மனம் போன போக்கில்

இருவிழாக் குறிப்புகள்

Posted on: January 23, 2010

இந்த வாரம் சேலத்தில் ஒன்று பெங்களூரில் ஒன்று என இரண்டு விழாக்களுக்குச் சென்றிருந்தேன். முதலாவது வீட்டு விசேஷம், இன்னொன்று நண்பர் திருமணம்.

சேலம் விழாவில் பல உறவினர்களை ‘ரொம்ப-நாள்-கழித்து’ப் பார்க்கமுடிந்தது. பாதிப் பேரை எனக்கு அடையாளம் தெரியவில்லை, மீதிப் பேருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எதற்கு வம்பு என்று எல்லோரும் ஒரேமாதிரியாகச் சிரித்து மகிழ்ந்துவைத்தோம். குடும்ப அமைப்பு வாழ்க!

என் தம்பி ஒரு ‘touch screen’ மொபைல் வாங்கியிருக்கிறான். இதுமாதிரி மொபைல்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போதுதான் ஒன்றைக் கையில் வாங்கிப் பார்க்கிறேன். மழமழவென்று தொட்டால் சிணுங்கியாக ஜோராக இருந்தது. குறிப்பாக ஸ்க்ரீனைத் தொட்டால் கேமெரா ரெடியாவதும், விரலை எடுத்தால் படம் பிடிக்கப்படுவதையும் மிட்டாய்க்கடை முன் பட்டிக்காட்டானாக ரசித்தேன்.

புகைப்படம் என்றதும் ஞாபகம் வருகிறது, மேற்படி விழாவுக்கு வந்திருந்த ஓர் இரட்டைக் குழந்தை ஜோடியை எல்லோரும் (ஒன்றாக)ஃபோட்டோ எடுக்கிறேன் பேர்வழி என்று படுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களும் நாள்முழுக்கச் செயற்கையாக போஸ் கொடுத்து போஸ் கொடுத்து அலுத்துப்போயிருந்தார்கள் (இந்த லட்சணத்தில் அவர்கள் ஒரேமாதிரியாகச் சிரிப்பதில்லை என்று ஒருவர் மிகவும் கோபித்துக்கொண்டாராம்!)

நான் அந்தக் குழந்தைகளை ஓரங்கட்டி, ‘பயப்படாதீங்க, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லமாட்டேன்’ என்று சமாதானப்படுத்தினேன், ‘என்ன க்ளாஸ் படிக்கறீங்க?’

’செகண்ட் ஸ்டாண்டர்ட்.’

’எந்த ஸ்கூல்?’

(நீளமாக ஏதோ பெயர் சொன்னார்கள். நினைவில்லை.)

‘உங்க ஸ்கூல்ல எக்ஸாம்ல்லாம் உண்டா?’

‘ஓ.’

‘நீங்க என்ன மார்க் வாங்குவீங்க?’

‘நான் ஃபர்ஸ்ட் ரேங்க், அவ செகண்ட் ரேங்க்.’

‘ஏய், பொய் சொல்லாதே, நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’

’அதெல்லாம் இல்லை, நாம ரெண்டு பேரும் ஒரேமாதிரி இருக்கறதால டீச்சர் நான்னு நினைச்சு உனக்கு மார்க் போட்டுட்டாங்க, மத்தபடி நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’

அவர்களுடைய ஸ்வாரஸ்யமான செல்லச் சண்டையைத் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பதற்குள், ‘நீங்க ட்வின்ஸா?’ என்று ஒருவர் தலை நீட்டினார்.

’ஆமா அங்கிள்’ என்று ஒரே குரலில் சொன்ன குழந்தைகளின் முகத்தில் பயம் தெளிவாகத் தெரிந்தது. அதை உண்மையாக்குவதுபோல் அவர், ‘இங்க வந்து நில்லுங்கம்மா, உங்களை ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்’ என்று ஆரம்பித்தார். நான் தலையில் அடித்துக்கொண்டு விலகினேன்.

இன்னொருபக்கம் எங்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் தனியாகக் காப்பி குடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய்க் குசலம் விசாரித்தேன்.

அவருடைய சொந்த ஊர் கும்பகோணம். ரொம்ப நாளாக அங்கே ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது ஒரே மகன் பெங்களூரில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேறுவிதமான சர்வர்களை மேய்த்துக்கொண்டு சௌக்கியமாக இருக்கிறான்.

ஆனால் இப்போதும், அவர் கும்பகோணத்தைவிட்டு நகர மறுக்கிறார். அவர் மகன் நாள்தவறாமல் ‘நீங்க ஏன் அங்கே தனியா கஷ்டப்படறீங்க? பேசாம என்கூட வந்துடுங்களேன்’ என்று அப்பா, அம்மாவைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.

நானும் சும்மா இருக்காமல் அவரை நோண்டிவிட்டேன், ‘அதான் இவ்ளோ காலம் உழைச்சாச்சு, இனிமேலும் சிரமப்படாம பையனோட பெங்களூர் வந்துடலாம்ல?’

’உங்க ஊருக்கு வந்தா மகன் வீட்ல கஷ்டமில்லாம உட்கார்ந்து சாப்பிடலாம்ங்கறது உண்மைதான். ஆனா எங்க ஊர்ல இருக்கிற சில சவுகர்யங்கள் அங்கே கிடைக்காதே!’

அவர் இப்படிச் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பத்து வருடமாக பெங்களூரில் இருக்கிறேன். இங்கே கிடைக்காத சவுகர்யங்களா? என்னது?

’இப்ப கும்பகோணத்தில நான் சாதாரணமாத் தெருவில நடந்துபோறேன்னு வெச்சுக்கோங்க. எதிர்ல பார்க்கறவன்ல்லாம் மறக்காம ”என்ன மாமா, கடை லீவா?”ன்னு விசாரிப்பான்.’

‘இத்தனைக்கும் நான் அந்தக் கடைக்கு முதலாளி இல்லை. ஒரு சாதாரண சர்வர்தான். ஆனாலும் நான் ஒர்த்தன் இல்லைன்னா அந்தக் கடையே லீவ்ங்கறமாதிரி என்னை வெச்சு அந்தக் கடையையே அடையாளம் காணறாங்க. இல்லையா? இப்படி ஒரு கௌரவம் நீங்க பெங்களூர்ல நாலு தலைமுறை வேலை செஞ்சாலும் கிடைக்குமா?’

வாயடைத்துப்போய் இன்னொருபக்கம் திரும்பினால் அங்கே ஓர் இளம் தாய் ‘இந்தத் தூளி யாரோடது?’ என்று கீச்சுக் குரலில் விசாரித்துக்கொண்டிருந்தார். பதில் வரவில்லை.

அவருடைய குழந்தை அப்போதுதான் தூக்கத்தின் விளிம்பில் லேசாக முனகிக்கொண்டிருந்தது. அதற்காகக் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்று தீர்மானித்தவர் அதே தூளியில் குழந்தையைப் படுக்கப் போட்டு ஆட்டிவிட்டார். தாலாட்டுகூட தேவைப்படவில்லை. லெஃப்ட், ரைட், லெஃப்ட், ரைட் என்று ராணுவ நேர்த்தியுடன் ஏழெட்டுச் சுழற்சிகளில் குழந்தை தூங்கிவிட்டது. ’இனிமே ரெண்டு மணி நேரத்துக்குப் பிரச்னை இல்லை’ என்றபடி பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார் அவர்.

’அப்படீன்னா, கோவிலுக்குப் போய்ட்டு வந்துடலாமா?’ என்றார் எதிரில் இருந்த இன்னொருவர்.

‘இவனை எப்படி இங்கே விட்டுட்டுப் போறது?’ தூளியைக் காட்டிக் கேட்டவர் முகத்தில் நிறையக் கவலை. கூடவே, குழந்தை அசந்து தூங்கும் இந்தச் சுதந்தர இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு கோவிலுக்குப் போகிற ஆசையும்.

‘மண்டபத்தில இத்தனை பேர் இருக்காங்களே, பார்த்துக்கமாட்டாங்களா?’

‘இவ்ளோ பேர் இருக்கறதுதாம்மா பிரச்னையே’ என்றார் அவர், ‘நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, நம்பி விட்டுட்டுப் போகலாம்.’

எதிரில் இருந்தவர் சுற்றிலும் தேடி என்னைக் கண்டுபிடித்தார், ‘சார், நீங்க கொஞ்ச நேரம் இங்கயே இருப்பீங்களா?’

‘மூணு மணிவரைக்கும் இருப்பேன்’ என்றேன் நான்.

’அப்ப பிரச்னையில்லை’ அவர் முகத்தில் நிம்மதி, ‘நாங்க பக்கத்துக் கோவில்வரைக்கும் போய்ட்டு வந்துடறோம், குழந்தை தூங்குது,  கொஞ்சம் பார்த்துக்கறீங்களா?’

‘நோ ப்ராப்ளம்.’

அப்போதும், அந்தக் குழந்தையின் தாய்க்குச் சமாதானமாகவில்லை. அறிமுகமில்லாத என்னிடம் குழந்தையை ஒப்படைத்துச் செல்ல அவர் விரும்பவில்லை. என் முகத்தில் பிள்ளை பிடிக்கிற ரேகைகள் ஏதாவது தெரிகிறதா என்று சந்தேகத்துடன் பரிசோதித்தார்.

அந்த அவசர ஸ்கேனிங்கின் இறுதியில், நான் சர்வ நிச்சயமாக ஒரு கிரிமினல்தான் என்று அவர் தீர்மானித்திருக்கவேண்டும். எதிரில் இருந்தவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார். என்னைக்காட்டிலும் உத்தமனான இன்னொருவனிடம்தான் குழந்தையை ஒப்படைக்கவேண்டும் என்று சொல்வாராக இருக்கும்.

அவர்களை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் நான் அங்கிருந்து கிளம்ப எழுந்தேன். அதற்குள் ஒரு மீசைக்காரர் அந்தப் பக்கமாக வர, அந்த இளம் தாய் அவரைப் பிடித்துக்கொண்டார், ‘ஏய் மாமா, சும்மாதானே இருக்கே? கொஞ்சம் உன் பேரனைப் பார்த்துக்கோ’ என்று இழுத்து உட்காரவைத்தார். திருப்தியோடு கோவிலுக்குப் புறப்பட்டார்.

நான் காப்பி குடிக்கலாமா என்று மாடிக்கு நடந்தேன். அப்போது மேலேயிருந்து இறங்கி வந்த ஒரு முதியவர், ‘இந்த ஃபோட்டோகிராஃபர் எங்கே போனான்?’ என்றார் கோபத்தோடு.

‘இது சின்ன ஃபங்ஷன்தானே மாமா, ஃபோட்டோகிராஃபர்ல்லாம் ஏற்பாடு செய்யலை. நாங்களே டிஜிட்டல் கேமெராவிலயும் செல்ஃபோன்லயும் ஃபோட்டோ எடுத்துகிட்டிருக்கோம்’ என்றேன்.

நான் இப்படிச் சொன்னதும் அவருடைய கோபம் மேலும் அதிகமாகிவிட்டது, ‘எல்லா ஃபங்ஷனுக்கும் நீங்களே இப்படி ஃபோட்டோ எடுத்துக் கம்ப்யூட்டர்ல, இன்டர்நெட்ல அனுப்பி உங்களுக்குள்ள பார்த்துக்கறீங்க. எங்களைமாதிரி வயசானவங்க என்ன செய்வோம்? இப்பல்லாம் யாரும் தங்கள் வீட்டு விசேஷத்தை ஆல்பம் போட்டு எடுத்துவைக்கணும்ன்னு நினைக்கறதே இல்லை!’ என்றார் ஆதங்கத்துடன்.

உண்மைதான். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்கிறபோது, அந்த வெள்ளத்தில் குதிக்காதவர்கள் இப்படிப் புறக்கணிக்கப்படுகிறார்கள். தவிர்க்கமுடியாத பிரச்னை.

தவிர, டிஜிட்டல் புகைப்படங்களில் ஒரு பைசா செலவு இல்லை என்பதால் உப்புப் பெறாத விழாவுக்குக்கூட ஆயிரக்கணக்கில் எடுத்து நிரப்பிவிடுகிறோம். பன்றி குட்டி போட்டதுபோல் வதவதவென்று நிரம்பிக் கிடக்கும் இந்தப் படங்களை யாரும் அக்கறையோடு பார்ப்பதில்லை. இன்னும் எத்தனை ஃபோட்டோ பாக்கியிருக்கிறது என்று Progress Indicator-ஐ ஓரக்கண்ணால் பார்ப்பதிலேயே நேரம் ஓடுகிறது. புகைப்படங்களின் அபூர்வத்தன்மையே போய்விட்டது.

இனிமேல், காசு கணக்குப் பார்க்காமல் வீட்டு விழாக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களையாவது அச்செடுத்து ஆல்பம் போட்டுவைக்கலாம் என்று உத்தேசம்.

****

பெங்களூர் திருமணத்துக்குக் காலை ஏழரை டு ஒன்பது முகூர்த்தம். நான் சரியாகத் திட்டமிட்டு ஏழே முக்காலுக்கு அங்கே சென்று சேர்ந்தேன்.

ஆனால், அந்த நேரத்தில் மண்டபத்தில் யாரையும் காணோம். நூற்றைம்பது பிளாஸ்டிக் நாற்காலிகள்மட்டும் காலியாகக் கிடந்தன. மேடையில் யாரோ பாத்திரங்களை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் இல்லை.

ஒருவேளை தவறான ஹாலுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று எனக்குச் சந்தேகம். வெளியே சென்று பார்த்தேன். கன்னடத்தில் மாப்பிள்ளை, பெண் பெயரைப் பூ அலங்காரம் செய்திருந்தார்கள். இதில் என்னத்தைக் கண்டுபிடிப்பது?

நல்லவேளையாக, அந்த மண்டபத்தின் வாசலில் ஒரு நைந்துபோன பலகை (ஆங்கிலத்தில்) இருந்தது. அந்தப் பெயரை என் கையில் இருந்த பத்திரிகையுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்திக்கொண்டு மறுபடி உள்ளே நுழைந்தேன்.

இப்போதும், அந்த நாற்காலிகளில் யாரையும் காணோம். நான்மட்டும் மிகுந்த தயக்கத்தோடு கடைசி வரிசையில் உட்கார்ந்தேன். காலை நேரக் குளிரில் உடம்பு நடுங்கியது.

ஓரமாக ஒரு சிறிய மேடை அமைத்து நாதஸ்வரம், மேளம், சாக்ஸஃபோன் கச்சேரி. சும்மா சொல்லக்கூடாது, என் ஒருவனுக்காக அமர்க்களமாக வாசித்தார்கள்.

அவர்களைக் குஷிப்படுத்தலாமே என்று பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன். தாளத்துக்கு ஏற்பப் பலமாகத் தலையசைத்துவைத்தேன். அந்த ஹாலில் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்பதுதான் முக்கியக் காரணம்.

சிறிது நேரத்தில், அந்த மேளக்காரரின் வாத்தியத்தைச் சுற்றியிருந்த குஷன் போர்வையில் எலி கடித்திருப்பதுவரை கவனித்தாகிவிட்டது. இனிமேல் என்ன செய்வது என்று நான் குழம்பிக்கொண்டிருந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த மாப்பிள்ளைப் பையன் எதிர்ப்பட்டான்.

‘ஹாய்’ என்று கையசைத்தேன். இன்னும் சில நிமிடங்களில் தாலி கட்டப்போகும் ஆண்களுக்கென்றே ரிஸர்வ் செய்யப்பட்டிருக்கும் அந்த அசட்டுப் புன்னகையைச் சிந்தினான். மஞ்சகச்சம் (’மஞ்சள் நிறத்துப் பஞ்சகச்சம்’ என்று விரித்துப் பொருள்கொள்வீர்!) காரணமாக மெதுவாக இறங்கிவந்து, ‘தேங்க்ஸ் ஃபார் கமிங்’ என்றான். கை குலுக்கி வாழ்த்தினேன்.

’கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, எல்லாரும் வந்துடுவாங்க’ என்று சொல்லிவிட்டு அவனும் போய்விட்டான். ஆனால் யாரும் வரவில்லை. (ஒருவேளை திருட்டுக் கல்யாணமாக இருக்குமோ?) நான் மீண்டும் தனியாக நாற்காலிகளில் உட்கார்ந்து போரடித்துப்போனேன்.

சிறிது நேரத்தில் இன்னொரு காமெடி. கல்யாணப் பெண்ணை முழு அலங்காரத்துடன் மேடைக்கு அழைத்துவந்து வீடியோ எடுத்தார்கள். கையை இப்படி வை, அப்படி வை என்று விதவிதமாகப் போஸ் கொடுக்கச்சொல்லிப் படுத்த, அவர் வெட்கத்துடன் ரியாக்ட் செய்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.

ஐந்து நிமிடத்தில் அதுவும் முடிந்துவிட்டது. மறுபடி நானும் மேளக்காரர்களும் தனிமையில் இனிமை காண முயன்றோம்.

சிறிது நேரத்துக்குப்பிறகு என்னுடைய பொறுமை தீர்ந்துபோனது. மாப்பிள்ளை, பெண்ணை மனத்துக்குள் வாழ்த்தியபடி நைஸாக நழுவி வெளியே வந்துவிட்டேன்!

***

என். சொக்கன் …

23 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

9 Responses to "இருவிழாக் குறிப்புகள்"

நல்ல பதிவு. நன்றி பத்ரி

//புகைப்படங்களின் அபூர்வத்தன்மையே போய்விட்டது.//
வாஸ்தவம் தான்!
//பெண்ணை மனத்துக்குள் வாழ்த்தியபடி நைஸாக நழுவி வெளியே வந்துவிட்டேன்!//
அப்போ நீங்க சாப்பிடலையா?

//ஆயிரக்கணக்கில் எடுத்து நிரப்பிவிடுகிறோம்//
உண்மை. பின்பு அதை நாம் கண்டுக்கிறதுமில்லை. ஆனால் நிறைய பேர் இப்போ ஆர்குட்டில் போடுகிறார்கள்.

//இப்போதும், அந்த நாற்காலிகளில் யாரையும் காணோம்//
டைனிங் ஹாலில் செக் பண்ணிங்களா? 🙂

டிஜிட்டல் போட்டோ எடுப்பதை, டிவிடியாக எழுதி வைத்துக் கொண்டால், கம்ப்யூட்டர் பார்க்காத தாத்தாக்களுக்கும் இசையுடன் காட்டலாம்.

பிக்காசா போதும்; ரொம்ப காசாகாது.

இருந்தாலும், டெக்னாலஜி உபயோகிக்கும்போது, அது இல்லாதவர்களை பற்றி யோசிக்க வேண்டும்தான்.

*****

இரண்டாவது விழாவுக்கு 7.30க்கு போனீர் சரி. அதே நாளா, அடுத்த நாளா?

புகைப்படங்களைப் பற்றிச் சொன்னது மிகச் சரி. நானும் என் பழைய ஆல்பங்களில் உள்ள பிரிண்ட்டட் புகைப்படங்களை அவ்வப்போது ஆசையோடு எடுத்துப் பார்க்கிறேனே தவிர, டிஜிட்டலில் பதிந்திருக்கும் நூற்றுக்கணக்கான படங்களைத் திரும்பப் பார்ப்பதேயில்லை. நல்ல பதிவு!

////குறிப்பாக ஸ்க்ரீனைத் தொட்டால் கேமெரா ரெடியாவதும், விரலை எடுத்தால் படம் பிடிக்கப்படுவதையும் மிட்டாய்க்கடை முன் பட்டிக்காட்டானாக ரசித்தேன்.////

என்ன Sir இன்னும் டச் ஸ்கிரீனிலேயே இருக்கீங்க….
இங்க பாருங்க பையன் படம் காட்டுறான்…

இத வேற “புதிய தலைமுறை”ல எழுதிட்டு சும்மா பட்டிக்காட்டான் வேசம் போடறீங்க…ரொம்ப ஓவரு…

SixthSense technology – TED.Com Video

ஒபாமா, balakumaran, ரவி சுகா, R Sathyamurthy, ரவிபிரகாஷ், ராம்மோகன்,

நன்றி 🙂

//நல்ல பதிவு. நன்றி பத்ரி//

’பத்ரி’யா? இதென்ன நுண்ணரசியல்? 🙂

//அப்போ நீங்க சாப்பிடலையா?//

ம்ஹூம், ஆளில்லாத மண்டபத்தில எனக்குமட்டும் எவன் சோறு போடுவான் சாமி? 🙂

//நிறைய பேர் இப்போ ஆர்குட்டில் போடுகிறார்கள்//

போடுகிறார்கள் சரி, யாராவது பார்க்கிறார்களா?

//டைனிங் ஹாலில் செக் பண்ணிங்களா?//

ம்ஹூம், பயமா இருந்தது 🙂

//இரண்டாவது விழாவுக்கு 7.30க்கு போனீர் சரி. அதே நாளா, அடுத்த நாளா?//

அதே நாள்தான் சார். இன்னொரு கொடுமை, ஒன்பதரைக்கு விழாவுக்குப் போன வேறொரு நண்பரும் இதேமாதிரி ஆளில்லாத மண்டபத்தைதான் பார்த்துவிட்டுத் திரும்பினாராம் 🙂

//என் பழைய ஆல்பங்களில் உள்ள பிரிண்ட்டட் புகைப்படங்களை அவ்வப்போது ஆசையோடு எடுத்துப் பார்க்கிறேனே தவிர, டிஜிட்டலில் பதிந்திருக்கும் நூற்றுக்கணக்கான படங்களைத் திரும்பப் பார்ப்பதேயில்லை//

நான் நீட்டி முழக்கி எழுதியதை மிகச் சுருக்கமாகவும் அழகாகவும் சொல்லிவிட்டீர்கள், நன்றி!

//“புதிய தலைமுறை”ல எழுதிட்டு சும்மா பட்டிக்காட்டான் வேசம் போடறீங்க…ரொம்ப ஓவரு…//

டெக்னாலஜிபற்றி வாசிப்பது, எழுதுவது வேறு, அதை அனுபவித்து மகிழ்வது வேறு அல்லவா? நான் டெக்னாலஜியைப் பின்தொடர்பவன். ஆனால் கேட்ஜெட் பிரியன் அல்ல. அதனால்தான் அந்தப் பட்டிக்காட்டான் – மிட்டாய்க்கடை அனுபவம் – வேஷம் அல்ல, நிஜம்தான் 🙂

Sir,
I am awed ( i think this word must have come from tamizh “AA” nnu paarpadhu :), at the fact that,you are able to attend your family functions – where one – espiceally a male,is expected to be on par or above the other males of his age in career position,salary,on-site going ability,etc..
being born in thhis generation, 78 – 81 , its really hard to stay in reverance in front of one’s clan.

Great Sir!!. [i am not writing about the “pullai pidikkara” image,u say,u got :)] the very fact that, you are even able to go there to these functions, means, u are really great,and are a great idol to your daughters.

regards

venkat,

நன்றி 🙂

//family functions – where one – espiceally a male,is expected to be on par or above the other males of his age in career position,salary,on-site going ability,etc..//

Very true. But its all in the way we take, Whenever people start talking like that, I just move away from them, பொய்ப் புகழ்ச்சி, பொய் வருத்தம் ரெண்டும் நமக்கு வேணாமே 🙂

Leave a comment

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2010
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031