மனம் போன போக்கில்

காலைக் குறிப்புகள்

Posted on: November 23, 2010

தினமும் நங்கையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிற பேருந்து சிற்றுந்து கண்ணுக்குக் குளிர்ச்சியான(?) மஞ்சள் நிறம் கொண்டது. அதன் இருபுறமும் வழவழப்பான, கண்ணாடி பொருத்திய  காதுகள் உண்டு. நாள்தோறும் அதிகாலை ஆறே முக்கால் மணியளவில் எங்கள் வீட்டு வாசலுக்கே வந்து ஹாரன் அடிக்கும். நங்கையை ஏற்றிக்கொண்டு டாட்டா சொல்லிப் போகும்.

திடீரென்று ஒரு சுபயோக சுபதினத்தில் ‘இங்கெல்லாம் வரமுடியாது சார்’ என்று கையை விரித்துவிட்டார் திருவாளர் டிரைவர்.

’ஏன் சார்? என்னாச்சு?’

‘மெயின் ரோட்லேர்ந்து உள்ளே வந்துட்டுத் திரும்பிப் போறதுன்னா கால் ஹவர் ஆயிடுது சார். அப்புறம் வண்டி லேட்டா வருதுன்னு மத்த பேரன்ட்ஸ்ல்லாம் கம்ப்ளைன்ட் பண்றாங்க.’

எங்கள் வீடு பிரதான சாலையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர் தூரம்தான். இங்கிருந்து திரும்பிச் செல்கிற தூரத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால்கூட அதிகபட்சம் முக்கால் கிலோமீட்டரைத் தாண்டாது. ஹாரன் ஒலித்தபின் நங்கை படிகளில் இறங்கிக் கீழே வருகிற நேரத்தைச் சேர்த்தாலும் நிச்சயம் ’கால் ஹவர்’ எல்லாம் ஆகாது.

ஆனால், திருவாளர் டிரைவரிடம் லாஜிக் பேசமுடியாது. அவர் கோபப்பட்டுவிட்டால் நமக்குதான் அசௌகர்யம். ஆகவே ‘தினமும் ஆறே முக்காலுக்குக் குழந்தையைக் கூட்டிகிட்டு மெயின் ரோட்டுக்கே வந்துடறோம்’ என்று ஒப்புக்கொண்டோம்.

‘ஆறே முக்கால் வேணாம் சார். ஏழு மணிக்கு வந்தாப் போதும்!’

‘அடப் படுபாவி. நீ கால் மணி நேரம் லேட்டாக் கிளம்பறதுக்குதான் இவ்ளோ பில்டப்பா?’ என்று மனத்துக்குள் நினைத்தபடி வெளியே இளித்தேன். ‘ஷ்யூர்’ என்றேன்.

மறுநாள் தொடங்கி நங்கையைப் பிரதான சாலைவரை அழைத்துச் சென்று பஸ் வரும்வரை காத்திருந்து ஏற்றிவிட்டுத் திரும்புவது என்னுடைய வேலையானது. இதற்காகச் சீக்கிரம் தயாராக வேண்டியிருப்பதைக் கொஞ்சம் உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று என் அலுவலக நேரத்தையும் ’8 டு 5’ என மாற்றிக்கொண்டேன்.

ஒரே பிரச்னை, ஏழு மணிக்கு வருவதாகச் சொன்ன ஓட்டுனர் ஏழே கால் அல்லது ஏழு இருபதுக்குதான் வருகிறார். அதுவரை சாலையை வேடிக்கை பார்த்தபடி காத்திருக்க நேர்கிறது.

’சரி, இந்தாள் ஏழே காலுக்குதானே வர்றார்’ என்று ஒரே ஒரு நாள் ஐந்தே ஐந்து நிமிடங்கள் தாமதமாகப் போனேன். அன்றைக்குப் பார்த்து சீக்கிரமாக வந்து சேர்ந்து காத்திருந்தார். எங்கள் தலை தெரிந்ததும் முறைத்தார். ‘எவ்ளோ நேரம் சார் வெய்ட் பண்றது?’

‘யோவ், டெய்லி உனக்காக நான் வெய்ட் பண்ணலை?’ என்று அவரிடம் சொல்லமுடியுமா? குமுதம் அரசுபோல் ‘ஹிஹி’ என்று வழிந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

ஆரம்பத்தில் இப்படிப் பஸ்ஸுக்காகப் பத்து நிமிடம் நடப்பதும், கால் மணி நேரம் காத்திருப்பதும் செம கடுப்பாக இருந்தது. ‘அதான் மாசம் பொறந்தா காசு வாங்கறான்ல? வீட்டுக்கே வந்து கூட்டிகிட்டுப் போனா என்னவாம்?’ என்று எரிச்சல்பட்டேன்.

அப்புறம் கொஞ்சம் நிதானமாக யோசித்தபோது என்னுடைய கோபம் அர்த்தமில்லாதது, குழந்தைத்தனமானது என்று புரிந்தது. பள்ளிப் பேருந்து தங்கள் வீட்டு வாசலுக்கே வரவேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்ப்பார்கள். அது எதார்த்தத்தில் சாத்தியமில்லை. வீணாகும் எரிபொருளுக்காக அவர்கள் கூடுதலாகச் செலவழிக்கத் தயாராக இருந்தாலும் ஏது நேரம்? பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திச் சாலையில் நெரிசலையும் புகையையும் பெருக்கினால்தான் உண்டு. அந்தப் பெருங்கொடுமையைச் செய்வதற்குப் பதிலாக, தினமும் ஐந்து நிமிடம் நடக்கலாம். தப்பில்லை.

இப்படிப் பலவிதமாக யோசித்து என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டாலும், அவ்வப்போது (வேறு) பள்ளிப் பேருந்துகள் எங்கள் தெருவுக்குள் வந்து போவதைப் பார்க்கும்போதெல்லாம் ஓர் ஏக்கப் பெருமூச்சு வெளியாவதைத் தவிர்க்கமுடிவதில்லை. ‘ஹ்ம்ம்ம், நமக்கும் ஒரு டிரைவர் வந்து வாய்ச்சானே!’

அதேசமயம் அந்த ஐந்து நிமிட நடை, 10 நிமிடக் காத்திருப்பின்போது மற்ற குறுக்கிடல்கள் இல்லாமல் குழந்தையிடம் பேசிக்கொண்டிருக்கிற வாய்ப்பு அபூர்வமானது. ஜாலியாகக் கதை சொல்லலாம், கேட்கலாம், ரோட்டில் தென்படும் காட்சிகளைப்பற்றி அவள் கேட்கிற முடிவற்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழிக்கலாம், அவள் முந்தின நாள் கற்றுக்கொண்ட ரைமைச் சொல்லிக் காட்டச் சொல்லிக் கூடப் பாடலாம், ஆடலாம் (தெருவில் யாரும் கவனிக்கமாட்டார்களா என்று யோசிக்கவேண்டாம். சோம்பேறி நகரமாகிய பெங்களூரில் இந்தக் காலை நேரத்தில் ரோட்டுக்கு வருகிற யாரும் ‘சும்மா’ வருவதில்லை. நிச்சயம் ஏதாவது வேலையோடுதான் வருவார்கள். அவர்களுக்கு உங்களைக் கவனிக்க நேரம் இருக்காது!)

அப்புறம்? வேறென்ன மேட்டர் காலையிலே?

  • சாலையில் எதிர்ப்படுகிறவர்களில் பாதிப் பேர் என்னைமாதிரிக் குழந்தையை/களை ஸ்கூல் பஸ் ஏற்றிவிட வந்தவர்கள். மீதிப் பேர் உடம்பைக் குறைக்க நடக்கிறவர்கள், அல்லது ஓடுகிறவர்கள்
  • இந்த இரண்டு கட்சியிலும் சேராத ஒரு கோஷ்டி உண்டு. ஐடி நிறுவன வாகனங்களைப் பிடிக்க ஓடுகிறவர்கள்
  • காலை நேரத்தில் வாகனங்களோடு சாலைக்கு வருகிறவர்கள் 101.45% பேர் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை. இன்றைக்கு ’நிஜமான’ நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டுக் கூலாகச் சாலையைக் கடந்து தம் வாங்கிப் பற்றவைத்த ஒருவரைப் பார்த்தேன்
  • நாங்கள் பஸ்ஸுக்குக் காத்திருக்கும் இடத்தில் ஒரு பால் பூத் உள்ளது. அங்கே சிதறி விழும் பால் துணுக்குகளை(மட்டுமே) குடித்துக் குடித்துக் கொழுத்த வெள்ளைப் பூனை ஒன்றும் உள்ளது!
  • பெங்களூரில் அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ 9.50/- ஆனால் இந்தப் பூத்தில் பால் வாங்குகிற யாரும் பாக்கி 50 பைசாவைக் கேட்டு வாங்குவதே இல்லை. எப்போதாவது அபூர்வமாகச் சிலர் கேட்கும்போது அங்கிருக்கும் பெண்மணி மறுக்காமல் 50 காசைக் கொடுத்துவிடுகிறார். அதேபோல் மற்றவர்களுக்கும் அவரே நினைவுபடுத்திப் பாக்கிச் சில்லறையைத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்!
  • பால் பூத்துக்கு நேர் எதிரே இருக்கும் மரத்தில் இரண்டு கழுகுகள் தினமும் உட்கார்ந்திருக்கின்றன. எதற்கு?
  • இன்னொரு பக்கம் ‘PHD ஆக வாருங்கள்’ என்று ஓர் அறிவிப்பு. ’டாக்டர்  / முனைவர் பட்டத்துக்கெல்லாம் இப்படி விளம்பரமா?’ என்று ஆச்சர்யத்தோடு கவனித்தால் பிஸ்ஸா டெலிவரிக்கு ஆள்கள் தேவை(PHD=Pizza Hut Delivery!)யாம். அடப்பாவிகளா!

***

என். சொக்கன் …

23 11 2010

8 Responses to "காலைக் குறிப்புகள்"

ஆஹா…. பெங்களூரில் அரை லிட்டர் பால் 9.50 தானா? எங்களூரில் குறைந்தது 11.00, அதிகபட்சம் 14.00!

http://kgjawarlal.wordpress.com

உங்கள் பிரச்சினை போன்றே எனக்கும் இருந்தது பேருந்து வீட்டு வாசலுக்கு வராமல் இருப்பது
ஒரு நாள் பள்ளிக்கு போனேன்.பேருந்து பொறுப்பாளரை சந்தித்து பேசினேன்.வீடு வரை வருவதில் அவருக்கு பிரச்சினை இல்லை என்றார்.எதற்கும் ஓட்டுனரிடம் பேசுங்கள் என்றார்.
ஓட்டுநரிடம் பேசினேன் சற்று தலையை சொறிந்தார் புரிந்துகொண்டேன் மாசம் ரூ 75 தருவதாய் சொன்னேன்
இரண்டு வருடம் கொடுத்தேன் அதற்கு பிறகு அவரே வேண்டாம் சொல்லிவிட்டார்.

இந்த டிப்ஸ் கலாச்சாரம் இல்லாத இடமில்லை

அடடா, என் வீட்டிலும் இதே பிரச்சனை கொஞ்ச நாட்கள் முன்பு. இப்ப பழகிடிச்சி. நம்ம தெரு அகலத்தில் சற்று குறைவுயென்பதால் சமாதானம் சீக்கிரம் வந்தது எங்களுக்குள்.

ரைட்டராக இருப்பதில் தான் என்னவொரு செளகரியம். எரிச்சல்களைப் பகடியாக்கி அவதானிப்புடன் கூடிய அனுபவமாக்கி இதோ அதைவொரு பதிவுமாக்கியாற்று.

நானும் எழுதனும் நிறைய. பின்னே இ.அ. குறையனும்ல்ல.

வெல்… தங்களின் அம்பானியை நேற்றுதான் முடித்தேன். நடையைவிட அதன் கட்டமைப்பு அபாரம்.வியபார பாடங்களை முன்னிருத்துதல் ஊடே பயணித்த விதம் அற்புதம். மீதம் என் வலைப்பூவில் பகிர்வேன்.

காலைக் குறிப்புகளை இரவில்தான் படிக்க முடிந்தது. அருமை.

//அவள் கேட்கிற முடிவற்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல்
விழிக்கலாம் //

— ஹா.. ஹா..

உண்மை தான்.. இதுபோன்ற பல வேலைகளை காத்திருக்கும் வேளைகளில் நம்மால் செய்ய இயலும்… ஆனால் எரிச்சல் பட்டே பழகிய நம்மால் அது சாத்தியமில்லாமல் போகிறது…

என்னது குழந்தைகளை காலையில ஆறே முக்காலுக்கெல்லாம் ஸ்கூல் பஸ்ஸில் ஏத்திவிட்டுடுவீங்களா?
நல்லவேளை நான் படிக்கற காலத்தில் இந்த மாதிரி ஸ்கூல் எல்லாம் இல்லை. 🙂

பெங்களுரில் ஆறே முக்காலுக்கு பள்ளிக்கு செல்வது சர்வ சாதரணம்.என் மகள் ஏழு மணிக்கு செல்கிறாள்.

டிரைவர் கடுகடு பார்ட்டியாய் இருப்பார் போலிருக்கிறதே!

நான் காலையை மிகவும் விரும்புபவன். லீவு நாட்களில் கூட பெரும்பாலும் அதிகாலையில் எழுந்து கொள்வேன். அதன் அருமை பெருமைகளை சொன்னால் யாரும் கேட்பதில்லை. என் பையன் எனக்கு நேர் எதிர்.

//காலை நேரத்தில் வாகனங்களோடு சாலைக்கு வருகிறவர்கள் 101.45% பேர் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை. //

மற்ற நேரத்தில் எப்படி?

Leave a comment

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2010
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930