சரியும் தவறும்
Posted October 21, 2011
on:- In: Language | Learning | Life | Open Question | Perfection | Tamil | Uncategorized
- 17 Comments
என்னுடைய முந்தைய இரண்டு பதிவுகளில் (விழுந்த எண்ணங்கள் & மழை) ஒரு சின்னக் குழப்பம், ஒரு பெரிய குழப்பம். இதுபற்றி இங்கேயும் ட்விட்டரிலும் பலர் கருத்துச் சொல்லியிருந்தார்கள். நண்பர் ஸ்ரீதர் நாராயணன் விரிவான மின்னஞ்சல்கூட எழுதியிருந்தார். ஆனால் என்னுடைய வழக்கமான சோம்பேறித்தனத்தால் யாருக்கும் சரியாகப் பதில் சொல்லமுடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.
விஷயத்துக்கு வருவோம். அந்த இரண்டு பதிவுகளின் இறுதியில் நான் சொன்ன விஷயங்கள் இவை:
1. ‘மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்று ஒரு பாடலில் வைரமுத்து எழுதியுள்ளார். உண்மையில் அவர் சொல்ல நினைத்தது ‘ மின்னல் ஒளி’, அதை மெட்டுக்குள் உட்காரவைப்பதற்காக ‘மின்னொளி’ என்று சுருக்கிவிட்டார். ஆகவே அது ‘மின்சார ஒளி’ என்று அனர்த்தமாகிவிட்டது
2. இன்னொரு பாட்டில் ’பூங்கதவே தாழ் திறவாய்’ என்று ஒரு கவிஞர் எழுதியுள்ளார். அதைப் பாடகர்கள் ‘தாள்’ என்று பாடிவிட்டார்கள். அது சரியில்லை
இந்த இரண்டு பாடல்களிலும் கவிஞர்கள் எழுதியதுதான் சரி, நான் சொல்வது தவறு என்று நண்பர்கள் வாதிடுகிறார்கள். அதற்குச் சாட்சியாக முன்வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான சில கருத்துகள், சாட்சிகள் இவை:
1. மின் ஒளி:
- ’மின்’ என்றாலே மின்னல்தான். ’மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை – உன்னுமின் நீரே’ அப்படிங்கறது நம்மாழ்வார் வரி – டகால்டி
- ’பொன்னார் மேனியனே’ பதிகத்திலும் ‘…மின்னார் செஞ்சடை…’ என்றும் வருமே – கோபி ராமமூர்த்தி
2. தாழ் / தாள்:
- ’தாள்’ என்றாலும் தாழ்ப்பாள்தான். தம்மதி தான் “திறப்பர் தாள்” = புறப்பொருள் வெண்பா மாலை, புத்தியைத் “திறக்குந் தாள்” = சீவக சிந்தாமணி – ரவிசங்கர்
- தாள் என்பது இலக்கியப் பேச்சு மட்டுமில்லை!
இன்றும், பல கிராமங்களில், தாளைப் போடு-ன்னு சொல்லுறதும் வழக்கம் தான்! – ரவிசங்கர் - ‘மணிக் கதவம் தாள் திறவாய்’ என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியுள்ளாரே! ‘கதவைத் திற’ என்பதைத்தானே அது குறிக்கிறது – கார்த்திக் அருள்
- தாள் என்பதற்கு மலரின் இதழ் என்றும் பொருள் உண்டு – ஐஷ்வர்யா கோவிந்தராஜன்
- ‘தாழ்’ என்னும் வேர்ச்சொல் பனையை குறிப்பதாகவும், தாழ், தாலி, தாள் எல்லாம் அதிலிருந்து உருவாகிவந்தன என்றும் ந. கணேசன் மற்றும் தமிழ்நெட் பதிவர்கள் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள் – ஸ்ரீதர் நாராயணன்
- பண்டைய பிங்கல அகராதியிலேயே ‘தாள்’ இடம்பெற்றிருக்கிறது – ஸ்ரீதர் நாராயணன்
- பூவின் Stamensஐ ‘மகரந்த தாள்’ என்றே அழைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் ‘பூங்கதவே தாள் திறவாய்’ மிகவும் பொருத்தமாக இருப்பதாக தோன்றியது. தன் மகரந்தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் ‘தாள் திறவாய்’ என்று பாடுவது படு ரொமாண்ட்டிக்காக இருக்கிறது – ஸ்ரீதர் நாராயணன்
’மின் ஒளி’கூடச் சின்னப் பிரச்னைதான். இந்தத் தாழ் / தாள் விவகாரம் பெரிய சண்டையாகிவிட்டது. ஆகவே என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய இதை எழுதுகிறேன்.
ஒரு மொழியில் ஒரே பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகள் இருக்கலாம். அதில் ஒன்று சரி என்பதால் மற்றதெல்லாம் தவறு என்று சொல்லமுடியாது.
’மின் ஒளி’ என்பது ஒருகாலத்தில் மின்னலைக் குறித்திருக்கலாம். இப்போது மின்சாரத்துக்கும் அதே வார்த்தையைப் பயன்படுத்துவதால் மின்னலுக்கு ‘மின்’ என்ற வார்த்தை கூடாது என்று பேசுவது தவறு. அதை முழுமையாக ஏற்கிறேன்.
அதேபோல் ‘தாள்’ என்ற வார்த்தையும் ஒருகாலத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம், சில இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது ‘தாழ்’ என்று எழுதியது படியெடுக்கும்போது ‘தாள்’ என்று மாறியிருக்கலாம், இன்றைக்கும் கிராமத்து / நகரத்துக் கொச்சை வழக்கில் ‘தாள்’ என்று அது தொடர்வது உண்மை. ஆகவே தாள் என்ற வார்த்தையும் தாழ்ப்பாளைதான் குறிக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.
இப்போது நான் ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்றால் அதில் எந்த இடத்தில் எந்த வார்த்தை பயன்படுத்தப்படவேண்டும் என்று யோசிப்பேன். தவறான வார்த்தைகளைத் தவிர்ப்பேன். ஆனால் எல்லாச் சரியான வார்த்தைகளையும் நான் பயன்படுத்திவிடமுடியாது, அவை அர்த்தம் பொருத்தமாக இருந்தாலும்கூட.
குழப்புகிறதா? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்:
என்மேல் ஒரு சிறு நீர்த்துளி விழுந்தது
இந்த வாசகத்தில் தப்பு எதுவும் இல்லை. ‘சிறு’ என்றால் small, ’நீர்த்துளி’ என்றால் droplet. எல்லாம் சரி.
ஆனால், இந்த வாக்கியத்தை நீங்களோ நானோ எழுதவேண்டியிருந்தால், அங்கே ‘சிறு’வுக்குப் பதில் ‘சிறிய’ என்று மாற்றுவோம். இல்லையா? என்ன காரணம்?
’சிறு’ மற்றும் ‘நீர்’ இரண்டுக்கும் தனித்தனி அர்த்தங்கள் சரியாக இருப்பினும், ‘சிறுநீர்’ என்று சேர்ந்தால் அர்த்தம் மாறுகிறது. ஆகவே, ’சிறு’ என்ற வார்த்தை சரியான பொருளைத் தந்தாலும், இங்கே என்னால் அதைப் பயன்படுத்தமுடியாது. பயன்படுத்தக்கூடாது. காரணம் அது வாக்கியத்தின் பொருளை மாற்றிவிடுகிறது.
இதே விதிமுறையைதான் நான் ‘மின்னொளி’க்கும் ‘தாழ் திறவாய்’க்கும் வைக்கிறேன். மின் = மின்னல், ஆனால் ‘மின் ஒளி’ என்றால் இன்றைய அர்த்தம் Electric lightதான். குழப்பத்துக்கு இடம் அளிக்கக்கூடாது என்பதற்காக அதைத் தெளிவாக ‘மின்னல் ஒளி’ என்று எழுதவே விரும்புவேன்.
திரைப்பாடலில் அந்த சவுகர்யம் கிடையாது. ’தன்னனன தனனன தானந்நானே’ என்பது ரஹ்மானின் மெட்டு. அதற்கு ‘மின்னலொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்பது பொருந்தாது. வேண்டுமானால் ‘மின்னல்வர மலர்ந்திடும் தாழம்பூக்கள்’ என்பதுபோல் கொஞ்சம் நெருக்கிப் பிடிக்கலாம். அதைத்தான் சொன்னேன்.
தாழ் / தாள் விஷயத்தில் அந்தக் குழப்பமே இல்லை. இரண்டும் ‘நேர்’ அசை. ‘தாள்’க்குப் பதில் ‘தாழ்’ என்று எழுதிவிடலாம். ‘தாள் திறவாய்’ என்பதற்குத் தவறான அர்த்தம் வரக்கூடும், ‘தாழ் திறவாய்’க்கு வராது. அவ்வளவுதான் விஷயம்.
சரி, இதை ஏன் இப்போது விரிவாக எழுதவேண்டும்?
நிச்சயம் விவாதத்தைத் தொடர்கிற நோக்கமோ, நான் பிடிச்ச முயலுக்கு அஞ்சே கால்தான் என்று நிரூபிக்கும் வீம்போ, இன்னொருத்தரை ‘மடக்கும்’ எண்ணமோ இல்லை. இது என் கருத்து, உங்களுடைய கருத்து மாறுபடலாம். அதை நான் மதிக்கிறேன். அதே எதிர்மரியாதையை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.
இந்தப் பதிவுகள் என்று இல்லை. இணையத்திலோ அதற்கு வெளியிலோ இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கமே எதையாவது புதுசாகத் தெரிந்துகொள்ளலாமே என்பதுதான். அதுவும் மொழி விஷயத்தில் நமக்குத் தெரிந்தது 1%கூட இல்லை. இதுபோன்ற விவாதங்களால் பாக்கி இருக்கிற 99%ல் இன்னொரு 1%ஐயாவது கூடுதலாகத் தெரிந்துகொள்ளலாமே என்கிற விருப்பம்தான் மேலோங்கி நிற்கிறது என்று நான் நினைக்கிறேன்.
மொழியை ஒழுங்காக எழுதுவது அவ்வளவு முக்கியமா? சில பல தவறுகள் இருந்தால் என்ன குடி முழுகிவிடும்?
நான் ஏழெட்டு புத்தகங்கள் எழுதியிருந்த நேரம். ஒருநாள் என்னுடைய ஆசிரியர் பா. ராகவன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அன்றைக்கு நான் எழுதி முடித்துக் கொடுத்திருந்த புத்தகத்தின் Manuscriptஐக் கையில் வைத்துக்கொண்டு வரிவரியாகப் படித்துக் காண்பித்து நான் செய்திருந்த எழுத்து / இலக்கண / பயன்பாட்டுப் பிழைகளைச் சொன்னார், திருத்தினார்.
அதுவும் ஒன்று, இரண்டு அல்ல, இருபதோ முப்பதோ திருத்தங்கள். அவையெல்லாம் பிழையான பயன்பாடுகள் என்று தெரியாமலே தொடர்ந்து தவறாக எழுதிவந்திருக்கிறேன்.
அவர் இதையெல்லாம் சொல்லி முடித்தபிறகு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். ‘அடுத்தமுறை இந்தத் தப்பெல்லாம் செய்யாம பார்த்துக்கறேன் சார்’ என்றேன்.
கொஞ்ச நாள் கழித்து நான் என்னுடைய அடுத்த புத்தகத்தை எழுதி முடித்திருந்தேன். அவருக்கு அனுப்பினேன். படித்துவிட்டு ஃபோன் செய்தார். எடுத்த எடுப்பில் முதல் வாசகமாக ‘நீயெல்லாம் எதுக்குடா எழுதறே? குப்பை அள்ளப் போகவேண்டியதுதானே?’ என்றார்.
எனக்குப் பகீரென்றது. ’வழக்கமாக எதற்கும் கோபம் கொள்ளாத இவரே இப்படி எரிச்சலாகும் அளவுக்கு நான் என்ன தப்புச் செய்துவிட்டேன்?’ என்று குழம்பினேன்.
இத்தனைக்கும் போன புத்தகத்தைவிட இந்தப் புத்தகத்தில் பிழைகள் குறைவு. ஆனால் அவர் ஏற்கெனவே சொல்லியிருந்த அதே தவறுகளில் சிலவற்றை நான் மீண்டும் செய்திருந்தேன். அதனால்தான் அவருக்குக் கோபம்.
உண்மையில் ராகவனுக்கு அன்று வந்தது கோபம் அல்ல. ஆதங்கம். என்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை நான் வீணடித்துவிட்டேனே என்கிற ஏமாற்றம். மூன்றே வார்த்தைகளில் என்னைக் கூனிக்குறுகச் செய்துவிட்டார்.
அதன்பிறகு, அவர் சொன்ன அந்தத் தவறுகளை நான் மீண்டும் செய்வதில்லை. புதுப்புதுத் தவறுகள் செய்வேன். ஆனால் பழைய தவறுகள் மீண்டும் வராது.
இப்போதும் என்னுடைய எழுத்தில் ஏகப்பட்ட பிழைகள் உண்டு. இதோ இந்தப் பதிவில்கூட அவை மலிந்திருக்கும். ஆனால் யாராவது அவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்தினால் கேட்டுக்கொள்வேன், சொல்பவர் யார் என்று பார்க்கமாட்டேன், அவர்கள் சொல்வது சரியா என்றுதான் பார்ப்பேன், நான் எழுதியது தவறென்றால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வேன். அடுத்தமுறை அதே தவறைச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். இந்த விஷயத்தில் Perfectionஐவிட, அதை நோக்கிய நேர்மையான முயற்சிதான் முக்கியம். இல்லையா?
***
என். சொக்கன் …
21 10 2011
17 Responses to "சரியும் தவறும்"

வாழ்த்துக்கள் / வாழ்த்துகள்.. இதில் எது சரி ..ஏன்?


எங்கயோ போய்டிங்க பாஸ்!!


Chokkan, my respect for you grows taller. 🙂


@Vijay
வாழ்த்துகள் என்பது தான் சரி.
உதாரணம்
——————
பெண் – சரி (ஒருமை)
பெண்கள் – சரி (பன்மை)
வாழ்த்து – சரி (ஒருமை)
வாழ்த்துகள் – சரி (பன்மை)
வாழ்த்துக்கள் – தவறு (வாழ்த்து + கள் (போதை தரும் கள் என்று பொருள் கொள்க))
எழுத்துகள் – சரி
எழுத்துக்கள் – தவறு (எழுத்து + கள் (கள் போன்ற போதை தரும் எழுத்து)
எந்த விதமான பன்மைக்கும் க் வாராது. க் வந்தால் அது இரண்டு வார்த்தைகளின் கூட்டு (ஒற்று) என்று அறிக.
நன்றி : என்.சொக்கன் மற்றும் இலவசகொத்தனார்.


அருமையான பதிவு. மொழியை எவ்வளவு கவனமாக கையாள வேண்டும் என்பதை எளிய உதாரணங்களோடு சிறப்பாக விளக்கியிருக்கிறீர்கள். ‘சிறு நீர்த் துளி’ :))
// ‘தாள் திறவாய்’ என்பதற்குத் தவறான அர்த்தம் வரக்கூடும், ‘தாழ் திறவாய்’க்கு வராது. அவ்வளவுதான் விஷயம். \\
‘தாள்’ என்றால் கால் என்றும் ஒரு அர்த்தம் வருவதால் நீங்கள் ‘அபஸ்வரம்’ ஆக உணர்கிறீர்கள் போல. கொஞ்சம் தெற்குப் பக்கம் போனால் ‘தாழ’ என்பதும் ‘கீழே’ என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படும். உங்க லாஜிக் அங்கேயும் கொஞ்சம் அடி வாங்கும். பரவாயில்லையா? 🙂
// மொழியை ஒழுங்காக எழுதுவது அவ்வளவு முக்கியமா? சில பல தவறுகள் இருந்தால் என்ன குடி முழுகிவிடும்? \\ கண்டிப்பாக கவனமாக இருக்கத்தான் வேண்டும். அதற்காக மெனக்கெட்டு ஒரு சொல்லை தனியாக பிரித்து எடுத்து ‘மாற்று பொருள்’ கொள்வது நகைச்சுவைக்கு சரி. சீரியஸ் விவாதத்தில் பிசிறடிக்குமே.
நாச்சியார் மொழியில் ‘கற்பூரம் நாறுமோ’ என்று வருகிறதே… அங்கே வாசகனுக்கு குழப்பம் ஏற்படாதா என்று கேள்வி எழலாம். அக்காலத்தில் ‘துர்நாற்றம், நற்நாற்றம்’ எல்லாம் புழக்கத்தில் இருக்கத்தானே செய்தது. ஏன் கவிஞர் இப்படி தவறான பொருள் தொனிக்கும்படி எழுதியிருக்கிறார் என்றுக் கேட்கலாமா?
கற்பூரம் பக்கத்தில் ‘நாற்றம்’ வரும்போதே அதன் பொருள் விளங்கி விடுகிறது. அதுதான் ஒரு கவிஞருக்கும் தேவை. அது போல இங்கே கதவையும், தாளையும் சேர்த்தே வைத்துக் கொண்டால் சிக்கல் இல்லை. அவ்வளவுதான் சார்! 🙂
உங்கள் புண்ணியத்தில் நிறைய புதிய விஷயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நன்றி.


[…] Followup: https://nchokkan.wordpress.com/2011/10/21/rgtwrng/ […]


[…] Followup: https://nchokkan.wordpress.com/2011/10/21/rgtwrng/ […]


உங்க (சிறு நீர்த்துளி) எடுத்துக்காட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. 🙂


“என் சுவாசக் காற்றே.. “ படத்தில் வரும் “இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது..” – இந்தப் பாடல் வரிகளுக்கு என்ன பொருள்? மழை எப்படி ஒரு பெண்ணை அவள் கன்னியா இல்லையா என்பதைக் கண்டறிந்து சொல்லும்?//
Same doubt
Sudharsan


இந்த வார தமிழ்மணியில் வெளியான தொடர்புள்ள கட்டுரை
“கள் மயக்கம் மரபு வழி நிற்றலே மாண்பு”
http://www.dinamani.com/edition/story.aspx?Title=“கள்’ மயக்கம் – மரபுவழி நிற்றலே மாண்பு!&artid=496188&SectionID=179&MainSectionID=179&SectionName=Tamil Mani&SEO
முகில் தமிழ்ச் செல்வன்
சென்ற வாரம், ப.குருநாதன் எழுதியிருந்த “கள் மயக்கம் தெளியுமா?’ என்ற கட்டுரை, ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை. அவர்தம் “கள்’ மயக்கத்தை இக்கட்டுரை தெளிவிக்கும் என நம்புகிறேன்.
மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால் பிள்ளை காலத்திற்கு முன்புவரை “கள்’ விகுதி சிக்கலுக்கு உரியதாகத் தெரியவில்லை. ஆனால், வேணுகோபால் பிள்ளைதான் இது குறித்து ஓர் ஐயத்தை எழுப்பி, தக்க விடையும் தந்தார்.
வருமொழி இடைச்சொல்லாகவோ, உரிச்சொல்லாகவோ, வடமொழி போன்ற பிறமொழிச் சொல்லாகவோ இருந்தால், அங்கே வலி மிகுவதில்லை என்பது அறிந்த ஒன்று. இந்நிலையில், பன்மை குறித்த “கள்’ என்பது இடைச்சொல். ஆதலால் எழுத்துகள், கருத்துகள், வாழ்த்துகள் என்று எழுதுவதே ஏற்புடையதாகும்.
“வன்தொடர் அல்லன முன்மிகா அல்வழி” என்னும் விதியால், வன்தொடர் குற்றியலுகரத்தின் பின் வருமொழி முதலில் வரும் வல்லினம், அல்வழி வேற்றுமையாகிய இரண்டு இடங்களிலும் மிகும்.
“சுக்குக் கடிது, பதக்குப் பெரிது (எழுவாய்த் தொடர்கள்) என வன்தொடரால் வலி மிக்கதைக் காண்க” என்பார் மயிலைநாதர்.
“கொக்குப் பறக்கும் புறாப்பறக்கும்
குருவி பறக்கும் குயில்பறக்கும்
நக்குப் பொறுக்கி களும்பறப்பர்
நானே பறப்பன் நராதிபனே!”
(இராம கவிராயர்)
கொக்குப் பறக்கும் என அல்வழியிலும், நக்குப் பொறுக்கிகள் என வேற்றுமையிலும் வலி மிகுவது ஏனெனில், பொருள் புணர்ச்சிக் கருதி அங்கே வலி மிகுந்தனவாம். விகுதிப் புணர்ச்சிக்கு அவ்விதியைப் பயன்படுத்துதல் கூடாது.
“வாழ்த்துக்கள்’ என்று தவறாக எழுதுகின்ற பலர், தம்மை அறியாமலேயே “வாழ்த்துகிறோம்’ என்று சரியாக எழுதுகின்றனர். காரணம் என்ன? “வாழ்த்துகின்றோம்’ என்னும் சொல்லைப் பகுபதங்களாகப் பிரிக்கும்போது, வாழ்த்து+கின்று+ஓம் எனப் பிரிக்கிறோம்.
வாழ்த்து என்பது வன்தொடர் குற்றியலுகரமாயினும், பொருள் புணர்ச்சி விதியின்படி “வாழ்த்துக்கின்றோம்’ என எழுதுவதில்லை. காரணம், “கின்று’ என்பது இடைச்சொல். எனவே, இப்புணர்ச்சியில் வலி மிகவில்லை.
“இடைஉரி வடசொல்லின் இயல்பிய கொளாதவும்
போலியும் மரூஉம் பொருந்திய வாற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே”
(நன்னூல்-239)
விதி விலக்கான விதிகள்
* ஓரெழுத்து ஒருமொழியின் பின் வலி மிகும். ஆ-ஆக் கள்; ஈ-ஈக்கள்; ஊ-ஊக்கள்; ஏ-ஏக்கள்; கா-காக்கள்.
* ஓரெழுத்து ஒருமொழி அடையெடுத்து அமைந்தாலும் அங்கு வலி மிகும். தேனி-தேனீக்கள்; பூங்கா-பூங்காக்கள். கை-கைகள்; தை-தைகள் என வலி மிகாது இருக்கின்றன. ஏனெனில், கை, தை, பை – “ஐ’ கூட்டுயிர். ஆதலால் அங்கே வலி மிகவில்லை.
* அகர ஈறு: அகர ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும். கள-களக்கள்; விள-விளக்கள்.
* ஆகார ஈறு: ஆகார ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும். ஆலா-ஆலாக்கள்; கனா-கனாக்கள்; பலா-பலாக்கள்.
* உகர ஈறு: உகரத்தை இறுதியாகக்கொண்ட குறிலிணைச் சொற்களின் பின் வலி மிகும். அணு-அணுக்கள்; உடு-உடுக்கள்; கரு-கருக்கள்; தெரு-தெருக்கள்.
* ஊகார ஈறு: ஊகார ஈற்றுச் சொல்லின் பின் வலி மிகும். கொண்மூ-கொண்மூக்கள்.
“புள்’ என்னும் ஒருமைச் சொல்லுக்குப் “புட்கள்’ என்பது பன்மையானது போன்று, “நாள்’ என்பதன் பன்மையை “நாட்கள்’ என்றே பலர் தவறாக எழுதக் காண்கிறோம். நாள்கள் என்பது வேறு; நாட்கள் என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள பொருள் வேறுபாடு தெரியாமல் பலர் பயன்படுத்துகின்றனர். “நாள்கள்’ என்பது, “நாள்’ என்பதன் பன்மையைக் குறிக்கும். “நாட்கள்’ என்பதோ, அன்று இறக்கிய “கள்’ (மது) என்னும் பொருளைத் தரும்.
“நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேரீ தல்லே”
(புறநானூறு-123)
“அன்று இறக்கிய கள்ளைக் குடித்துவிட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியில், தேரைப் பரிசாகக் கொடுத்தல் யார்க்கும் எளிது” என்பது இவ் அடிகளின் பொருளாகும். பல்லோராலும் தவறாகப் பயன்படுத்தப்படுவது “நாட்கள்’ எனும் சொல். நம் முன்னோர்கள் “நாள்கள்’ என்றே எங்கும் பயன்படுத்தக் காணலாம்.
“நடத்தல்அரிது ஆகும்நெறி நாள்கள் சிலதாயர்க்கும்”
(கம்ப.சுந்தர காண்டம்-547)
“நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே”
“தோள்கள் இருந்த வாகாணீரே சுரிகுழலீர் வந்துகாணீரே”
(திவ்யப் பிரபந்தம்-பெரியாழ்வார்-211)
“உரையா தார்இல்லை ஒன்றுநின் தன்மையைப்
பரவா தார்இல்லை நாள்களும்”
(சம்பந்தர் தேவாரம்-596)
“நாளைப்போ வேன்என்று நாள்கள்செலத் தரியாது”
“நீந்துவார் நெடுநாள்கள் நிறைவெம்போர்த் துறைவிளைத்தார்”
(பெரியபுராணம்-1067,1296)
“கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?”
(திருவெம்பாவை-8)
“தமையன்எம் ஐயன் தாள்கள்பாடி”
(திருவாசகம்-207)
மேற்கூறிய இவ்வரலாறுகளின் வழி, நம் முன்னோர்கள் எதை எப்படிச் சொன்னார்களோ, அதை அப்படிக்
கூறுவதே சால்புடையதாகும். பவணந்தி முனிவரும்
இந்நோக்கில்,
“என்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே”
(நன்னூல்-388)
என்று கூறியுள்ளார். மரபின் பெருமையை உணர்ந்து, நமக்கு அதனை உணர்த்தவே தொன்னூலாசிரியர் தொல்காப்பியர் தம் நூலில் மரபு என்னும் சொல்லை 75 இடங்களுக்கு மேற்பட்டுக் கையாண்டிருப்பதைக் காணலாம். மரபுவழி கூறவில்லையெனில் பொருள் வேறுபடும் என்றுணர்ந்து அதற்கென விதி செய்தார்.
“மாற்ற அரும்சிறப்பின் மரபு இயல் கிளப்பின்”
“மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்”
(தொல்.-1500,1591)
எனவே, மரபுவழி நிற்றலே நமக்கு உரிய – உயரிய மாண்பு என்பதை உணர வேண்டும். வாழ்த்துக்கள், கருத்துக்கள், எழுத்துக்கள், நாட்கள், பொருட்கள் என எழுதுவது தவறு. வாழ்த்துகள், எழுத்துகள், கருத்துகள், நாள்கள், பொருள்கள் என எழுதுவதே சரி!


Very good blog, Chokan Sir intha singer Madhushree songs koncham analyse pannungalen, voice is very superb, but pronunciation kodumai!!!


[…] @tamilravi இலக்கணம் முழுக்கத் தெரிந்தபிறகுதான் எழுத வரவேண்டுமா? நான் அப்படி நினைக்கவில்லை,இந்த விஷயத்தில் என் கட்சி: nchokkan.wordpress.com/2011/10/21/rgt… […]


[…] Followup: https://nchokkan.wordpress.com/2011/10/21/rgtwrng/ […]

1 | பலே பிரபு
October 21, 2011 at 7:10 pm
தவறை ஒத்துக்கொள்வது தான் சரி. இந்தப் பதிவின் மூலம் நானும் பல விஷயம் அறிந்தேன்.
நன்றி சார்