ஊரைக் கெடுத்தவர்கள் யார்?
Posted October 11, 2009
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Change | Characters | Differing Angles | Financial | IT | Learning | Life | Money | Open Question | Peer Pressure | People | Price | Pulambal | Uncategorized | Value
- 12 Comments
சென்ற வாரம் மும்பையில் அலுவலக நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.
’நான் குடியிருக்கிற வீட்டு ஓனருக்கு என்மேல பயங்கர கோவம்’
’ஏன், என்னாச்சு? வாடகை பாக்கி வெச்சுட்டீங்களோ?’
‘அதெல்லாம் இல்லை, எங்க வீட்ல ஒரு குழாய் ரிப்பேர், ப்ளம்பரைக் கூட்டிவந்து ரிப்பேர் செஞ்சேன்’
’இதுக்குப்போய் யாராச்சும் கோவப்படுவாங்களா?’
’கோவம் அதுக்கில்ல, ரிப்பேரைச் சரி செஞ்சதுக்கு அந்த ப்ளம்பர் நூத்தம்பது ரூபாய் கேட்டார், கொடுத்தேன், அதுதான் எங்க ஓனருக்குப் பிடிக்கலை’
‘ஏன்? உங்க காசைத்தானே கொடுத்தீங்க?’
‘ஆமாம், ஆனா இனிமே இந்த வீட்ல எந்தக் குழாய் ரிப்பேர்ன்னாலும் நூறு, நூத்தம்பதுன்னு கேட்கலாம்ன்னு அந்த ப்ளம்பருக்குத் தோணிடுமாம், அவர் இன்னும் பத்துப் பதினஞ்சு பேருக்குச் சொல்வாராம், காய்கறி விக்கறவங்க தொடங்கி, கார்பென்டர், எலக்ட்ரீஷியன், கால் டாக்ஸிக்காரன்வரைக்கும் எல்லாரும் இங்கே குடியிருக்கிறவங்க பணக்காரங்க, இவங்ககிட்டே நல்லாக் காசு கறக்கலாம்ன்னு முடிவு செஞ்சுடுவாங்களாம்’
’என்னங்க இது, அநியாயத்துக்கு அபத்தமா இருக்கே’
‘நீங்க அபத்தம்ன்னு சொல்றீங்க, ஆனா அவர் நம்ம சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரிமேலயே செம காண்டுல இருக்கார், நாமதான் பெங்களூரைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டோம், இங்கே காஸ்ட் ஆஃப் லிவிங் எகிறினதுக்கு நாமதான் காரணம்-ன்னு புலம்பறார்’
’அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஐடி நிறுவனங்கள் கால் பதிக்காத அந்தக் காலத்திலயே பெங்களூர் செம காஸ்ட்லி ஊர்தான், எங்கப்பா சொல்லியிருக்கார்’
’ஆனா இவர் சொல்றார், பெங்களூர்ல ஒவ்வொண்ணுக்கும் எக்ஸ்ட்ரா காசு கொடுத்து பழக்கப்படுத்தினது சாஃப்ட்வேர்காரங்கதான், அதனால இப்ப எல்லாரும் பாதிக்கப்படறாங்க-ன்னு’
‘விட்டுத்தள்ளுங்க, இதெல்லாம் வெறும் வயித்தெரிச்சல்’
அதோடு அந்த விவாதம் முடிந்தது. கிட்டத்தட்ட இதேமாதிரி குற்றச்சாட்டை நான் நிறையக் கேட்டிருந்ததாலும், அதில் கொஞ்சம் உண்மை, மிச்சம் ஊதிப் பெரிதாக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டிருந்ததாலும் நான் அதைப்பற்றி எதுவும் யோசிக்கவில்லை.
இன்றைக்கு, வேறொரு சம்பவம். எங்கள் வீட்டுக்கு வழக்கமாக வருகிற பணிப்பெண் மட்டம் போட்டுவிட்டார். என் மனைவி பெரிதாகப் புலம்பிக்கொண்டிருந்தார்.
‘ஏன்? என்னாச்சு?’ பட்டுக்கொள்ளாமல் விசாரித்தேன். இதுமாதிரி நேரங்களில் ரொம்பக் கரிசனம் காட்டினால் காரணமே இல்லாமல் நம்மீது அம்பு பாயும், அதற்காகக் கண்டுகொள்ளாமல் விட்டால் ஈட்டியே பாயும்.
‘வேலைக்காரி வராததைப்பத்தி எனக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, நானே எல்லா வேலையையும் செஞ்சுக்குவேன், ஆனா, என்னால வரமுடியாதுன்னு அவ முன்கூட்டியே சொல்லணும்ல? இப்படி திடுதிப்ன்னு ஆப்ஸன்ட் ஆனா எப்படி? இவளால என்னோட மத்த ப்ளான்ல்லாம் கெட்டுப்போகுது’
‘அவங்க வழக்கமா இப்படிச் சொதப்பமாட்டாங்களே, போன மாசம்வரைக்கும் ஒழுங்காதானே வந்துகிட்டிருந்தாங்க? இப்போ திடீர்ன்னு என்ன ஆச்சு?’
‘அவளுக்குக் கிறுக்குப் பிடிச்சுடுச்சு’ என்றார் என் மனைவி, ‘அடுத்த தெருவில ஒரு புது அபார்ட்மென்ட் வந்திருக்கில்ல? அங்க ஒரு வீட்ல இவளுக்கு வேலை கிடைச்சிருக்கு’
‘அதனால?’
‘அவங்க வீடு பெருக்கித் துடைச்சு, பாத்திரம் கழுவி, துணி துவைக்கறதுக்கு மாசம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் தர்றாங்களாம்’
‘அப்படியா?’
’என்ன அப்படியா? இந்த வேலைக்கு மூவாயிரத்து ஐநூறு அதிகமில்லையா?’
‘என்னைக் கேட்டா? இதே வேலைக்கு நாம எவ்ளோ தர்றோம்?’
‘வேலைக்காரிக்கு மாசம் என்ன சம்பளம்ங்கற விஷயம்கூடத் தெரியாதா? நீ என்ன மண்ணுக்குக் குடும்பத் தலைவன்?’
‘ஹலோ, நான் எப்பவாச்சும் என்னைக் குடும்பத் தலைவன்னு சொல்லிகிட்டிருக்கேனா? நீங்களா ஏமாந்தவன் தலையில ஒரு மூட்டையைத் தூக்கி வெச்சுடவேண்டியது’
நான் இப்படிச் சொன்னதும், என் மனைவி எதையோ நினைத்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார். என்னைப்போல் அஞ்சு கிலோ அரிசி பாக்கெட்டைத் தூக்குவதற்குக்கூட மேல் மூச்சு, கீழ் மூச்சு, நடு மூச்சு விடுகிற குண்டோதரன், தலையில் மூட்டையைச் சுமப்பதுபோல் கற்பனை செய்தால் யாருக்கும் சிரிப்பு வரும்தான்.
‘சரி அதை விடு, அந்த அபார்ட்மென்ட்காரங்க மூவாயிரத்து ஐநூறு தர்றதுக்கும், இவங்க நம்ம வீட்டுக்கு வராம டிமிக்கி கொடுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?’
‘அங்க செய்யற அதேமாதிரி வேலையைதான் அவ நம்ம வீட்லயும் செய்யறா, இந்த அபார்ட்மென்ட்ல இன்னும் ரெண்டு வீடுகள்லயும் அவளுக்கு இதே வேலைதான், ஆனா சம்பளம் ஆயிரம், ஆயிரத்து இருநூறு ரூபாயைத் தாண்டாது’
‘ஓ’, எனக்கு இந்த இடைவெளி விநோதமாக இருந்தது. ஒரே வேலைக்கு இரண்டு வெவ்வேறு இடங்களில் முற்றிலும் மாறுபட்ட சம்பளமா? அதுவும் மூன்று மடங்கு வித்தியாசமா? இது பெரிய யுகப் புரட்சி சமாசாரமாக இருக்கிறதே!
’இப்ப அவங்க மாசம் மூவாயிரத்து ஐநூறு கொடுத்து பழக்கப்படுத்திட்டாங்களா, இவ நம்மகிட்டயும் அவ்ளோ தொகை எதிர்பார்க்கறா’
‘நியாயம்தானே?’
’என்ன நியாயம்? போன மாசம் செஞ்ச அதே வேலையைதானே இந்த மாசமும் செய்யறா? விலைவாசி ஏறிப்போச்சுன்னு நூறு, இருநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டாக்கூடப் பரவாயில்லை, அவங்க யோசிக்காம பணத்தை அள்ளிக்கொடுக்கறாங்க-ங்கறதுக்காக நாம இவளுக்கு ஆயிரத்திலிருந்து மூவாயிரத்துக்குச் சம்பளத்தை உயர்த்தமுடியுமா?’
நண்பர் வீட்டுச் சொந்தக்காரர் சொன்னதில் இருக்கும் நியாயம், இப்போது எனக்குப் புரிகிறது.
***
என். சொக்கன் …
11 10 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
12 Responses to "ஊரைக் கெடுத்தவர்கள் யார்?"

எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். அதன் பண மதிப்பை கூட்டுவதற்கான சர்க்கஸ்கள் எல்லா லெவெல்களிலும் நடக்கிறது. வேலையை விட்டுச் செல்ல நோட்டீஸ் தர வேண்டும் என்று நீங்கள் ஒப்பந்தம் போட்டிருந்தீர்களா? 🙂
வீட்டுக்காரர் வருத்தப்பட்டதிலும் எந்த நியாயமும் இல்லை. சேவை விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என விரும்பினால் ரிப்பேர் வேலைகளை குடியிருப்போர் தலையில் கட்டுவதற்கு பதிலாக அவர் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்.


அது சரி, கடைசி வரைக்கும் நீங்க எவ்வளவு சம்பளம் கொடுக்கறீங்கன்னு எழுதவேயில்லையே. அது தெரிஞ்சாதானே அடுத்த தெருவுக்கு வேலைக்காரி மடங்கினதுக்கு எத்தன மடங்கு வித்தியாசம்னு தெரியும்?
உண்மை நிலவரம் என்ன தெரியுமா? இந்த சாஃப்ட்வேர்காரங்களுக்கு இப்போ பொருளாதார வீழ்ச்சியால வேலையும், சம்பளமும் குறைவுங்கறதால, வீடு வாடகைக்கு போவது தாமதமாகுது, வாடகை குறைக்க வேண்டியிருக்கு. இது என் சொந்த அனுபவம்.
அப்ப கன்வர்ஸும் நிஜமாகதானே இருக்க முடியும்?


உபயோகமான பதிவு. நீண்ட வருடகளாக பெங்களுர்ல்ல இதை கேட்டு உணர்ந்திருக்கிறேன். பழைய பெங்களுர்ல (அல்சுர், மல்லேஸ்வரம், பசவான்குடி) cost of living கம்மியாக இருக்கும் when compared to கோரமங்களா, எச்.எஸ்.ஆர் லேஅவுட் etc. It is difficult to manage the family for lower/middle class living in rented house in the city. For e.g if you ask a auto for a short distance (Rs.25), he won’t come. He expects long distance of Rs.100 minimum. பாலின் சுவை அறிந்த பூனை போல. For that sake, can we go to Hosur in auto for his satisfaction? 🙂


[…] First Tweet 4 hours ago nchokkan nchokkan Influential பெங்களூரைக் கெடுத்தது யாருங்க? –> https://nchokkan.wordpress.com/2009/10/11/who/ view retweet […]


>>>> நீங்களா ஏமாந்தவன் தலையில ஒரு மூட்டையைத் தூக்கி வெச்சுடவேண்டியது
ஆகா… வீட்டுக்கு வீடு அதே கததான் போல :). நானும் சிரிச்சுட்டேங்க!
இங்கயும் அப்படித்தான். தங்கும் ஹோட்டல்ல கான்சியர்ஜ் லவுஞ்சில் ஒருநாளுக்கு $1-2 தான் டிப்ஸ் கொடுப்போம். இப்ப புதுசா ஒரு ஆள்வந்து 5 டாலர் டிப்ஸ் வைக்க ஆரம்பிச்சுட்டார். இப்ப எங்க மித்த ஆட்களுக்கெல்லாம் கவனிப்பு கம்மிதான் :(. அதுக்காக $5 டிப்ஸ் கொடுக்கவும் நமக்கு வசதிப்படாது!


ஓட்டு போட்டாச்சு


\\வேலைக்காரிக்கு மாசம் என்ன சம்பளம்ங்கற விஷயம்கூடத் தெரியாதா? நீ என்ன மண்ணுக்குக் குடும்பத் தலைவன்?’
‘ஹலோ, நான் எப்பவாச்சும் என்னைக் குடும்பத் தலைவன்னு சொல்லிகிட்டிருக்கேனா? நீங்களா ஏமாந்தவன் தலையில ஒரு மூட்டையைத் தூக்கி வெச்சுடவேண்டியது’
\\
கிரேட் எஸ்கேப்பு தல….பின்னிட்டிங்க 😉


பிளாகில் பதிவதற்கென வலிந்து ஒரு விஷயத்தைத் தேடாமல், அன்றாட வாழ்க்கையில் நடக்கிற இயல்பான, யதார்த்தமான நிகழ்வுகளை மென்மையான நகைச்சுவை கலந்து நீங்கள் எழுதும் பாணி ரொம்பவே ரசிக்க வைக்கிறது. தொடர்ந்து படித்து வருகிறேன். குமுதத்தில் நீங்கள் எழுதி வரும் புத்தக விமர்சனங்களையும் இதர கட்டுரைகளையும்கூடப் படித்து வருகிறேன். அது பற்றித் தங்களுக்கு இ-மெயில் அனுப்ப வேண்டும் என்று அந்தச் சந்தர்ப்பத்தில் நினைப்பதோடு சரி; அலுவலகம் போனால், அதிலேயே மனது மூழ்கி மற்றவையெல்லாம் மறந்து விடுகிறதாயிருக்கிறது.

1 | பத்மா
October 11, 2009 at 6:37 pm
இங்கே வாடகைக்காருக்கு டிப்ஸ் கொடுத்து பழகிப்போய், ஸ்ரீரங்கத்தில் ஒரு ஆட்டோக்காரருக்கு டிப்ஸ் தர, NRI இப்படி எல்லாரையும் கெடுத்துவிடுகிறார்கள் என்று அரை மணிநேர உபதேசம் வாங்கிக்கட்டிக்கொண்டேன்.