தனிக் காவிரி
Posted September 5, 2011
on:- In: Change | Characters | Classroom | Coimbatore | Confidence | Expectation | Learning | Life | Memories | Men | Peer Pressure | People | Positive | Rules | Statistics | Students | Uncategorized | Women
- 13 Comments
கல்லூரியில் நான் படித்தது Production Engineering. அது மெக்கானிகல் எஞ்சினியரிங்கின் உடன்பிறவாச் சகோதரி.
சும்மா ஓர் உலக (தமிழக 😉 ) வழக்கம் கருதியே ‘சகோதரி’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தினேன், மற்றபடி இவ்விரு எஞ்சினியரிங் பிரிவுகளுமே பெரும்பாலும் சேவல் பண்ணைகள்தாம், பெண் வாசனை மிக அபூர்வம்.
எங்கள் வகுப்பில் 30 பையன்கள், 2 பெண்கள், பக்கத்து மெக்கானிக்கல் வகுப்பில் 60 பையன்கள், ஒரே ஒரு பெண். இந்தப் பொருந்தா விகிதத்துக்குக் காரணம், இயந்திரங்களுடன் போராடப் பழக்கும் இந்த சப்ஜெக்ட்கள் பெண்களுக்கு ஏற்றவை அல்ல என்கிற நம்பிக்கைதான்.
அப்போது எங்கள் கல்லூரியில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்கு சிவில், ப்ரொடக்ஷன் துறைகள் ‘ஒதுக்க’ப்படும். பையன்களே பெரும்பாலும் அங்கே விருப்பமில்லாமல்தான் வந்து விழுந்தோம் எனும்போது, அந்த இரு பெண்களின் நிலை குறித்துப் பரிதாபப்பட்டவர்களே அதிகம்.
மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் அப்படியில்லை. அங்கே சேர்ந்த எல்லோரும் சுய விருப்பத்தின்பேரில் இதைத் தேர்ந்தெடுத்துப் படித்து நிறைய மார்க் வாங்கி வந்தவர்கள், அந்த ஒற்றைப் பெண் காவிரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்பட.
இதனால் பலர் காவிரியைப் பார்த்து வியந்தார்கள். சிலர் பரிதாபப்பட்டார்கள். ‘பெண்களுக்குப் பொருந்தாத ஒரு சப்ஜெக்டை இந்தப் பெண் விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறதே, இத்தனை பசங்களுக்கு நடுவே தன்னந்தனியாக லேத்தையும் ஃபவுண்டரியையும் மேய்த்து இந்தப் பெண்ணால் சமாளிக்கமுடியுமா?’
இந்தச் சந்தேகம் பெரும்பாலோருக்குக் கடைசி வருடம்வரை நீடித்தது. அத்தனை பெரிய வகுப்பின் ஒரு மூலையில் தனி பெஞ்ச்சில் காவிரி ஒரு சாம்ராஜ்ய கம்பீரத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தபிறகும் பலரால் அதை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. ‘மற்ற பெண்களைப்போல் இவரும் கம்ப்யூட்டர், எலக்ட்ரிகல், கம்யூனிகேஷன் என்று சொகுசாகப் போயிருக்கலாமே’ என்கிற அயோக்கியத்தனமான கேள்வி அடிக்கடி ஒலித்தது.
நான் அந்த மெக்கானிக்கல் வகுப்பில் இல்லாததால், இயந்திரப் பயிற்சி வகுப்புகளை காவிரி எப்படிச் சந்தித்தார், சமாளித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் வகுப்பின் ‘க்ரீம்’மிலேயே அவர் எப்போதும் இருந்தார் என்பதுமட்டும் நினைவுள்ளது.
சில மாதங்கள் முன்பாக ‘புதிய தலைமுறை கல்வி’ இதழில் பிரபல கவிஞர் தாமரையின் கட்டுரை ஒன்றை வாசித்தேன். அவர் எங்களுடைய அதே (GCT, கோவை) கல்லூரியில் அதே மெக்கானிகல் பிரிவில் அதே எண்ணிக்கைப் பையன்கள் மத்தியில் தனிப் பெண்ணாகப் படித்தவர், அங்கே அவர் சந்தித்த சவால்கள், பின்னர் தொழிற்சாலையொன்றில் ஒரே பெண் எஞ்சினியராகப் பணியாற்றியபோது அனுபவித்த சிரமங்களையெல்லாம் விவரித்திருந்தார். அதைப் படித்தபோது, நிலைமை இப்போது மாறியிருக்கிறதா என்று அறிய ஆவல் எழுந்தது.
பெண்கள் மெக்கானிகல் எஞ்சினியரிங் சேரும் விகிதம் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா, இந்தத்துறை நிறுவனங்கள் பெண் எஞ்சினியர்களை வேலைக்கு எடுக்கின்றனவா? அவர்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படுகிறார்களா? இவர்களிடையே சம்பள விஷயத்தில் வித்தியாசம் உண்டா? இதையெல்லாம்விட முக்கியம், பெண்களுக்கு இந்தத் துறை ஏற்றதல்ல என்கிற கருத்தாக்கம் இன்னும் இருக்கிறதா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியக் குறைந்தபட்சம் ஒரு தலைமுறை தாண்டவேண்டும், இப்போதைக்குப் பூனாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி, அதுதான் இந்தப் பதிவுக்கான தூண்டுதல்.
பூனாவில் உள்ள Cummins மகளிர் பொறியியல் கல்லூரியில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பேட்ச் (ஈடு?) பெண் மெக்கானிகல் எஞ்சினியர்கள் வெளிவந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கையில் வேலையுடன்.
கேம்பஸ் இண்டர்வ்யூவில் வேலை பெறுவதுமட்டும் வெற்றிக்கான அடையாளம் (அ) உத்திரவாதம் ஆகிவிடாதுதான். ஆனால் அது ஒரு குறியீடு, இதனால் ‘பெண்களுக்கு இன்னமாதிரி வேலைகள்தான் பொருந்தும்’ என்கிற இடது கை அங்கீகாரம் கொஞ்சமேனும் மாறினால் சந்தோஷம்.
***
என். சொக்கன் …
05 09 2011
13 Responses to "தனிக் காவிரி"

எதேச்சையாக ஒத்த கட்டுரையான இதையும் இன்று படிக்க நேர்ந்தது.
//She said being the only girl of 36 competitors was fine, except the boys were “annoying” and did not talk to her much.//
http://www.odt.co.nz/news/dunedin/176245/lone-girl-battles-boys


பெண்களுக்கு இன்னமாதிரி வேலைகள்தான் பொருந்தும்’ என்கிற இடது கை அங்கீகாரம் கொஞ்சமேனும் மாறினால் சந்தோஷம்.
நல்ல பதிவு. நன்றி.


I like this post very much as i am a mechanical engineer. Mechanical engineering is not like that gals cannot survive in it. It is a society factor which created such an image for an engineering department. if mechanical engineering is a rock breaking thing,no engineer is really ready to it this day , more over it created a image that gals are soft natured and only boys are capable of working with such a pressure, toughness and temperature. if we say like this how women are more capable of bearing a labour pain as we no pain is horrible than labour pain and my professor said the pressure of min around 3-4 bar exerts on woman’s abdomen during delivery of a baby. if woman is considered as shakthi and as we say hey she is hot,she even can work in high temperatures. sad reality is that the society wanted her to bear the temperature of the gas stove and pressure cooker in home.


இதிலும் கூட டிசைனிங் எல்லாம் வந்து விட்டது பிறகென்ன. பெண்களுக்கு எல்லாம் எளிதே.


அருமை

1 | நடராஜன் வெங்கிடசுப்பிரமணியன்
September 5, 2011 at 10:11 pm
நானும் மெக்கானிக்கல் பிரிவுதான். எங்கள் வகுப்பிலும் 71 ஆண்கள் ஒரே ஒரு பெண். இங்கே பெயர் மாற்றத்துக்கு ’பொருனை’ என்று வைத்துக் கொள்வோம் (அந்தப் பெயரில் ஒரு ஹாஸ்டல் வேறு உண்டு).
ஒரு ஆண்மனோபாவத்தோடு சொல்லப்போனால், வகுப்பில் எந்த ஆசிரியரும் அந்தப் பெண்ணிடம் கேள்விகேட்டதே இல்லை. லேத், வெல்டிங் எங்கே போனாலும் ஒரு தனி மரியாதை. இன்னும் சொல்லப்போனால் ஒரு இரக்கம். எங்களுக்கெல்லாம் ரொம்பப் பொறாமை, வயித்தெரிச்சல்.
எரிச்சலுக்கு பெட்ரோல் ஊற்றுவது போல், எங்களுடைய இயந்திரவியல் ஆசிரியர்கள் அனைவருமே பெண்கள். மொத்தமாக வகுப்பைத் திட்டினாலும் ‘என்னடா இப்படியிருக்கீங்க’ன்னு தான் திட்டு விழும். அதுல உண்மை கொஞ்சம் உண்டு.
ஆனால் வகுப்பில் பேச்சுத் துணைக்கு (அதாவது யாராவது பாடம் நடத்தும் போது கமெண்ட் அடிக்க) இல்லாமல் நான்கு வருடம் படித்தாள். ஆனால் இப்போது இருக்கும் நிலை வகுப்பின் பல ஆண்களைவிட நல்ல நிலைமை.
இன்றைய நிலையில் பார்த்தால், இயந்திரவியல் என்பதே மென்மையாகிவிட்டது. பெங்களூரில் நான் நிறைய பெண் இயந்திரவியல் பொறியாளர்களைப் பார்க்கிறேன். நான் பார்த்தவர்கள் அனைவருமே டிஸைன், FEA போன்றவற்றில் தான் இருக்கிறார்கள். பெங்களூரின் பெரிய சந்தையே அது தான்.
இப்போது மென்பொருள் இஞ்சினியர்களுக்கும் இயந்திரவியல் பொறியாளர்களுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை.
இப்போது ஐஸ்ரோ போன்ற இடங்களில் பெண்கள் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு தேர்வுக் கட்டணமே கிடையாது.