மனம் போன போக்கில்

தோல்வியுற்றோர்

Posted on: April 17, 2016

ஐடி நிறுவனங்களின் ‘திடீர் டிஸ்மிஸ்’ கலாசாரத்தால் பாதிக்கப்பட்டோரை எண்ணி வருந்தி இணையத்தில் பல பதிவுகளைப்பார்க்கிறேன். அதுபற்றிச் சில சொற்கள்.

என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவரைத் தோல்வியாளர்களாக நினைத்துப் பரிதாபப்பட்டிருக்கிறேன். அநேகமாக எல்லாருக்கும் இப்படிதான் அமைந்திருக்கும் என்பது என் ஊகம்.

ஆரம்பப்பள்ளியில் என்னோடு படித்த ஒருவனுக்கு (மிக நல்ல நண்பன்!) சுத்தமாகப் படிப்பே வரவில்லை. ஆனா ஆவன்னாகூட எழுதவரவில்லை என்பதால் அவனை வலுக்கட்டாயமாகப் பள்ளியிலிருந்து நிறுத்தினார்கள். பட்டறையொன்றில் சேர்த்துவிட்டார்கள்.

ஆனா ஆவன்னா எழுதவராத ஒருவன் இருக்க இயலுமா என்று ரொம்ப வியந்தேன். நாங்கள் பள்ளிக்குச் செல்லும்போது அழுக்குச்சட்டையோடு வேலைக்குச்செல்கிற அவன் நிலைமை மிக மோசம் என்று நினைத்தேன். (காரணம், எனக்கு ஆனா ஆவன்னா எழுதவந்ததுதான்!)

பள்ளியை முடிக்கும்நேரத்தில் மருத்துவம் சேர விரும்பினேன், என் மதிப்பெண் குறைவு, ஆகவே, இடம் கிடைக்கவில்லை. சுற்றியுள்ள அனைவருடைய பார்வையும் என்னைக் கூசவைத்தது, முடங்கிப்போனேன்.

அதன்பிறகு, மனத்தைத் தேற்றிக்கொண்டு பொறியியல் சேரத் தீர்மானித்தேன். அந்தக் கணமே என் மனநிலை மாறியது, என்னைச்சுற்றி நல்ல மதிப்பெண் எடுக்காதவர்கள், அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்காதவர்களைத் தோல்வியடைந்தவர்கள் என்று கருதினேன், அவர்களுக்காக வருந்தினேன். அந்த வயதுக்குரிய முதிர்ச்சிநிலையில், அதாவது, முதிர்ச்சியற்றநிலையில் கொஞ்சம் கர்வப்பட்டிருக்கவும்கூடும். அப்போது என்னுடன் படித்து MBBS சேர்ந்த சில நண்பர்கள் என்னை அவ்வாறே எண்ணியிருப்பர்.

கல்லூரியிலும் கிட்டத்தட்ட இதேமாதிரி கதை, நான் நினைத்த துறை (வேறென்ன, கணினித்துறைதான்) எனக்குக் கிடைக்கவில்லை. என்னைத் தோல்வியடைந்தவனாகக் கருதிக்கொண்டேன்.

அதன்பிறகு, கிடைத்ததைப் படித்தேன், கேம்பஸ் இன்டர்வ்யூவில் வேலை கிடைத்தது. ஆகவே, அவ்வாறு கிடைக்காதவர்கள், அதனால் சிறு வேலைகளில் சேர்ந்தவர்கள், விருப்பமில்லாமல் மேற்படிப்புக்குச் சென்றவர்கள், கல்லூரியை முடித்தபிறகும் வேலை தேடிக்கொண்டிருந்தவர்களைத் தோல்வியடைந்தவர்களாக நினைத்தேன்.

வேலைக்குச் சேர்ந்தபிறகு, என் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்தது. என் நெருங்கிய நண்பனொருவனுக்கு வேலை போனது. அவன் அறையில் உட்கார்ந்து பிழியப்பிழிய அழுதது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அப்போது, அவனைத் தோல்வியடைந்தவனாகக் கருதினேன்.

அதன்பிறகு, மூன்று நிறுவனங்களில் என்னுடன் வேலைபார்க்கிற சிலர் (இவர்களில் ஓரிருவர் எனக்குக்கீழேயே வேலைபார்த்தவர்கள்) வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சிலருக்குத் திறமைக்குறைவு, வேறு சிலர் தங்கள் பொறுப்பில் பொருந்தவில்லை, காரணங்கள் பல, ஆனால் திடுமென்று செய்த வேலையிலிருந்து அனுப்பப்பட்டால், பிறர்பார்வையில் அவர்கள் தோல்வியடைந்தவர்களாகதானே கருதப்படுவார்கள்?

இப்படி வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர் என்னை நேரில் சந்தித்து, ‘என் சம்பளத்தையாவது குறைச்சுக்கோங்க, வெளியே அனுப்பிடாதீங்க’ என்று கெஞ்சிய நிகழ்வுண்டு. என்னைவிட மூத்த ஒருவர் அப்படிக் கேட்கும்போது, அதற்கு நம்மால் எதுவும் செய்ய இயலாது என உணரும்போது உண்டாகும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல.

இப்படி இன்னும் ஏகப்பட்ட அனுபவங்கள், நாம் (சற்றே) உயர்ந்தநிலையில் இருப்பதான பாவனையில் பலரைத் தோல்வியாளர்களாகக் கருதிவிடுகிறோம், நமக்குமேலே இருக்கிறவர்களும் நம்மை அப்படிதான் நினைத்திருப்பார்கள்.

ஆனால் இப்போது, ஆனா ஆவன்னா வராத என் நண்பனில் ஆரம்பித்து, சிறு கல்லூரிகளில் சேர்ந்தவர்கள், சிறு வேலைக்குப் போனவர்கள், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என, நான் (ஒருகணமேனும்) தோல்வியாளர்களாகக் கருதிய பலருடனும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன், அவர்கள் எல்லாரும் மிக நன்றாக, மிக மகிழ்ச்சியாகதான் இருக்கிறார்கள், அவர்களைத் தோல்வியாளர்களாக நானோ பிறரோ எண்ணுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இதனால், ‘திடீர் டிஸ்மிஸ்’கள் நியாயமாகிவிடாது. அது தனியே பேசவேண்டிய ஒரு விஷயம். நான் சொல்லவருவது, சற்றே விலகி நின்று பார்க்கும்போது, இதுபோன்ற ‘தோல்வி’கள் உண்மையில் சிறு விலகல்களாகமட்டுமே அமைகின்றன, அனைத்தையுமே வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் சறுக்கல்களாக எண்ணிக்கொண்டு வாடியிருப்பது புத்திசாலித்தனமாகாது.

Life is unfair, ஏற்றுக்கொண்டு முன்னே போகவேண்டியதுதான்!

***

என். சொக்கன் …

17 04 2016

5 Responses to "தோல்வியுற்றோர்"

ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடமே. அப்படித்தான் நான் பார்க்கிறேன். சிறியோர் பெரியோர் இங்கே எவரும் இல்லை. இன்று ஒருவருக்கு நடப்பது நாளை நமக்கும் நடக்கும், நமக்கு இன்று நடப்பது நாளை மற்றொருவருக்கும் நடக்கும் :-}

amas32

“தோல்வியே வெற்றியின் படிக்கட்டு” எனும் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகிறது. அனைத்தும் சேர்ந்தது தான் வாழ்க்கை எனும் எண்ணத்தில் நாம் முன்னேற வேண்டுமே அன்றி நடந்த சிறு சறுக்கல்களுக்கு வருந்தி, நம் முயற்சியில் பின் வாங்க கூடாது.

அருமையாகக் கூறியுள்ளீர்கள்.

a beautiful analysis ji

வெற்றி அடைந்தவர்களுடைய கடந்த கால தோல்விகளை பற்றி /அவர்களுடைய உழைப்பு பற்றி சாதாரணமாக யாரும் பேசுவதே இல்லை .பள்ளியிலும் ,கல்லூரியிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் தான் வெற்றி கொண்டவர்கள் எனின் ,உலகம் அவர்களால் மட்டுமே நடக்கவில்லை.சமூகத்தில், தோல்விகள் நம்மை பலப்படுத்தும் சக்திகளாகஅறியப்படவேண்டும் .ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் இருக்கும் பல தோல்விகள் /முயற்சிகள் வெளிச்சம் போட்டு காட்டப்பட வேண்டும் .
தோல்வி அடையும் போது,பயிற்சியும் ,முயற்சியும் போறாது என்றும் துறையை மாற்றி ,ஆர்வமுள்ள துறையை முயற்சித்தலும் நன்று !

Leave a comment

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 636,590 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2016
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930