மனம் போன போக்கில்

குழந்தைப் பேச்சு

Posted on: November 5, 2009

’ஹலோ, மணி ஏழே கால், எல்லோரும் எழுந்திருங்க’

எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. அது என் தர்ம பத்தினியுடையது.

மனைவி சொல் மீறிய பாவம் எனக்கு வேண்டுமா? சட்டென்று போர்வையை உதறிவிட்டு பத்மாசன போஸில் எழுந்து உட்கார்ந்தேன். உள்ளங்கைகளைத் தேய்த்து உம்மாச்சி பார்த்தேன். பக்கவாட்டுச் சுவரில் பிள்ளையார் தரிசனம், கழுத்தை எண்பது டிகிரி திருப்பினால் ராமரும் சீதையும், லட்சுமணன், அனுமனோடு, ஒரு காலைக்கு இத்தனை பக்தி போதும், எழுந்துகொண்டேன்.

மிகத் துல்லியமாக அதே விநாடியில் (முதல், இரண்டாவது, மூன்றாவது ‘உலுக்கல்’களுக்குப்பிறகு நான் எழுந்திருக்க எத்தனை நிமிடங்கள் ஆகும் என்கிற கணக்கு என் மனைவிக்கு ரொம்ப நன்றாகத் தெரியும்) சமையலறையிலிருந்து குரல் வந்தது, ‘எழுந்தாச்சா?’

‘ஆச்சு’

’அப்படியே அந்த மகராணியையும் எழுப்பிவிடு’

இங்கே ‘மகாராணி’ என்பது நங்கை. ஒவ்வொரு நாளும் உச்சந்தலைக்குமேல் ஒன்று, பக்கவாட்டில் இரண்டு, காலில் ஒன்று என்று நான்கு தலையணைகளுக்கு மத்தியில் ஒய்யாரமாகப் படுத்துத் தூங்குவதால் அப்படி ஒரு பெயர்.

’யம்மாடி, எழுந்திரும்மா’, நான் நங்கையை உலுக்கினேன், ‘ஸ்கூலுக்கு லேட்டாச்சு’

‘சும்மாயிருப்பா, இன்னிக்கு ஸ்கூல் லீவு’ என்றாள் நங்கை, ‘என்னைத் தூங்க விடு’

’நீ தினமும் இதைத்தான் சொல்றே, ஒழுங்கா எழுந்திரு’

’நெஜம்மா இன்னிக்கு ஸ்கூல் கிடையாதுப்பா, மிஸ் சொன்னாங்க’

‘சரி, நான் ஃபோன் பண்ணி விசாரிக்கறேன்’ அவளுடைய போர்வையை உருவி மடிக்க ஆரம்பித்தேன், ‘நீ இப்ப எழுந்திருக்காட்டி, அம்மா தண்ணியோட ரெடியா இருக்கா, அப்புறம் தலையெல்லாம் நனைஞ்சு நாசமாயிடும்’

நங்கை மனமில்லாமல் எழுந்து உட்கார்ந்தாள். கண்களைத் தேய்த்துக்கொண்டு கூடத்துக்குச் சென்று சோஃபாவில் விழுந்தாள்.

‘மறுபடி தூங்காதே, பேஸ்ட், பிரஷ்ஷை எடு’, அதட்டல் நங்கைக்கா, அல்லது எனக்கா என்று புரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று வாஷ் பேஸினில் தஞ்சமடைந்தேன்.

இதற்குமேல் விளக்கமாக எழுதினால் பத்திரி கோபித்துக்கொள்வார். ஆகவே, கொஞ்சம் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்துவிடுகிறேன்.

நான் காப்பியுடன், நங்கை ஹார்லிக்ஸுடன் சோஃபாவுக்குத் திரும்பியபோது, டிவியில் ஒரு மருத்துவர் நிதானமாகப் பேசிக்கொண்டிருந்தார், ‘டென்ஷன் ஏன் வருது தெரியுமா? எல்லாம் நம்ம மனசுலதான் இருக்கு, நீங்க டென்ஷன் இல்லைன்னு நினைச்சா டென்ஷனே இல்லை, டென்ஷன் இருக்குன்னு நினைச்சா டென்ஷன் இருக்கு, அவ்ளோதான், சிம்பிள்’

’இதைச் சொல்றதுக்கு ஒரு டாக்டர் வேணுமா? முதல்ல அந்த டிவியை ஆஃப் பண்ணு’ என்றபடி கம்ப்யூட்டரைத் திறந்தேன், ‘நீ ஹார்லிக்ஸ் குடிச்சாச்சா?’

’சுடுதுப்பா, கொஞ்சம் பொறு’

’ஓரக்கண்ணால டிவி பார்க்காதே, கெட்ட பழக்கம்’, ரிமோட்டைத் தேடி எடுத்துத் தொலைக்காட்சியை அணைத்தேன், ‘சீக்கிரம் குடிச்சு முடி, ஸ்கூல் வேன் வந்துடும்’

இந்த ‘ஸ்கூல் வேன்’ என்கிற வார்த்தை, எப்பேர்ப்பட்ட குழந்தைக்கும் சோம்பேறித்தனத்தை வரவழைக்கவல்லது. வேன் வந்துவிடப்போகிறது என்று தெரிந்தால்தான், அரை தம்ளர் ஹார்லிக்ஸ் குடிப்பதுமாதிரியான வேலைகளைக்கூட அவர்கள் ஸ்லோ மோஷனில் செய்யத் தொடங்குவார்கள்.

வழக்கம்போல், என் மனைவி நங்கையைத் தடுத்தாட்கொண்டார், ‘இன்னும் எத்தனை நாளைக்குதான் உனக்கு ஹார்லிக்ஸ் ஊட்டவேண்டியிருக்குமோ தெரியலை’ என்கிற அர்ச்சனையுடன், ‘சீக்கிரம் குடிச்சு முடி’ என்று அவர் ஊற்ற, ஊற்ற, நங்கை அதிவேகமாக விழுங்கி முடித்தாள்.

கடைசிச் சொட்டு ஹார்லிக்ஸ் காலியான மறுவிநாடி, குளியல் படலம் தொடங்கியது, ‘தண்ணி ரொம்பச் சுடுதும்மா’ என்று நங்கை கோபிப்பதும், ‘இதெல்லாம் ஒரு சூடா?’ என்று அவள் அம்மாவின் பதிலடிகளும் பின்னணியாகக் கொண்டு நான் அலுவலக மெயில்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

நங்கை குளித்து முடித்ததும், சூடாகச் சாப்பாடு வந்து இறங்கியது. அவளுக்குக் கதை சொல்லிச் சாப்பிடச் செய்யவேண்டியது என்னுடைய பொறுப்பு.

இன்றைக்கு நங்கையின் தேர்வு, ராஜா ராணிக் கதை. நான் எங்கேயோ படித்த ஒரு கதையை லேசாக மாற்றி புருடா விட ஆரம்பித்தேன். அவளுடைய தட்டில் இருந்த தோசைத் துண்டங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கதை நீண்டு, மெலிந்தது.

இந்தப் பக்கம் சாப்பாடு இறங்கிக்கொண்டிருக்க, பின்னால் தலைவாரல் படலம் ஆரம்பமானது, ‘ஸ்ஸ்ஸ், வலிக்குதும்மா’

‘அதுக்குதான் சொல்றேன், ஒழுங்கா பாய் கட் வெட்டிக்கோ-ன்னா கேட்கிறியா?’

’ம்ஹூம், முடியாது’ பெரிதாகத் தலையாட்டிய நங்கையின் வாயிலிருந்து தோசைத் துகள்களும் மிளகாய்ப் பொடியும் சிதறின, ‘பாய்ஸ்தான் முடி வெட்டிக்குவாங்க, நான் என்ன பாயா?’

’அப்படீன்னா கொஞ்ச நேரம் தலையை அசைக்காம ஒழுங்கா உட்கார்ந்திரு’

’சரி, நீ ஏன்ப்பா நிறுத்திட்டே? கதை சொல்லு’

நான் ட்விட்டரிலிருந்து விடுபட்டு மீண்டும் ராஜா ராணிக் கதைக்குத் திரும்பினேன், ‘அந்த ராஜாவுக்கு செம கோபமாம், வெளியே போ-ன்னு கத்தினாராம்’

‘ராஜாவுக்கு யார்மேல கோவம்?’

எனக்கே ஞாபகமில்லை. அப்போதைக்கு ஏதோ சொல்லிச் சமாளித்தேன். கதை வேறொரு ட்ராக்கில் தொடர்ந்தது.

ஒருவழியாக, எட்டரை நிமிடங்களில் தோசை தீர்ந்தது, கதை முடிந்தது, பின்னலும் ஒழுங்குபெற்றது, அடுத்து, ஸ்கூல் பேக் நிரப்பு படலம், ‘ஹோம் வொர்க் நோட் எங்கடி?’

’அங்கதாம்மா, டிவிக்குப் பக்கத்தில கிடக்கு’

’இப்படிச் சொல்ற நேரத்துக்கு எடுத்துகிட்டு வரலாம்ல? எல்லாம் நானே செய்யவேண்டியிருக்கு’

நங்கையின் பையில் ஒரு கைக்குட்டை, மூன்று ஹோம் வொர்க் நோட்டுகள், நொறுக்குத் தீனி டப்பா, மதியச் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் அனைத்தும் தஞ்சம் புகுந்தன, ‘இன்னிக்கும் கர்ச்சீப்பைத் தொலைச்சுட்டு வந்தேன்னா பிச்சுப்புடுவேன், செருப்பை மாட்டு’

’சாக்ஸ் காணோம்மா’

‘சாதாரண செருப்புதானே போடப்போறே? எதுக்குடி சாக்ஸ்?’

’எல்லோரும் சாக்ஸ் போட்டுகிட்டுதான் வரணும்ன்னு மிஸ் சொல்லியிருக்காங்க’

‘உங்க  மிஸ்க்குப் பொழப்பு என்ன’ என்றபடி நங்கையின் கால்கள் செருப்பினுள் திணிக்கப்பட்டன, ‘அப்பாவுக்கு டாட்டா சொல்லிட்டுக் கிளம்பு’

‘டாட்டா-ப்பா, ஈவினிங் பார்க்கலாம்’

நான் கையசைப்பதற்குள் கதவு மூடிக்கொண்டது. அப்போது மணி எட்டு இருபத்தைந்து.

சுமார் இருபது நிமிடங்கள் கழித்து, நங்கையும் அவள் அம்மாவும் சோர்வாகத் திரும்பிவந்தார்கள், ‘என்னாச்சு? ஸ்கூலுக்குப் போகலை?’

‘வேன் வரவே இல்லை’ என்றார் என் மனைவி, ‘நீ அந்த ட்ரைவருக்குக் கொஞ்சம் ஃபோன் பண்ணி விசாரி’

நான் அவருடைய நம்பரைத் தேடி எடுத்து அழைத்தேன். ‘ஹம் ஆப் கே ஹைன் கௌன்’ என்றது காலர் ட்யூன், அடுத்து வந்த வயலின் பின்னணி இசையில் லயிப்பதற்குள் யாரோ அரக்கத்தனமாகக் குறுக்கிட்டு ‘ஹலோ’ என்றார்கள், ‘சங்கர் ஹியர், நீங்க யாரு?’

‘நங்கையோட வீட்லேர்ந்து பேசறோம், இன்னும் வேன் வரலியே’

’இன்னிக்கு ஸ்கூல் லீவாச்சே சார்’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. குழந்தை ஆரம்பத்திலேயே இதைத்தானே சொன்னாள்? நான்தான் கேட்கவில்லை!

இப்போதும், என்னால் நம்பமுடியவில்லை. அவசரமாக நங்கையின் பள்ளி காலண்டரை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன், ‘நவம்பர் 5 – விடுமுறை – கனக ஜெயந்தி’ என்றது.

கனக ஜெயந்தி என்றால் என்ன பண்டிகை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘இன்னிக்கு லீவ்’ என்று நங்கை சொல்லியும் கேட்காமல், அவளை அலட்சியப்படுத்திவிட்டு முரட்டுத்தனமாக ஸ்கூலுக்குத் தயார் செய்தது பெரிய வேதனையாக இருக்கிறது.

மற்ற நாள்களிலாவது பரவாயில்லை, குழந்தை பள்ளிக்குப் போகவேண்டும், அதற்காகதான் அவளுடைய தூக்கத்தைக் கெடுக்கிறோம், சீக்கிரம் சாப்பிடச்சொல்லி வற்புறுத்துகிறோம், வேகவேகமாகத் தலை பின்னுகிறோம் என்று ஒரு (சுமாரான) காரணம் இருக்கிறது. இன்றைக்கு அப்படியில்லை. இது விடுமுறை நாள் என்று நங்கைக்குத் தெரிந்திருக்கிறது, அவள் அதைச் சொல்லியிருக்கிறாள், ஆனா ‘உனக்கென்ன தெரியும்’ என்று அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறாள், இந்த அலட்சியப்படுத்தலின் வலியை உணர்கிற வயது அவளுக்கு இல்லைதான், ஆனால் செய்த தப்பு எங்களை உறுத்தாமல் விடுமா?

குழந்தைகள்மீது பாசத்தைக் கொட்டி வளர்ப்பது ஒரு கோணம். அதனாலேயே அவர்களுடைய ஆளுமையைக் கவனிக்கத் தவறுவது இன்னொருபக்கம், இந்த முரணை எப்படி Balance செய்வது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், நங்கையே அதையும் கற்றுக்கொடுத்துவிடுவாள் என்றுதான் நினைக்கிறேன்!

***

என். சொக்கன் …

05 11 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

25 Responses to "குழந்தைப் பேச்சு"

அருமையான பதிவு. குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் சிரமத்தை மிக நகைச்சுவையாக சொல்லியிருக்கிறிங்க. ரொம்ப நன்றி.என்னுடைய 3 மாதம் குழந்தைக்கு நான் இப்பவே உங்களிடம் training எடுக்கனும்னு நினைக்கிறேன். 🙂

அப்படியே எங்க வீட்டில நடக்கிற மாதிரியே இருக்கு

ஓ..இதுதான் வீட்டுக்கு வீடு வாசப்படியோ 😉

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

இன்னிக்கு ‘கனக’ இல்லை, ‘கனகதாசர்’ ஜெயந்தி..

– சீனு

இன்று விடுமுறை என்பதை 10 நாட்களுக்கு முன்பாகவே சொல்லிவிட்டாள் என் மகள்.

உங்கள் மகளின் பள்ளி நாட்குறிப்பினை எடுத்து பார்த்திருந்தால் போதுமே.. என்ன சொக்கன் இப்படி செய்துட்டீங்களே…

//இந்த முரணை எப்படி Balance செய்வது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.//

இதில் முரண் என்பதெல்லாம் பெரிய வார்த்தை.

அருமையான பதிவு. விடுமுறை நாளை கவனிக்க மறந்ததை பதிவின் சுவாரஸ்யத்துக்காக மன்னித்து விடலாம். 🙂

நான், என் மனைவி மற்றும் என் மகன் மூன்று பேரும் தத்தம் காலண்டர்களை கூகிளில் ஷேர் செய்துள்ளபடியால் எல்லோருக்குமே ரிமைண்டர் வந்து விடும். [முக்கிய நாட்களை உடனுக்குடன் காலண்டரில் உள்ளீடு செய்து விடுகிறோம். அதற்கும் மறந்து போகுமானால் ஒன்றும் செய்வதற்கில்லை! 🙂 ]

பள்ளி இல்லை என்று சொன்னாள்(ல்) நீங்கள் நம்பாததால் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நீங்களே உங்கள் தவறை உணர்ந்து அதை மனதிலும், இணையத்திலும் பதியவும் வைத்துவிட்டாள்.

“இன்னா” செய்தார் நாண நன்னயம் செய்து விடலுக்கு உதாரணம் இது.

உங்க பதிவெல்லாம் சிறுகதை மாதிரியே இருக்கு. நடையும் அப்படியே.

இறுதியில் வரும் உங்கள் குறிப்புகள்தான் இது ஒரு பத்தி என்று காட்டுகிறது.

என்னுடைய சிபாரிசு (யாருடா கேட்டது?) உங்க பதிவுகளை அப்படியே புத்தகமாக கொண்டு வாருங்கள்.

சுவாரசியமான பகிர்விற்கு மிக்க நன்றி 🙂

ரொம்ப சுவாரஸ்யமா சொல்லிக்கிட்டே வந்துட்டு கடைசியில பாப்பாவுக்காக ஃபிலிங்க் 😦 பரவாயில்ல இன்னொரு லீவு நாளைக்கு – இன்னிக்கு நிகழ்ச்சி சாய்ஸ்ல விட்டுடுங்க :))

சுவாசிகா சொன்னதை நானும் என் மனைவியும் ரிபீட்டுகிறோம் “அப்படியே எங்க வீட்டில நடக்கிற மாதிரியே இருக்கு”

KSRK சார்,

கூட்டுக் குடும்பம் கேள்விபட்டிருக்கோம். நீங்க ’கூகுளிட்டு’க் குடும்பம் போல. 🙂

எடக்குமடக்கான கேள்வி. உங்கள் மனைவியின் பிறந்த நாளைக் கூகுள் கேலண்டரில் உள்ளிடுவது யார்? நீங்களா? உங்க மனைவியா?

அய்யோ பாவம் தல….இருங்க இருங்க போலீசுல சொல்றேன். ;)))

எங்க மாமா கூட கும்பாலி கதை என்று ஒன்றை சொல்லி சாவடிப்பார் , அது எனது இருபத்து வயது வரை (போன வருடம்) தொடர்ந்தது. கதை கேட்பதில் குழைந்தைகளுக்கு உள்ள ஆர்வமே தனி . என் அம்மா பள்ளியில் படிக்கும் பொழுது ஒரு பெண் குழ்ந்தை அழுவதை பொருட்படுத்தாமல் அது ஸ்கூலுக்கு போக தான் அடம்பிடிக்கிறது என்றெண்ணிக்கொண்டு ரோட்டில் அழைத்து சென்றார்கள் , கடைசியில் குழந்தையின் ஷூவிர்க்குள் தேள் !

நல்ல பதிவு.

இன்று நல்ல மழைகாரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துவிட்டது அரசு. டி.வி-யிலும் ஸ்க்ரால் நியூஸில் ஓடிக் கொண்டிருந்தது. குதூகலித்துக் கிடந்த என் பையனின் மகிழ்ச்சி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று ஃபோன் போட்டு கேட்டதற்கு இன்று அவன் பள்ளி இருக்கிறது என்றார்கள். அவசர அவசரமாகக் கிளம்பி ரெயின் கோட்டெல்லாம் போட்டு மழையில் நனைந்து கொண்டே போய் அவனை விட்டுவிட்டு வந்தேன். சுவாரஸ்யமே இல்லாமல் உள்ளே போனான். இதே மாதிரி வழக்கம்போல் ஸ்கூலுக்குக் கிளம்பத் தயாராகி கிளம்பும் நேரத்தில் ஃபோன் வந்து அன்றைக்கு பள்ளி விடுமுறை என்பார்கள். சந்தோஷத்தில் ஃபேன் வரை குதிப்பான் பையன். எல்லாமே நடக்கிறதுதான்.

குழந்தைகளிடம் நான் கவனித்திருக்கும் வினோதமான பழக்கம் இது. அவர்கள் சரியாகவும், நாம் தப்பாகவும் இருந்தாலும் நம்முடைய emphasis அதிகமாக இருக்கும் போது அதை அதிக எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டு விடுவது. மனிதர்களுக்கு knowledge ம் discipline ம் இந்த விகிதத்தில்தான் ஆரம்பிக்கிறது. ஒரு ஸ்டேஜில் knowledge அதிகம் என்கிற நினைப்பில் discipline ஐ சுத்தமாக forego செய்கிற லெவலுக்கு வந்து விடுகிறோம்.

http://kgjawarlal.wordpress.com

ஸ்ரீதர், மனைவியின் பிறந்த நாளை மட்டுமல்ல, எங்கள் திருமண நாளையும் உள்ளிட்டது சந்தேகமில்லாமல் அடியேன்தான் 🙂 இதெல்லாம் Repeat Yearly Option-னுடன் ஒரு முறை இட்டால் போதுமே. ஆயுள் பூராவும் உங்களை அடி வாங்காமல் காப்பாற்றும்.

Very True Mr. Jawahar .

அது யார் ‘கனகதாசர்’ ? கேட்டது மாதிரி இல்லை !!!!

நகைச்சுவை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது பதிவு முழுவதும். முக்கியமாக ட்ராக் மாறிப்போன ராஜா ராணி இடம் யதார்த்தத்தின் உச்சக்கட்டம்.

என்னுடைய தாழ்மையான கருத்து:

பதிவை இங்கே //இன்னிக்கு ஸ்கூல் லீவாச்சே சார்// முடித்திருந்தால் நீங்கள் சொல்லவந்த(சொன்ன) இன்ன பிற குறிப்புகள் வாசகர்களே யூகித்து (மனதுக்குள்)பூர்த்தி செய்துகொண்டு இருப்பார்கள்.

சொக்கன் சார் – நடப்பு நிகழ்வுகளை, சுவாரஸ்யமாகப் பதிந்துள்ளீர்கள். இரசித்துப் படித்தேன். நன்றி.

unga nadai,Sujatha Sir-ai pola ulladhu.sila samayangalil,adhukku kitta varugiradhu..

eppadi,indha thaakkam vandhadhu Sir?

ravisuga, சுவாசிகா, Srinivasan Narasimhan, அரவிந்தன், SRK, R Sathyamurthy, Sridhar Narayanan, ஆயில்யன், விஜய், Sridhar Narayanan, கோபிநாத், Prakash, சித்ரன், Jawahar, Kesava Pillai, விஜயசாரதி, kggouthaman, venkat,

நன்றி 🙂

//இன்னிக்கு ‘கனக’ இல்லை, ‘கனகதாசர்’ ஜெயந்தி..//

ஆமாம். இவர்தானே? –> http://en.wikipedia.org/wiki/Kanaka_Dasa

ஆனால் ஒன்று, எனக்குத் தெரிந்து கனகதாசர் ஜெயந்திக்கெல்லாம் எங்க ஸ்கூல் லீவ் விட்டது கிடையாது 🙂

//உங்கள் மகளின் பள்ளி நாட்குறிப்பினை எடுத்து பார்த்திருந்தால் போதுமே//

ஆமாங்க, இனிமே அதைச் செஞ்சுடறதா இருக்கோம். கெட்டதிலும் ஒரு பாடம்!

//நான், என் மனைவி மற்றும் என் மகன் மூன்று பேரும் தத்தம் காலண்டர்களை கூகிளில் ஷேர் செய்துள்ளபடியால்//

இதுவும் ரொம்ப நல்ல ஐடியா – அலுவலக வேலைகளுக்கு கூகுள் கேலண்டர் பயன்படுத்துகிறேன், தனிப்பட்ட விஷயங்களுக்கும் செய்துபார்க்கவேண்டும்

//உள்ளீடு செய்து விடுகிறோம். அதற்கும் மறந்து போகுமானால் ஒன்றும் செய்வதற்கில்லை!//

உள்ளீடு செய்வதற்கும் ஒரு ரிமைண்டர் போடவேண்டியதுதான் – மொபைல் ஃபோன்ல – repeat every year option-ஓட 🙂

//நீங்கள் நம்பாததால் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து//

ம்ஹூம், நான் முரட்டுத்தனமாக மறுத்ததால், அவளுக்கே தான் சொல்வது தவறு என்று தோன்றிவிட்டது 😦

//உங்க பதிவுகளை அப்படியே புத்தகமாக கொண்டு வாருங்கள்//

இன்ஷா அல்லா!

//அவர்கள் சரியாகவும், நாம் தப்பாகவும் இருந்தாலும் நம்முடைய emphasis அதிகமாக இருக்கும் போது அதை அதிக எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டு விடுவது//

ரொம்ப ரொம்ப உண்மை!

//அது யார் ‘கனகதாசர்’?//

மேலே லிங்க் கொடுத்திருக்கேன், பாருங்க!

//பதிவை இங்கே முடித்திருந்தால்//

கதையாக இருந்தால் அப்படிச் செய்திருப்பேன். பதிவுதானே? டைரிபோல் எல்லாம் எழுதலாமே என்று நினைக்கிறேன். சொல்லாமல் சொல்கிற கலை அழகுக்காக விரும்பி மெனக்கெடுவதில்லை 🙂

//eppadi indha Sujatha Sir thaakkam vandhadhu?//

அவருடைய தாக்கம் இல்லாமல் தமிழில் எழுதுவது கஷ்டம் சார். எழுத்தில் பாரதியார், சுஜாதா, கல்கி மூவரும் (வெவ்வேறு காரணங்களுக்காக) என் ஆதர்ஷங்கள்!

Hi friends – google calendar is not working in my google chrome. All my efforts to bring it to life are gone futile.
Welcome any help from anyone.

kggouthaman@gmail.com

kggouthaman,

நன்றி 🙂

//google calendar is not working in my google chrome//

I am using it @ Chrome and it seems to be working fine 😕

யோவ்,

நீட்டி முழக்காம எழுதவே தெரியாத உமக்கு? நீ திருந்தவே மாட்ட!

ஸ்கூலுக்குப் போய் பாடம் படிக்க வேண்டியது உம்ம பொண்ணு இல்ல. நீதான்.

பத்திரி,

நன்றி :))

//நீட்டி முழக்காம எழுதவே தெரியாத உமக்கு?//

நீட்டி முழக்காம எழுத நிறைய இடம் இருக்கு ஐயா, இங்கயாவது கொஞ்சம் காலை வீசிப் போட்டு நடக்கறேனே, உங்களுக்குப் பிடிக்காட்டி எந்த இடத்தில போர் அடிக்குதோ அங்கேயே நிறுத்திடுங்க, I am sure you won’t miss anything 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 609,222 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
%d bloggers like this: