யார் முட்டாள்?
Posted March 19, 2009
on:- In: Coimbatore | Confidence | English | Fall | Fear | Language | Learning | Life | Memories | Open Question | Peer Pressure | People | Rise And Fall | Security | Students | Tamil | Teaching | Uncategorized | Youth
- 21 Comments
இன்னும் பத்து நாளில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரப்போகிறது. அதன்பிறகு, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரும். இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
நம் ஊரில் முட்டாள்கள் தினம் இரண்டு வகையாகக் கொண்டாடப்படுகிறது. அகப்பட்டவர்களிடம் விதவிதமாகப் பொய் சொல்லி நம்பச் செய்து ஏமாற்றுவது சாஃப்ட்வேர் வகை, இங்க் தெளித்தல், பூ வெட்டிய உருளைக்கிழங்கை மையில் ஒற்றி முத்திரையிடுதல் போன்றவை ஹார்ட்வேர் வகை.
கல்லூரி ‘ஏப்ரல் 1’களில் ஹார்ட்வேர் கலாட்டாக்கள் குறைவு. பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஏமாற்றுகள்தான் அதிகமாக இருக்கும்.
இப்படி மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதுதவிர, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற முட்டாள்தனத்தையும் கல்லூரிகளில் நிறையப் பார்க்கலாம். உதாரணமாக, திவாகரும் நானும்.
திவாகருக்குச் சொந்த ஊர், ஈரோடு தாண்டி ஒரு கிராமம். கல்லூரியில் என் வகுப்புத் தோழனாகவும் நெருங்கிய சிநேகிதனாகவும் வாய்த்தான்.
நாங்கள் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில், Y2K ஜூரம் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. ஆகவே, எங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள எப்படியாவது கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் இடம் பிடித்துவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் முட்டிமோதினோம்.
விருப்பம் சரி. தகுதி என்று ஒன்று இருக்கிறதில்லையா? முன்னூற்றுச் சொச்ச பேரில் அறுபது அல்லது எழுபது பேருக்குதான் கணினிப் பொறியியல் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. மிச்சமிருந்தவர்கள் அவர்களுடைய மதிப்பெண்கள் அடிப்படையில் மெக்கானிகல், எலக்ட்ரிகல் (EEE), கம்யூனிகேஷன் (ECE) என்று வெவ்வேறு பிரிவுகளில் ஐக்கியமானார்கள்.
இப்படி முக்கியப் பிரிவுகள் எல்லாவற்றிலும் மாணவர்களைச் சேர்த்தபிறகு, மதிப்பெண் பட்டியலின் அடிமட்டத்தில் சிலர் எஞ்சியிருப்பார்கள் இல்லையா? அந்த பின்பெஞ்ச் பார்ட்டிகளுக்காகவே சில ’டிபார்ட்மென்ட்’கள் உண்டு: EIE, Production, Civil.
இதன் அர்த்தம், இந்தப் பிரிவுகளெல்லாம் மோசமானவை என்பது அல்ல. ‘நான் சிவில் எஞ்சினியரிங்க்தான் படிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்துச் சேர்ந்தவர்களெல்லாம்கூட உண்டு. ஆனால் பெரும்பாலும் இந்த மூன்று பிரிவுகளில் ‘தள்ளிவிடப்பட்டவர்’கள்தான் அதிகம்.
நானும் திவாகரும் அந்தக் கேஸ். கம்ப்யூட்டர் சைன்ஸ் அல்லது மெக்கானிகல் என்று ஆசைப்பட்டோம், நாங்கள் வாங்கிய மார்க்குக்கு ப்ரொடக்ஷன் எஞ்சினியரிங்தான் கிடைத்தது.
ஒரே சந்தோஷம், மற்ற எல்லாப் பிரிவுகளையும்விட இங்கே மாணவர்கள் குறைவு. அங்கெல்லாம் அறுபது, எழுபது, எண்பது பேர் ஒரே வகுப்பில் பிதுங்கி வழிந்துகொண்டிருக்க, ப்ரொடக்ஷன் பிரிவில்மட்டும் ’சிக்’கனமாக முப்பதே முப்பது பேர்.
இங்கிருந்த ஆசிரியர்களும் எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒழுங்காகப் படிக்காவிட்டால் ஒரு கண்டிப்பு? வீட்டுப் பாடம் செய்யாவிட்டால் தண்டனை? சரியான நேரத்தில் அசைன்மென்ட் சமர்ப்பிக்காவிட்டால் திட்டு? பரீட்சையில் ஃபெயில் ஆனால் அப்பாவுக்கு லெட்டர்? ம்ஹூம், எதுவும் கிடையாது. ‘வேறு வழியில்லாமல் இங்கே தள்ளிவிடப்பட்ட பையன்கள்தானே, அப்படிதான் இருப்பார்கள்’ என்று அலட்சியமாகத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.
இந்த வாய்ப்பை நாங்கள் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் சரியான கலாட்டா, கிண்டல், கேலி, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியிராத அசட்டை வாழ்க்கை.
கல்லூரியில் எங்களுடன் படித்தவர்கள் பலர், பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருந்தார்கள். மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய பாஷைபோலவே நினைக்காமல் அசட்டையாக ஊதித்தள்ளினார்கள். இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட ஆங்கிலத்தில்தான் உரையாடுவது வழக்கமாக இருந்தது!
குறிப்பாக, பெண்கள் – அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்றமுடியாததாக இருந்தது. அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்கிற காரணத்தாலேயே எங்களில் பலருக்குப் பெண் நண்பிகள் இல்லை.
எப்போதேனும் என்னைப்போன்ற, திவாகரைப்போன்ற பாமர நிலையிலுள்ள பையன்கள் இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும். ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருவதுபோல, பிறமொழி அறிவினால் முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்களின் ஞான ஒளிப் பிரகாசத்தைத் தாங்கியவாறு அவர்கள் படபடவென்று பேசுவதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நாங்கள் திகைப்போடு நின்றிருப்போம். நாமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது, நாங்கள் மனக்கணக்காக ஆங்கில இலக்கணத்தை உருட்டி, ஈஸ் – வாஸ் வேற்றுமைகள் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவர்கள் இன்னும் ஏழெட்டுப் பத்திகள் பேசிவிட்டு எங்களை இளக்காரமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
தூர்தர்ஷனில் உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகையில் ஆங்கிலத்துக்கு ஒன்று, ஹிந்திக்கு ஒன்று என இரண்டு வர்ணனையாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பந்தும் வீசப்பட்டு, விளாசப்பட்டபின்னர் ஹிந்தியில் பேசுகிறவர் ஏதேனும் கேள்விகள் கேட்பார். மற்றொரு வர்ணனைக்காரர் அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார், பதிலுக்கு அவர் ஒரு கேள்வியை வீச, மற்றவர் பிடிவாதமாக ஹிந்தியில் பதில் சொல்வார் – நீ எந்த பாஷையில் பேசினால் எனக்கென்ன, நான் என்னுடைய மொழியில்தான் பதில் சொல்வேன் என்பதுபோல் இருவரும் மாறிமாறி விளையாட, பார்ப்பதற்கு மகா வேடிக்கையாக இருக்கும்.
உண்மையில், அது வேடிக்கையாக அன்றி, கொடுமையாகவும் இருக்கக்கூடும் என்பதைக் கல்லூரியில்தான் நான் உணர்ந்துகொண்டேன்.
எங்களின் சக மாணவர்கள் பலரும் (சில ஆசிரியர்களும்கூட) ஆங்கிலம் தெரியாதவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் புரிந்து, தொடரமுடியாத வேகத்தில் அவர்கள் பேசப்பேச, சற்றே அவமானமாகத் தலைகுனிந்தபடி மெலிதான குரலில் நாங்கள் தமிழில் மறுமொழி சொல்வோம். அதைக் கேட்டதும் அவர்களின் வீம்பு மேலும் உயர்ந்துகொள்ள இன்னும் பண்டிதத்தனமான ஆங்கிலப் பேச்சில் எங்களைத் தொடர்ந்து தாக்குவார்கள்.
இதையெல்லாம் கவனிக்கிறவர்கள், ‘அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்பதுபோல் எங்களைப் பரிதாபத்துடன் அல்லது அலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும். வில்லும் அம்புமாக நிற்கிறவனை, பீரங்கியால் துளைப்பது தவறு என்னும் அடிப்படை யுத்த தர்மம், எல்லாருக்குமே மறந்துபோய்விட்டதுபோல.
என்னுடைய இந்த நிலைமைக்கு நான் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. பள்ளி இறுதிவரை தமிழ் மீடியத்திலேயே படித்த எனக்கு ஆங்கிலம் என்பது ஒரு மொழிகூட இல்லை – வெறும் பாடம்தான். அவ்வளவாக நமக்கு நெருக்கமில்லாத அந்தப் பாடத்தையும் கவனமாகப் படித்து நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வத்தோடுதான் நான் ஆங்கிலத்தை அணுகியிருக்கிறேன். மற்றபடி அதில் நன்றாக பேசிப் பழகவேண்டும் என்கிற எண்ணத்தை யாரும் எனக்குள் உருவாக்கவில்லை – அந்தவிதத்தில்தான் நான் இந்த கான்வென்ட் பறவைகளிலிருந்து வித்தியாசப்பட்டுவிட்டேன்.
இந்தக் கல்லூரியில் சேர்ந்தபோதே, எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில்தானா என்று கொஞ்சம் மலைப்பாக இருந்தது. ஆனாலும் சமாளித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை – பன்னிரண்டாம் வகுப்புவரை ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடத்தை சிரமப்பட்டுப் படிக்கவில்லையா? அதில் ஃபர்ஸ்ட் பேப்பர், செகன்ட் பேப்பர் என்று வருவதுபோல் கல்லூரியில் ஏழெட்டு பேப்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஆச்சு.
குருட்டுத்தனமான சிந்தனைதான். என்றாலும் என்னளவில் அது பலித்தது – ஆங்கில அகராதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படித்தால் அநேகமாக எல்லாப் பாடங்களுமே தத்தம் கடுமைத் திரைகளை உடைத்து எளிமை முகம் காட்டின. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அகராதியைப் புரட்டிக்கொண்டிருப்பது சிரமம்தான், ஆனால் இந்த மொழிப் பிரச்சனை என்னும் பெரிய தடைக்கல்லை உடைப்பதற்காக இந்த கஷ்டத்தைக்கூட அனுபவிக்காவிட்டால் எப்படி?
இப்படி ஒவ்வொரு பாடத்தையும் ஆங்கிலத்தில் படித்து, அதன் பொருளைத் தமிழில் புரிந்துகொண்டு, அதை அப்படியே மனத்தில் பதித்துக்கொண்டுவிட்டால் போதும். பரீட்சை எழுதும்போது நம்முடைய அரைகுறை இலக்கண அறிவைப் பயன்படுத்தி அந்தக் கருத்தை எளிய ஆங்கில வாசகங்களாக மொழிபெயர்த்து எழுதிவிடலாம். ஆசிரியர்களும் நம்மிடம் விஷய ஞானத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் மதிப்பெண்களுக்குக் குறைவிருக்காது.
இப்போது யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நானும் திவாகரும் அப்படிதான் யோசித்தோம். எங்களுடைய முதல் மாதாந்திரத் தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகள் வரும்வரை மனத்தில் தாளமுடியாத வலியுடன்தான் சுற்றிக்கொண்டிருந்தோம்.
இருபதே மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட மிகச் சிறிய தேர்வு அது. மற்ற மாணவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் இருவர்மட்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தமிழில் படித்து ஆங்கிலத்தில் எழுதுகிற எங்களுடைய பரிசோதனை முயற்சிக்கு வெற்றியா, தோல்வியா என்று தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதியாக நாங்கள் அந்தத் தேர்வை மதித்தோம்.
கிட்டத்தட்ட பதினைந்து நாள் காத்திருப்புக்குப்பின், அந்தத் தேர்வின் திருத்திய விடைத்தாள்கள் வகுப்பில் விநியோகிக்கப்பட்டன. நானும் திவாகரும் இருபதுக்குப் பதினேழோ, பதினாறோ மதிப்பெண்கள் எடுத்திருந்தோம்
அதைவிட முக்கியம், எங்கள் இருவருடைய விடைத்தாள்களிலும் ஆங்காங்கே பச்சை அடிக்கோடுகள் இட்டுப் பாராட்டியிருந்தார் அந்த புரொஃபஸர்.
அந்தச் சின்ன அங்கீகாரம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதுவரை ’நமக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே’ என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழன்றுகொண்டிருந்த நாங்களும், இப்போது எங்களை மற்றவர்களுக்கு இணையாகக் கருதிக்கொள்ளத் தொடங்கினோம். படிக்கிற பிள்ளைக்கு நல்லபடியாக மார்க் வாங்குவதுதானே முக்கியம்? மற்றபடி யார் எந்த பாஷையில் பேசினால் எங்களுக்கென்ன?
எங்களைப் பெரிதும் உறுத்திக்கொண்டிருந்த இந்த ஒரு கவலையைத் துறந்தபிறகு, எங்களுக்கிடையிலான நாடகத்தில் ஹீரோ – வில்லன் பாத்திரங்கள் இடம்மாறிவிட்டன. இப்போது, ஆங்கிலத்தில் பேசி அலட்டுகிறவர்களை நாங்கள் அலட்சியமாகப் பார்க்கத் தொடங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தீவீரமான போட்டிகள் தொடங்கின – அவர்கள் ஆங்கிலத்தில் பட்டிமன்றம் நடத்தினால், நாங்கள் கல்லூரி தமிழ் மன்றத்தைப் புதுப்பித்துக் கவியரங்கங்களுக்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் தினமும் ஹிண்டு வாங்கிப் படிப்பதால், எங்கள் ஹாஸ்டல் சரித்திரத்திலேயே முதன்முறையாக, தினத்தந்திக்குச் சந்தா செலுத்திய கலகக்காரனாக ஆனேன் நான்.
இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம் – தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் நானும் சுதாகரும் நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆங்கிலேயர்கள் எங்களுக்கெதிரே நடத்திய யுத்தத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டதாகவே நம்பினோம்.
ஆனால் உண்மையில் தோற்றது யார்? ஜெயித்தது யார்? புத்திசாலி யார்? முட்டாள் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்களுக்குக் கிடைக்க இரண்டு வருடங்கள் ஆனது.
அப்போது நாங்கள் மூன்றாம் வருடப் படிப்பின் நிறைவில் இருந்தோம். அடுத்த வருடம் வரப்போகிற ‘Campus Interview’களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம்.
மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், நானும் திவாகரும் எங்கள் வகுப்பில் முதல் நான்கைந்து இடங்களுக்குள் இருந்தோம். ஆகவே, எங்களுடைய பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நேர்முகத் தேர்வில் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கண்டுபிடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினோம்.
கண்டுபிடிப்பது சரி, அதை வாயைத் திறந்து சொல்லவேண்டாமா? அங்கேதான் பிரச்னை.
இரண்டு வருடங்களாக, வாத்தியார்மேல் கோபப்பட்டு, பள்ளிக்கூடத்தைக் கொளுத்தியதுபோல், யார்மீதோ கொண்ட விரோதத்தால், அவர்களைப் பழிவாங்கி, ஜெயித்தாகவேண்டும் என்கிற அசட்டுத் துடிப்பால் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இப்போது அது பெரிய இடியாக எங்கள்மேல் இறங்கியது.
எங்கள் கல்லூரியில், நிஜமான எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் தொடங்குமுன், அவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். சக மாணவர்கள், சீனியர்கள், சில சமயங்களில் ஆசிரியர்கள் எங்களை இண்டர்வ்யூ செய்து, என்ன தப்புச் செய்கிறோம் என்று சுட்டிக்காட்டுவார்கள், ஆலோசனை சொல்வார்கள்.
இதுபோன்ற ‘பயிற்சி இண்டர்வ்யூ’க்கள் ஒவ்வொன்றும், எங்களுக்கு மிகக் கொடுமையான அனுபவமாக இருந்தது. ’முள்மேல் உட்கார்வது’ என்று நிறையப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அது நிஜத்தில் சாத்தியம் என்று அப்போதுதான் புரிந்தது.
இத்தனைக்கும், அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் எளிமையானவைதான். எல்லாக் கேள்விகளுமே எங்களுக்குப் புரிகிறது, பதிலும் தெரிகிறது, ஆனால் அதைக் கோர்வையாக விவரித்துச் சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் போதவில்லை – கொச்சை ஆங்கிலமோ தமிழைக் கலந்து பேசுகிற அசுத்தமோ அங்கே அனுமதிக்கப்படவில்லை என்பதால், நாங்கள் வாயில்லாப் பிள்ளைகளாகப் பின்தங்கினோம்.
மெல்ல, நாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கினோம். இரண்டு வருடங்களுக்குமுன்னால், ஆங்கிலத்தில் நன்கு பேசத் தெரிந்த மேன்மக்கள் எங்களை அவமானப்படுத்தியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அந்த மொழியைப் பேசிக் கற்றிருக்கவேண்டும். காலம் கடந்த ஞானம்.
அந்த வருட இறுதியில், எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வ்யூத் திருவிழாக்கள் தொடங்கின. முதல் பத்துப் பதினைந்து நாள்களிலேயே, கிட்டத்தட்ட இருபத்தைந்து கம்பெனிகளுக்குமேல் பங்குபெற்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் தொடங்கி, இப்போதுதான் ரிப்பன் வெட்டிய கத்துக்குட்டிகள்வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கான்பூர், திருவனந்தபுரம், பூனா, பாட்னா, இன்னும் எங்கெங்கிருந்தோ விமானத்தில் ஆள் பிடிக்க வந்து சேர்ந்தார்கள்.
நம் ஊர் சினிமாக் கொட்டகைகளில் புதுப் படங்கள் வெளியாகும்போது, காலைக் காட்சி முடிவதற்குள் மேட்னிக்கான கூட்டம் நெரித்துத் தள்ளும். அதுபோல, இந்த நிறுவனங்கள் ஒருவர்பின் ஒருவராக வந்துகொண்டேயிருப்பதைப் பார்த்தபோது, வெளியே ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக்கிடப்பதாக எங்களுக்குத் தோன்றியது.
‘அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூட, ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்’ என்று ஒரு பழைய படத்தில் சிவாஜி கணேசன் சொல்வார். அதுபோல, இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்செல்லமுடியாதபடி எங்களுக்கு இந்த மொழித் தடை, நிஜமான இண்டர்வ்யூக்களை நினைத்தாலே நாங்கள் பயந்து நடுங்கினோம்.
என்னுடைய அதிர்ஷ்டம், என்னை முதன்முதலாக இண்டர்வ்யூ செய்த அதிகாரி, ஒரு தமிழர். நான் தயங்கித் தயங்கிப் பேசிய பட்லர் ஆங்கிலம் அவருக்கு ஒரு பெரிய குறையாகத் தோன்றவில்லை. என் நிலைக்கு இறங்கி வந்து, பயமுறுத்தாத எளிய சொற்களில் கேள்வி கேட்டு, என்னுடைய இலக்கணமற்ற ஒற்றை வார்த்தைப் பதில்களை அங்கீகரித்து, சில விரிவான பதில்களைப் பேச்சில் அன்றி, படம் வரைந்து விளக்கச் சொல்லி, இன்னும் என்னென்னவோ வழிகளில் அந்த மொழித் தடையைத் தாண்டியும் எனக்குத் திறமை இருக்கிறதா என்பதைமட்டுமே அவர் பார்த்தார்.
இன்றுவரை நான் சந்தித்த ஒரே இண்டர்வ்யூ அதுதான். முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்துவிட்டது.
திவாகருக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவன் பல மாதங்கள் போராடிப் பார்த்துப் பரிதாபமாகத் தோற்றுப்போனான்.
கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபிறகு, திவாகருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் குறைந்து போயின. மூன்று மாதமோ, ஆறு மாதமோ முயற்சி செய்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு(ME)க்குச் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள்.
இன்றைக்கு திவாகர் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் என்னைப்போல் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கவேண்டும் என்றுமட்டும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
ஆனால், அன்னிய மொழியைப் படிக்கமுடியாத, அல்லது படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற எங்களைப்போன்ற ’முட்டாள்’களையெல்லாம், அதிர்ஷ்டம்தான் காப்பாற்றவேண்டுமா?
***
என். சொக்கன் …
19 03 2009
21 Responses to "யார் முட்டாள்?"

பல பல நிகழ்வுகள் அப்படியே என் வாழ்விலும் நடந்தது அதிலும் சிவில்.
நான் படிக்கும் போது கணினி பாடப்படிப்பு இல்லை அதோடு நான் கடைசி ஆண்டில் இருக்கும் போது தான் பெண்களையே அனுமதித்தார்கள்.
முடிந்தால் இங்கு பாருங்கள்.


NALLA VELAI ANTHA அதிர்ஷ்டம்தான் enna kappathuchu..


கற்றது தமிழ்…
//இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம் – தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் நானும் சுதாகரும் நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆங்கிலேயர்கள் எங்களுக்கெதிரே நடத்திய யுத்தத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டதாகவே நம்பினோம்.//
உங்கள் வகுப்பு தோழரின் உண்மையான பெயர் சுதாகரோ? [ திவாகர் ]


நீங்க என்னமோ குற்றம் செஞ்ச மாதிரி பேசறிங்க. மொழி 15 வருடமா ஆங்கிலம் படிச்சி தான வந்திங்க. நாம சரியா ஒரு மொழிய படிக்க முயற்சிக்கல. அவ்வளவுதான்.
அதே சமயம் மேல் படிப்பு படிக்க நிச்சயம் நல்ல ஆங்கில அறிவு இல்லனா முடியாது.
சோ உங்க நண்பர் முன்ன கட்டாயம் வந்து இருப்பார்


ஐய்யய்யோ நான் காலைல போட்ட பின்னூட்டம் காணோமே!


நெறைய விசயங்களை பேசியே ஆகனும்னா இது கருத்து மன்றமா போயிரும். முட்டாள் அப்படிங்கிறது பெரிய வார்த்தைன்னு சின்னதா என் அபிப்பிராயத்தை சொல்லி முடிச்சிக்கிறேன்


Sokkan,
Pramadham.
Thanks.


Dear Sir,
I accept your statement more than what I like.
I saw many friends like that.
The statement has a powerful truth.


//எனக்கு ஆங்கிலம் என்பது ஒரு மொழிகூட இல்லை – வெறும் பாடம்தான். //
எங்களுக்கும்தான். சினிமா பார்த்து கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தோம், மலையாலம் கற்க முடிந்த அளவு ஆங்கிலம் முடியவில்லையே ப்ரதர்ட்.


ஐயா,
என் பின்னூட்டத்தில் ஒரு லின்க் போட்டு கொஞ்சம் சுயவிளம்பரித்தால், ஸ்பேமா?
வேர்ட்ப்ரஸ் ஒழிக! எங்கள் ஓட்டு ஸ்பேமிலிருந்து நல்ல மெயில் பிரிக்கும் அன்னப்பட்சியான சொக்கனுக்கே!


[…] 6 யார் முட்டாள்? : என். […]


The first and greatest victory is to conquer yourself; to be conquered by yourself is of all things most shameful and vile.
Quotation of Plato


yes , same story in my life but charater,department ,college different

1 | R Sathyamurthy
March 19, 2009 at 4:36 pm
நானும் உங்களைப் போல தமிழ்வழி போதகத்தில் படித்து (+2 தவிர) பின்பு கல்லூரியில் சேர்ந்த புதிதில் ஆங்கிலத்திற்கு தலை முதல் தொடை வரை நடுங்கியிருக்கிறேன்.
பின்பு ஆங்கிலப் புத்தகங்கள் படித்ததாலும், என் படிப்பறிவு ஆங்கிலத்தால், நான் ஆங்கில புலவர்கள் என்று நினைத்தவர்கள் பேசும் தவறான ஆங்கிலத்தை கேட்டதாலும், தொடை ந்டுக்கத் தடை அகன்றது.
தொளவுஜண்ட் ரூபீஸ் என்று மார்வாடிப் பையன்களின் ஆங்கிலமும், இப்போதும்கூட பல டில்லியர் சொல்லும் “இஸ்கூலும்” எனக்கு நினைவு வருகின்றன.
http://www.sathyamurthy.com/2009/03/18/what-is-the-price-of-truth/