மனம் போன போக்கில்

பயணம்தோறும்

Posted on: August 17, 2011

’அது தஞ்சாவூர் பெயின்டிங்தானே?’

ஃபோனில் மெயில் மேய்ந்துகொண்டிருந்தவன் அந்தக் கடைசிக் கேள்விக்குறியில்தான் கவனம் கலைந்து நிமிர்ந்தேன். பரபரப்பாக வெளியே பார்த்தால் சுவர் போஸ்டரில் கன்னட ஹீரோ ஒருவர்தான் முறைத்தார். ‘எந்த பெயின்டிங்? எங்கே?’

’அந்தத் தெரு முனையில ஒரு சின்னக் கடை வாசல்ல’ என்று பின்னால் கை காட்டினார் மனைவி. ‘நீ பார்க்கறதுக்குள்ள டாக்ஸி திரும்பிடுச்சு!’

‘சரி விடு, அடுத்தவாட்டி பார்த்துக்கலாம். இப்ப திரும்பிப் போகவா முடியும்?’

எங்கள் வீட்டிலிருந்து ரயில்வே நிலையம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தக்கனூண்டு தெரு அது. அதன் மூலையில் இன்னும் தக்கனூண்டாக ஒரு கடை. அதன் வாசலில்தான் சம்பந்தப்பட்ட ‘பெயின்டிங்’ நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. நான் சில விநாடிகள் தாமதமாக நிமிர்ந்துவிட்டதால், அது தஞ்சாவூர்ப் படைப்புதானா என்று உறுதி செய்துகொள்ளமுடியாமல்போனது.

அந்த விஷயத்தை நான் அதோடு மறந்துவிட்டேன். ஆனால் மனைவியார் மறக்கவில்லை. ரயில் ஏறி ஊருக்குச் சென்று திரும்பி பெங்களூர் ஸ்டேஷனில் இறங்கி டாக்ஸிக்குள் நுழைந்ததும் கேட்டார். ‘இப்ப அந்தக் கடை வழியா போவோமா?’

‘எந்தக் கடை?’

‘அன்னிக்கு தஞ்சாவூர் பெயின்டிங் பார்த்தோமே, அந்தக் கடை!’

’முதல்ல அது தஞ்சாவூர் பெயின்டிங்கா-ன்னு தெரியாது, அப்படியே இருந்தாலும், பார்த்தோம் இல்லை, நீமட்டும்தான் பார்த்தே.’

‘கிராமர் கெடக்குது கழுதை, நாம அந்தக் கடை வழியாப் போவோமா-ன்னு சொல்லு முதல்ல.’

’ம்ஹூம், அது ஒன் வே, நாம இப்ப வேற வழியா வீட்டுக்குப் போறோம்.’

சட்டென்று மனைவியார் முகம் சுருங்கிவிட்டது. ‘ஓகே’ என்றார் சுரத்தே இல்லாமல்.

சில வாரங்கள் கழித்து, இன்னொரு வெள்ளிக்கிழமை, இன்னொரு பயணம், இன்னொரு டாக்ஸி, ஆனால் அதே தெரு, உள்ளே நுழையும்போதே சொல்லிவிட்டார், ‘லெஃப்ட்ல பாரு, அந்தக் கடை வரும், வாசல்லயே ஒரு கிருஷ்ணர் ஓவியம் இருக்கும், அதைப் பார்த்துத் தஞ்சாவூர் பெயின்டிங்கான்னு சொல்லு.’

‘ஏம்மா காமெடி பண்றே? அன்னிக்கு நீ பார்த்த பெயின்டிங் இன்னிக்கும் அதே இடத்தில இருக்குமா?’ கிண்டலாகக் கேட்டேன். ‘இதுக்குள்ள அது வித்துப்போயிருக்கும்.’

’இல்லை, அங்கேயேதான் இருக்கு, பாரு’ சட்டென்று என் முகத்தைத் திருப்பிவிட்டார்.

பார்த்தேன். ரசித்தேன். தஞ்சாவூர் ஓவியம்தான். அதைச் சொன்னதும் மனைவியார் முகத்தில் புன்னகை ‘நான் அப்பவே சொன்னேன்ல, அது தஞ்சாவூர் பெயின்டிங்தான்!’ என்றார் மகளிடம்.

சிறிது நேரம் கழித்து, அடுத்த கேள்வி. ‘என்ன விலை இருக்கும்?’

எனக்குத் தெரியவில்லை. அதிக ரிஸ்க் எடுக்காமல் ‘ஃப்யூ தௌசண்ட்ஸ்?’ என்றேன் மையமாக.

‘யம்மாடி! அவ்ளோ விலையா?’

‘பின்னே? ஒவ்வொண்ணும் கையில செய்யறதில்லையா?’

அவர் யோசித்தார். பின்னர் ’அத்தனை பெரிய ஓவியம் மாட்டறதுக்கு நம்ம வீட்ல இடம் இல்லை’ என்றார்.

’உண்மைதான். லெட்ஸ் லீவ் இட்.’

அதெப்படி விடமுடியும்? சில நிமிடங்கள் கழித்து அடுத்த கேள்வி. ‘இதேமாதிரி ஓவியம் சின்னதா கம்மி விலையில கிடைக்குமா?’

‘எனக்குத் தெரியலையே!’

‘விசாரிப்போம்.’

‘எப்போ?’

‘அடுத்தவாட்டி!’

நிஜமாகவே, அடுத்தமுறை ஊருக்குச் செல்வதுவரை அவர் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இப்படி ஓர் ஓவியத்தை வாங்க விரும்பியதாகச் சுவடுகள்கூடக் காட்டவில்லை. ஆனால் அடுத்த பயணத்துக்காக வேறொரு டாக்ஸியில் ஏறி அதே தெருவில் நுழைந்து அதே முனையை நெருங்கியதும் அவரது கண்களில் பரவசம் தொற்றிக்கொண்டது. ‘அந்தத் தஞ்சாவூர் பெயின்டிங், விசாரிக்கணும்!’ என்றார்.

சில நிமிடங்களில் அதே கடை, வாசலில் அதே கிருஷ்ணர் ஓவியம் (யாரும் வாங்கவில்லைபோல ) தொங்கிக்கொண்டிருந்தது.

இந்தமுறை ஒரே ஒரு வித்தியாசம், என் தலை உருளவில்லை. மனைவியாரே ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார், கடை வாசலில் உட்கார்ந்திருந்தவரிடம் ‘இது என்ன விலை?’ என்று கேட்டார்.

தஞ்சாவூர் ஓவியத்தை ஓடும் காரில் இருந்து விலை கேட்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. திணறினார். அவர் வார்த்தைகளைக் கவ்விப்பிடித்துப் பதில் சொல்வதற்குள் எங்கள் டாக்ஸி அந்தத் தெருவைக் கடந்து சென்றுவிட்டது.

இதுவரை மூன்று பயணங்கள் ஆச்சா? போன வாரம் நான்காவது பயணம். இந்தமுறை மனைவியார் டாக்ஸிக்காரரிடம் சொல்லிவிட்டார். ‘அந்தத் தெரு முனையில கொஞ்சம் மெதுவாப் போங்க.’

’ஓகே மேடம்!’

டாக்ஸி மெதுவாகச் சென்றது. மனைவியார் எட்டிப் பார்த்து ’இதுமாதிரி சின்ன பெயின்டிங் கிடைக்குமா?’ என்றார்.

‘கிடைக்கும் மேடம், வாங்க!’ என்றார் அவர். ‘நிறைய இருக்கு, நிதானமாப் பார்த்து வாங்கலாம். விலையும் அதிகமில்லை!’

மனைவியார் பதில் சொல்வதற்குள் கார் திரும்பிவிட்டது. ‘நிறுத்தணுமா மேடம்?’ என்றார் டிரைவர்.

‘வேண்டாம். அடுத்தவாட்டி பார்த்துக்கலாம்.’

எனக்கு நடப்பது ஓரளவு புரிந்துவிட்டதால் கொஞ்சம் சமாதான முயற்சியில் இறங்கினேன். ‘எச்சூச்மி, நாம இந்த இடத்துக்கு நிதானமா வரப்போறதில்லை. எப்பவும் ரயில்வே ஸ்டேஷன் போற வழியில எட்டிப்பார்ப்போம், இப்படி ஒவ்வொரு ட்ரிப்பின்போதும் அரை நிமிஷம் அரை நிமிஷமாப் பேசிகிட்டிருந்தா நீ எப்பவும் அந்தத் தஞ்சாவூர் பெயின்டிங்கை வாங்கமுடியாது.’

‘ஸோ? இப்ப என்ன செய்யலாம்ங்கற?’

‘காரை நிறுத்தச் சொல்றேன், நீ போய் அந்தச் சின்ன பெயின்டிங்ஸைப் பார்த்து விலை விசாரிச்சுட்டு வா, ஓகே-ன்னா வாங்கிடு.’

‘சேச்சே, அதைத் தூக்கிட்டு ஊருக்குப் போகமுடியுமா? உடைஞ்சுடாது?’

‘அப்ப வேற என்னதான் வழி?’

’பார்த்துக்கலாம்.’

அவ்வளவுதான். விவாதம் முடிந்தது. நான் வழக்கம்போல் தலையில் அடித்துக்கொண்டு ஒதுங்கிவிட்டேன்.

அப்புறம் ஒரு யோசனை, அடுத்த மாதம் மனைவியாருக்குப் பிறந்தநாள் வருகிறது. அவருக்கு சர்ப்ரைஸ் பரிசாக அந்தத் தஞ்சாவூர் ஓவியத்தை வாங்கிக் கொடுத்துவிட்டால் என்ன?

செய்யலாம். ஆனால் ஒரே பிரச்னை, அவர் நிஜமாகவே தஞ்சாவூர் ஓவியம் வாங்க விரும்புகிறாரா, இல்லை சும்மா (டாக்ஸி) விண்டோ ஷாப்பிங்கா என்று எனக்கு இதுவரை புரியவில்லை. அவசரப்பட்டு வாங்கிக்கொடுத்துவிட்டு அப்புறம் யார் திட்டு வாங்குவது? பயணம்தோறும் அரை நிமிடம் என்ற விகிதத்தில் அவரே நிதானமாக அதைப் பேரம் பேசி வாங்கட்டும். வேடிக்கை பார்க்க நான் ரெடி!

***

என். சொக்கன் …

17 08 2011

20 Responses to "பயணம்தோறும்"

“பயணம்தோறும் அரை நிமிடம் என்ற விகிதத்தில் அவரே நிதானமாக அதைப் பேரம் பேசி வாங்கட்டும். வேடிக்கை பார்க்க நான் ரெடி!”

உங்களுக்கு லொள்ளு (இல்லாட்டி தகிரியம், they are both not mutually exclusive in this instance) சாஸ்த்தீங்கண்ணோவ்.

வீட்டுக்கு வீடு வாசப்படி.

அருமையான முடிவு.
வாழ்த்துக்கள்.

🙂

vanakkam,
I am also residing in Bangalore. Please let me know where is this shop situated in Bangalore.

>>அவசரப்பட்டு வாங்கிக்கொடுத்துவிட்டு அப்புறம் யார் திட்டு வாங்குவது?

சூப்பர் ஸார். நீங்க பொழச்சுப்பீங்க 🙂

‘தக்கனூண்டு’ என்ற வார்த்தையை நானும் உபயோகிப்பேன் ஆனால் பலருக்கு புரிவது இல்லை. இந்த வார்த்தை எப்படி வந்ததுனு ஒங்க கிட்டதான் கேக்க முடியும். தெரிஞ்சா சொல்லிடுங்க சார்.

:> உங்கூட்டம்மணிமாதிரியே எங்கூட்டம்மணியும் நெட்ல படிக்கறதில்லீங்க டாக்டர், அந்தத் தெகிரியம்தான் 😉

அடடே, உங்க வூட்லயுமா? 😉

நன்றி :))

மர்மச் சிரிப்பையா!

:>

இடத்தின் பெயர் தெரியவில்லை – இண்டோர் ஹாக்கி ஸ்டேடியம் அருகே, ஃபுட்வேர்ல்டுக்குச் சற்று முன்பாக

பின்னே? எத்தனை வருஷ ‘சர்வீஸ்’ 😉

தெரியலீங்களே, ட்விட்டர்ல கேட்போம்

Hello chokkan sir, if u want next month or oct month i will go to my native (thanjavur) for long live. if u dnt mine, i will buy for u ..

வாழ்க்கையில் நடக்கும் ஒரு சிறு சம்பவத்தைக்கூட எப்படி நகைச்சுவையாக எடுத்து கொடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். நன்றி.

நீங்கள் கேட்டதே பெரிய சந்தோஷம். நன்றி நண்பா!

நன்றி கிருஷ்ணகுமார் 🙂

Leave a comment

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,538 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2011
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031