கார்த்திகேயன் என்கிற அந்தச் சிறுவனை (அல்லது இளைஞனை) நான் இன்றுவரை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் என்னுடைய கல்லூரி நாள்களில் பல மணி நேரம் நான் அவனாக இருந்திருக்கிறேன்.
குழப்புகிறதா? ‘ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே’க்குப் போய் விளக்குகிறேன்.
பன்னிரண்டாம் வகுப்பை முடித்து நான் கல்லூரியில் சேர்ந்தபோது, அட்மிஷனுக்காக அப்பா என்னுடன் வந்தார். மறுநாள் தொடங்கி எனக்கு ஹாஸ்டல் வாசம் என்பதால், பெட்டி, படுக்கைகள் எல்லாம் மும்முரமாகக் கட்டப்பட்டன.
அன்று மாலை, அப்பா அலுவலகத்திலிருந்து திரும்பியபோது அவர் கையில் இரண்டு துண்டுச் சீட்டுகள். அவற்றை மேஜைமேல் கவனமாக வைத்துவிட்டு என்னை அழைத்தார்.
நான் அந்தச் சீட்டுகளை ஆவலுடன் பார்த்தேன், ‘இது என்னதுப்பா?’
‘பஸ் பாஸ்’ என்றார் அப்பா, ஒரு கைக்குழந்தையைத் தூக்கும் லாவகத்துடன் அந்தச் சீட்டுகளை வாஞ்சையுடன் எடுத்து என்னிடம் கொடுத்தார், ‘கசக்கிடாதே, ஜாக்கிரதையாப் பாரு.
அப்போது எனக்கு ‘பஸ் பாஸ்’ என்ற வார்த்தையின் அர்த்தமே புரிந்திருக்கவில்லை, அப்பாவைக் குழப்பத்துடன் பார்த்தேன்.
அவர் எனக்குப் பொறுமையாக விளக்கிச் சொன்னார், ‘நாளைக்கு நீயும் நானும் கோயம்பத்தூர் போறோம்ல? அதுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவேணாமா?’
’ஆமா, எடுக்கணும்’
‘இந்த பஸ் பாஸ் நம்ம கையில இருந்தா, நாம டிக்கெட் எடுக்கவேண்டியதில்லை, இலவசமாப் பயணம் செய்யலாம்’ என்றபோது அப்பா முகத்தில் அளவற்ற பெருமிதம். குத்துமதிப்பாக நூறு ரூபாயோ என்னவோ மிச்சப்படுத்திவிட்ட திருப்தி.
எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. நிஜமாகவே இந்தப் பாஸைக் காண்பித்தால் பஸ்ஸில் பயணச் சீட்டு வாங்கவேண்டியதில்லையா? அந்தக் காகிதம் எனக்கு ஒரு மந்திரத் தகடுபோல் தோன்றியது.
இதனால், முன்பைவிட அதிக ஆர்வத்துடன் அந்தச் சீட்டைக் கவனிக்கத் தொடங்கினேன். உச்சியில் அரசாங்கப் போக்குவரத்துக் கழக இலச்சினை. அதற்குக் கீழே சிவப்பு மையில் ’கருப்பசாமி’ என்று எழுதி அடிக்கோடிட்டிருந்தது.
கருப்பசாமியா? யார் அது?
அப்பாவிடம் கேட்டபோது அவர் சிரித்தார், ‘என் ஃப்ரெண்ட்தான், கவர்ன்மென்ட் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்ல கண்டக்டரா இருக்கார், அவர்தான் இந்த பாஸை நமக்கு வாங்கிக் கொடுத்தது’
அவசரமாக இன்னொரு சீட்டைப் பார்த்தேன். அதில் அதே சிவப்பு மை கொண்டு ‘கார்த்திகேயன்’ என்று எழுதியிருந்தது.
‘இந்தக் கார்த்திகேயனும் உங்க ஃப்ரெண்டாப்பா?’ அப்பாவியாகக் கேட்டேன்.
‘மக்கு’ என்று தலையில் குட்டினார் அவர், ‘ஒழுங்காப் படி’
அவர் காண்பித்த இடத்தில் தொடர்ந்து படித்தேன், ‘கார்த்திகேயன்’ என்கிற பெயருக்குக் கீழே, ‘வயது: 17’ என்று எழுதியிருந்தது.
‘கார்த்திகேயன் கருப்பசாமியோட பையன்’ என்று அறிவித்தார் அப்பா, ‘அதுதான் உன்னோட பாஸ், நாளைக்கு பஸ்ல வரும்போது யாராவது கேட்டா, என் பேர் கார்த்திகேயன்னு சொல்லணும், ஏதாச்சும் உளறிக்கொட்டி அசிங்கப்படுத்திடாதே?’
எது அசிங்கம்? திருட்டுப் பெயரில் பயணம் செய்வதா? அல்லது, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்வதா?
அந்த வயதில் அப்பாவிடம் அப்படிக் கேட்கிற தைரியம் வந்திருக்கவில்லை. அவர் சொல்கிறார் என்றால் அது சரியாகதான் இருக்கும் என்று ஒரு குருட்டு நம்பிக்கை.
ஆகவே, நான் அந்தக் கார்த்திகேயன்பற்றி அப்பாவிடம் எதுவும் பேசவில்லை. அவர் கொடுத்த இரண்டு சீட்டுகளையும் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
மறுநாள், அதிகாலையில் கிளம்பினோம். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து டிக்கெட் வாங்கும்வரை எனக்குப் படபடப்புதான், எந்த நேரத்தில் எதையாவது உளறி மாட்டிக்கொள்வேனோ என்று பயமாக இருந்தது. அதிகாலைக் குளிரையும் மீறி நான் பலமாக நடுங்கிக்கொண்டிருந்தேன்.
ஆனால், நான் பயந்ததுபோல் எதுவும் நடந்துவிடவில்லை. கண்டக்டர் அப்பாவின் பாஸை வாங்கிப் பார்த்தார், என்னையும் கவனித்தார், ‘உங்க பையனா?’ என்று கேட்டார், ‘இவன்தான் கார்த்திகேயனா?’ என்று விசாரிக்கவில்லை.
அப்பா முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் அமர்ந்திருந்தார். டிக்கெட்டுக்காக அவருடைய கை நீண்டிருந்தது.
’மத்தவங்களுக்கு டிக்கெட் போட்டுட்டு வர்றேன்’ என்றார் கண்டக்டர், எங்களுடைய இரண்டு பாஸ்களைக் குறுக்கே மடித்துத் தன்னுடைய அரைக் காகித அளவு டிக்கெட் புத்தகத்தின் மத்தியில் செருகிக்கொண்டார்.
அதைப் பார்த்த எனக்கு, பயம் அதிகமாகிவிட்டது. போச்சு, இந்த கண்டக்டர் நான் கார்த்திகேயன் இல்லை என்பதைக் கண்டுபிடித்துவிட்டார், பஸ் நேராக அடுத்த ஊர்க் காவல் நிலையத்துக்கு ஓடப்போகிறது, என்னைப் பிடித்து ஜெயிலில் போடப்போகிறார்கள்.
எனக்கிருந்த பதற்றத்தில் ஒரு துளிகூட அப்பாவுக்கு இல்லை. அவர் இதுபோல் ‘கருப்பசாமி’ பாஸில் நிறையப் பயணம் செய்திருப்பார்போல, கம்பீரமாகச் சாய்ந்து உட்கார்ந்து குமுதம் படித்துக்கொண்டிருந்தார்.
நான் பொய் சொல்லாத பையன் கிடையாது. அதுவரை அப்பாவிடமும் அம்மாவிடமும் அத்தையிடமும் எண்ணற்ற பொய்களைச் சொல்லி மாட்டிக்கொள்ளாமல் தப்பியிருக்கிறேன், மாட்டிக்கொண்டு அடி வாங்கியுமிருக்கிறேன்.
ஆனால் இந்தமுறை, அப்பாவுக்குத் தெரிந்து, அவருடைய வழிகாட்டுதலில் பொய் சொல்வது மிகவும் விநோதமான ஓர் அனுபவமாக இருந்தது. அப்பா செய்வது, நான் செய்வது தப்பில்லையா என்று தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருந்தது.
சுமார் அரை மணி நேரம் கழித்து, கண்டக்டர் எங்களிடம் வந்தார். இரண்டு டிக்கெட்களை அப்பா கையில் திணித்தார். நட்பாகப் புன்னகை செய்துவிட்டு மற்ற பயணிகளைக் கவனிக்கப் போய்விட்டார்.
’அவ்ளோதான், இதுக்குப்போய் பயந்தியே’ என்பதுபோல் அப்பா என்னைப் பார்த்தார், சிரித்தார். எனக்குச் சிரிப்பு வரவில்லை.
அந்தப் பேருந்து கோவை சென்று சேரும்வரை நான் பயந்துகொண்டுதான் இருந்தேன். பொய்ப் பெயரில் பாஸ் கொடுத்துவிட்டு இந்த அப்பாவால் எப்படி நிம்மதியாகக் கால் மேல் கால் போட்டு அமரமுடிகிறது?
ஒருவழியாக, நாங்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினோம். அப்போதும், எந்தப் பதற்றமும் இல்லாமல் அப்பா நிதானமாக நடந்தார்.
நல்லவேளையாக, எங்கள் கல்லூரிக்குச் செல்கிற ’70ம் நம்பர்’ மருத மலை டவுன் பஸ்ஸில் ‘பாஸ்’ செல்லாது. ஆகவே, நாங்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணம் செய்தோம். ரொம்ப நிம்மதியாக உணர்ந்தேன்.
அப்புறம், அப்பா என்னைக் கல்லூரியில் சேர்த்தார், விடுதியில் சேர்த்தார், பக்கெட், மக், தட்டு, தம்ளர், இன்னபிற சமாசாரங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, என் அழுகைக்கு நடுவே கிளம்பினார்.
அப்பா கிளம்பிப்போய் ரொம்ப நேரமானபிறகு எனக்கு அந்தச் சந்தேகம் வந்தது. அவர் ஊருக்குத் திரும்பியது இன்னொரு கருப்பசாமி பாஸிலா? அல்லது, இந்தமுறை காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருப்பாரா?
சீக்கிரத்திலேயே, அந்தப் புதிருக்கான விடை தெரிந்தது.
நான் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வாரம் கழித்து, ஆகஸ்ட் 15 சுதந்தர தின விடுமுறை. ’ஊருக்கு வர்றேன்ப்பா, உங்களையெல்லாம் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு’ என்று அப்பாவிடம் கெஞ்சினேன்.
அவர் உடனடியாக ‘ஓகே’ சொன்னது எனக்கு ஆச்சர்யம். சாதாரணமாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பஸ் செலவு, பயண அலுப்பு, படிப்பு கெட்டுப்போதல் போன்ற காரணங்களைச் சொல்லி மறுப்பதுதான் அவருடைய வழக்கம். ஏனோ, இந்தமுறை சட்டென்று சம்மதித்துவிட்டார்.
இரண்டு நாள் கழித்து, அப்பாவிடமிருந்து எனக்கு ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால், அதே ’பழைய கார்த்திகேயன்’ பஸ் பாஸ்!
அவ்வளவுதான். எனக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துவிட்டது. முன்பாவது, தப்புச் செய்து மாட்டிக்கொண்டால் காப்பாற்ற அப்பா இருந்தார், இப்போது தன்னந்தனியாக நான் இந்தப் பாஸை வைத்துக்கொண்டு பயணம் செய்யவேண்டும், நிச்சயமாக சிக்கிக்கொண்டுவிடுவேன் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது.
ஆனால், அப்பாவிடம் மறுக்கமுடியாது. என்னுடைய பயம், அவருக்கு எப்போதும் புரியாது.
சரி, அப்பாவுக்குத் தெரியாமல் இந்தப் பாஸைக் கிழித்துப் போட்டுவிட்டுக் காசு கொடுத்துப் பயணம் செய்தால் என்ன?
செய்யலாம். ஆனால் இத்தனை பெரிய பொய்யை, குற்றத்தைக் கட்டமைப்பதில் எனக்கு அனுபவம் குறைவு. ஆகவே, வீட்டுக்குச் சென்றதும் கண்டிப்பாக அப்பாவிடம் மாட்டிக்கொள்வேன். தவிர, என்னிடம் அப்போது அவ்வளவு காசு இல்லை.
இதனால், வேறு வழியில்லாமல், அதே பஸ் பாஸில் பயணம் செய்தேன். என்னிடம் டிக்கெட் கேட்ட கண்டக்டரிடம், ’என் பெயர் கார்த்திகேயன்’ என்று வலியச் சொல்லி பஸ் பாஸைக் கொடுத்தேன்.
அவர் என் முகத்தைப் பார்க்கவில்லை, விசாரிக்கவில்லை, டிக்கெட் கொடுத்துவிட்டார். எனது இரண்டாவது ஊழலை வெற்றிகரமாக நிறைவேற்றியாகிவிட்டது.
அதோடு நிற்கவில்லை, மறுபடி ஊரிலிருந்து கிளம்பியபோதும் சரி, அதன்பிறகு ஒவ்வொருமுறை கல்லூரியிலிருந்து வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தபோதும் சரி, கார்த்திகேயன் பஸ் பாஸ் எங்கள் வீடு தேடி வந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக, எனக்கு அந்த முகம் தெரியாத கார்த்திகேயன்மீது ஒரு நேசம் உருவாகிவிட்டது? அவன் யார், எப்படி இருப்பான், வெள்ளையா, கறுப்பா, உயரமா, குள்ளமா, நன்றாகப் படிப்பானா, முட்டாளா, இப்போது கல்லூரியில் படிக்கிறானா, அல்லது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறானா என்று விதவிதமான கேள்விகள், கற்பனைகள்.
என்னுடைய கல்லூரி நண்பர்கள் யாருக்கும் இந்தக் கார்த்திகேயன் விஷயத்தைப்பற்றித் தெரியாது. அவர்களிடம் சொன்னால், என்னைக் காட்டிக்கொடுத்துவிடுவார்களோ என்று பயம்.
இதனால், நான் கல்லூரிக் காலம்முழுக்கத் தனியாகதான் பயணம் செய்யவேண்டியிருந்தது. ஒரு முறைகூட, எங்கள் ஊர், அல்லது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிநேகிதர்களுடன் நான் பஸ்ஸில் சென்றது கிடையாது.
கார்த்திகேயன் விஷயத்தில் ஆரம்பத்தில் எனக்கு இருந்த பயம், கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிட்டது. பஸ்ஸில் உட்கார்ந்திருக்கிற நேரம்மட்டும் என் பெயர் கார்த்திகேயன் என்பதாக என் மூளையே நம்பத் தொடங்கிவிட்டது. இந்தத் தவறில் நாம் மாட்டிக்கொள்ள வாய்ப்பே இல்லை, சுலபமாகத் தப்பித்துவிடலாம் (I can easily get away with it) என்று தோன்றிவிட்டது.
அதேசமயம், அடுத்தவருடைய பஸ் பாஸைப் பொய்ப் பெயரில் பயன்படுத்துவதுபற்றிய பயம் விலகினாலும், அதன் உறுத்தல் இன்னும் மிச்சமிருந்தது. அரசாங்கத்தை ஏமாற்றுகிறோம், யாருக்கோ கிடைக்கவேண்டிய சலுகைகளை நாம் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று நினைக்கையில் கூனிக் குறுகினேன்.
இதனால், இரண்டாம் வருடம் தாண்டியபிறகு நான் ஊருக்குச் செல்லும் தருணங்கள் குறையத் தொடங்கின. தவிர்க்க இயலாத சந்தர்ப்பம் நேர்ந்தால் ஒழிய, பல வார இறுதி விடுமுறைகளை விடுதி அறையில்தான் கழித்தேன்.
நான் கல்லூரியில் படித்த நான்கு வருடங்களில், அநேகமாக இருபது அல்லது இருபத்தைந்து முறை கார்த்திகேயனின் பஸ் பாஸைப் பயன்படுத்தியிருப்பேன் என்று நினைக்கிறேன். இதன்மூலம் நான் செய்த ஊழல் சுமார் 2500 ரூபாய் இருக்கலாம்.
அப்போது நான் இதை எதிர்க்க நினைத்திருந்தாலும், என்னுடைய வளர்ப்புமுறை அதனை அனுமதித்திருக்காது. அப்பா எது சொன்னாலும் தலையாட்டிப் பழகிவிட்டதால், ‘அதிகப் பிரசங்கி’ பட்டத்துக்குப் பயந்து, இந்த ஊழலையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிவிட்டது.
’கார்த்திகேயன்’ பஸ் பாஸ்மூலம் நான் ஏமாற்றிய இந்தப் பணத்தை எப்படியாவது அரசாங்கத்துக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு நான் Impractical இல்லை. ஆனால் இந்தச் சம்பவம் எனக்குள் ஏற்படுத்திய குற்றவுணர்ச்சி, என்னை முற்றிலும் வேறோர் ஒழுங்குத் தளத்தில் (180 Degrees Opposite) இயங்குமாறு தூண்டியது.
உதாரணமாக, சிக்னலில் சிவப்பு விளக்கைத் தாண்டி ஓடவேண்டும் என்று எனக்கு எப்போதும் தோன்றியது கிடையாது, என் ஐந்து வயது மகளுடன் பேருந்தில் செல்லும்போது, கண்டக்டர் அவளுக்கு டிக்கெட் வேண்டாம் என்று சொன்னாலும் வற்புறுத்தி டிக்கெட் வாங்குகிறேன். எங்காவது வரிசையில் காத்திருக்கும்போது, வாய்ப்புக் கிடைத்தாலும் முந்திச் சென்று ஏமாற்றவேண்டும் என்று தோன்றுவதில்லை, என் மனைவியோ, மகளோ அப்படிச் செய்தால், ‘அது தவறு’ என்று அழுத்தமாகச் சொல்லிக் கண்டிக்கிறேன். கடைச் சிப்பந்திகள் தவறிப்போய் எனக்கு அதிகப் பணம் – ஐந்து ரூபாயோ, ஐம்பது ரூபாயோ கூடுதலாகக் கொடுத்துவிட்டால், அவர்களை வலியத் தேடிச் சென்று அதனைத் திருப்பிக் கொடுக்கிறேன், அவர்கள் எனக்குச் சாதகமாக வரும்படி கணக்குப் போட்டுவிட்டால், உடனடியாகத் திருத்துகிறேன். அதன்மூலம் எனக்கு ஏற்படக்கூடிய இழப்பை நஷ்டமாகக் கருதுவது இல்லை.
இந்த ‘அல்ப’ சமாசாரங்களையெல்லாம் நான் பெரிய சாதனைகளாகச் சொல்லவரவில்லை. ஆனால், தினசரி வாழ்க்கையில் ஊழல் செய்யக் கிடைக்கும் அபூர்வத் தருணங்களை, அவை எவ்வளவு சிறியவையாக / பெரியவையாக இருந்தாலும் சரி, மறுசிந்தனை இல்லாமல் நிராகரிப்பதற்கான பயிற்சியை எனக்குக் கொடுத்தது அந்த முகம் தெரியாத கார்த்திகேயன்தான்.
கருப்பசாமியும் அவர் மகன் கார்த்திகேயனும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என் அப்பாவுக்குக்கூட அது தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அப்போதைக்கு அவர்களை இலவசப் பயணத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் அவரும் அவர்களை சுத்தமாக மறந்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. அந்தக் கார்த்திகேயனுக்குக்கூட, இப்படி அவனுடைய பெயரைப் பயன்படுத்தி இன்னொருவன் பலமுறை திருட்டுப் பயணம் செய்திருக்கிறான் என்பது தெரிந்திருக்க நியாயம் இல்லை.
ஆனால், நாம் பயணம் செய்கிற ரயிலில் திடீரென்று ஏறி, ஒரு நல்ல பொருளை நம்மிடம் விற்றுவிட்டுச் சட்டென்று அடுத்த பெட்டிக்குத் தாவி மறைந்துவிடுகிற ஒரு வியாபாரியைப்போல, முகம் தெரியாத அந்தக் கார்த்திகேயனை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.
***
என். சொக்கன் …
08 05 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
Like this:
Like Loading...
Related
1 | புருனோ
May 8, 2009 at 5:01 pm
//நாம் பயணம் செய்கிற ரயிலில் திடீரென்று ஏறி, ஒரு நல்ல பொருளை நம்மிடம் விற்றுவிட்டுச் சட்டென்று அடுத்த பெட்டிக்குத் தாவி மறைந்துவிடுகிற ஒரு வியாபாரியைப்போல, முகம் தெரியாத அந்தக் கார்த்திகேயனை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.//
சூப்பர் 🙂