மனம் போன போக்கில்

ஒருக்கால் அப்படி இருக்குமோ?

Posted on: August 19, 2009

முந்தாநாள் டாக்டர்களைப்பற்றி லேசாகக் கிண்டலடித்து எழுதியதன் நல்லூழ், அதே நாளில் ஒரு சின்னஞ்சிறிய விபத்தில் சிக்கிக்கொண்டேன்.

எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே ஓர் அகன்ற சுற்றுச்சாலை (100 Feet Ring Road) உண்டு. அந்தச் சாலையைக் கடந்தால்தான் நான் வீட்டுக்குப் போகமுடியும்.

இதனால், தினமும் காலையில் அலுவலகம் வரும்போது ஒன்று, மதியம் சாப்பிடச் செல்லும்போது இரண்டு, மாலையில் வீடு திரும்புகையில் ஒன்று எனக் குறைந்தபட்சம் நான்குமுறை நான் அந்தச் சாலையைத் தாண்டியே தீரவேண்டும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.

ஒரே பிரச்னை, அந்தச் சாலையில் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்குக்கூட வண்டிகள் நிறைந்திருக்கும். பெரும்பாலும் ஓசூர் ரோட்டில் உள்ள ‘எலக்ட்ரானிக் சிட்டி’க்குச் சென்று திரும்புகிற சாஃப்ட்வேர் புள்ளிகளின் சொகுசு வாகனங்கள். ஒவ்வொன்றினுள்ளும் 90% இடம் காலியாக இருக்க, மூலையில் ஒரே ஒரு அப்பாவி ஜீவன் காதில் ப்ளூ டூத் சகிதம் ஸ்டீயரிங் சக்கரத்தையோ, ஹாரனையோ பொறுமையில்லாமல் அழுத்திக்கொண்டிருக்கும்.

இப்படிச் சாலை முழுக்க அரை சதுர இஞ்ச்கூட இடம் மீதமில்லாமல் காலி(Empty என்ற அர்த்தத்தில் வாசிக்கவும்)க் கார்கள் குவிந்திருந்தால், என்னைப்போல் நடந்துபோகிறவர்களுக்கு ஏது இடம்? அரசாங்கம் மனது வைத்து இங்கே ஒரு பாலமோ, தரையடிப் பாதையோ அமைத்துக் கொடுத்தால்தான் உண்டு. அதுவரை, ஒற்றைக்கால் கொக்குபோல் காத்திருந்து, போக்குவரத்து குறைகிற நேரமாகப் பார்த்து ஓட்டமாக ஓடிச் சாலையைக் கடப்பதுதான் ஒரே வழி.

நான் இந்த வீட்டுக்குக் குடிவந்து நான்கரை வருடமாகிறது. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் முறை இந்தச் சாலையைக் குறுக்கே ஓடிக் கடந்திருப்பேன், கடந்த திங்கள்கிழமைவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.

அன்றைக்கு மதிய நேரத்தில் மழை பெய்து ஊர்முழுக்க நனைந்திருந்தது, சாலையும் வழுக்கல், அதன் நடுவே அமைத்திருந்த Dividerரும் வழுக்கல், இதை நான் கவனிக்கவில்லை.

வழக்கமாக நான் பாதிச் சாலையைக் கடந்ததும், மறுபுறத்தில் போக்குவரத்து எப்படி என்பதைக் கவனிப்பதற்காக அந்த Dividerமேல் அரை நிமிடமாவது நிற்பது வழக்கம். சில சமயங்களில் (முக்கியமாக மாலை நேரங்களில்), அடுத்த பக்கத்திலிருந்து வருகிற போக்குவரத்து மிகப் பலமாக இருந்தால், பத்து நிமிடம்வரைகூட அங்கேயே நின்றபடி தேவுடு காக்க நேர்ந்துவிடும்.

ஆனால் அன்றைக்கு, மறுபுறம் ஒரு வாகனம்கூட இல்லாமல் ‘வெறிச்’சிட்டிருந்தது. ‘ஆஹா, இன்னிக்கு என் அதிர்ஷ்ட நாள்’ என்று நினைத்துக்கொண்டே அவசரமாக ஒரு காலைக் கீழே வைத்தேன், மறுகால் வழுக்கி உள்ளே விழுந்துவிட்டேன்.

உண்மையில், ’விழுந்துவிட்டேன்’ என்பதுகூடச் சரியில்லை, ‘விழுந்’ என்பதற்குள் சமாளித்துக்கொண்டு ’எழுந்’தாகிவிட்டது, ஏதும் அடிபட்டதாகத் தெரியவில்லை, துளி வலி இல்லை, இல்லாத மீசையில் ஒட்டாத மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு மிச்சச் சாலையைக் குறுக்கே கடந்து சௌக்கியமாக வீட்டுக்குப் போய்விட்டேன்.

அதன்பிறகு மீண்டும் இரண்டுமுறை அதே சாலையைக் கடந்து நடந்தேன், ஆனால் காலில் வலி எதுவும் தெரியவில்லை, சில மணி நேரங்களுக்குள் கீழே விழுந்த விஷயத்தையே சுத்தமாக மறந்துபோய்விட்டேன்.

இரவு ஒன்பதரை மணிவாக்கில், வலி ஆரம்பித்தது. சுருக் சுருக்கென்று உள்ளே யாரோ கந்தல் துணி தைப்பதுபோல் ஆரம்பித்து, சிறிது நேரத்துக்குள் சம்மட்டியால் அடிப்பதுபோல் அதிகமாகிவிட்டது.

அடுத்த அரை மணி நேரத்தில் எந்த இடத்தில் துவங்கியது என்றே தெரியாதபடி பாதம்முழுக்க வலி பரவியிருந்தது. நமஸ்காரம் செய்கிற பாவனையில் உடம்பை வளைத்து நான் என் காலையே பிடித்துக்கொண்டிருக்கும் விநோதக்காட்சியைப் பார்த்து என் மனைவி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.

நான் வெறும் தரையில் காலை அழுத்தி நிற்க முயன்றேன். தடுமாற்றமாக இருந்தது, முதன்முறையாக அந்தச் சந்தேகம் வந்தது – ஒருவேளை எலும்பு முறிவா இருக்குமோ?

’அதெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்றார் என் மனைவி, ‘அயோடெக்ஸ் தடவிகிட்டுப் படு, எல்லாம் சரியாப் போய்டும்’

மனைவி சொல் மிக்க மந்திரம் ஏது? மருந்தை அதிகம் அழுத்தாமல் மெல்லத் தேய்த்துக்கொண்டு தூங்கினேன், காலை எழுந்தவுடன் கால் வலி காணாமல் போய்விடும் என்று ஒரு நம்பிக்கை.

ஆனால், தூங்கி எழுந்தபோது வலி அதிகரித்திருந்தது. காலைக் கீழே ஊன்றமுடிந்தது, ஆனால் சரியாக நடக்கமுடியவில்லை, உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்த்தாகவேண்டும்.

சோதனைபோல், நேற்றைக்கு அலுவலகத்தில் இரண்டு முக்கியமான கூட்டங்கள். எதையும் தள்ளிப்போடமுடியாது, மட்டம் போடவும் கூடாது.

எப்படியோ சமாளித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், இரண்டு கூட்டங்களுக்கு நடுவே பக்கத்து மருத்துவமனையில் மாலை ஏழு மணிக்கு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டேன்.

இதனிடையே, ஒரு வேடிக்கையான விஷயத்தைக் கவனித்தேன், ஷூ போட்டுக்கொண்டு நடந்தால் கால் நன்றாக வலிக்கிறது, ஆனால் அதைக் கழற்றிவிட்டு வெறும் (சாக்ஸ்) காலோடு நடந்தால் சுத்தமாக வலி இல்லை, என்ன காரணமாக இருக்கும்? விதவிதமான ஊகங்களில் நேரம் சுவாரஸ்யமாக ஓடியது.

ஆறு ஐம்பத்தைந்துக்கு நான் மருத்துவமனை சென்று சேர்ந்தபோது, ஏற்கெனவே ஐந்து பேர் எலும்பு நிபுணருக்காகக் காத்திருந்தார்கள். என்னுடைய தொலைபேசி அப்பாயிண்ட்மென்ட்க்கு அங்கே மரியாதை இல்லை என்று புரிந்தது, வரிசையில் ஆறாவதாக இணைந்துகொண்டேன்.

நல்லவேளையாக, டாக்டர்  சரியான நேரத்தில் வந்தார், மளமளவென்று பதினைந்து நிமிடங்களுக்குள் ஆறு பேரையும் பார்த்து முடித்துவிட்டார்.

அதன்பிறகுதான் பிரச்னை ஆரம்பித்தது, இப்போது எங்கள் ஆறு பேருக்கும் எக்ஸ்ரே எடுக்கவேண்டும், அந்தச் சிறிய மருத்துவமனையின் சின்னஞ்சிறிய எக்ஸ்ரே அறைக்குள் நாங்கள் முட்டி மோதி நுழைய முயன்றதில் ஒன்றிரண்டு எலும்புகளாவது எக்ஸ்ட்ராவாக உடைந்திருக்கும்.

’சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே? வரிசையில வாங்க சார்’

‘ஏன்ய்யா, நீயும் படிச்சவன்தானே? கால்ல அடிபட்டுகிட்டு எக்ஸ்ரே எடுக்க வர்றவங்களுக்கு சவுகர்யமா உட்கார்றதுக்கு ஒரு சேர்கூட இங்கே இல்லை, என்னய்யா லேப் நடத்தறீங்க?’, ஒரு பெரியவர் சத்தம் போட்டுக் கத்த, பயந்துபோன எக்ஸ்ரே பணியாளர் அவரை முதலாவதாக உள்ளே அனுமதித்துவிட்டார், அவருடைய கத்தல் உடனே அடங்கியது.

நான் பொறுமையாகக் காத்திருந்து ஆறாவதாக உள்ளே நுழைந்தேன். ரயில் பெர்த் சைஸ் படுக்கை ஒன்றில் படுக்கச் சொன்னார்கள்.

‘கால்லதானே எக்ஸ்ரே, அதுக்கு எதுக்குப் படுக்கணும்? உட்கார்ந்து காலை நீட்டினாப் போதாதா?’

’சொன்னாக் கேளுங்க சார்’, அவர் அலுத்துக்கொண்டார், ‘இல்லாட்டி Angle சரியா வராது, அப்புறம் உங்களுக்குதான் பிரச்னை’

பேசாமல் படுத்துக்கொண்டேன். அவர் என் காலைக் கண்டபடி இழுத்து வளைத்து ஒரு ஜில்லென்ற பலகைமீது வைத்தார், பின்னர் அதை எக்ஸ்ரே மெஷினின் மஞ்சள் வெளிச்சத்துக்குக் கீழே பொருத்தினார். அப்புறம் அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்த குழல் விளக்கை அணைத்துவிட, நெஞ்சு நிறையத் துணி கட்டித் தொப்பி போட்ட அந்தப் பணியாளரை அரையிருட்டில் பார்க்கையில் அச்சு அசல் ஸ்டார் ஹோட்டல் சமையல்காரரைப்போலவே இருந்தது.

அவர் என் காலைச் சரியான கோணத்தில் பிடித்துக்கொண்டு, ‘46/50’ என்பதுபோல் ஏதோ சொன்னார், பதிலுக்கு அதே அறையின் இன்னொரு மூலையில் இருந்த வேறொரு பணியாளர், ‘ஆன் பண்ணலாமா?’ என்றார்.

எனக்கு அவர்கள் சங்கேத மொழியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. நாம் டிவியில் சத்தத்தை ஏற்றி இறக்குவதுபோல், எக்ஸ்-ரே-யின் வலிமையைக் கூட்டி, குறைக்கிறார்களோ என்னவோ, ஒருவேளை அவர் தப்பான பொத்தானை அழுத்திவிட்டால் இந்த எக்ஸ்ரே மெஷினிலிருந்து வரும் கதிர்கள் என்னைச் சுருட்டிச் சாப்பிட்டுவிடுமோ என்றெல்லாம் கேனத்தனமான பயங்கள்.

இதற்குள், என் காலைப் பிடித்திருந்தவர் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, இன்னொருவர் பொத்தானை அழுத்தினார், மஞ்சள் விளக்குப் பிரதேசத்திலிருந்து ‘பொய்ங்ங்ங்ங்க்’ என்பதுபோல் ஒரு சத்தம் வந்தது, அவ்வளவுதான்.

’எழுந்து உட்காருங்க’

’ஆச்சா?’

‘இன்னும் இல்லை, காலை இப்படி மடக்குங்க’

அப்புறம், உட்கார்ந்த நிலையில் ஒன்று, ரங்கநாதர் அனந்த சயன போஸில் இன்னொன்று என மூன்று எக்ஸ்ரேக்களும் சுபமாக முடிந்தன, ‘பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க’ என்றார்கள்.

வெளியே ஒரு பெரியவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தார், இடுப்பில் வலி தாங்காமல் அனத்திக்கொண்டிருந்தார், அவர் தமிழில் புலம்ப, ஸ்ட்ரெச்சரைத் தள்ளிய பணியாளர் கன்னடத்தில் ஆறுதல் சொன்னதைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.

பதினைந்து நிமிடம் கழித்து என் எக்ஸ்ரே வெளியில் வந்தது, அதற்காகவே காத்திருந்த டாக்டர் பாய்ந்துவந்து பற்றிக்கொண்டார்.

மற்ற டாக்டர்களாவது கொஞ்சம் பரவாயில்லை, வருகிற நோயாளிகளை ஒவ்வொருவராகப் பார்த்து அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய்ச்சேரலாம், ஆனால், எலும்பு நிபுணர்கள் ஒவ்வொருவருடைய எக்ஸ்ரே திரும்பி வரும்வரை தேவுடு காக்கவேண்டும், ஷூட்டிங் முடிந்து, படம் வெளியாகி, முதல் ஷோ பார்த்து விமர்சனம் சொல்லாமல் அவர்களுடைய பணி முடிவடைவதில்லை.

இந்த டாக்டர் பாவம், எங்கள் ஆறு பேருக்கும் கால் மணி நேரத்தில் எக்ஸ்ரே குறிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு, அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா படித்துக்கொண்டு பொறுமையாகக் காத்திருந்தார், ஒவ்வொரு எக்ஸ்ரேவாக வெளிவரும்போது, அவருக்கு இரண்டு நிமிடமோ, ஐந்து நிமிடமோ எக்ஸ்ட்ரா வேலை, மற்றபடி டைம்ஸ் ஆஃப் இந்தியாவே கதி.

இதனால், கடைசியாக வந்த என்னுடைய எக்ஸ்ரேவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம், வீட்டுக்குப் போகிற வேகத்தில் விறுவிறுவென்று அதில் கண்களை ஓட்டிவிட்டு, ‘எலும்பு முறிவு எதுவும் இல்லை, ஒரு மாத்திரை எழுதித் தர்றேன், க்ரீம் தர்றேன், நாலு நாள்ல எல்லாம் சரியாப் போய்டும்’ என்று நெஞ்சில் பால் வார்த்தார்.

‘டாக்டர் ஒரு சந்தேகம்’

‘என்னது?’

’நாளைக்கு நான் ஆஃபீஸ் விஷயமா டெல்லி போகவேண்டியிருக்கு, அதைக் கேன்ஸல் பண்ணனுமா?’

‘டெல்லிக்கு நடந்தா போகப்போறீங்க?’ அவர் கிண்டலாகக் கேட்டார்.

’இல்லை டாக்டர், ஃப்ளைட்ல’

‘அப்ப தாராளமாப் போய்ட்டு வாங்க, நோ ப்ராப்ளம்’

விறுவிறுவென்று எனக்கு மருந்து எழுதிக் கிழித்துக் கொடுத்துவிட்டு அவர் உற்சாகத் துள்ளலுடன் வெளியேறினார். அவரும் அதே சாலையைக் கடந்துதான் வீட்டுக்குப் போகவேண்டும்.

ஜாக்கிரதை டாக்டர்!

***

என். சொக்கன் …

19 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

25 Responses to "ஒருக்கால் அப்படி இருக்குமோ?"

சொக்கன், தினமும் உங்க பதிவிற்காக தூக்கம் விழிக்க வேண்டி இருக்கு 🙂 (இங்க இப்போ மணி 12:5q San Fransisco) இன்றைக்கு உங்களோட எழுத்து நடை மற்ற நாட்களைவிட அருமை..worth waiting !! Thanks to twitter..

Get well soon !!

Thoroughly enjoyed reading this 🙂

Is that pain due to ligament tear in ankle? If it is a minor tear, it will be fine in 1 or 2 week rest. I think level of tear will be witnessed only in MRI sca, which is quite expensive. Take care and get well.

//‘டெல்லிக்கு நடந்தா போகப்போறீங்க?’ //
Doctor’s sense of humour is on high…but our pain will not allow us to enjoy his SOH. Nice write up asusual. Kalankunga thalaiva…

ஒருக்கால் அப்படி இருக்குமோ?

அருமையாய் இருக்கு.

//நல்லூழ்//
எப்படி வார்த்தைகளுக்காக ரூம் போட்டு யோசிப்பிங்ளா?

ஹை!! டெல்லி போயிட்டுவந்து “மிஸ்டி தோய்” மாதிரி ஒரு பதிவு இருக்கு

ரெண்டு நாள் அப்படியே விட்டுருந்தால் தானாகவே சரியாயிருக்கும்.. அதுக்கு போய் எக்ஸ்ரே அது இது னு ஆயிர கணக்குல செலவு பண்ணி இருப்பீங்க போல.. பெரிய ஆள் சார் நீங்க!!!

//அவர் என் காலைச் சரியான கோணத்தில் பிடித்துக்கொண்டு, ‘46/50’ என்பதுபோல் ஏதோ சொன்னார், பதிலுக்கு அதே அறையின் இன்னொரு மூலையில் இருந்த வேறொரு பணியாளர், ‘ஆன் பண்ணலாமா?’ என்றார்//

அது எடுக்க வேண்டிய ஊடுகதிரின் amp மற்றும் volt அளவாக இருக்கலாம்

//ஷூ போட்டுக்கொண்டு நடந்தால் கால் நன்றாக வலிக்கிறது, ஆனால் அதைக் கழற்றிவிட்டு வெறும் (சாக்ஸ்) காலோடு நடந்தால் சுத்தமாக வலி இல்லை, என்ன காரணமாக இருக்கும்?//

ஷூவின் ஹீல்ஸால் கால் பாதம் வளைவதால் இருக்கலாம்.

//விதவிதமான ஊகங்களில் நேரம் சுவாரஸ்யமாக ஓடியது.//

அது சரி! வலியை பத்தி யோசிப்பது கூட சுவாரசியம்தான். எந்த வலி என்பதை பொறுத்தது. கால் வலி வச்சு நங்கைக்கு கதை பண்ணிடுவீங்களோ?

//ஒரு ஜில்லென்ற பலகைமீது வைத்தார், பின்னர் அதை எக்ஸ்ரே மெஷினின் மஞ்சள் வெளிச்சத்துக்குக் கீழே பொருத்தினார்.//

Observation வேண்டியதுதான்; ஆனா இவ்வளவா! எக்ஸ்ரே ப்ரொசசையே எக்ஸ்ரே பண்ணிட்டீங்களே அய்யா!

//அவரும் அதே சாலையைக் கடந்துதான் வீட்டுக்குப் போகவேண்டும்.//

டாக்டருக்கேவா?

ங்கொய்யால, கஷ்டத்தையும் சுவாரஸ்யமா சொல்ல உங்களை விட்டா இப்போதைக்கு ஆள் இல்லைய்யா. செம கலக்கல். மாத்திரை சாப்பிட்டப்புறம் சரியாச்சா?>

சொந்தக்கதையை காமெடியாய் எழுதினால் பலருக்கும் பிடித்திருக்கிறது, எனக்கும் 😉

Get Well Soon…

ஐயய்யோ, சொக்கன் வழுக்கி விழுந்துட்டாரு! ஹஹ்ஹா

உங்கள் கால் வலி குணமாகி நீங்கள் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

Ananth, Prakash, ravisuga, Balakumaran, MSK, புருனோ, சத்தியமூர்த்தி, ila, பீர், வழுக்கி விழுந்துட்டாரு, blogpaandi,

நன்றி 🙂

//Is that pain due to ligament tear in ankle?//

தெரியலையே சாமி, ரெண்டு நாள் மாத்திரை, மருந்துல இப்ப ஓரளவு வலி குறைஞ்சிருக்கு, ஆனா இன்னும் பழையபடி நடக்க வரலை – இன்னொரு ரெண்டு நாள் ஆகும்ன்னு நினைக்கறேன்

//Doctor’s sense of humour is on high…//

ஆமாங்க, ஒரு நண்பர்கூட சாட்-ல கேட்டார், ’அந்த டெல்லிக்கு நடந்துபோற ஜோக் நீங்க வலிய நுழைச்ச கற்பனைதானே?’ன்னு – ‘இல்லை சாமி, நிஜமாவே டாக்டர் சொன்னதுதான்’னேன் 🙂

//நல்லூழ் – எப்படி வார்த்தைகளுக்காக ரூம் போட்டு யோசிப்பிங்ளா?//

ம்ஹூம், பதிவுகளைமட்டும் நான் எடிட் / ரீரைட் பண்றதே இல்லை, அப்போதைக்கு எழுதும்போது என்ன வருதோ அதான் 🙂

//டெல்லி போயிட்டுவந்து “மிஸ்டி தோய்” மாதிரி ஒரு பதிவு இருக்கு//

இதுவும் ‘ம்ஹூம்’, ஐயா டயட்டாக்கும் 😉

//ரெண்டு நாள் அப்படியே விட்டுருந்தால் தானாகவே சரியாயிருக்கும்.. அதுக்கு போய் எக்ஸ்ரே அது இது னு ஆயிர கணக்குல செலவு பண்ணி இருப்பீங்க போல//

ஆமாங்க, அப்படி அலட்சியமா வுட்டு பின்னாடி ஏதாவது பெரிய பிரச்னையாயிடுச்சுன்னா காலம் முழுக்க வருத்தப்படணும்ல்ல? அதுக்கு இந்த செலவு ஓகேதான் – அதுகூட, நீங்க நினைச்ச அளவு அதிகமில்லை டாக்டருக்கு 200, எக்ஸ்ரேவுக்கு 250

//அது எடுக்க வேண்டிய ஊடுகதிரின் amp மற்றும் volt அளவாக இருக்கலாம்//

ஓ, தவறுதலா அதை மாற்றி வெச்சுட்டா எக்ஸ்ரே எடுக்கப்படறவருக்கு அபாயம் ஏற்படற வாய்ப்பு உண்டா?

//ஷூவின் ஹீல்ஸால் கால் பாதம் வளைவதால் இருக்கலாம்//

ஷூவின் ஓரம் காயம் பட்ட இடத்தை அழுத்துவதால்தான் வலி என்று டாக்டர் சொன்னார் – ஒரு வாரம் செருப்பு அணியச் சொன்னார் – இப்போ வாழ்க்கையிலேயே முதன்முறையா செருப்புப் போட்டுகிட்டு க்ளாஸ் எடுக்கறேன்

//கால் வலி வச்சு நங்கைக்கு கதை பண்ணிடுவீங்களோ?//

அல்ரெடி சொல்லியாச்சு, கதையின் பெயர், ‘எக்ஸ்ரே மனிதன்’ 😉

//மாத்திரை சாப்பிட்டப்புறம் சரியாச்சா?//

இப்போ பரவாயில்லைங்க 🙂

//அதுகூட, நீங்க நினைச்ச அளவு அதிகமில்லை டாக்டருக்கு 200, எக்ஸ்ரேவுக்கு 250//

புத்தூர் கட்டு கட்ட சென்றிருந்தீர்கள் என்றால் 2000 முதல் 3000 வரை செலவாகியிருக்கும்

//ஓ, தவறுதலா அதை மாற்றி வெச்சுட்டா எக்ஸ்ரே எடுக்கப்படறவருக்கு அபாயம் ஏற்படற வாய்ப்பு உண்டா?//

இல்லை … அதில் மாற்றுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை… தப்பாக வைத்தால் படம் தான் தெளிவாக இருக்காது

மேகிராவின் ஷட்டர் வேகம், அப்பட்சர் அளவு என்று உருவகப்படுத்திக்கொள்ளுங்கள் (உதாரணத்திற்காக)

மாற்றி அளவு வைத்தால் படம் தானே டரியலாகும்

“‘46/50’ என்பதுபோல் ஏதோ சொன்னார்”

நண்பர் மறு.ப்ருனோ சொன்னது சரி. ஊடுகதிர்களின் சக்தியை ஏற்ற இறக்க உபயோகிக்கும் எண்கள் அவை – kVp (peak kilovoltage) & mAs (milliAmpere-seconds).
“‘டெல்லிக்கு நடந்தா போகப்போறீங்க?’ அவர் கிண்டலாகக் கேட்டார்”
பொதுவாகவே எலும்பு முறிவு மருத்துவர்களுக்கு கிண்டல் ஜாஸ்தின்னு நான் நம்புகிறேன்.

//ila, பீர்வழுக்கி விழுந்துட்டாரு, //

ஐயா, பீர் க்கும் வழுக்கி க்கும் இடையில ஒரே ஒரு கம்மா போட்டுவிடுங்களேன்… ப்ளீஸ். 🙂

புருனோ, Vijay, பீர்,

நன்றி 🙂

//புத்தூர் கட்டு கட்ட சென்றிருந்தீர்கள் என்றால் 2000 முதல் 3000 வரை செலவாகியிருக்கும்//

பரிசோதனைதானே செய்தார்கள்? ஒருவேளை கட்டுப் போட நேர்ந்திருந்தால், இங்கேயும் அந்த அளவு செலவாகும்தானே?

//இல்லை … அதில் மாற்றுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை… தப்பாக வைத்தால் படம் தான் தெளிவாக இருக்காது//

அப்பாடா, நல்லவேளை!

//நண்பர் மறு.ப்ருனோ//

டாக்டர், நண்பர் புரூனோ பல விவாதங்களில் மறுத்துப் பேசிப் புகழ்பெற்றவர் என்பதால் அவருக்கு ‘மறு’ பட்டம் கொடுத்துவிடுவதா? அது ‘மரு.’ என்று இருக்கவேண்டும் 😉

புரூனோ சாப், கோச்சுக்காதீங்க, சும்மா விளையாட்டு 🙂

//ஊடுகதிர்களின் சக்தியை ஏற்ற இறக்க உபயோகிக்கும் எண்கள் அவை – kVp (peak kilovoltage) & mAs (milliAmpere-seconds).//

தகவலுக்கு நன்றி டாக்டர் 🙂

//பொதுவாகவே எலும்பு முறிவு மருத்துவர்களுக்கு கிண்டல் ஜாஸ்தின்னு நான் நம்புகிறேன்//

அப்படியா? என்ன காரணமா இருக்கும்? தினந்தோறும் வாழ்க்கையில நிறைய ஏற்ற, இறக்கங்களைப் பார்க்கிறதாலயா?

//ஐயா, பீர் க்கும் வழுக்கி க்கும் இடையில ஒரே ஒரு கம்மா போட்டுவிடுங்களேன்… ப்ளீஸ்.//

செஞ்சாச்சுங்க – தவறுக்கு மன்னிக்கணும் 🙂

உங்கள் தமிழும் அழகு, நீங்கள் அதை பயன்படுத்திய விதமும் அழகுதான். உங்கள் துன்பத்தை தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் எங்களுக்கு இன்பமாக மாற்றி தந்தவிதம் மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.. சொக்கன் அவர்களுக்கு..

kapilashiwaa,

நன்றி 🙂

டாக்டரைக் கிண்டல் பண்ணா அடி பட்டுதுன்னு எழுதி இருக்கீங்க. நெஞ்சைத் தொட்ட ஜோக் எழுதினதுக்கு எனக்கு என்ன ஆகும்?

http://kgjawarlal.wordpress.com

Jawahar,

நன்றி 🙂

//நெஞ்சைத் தொட்ட ஜோக் எழுதினதுக்கு எனக்கு என்ன ஆகும்?//

வேறென்ன? பட்டினிதான் 😉

”ஒருக்கால் அப்படி இருக்குமோ?” த்லைப்பு மிகவும் அருமை. பதிவு படிக்க மிகவும் பிராமாதம். வாழ்த்துக்கள்.

கணேஷ்,

நன்றி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2009
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: