்த்திருக்கிறேன்: சுமார் 5% பேர் என்னுடைய (அல்லது பேசுபவர் யாரோ அவருடைய) பேச்சில் ஆர்வம் காட்டுவார்கள். 70% பேர் ஆர்வமும் இல்லாமல் அலட்சியமும் இல்லாமல் அமர்ந்திருப்பார்கள், மீதமுள்ள 25% பேர் ‘நீ யார் சொல்ல? நான் யார் கேட்க?’ என்று இருப்பார்கள்.
ஆனால், அவையனைத்தும் தனியார் கல்லூரிகள். பெற்றோர் ஃபீஸ் கட்ட, சிலர் பொறுப்புடன் படிப்பதும், சிலர் பொறுப்பை அலட்சியப்படுத்துவதும், பலர் நதியின் போக்கில் செல்வதும் இயல்புதான்.
இந்தக் கல்லூரியில், அந்த வகைபாடே இல்லை. கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் பேசினேன். அனைத்துப் பெண்களும் மிகுந்த அக்கறையோடு கேட்டார்கள், குறிப்பு எடுத்துக்கொண்டார்கள். அந்த வயதுக்கே உரிய விளையாட்டுகளும், அவ்வப்போது Break எதிர்பார்ப்பதும், தீனி, துண்டுச்சீட்டுப் பரிமாற்றங்களும் இருந்தன. ஆனால் ஒருவர்கூட அந்நிகழ்ச்சியை அலட்சியமாகப் பார்த்ததுபோல் தெரியவில்லை.
அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்காதீர்கள். இத்தனை ஆண்டுகளில் பல அலுவலகங்களிலும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலுமாகக் குறைந்தபட்சம் 5000 பேருக்கு வகுப்பெடுத்திருக்கிறேன். ”மாணவர்”களின் முகமொழி எனக்குத் தெரியும் 🙂
இந்த வகுப்பில், அந்தப் பெண்களிடம் நிஜமான அக்கறை தெரிந்தது. அதற்குக் காரணம் என் வாக்குவன்மை அல்ல, இவன் சொல்லப்போகும் விஷயம் நமக்கு ஏதாவது ஒருவிதத்தில் பயன்படுமா என்கிற எதிர்பார்ப்புதான். நல்லது எங்கிருந்து வந்தாலும் அதை உறிஞ்சிக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தார்கள். வகுப்புக்கு மேற்கத்திய உடையும் இதில்தான் பேசவேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட ஆங்கிலமும் அங்கே கற்றுத்தரப்பட்ட பிற ’Executive’ வழிமுறைகளும் அவர்களுக்கு இன்னும் அந்நியமாகவே இருப்பதுபோல் தோன்றியது. ஆனால் அவற்றினிடையே தங்களால் இயல்பாக எதைச் செய்யமுடியும் என்று அவர்கள் புரிந்துவைத்திருப்பது அவர்களுடைய பேச்சில் தெரிந்தது. கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சட்டென்று பதில் வராவிட்டாலும், தயக்கத்துக்குப்பின் வந்த பதில்கள், சிந்தனைகள் அற்புதமாக இருந்தன.
அந்த அக்கறை, இன்னும் சில மாதங்களில் அவர்கள் சந்திக்கப்போகும் ‘வேலைப் பந்தய’த்திலும் வாழ்க்கைப் பந்தயத்திலும் வெற்றியடைய அவர்களுக்கு உதவட்டும். ஆமென்!
***
என். சொக்கன் …
14 03 2015
Leave a Reply