மனம் போன போக்கில்

கிலோ என்ன விலை?

Posted on: August 5, 2011

நேற்று சூப்பர் ‘மோர்’க்கெட் ஒன்றில் பற்பசை வாங்கச் சென்றிருந்தேன். ஒரு ஷெல்ஃப் நிறைய ஏகப்பட்ட options, பல வண்ணங்கள், சுவைகள், மவ்த்வாஷ், ஃபயர் அண்ட் ஃப்ரீஜ் இன்னபிற innovations, சிறுவர்க்கு, டீனேஜருக்கு, 100% சைவருக்கு (அசைவ, வைணவ வெரைட்டிகளும் இருக்கக்கூடும்?) முதியோருக்கு, மூலிகைப் பிரியருக்கு எனப் பல specialisations…. பிரமித்து நின்றேன்.

ஒரே பிரச்னை, இவற்றை ஒப்பிடுவது பெரும்பாடாக உள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு எடை, வெவ்வேறு விலை, எதுவும் ரவுண்டாக இன்றி 170 கிராம் 38 ரூ, 190 கிராம் 42 ரூ, 245 கிராம் 90 ரூ என்று போட்டுக்குழப்புகிறார்கள். டூத் பேஸ்ட் விஷயத்தில் Brand Choice / Loyalty ஏதும் இல்லாதவர்கள் இவற்றில் எது cost effective என ஒப்பிட்டுப் பார்க்கக் குறைந்தபட்சம் ஒரு scientific calculator தேவைப்படும்போலிருக்கிறது.

கொஞ்சம் உற்றுப்பார்த்தபோது, இதேமாதிரி குழப்படி அநேகமாக எல்லா மளிகை சாமான்களிலும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, ஒரு ஷாம்பூ சிறிய சேஷேயில் வாங்கினால் ரூ 3/- அதையே டப்பாவாக வாங்கினால் ரூ 67/- நீங்கள் மாதாந்திரத் தேவைக்கு எதை வாங்குவீர்கள்?

அநேகமாக நாம் எல்லோரும் டப்பா ஷாம்பூதான் சிக்கனம் என்று நினைப்போம். ஆனால் கொஞ்சம் கவனித்துக் கணக்குப்போட்டால், சில Brandகளில் டப்பா ஷாம்பூ விலை குறைவாக உள்ளது, வேறு சிலவற்றில் ஒரு டப்பா வாங்குவதற்குப் பதில் 20 சாஷேக்கள் வாங்கினால் அதே அளவு ஷாம்பூ கிடைக்கிறது, பணம் கிட்டத்தட்ட 20% மிச்சமாகிறது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை – சாஷேவைப் பிரித்துப் பயன்படுத்துகிற சிரமம் இல்லாமல் டப்பாவாக வாங்குவதால் நம்மிடம் கூடுதல் காசு (Convenience fee) வசூலிக்கிறார்களா? அல்லது, பிளாஸ்டிக் டப்பாவுக்கு 20% எக்ஸ்ட்ரா காசா? அல்லது, ’சாஷே வாங்குவோர் ஏழைகள், ஆகவே அவர்களுக்கு விலையைக் குறைக்கிறோம்’ என்கிற பொதுநல நோக்கமா? (சிரிக்காதீர்கள்! 🙂 )

யோசித்துப்பார்த்தால், இன்றைய தேதிக்குத் தங்களுடைய மாதாந்திர மளிகை சாமான்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவோர் வெவ்வேறு பிராண்ட்களின் விலைகளை one to one ஒப்பிட்டுப் பார்த்து எது மலிவு, எதை வாங்கலாம் என்று முடிவெடுக்க எளிய வழி எதுவுமே இல்லை. அவரவர் இஷ்டப்படி ஆளுக்கோர் அளவு, விலை என்று வைத்தால், கால்குலேட்டர் இன்றி கணக்குப் போட்டு முடிவெடுக்கமுடியாது, அதற்கு வாய்ப்பு / விருப்பம் இல்லாதவர்கள், அல்லது ‘என்னத்தை ஒப்பிட்டு என்ன ஆகப்போகுது?’ என்று நினைப்பவர்கள் காசை இழக்க வாய்ப்பு அதிகம் – அதைத்தான் இந்த பிராண்ட்கள் விரும்புகின்றனவோ?

வெவ்வேறு பிராண்ட்கள் என்றாலாவது பரவாயில்லை, தர வித்தியாசத்தினால் விலை வித்தியாசம் என்று சொல்லலாம் – பெரும்பாலும் ஒரே பிராண்ட்க்குள் இருக்கும் வெவ்வேறு பொட்டல வகைகளின் விலைகள்கூடக் கேனத்தனமாக வைக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்த (கற்பனை) பட்டியலைப் பாருங்கள்:

  • பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய்

நான்கு பாக்கெட்களுக்குள்ளும் இருப்பது ஒரே பிஸ்கட்தான் – ஆனால் இந்த நான்கில் நான் எதை வாங்கினால் மலிவு? ஒவ்வொன்றையும் 1 கிலோ எடைக்கு மாற்றிக் கணக்குப் போட்டு எது பெட்டர் என்று முடிவெடுப்பதற்குள் பொழுது விடிந்துவிடாதா?

ஆக, கடைக்கு வருகிறவர்கள் எதையும் யோசித்துப் பார்த்து முடிவெடுக்கக்கூடாது, Brand Value பார்த்துப் பொருள்களை அள்ளிச் செல்லவேண்டும். அதன்மூலம் மாதம் ஐநூறோ, ஆயிரமோ மிச்சமாகக்கூடும் என்று யோசிக்கக்கூடாது. அப்படியே யோசித்தாலும் ‘கால்குலேட்டரை வெச்சு கணக்குப் போட்டு வாங்கற நேரத்துல ஏதாவது ஒரு பிராண்டை எடுத்துகிட்டுப் போயிடலாம்’ என்று தீர்மானிக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்.

இப்படிக் குழப்பியடிக்காமல் பொருள்கள் அனைத்தும் 100 கிராம், 200 கிராம், கால் கிலோ, அரைக் கிலோ போன்ற standard அளவுகளில் வந்தால் ஒரே பிராண்டுக்குள், அல்லது போட்டி பிராண்ட்களை விரைவாக ஒப்பிட்டு வாங்குவது வசதியாக இருக்கும். அப்படி ஒரு சட்டம்(அல்லது Guideline?)கூட இந்தியாவில் இருக்கிறதாம். ஆனால் அதை மீறுகிறவர்கள் பொட்டலத்தின்மீது ‘Non-standard size’ என்று ஒரு Warning Message அச்சிட்டுவிட்டால் போதுமாம். சுத்த அபத்தம்!

இந்தப் பிரச்னையைத் தீர்க்க சுலப வழி என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு Consumerஆக என் அனுபவத்தைச் சொல்வதென்றால், ஒவ்வொரு பொட்டலத்தின்மீதும் (அது எந்த அளவாக இருந்தாலும் சரி) அதன் 1 கிலோ / 1 லிட்டர் விலை என்ன என்பதை அந்தக் கம்பெனியே கணக்கிட்டு அச்சிடவேண்டும். மேலே பார்த்த உதாரணத்தை இதன்படி மாற்றினால், 19, 46, 220 கிராம் பொட்டலங்களைவிட, 95 கிராம்தான் cost effective என்று உடனே புரியும்:

  • பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய் (கிலோ ரூ 263)
  • பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய் (கிலோ ரூ 260)
  • பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய் (கிலோ ரூ 210)
  • பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய் (கிலோ ரூ 218)

இந்த வழிமுறை அமலுக்கு வந்தால் இரண்டு வெவ்வேறு பிராண்ட்கள், அல்லது ஒரே பிராண்டின் இரண்டு வெவ்வேறு பொட்டலங்களைச் சட்டென்று பார்த்து எது விலை மலிவு என்று சிரமமில்லாமல் கணக்கிடமுடியும், ஒப்பிடமுடியும், அதன்பிறகு அவற்றில் விலை குறைவானதை வாங்குவதோ விலை அதிகமானதை வாங்குவதோ என் இஷ்டம்!

அஃப்கோர்ஸ், இப்படி வாங்குபவருக்குச் சாதகமான ஒரு திட்டத்தை யாரும் அமல்படுத்தமாட்டார்கள், அமல்படுத்தவிடமாட்டார்கள் என்பது நிச்சயம், அது வேறு சமாசாரம்!

***

என். சொக்கன் …

05 08 2011

UPDATE:

நான் சொன்ன இந்த யோசனை ஏற்கெனவே பல நாடுகளில் அமலில் இருப்பதாக அறிகிறேன். நண்பர் இலவசக் கொத்தனார் ஒரு ஃபோட்டோகூட அனுப்பிவைத்திருக்கிறார். அதைக் கீழே தந்துள்ளேன். உலகம் சுற்றாத வாலிபனாக இருப்பதில் இதுதான் ஒரே அவஸ்தை :>

***

என். சொக்கன் …

10 08 2011

29 Responses to "கிலோ என்ன விலை?"

இந்த angle-ளில் யோசித்துப் பார்த்ததில்லை. பொதுவாக நான் store brand இருந்தால் வாங்குவேன் – விலை சற்று மலிவு. இல்லை, இலவசங்களுடன் இருந்தாலோ – offer இருந்தாலோ – வாங்குவேன். கொஞ்சம் சிக்கனம்.

உண்மை. நீங்கள் சொல்வதுபோலத்தன் கம்பெனிகள் வாடிக்கையாளரை குழப்புவத்ன்மூலம், கழுத தெரிஞ்சத வாங்கிட்டுப்போவோம் என வாங்க வைக்கின்றனர் என நினைக்கிறென்.

மால்களில் விண்டோ ஷாப்பிங் செய்யச் சொல்பவர்கள் பர்ஸை வாகனத்தில் விட்டுச் சென்றாலொழிய எதையாவது வாங்காமல் திரும்ப முடியாது. மூனு வாட்சு 10 தினார்னு (லொப்பைக் கடையெல்லம் இல்லை. லுல்லுவில்) அள்ளிகிட்டு வந்தோம். வீட்டுக்காரம்மா இப்ப எதுக்கு மூனுவட்சுனு கேக்கும்போது ஞே நு முழிக்க வேண்டியிருக்கு.

நீங்கள் சொல்லும் முறை ஒரு பத்து வருடங்களுக்கு முன் (நாமெல்லாம் பிஸ்கட்டையே உணவாக திண்ற காலத்தில்) இருந்தது. இந்த குளறுபடியை முதலில் சந்தைக்கு தந்தது மாஹி நூடுல்ஸ். பொருட்கள் எவ்வளவு விலை ஏறினாலும் அவர்கள் மட்டும் 5 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் நூடுல்ஸ் கொடுப்பாங்க, விலை அதேதான் எடைதான் குறைந்துகொண்டே போகுது. இதை பின்பற்றி ஏனைய பொருட்களும் அப்படியே வரத்தொடங்கியது. உதாரணமாக 5 ரூபாய் குளிர்பானம் (இப்போது இல்லை) பார்லி ஜி, டைகர் பிஸ்கட் இன்னும் பல. மக்களை அரசியல்வாதிகள்தான் ஏமாற்ற வேண்டும் இல்லை! அரசும் சட்டமும் அனுமதிக்கும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.

இங்கு (பராகபுரியில்) பல கடைகளில் நீங்கள் சொல்வது போல அந்த பாக்கெட்டின் விலை மற்றும் ஒப்பிட்டு பார்க்கக் கூடிய விதத்தில் விலை இரண்டுமே போட்டு இருப்பார்கள். உதாரணமாக ப்ளாஸ்டிக் ஸ்பூன் வாங்கச் சென்றோமானால் பாக்கெட் விலை எவ்வளவு, 100 ஸ்பூன் வாங்கினால் விலை எவ்வளவு என இருக்கும். 25 ஸ்பூன் கொண்ட பாக்கெட்டையும், 32 ஸ்பூன் கொண்ட பாக்கெட்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது எளிதாகும்.

எல்லா கடைகளிலும் இது இல்லை என்பதால் இது இருந்தாக வேண்டும் என சட்டம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு உதவும் படி சில கடைகளில் செய்திருக்கிறார்கள்.

இப்படி கணக்கு போட்டு என் மண்டையும் காய்ந்து விட்டது. நம்மை ஏமாற்றும் வழிகளைப் பற்றி பெரிய லிஸ்டே போடலாம். மொறுமொறுவென்றிருக்க எனக் கூறி காற்றடைத்து கொஞ்சூண்டு சிப்ஸ் இருக்கும் பாக்கெட்டும் ஏமாற்று வித்தையே. தப்பிக்க ஒரே வழி நம் தேவைகளை குறைத்துக் கொள்வதே.

அட இவ்ளோ விஷயங்களா? மிக அருமையான பதிவு சார்

பொதுவாக ஐரோப்பாவில் (பிரான்சில்) பாட்டில் அ சாச்சே விலையும் அப்பொருளின் கிலோ விலையும் ( சிரிதாக ) குறிப்பிட வேண்டும் #சட்டம்

சிறிதாக ..

சிறிய அளவில் வாங்குபவர்களிடையே விலை-நுகர்வு நெகிழ்ச்சி கூடுதலாக இருக்கும். அதனால் பல பொருட்களில் சிறிய அளவுகளில் வாங்குவதே சிக்கனமாக இருக்கிறது. யாகூ ஆய்வகத்தின் முகன்மைப் பொருளியல் அறிஞர் சுட்டிக் காட்டியபின் (http://in.bigthinkers.yahoo.com/event.php?id=7) இந்த விளைவை பலமுறை கண்டிருக்கிறேன்.

இன்னொரு விந்தையான பொருளியல் விளைவு கிப்பன் பண்டங்கள்: http://tawp.in/r/9ft

நல்ல பதிவு.

In US, unite price and price per piece / ounce is specified underneath the item price. Hence we can decide which one is cheaper

yeah, right. and inflation’s the root cause.

நான் வருவதற்குள் வகிமா தலைவரும் Deiva-வும் சொல்லிவிட்டதால்.. அதே என் பதில்.

நல்லதோர் கவனம் மற்றும் ஆராய்ச்சி.இந்த வியாபாரிகள் முதலில், கடை (பொருட்க்காச்சி அரங்க்ம்), பொருட்க்களை வகை வகையாக அடுக்கிய விதம்,பொருட்க்களை தானே கையில் எடுத்து பார்க்கும் உரிமை என்பதில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி விடுவார்கள்.வரும் வாடிக்கையாளர்களிடயே ஒரு ஈகோவை உண்டாக்கிவிட்டு நமக்கு எந்த பொருள் விலை குறைவு/உயர்வு என்று புத்திமதியும் சொல்லியும், ஒரே பிராண்டென்றிருந்தால் வாங்குவது வாங்காதது வாடிக்கைக்காரர்களது இஷ்டமாகிவிடும் என்ற காரணத்தால் பல பிறாண்டுகளை வைத்து எப்படியும் வாங்க விட்டுவிடுவார்கள். அதிலும்,ஒரு பொருள் வாங்கினால் விலை அதிகம் என்று உணர்த்தி அதயே 2, 3 செட்டுகளா ஒரே பேக்கிங்கில் போட்டு கட்டாயமாக வாங்க வைத்துவிடுவார்கள். என்னதான் இருந்தாலும் அங்கும் இங்கும் எங்கும் நிறைந்திருக்கும் அண்ணாச்சி கடைகள்தான் சீஃப் அண்டு பெஸ்டு. ஆனால் கலப்படம் உண்டு.அவங்கதான் என்னத்த செய்வாங்க.மக்கள் இன்னும் 5 பைசாவுக்கு கடுகு,10 பைசாவுக்கு தேங்காசில்லுன்னு கேட்டுகிட்டு இருக்காங்களே. என்னத்த சொல்லி என்னத்த செய்ய? பாராட்டுக்கள்.

A good trigger to write an Android/iPhone app :-).

ஸ்டோர் ப்ராண்ட்களில் சிலது தரமானதாக இருக்கும், பலது சுமார். ட்ரையல் அண்ட் எர்ரர்தான் ஒரே வழி 😦

’வாட்ச்’ பண்ணாம அவசரப்பட்டுட்டீங்களே பாஸ் 🙂

நீங்கள் சொல்வதுபோல் இன்னும் பல ‘எப்பவும் அஞ்சு ரூபா’ ஐட்டங்கள் வந்துவிட்டன, ஒருகட்டத்தில் வெறும் பாக்கெட்டை விற்பார்களோ?

அடடே, தகவலுய்க்கும் ஃபோட்டோவுக்கு நன்றி 🙂

அந்தக் ‘காத்து’ மொறுமொறுவுக்காகவா? நான் சும்மா பந்தாவுக்குன்னு நினைச்சேன்!

நன்றி 🙂

நல்ல ஐடியா, இந்தியாவிலும் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்

சுவாரஸ்யமான இணைப்புகள். மிக்க நன்றி

நன்றி ரத்னவேல் 🙂

அருமையான யோசனை. இந்தியாவிலும் வருமா?

உண்மை

அதே நன்றி 🙂

அண்ணாச்சி கடைகளில் ‘சில’ பொருள்கள் பெஸ்டு, நான் சூப்பர் மார்க்கெட்களை ஆஃபர்களுக்காகமட்டும் பயன்படுத்துவேன் 😉

நல்ல ஐடியா – யாராவது முன்வருகிறார்களா பார்ப்போம்

Leave a comment

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,551 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2011
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031