சிம்ம வம்சம்
Posted February 28, 2009
on:- In: Books | India | Reading | Reviews | Sri Lanka | Tamil | Translation | Uncategorized
- 8 Comments
இலங்கையில் ஓர் அரசன். அவனுக்கு இரண்டு மகன்கள்.
தன்னுடைய மகன்களுக்கு நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுக்க நினைத்த அரசன், ஐநூறு புத்த பிட்சுகளை அழைக்கிறான். அவர்களுக்கு நல்ல விருந்துச் சாப்பாடு போட்டு உபசரிக்கிறான்.
விருந்து முடிந்தபிறகு, பிட்சுக்கள் எல்லோரும் சாப்பிட்டு மீதி இருக்கும் உணவை அரசன் மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறான். அதைத் தனித்தனி தட்டுகளில் வைத்துவிட்டு, தன் மகன்களை அழைக்கிறான்.
’கண்ணுங்களா, நம்ம குடும்பத்தை, குலத்தைப் பாதுகாக்கிறவர்கள் இந்த பிட்சுகள்தான். அவர்களை எப்போதும் மறக்கமாட்டோம்-ங்கற நினைப்போட இந்த முதல் தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’
அரசனின் மகன்கள் மறுபேச்சு இல்லாமல் அந்தச் சாப்பாட்டை உண்டு முடிக்கிறார்கள். அடுத்து, இரண்டாவது தட்டைக் காண்பிக்கிறான் அரசன்.
‘அண்ணன், தம்பி நீங்க ரெண்டு பேரும் எப்போதும் சண்டை போட்டுக்கக்கூடாது, ஒண்ணா ஒற்றுமையா வாழணும், அந்த உறுதியோட இந்த ரெண்டாவது தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’
மறுபடியும், அரசனின் மகன்கள் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறார்கள். அரசன் கடைசியாக மிச்சம் உள்ள மூன்றாவது தட்டைக் காண்பித்துச் சொல்கிறான்:
‘நம்ம ஊர்ல உள்ள தமிழர்களோட நீங்க எப்பவும் சண்டை போடக்கூடாது, அதுக்காக இந்த மூணாவது தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’
இப்போது, அந்த இளவரசர்களின் முகம் மாறுகிறது. தட்டைத் தள்ளிவிடுகிறார்கள், சாப்பிட மறுத்துவிடுகிறார்கள்.
ஒருபக்கம், பத்து, பன்னிரண்டு வயதுச் சின்னப் பையன்களுக்குச் சக மனிதர்கள்மீது இத்தனை வெறுப்பா, பகைமை உணர்ச்சியா என்கிற கேள்வி. இன்னொருபக்கம், இன்றைய இலங்கையில் நடைபெறும் படுகொலைகளின் பின்னணியில் இந்தக் கதையை யோசித்துப் பார்க்கும்போது, நிஜமாகவே அதிர்ச்சியாகதான் இருக்கிறது.
இந்தக் கதை இடம்பெற்றிருக்கும் நூல், மகா வம்சம். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் மஹாநாம தேரா என்பவரால் தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகம், இலங்கையின் பூர்வ சரித்திரமாக மதிக்கப்படுகிறது.
நிஜமாகவே மகா வம்சம் சரித்திரம்தானா? அல்லது, முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட கதைகள், மிகை உணர்ச்சிகளின் தொகுப்பா? உண்மை இந்த இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கலாம்.
சில ஆண்டுகளுக்குமுன்னால் ஏதோ ஒரு பத்திரிகைக் கட்டுரைக்கான ஒரு தகவலைத் தேடி மகா வம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அதில் ஆங்காங்கே தென்பட்ட ‘மேஜிக்கல்’ அம்சங்கள் வியப்பூட்டின. பின்நவீனத்துவ பாணியில் ஓர் இதிகாசத்தை யாரோ எழுதியிருக்கிறார்கள் என்பதுபோல் அரைகுறையாகப் புரிந்துகொண்டேன். அத்துடன் அதை மறந்துவிட்டேன்.
அதன்பிறகுதான் மகா வம்சம் தமிழில் வெளிவந்தது. இதனை மொழிபெயர்த்திருப்பவர், ஆர். பி. சாரதி. (கிழக்கு பதிப்பக வெளியீடு – ஜனவரி 2007 – 238 பக்கங்கள் – விலை: ரூ 130/-)
இந்த நூலின் பின்னட்டையிலிருந்து ஒரு வாசகம்:
சிங்களப் பேரினவாதம்’ என்று தமிழர்களால் வருணிக்கப்பட்டு, இன்றளவும் இலங்கையில் கொழுத்து விட்டெரியும் இனப் பிரச்னையின் வேர், மகாவம்சத்தில் இருந்துதான் உதிக்கிறது. அதனால்தான், சர்ச்சைக்குரிய ஒரு நூலாக மகா வம்சம் கருதப்படுகிறது
மகா வம்சத்தைத் தமிழர்கள் ஏற்கிறார்களோ, புறக்கணிக்கிறார்களோ, சிங்களவர்கள் இதனை ஒரு புனித நூலாகக் கருதுகிறார்கள். மூன்றாவது தட்டுச் சோற்றைச் சாப்பிட மறுத்த இளவரசர்களைப்போல, அவர்கள் முரட்டுத்தனமாகத் தமிழர்கள்மீது இன்னும் பகைமை கொண்டிருப்பதன் ஆதி காரணம் இதுவாக இருக்கலாம்.
அப்படி என்னதான் சொல்கிறது மகா வம்சம்?
நம் ஊர் ராமாயணம், மகா பாரதம்போல் மகா வம்சத்தில் சுவாரஸ்யமான ஒரு கதைத் தொடர்ச்சி இல்லை. வரிசையாக இலங்கையை ஆண்ட அரசர்களின் வாழ்க்கைக் கதைதான். ஏதோ ஓர் அரசர், அவருடைய புத்த மதப் பிரியம், பிட்சுக்கள்மீது அவர் செலுத்திய மரியாதை, கட்டிய கோவில்கள், நிகழ்த்திய மதமாற்றங்கள், அப்புறம் அடுத்த அரசர் என்று கோடு போட்டதுபோல் நீண்டு செல்லும் பதிவுகள்.
மதன் எழுதிய ‘வந்தார்கள், வென்றார்கள்’ படித்தவர்களுக்கு மகா வம்சம் செம போர் அடிக்கும். காரணம், முகலாய ஆட்சியின் மிகச் சுவாரஸ்யமான சம்பவங்களை நேர்த்தியாகத் தொகுத்துச் சுவையான கதைப் பின்னணியில் விவரித்திருந்தார் மதன். அதற்கு நேரெதிராக, மகா வம்சத்தில் ஒரே கதையைப் பல அத்தியாயங்களாகக் காபி – பேஸ்ட் செய்து படிப்பதுபோல் இருக்கிறது.
ராமாயணம், மகாபாரதம், முகலாய சரித்திரம், மகா வம்சம் நான்கையும் ஒரே புள்ளியில் வைத்து ஒப்பிடுவது சரியில்லைதான். ஆனாலும், மகா வம்சம்மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் படிக்கத் தொடங்கியவர்களுக்கு அது ஓர் ஒழுங்கற்ற கட்டமைப்பு கொண்ட பிரதியாகத் தோன்றுவது சாத்தியமே.
நல்லவேளையாக, ஆர். பி. சாரதி அவர்களின் சரளமான தமிழ் மொழிபெயர்ப்பு வாசிக்கச் சுகமாக இருக்கிறது. குறிப்பாக, ஆங்காங்கே தென்படும் மாந்த்ரீக எதார்த்த (Magical Realism) அம்சங்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. உதாரணத்துக்குச் சிலது:
- ஓர் இளவரசி, யாத்திரை போகிறாள். அவள் போன கோஷ்டியை ஒரு சிங்கம் தாக்குகிறது. ஆனால், அவளைப் பார்த்ததும் காதல் கொண்டு, வாலை ஆட்டிக்கொண்டு, காதுகளைப் பின்னே தள்ளிக்கொண்டு பக்கத்தில் வருகிறது. அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். சிங்க வடிவத்தில் அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள். (இங்கிருந்துதான் ‘சிங்கள’ இனம் தொடங்குகிறது)
- இன்னோர் இடத்தில், ஏரியிலிருந்து கிளிகள் தொண்ணூறாயிரம் வண்டிச் சுமை நெல்லைக் கொண்டுவருகின்றன. அதைச் சுண்டெலிகள் அரிசி முனை முறியாமல், உமி, தவிடு இல்லாமல் கைக்குத்தல் அரிசியாகச் சுத்தமாக்குகின்றன
- பாலி என்ற இளவரசி, சாப்பாட்டுக்காகத் தட்டு வேண்டி ஆல மர இலைகளைப் பறிக்கிறாள். உடனே அவை தங்கப் பாத்திரங்களாக மாறுகின்றன
- போதி மரத்தை வெட்டக்கூடாது. அதுவே விடுபட்டுக் கீழே விழுந்தால்தான் உண்டு. அதற்காக ஒரு ரசாயன(?)ப் பேனா இருக்கிறது. தங்கப் பிடி வைத்த அந்தப் பேனாவால் போதி மரக் கிளையில் ஒரு கோடு போட்டுவிட்டு வணங்கினால், மரம் தானே துண்டாகிக் கீழே விழுந்து நிற்கிறது
இப்படித் தொடங்கும் புத்தகம், கொஞ்சம் கொஞ்சமாக மாயங்கள் குறைந்து, அற்புதங்கள் என்று சொல்லத் தகுந்த விஷயங்கள் அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் கதைகள்மட்டும் வருகின்றன. பின்னர் ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் ஒரு தத்துவம் தவறாமல் தென்படுகிறது. இப்படி:
புனிதர்கள் மிகச் சிறந்த ஆசிகளைப் பெற, சிறப்பான தூய பணிகளைச் செய்வார்கள். அவ்வாறு சிறந்த தூய பலரைத் தொண்டர்களாகப் பெறுவதற்காக, அவர்களையும் தூய மனத்துடன் பணியாற்றச் செய்வார்கள்
மகா வம்சம் இலங்கையின் சரித்திரமாகச் சொல்லப்பட்டாலும், ஆங்காங்கே இந்திய வாசனையும் அடிக்கிறது. சில சமயங்களில் நாம் நன்கு கேட்டிருக்கக்கூடிய உள்ளூர்க் கதைகளுக்கு வெளிநாட்டுச் சாயம் பூசியதுபோல் தோன்றுகிறது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக, எலரா என்ற தமிழ் அரசனின் கதை.
எலராவுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப்பட்டிருக்கிறது. நீதி கேட்டு வருகிறவர்கள் எந்நேரமும் அதை அடிக்கலாம்.
ஒருநாள், எலராவின் மகன் தேரில் போகும்போது தெரியாமல் ஒரு கன்றுக் குட்டியைக் கொன்றுவிடுகிறான். வேதனையில் அந்தப் பசு எலராவுடைய மணியை அடிக்க, அவன் அதே தேர்ச் சக்கரத்தின் அடியின் தன் மகனைக் கிடத்திக் கொன்று தண்டனை கொடுக்கிறான்.
நம் ஊர் மனு நீதிச் சோழன் கதையும் கிட்டத்தட்ட இதேதான். ஆனால் எலராவின் கதையில் இன்னொரு சம்பவம் கூடுதலாக இருக்கிறது.
இன்னொரு நாள், எல்ரா வீதியில் போய்க்கொண்டிருக்கும்போது, அவனுடைய வாகனத்தின் முனை புத்த ஸ்தூபியின்மீது இடித்துவிடுகிறது. வேண்டுமென்றே செய்யாவிட்டாலும், அது தவறுதான் என்பதை உணர்ந்த அரசன் எல்ரா, வீதியில் படுத்துக்கொண்டு, தன்மீது தேரை ஏற்றிக் கொல்லும்படி உத்தரவிடுகிறான். புத்த பிட்சுக்கள் அவனை மன்னித்து ஆசி வழங்குகிறார்கள்.
இன்னோர் அரசனுக்கு, பத்து மகன்கள், ஒரு மகள். அந்தப் பெண் பிறந்ததும், ‘இவளுடைய மகன், தன்னுடைய மாமன்களை, அதாவது அந்தப் பெண்ணின் அண்ணன்களைக் கொல்லப்போகிறான்’ என்று ஜோதிடம் சொல்கிறது.
பதறிப்போன அண்ணன்கள், கம்சனைப்போல் ரொம்ப நாள் காத்திருக்காமல், உடனே தங்களுடைய தங்கையைக் கொன்றுவிட முடிவெடுக்கிறார்கள். அவர்களுடைய அப்பா தலையிட்டுத் தடுத்து நிறுத்துகிறார்.
பிறகு, அவர்கள் அந்தத் தங்கையைச் சிறை வைக்கிறார்கள். அப்படியும் அவள் ஒருவனைக் காதலித்து, கல்யாணம் செய்து, குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை கை மாறி இன்னோர் இடத்தில் வளர்கிறது.
இதைக் கேள்விப்பட்ட மாமன்கள், அந்த ஏரியாவில் உள்ள குழந்தைகளையெல்லாம் கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள். அப்படியும் அந்தக் குழந்தைமட்டும் என்னென்னவோ மாயங்களைச் செய்து வளர்கிறது, அதுவும் இடையனாக.
இப்படிப் பல இடங்களில் மகா வம்சமும் இந்தியாவில் நாம் கேட்டிருக்கக்கூடிய இதிகாச, புராண, செவி வழிச் செய்திகள், குழந்தைக் கதைகளும் கலந்து வருகின்றன – சம்பவங்களில்மட்டுமில்லை, சில வர்ணனைகளில்கூட இதுபோன்ற ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யம்தான்.
கடைசியாக, புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு குட்டிக் கதைகளைச் சொல்லவேண்டும்.
தேவனாம் பிரியதிசா என்ற ஓர் அரசன். அவனைச் சந்திக்கும் துறவிகள் அரசனைப் பரிசோதிப்பதற்காகச் சில கேள்விகளைக் கேட்கிறார்கள்.
‘அரசே, இந்த மரத்தின் பெயர் என்ன?’
‘மாமரம்’
‘இதன் பக்கத்தில் மேலும் ஒரு மாமரம் இருக்கிறதா?’
‘பல மாமரங்கள் இருக்கின்றன’
‘மாமரங்களையடுத்து வேறு மரங்கள் இருக்கின்றனவா?’
‘மாமரம் தவிரவும் பல வேறு மரங்கள் இருக்கின்றன’
‘இவற்றைத் தவிர வேறு ஏதாவது மரம் இருக்கிறதா?’
‘இதோ, இந்த மாமரம்தான் இருக்கிறதே?’
கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடியை நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுங்கள். அடுத்த கேள்வியையும் படித்துவிடுங்கள்:
’அரசே, உனக்கு உறவினர்கள் இருக்கிறார்களா?’
‘பலர் இருக்கிறார்கள் ஐயா’
‘உறவினர்கள் அல்லாத பலரும்கூட இருக்கிறார்கள் அல்லவா?’
‘உறவினர்களை விட அதிகமான அளவில் இருக்கிறார்கள்’
‘நீ கூறிய உறவினர்கள், உறவினரல்லாத பிறரைத் தவிரவும் இன்னும் யாராவது இருக்கிறார்களா?’
‘நான் இருக்கிறேனே ஐயா’
‘அரசே, நீ புத்திசாலிதான்’
நேர்முகத் தேர்வில் அடுத்தடுத்து ஒரேமாதிரி இரண்டு கேள்விகள் கேட்கக்கூடாது என்கிற நவீன மனித வளத் தத்துவம் அந்தத் துறவிக்குத் தெரியவில்லைபோல, அரசனின் புத்திசாலித்தனத்தை தாராளமாகப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.
இந்த அரசன் புத்திசாலி என்றால், இன்னோர் அரசன் வீண் குறும்புத்தனத்தால் அழிகிறான். அவன் கதை இப்படி:
ஒரு காவலன் அரசனைப்போலவே தோற்றம் கொண்டிருந்தான். வேடிக்கைக்காக, அவனை அரசனைப்போலவே அலங்கரித்து, சிம்மாசனத்திலும் அமரவைப்பான். அரசன் காவல்காரனுடைய உடை, தலைப்பாகைகளை அணிவான். கையில் கோலுடன் காவல் பணி மேற்கொள்வான்.
ஒருநாள், இவ்வாறு வேடமிட்ட காவல்கார அரசனைப் பார்த்து, காவல்கார வேடத்தில் இருந்த உண்மையான அரசன் பலமாகச் சிரித்தான்.
‘என் முன்னே காவல்காரன் சிரிப்பதா?’ என்று அவனைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டுவிட்டான் காவல்கார அரசன்.
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை, ஒருவர் இலங்கை அரியணையில் அமர்ந்தாலே, இதுபோன்ற கிறுக்குத்தனங்களும், இரக்கமில்லாத மனமும் தானாக வந்துவிடும்போலிருக்கிறது!
***
என். சொக்கன் …
28 02 2009
8 Responses to "சிம்ம வம்சம்"

Good One. We are also searched “Villian Role” in Ramayana @ Srilanka only. Where is Ayodhi and where is Srilanka.


மகா வம்சம் என்பது சிங்கள நாய்களால் இட்டுக் கட்டப் பட்ட கதை.


வணக்கம்.
உங்கள் தளத்தில் பின்னூட்டமாக ஒரு நண்பர் தந்திருந்த ’புத்தன் யார்’ என்ற கட்டுரையை படித்தேன்.
ஒரு உணர்வுள்ள தமிழனாகவும் அதே சமயத்தில் பவ்தனாகவும் வாழும் என்னை போன்ற சிறுபான்மையானவர்களுக்கு இந்த காலம் மிக துயரத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு காலம்.புத்தர் ஒரு தெய்வ பிறவி அல்ல என்பது அவராகவே சொன்ன ஓர் உண்மை.ஒன்று தெரியுமா மததாபகர்களிலேயே இந்த உண்மையை ஒப்பு கொண்ட ஒரே உத்தமர் அவர் மட்டும் தான்.புத்த மதத்தில் சேர்ந்தவர்களெல்லாம் கொலைகாரர்களும் கொல்லைகாரர்கலும்தான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.ஒரு நல்ல மதத்தின் செயல் நல்லவர்களை ஒன்றிணைப்பது அல்ல.தீயவர்களை திருத்துவதே.புத்தர் அவர் வாழ்வில் எந்த அற்புதங்களையும் புரிந்ததில்லை.தன்னை ஒரு சாதரண மனிதனாகவே தன்னை பிரகடன படுத்திக்கொண்டார்.அதே போல அவர் சிறு வயதிலிருந்து எந்த துன்பமும் தெரியாமல் வளர்ந்தார் என்பது அப்பட்டமான பொய்.இது சாத்தியமாகுமா?அவர் சிறு வயதிலிருந்தே துன்பங்களை நன்கறிவார்.துன்பங்களுக்கான காரணம் என்ன என்பதற்கான தேடல் அவருக்கு சிறு வயதிலேயே இருந்தது.இன்று புத்தம் உலக நாடுகளில் ரத்தம் குடிக்கிறது என்றால் அதற்க்கு காரணம் அந்த நாடுகளில் அங்குள்ள ஆளும் வர்க்கங்களால் அது தவறாக பயன் படுத்த பட்டுள்ளது.அசோகன் புத்த மதத்திற்கு காரணம் புத்த மதம் வெகுவான ஏழை மக்களால் அதிகம் நேசிக்க பட்டதுதான்.தானும் புத்தத்தை ஏற்பதன் மூலம் மக்களை அவன் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றான்.இலங்கையிலும் அங்கு புத்தத்தை அரசர்கள் மற்றும் இன்றைய அரசியல்வாதிகள் ஆகியோர் அவர்கள் மக்களை ஏய்த்து பிழைக்கவே பயன் படுத்துகின்றனர்.இன்னும் விரிவாக பேச அதில் எவ்வளவோ விடயங்கள் உள்ளன.சும்மா வெறுமனே பேசிவிட்டு போவது முட்டாள்தனம்.மேலும் விவரங்களுக்கு டாக்டர்.அம்பேத்கரின் ‘budda and his dhamma’ என்ற புத்தகத்தை படிக்கவும்.நன்றி .

1 | SnapJudge
March 1, 2009 at 8:20 am
நல்ல அறிமுகம். நன்றி