மனம் போன போக்கில்

கௌரவம்

Posted on: November 29, 2008

ஜெயநகரிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கையேந்தி பவன். ஏகப்பட்ட கூட்டம்.

காரில் வந்து கையேந்தி பவனில் சாப்பிடுகிறவர்கள் அதிசயம் இல்லை. நான் ஆச்சர்யப்பட்டது, ஒரு ஸ்கூட்டரைப் பார்த்து.

சாதாரண ஸ்கூட்டர் இல்லை, செக்கச்செவேல் பின்னணியில் கொட்டை எழுத்தில் ‘பிட்ஸா கார்னர்’ என்று எழுதிய ஸ்கூட்டர். அதன்மேல் உட்கார்ந்திருந்தவனும் அதே வண்ணத்தில் யூனிஃபார்ம் அணிந்திருந்தான். அலுமினியத் தட்டில் வாழை இலைத் துணுக்கை வைத்து சுவாரஸ்யமாக தோசையை மொசுக்கிக்கொண்டிருந்தான்.

அந்தப் பையனின் மாதச் சம்பளத்துக்குக் கையேந்தி பவன்தான் கட்டுப்படியாகும் என்பது புரிகிறது. ஆனால், ’பிட்ஸா கார்னர்’ டெலிவரி வண்டி கையேந்தி பவன் வாசலில் நின்றால், பிராண்ட் இமேஜ் கெட்டுப்போகாதோ? சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டுப் பத்தடி நடந்துவந்து சாப்பிடலாமே.

இப்படி யோசித்தபோது, திடீரென்று கேரளா ஞாபகம்.

அப்போது நாங்கள் கோட்டயத்தில் ‘மலையாள மனோரமா’ நிறுவனத்தின் இணைய தளத்தை வடிவமைக்கச் சென்றிருந்தோம். அங்கேயே ஒன்றிரண்டு வாரங்கள் தங்கி, பல்வேறு பிரிவினருடன் பேசி, அவர்களுடைய தேவைகளைப் பதிவு செய்யவேண்டியிருந்தது.

இடையில் ஒரு சனி, ஞாயிறு. ’சும்மா கெஸ்ட் ஹவுஸ்ல போரடிச்சுகிட்டு உட்கார்ந்திருக்க வேண்டாம், ஜாலியா ஒரு பிக்னிக் போய்ட்டு வாங்க’ என்று அவர்களே ஒரு காரை டிரைவருடன் அனுப்பிவைத்திருந்தார்கள்.

டிரைவருக்கு நடுத்தர வயது, அவருடைய வெள்ளை வெளேர் யூனிஃபார்ம்போலவே வண்டியும். முதுகுக் கண்ணாடியில் கொட்டை எழுத்தில் ‘மலையாள மனோரமா’ என்று எழுதியிருந்தது.

அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டோம். கேரளாவில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசுமை, கூடவே லேசான மழையும். சும்மா வண்டி ஓட்டிக்கொண்டு சாலையில் போவதே பிக்னிக்மாதிரிதான் இருந்தது.

என்னுடன் வந்திருந்த நண்பர்கள் இருவருக்கும், ’கேரளாவில் கள் விசேஷம்’ என்று யாரோ சொல்லியிருந்தார்கள்போல, அது எங்கே கிடைக்கும் என்று டிரைவரிடம் அசடு வழிய விசாரித்தார்கள்.

அந்த டிரைவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, ‘நானே கூட்டிட்டுப் போறேன் சார்’ என்று காரை நிறுத்திக் கதவைத் திறந்துவிட்டார், ‘இறங்குங்க’

‘ஏன்? கார் அங்கே போகாதா?’

‘போகும் ஸார், ஆனா, மலையாள மனோரமா வண்டி கள்ளுக்கடை முன்னாடி நிக்கக்கூடாது’ என்றார் அவர்.

***

என். சொக்கன் …

01 12 2008

16 Responses to "கௌரவம்"

😉 ரசித்தேன், கொச்சினில் கள்ளுக்கடை நிறைய இருக்கே

இது கோட்டயம், கொச்சினில் இருந்து சுமார் 1 மணி நேரத் தொலைவில் இருக்கிறது 🙂 .. அங்கேயும் கள்ளுக் கடைகள் உண்டு, ஆனால் கொஞ்சம் தள்ளியிருக்கும்போல, நான் போகவில்லை, கள் என்னைக் குடித்துவிடுமோ என்று பயம் 😉

– என். சொக்கன்,
பெங்களூர்.

//என்னுடன் வந்திருந்த நண்பர்கள் இருவருக்கும், ’கேரளாவில் கள் விசேஷம்’ என்று யாரோ சொல்லியிருந்தார்கள்போல, அது எங்கே கிடைக்கும் என்று டிரைவரிடம் அசடு வழிய விசாரித்தார்கள்.//

நண்பர்கள் இருவருக்கும்? அப்ப நீங்க? சரி, நம்பிட்டோம் 🙂

நல்ல பாயிண்ட்தான். புதிதாக இறக்கப்பட்ட பதனியைக் குடித்துப் பாருங்கள். நல்லா இருக்கும். உடலுக்கும் நல்லது.

Prakash,

கள்ளு சத்தியமா நான் சாமி குடிச்சதே இல்லை, நம்புங்க 😉

இலவசக் கொத்தனார்,

பதனி கேள்விப்பட்டிருக்கேன், பெங்களூர்ல கிடைக்குமா? (அபத்தமான கேள்வி, இருந்தாலும் கேட்டுடறேன்), … பூனாவிலே கள்ளுக்கு ஒரு விநோதமான பெயர் உண்டு, மறந்துபோச்சே 😦

– என். சொக்கன்,
பெங்களூர்.

ஏழைகளின் வயிற்றில் அடித்து முதலாளிகளின் முதுகை சொறிவது போலுள்ளது இந்தப்பதிவு!

😉

ஐயா போன பின்னூட்டதுக்கு ஸ்மைலி போட்டிருந்தேன் வர்லையே? அப்புறம் நானெல்லாம் சீரியசா பதில் போடறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க :))))))))))))))))))))))))

😉

தூங்கி எழுந்து இப்பதான் அப்ரூவ் பண்றேன் ராசா, அதான் லேட் 🙂

ஒருவேளை நீங்க சீரியஸா பதில் போட்டிருந்தாலும்கூட, நான் நிச்சயமா டெலீட் பண்ணமாட்டேன், நீங்க என்னை நம்பலாம் 🙂

– என். சொக்கன்,
பெங்களூர்.

ஏழைகள் … முதலாளிகள் …. எங்க ஆஃபீஸ்ல ஒருத்தர் டிரைவரை யோகா க்ளாஸுக்குக் கூப்பிட்ட கதையைச் சொன்னேனா? இன்னும் இல்லையா? அச்சச்சோ!

– என். சொக்கன்,
பெங்களூர்.

அப்பாவி கேள்வி

மலையாள மனோரமா, மலையாள மனோரமா சொல்லறீங்களே அவங்க தமிழ் மனோரமா விட சிறந்த நடிகையா ?

🙂

கணேஷ் சந்திரா,

ஐ, நல்ல ஜோக், ட்விட்டர்ல போடுங்க ராசா 🙂

– என். சொக்கன்,
பெங்களூர்.

[…] இந்தப் பதிவில் எழுதிய மலையாள மனோரமா – […]

இந்த மலையாள மனோரமா – கள்ளுக்கடை சம்பவம், 22/02/2009 கல்கியில் ‘விசுவாசம்’ என்கிற சிறுகதையாக வெளியாகியிருக்கிறது – ஒருசில ‘மசாலா’ மாற்றங்களுடன்.

//’பிட்ஸா கார்னர்’ டெலிவரி வண்டி கையேந்தி பவன் வாசலில் நின்றால், பிராண்ட் இமேஜ் கெட்டுப்போகாதோ? சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டுப் பத்தடி நடந்துவந்து சாப்பிடலாமே.//

நண்பா ;

இதில் பிராண்ட் இமேஜ் கெட்டுப்போவதற்கு என்ன இருக்கிறது ? அந்த பையனின் ஊதியதிற்கு ஏற்றதை அவன் சாப்பிடுகிறான்..இதே பையன் ஒரு பெரிய உணவகத்தின் வாசலில் தன் வாகனத்தை நிறுத்தி அங்கே சாப்பிட்டு இருந்தால் நீங்கள் இப்படி சொல்வீர்களா ?

கேரளாவில் அந்த டிரைவர் கள்ளுகடை முன்பு தான் தன் ஸ்தாபனத்தின் காரை நிறுத்தவில்லை..உணவகத்தின் முன்பு அல்ல..

உங்கள் பார்வையில் கள்ளுகடையும் ஏழைகள் சாப்பிடும் கையேந்திபவனும் ஒன்றா ?..

பணக்காரன் சாப்பிடும் பிட்ஸா உயர்ந்தது ஏழைகள் சாப்பிடும் கையேந்திபவன் தாழ்ந்தது..அதாவது கையேந்திபவன் முன்பு அந்த வாகனம் நின்றதால் அந்த பிட்ஸா கார்னருக்கு அவமானம்..

அருமை! அருமை !

ஜான்,

விமர்சனத்துக்கு நன்றி.

//கள்ளுகடையும் ஏழைகள் சாப்பிடும் கையேந்திபவனும் ஒன்றா//

மன்னிக்கவும். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நானும் (நேற்று மாலைகூட) கையேந்தி பவனில் சாப்பிடுகிறவன்தான். அதைத் தவறாகவோ, இழிவாகவோ நினைக்கிற மனப்போக்கு எனக்கில்லை.

நான் சொல்லவந்தது பிட்ஸா விற்கும் அந்தக் கடையின் பிராண்ட் இமேஜ் வேறு எந்தக் கடையில் நின்றாலும் கெடும் என்பதுதான். அது அதி உயர்தர ரெஸ்டாரண்ட் வாசலாகவும் இருக்கலாம். அந்தக் கோணத்தில்மட்டுமே இதனை எடுத்துக்கொள்ளவும். வேறு அர்த்தங்கள் தொனித்தால் அது என் பிழையே. மன்னித்துவிடுங்கள்.

– என். சொக்கன்,
சேலம்.

‘போகும் ஸார், ஆனா, மலையாள மனோரமா வண்டி கள்ளுக்கடை முன்னாடி நிக்கக்கூடாது’ சபாஷ்…
https://www.scientificjudgment.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,745 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2008
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
%d bloggers like this: