Posted by: என். சொக்கன் on: ஜனவரி 28, 2012
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘Animal Farm’ (குறு?)நாவலை முதன்முறையாக வாசித்தபோது, எனக்கு அது ஒரு சாதாரணமான கற்பனைக் கதையாகவே தெரிந்தது. சொல்லப்போனால் அதை ஒரு வித்தியாசமான Fairy Tale என்றே நினைத்தேன்.
Fairy Tale சரி, அது என்ன ‘வித்தியாசமான’?
மற்ற தேவதைக் கதைகளைப்போலவே இந்தக் கதையிலும் மிருகங்கள் பேசிக்கொண்டன மனிதர்களை எதிர்த்துச் சண்டை போட்டன, ஹீரோக்களும் வில்லன்களும் இயல்பாக உருவானார்கள், பரவசமான காட்சிகளும் சந்தோஷங்களும் விவரிக்கப்பட்டன.
அதற்கப்புறம்தான் வித்தியாசமே, அதுவரை எல்லாவிதங்களிலும் சமமாக இருந்த மிருகங்களில் சில திடீரென்று மனம் மாறுவதும், பழைய வில்லன்களைப்போல் தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதும் இவையே மற்றவற்றை அடக்கி ஒடுக்கப் பார்ப்பதும் எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. கதையின் முடிவு தேவதைக் கதைகளைப்போல் சந்தோஷமாக இல்லாமல் துயரமாக இருந்ததும் ஒரு முக்கியமான வேறுபாடு.
ஆனால் இத்தனைக்குப்பிறகும், என்னுடைய மரமண்டைக்கு இந்தக் கதையின் ‘உள்செய்தி’ (பழந்தமிழில் சொல்வதென்றால் ‘இறைச்சிப் பொருள்’) புரியவில்லை. அதை ஒரு கற்பனைக் கதையாகமட்டுமே (ஜார்ஜ் ஆர்வெல்கூட இதனை ‘A Fairy Story’ என்றுதான் குறிப்பிடுகிறார்) எண்ணிப் படித்தேன், முழுமையாக ரசித்தேன்.

(‘Animal Farm’ முதல் பதிப்பின் முன்னட்டை
Image Courtesy : http://en.wikipedia.org/wiki/File:AnimalFarm_1stEd.jpg)
கொஞ்ச நாள் கழித்து ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக இந்தக் கதையைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘அட்டகாசமான ஃபான்டஸி சார்’ என்றேன் நான் பரவசமாக.
அந்த நண்பர் என்னை அற்பமாகப் பார்த்தார். ‘இதுல ஃபேண்டஸி எங்கே வந்தது? அந்தக் கதை மொத்தமும் உண்மையாச்சே’ என்றார்.
‘உண்மையா? என்ன சார் சொல்றீங்க?’
அவர் உலகமே இடிந்து விழுந்துவிட்டதுபோல் பதறினார். ‘அடப் படுபாவி, அந்தக் கதை எதைப்பத்தினதுன்னு உனக்கு நிஜமாத் தெரியாதா?’ என்றார். ‘Animal Farm’ல் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வோர் இடமும் ஒவ்வோர் அசைவும் ரஷ்யா / புரட்சி / கம்ப்யூனிஸ்ட் ஆட்சி போன்றவற்றை எப்படிக் குறிப்பிடுகிறது என்று நிதானமாக விளக்கிச் சொன்னார். நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
என்னுடைய ஆச்சர்யத்துக்கு முதல் காரணம், அதுவரை எனக்கு ஒரு புனைவாக(Fiction)மட்டுமே தோன்றிய ‘Animal Farm’ கதை அவர் பேசியபின்னர் திடீரென்று அபுனைவாக(Nonfiction) உருப்பெற்றுவிட்டது. அது வெறும் தேவதைக் கதை அல்ல, சென்ற நூற்றாண்டின் முதல் 40 வருடங்களாக ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளை மறைமுகமாக விவரிக்கிற படைப்பு.
ஜார்ஜ் ஆர்வெல் நினைத்தால் ரஷ்யக் கம்யூனிஸ்ட் அரசுபற்றிய தன் விமர்சனத்தை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கலாம். ஆனால் இந்தக் கதையின்மூலம் அவர் அதனை ஒரு கார்ட்டூன் / கேலிச் சித்திரம்போல் பதிவு செய்துவிட்டார். (நிச்சயம் ஒருசார்பான பதிவுதான், ஆனாலும் அது அற்புதமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை)
என்னைப்போன்ற மக்குப் பேர்வழிகள் இந்தக் கதையைச் ‘சும்மா’ படித்து ரசிக்கலாம், விஷயம் தெரிந்தவர்கள் அரசியல் கேலியை ஒப்பிட்டு மகிழலாம், இருதரப்பினருக்கும் திருப்தி தரக்கூடிய அபூர்வக் கலவை அந்தப் புத்தகம். அதுதான் ஜார்ஜ் ஆர்வெலின் மேதைமை.
அந்த நண்பரிடம் பேசியபிறகு, நான் இணையத்துக்குச் சென்று ‘Animal Farm’ கதையின் அரசியல் பின்னணி பற்றிப் படித்தேன். யார் லெனின், யார் ஸ்டாலின், யார் ட்ராட்ஸ்கி, யார் ஹிட்லர், கதையில் வரும் காற்றாலை எதைக் குறிக்கிறது, குதிரைகள் யார், கோழிகள் யார் என்றெல்லாம் வாசித்து ஒப்பிடும்போது நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. திடீரென்று கண் திறந்துவிட்டாற்போலிருந்தது.
அதன்பிறகு, மீண்டும் ஒருமுறை ‘Animal Farm’ கதையை முழுமையாகப் படித்துப்பார்த்தேன். (இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது : http://www.gutenberg.net.au/ebooks01/0100011h.html) ஜார்ஜ் ஆர்வெல் மேதைமட்டுமல்ல, செம குறும்புக்காரர் என்பது புரிந்தது. முன்பைவிடக் கூடுதலாக ரசிக்கமுடிந்தது.
சில வருடங்கள் கழித்து, ரஷ்ய உளவுத்துறையாகிய KGBபற்றி ஒரு புத்தகம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ‘Animal Farm’ல் வரும் கொடூர நாய்களைதான் நினைத்துக்கொண்டேன்.
ஆச்சர்யமான விஷயம், இப்போது ரஷ்யாபற்றி நான் படித்த ஒவ்வொரு விவரமும் என்னை ‘Animal Farm’ கற்பனை உலகத்துக்குள் கொண்டுசென்றது. இந்த நிகழ்ச்சியை ஜார்ஜ் ஆர்வெல் அந்தக் கதையில் சேர்த்திருக்கிறாரா, இல்லை எனில் ஏன்? ஒருவேளை சேர்த்திருந்தால் அது எப்படி அமையும், எந்தக் கதாபாத்திரம் இதைச் செய்யும், அதனால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றெல்லாம் பலவிதமாக யோசித்துச் சந்தோஷப்படத் தோன்றியது.
இப்போது, ‘Animal Farm’ புத்தகம் ‘விலங்குப் பண்ணை’ என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது. மொழிபெயர்த்திருப்பவர் பி. வி. ராமஸ்வாமி. கிழக்கு பதிப்பகம் வெளியீடு, 144 பக்கங்கள், விலை ரூ 85.

(Image Courtesy : https://www.nhm.in/shop/978-81-8493-521-9.html)
Animal Farm ஏற்கெனவே சிலமுறை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இணையத்தில்கூட எங்கேயோ அதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் நான் இந்தக் கதையைத் தமிழில் முழுமையாக வாசித்தது இந்தப் புத்தகத்தில்தான்.
தமிழில் மொழிபெயர்ப்புகளே குறைவு, நல்ல மொழிபெயர்ப்புகள் அதைவிடக் குறைவு. எனக்குத் தெரிந்து இதுவரை மூன்று முறை வெவ்வேறு தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்கி வாசித்துவிட்டு வெறுத்துப்போய் ஒரிஜினல் ஆங்கிலப் புத்தகங்களையே மீண்டும் காசு செலவழித்து வாங்கியிருக்கிறேன்.
இதனால், ‘விலங்குப் பண்ணை’யைக் கொஞ்சம் சந்தேகத்துடன்தான் கையில் எடுத்தேன். முடிந்தால் படிக்கலாம், இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை, ஏற்கெனவேதான் ஒரிஜினலை ரெண்டு முறை படித்தாகிவிட்டதே!
’விலங்குப் பண்ணை’யில் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்திய விஷயம், பி. வி. ராமஸ்வாமியின் சரளமான மொழி நடை. அதிநவீனமாகவும் இல்லை, அரதப்பழசாகவும் இல்லை, நாற்பதுகளில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைக் கிட்டத்தட்ட எழுபது வருடம் கழித்து வாசிக்கும்போது அதே உணர்வுகளைக் கொண்டுவருவதற்கு எத்தகைய மொழியைப் பயன்படுத்தவேண்டுமோ அதை மிகுந்த தேர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார்.
குறிப்பாக, இந்தக் கதையின் ஆன்மா, எத்தனை புரட்சிகள் வந்தாலும் அப்பாவி விலங்குகள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றன என்கிற செய்தி அதன் மெலிதான பிரசார தொனியுடன் அப்படியே இந்த மொழிபெயர்ப்பில் அழகாக இறங்கியிருக்கிறது. மற்றபடி சில பத்திகள் நீளமானவை, பயன்படுத்தப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் வழக்கில் இல்லாதவை என்பதுபோன்ற சிறு குறைகளெல்லாம் இரண்டாம்பட்சமே.
இன்னொரு விஷயம், கதையின் மிக முக்கியமான பகுதிகளில் மூல வடிவத்தைப் படிக்கும்போது வரும் அதே உணர்வுகள் (நான் அதை ஏற்கெனவே இருமுறை வாசித்திருந்தாலும்) இங்கேயும் பிசிறின்றி வருகின்றன. வார்த்தைக்கு வார்த்தை எனச் செய்யப்படும் (Transactional) மொழிபெயர்ப்புகளில் இது சாத்தியமே இல்லை. கதையின் தன்மையை உணர்ந்து மறு உருவாக்கம் செய்தால்தான் உண்டு.
உதாரணமாக, இந்தக் கதையின் மிக முக்கியமான பகுதிகளாக நான் நினைப்பது, மிருகங்கள் இணைந்து கட்டப்படும் காற்றாலை இரண்டு முறை இடிந்து விழுவது, வயதான மிருகங்களின் நலவாழ்வுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்கள் பிடுங்கப்படுவது, பன்றிகள் சுகவாழ்க்கைக்குப் பழகிக்கொண்டு மற்ற மிருகங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வது, பாக்ஸர் என்கிற கடும் உழைப்பாளிக் குதிரையிடமிருந்து சகல உழைப்பையும் பிடுங்கிக்கொண்டு அதைச் சக மிருகங்களே கசாப்புக் கடைக்காரனுக்கு விற்றுவிடுகிற காட்சி, எழுதப் படிக்கத் தெரிந்த, தெரியாத மிருகங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொய்ப் பிரசாரத்தின்மூலம் மூளை மழுங்கச்செய்யப்படுவது, திடீரென்று தோன்றும் வேட்டை நாய்கள் நிகழ்த்தும் கொடூரங்கள்… இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றிலும் எழவேண்டிய தன்னிரக்கம், கோபம், ஆத்திரம், சோகம், பயம் போன்ற உணர்வுகள் அனைத்தும் தமிழ் மொழிபெயர்ப்பில் மறுபடி வாசிக்கும்போதும் அதேபோல் எழுகின்றன. இதற்கு ஒருபாதிக் காரணம் ஜார்ஜ் ஆர்வெல் என்றால், இன்னொருபாதிக் காரணம் பி. வி. ராமஸ்வாமியின் மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இதுதான். நீங்கள் இதுவரை ‘Animal Farm’ வாசித்ததில்லை என்றால், தாராளமாக இதை நம்பி வாங்கலாம். அதற்கு நீங்கள் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை, என்னைப்போல் அரசியல் தெரியாத கோயிந்துகளாலும் ரசிக்கமுடிகிற படைப்பு இது.
***
என். சொக்கன் …
28 01 2012
Posted by: என். சொக்கன் on: ஜனவரி 25, 2012
நேற்று இரவு அலுவல் நிமித்தம் ஓர் ஆஸ்திரேலியரைச் சந்தித்தோம். இந்திய வம்சாவளிக் குடும்பம்தான். ஆனால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறிவிட்டார்கள். இப்போது தொழில்முறைப் பயணமாக இங்கே வந்திருக்கிறார்.
அவர் தங்கியிருந்தது பெங்களூரின் மிகப் பழமையான நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்று. அங்கே எங்களுக்குப் பிரமாண்டமான விருந்து அளித்தார். ஒரு ப்ளேட் வெஜிடபிள் பிரியாணி: ரூ 1500/- தொட்டுக்கொள்ளத் தயிர்ப் பச்சடி ரூ 350/- என்று மெனுவைப் பார்த்தாலே எனக்குப் பசி தீர்ந்துவிட்டது.
ஆனால், அவருக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்கமுடியாது. போன வருடம்தான் அவர் தனது சொந்த நிறுவனத்தை இன்னொரு மிகப் பெரிய நிறுவனத்திடம் விற்று ஐநூற்றுச் சொச்ச கோடிகளை அள்ளியிருந்தார். இப்போது அந்தப் பெரிய நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.
ஆஃபீஸ் விஷயம் என்பதால், இந்த ஐநூறு கோடீஸ்வரருடைய பெயரையோ வேறு விவரங்களையோ தெரிவிக்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் பிரச்னையில்லை, அவர் சொன்ன விஷயங்கள்தான் முக்கியம். சும்மா அவருடைய பெயர் மிஸ்டர் கோயிஞ்சாமி என்று வைத்துக்கொண்டு தொடர்கிறேன்.
உண்மையில் எனக்கு இதுபோன்ற பெரும்புள்ளிகளுடன் ஒப்பந்தம் பேசிப் பழக்கமும் இல்லை, அதற்கான நெளிவுசுளிவுகளும் எனக்குத் தெரியாது. என்னுடைய boss அதில் பெரிய விற்பன்னர். எதற்காகவோ இந்தமுறை என்னையும் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டு போயிருந்தார். நானும் ஆயிரத்தைநூறு ரூபாய் பிரியாணியில் என்ன விசேஷம் என்று பரிசோதித்தபடி அவர்கள் இருவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஆரம்பத்தில் அலுவலக விஷயங்களைப் பேசியவர்கள் ஒருகட்டத்தில் (ஒயின் தாக்கத்தில்?) பர்ஸனல் சமாசாரங்களுக்கு நகர்ந்தார்கள். குறிப்பாக, மிஸ்டர் கோயிஞ்சாமி தன்னுடைய தனிப்பட்ட தொழில்முனைவோர் (Entrepreneur) அனுபவங்களை மிகச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.
அதாகப்பட்டது, நீங்கள் ஒரு தொழில் தொடங்கி நடத்துகிறீர்கள், அடிமட்டத்திலிருந்து அதனை வளர்த்து ஆளாக்கி ஒரு பெரிய நிறுவனத்துக்கு விற்க நினைக்கிறீர்கள், அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும்? மிஸ்டர் கோயிஞ்சாமி கொடுத்த டிப்ஸ் இவை:
முன்குறிப்புகள்:
1. ஓர் ஒழுங்கில் இல்லாமல் என் நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன் (Unstructured Notesபோல) தவறுகளோ, அபத்தங்களோ இருந்தால் நானே முழுப் பொறுப்பு
2. இந்த சீரியஸான மேட்டரை இப்படி dilute செய்து விளையாட்டாக எழுதியிருக்கிறானே என்று நினைக்கவேண்டாம், நான் சொந்தத் தொழில் தொடங்கியவன் அல்லன், அப்படி ஒரு யோசனையும் இல்லை, ஆகவே எனக்கு இது சும்மா ஜாலியாகக் கவனித்த விஷயம்தான், இப்படிதான் என்னால் எழுதமுடியும்
3. இவை முழுமையான குறிப்புகள் அல்ல, அவர் சொன்னதில் என் நினைவில் தங்கியவைமட்டுமே, அவர் சொல்ல மறந்தவை இன்னும் நிறைய இருக்கலாம்
4. இந்த பலவீனங்களையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்புகள் யாருக்காவது பயன்படும் என்று நம்புகிறேன்
***
என். சொக்கன் …
25 01 2011
Posted by: என். சொக்கன் on: ஜனவரி 4, 2012
சென்னையைச் சேர்ந்த நண்பர் திரு. பாரி வேல் ‘தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் இணையத்தின் பங்கு’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். அதுதொடர்பாக நேற்று நானும் அவரும் Skypeவழி உரையாடினோம். அதன் ஒலிப்பதிவு இங்கே.
உங்களுக்கு இந்தத் தலைப்பில் ஆர்வம் இருந்தால், இந்த உரையாடலைக் கேட்டுக் கருத்துச் சொல்லலாம், கூடுதல் விவரங்களைச் சேர்க்கலாம், இங்கே பின்னூட்டமாக எழுதினாலும் சரி, திரு. பாரி வேல் அவர்களுக்கு நேரடியாக மெயில் எழுதினாலும் சரி (அவரது மின்னஞ்சல் முகவரி : egalaivan@yahoo.com ). இவை அவரது ஆய்வுக்கு மிகவும் பயன்படும். அட்வான்ஸ் நன்றிகள்.
சில முன்குறிப்புகள்:
1. ஒலிப்பதிவுத் தரம் சரியாக இல்லை. சில நிமிடங்களுக்குப்பின் காது வலிக்கிறது. ஒலி அளவைக் குறைத்துக் கேட்டல் நலம் பயக்கும்
2. முதல் கேள்வி 100% சுயபுராணம், அதன்பிறகுதான் சப்ஜெக்டுக்கே வருகிறோம், உங்களுக்கும் சுயபுராணங்கள் அலர்ஜி என்றால் முதல் 58 விநாடிகளைத் தவிர்த்துவிடவும்
3. இதனை mp3 வடிவில் டவுன்லோட் செய்து பின்னர் கேட்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள ஆங்கில இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
Nchokkan Chat With M. Parivel by Naga Chokkanathan
***
என். சொக்கன் …
04 01 2012
Posted by: என். சொக்கன் on: ஜனவரி 4, 2012
அறுசீர் விருத்தம்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுகுறித்த ஓர் அறிமுகமாக நான் எழுதிய கட்டுரை ஒன்று தமிழோவியம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அதை இங்கே வாசிக்கலாம்: http://www.tamiloviam.com/site/?p=2158
***
என். சொக்கன் …
04 01 2012
Posted by: என். சொக்கன் on: December 23, 2011
இணையத்தில் @Ursquizzically என்ற புதிர் நிகழ்ச்சிக்காக என்னைச் சிறு பேட்டி எடுத்தார்கள், அந்தப் பேட்டியைக் கீழே உள்ள லிங்க்கில் கேட்கலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம், க்விஸ்ஸுக்காக நான் கேட்ட கேள்விகள் பின்னர் வரும், நீங்கள் கலந்துகொண்டு மார்க் வாங்கலாம் (நான் நல்ல வாத்தியாராக்கும், சிம்பிள் கொஸ்டின்ஸ்தான் கேட்பேன்
N. Chokkan Interview For Yours Quizzically
***
என். சொக்கன் …
23 12 2011
Posted by: என். சொக்கன் on: December 20, 2011
இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:
1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது
2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே
குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.
லலிதா ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.
உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.
ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:
இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?
கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?
ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.
ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.
அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!
முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.
இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா ராம்.
இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.
இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.
உதாரணமாக, சில விஷயங்கள்:
1
கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.
அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.
ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.
நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.
2
இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.
சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.
அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.
அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.
மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.
3
இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.
பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.
தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
4
பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.
5
மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.
பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.
அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.
6
ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.
ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.
‘எப்படி?’
‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’
‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’
’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.
அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.
அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.
அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய உயர்வு ரத்தாகிறது.
ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.
7
மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.
‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’
’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.
8
எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.
இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.
ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.
9
ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.
‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.
ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.
அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.
இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.
‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.
இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.
10
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.
ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!
*
இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.
Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.
On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.
இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார் ![]()
அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.
இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது ![]()
உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!
(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)
***
என். சொக்கன் …
20 12 2011
Posted by: என். சொக்கன் on: December 18, 2011
நங்கையின் பள்ளியில் தமிழ்ப் பாடங்கள் இல்லை. ஆகவே நம் ஊரிலிருந்து ஒண்ணாங்கிளாஸ் தமிழ்ப் புத்தகம் வாங்கித் தந்திருக்கிறோம். இன்று காலை அதில் ஒரு தமிழ்ப் பாடல் / Rhyme (எழுதியவர் பெயர் தெரியவில்லை) எழுத்துக் கூட்டிப் படித்துக்கொண்டிருந்தாள்:
மல்லிகைப் பூவே! மல்லிகைப் பூவே! எங்க போறீங்க?
மஞ்சள் சாமந்தி பூத்துச்சான்னு பார்க்கப் போறேங்க!
சாமந்திப் பூவே! சாமந்திப் பூவே! எங்க போறீங்க?
வெள்ளைத் தாமரை பூத்துச்சான்னு பார்க்கப் போறேங்க!
தாமரைப் பூவே! தாமரைப் பூவே! எங்க போறீங்க?
சிவப்பு ரோஜா பூத்துச்சான்னு பார்க்கப் போறேங்க!
ரோஜாப்பூவே! ரோஜாப்பூவே! எங்க போறீங்க?
பூத்த பூவைப் பறிச்சு உனக்குச் சூட்டப் போறேங்க!
அப்போது அவளுடைய தங்கை கையில் பாதாம் பருப்புடன் ஓடி வர, அதை வைத்து இந்தப் பாட்டின் அடிப்படையில் அவள் ஒரு ‘காப்பி’ப் பாடலை இட்டுக்கட்டிப் பாடினாள்:
பாதாம் மாமா! பாதாம் மாமா! எங்கே போறீங்க?முந்திரிப் பருப்பு மாமாவத்தான் பார்க்கப் போறேங்க!முந்திரி மாமா! முந்திரி மாமா! எங்கே போறீங்க?திராட்சை மாமாவைத்தான் பார்க்கப் போறேங்க!திராட்சை மாமா! திராட்சை மாமா! எங்கே போறீங்க?பழம் பறிச்சு நான் உனக்கு ஊட்டப் போறேங்க!
ட்விட்டர் மாமா! ட்விட்டர் மாமா! எங்கே போறீங்க?சர்வர் டவுனு ஆனதால நான் தூங்கப் போறேங்க!
ட்விட்டர் மாமா! ட்விட்டர் மாமா! எங்கே போறீங்க?
ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய நானும் போறேங்க!
ஃபேஸ்புக் மாமா! ஃபேஸ்புக் மாமா! எங்கே போறீங்க?
ப்ளாக் எழுத, ஃபீட்பேக் போட நானும் போறேங்க!
ப்ளாக் மாமா! ப்ளாக் மாமா! எங்கே போறீங்க?
ஃபோர் ஸ்கொயரில் மேயராக நானும் போறேங்க!
4ஸ்கொயர் மாமா! 4ஸ்கொயர் மாமா! எங்கே போறீங்க?
கூகுள் ப்ளஸ்ஸில் ப்ரொஃபைல் க்ரியேட் பண்ணப் போறேங்க!
கூகுள் மாமா! கூகுள் மாமா! எங்கே போறீங்க?
நான் எங்கே போவேன், இங்கேயேதான் கிடக்கப்போறேங்க!
:>
***
என். சொக்கன் …
18 12 2011
Posted by: என். சொக்கன் on: December 18, 2011
நேற்று ட்விட்டரில் எழுதிய 31 ட்வீட்களை நண்பர் டாக்டர் விஜய் (@scanman) தொகுத்துத் தந்தார். மொத்தமாகப் படிக்க செம ஜாலியாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று சில திருத்தங்கள், கூடுதல் குறிப்புகளுடன் இங்கே தொகுத்துவைக்கிறேன்:
இன்று மார்கழி 1. வருடாந்திர வழக்கப்படி திருப்பாவை, திருவெம்பாவை 50 பாட்டுகளையும் ஒருமுறை நிதானமாகப் படித்து முடித்தேன்.
திருப்பாவைப் பாடல்களைவிட, நமக்கு நன்கு தெரிந்த ஆண்டாள் கதையே மேலோங்கி நிற்பதால், சூப்பர் ஸ்டார் படம் பார்க்கும் உணர்வு, ஆனால் திருவெம்பாவையில் அந்தப் பிரச்னை இல்லை. No super stars, No பின்னணிக் கதை, எல்லாப் பெண்களும் சமம் என்பதால் சுவாரஸ்யம் மிகுகிறது.
திருப்பாவை ஹீரோ(யின்) சப்ஜெக்ட் என்றால், திருவெம்பாவை அந்தக்கால ஆர். பி. சௌத்ரி ரக 4 ஹீரோ(யின்) சப்ஜெக்ட்.
அடிக்கடி ஒலி வடிவத்தில் கேட்டதாலோ என்னவோ, திருப்பாவையில் உள்ள வார்த்தைகள் எளிதாகவும் திருவெம்பாவையில் கடினமாகவும் உள்ளதுபோல் தோற்றம்.
ஆனால் இரண்டிலும் பளிச்சென்று கவனம் ஈர்ப்பவை சில இரு வரித் துணுக்குகள்தான். ட்விட்டர் வடிவத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துபவை. உதாரணமாக எனக்குப் பிடித்த பாவை ட்வீட் வரிகள் இங்கே:
- செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம் (திருப்பாவை 2)
- வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் (திருப்பாவை 3)
- ஆழி உள் புக்கு, முகந்துகொடு, ஆர்த்து ஏறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கருத்து (திருப்பாவை 4)
- வாழ உலகினில் பெய்திடாய் (திருப்பாவை 4)
- வாயினால் பாடி மனத்தினால் (’மனதினால்’ அல்ல, அப்படி எழுதுவது பிழை) சிந்திக்க (திருப்பாவை 5)
- அரி என்ற பேரரவம் உள்ளே புகுந்து குளிர்ந்து… (திருப்பாவை 6)
- வாச (அது என்ன வாசம்?) நறும் குழல் ஆய்ச்சியர் (திருப்பாவை 7)
- கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெரும்துயில்தான் தந்தானோ? (திருப்பாவை 10)
- செல்வப் பெண்டாட்டி (வாவ்!) (திருப்பாவை 11)
- எருமை கன்றுக்கு இரங்கி, நினைத்து முலைவழியே நின்று பால் சோர (திருப்பாவை 12)
- மனத்துக்கு இனியானை (திருப்பாவை 12)
- வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று (திருப்பாவை 13)
- எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் (திருப்பாவை 14)
- எல்லே! இளம்கிளியே, இன்னும் உறங்குதியோ? (திருப்பாவை 15)
- தூயோமாய் வந்தோம், துயில் எழப் பாடுவோம் (திருப்பாவை 16)
- மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயில்இனங்கள் கூவின காண் (திருப்பாவை 18)
- செந்தாமரைக் கையால் சீர்ஆர் வளைஒலிப்ப வந்து திறவாய் (திருப்பாவை 18)
- நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் (திருப்பாவை 19) Don’t be a bed potato
![]()
- கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் (திருப்பாவை 22) எப்பேர்ப்பட்ட உவமை!
- யாம் வந்த காரியம் ஆராய்ந்து, அருள் (திருப்பாவை 23) நாங்கள் கேட்கிறோமே என்று இரக்கப்பட்டுக் கொடுத்துவிடாதே, ஆராய்ந்து முடிவு செய்
- ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர (திருப்பாவை 25)
- கூடி இருந்து குளிர்ந்து… (திருப்பாவை 27) சோஷலிஸம்?
![]()
- குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா (திருப்பாவை 28) பின்னர் ராஜாஜி எழுதிய மறைமூர்த்தி கண்ணாப் பாட்டுக்குத் தொடக்கம் இது
- எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் (திருப்பாவை 29)
- மற்றை நம் காமங்கள் மாற்று (திருப்பாவை 29) நீ இருந்தால் வேறெதும் வேண்டாம் (இதே கருத்தைத் திருவெம்பாவையும் ஓர் இடத்தில் சொல்கிறது, கீழே)
- ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதி (திருவெம்பாவை 1)
- வன் செவியோ நின் செவிதான் (திருவெம்பாவை 1)
- அமளி(படுக்கை)க்கே நேசமும் வைத்தனையோ? (திருவெம்பாவை 2)
- நின் அன்பு உடைமை எல்லோம் அறியோமோ? (திருவெம்பாவை 3)
- இன்னம் புலர்ந்தின்றோ(திருவெம்பாவை 4)
- துயின்று அவமே காலத்தை போக்காதே(திருவெம்பாவை 4)
- மால் அறியா, நான்முகனும் காணா மலை(திருவெம்பாவை 5)
- தானே வந்து எம்மைத் தலை அளித்து ஆட்கொண்டு அருளும் (திருவெம்பாவை 6)
- தீ சேர் மெழுகு ஒப்பாய் (திருவெம்பாவை 7)
- ஏழைப் பங்காளனை (திருவெம்பாவை 8) இன்று அரசியலால் அர்த்தம் இழந்துவிட்ட வார்த்தை இங்கிருந்து வந்ததுதான்
![]()
- முன்னைப் பழம்பொருள்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே (திருவெம்பாவை 9)
- என்ன குறையும் இலோம் (திருவெம்பாவை 9, எப்போது குறை இல்லை? தெரிந்துகொள்ள அட்டகாசமான இந்தப் பாட்டை முழுக்கப் படியுங்கள்!)
- ஓத உலவா ஒரு தோழன் (திருவெம்பாவை 10)
- நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும்வகையெல்லாம் உய்ந்துஒழிந்தோம் (திருவெம்பாவை 11)
- முன் இக்கடலைச் சுருக்கி, எழுந்து, உடையாள் என்னத் திகழ்ந்து (திருவெம்பாவை 16)
- செங்கண் அவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால் எங்கும் இலாத ஓர் இன்பம் நம் பால் (திருவெம்பாவை 17)
- கண் ஆர் அமுதம் (திருவெம்பாவை 18)
- எம் கொங்கை நின்அன்பர்அல்லார் தோள் சேரற்க (திருவெம்பாவை 19)
- எங்கு எழில் என் ஞாயிறு? (திருவெம்பாவை 19) நீமட்டும் அருள் செய்துவிட்டால் அதன்பிறகு சூரியன் எங்கே உதித்தால் எனக்கென்ன?
- போற்றி, எல்லா உயிர்க்கும் (திருவெம்பாவை 20) #முடிச்சுக்கறேன்
![]()
***
என். சொக்கன் …
18 12 2011
Posted by: என். சொக்கன் on: நவம்பர் 22, 2011
’சிறைச்சாலை’ படத்தில் வருகிற ‘செம்பூவே பூவே’ பாட்டைக் கேட்டிருப்பீர்கள். அதில் அறிவுமதி எழுதிய ஒரு வரி:
படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
இந்த வரிக்கு நேரடி அர்த்தம் எல்லோருக்கும் தெரியும். மன்மதன் வடித்த சிலை இந்தப் பெண், அவளது உடலையே படையாகக் கொண்டு நடக்கிறாள், ஒவ்வோர் அசைவாலும் தன் காதலனைத் ’தாக்கு’கிறாள்.
ஆனால், இந்த வரிகளுக்கு வேறோர் அர்த்தமும் இருக்கக்கூடுமோ என்று இன்றைய #365paa பதிவு எழுதும்போது தோன்றியது.
தமிழில் ’சிலை’ என்ற சொல்லுக்கு ‘வில்’ என்ற பொருளும் உள்ளது. மன்மதன் சிலை என்றால், மன்மதன் கையில் உள்ள கரும்பு வில்.
மன்மதனும் அவனுடைய கரும்பு வில்லும் தமிழ்த் திரையுலகில் ரொம்பப் பிரபலம். ஹீரோவும் ஹீரோயினும் சந்திக்கிறபோது மன்மதன் தன்னுடைய கரும்பு வில்லில் மலர் அம்புகளை (’மலர்க் கணைகளை’ என்று சொன்னால் இலக்கியத்துவம் :>) வீசுவான். அவர்களும் காதல் வயப்பட்டு, தயாரிப்பாளரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப உள்ளூரிலோ வெளியூரிலோ வெளிநாட்டில் டூயட் பாடச் செல்வார்கள்.
’சிலை’க்கு வில் என்கிற அர்த்தத்தை இங்கே பொருத்தி யோசித்தால், இந்த வரி இன்னும் அழகாகிவிடுகிறது: மன்மதனின் ஆயுதமாக அவன் கையில் உள்ள வில், இந்தப் பெண்ணாக உருவம் எடுத்து நடக்கிறது!
இந்தச் சுவாரஸ்யமான கோணம் தோன்றியபின், ‘மன்மதச் சிலை’ என்ற வார்த்தையை இதற்குமுன் வேறு யாரேனும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்று இணையத்தில் தேடினேன். கச்சிதமாக இதே அர்த்தத்தில் திருப்புகழ் பாட்டு ஒன்று கிடைத்தது:
மன்மத சிலை அதுவென, மகபதி தனுவென மதி திலதமும் வதி நுதன் மேலும்…
முழுப்பாடல் இங்கே : http://www.kaumaram.com/thiru_uni/tpun0526.html
ஆக, அருணகிரிநாதரின் ‘மன்மத சிலை’ வில்லைதான் குறிக்கிறது என்று புரிகிறது. அறிவுமதி எழுதியது எந்த அர்த்தத்தில்? அவருக்கு அணுக்கமானவர்கள் யாராவது இங்கே இருந்தால் கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள்
அப்புறம், இன்னொரு விஷயம். அருணகிரிநாதர் ‘மன்மத சிலை’ என்று எழுதுகிறார், அறிவுமதி ‘மன்மதச் சிலை’ என்கிறார். புணர்ச்சி விதிப்படி இவற்றில் எது சரி?
யோசித்தபோது ‘மன்மதச் சிலை’தான் சரியாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. மன்மதன் விஷயத்தில் ‘இச்’ இல்லாவிட்டால் எப்படி?
***
என். சொக்கன் …
22 11 2011
Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 21, 2011
என்னுடைய முந்தைய இரண்டு பதிவுகளில் (விழுந்த எண்ணங்கள் & மழை) ஒரு சின்னக் குழப்பம், ஒரு பெரிய குழப்பம். இதுபற்றி இங்கேயும் ட்விட்டரிலும் பலர் கருத்துச் சொல்லியிருந்தார்கள். நண்பர் ஸ்ரீதர் நாராயணன் விரிவான மின்னஞ்சல்கூட எழுதியிருந்தார். ஆனால் என்னுடைய வழக்கமான சோம்பேறித்தனத்தால் யாருக்கும் சரியாகப் பதில் சொல்லமுடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.
விஷயத்துக்கு வருவோம். அந்த இரண்டு பதிவுகளின் இறுதியில் நான் சொன்ன விஷயங்கள் இவை:
1. ‘மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்று ஒரு பாடலில் வைரமுத்து எழுதியுள்ளார். உண்மையில் அவர் சொல்ல நினைத்தது ‘ மின்னல் ஒளி’, அதை மெட்டுக்குள் உட்காரவைப்பதற்காக ‘மின்னொளி’ என்று சுருக்கிவிட்டார். ஆகவே அது ‘மின்சார ஒளி’ என்று அனர்த்தமாகிவிட்டது
2. இன்னொரு பாட்டில் ’பூங்கதவே தாழ் திறவாய்’ என்று ஒரு கவிஞர் எழுதியுள்ளார். அதைப் பாடகர்கள் ‘தாள்’ என்று பாடிவிட்டார்கள். அது சரியில்லை
இந்த இரண்டு பாடல்களிலும் கவிஞர்கள் எழுதியதுதான் சரி, நான் சொல்வது தவறு என்று நண்பர்கள் வாதிடுகிறார்கள். அதற்குச் சாட்சியாக முன்வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான சில கருத்துகள், சாட்சிகள் இவை:
1. மின் ஒளி:
2. தாழ் / தாள்:
’மின் ஒளி’கூடச் சின்னப் பிரச்னைதான். இந்தத் தாழ் / தாள் விவகாரம் பெரிய சண்டையாகிவிட்டது. ஆகவே என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய இதை எழுதுகிறேன்.
ஒரு மொழியில் ஒரே பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகள் இருக்கலாம். அதில் ஒன்று சரி என்பதால் மற்றதெல்லாம் தவறு என்று சொல்லமுடியாது.
’மின் ஒளி’ என்பது ஒருகாலத்தில் மின்னலைக் குறித்திருக்கலாம். இப்போது மின்சாரத்துக்கும் அதே வார்த்தையைப் பயன்படுத்துவதால் மின்னலுக்கு ‘மின்’ என்ற வார்த்தை கூடாது என்று பேசுவது தவறு. அதை முழுமையாக ஏற்கிறேன்.
அதேபோல் ‘தாள்’ என்ற வார்த்தையும் ஒருகாலத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம், சில இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது ‘தாழ்’ என்று எழுதியது படியெடுக்கும்போது ‘தாள்’ என்று மாறியிருக்கலாம், இன்றைக்கும் கிராமத்து / நகரத்துக் கொச்சை வழக்கில் ‘தாள்’ என்று அது தொடர்வது உண்மை. ஆகவே தாள் என்ற வார்த்தையும் தாழ்ப்பாளைதான் குறிக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.
இப்போது நான் ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்றால் அதில் எந்த இடத்தில் எந்த வார்த்தை பயன்படுத்தப்படவேண்டும் என்று யோசிப்பேன். தவறான வார்த்தைகளைத் தவிர்ப்பேன். ஆனால் எல்லாச் சரியான வார்த்தைகளையும் நான் பயன்படுத்திவிடமுடியாது, அவை அர்த்தம் பொருத்தமாக இருந்தாலும்கூட.
குழப்புகிறதா? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்:
என்மேல் ஒரு சிறு நீர்த்துளி விழுந்தது
இந்த வாசகத்தில் தப்பு எதுவும் இல்லை. ‘சிறு’ என்றால் small, ’நீர்த்துளி’ என்றால் droplet. எல்லாம் சரி.
ஆனால், இந்த வாக்கியத்தை நீங்களோ நானோ எழுதவேண்டியிருந்தால், அங்கே ‘சிறு’வுக்குப் பதில் ‘சிறிய’ என்று மாற்றுவோம். இல்லையா? என்ன காரணம்?
’சிறு’ மற்றும் ‘நீர்’ இரண்டுக்கும் தனித்தனி அர்த்தங்கள் சரியாக இருப்பினும், ‘சிறுநீர்’ என்று சேர்ந்தால் அர்த்தம் மாறுகிறது. ஆகவே, ’சிறு’ என்ற வார்த்தை சரியான பொருளைத் தந்தாலும், இங்கே என்னால் அதைப் பயன்படுத்தமுடியாது. பயன்படுத்தக்கூடாது. காரணம் அது வாக்கியத்தின் பொருளை மாற்றிவிடுகிறது.
இதே விதிமுறையைதான் நான் ‘மின்னொளி’க்கும் ‘தாழ் திறவாய்’க்கும் வைக்கிறேன். மின் = மின்னல், ஆனால் ‘மின் ஒளி’ என்றால் இன்றைய அர்த்தம் Electric lightதான். குழப்பத்துக்கு இடம் அளிக்கக்கூடாது என்பதற்காக அதைத் தெளிவாக ‘மின்னல் ஒளி’ என்று எழுதவே விரும்புவேன்.
திரைப்பாடலில் அந்த சவுகர்யம் கிடையாது. ’தன்னனன தனனன தானந்நானே’ என்பது ரஹ்மானின் மெட்டு. அதற்கு ‘மின்னலொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்பது பொருந்தாது. வேண்டுமானால் ‘மின்னல்வர மலர்ந்திடும் தாழம்பூக்கள்’ என்பதுபோல் கொஞ்சம் நெருக்கிப் பிடிக்கலாம். அதைத்தான் சொன்னேன்.
தாழ் / தாள் விஷயத்தில் அந்தக் குழப்பமே இல்லை. இரண்டும் ‘நேர்’ அசை. ‘தாள்’க்குப் பதில் ‘தாழ்’ என்று எழுதிவிடலாம். ‘தாள் திறவாய்’ என்பதற்குத் தவறான அர்த்தம் வரக்கூடும், ‘தாழ் திறவாய்’க்கு வராது. அவ்வளவுதான் விஷயம்.
சரி, இதை ஏன் இப்போது விரிவாக எழுதவேண்டும்?
நிச்சயம் விவாதத்தைத் தொடர்கிற நோக்கமோ, நான் பிடிச்ச முயலுக்கு அஞ்சே கால்தான் என்று நிரூபிக்கும் வீம்போ, இன்னொருத்தரை ‘மடக்கும்’ எண்ணமோ இல்லை. இது என் கருத்து, உங்களுடைய கருத்து மாறுபடலாம். அதை நான் மதிக்கிறேன். அதே எதிர்மரியாதையை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.
இந்தப் பதிவுகள் என்று இல்லை. இணையத்திலோ அதற்கு வெளியிலோ இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கமே எதையாவது புதுசாகத் தெரிந்துகொள்ளலாமே என்பதுதான். அதுவும் மொழி விஷயத்தில் நமக்குத் தெரிந்தது 1%கூட இல்லை. இதுபோன்ற விவாதங்களால் பாக்கி இருக்கிற 99%ல் இன்னொரு 1%ஐயாவது கூடுதலாகத் தெரிந்துகொள்ளலாமே என்கிற விருப்பம்தான் மேலோங்கி நிற்கிறது என்று நான் நினைக்கிறேன்.
மொழியை ஒழுங்காக எழுதுவது அவ்வளவு முக்கியமா? சில பல தவறுகள் இருந்தால் என்ன குடி முழுகிவிடும்?
நான் ஏழெட்டு புத்தகங்கள் எழுதியிருந்த நேரம். ஒருநாள் என்னுடைய ஆசிரியர் பா. ராகவன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அன்றைக்கு நான் எழுதி முடித்துக் கொடுத்திருந்த புத்தகத்தின் Manuscriptஐக் கையில் வைத்துக்கொண்டு வரிவரியாகப் படித்துக் காண்பித்து நான் செய்திருந்த எழுத்து / இலக்கண / பயன்பாட்டுப் பிழைகளைச் சொன்னார், திருத்தினார்.
அதுவும் ஒன்று, இரண்டு அல்ல, இருபதோ முப்பதோ திருத்தங்கள். அவையெல்லாம் பிழையான பயன்பாடுகள் என்று தெரியாமலே தொடர்ந்து தவறாக எழுதிவந்திருக்கிறேன்.
அவர் இதையெல்லாம் சொல்லி முடித்தபிறகு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். ‘அடுத்தமுறை இந்தத் தப்பெல்லாம் செய்யாம பார்த்துக்கறேன் சார்’ என்றேன்.
கொஞ்ச நாள் கழித்து நான் என்னுடைய அடுத்த புத்தகத்தை எழுதி முடித்திருந்தேன். அவருக்கு அனுப்பினேன். படித்துவிட்டு ஃபோன் செய்தார். எடுத்த எடுப்பில் முதல் வாசகமாக ‘நீயெல்லாம் எதுக்குடா எழுதறே? குப்பை அள்ளப் போகவேண்டியதுதானே?’ என்றார்.
எனக்குப் பகீரென்றது. ’வழக்கமாக எதற்கும் கோபம் கொள்ளாத இவரே இப்படி எரிச்சலாகும் அளவுக்கு நான் என்ன தப்புச் செய்துவிட்டேன்?’ என்று குழம்பினேன்.
இத்தனைக்கும் போன புத்தகத்தைவிட இந்தப் புத்தகத்தில் பிழைகள் குறைவு. ஆனால் அவர் ஏற்கெனவே சொல்லியிருந்த அதே தவறுகளில் சிலவற்றை நான் மீண்டும் செய்திருந்தேன். அதனால்தான் அவருக்குக் கோபம்.
உண்மையில் ராகவனுக்கு அன்று வந்தது கோபம் அல்ல. ஆதங்கம். என்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை நான் வீணடித்துவிட்டேனே என்கிற ஏமாற்றம். மூன்றே வார்த்தைகளில் என்னைக் கூனிக்குறுகச் செய்துவிட்டார்.
அதன்பிறகு, அவர் சொன்ன அந்தத் தவறுகளை நான் மீண்டும் செய்வதில்லை. புதுப்புதுத் தவறுகள் செய்வேன். ஆனால் பழைய தவறுகள் மீண்டும் வராது.
இப்போதும் என்னுடைய எழுத்தில் ஏகப்பட்ட பிழைகள் உண்டு. இதோ இந்தப் பதிவில்கூட அவை மலிந்திருக்கும். ஆனால் யாராவது அவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்தினால் கேட்டுக்கொள்வேன், சொல்பவர் யார் என்று பார்க்கமாட்டேன், அவர்கள் சொல்வது சரியா என்றுதான் பார்ப்பேன், நான் எழுதியது தவறென்றால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வேன். அடுத்தமுறை அதே தவறைச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். இந்த விஷயத்தில் Perfectionஐவிட, அதை நோக்கிய நேர்மையான முயற்சிதான் முக்கியம். இல்லையா?
***
என். சொக்கன் …
21 10 2011
Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 19, 2011
நண்பர் விக்கி (விக்னேஷ் அண்ணாமலை https://twitter.com/#!/VickyAnnap) ட்விட்டரில் ஒரு வித்தியாசமான படத்தைப் பிரசுரித்து ‘இது என்ன?’ என்று ஊகிக்கக் கேட்டிருந்தார்:
சிறிது நேரம் கழித்து அவரே விடையும் சொன்னார். சென்னை ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட படம் இது. மறுநாள் காலை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான க்யூவுக்காக முந்தின நாளே சிலர் தங்களுடைய பொருள்களை வரிசையாக அடுக்கி வைத்து முன்பதிவு செய்துள்ளனர். அதாவது, ரிஸர்வேஷன் க்யூவுக்கு ரிஸர்வேஷன்!
அந்தப் பொருள்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்: துணிக்கடை பை, பத்திரிகைகள், செய்தித்தாள்கள், போஸ்டர்கள், நோட்டீஸ்கள், அவை பறக்காமல் இருக்க மேலே ஒரு கல், காசித்துண்டு, ஷூ, செருப்பு, தண்ணீர் பாட்டில்… நம் மக்களுடைய க்ரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை ![]()
இந்தப் படத்தைப் பிரசுரித்த விக்கியிடம் ‘இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஃபோட்டோ. உங்களுடைய Blogல் பதிவு செய்து வையுங்கள்’ என்றேன். ‘எனக்கேது ப்ளாக்?’ என்றார். அவர் அனுமதியுடன் இங்கே ஓசிப் பதிவாகப் பிரசுரிக்கிறேன் : >
***
என். சொக்கன் …
19 10 2011
Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 19, 2011
சில பாடல்களை எந்நேரமும் கேட்கலாம். வேறு சில பாடல்களை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றும். நிறுத்த மனமே வராது. அடுத்த பாட்டுக்குப் போய்விட்ட எம்பி3 ப்ளேயரை மூக்கணாங்கயிறு போட்டுப் பின்னால் இழுத்து முந்தைய பாட்டை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்போம். நேரம் ஓடுவதும் தெரியாது, செய்யவேண்டிய வேலைகளும் மறந்துபோய்விடும்.
போனவாரம் அப்படி ஒரு பாட்டில் மாட்டிக்கொண்டேன் : ‘அமுதே தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே’ (http://www.youtube.com/watch?v=errR7iLYuuU). அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்தால் இன்றைக்கு இன்னொரு மூக்கணாங்கயிறு : ‘பூங்கதவே, தாழ் திறவாய்!’.
‘நிழல்கள்’ படத்தில் எல்லாப் பாடல்களுமே அற்புதமானவைதாம். ஆனால் இந்தப் பாட்டுக்கு ஒரு விசேஷம், இதில் மெட்டைவிட இசை ஒரு படி மேலே நிற்கும். அதாவது, சுமார் 250 விநாடிகள் ஒலிக்கும் பாடலில் பல்லவி, அனுபல்லவி, இரண்டு சரணங்கள் என பாடகர்கள் பாடுகிற நேரம் பாதிக்கும் குறைவு, அதிலும் சரணம் மிக மிகச் சிறிது, ஐந்தே வரிகள்தாம், மீதி நேரத்தையெல்லாம் வாத்திய இசை நிரப்பியிருக்கிறது.
அதிலும் ராஜா ஒரு விசேஷம் செய்திருப்பார். இந்தப் பாடல் முழுவதும் இரண்டு இசைக் கருவிகள் இணைந்து டூயட் பாடுவதுபோன்ற ஓர் அமைப்பு இருக்கும். வயலின், வீணை, அப்புறம் வீணை, புல்லாங்குழல், அப்புறம் நாதஸ்வரமும் வயலினும், அப்புறம் வயலினும் மணியோசையும் என்று ஜோடி ஜோடியாக ராணுவ அணிவகுப்புபோல் நிறுத்திவைத்திருப்பார். ஆனால் மொத்தமாகக் கேட்கும்போது ஏகப்பட்ட கருவிகள் ஒரே நேரத்தில் இணைந்து இசைத்த ஒரு Rich Orchestration தருகிற திருப்தியும் நமக்குக் கிடைத்துவிடும்.
பாடலின் தொடக்கம் மழை நாளை நினைவுபடுத்துகிறது. பலமான சூறைக் காற்றில் தொடங்கிப் பல திசைகளில் இருந்து மெல்லச் சுழன்று சுழன்று வலுப்பெற்றுக்கொண்டு கடைசியில் மின்னல், இடி, பெரு மழையாகப் பொழியும்.
’ஆல்பம்’ என்ற படத்தில் ‘காதல் வானொலி’ என்று எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு பாடல் உண்டு. அதில் நா. முத்துக்குமார் எழுதிய ஒரு வரி:
மழை நின்று போனாலும், மரக்கிளை தூறுதே
கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் உணர்வு ‘பூங்கதவே’யின் ஆரம்ப இசையிலும் உண்டு – பிரமாண்டமான பெருமழைக்கான ஒலி முடிந்த மறுவிநாடி, மழை நின்றபின் மரங்களிலிருந்து சொட்டும் நீர்த்துளியின் தூறல்போல மென்மையான ஒரு சின்ன வீணை ஒலி, அதோடு சேர்ந்து டூயட் பாடும் புல்லாங்குழல், பின்னர் நைஸாகப் புல்லாங்குழலைப் பின்னே தள்ளிவிட்டு வயலினோடு சேர்ந்துகொள்ளும் வீணை… கடைசியாகப் பாடகரின் (தீபன் சக்கரவர்த்தி) குரல் ஒலிக்கும்போது, இதற்கே முக்கால் நிமிஷம் தீர்ந்துவிட்டது!
இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், பாடகர் குரல் ஒலிக்க ஆரம்பித்தவுடன், அதுவரை அதகளம் பண்ணிக்கொண்டிருந்த இசைக் கருவிகள் காணாமல் போய்விடுகின்றன. பின்னணியில் பெரும்பாலும் தாளம்மட்டும்தான். இதை நாம் உணர்வதற்குள் (முப்பது விநாடிகளுக்குள்) சரணம் முடிந்துவிடுகிறது. மீண்டும் இசையின் ஆட்சி.
இந்த இடையிசையும் சரியாக முக்கால் நிமிடத்துக்கு நீடிக்கிறது. கல்யாண நாதஸ்வரமும் மேளமும் சேர்ந்து பாரம்பரியமான கெட்டிமேளத்தில் முடிய, அதற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மெட்டில் பெண் குரல் (உமா ரமணன்) அறிமுகமாகிறது.
சாதாரணமாக இதுபோன்ற ஓர் இசையையும் மெட்டையும் வித்தியாசம் தெரியாமல் தைப்பது மிகவும் சிரமம். கொஞ்சம் அசந்தாலும் இரண்டும் தனித்தனியே உறுத்திக்கொண்டு நிற்கும்.
ராஜா இந்த விஷயத்தில் பெரிய கில்லாடி. உதாரணமாக, ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ என்ற பாடலின் முன்னிசையைக் கேளுங்கள், அந்த இசை முடியப்போகும் நேரம், பல்லவியின் முதல் வரி ஒலிக்கவேண்டும், ஆனால் இசைக்கும் அந்த வரிக்கும் பொருந்தாதே என்று நமக்குத் தோன்றும், சரியாகக் கடைசி விநாடிகளில் ஒரு சின்ன மணி ஒலியைச் சேர்த்து அதை அட்டகாசமாகப் பல்லவியில் பொருத்திவிடுவார் ராஜா.
ஆனால் இந்தப் பாடலில் அதுபோன்ற ஜிம்மிக்ஸுக்கெல்லாம் அவசியமே ஏற்படவில்லை. திருமணத்தின் Climax ஆகிய கெட்டிமேள ஒலியை அப்படியே நிறுத்திவிட்டு அரை விநாடி அமைதிக்குப்பிறகுதான் ‘நீரோட்டம்’ என்று சரணத்தைத் தொடங்குகிறார் ராஜா. அடுத்த காட்சி என்ன (முதலிரவு? ஹனிமூன்?) என்பது நம் ஊகத்துக்கு விடப்படுகிறது.
சரணத்தில் இன்னொரு விசேஷம், மெட்டு நின்று திரும்புகிற எல்லா வார்த்தைகளும் ‘ம்’ என முடியும் : நீரோட்டம், போலோடும், ஊர்கோலம், ஆனந்தம், பூவாரம், தெய்வம், வாழ்த்தும், ராகம், திருத்தேகம், எனக்காகும், உள்ளம், பொன்னாரம், பூவாழை (இது ஒன்றுமட்டும் odd man out), ஆடும், தோரணம், எங்கெங்கும், சூடும், அந்நேரம், கீதம், இந்த ஒவ்வொரு ‘ம்’க்கும் மெட்டு எப்படி வளைந்து நெளிந்து குழைந்து ஓடுகிறது என்று கேட்டால்தான் புரியும்.
இந்தப் பாட்டை எழுதியவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவராக விரும்பி இத்தனை ‘ம்’களைப் போட்டாரா, அல்லது ராஜாவின் ஐடியாவா என்பதும் தெரியவில்லை, ஆனால் பாடல் வரிகளில் இத்தனை ‘ம்’ இருப்பதால் ராஜா அந்த ‘ம்ம்ம்ம்ம்ம்’மையே ஒரு தனித்துவமான கோரஸாக மாற்றிக்கோண்டிருக்கிறார், உண்மையில் இந்தப் பாடலை அழகாக முடித்துவைப்பதும் அந்த ‘ம்ம்ம்ம்ம்’கள்தான்.
‘ம்’களில்மட்டுமில்லை, இந்தப் பாடலின் சரணம்முழுவதுமே ஏகப்பட்ட twists and turns. உதாரணமாக முதல் சரணத்தில் இங்கே ஒற்றை மேற்கோள்குறி உள்ள இடங்களையெல்லாம் கவனித்துக் கேளுங்கள், பாடல் வரிகளையும் தாண்டிய ஒரு நீட்சியும் நடுக்கமும் தெரியும், அது கவனமாக யோசித்துச் செய்யப்பட்டதாகதான் இருக்கவேண்டும்: நீ’ரோட்டம், ஆ’சைக் கனவுகள், ஊ’ர்கோலம், ஆ’னந்தம், பூ’பா’ரம், கா’தல், கா’தலில், ஊ’றிய.
ஐந்தே வரிகளில் (மீண்டும் முப்பது விநாடிகளுக்குள்) சரணம் முடிந்துவிட, எட்டே விநாடிகளில் பல்லவியைச் சுருக்கமாகத் தொட்டுவிட்டு வாத்திய இசைக்குப் போய்விடுகிறார் ராஜா. மீண்டும் சுமார் முக்கால் நிமிடத்துக்கு இன்னொரு விஸ்தாரமான இடையிசை. அதைத் தொடர்ந்து மழைத் தண்ணீரினால் தோன்றிய சிற்றோடைபோல் வளைந்து நெளிந்து ஓடும் சரணம்.
இந்தப் பாடல் தருகிற அனுபவத்தை எத்தனை விளக்கமாக எழுதினாலும் போதாது, கேட்கத்தான் வேண்டும், இதுமாதிரி நேரங்களில்தான் இசையின்முன்னால் மொழி எப்பேர்ப்பட்ட ஏழை என்பது புரியும்.
இத்தனை அழகான பாட்டுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு இல்லாமல் எப்படி? அதுவும் உண்டு : பாடலின் முதல் வரி ‘பூங்கதவே, தாழ் திறவாய்’. ஆனால் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் இருவருமே பிடிவாதமாகத் திரும்பத் திரும்பத் ‘தாள் திறவாய்’ என்றுதான் பாடுகிறார்கள். ஏனோ ராஜா இதைக் கவனித்துத் திருத்தாமல் விட்டுவிட்டார்.
‘தாழ்’ என்பது ‘தாழ்ப்பாள்’ என்பதன் சுருக்கம். ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்று திருக்குறளில் வரும்.
‘தாள்’ என்றால் பாதம். நாம் பாதத்தால் தட்டுவதால்தான் ‘தாளம்’ என்று பெயர் வந்தது எனச் சொல்வார்கள். ‘தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்’ என்று குழந்தைக் கண்ணனைப் பாடுவார் பெரியாழ்வார். அதாவது, பாதத்தை நீட்டிச் சக்கரத்தை உதைத்து அசுரர்களைக் கொன்றானாம்!
ஆக, இந்தப் பாடலில் ‘தாழ் திறவாய்’ என்பதுதான் சரி. யாரிடமாவது ‘தாள் திறவாய்’ என்று கேட்டுத் தொலைத்துவிடாதீர்கள், அதற்கு விவகாரமான அர்த்தம் ![]()
Followup: http://nchokkan.wordpress.com/2011/10/21/rgtwrng/
***
என். சொக்கன் …
19 10 2011
Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 17, 2011
நீங்கள் கால்குலேட்டர் பயன்படுத்துகிறீர்களா? (மசாலா பொதிந்த எஞ்சினியரிங் கால்குலேட்டர் அல்ல, ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்று கணக்குப் போடும் சாதா கால்குலேட்டர்)
சிலரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலே கோபித்துக்கொள்வார்கள். ’சாதாரணக் கூட்டல் கழித்தல் கணக்குகளுக்கெல்லாம் கால்குலேட்டர் தேவைப்படும் அளவுக்கு எனக்கு மூளை மழுங்கிவிடவில்லை’ என்று ஆவேசமாகப் பதில் சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.
எனக்குக் கால்குலேட்டர்களின்மீது அவ்வளவு விரோதம் கிடையாது. ஆனால் அதைத் தேடி எடுக்கும் நேரத்தில் மனத்துக்குள் விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று நினைக்கிற சோம்பேறி.
கால்குலேட்டர்களை ஏன் தேடவேண்டும்? இப்போதான் வாட்ச், செல்ஃபோன், கம்ப்யூட்டர், ஃப்ரிட்ஜ், மிக்ஸி, வாக்குவம் க்ளீனரில்கூட கால்குலேட்டர்களைப் பொதித்துவிடுகிறார்களே!
அது சரி. ஆனால் அவற்றையும் தேடித் திறந்து க்ளிக் செய்து டைப் செய்து கணக்குப் போட்டுச் சரிபார்ப்பதெல்லாம் வீண் வேலை என்றுதான் நான் யோசிப்பேன், அதற்குப் பதில் கையில் ஒரு பேனாவோ பென்சிலோ இருந்தால் அதன் முனையைப் பேப்பரில் உள்ள எண்களின்மீது மெல்ல ஓட்டி மளமளவென்று கணக்குப் போட்டுவிடலாம். ஸ்பூன், ஃபோர்க்கில் சாப்பிடத் தெரிந்தாலும்கூட கையால் பிசைந்து அடிப்பதுதான் மனத்திற்கு உகந்ததாக இருப்பதுபோல இது.
சமீபகாலமாக எனக்கு ஒரு விநோத வழக்கம் வந்திருக்கிறது. காகிதத்தில் எண்களைக் கூட்டியபிறகு, அதனை இன்னொருமுறை கம்ப்யூட்டரில் உள்ள கால்குலேட்டரில் தட்டிச் சரி பார்க்கிறேன்.
ஒவ்வொருமுறையும் என் பேப்பர் கணக்கும் கால்குலேட்டர் கணக்கும் சரியாகவே வருகிறது. இதுவரை ஒருமுறைகூடத் தப்புச் செய்யவில்லை. ஆனாலும் 43 + 36 = 79 என்பதுபோன்ற ‘செம ஈஸி’ கணக்குகளைக்கூட ஒருமுறை கால்குலேட்டரில் சரிபார்க்கும் கெட்ட பழக்கம் பீடித்திருக்கிறது.
எதற்கு இந்த வேண்டாத வேலை? என்னுடைய கணக்குப் பண்ணும், ச்சே, கணக்குப் போடும் திறன்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டதா? வயசாகிறதோ?
ஒருவேளை இது உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், இந்த ரெட்டை வேலை அநாவசியம் அல்லவா? எப்படியும் பேப்பரில் கணக்குப் போட்டுவிட்டுக் கம்ப்யூட்டரில் சரி பார்க்கப்போகிறேன் – கம்ப்யூட்டர் சொல்வதுதான் சரி என்று ஒப்புக்கொள்ளப்போகிறேன் – அப்புறம் எதற்கு வீணாக பேப்பர் கணக்கு? அந்தக் கணக்கை நேரடியாகக் கம்ப்யூட்டரிலேயே போட்டுவிட்டுப்போகலாமே, நேரம் மிச்சம், இருக்கிற தக்கனூண்டு மூளையைக் கசக்கி வீணாக்காமல் காப்பாற்றிவைக்கலாம்.
இப்படி Rationalலாக யோசித்தால் என்னுடைய பேப்பர் கணக்கு ஒரு வீண் வேலை என்பது புரிகிறது. ஒன்று, பேப்பர், பென்சில், மனக்கணக்கை நம்பவேண்டும், அல்லது கால்குலேட்டர் கணக்கை. இரண்டையுமே கட்டிக்கொண்டு நேரத்தை விரயம் செய்வது முட்டாள்தனம் என்பதும் விளங்குகிறது. ஆனால் இந்தப் பழக்கத்தை விடமுடியவில்லை. என்ன செய்யலாம்?
***
என். சொக்கன் …
17 10 2011
Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 10, 2011
1
‘நீ யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கியா கதிரு?’
சுகன்யாவின் அந்தக் கேள்வி கதிரேசனைத் தூங்கவிடாமல் உறுத்திக்கொண்டிருந்தது. எந்தப் பக்கம் திரும்பிப் படுத்தாலும் சினிமாவில் வருவதுபோல் அந்த ஐந்து வார்த்தைகளும் திரும்பத் திரும்பக் கேட்பதுமாதிரி ஓர் உணர்வு.
எதற்காக அப்படிக் கேட்டாள்? எதார்த்தமாகத்தானா? அல்லது ஏதாவது உள்நோக்கம் இருக்குமா? என்னவாக இருக்கும்?
கதிரேசனுக்கும் சுகன்யாவுக்கு பல வருடப் பழக்கம். காலேஜில் நான்கு வருடங்கள் பக்கத்து பெஞ்ச்களில் உட்கார்ந்து படித்தபின்னர் இங்கே பெங்களூரில் மூன்று வருடங்களாக ஒரே கம்பெனியில் குப்பை கொட்டியாகிறது.
இந்த ஏழு வருடங்களில் அவர்கள் போகாத இடமில்லை, பேசாத பேச்சில்லை, இந்த ஒரு விஷயத்தைத்தவிர.
திடீரென்று சுகன்யாவுக்கு ஏன் அவனிடம் காதலைப்பற்றிப் பேசத் தோன்றவேண்டும்? அதுவும் அவள் வீட்டில் மாப்பிள்ளை தேடத் தொடங்கியிருக்கிற நேரம் பார்த்து?
இதற்கான Obvious காரணம் கதிரேசனுக்குப் புரிந்துதான் இருந்தது. ஆனால் அவன் அதைப்பற்றி யோசிக்கக்கூட விரும்பவில்லை.
சரேலென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் கதிரேசன். பக்கத்தில் கிடந்த செல்ஃபோனைத் தேடி எடுத்து மணி பார்த்தான். பத்தரை. ‘சுரேஷ் தூங்கியிருப்பானோ?’
தூங்கினால் என்ன? இது தள்ளிப்போடுகிற விஷயம் இல்லை. உடனே பேசியாகவேண்டும்.
சுரேஷின் நம்பரைத் தேடி அழைத்தான் கதிரேசன். மறுமுனையில் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ ஒலித்தது. சில நிமிடங்கள் கழித்து, ‘ஹலோ.’
‘டேய் சுரேஷ், கதிர் ஹியர்.’
‘என்னடா இந்த நேரத்துல?’
‘உன்னோட ஒரு முக்கியமான மேட்டர் தனியாப் பேசணும்’ என்றான் கதிரேசன். ‘ரொம்ப அர்ஜென்ட்.’
‘கொஞ்சம் பொறு, வெளியே வந்துட்டு கால் பண்றேன்’ என்ற சுரேஷ் இணைப்பைத் துண்டித்தான்.
கல்லூரியில் கதிரேசனின் ரூம்மேட் சுரேஷ். சொந்த ஊர் திருநெல்வேலி. ‘எங்க ஊர் மண்ணுக்கும் தண்ணிக்கும் தனி குணம் உண்டுடா’ என்று பெருமையடித்துக்கொள்கிற ஆள்.
‘அப்புறம் ஏன்டா கோயம்பத்தூருக்குப் படிக்க வந்தே?’
‘நானா வந்தேன்? இங்கேதான் சீட் கிடைச்சுது! நாலே வருஷம், படிப்பை முடிச்சுட்டு எங்க ஊருக்குத் திரும்பிப் போய்டுவேன்.’
சொன்னதுபோலவே, நான்காவது வருடம் கேம்பஸ் இன்டர்வ்யூக்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டான் சுரேஷ். யாராவது விசாரித்தால், ‘இவங்கல்லாம் வேஸ்ட் மச்சி, ஒரு கம்பெனிக்குக்கூட திருநெல்வேலில ப்ராஞ்ச் இல்லையாம்.’
இத்தனைக்கும் ஊரில் சுரேஷ் குடும்பத்துக்கென்று சொந்தமாக நிலமோ, பூர்வீகச் சொத்தோ, பெரிய கம்பெனி, தொழிற்சாலையோ எதுவும் இல்லை. இவன்தான் தலையெடுத்துக் குடும்பத்தை முன்னேற்றவேண்டும்.
எங்கள் வகுப்பில் சுரேஷ்தான் டாப்பர். அவனுடைய மார்க்குக்கும் வசீகரமான முகத்துக்கும் நுனிநாக்கு ஆங்கிலத்துக்கும் எந்தக் கம்பெனியும் கொத்திக்கொண்டு ஓடியிருக்கும். சராசரி மாணவர்களெல்லாம் கிடைத்த வேலையில் தொற்றிக்கொண்டு பெங்களூர், மும்பை, சென்னை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று எங்கு வேண்டுமானாலும் ஓடிப் பணம் தேடத் தயாராகிக்கொண்டிருக்கும்போது இவன்மட்டும் திருநெல்வேலிக்குதான் திரும்பப் போவேன் என்று ஒற்றைக்காலில் நின்றான்.
இறுதிப் பரீட்சை முடிந்த தினத்தன்று இரவு. கதிரேசனும் சுரேஷும் பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு ஒன்றாகக் கிளம்பினார்கள். இருவருடைய ரயில்களும் அரை மணி நேர இடைவெளியில் புறப்பட்டன.
அந்தக் கடைசி நாளன்றுதான் கதிரேசனிடம் சுகன்யாவைப்பற்றிப் பேச ஆரம்பித்தான் சுரேஷ். ‘அவளும் உன் கம்பெனிதானே?’
‘ஆமா, அதுக்கென்ன?’
’நத்திங்’ என்றவன் ஜன்னல் கம்பியின் உதிர்ந்த பெயின்டைச் சற்றே சுரண்டினான். பின்னர் ‘ஒரு விஷயம் சொன்னா கோச்சுக்கமாட்டியே?’ என்றான்.
‘என்னது?’
‘நம்ம சுகன்யா…’ என்ற சுரேஷ் கொஞ்சம் தயங்கினான். எங்கேயோ பார்த்தபடி ‘நானும் அவளும் லவ் பண்றோம்’ என்றான்.
‘சு-சுகன்யாவா?’ கதிரேசனுக்கு அதிர்ச்சியைவிட ஆச்சர்யம்தான் அதிகமாக இருந்தது. ‘நிஜமாவா சொல்றே?’
‘ஆமாண்டா’ என்றான் சுரேஷ். ‘இப்பதான் ஒன்னரை வருஷமா.’
‘அடப்பாவிகளா, நீங்க ரெண்டு பேரும் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். இப்படி ஒரு பெரிய மேட்டரை மொத்தமா மூடி மறைச்சுட்டீங்களே’ என்று சுரேஷின் தோளில் தட்டினான் கதிரேசன். ‘ஸ்டில், என்னால நம்பமுடியலைடா. நீயாவது பரவாயில்லை, வாயைத் திறந்து சொல்லிட்டே, அந்த சுகன்யா, கடைசிவரைக்கும் கமுக்கமா இருந்துட்டுப் போய்ட்டாளே.’
‘ஆக்சுவல்லி, உன்கிட்ட இதைச் சொல்லக்கூடாதுன்னு அவ என்கிட்ட ப்ராமிஸ் வாங்கியிருக்கா’ என்றான் சுரேஷ்.
‘ஏன்?’
‘தெரியலை, நானும் போன நிமிஷம்வரைக்கும் யோசிச்சுப்பார்த்தேன், உன்கிட்ட சொல்லிடறதுதான் நியாயம்ன்னு தோணிச்சு.’
‘இதுவாவது ஏன்னு சொல்லு.’
‘எங்கயோ பாஷை தெரியாத ஊருக்கு வேலை பார்க்கப் போறா, ஏதாவது பிரச்னைன்னா என்னால ஓடி வரமுடியுமா சொல்லு, அதான் என்னோட ரெப்ரசென்டேடிவ்வா உன்னை அங்கே அனுப்பிவைக்கறேன்’ சுரேஷின் அசட்டுப் புன்னகையைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. ‘கொஞ்சம் பார்த்துக்கடா. நான் இதைச் சொன்னேன்னு அவகிட்ட சொல்லிடாதே.’
‘ஷ்யூர். அவளா இதைப் பத்திப் பேசறவரைக்கும் நான் வாயைத் திறக்கமாட்டேன். ஓகேயா?’
சுரேஷ் பதில் சொல்வதற்குள் ரயில் நீண்ட விசில் அடித்தது. கதிரேசன் பெட்டியில் ஏறிக்கொண்டான். ‘டேக் கேர்-டா, ஊருக்குப் போய் ஃபோன் பண்ணு.’
’ஓகே’ என்ற சுரேஷ் பின்னே நகர்ந்து நின்றுகொண்டான். லேசான புன்னகையுடன் கையசைத்தான். ரயில் புறப்பட்டுவிட்டது.
அதன்பிறகு, இன்றுவரை கதிரேசனும் சுரேஷும் சந்தித்துக்கொள்ளவில்லை. சுரேஷ் திருநெல்வேலியில் சொந்தத் தொழில் தொடங்கியிருப்பதாகவும் நன்கு வசதியாக வாழ்வதாகவும் கேள்விப்பட்டதோடு சரி. அவ்வப்போது ஃபோனில் பேசுவார்கள். ஆனால் ஒருமுறைகூட அவன் சுகன்யாவைப்பற்றிப் பேசியது இல்லை.
சில நேரங்களில், அன்றைக்கு ரயில் பிளாட்ஃபாரத்தில் நின்றபடி அவன் சுகன்யாவைக் காதலிப்பதாகச் சொன்னதுகூடக் கனவுதானோ என்று கதிரேசன் யோசிப்பது உண்டு. அந்த இரண்டு நிமிடத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால் இந்த விஷயத்துக்கு வேறு சாட்சிகளே இல்லை.
சுகன்யாவும் சுரேஷைப்பற்றி அவனிடம் வாய் திறக்கவில்லை. அப்படி ஒரு ஜீவன் இருப்பதே தெரியாதவள்போல் தன்னுடைய வேலையில்மட்டும் கவனமாக இருந்தாள். வாரக்கடைசிகளில் சொந்த ஊருக்குப் போய்த் திரும்பினாள். ஒருமுறைகூட சுரேஷைச் சந்தித்ததாகவோ, அவனிடம் ஃபோனில் பேசியதாகவோ பேச்சுவாக்கில்கூடச் சொன்னதில்லை.
ஒருவேளை, சுரேஷுடையது ஒருதலைக்காதலாக இருக்குமோ? இல்லாவிட்டால் சுகன்யா இதைக் கதிரேசனிடம் பிடிவாதமாக மறைக்கவேண்டிய அவசியம் இல்லையே!
மூன்று வருடம் கழித்து, இன்றைக்கு சுகன்யா திடீரென்று காதலைப்பற்றிப் பேசியதும் கதிரேசனுக்குப் பகீரென்றது. இது என்ன விவகாரமோ தெரியவில்லையே, உடனடியாக சுரேஷிடம் பேசியாகவேண்டும்.
மீண்டும் செல்ஃபோனை உயிர்ப்பித்து மணி பார்த்தான் கதிரேசன். பத்து ஐம்பது. சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வருவதற்கு இவ்வளவு நேரமா?
அதே விநாடியில் ஃபோன் ஒலித்தது. சட்டென்று பச்சைப் பொத்தானை அழுத்தி ‘ஹலோ சுரேஷ்?’ என்றான்.
‘சுரேஷா?’ மறுமுனையில் கேட்டது பெண் குரல். ‘நான் சுகன்யா பேசறேன் கதிரு!’
(தொடரும்)
***
என். சொக்கன் …
10 10 2011
Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 9, 2011
நேற்று சேலம் புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். பொன்னுசாமி கவுண்டர் கல்யாண மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகே. சுமார் 50 ஸ்டால்கள், அநேகமாக எல்லாப் பதிப்பகங்களும் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல் 10% தள்ளுபடி, அப்பள ஸ்டால், ஒரு மினி அபூர்வ நாணயங்கள் கண்காட்சி, ஓரமாக 50% விலையில் ஒரிஜினல் விசிடி, டிவிடிகள்.
கண்காட்சியில் பலரையும் ஈர்த்த விஷயம், வருகிற குழந்தைகளுக்கு இலவச உண்டியல் தருகிறார்கள். அதில் வருடம் முழுக்கக் காசு சேர்த்து புத்தகங்கள் வாங்கிக்கொள்ளும் நல்ல பழக்கத்தை ஊக்குவிக்க இந்த ஏற்பாடு.
கண்காட்சி இன்றே கடைசி. சேலத்தில் உள்ளவர்கள் அவசியம் ஒரு விசிட் அடிக்கலாம். அனுமதி இலவசம்.
***
என். சொக்கன் …
09 10 2011